World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
பூகோள போர்
எதிர்ப்பு கண்டனம்
Despite police march ban போலீஸ் பேரணியைத் தடைசெய்திருந்த போதும் நியூயோர்க் நகர போக்குவரத்தை சீர்குலைத்த மகத்தான பேரணி By Bill Vann பெப்ரவரி 15-ந்தேதி மன்ஹாட்டன் கிழக்குப் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் போர் எதிர்ப்பு பேரணியில் திரண்டு விட்டனர். அவர்களில் பலர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பேரணி நடைபெறும் பகுதிகளுக்கு வந்து சேரமுடியாமல் போய்விட்டது. சந்து சதுக்கங்களில் பிரிந்து சென்று அவர்களாகவே ஆர்ப்பாட்டம் செய்ததால் நியூயோர்க் நகரம் முழுவதுமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்து விட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர்கள் 4-லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டிருந்ததாக குறிப்பிட்டனர். நெருக்கமாக ஒரு மைலுக்கு மேற்பட்ட தூரத்திற்கு முதலாவது அவென்யூவில் வந்தவர்களில் மிகப்பெரும்பாலோர் ஆர்ப்பாட்ட மேடையையும் பார்க்க முடியவில்லை, பேச்சாளர்களது உரையையும் கேட்க முடியவில்லை. அந்த அளவிற்கு கூட்ட நெரிசல் நிறைந்து இருந்தது. இந்த ஆர்ப்பாட்ட பேரணி மேடைக்கு வரமுடியாத பலர் பக்கத்திலிருந்த தெருக்களில் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களது எண்ணிக்கை 5-லட்சத்திற்கு மேல் இருக்கும். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா-கட்டிடத்திற்கு ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பின்னர், அதற்கு வடக்கில் பல பிளாக்குகளுக்கு முன்னரே போலீஸார் இரும்பு வேலியிட்டு அவென்யு (Avenue) முழுவதும் தடுப்பு அரண்களை ஏற்படுத்தி இருந்தனர். போலீஸார் அவென்யூவிற்கு செல்லும் பிளாக்குகளை தடை அரண் செய்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் வடக்கே, நெடுந்தொலைவு நடந்து சென்று மற்ற ஆர்ப்பாட்டக்காரர்களோடு கலந்து கொள்ளவேண்டி வந்தது. நியூயோர்க் நகர போலீஸ் துறை இவ்வளவு அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்பார்த்து ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை அவர்கள் எதிர்பார்த்திராத அளவிற்கு கூட்டம் வந்துவிட்டது தெளிவாக தெரிகிறது. எனவே தான் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இரண்டாவது அவின்யூ மூன்றாவது அவின்யூ மற்றும் இறுதியாக லெக்சின்டன் அவின்யூ ஆகியவற்றில் சிதறி நியூயோர்க்கின் ஏறத்தாழ பாதி பகுதியை ஸ்தம்பிக்கச் செய்து விட்டனர். எனவே அதிகாரிகள் 59-வது பாலத்தை மூடி விட்டனர். அந்த பாலம் வழியாகத்தான் கியூன்ஸ் மற்றும் லாங் தீவிலிருந்து பெரும்பாலான வாகனங்கள் வரும். கிழக்கு பகுதி நெடுஞ்சாலையில் பெரும்பகுதி போக்குவரத்து நின்றுவிட்டது. சாலைகளில் நிறைந்து விட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக அனுப்பப்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் கவச போலீஸார் மற்றும் குதிரை போலீஸ் படையினர் ஆகியோருடன் நடைபெற்ற மோதல்களில் 200-க்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது அவென்யூவில் சுரங்க ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த கூட்டத்தோடு போலீஸார் விரட்டி தள்ளிக்கொண்டு வந்த கூட்டமும் சேரந்து கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு செல்ல முடியாமல் தெருக்களை மறைத்துக் கொண்டு நின்றனர். போலீஸ் லாரியை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு அதன்மீது ஏறி பதாகைகளை ஆட்டி போருக்கு எதிரான முழக்கங்கள் அடங்கிய கொடிகளை பிடித்துக்கொண்டு நின்றனர். அப்போது போலீஸார் கழிகளால் தாக்கி அவர்களை அப்புறப்படுத்தினர். போலீஸாரும் நகர மேயராக பணியாற்றும் குடியரசுக் கட்சியை சேர்ந்த கோடீஸ்வரர் மைக்கேல் புளூம்பேர்க்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தாங்கள் அனுமதி மறுத்தது பந்தோபஸ்து காரணங்களுக்காகத்தான் என்று சமாதானம் கூறினார்கள். ஆனால் இதன் நிகர விளைவு என்னவென்றால் இந்த ஜனநாயக விரோத தடையின் காரணமாக நியூயோர்க் நகர தெருக்களில் குழப்பம் ஏற்பட்டது. பல மாணவர்கள் மற்றும் இதர ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டவட்டமாக போலீஸாருக்கு எதிரான கிளர்ச்சி மனோபாவத்தோடு உறுதியாக நின்று கொண்டிருந்தனர். இந்தப் பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டதால் தான் சிலர் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதலாவது அவென்யூ ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு குழுவினர் செப்டம்பர்-11-பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் ஆவர். உலக வர்த்தக மைய கட்டிடத்தில் ஒரு பயணிகள் ஜெட் விமானம் மோதிய நேரத்தில் 84-வது மாடியில் இயங்கி வந்த கான்டர் பிஸ்ஹெரால்ட் தரகர் நிறுவனத்தில் கத்தரின் மான்டனோவின் (Catherine Montano) மகன் கிரெய்க் பணியாற்றி வந்தார். ''நான் இதில் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். இந்தக்காலத்தில் இந்த நாளில் போர்கள் நமக்குத் தேவையில்லை. போர்களால் மேலும், மேலும் சாவுகள் தான் அதிகரிக்கும் பல தாய்மார்கள் தங்களது குழந்தைகளை இழந்துவிடுவார்கள். என்னுடைய மகன் உயிரோடு இருந்திருப்பானானால் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலத்து கொள்வதற்காக இப்போது என்னோடு வந்திருப்பான். எனவே அவனது பெயரால் அவர்கள் (புஷ் நிர்வாகம்) இதை செய்யக் கூடாது''. என்று கத்தரின் மான்டனோ குறிப்பிட்டார். அந்த இரட்டைக் கோபுர கட்டிடத்தில் யூரோ புரோக்கர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஆடம் ஆரியாஸ் அவரை இழந்துவிட்ட மைத்துனி வலரி லுக்சிநிக்கோவ்ஸ்கா (Valerie Lucznikowska) இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ''நாங்கள் அனுபவித்ததைப்போல் வேறு எவரும் துன்பத்தை சுமக்க கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். எங்களது துன்பத்தை ஒரு நேர்மையற்ற போரை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. செப்டம்பர்-11-நிகழ்ச்சிக்கும் ஈராக் மீது போர் தொடுப்பதற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. அந்த கடத்தல் விமானத்தில் இருந்தவர்களில் மிகப்பெரும்பாலோர் சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களது அரசு எந்த விசாரனையிலும் ஒத்துழைக்க மறுத்து வருகிறது. நம்முடைய அரசு அதை தொடர்வதற்கு விரும்பவில்லை. அன்றைய தினம் என்ன உண்மையிலேயே நடந்தது என்பது இன்னமும் நமக்குத் தெரியாது என்றே நான் கருதுகின்றேன்'' இவ்வாறு லுக்சிநிக்கோவ்ஸ்கா குறிப்பிட்டார். ஜெய்மி, வியட்நாம் போரின் முன்னாள் இராணுவ வீரர். அந்த இராணுவ வீரர் தனது பழைய கடற்படை நிலப்படைப் பிரிவு சீருடையோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ''வியட்நாமிலிருந்து நாம் பெற்ற ஒரேபடிப்பினை நாம் சமாதானத்திற்கு, இணக்கத்திற்கு மற்றும் ஒத்துழைப்பிற்கு போராட வேண்டும் என்பது தான். எனக்கு கவலையளிப்பது எல்லாம் என்னவென்றால் இன்றைக்கு புஷ் நிர்வாகத்தில் இருப்பவர்களில் ஜனாதிபதி புஷ் மற்றும் ஈராக்கிற்கு எதிராக போர் தொடுக்கவேண்டுமென்று மிக ஆவேசமாக குரல்கொடுப்பவர்கள் பாதுகாப்புத்துறையில் இருப்பவர்கள் அனைவரும் வியட்நாம் போரின் போது இராணுவ சேவையை தவிர்த்தவர்கள், அதில் கலந்துகொள்ள செயலூக்கத்துடன் மறுத்தவர்கள் என்பது தான்'' இவ்வாறு அந்த முன்னாள் இராணுவ வீரர் குறிப்பிட்டார். நீங்கள் போரில் கலந்து கொண்டு மரணம் வருவதை பார்த்திருந்தால் நீங்கள் சமாதானத்திற்காக போராட அந்த அனுபவம் உங்களைத்தூண்டும். இன்றைக்கு ஈராக்குடன் போர் புரிய வேண்டும் என்று ஆவேசமாக குரல் கொடுப்பவர்களை நாங்கள் கோழிக்குஞ்சு போர் வெறியர்கள் என்று தான் வர்ணிப்போம். ஏனென்றால் வியட்நாம் போரின் போது அவர்கள் கோழிக்குஞ்சுகளாக சிறு குழந்தைகளாகயிருந்தார்கள். அது அப்போது அவர்கள் இராணுவத்தில் பணியாற்றுவதற்கான நேரம். ஆனால் இன்றைய தினம் அவர்கள் பிறர் வீட்டுப் பிள்ளைகளை போருக்கு அனுப்பி சாகச் சொல்கிறார்கள்'' என்றும் அந்த முன்னாள் இராணுவ வீரர் குறிப்பிட்டார். வியட்நாம் போரின் போது காயம் அடைந்த ஜெய்மி ஒரு எச்சரிக்கை விடுத்தார். ஈராக்குடன் போர் நடக்குமானால் அமெரிக்காவின் ஒரு தலைமுறை முழுவதுமே பேரழிவின் தாக்கத்தை உணரவேண்டி வரும் என்று எச்சரித்தார். ''அது வியட்நாமில் நடந்தது." சென்ற வளைகுடாப் போரின் போது நமக்கு ஏற்பட்ட உயிர்சேதம் மிகக் குறைவு ஆனால் மிகப்பெரும்பாலான முன்னாள் போர் வீரர்களுக்கு சேவைத்தொடர்பான ஊனங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் போரினால் ஏற்பட்ட உணர்வுபூர்வ மற்றும் மனவியல் பாதிப்புக்களை நான் இதில் சேர்க்கவில்லை'' என்றும் ஜெய்மி குறிப்பிட்டார். கியூன்ஸ் பகுதியைச் சார்ந்த ஜோ (வயது-40) பேரணியில் கலந்து கொண்டார். ''நான் இங்கு எதற்காக வந்தேன் என்றால் தவறான காரணங்களுக்காக நடக்கும் போரினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகக்கூடும் அந்த நிலை ஏற்படாது தவிர்ப்பதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். சர்வதேச அளவில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு ஒரு அரசியல் பூகோள சாக்காக எண்ணெயை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பது தான் உண்மையான காரணம்'' என்று அவர் குறிப்பிட்டார். மின்சாரத் தொழிலாளர்கள் யூனியன் லோக்கல் 3-சர்வதேச சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினரான கரான்சா (Carranza) பேரணி பற்றி கருத்து தெரிவிக்கும்போது, இந்த பிரம்மாண்டமான மக்கள் எழுச்சி புஷ் நிர்வாகத்தின் கொள்கையை பாதிக்கும் என்பதில் சிறிதேதான் நம்பிக்கை இருக்கிறது. "நாம் ஜனநாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. நம்முடைய உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை பெரும்பாலும் முடிவு செய்பவர்கள் இராணுவ நோக்கமுள்ளவர்கள். அவர்களுக்குத்தான் நமது அரசாங்கம் சொந்தமாக இருக்கிறது. அவர்கள் தேசிய ஊடகங்களையும் தங்கள் வழிக்கு திருப்பிக் கொள்கிறார்கள். உள்நாட்டுக் கொள்கையை எடுத்துக்கொண்டால் உழைக்கும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது பணக்காரர்களுக்கு வரி குறைப்பு சலுகையை அறிவிக்கிறார்கள். இது அமெரிக்க மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்யும் மிகப்பெரிய அம்சமாகும்'' என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா பாக்தாக் மீது குண்டு வீசி தாக்கப்போகிறது. நியூயோர்க் நகரைப்போன்று அது ஒரு நவீன நகரம் அங்கு பல்லாயிரக்கணக்கான மக்களை குண்டு வீசி கொன்று குவிக்கப்போகிறார்கள்'' என்று பொப் -என்கிற நீர் வழங்குதுறை தொழிலாளி கருத்து தெரிவித்தார். அவர் பாஸ்டனிலிருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். புஷ் நடவடிக்கை நம்ப முடியாத கற்பனைக்கு எட்டாத பயங்கரவாத செயலாகும். அதை போரில் நடந்துவிட்ட சேதம் என்று சாதாரணமாக தள்ளிவிட அவர்கள் முயலுவார்கள். இப்போது ஈராக் மக்களுக்கு அவர்கள் உணவையும் மருந்தையும் தரமறுத்துவிட்டார்கள் என்றும் பொப் விளக்கம் சொன்னார். ''அமெரிக்க மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு முறை பத்திரிகை படிக்கும் போதும் இந்தக் கம்பெனி 20,000- தொழிலாளியை ஆட்குறைப்பு செய்யப்போகிறது அல்லது அந்தக் கம்பெனி 30,000-தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்து வருகிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு இரண்டாண்டுகளுக்கு மேல் சேம நல உதவி வழங்கப்படுவதில்லை. எந்த விதமான வருமானமும் இல்லாமல் அந்த தாய்மார்கள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றும் பொப் விளக்கினார். போருக்கு எதிரான கிளர்ச்சியை முன்நோக்கி இட்டுச்செல்வதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களது மேடையிலிருந்து எந்த விதமான தொலைநோக்கு திட்டமும் வெளியிடப்படவில்லை. பெரும்பாலான பேச்சாளர்கள் கானல் நீர்போன்ற ஓர் உணர்வை உண்டாக்கவே முயன்றார்கள். புஷ் நிர்வாகத்தை எதிர்ப்பதற்கு அடித்தளமாக ஐ.நா-சபையையும், ஜனநாயக கட்சியையும் அந்த பேச்சாளர்கள் எடுத்துக் கொண்டனர். இது வெறும் மன பிரம்மையை உருவாக்கும் செயலாகும். தென்னாபிரிக்காவை சேர்ந்த ஆர்ச் பிஷப், டெஸ்மான்ட் டூடூ- (Desmond Tutu) உரையாற்றியவர்களில் முதன்மையானவர், அவர் ''மக்கள் அணிவகுத்து வந்தார்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்...... மற்றும் கம்யூனிசத்தின் கதை முடிந்தது'' என்று சொல்வதைப்போல் இந்த ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் போரை ஒரு முடிவிற்கு கொண்டுவந்து விட முடியும் என்று தான் கருதவில்லை என்று குறிப்பிட்டார். தென் ஆபிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையை ஒழித்துக் கட்டுவதற்காக பெரும்பான்மை கறுப்பு இன மக்கள் வன்முறைகளில் ஈடுபடக்கூடாது என்று அவர் போதனை செய்து வந்தார். அதற்காக அவருக்கு நோபல் சமாதான பரிசு வழங்கப்பட்டது. ஈராக்கிற்கு எதிராக ''ஓர் நியாயப்படுத்தக் கூடிய போரை" ஐ.நா-பந்தோபஸ்து கவுன்சில் மட்டுமே அனுமதிக்க முடியும். அத்தகைய தாக்குதல் எதையும் நடத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கின்ற "சட்டபூர்வமான அதிகாரம்" ஐ.நா-பந்தோபஸ்து கவுன்சிலுக்குத் தான் உண்டு என்று Tutu -பாதிரியார் கருத்து தெரிவித்தார். பல ஜனநாயகக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் உரையாற்றினர். ஓகியோ மாநிலத்தைச் சேர்ந்த டென்னிஸ் கூச்சிநிக் (Dennis Kucinich), டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஷீலா சாக்சன்லீ (Sheila Jackson Lee), நியூயோர்க் புரூக்ளின் பிரதிநிதி நிதியா வெலஸ்கொஸ் (Nydia Velasquez) ஆகியோர் அல் ஷார்ப்டனோடு (Al Sharpton) சேர்ந்து உரையாற்றினர். அல் ஷார்ப்டன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிபேசியவர்கள் எவரும் ஈராக் மீது நடைபெறவிருக்கின்ற தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு எந்த விதமான ஆலோசனையும் கூறவில்லை. அல்லது தங்களது கட்சித் தலைமை போர் முயற்சியை பற்றி ஆதரிப்பதைப் பற்றிக் கூட குறிப்பிடவில்லை. |