போருக்கு எதிரான இயக்கத்தை சிதைப்பதற்கு நியூயோர்க் டைம்ஸ் கூறும் ''நட்பு
ஆலோசனை''
By David Walsh
28 January 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான அவசர ஏற்பாடுகளுக்கு எதிராக இந்த
மாதம் பொதுமக்கள் நடத்திய மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்கள் அரசியல் மற்றும் செய்தி ஊடக நிர்வாகங்களை வியப்பில்
ஆழ்த்தியுள்ளது. அவர்களது அரசியல் ராடார் திரைகளைக் கிழித்துக்கொண்டு எதிர்ப்பு அணி அலை அலையாகத் திரண்டது.
வளர்ந்து வரும் இந்த எதிர்ப்புக்களை அவர்கள் புறக்கணித்தனர், அல்லது ஒன்றுமே இல்லை என்பதுபோல் நடித்தனர்.
மக்களது உணர்வுகள் அலட்சியப்படுத்த முடியாத அளவிற்கு ஆழமாக சென்றுவிட்டபின்,
அவர்களுக்கான கருத்துக்களை உருவாக்கும் முயற்சியில் பூர்ஷ்சுவா குழுக்கள் செயலில் இறங்கியுள்ளன. தங்களது
கட்டுப்பாட்டிற்கு வெளியில் உருவாகி வரும், ஆரம்பக் கட்டத்தில் இருக்கும், வெகுஜன இயக்கத்தின் உண்மை உருவத்தை
தற்போது அவர்கள் நேரடியாக சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
ஒரு பக்கம் வலதுசாரி விமர்சகர் மைக்கேல் கெல்லி போன்ற அரசியல் குண்டர்கள் செயல்பட்டு
வருவதுடன் கெல்லி, கண்டன பேரணிகளை ஏற்பாடு செய்வதில் முன்னணியில் பணியாற்றிய ''கம்யூனிஸ்ட்'' உலகத்
தொழிலாளர் கட்சி மீது பழிவாங்கும் தாக்குதல்களையும் தொடுத்தார். (''வாஷிங்டன்
போஸ்ட் கட்டுரையாளர் மைக்கேல் கெல்லி உலக தொழிலாளர் கட்சி மீது காட்டும் கம்யூனிச பூச்சாண்டி", ஜனவரி
24 -2003 கட்டுரையில் காண்க) இது பூர்ஷ்சுவா அரசியலில் மிகவும் கொச்சையான மற்றும் அசிங்கமான முகம்
ஆகும். இதுபோன்ற சக்திகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பான பணி, பழைய நிலைக்கு சமுதாயத்தை இட்டுச் சென்று,
அரசியலில் கசப்புத்தன்மையை விஷ வித்துக்களை தூவுவதுதான்.
தாராளவாத அல்லது பழைய தாராளவாத அரசியல் அமைப்பு என்பது நியூயோர்க்
டைம்ஸ் பத்திரிகையில் மிக முன்னணியாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இந்த அணியினர் மிக நாசூக்காகவும்
மிகவும் கெட்ட எண்ணத்தோடும் இந்தப் பிரச்சனையில் தலையிடுகின்றனர். இந்த தாராளவாதிகள் தரப்பினரது
நோக்கம் இடதுசாரி சக்திகளை தனிமைப்படுத்தி, அவர்களை விரட்டிவிட்டு மக்களது எதிர்ப்பு இயக்கத்தை
நம்பகத்தன்மையுள்ள ஆளும் வர்க்கத்திற்கு ஏற்புடைய ஏஜென்ட்டுகளிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதாகும். குறிப்பாக
ஜனநாயகக் கட்சியிடம் இதனை ஒப்படைத்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றது.
இதுதான் ஜனவரி 24 ம் தேதி வெளிவந்த நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையில் ''சில
போர் எதிர்ப்பாளர்கள் மற்றவர்கள் மீது சங்கடப்படுகிறார்கள்'' என்று தலைப்பிட்டு எழுதப்பட்டதன் பொருளாகும்.
லீனட் கிளமட்சன் இந்தக் கட்டுரையில் ''போருக்கு எதிரான கண்டனம் தெரிவித்தவர்கள் தனியாக பேசும்போது, ஈராக்
போரை எதிர்ப்பதற்கு கூறப்படும் காரணங்கள் கறை படிந்தவையா? அல்லது சர்வதேச
ANSWER (International
Answer) அமைப்பின் நோக்கங்களால் வேகம் குறைந்துவிட்டதா?'' என்பது குறித்து ஆட்சேபனைகளை
எழுப்பினார். அத்துடன், ''வாஷிங்டனிலும், சான்பிரான்ஸிஸ்கோவிலும் நடைபெற்ற பேரணிகளுக்கு
ANSWER அமைப்பு ஏற்பாடு செய்தது. இந்த ஏற்பாடுகளை
செய்தவர்களில் முன்னணியில் உள்ளவர்கள் உலக தொழிலாளர் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருபவர்கள். இந்த தீவிர
சோசலிசக் குழுவிடைய வேர்கள் ஸ்ராலின் காலத்து சோவியத் யூனியனில் உள்ளன.'' என்று இந்தக் கட்டுரையாளர்
கூறியுள்ளார்.
''ஸ்ராலின் காலத்து சோவியத் யூனியனின் வேர்கள்'' என்ற சொற்றொடருக்கு சரியான
பொருள் என்ன என்பதுபற்றி தெளிவாக அதில் விளக்கப்படவில்லை. உலகத் தொழிலாளர் அமைப்பை நிறுவியவர் சாம்
மார்சி 1959 வரை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர். 1959 ல் அவர் அந்த இயக்கத்தை
கைவிட்டுவிட்டு தனது சொந்தக் குழுவை நிறுவினார். உள்ளார்ந்த அரசியல் நோக்கத்தோடுதான் இந்த சொற்றொடரைப்
பயன்படுத்தி ஸ்ராலினது பெயரைக் கொண்டு வந்திருக்கின்றார் இக் கட்டுரையாளர்.
இந்த அரசியல் நோக்கம் அந்தக் கட்டுரையில் ஒரு குற்றச்சாட்டின் மூலம் கோடிட்டுக்
காட்டப்படுகிறது. ஈராக் போருக்கு எதிரான இயக்கம் ''இதர காரணங்களோடு'' சட்ட விரோதமாக திணிக்கப்பட்டதால்
''களங்கப்பட்டுவிட்டது'' என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டாகும்.
கிளமட்சன் இந்தக் கருத்தை விளக்கும்போது ''ANSWER
அமைப்பு போருக்கு எதிரான பேரணிகளுக்கு ஏற்பாடு செய்கிறது என்று சொன்னால், அந்தப் போர் எதிர்ப்போடு
தனது கருத்துக்களை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும்'' என்கிறார். இந்தக் கருத்திற்கு ஆதரவாக
டிக்கூன் (Tikkun) பத்திரிகை ஆசிரியர்
ராபி மைக்கேல் லேனர் ''பேரணிகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான உரைகள்'' அமைந்திருந்ததாக தனது கவலைகளை
எடுத்துக்காட்டுகிறார். ''கவலை எதுவும் இல்லாமல் முட்டாள்த்தனமாக உரையாற்றுகிறபோது, அந்த உரைகள் ஒப்புக்காக
ஏகாதிபத்திய எதிர்ப்பு சுலோகங்களில் முடிந்துவிடுகிறது. பூகோளமயமாக்கத்தை எதிர்ப்பதற்கான ஆழமான, காரணங்களை
அந்த உரைகள் எடுத்துக்காட்டவில்லை'' என்கிறார்.
இதில் டைம்ஸ் கட்டுரையாளர் மிகுந்த நம்பிக்கையோடு, சமாதானத்திற்கான ஐக்கியம்
என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பிப்ரவரி 15 ம் தேதி அன்று நியூயோர்க் நகரில் நடைபெற இருக்கும் அடுத்த
பெரிய பேரணியைப் பற்றிய ஒரு தகவலைக் கூறகிறார். அதாவது, ''120 க்கு மேற்பட்ட குழுக்கள் கூட்டணியாக சேர்ந்து
இந்தப் பேரணியை நடத்துகின்றபோதிலும் இவற்றில் மிகப்பெரும்பாலானவை
ANSWER அமைப்பைவிட தீவிரத்தன்மை குறைந்தவை''
என்பதாகும்.
இந்தக் கட்டுரையில் காணப்படும் அரசியல் தலைப்பு தெளிவானது. போருக்கு எதிரான
இயக்கம், தற்போதுள்ள சமூகக் கட்டுக்கோப்புக்களுக்கு வெளியில் சென்றுவிடக்கூடாது என்று டைம்ஸ் விரும்புகிறது. இந்தப்
பத்திரிகையின் ஆசிரியர்கள் நடுத்தர வகுப்பு பிரிவுகளை தட்டி எழுப்புகிறார்கள். நீங்கள், பேரணிகளை மற்றும் கண்டனங்களை
நடத்தலாம். ஆனால் முதலாளித்துவத்திற்கு எதிரான அடிப்படையில் அவை நடைபெறக்கூடாது என்பதுதான் இதன்
சாராம்சமாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாதுகாத்து அதன் உலக மேலாதிக்க உரிமையை ஏற்றுக்கொள்ளும்
அடிப்படையில் கண்டன இயக்கங்கள் நடத்தப்படவேண்டுமென்று டைம்ஸ் ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள்.
போருக்கு எதிரான போராட்டம், அமெரிக்காவின் நெருக்கடியான சமூகப் பிரச்சனைகளை தொடர்புபடுத்தி
தொழிலாள வர்க்கத்திற்கு நேரடியாக வேண்டுகோள் விடுக்கின்ற அளவிற்கு சென்றுவிடும் என்று இந்த ஆசிரியர்கள் பயப்படுகின்றார்கள்.
போர் எதிர்ப்பு இயக்கத்தின் மீது திடீரென டைம்ஸ் பத்திரிகைக்கு அக்கறை
வந்திருப்பது சுயநல நோக்கத்திலும், சிடுமூஞ்சித்தனமான மனப்பான்மையிலும்தான் ஆகும். இந்தப் பத்திரிகையின் பிரதான
போர் முரசுகளில் ஒன்றை சனிக்கிழமையன்று வெளிவந்த ஒரு கட்டுரையில் பார்க்கலாம். தேவையான சர்வதேச ஆதரவு
உருவாக்கப்படுகிறவரைதான் புஷ் போரை தாமதப்படுத்தவேண்டும் என்று இந்தக் கட்டுரையில் வலியுறுத்தப்பட்டது.
நியூயார்க் டைம்ஸ் வார இதழின் மூத்த மற்றும் தலையங்கப்பக்க கட்டுரையாளரான பில் ஹெல்லர், தனது
கட்டுரையில் ''ஈராக்குடன் நடைபெறுகின்ற மோதலில் இதுவரை புஷ் நிர்வாகம், பெரும்பாலும் சரியான காரியங்களையே
செய்திருக்கிறது. ஈராக்குடன் போர் புரிவதை நிர்ப்பந்திக்கிற காரணங்கள் உள்ளன'' என்று எழுதியிருக்கிறார்.
ஏகாதியபத்திய போருக்கு எதிராக எந்த இயக்கம் தோன்றினாலும் அது ஒடுக்கப்படவேண்டும்
மற்றும் அடங்கி நடக்கவேண்டும், என்ற அரசியல் அடிப்படையில் டைம்ஸ் மேற்கொண்டுள்ள முயற்சியை, அமெரிக்க
இராணுவவாதத்தை கடுமையாக எதிர்ப்பவர்கள் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
இதில் நம்முடைய கருத்தானது இதுபோன்ற முயற்சிகளை அம்பலப்படுத்துவதற்கும், போர்
எதிர்ப்பு இயக்கத்திலிருந்து ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளை வெளியேற்றவும், எல்லா முயற்சிகளையும் நாம் மேற்கொள்ளவேண்டும்.
சம்பவங்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளபடி, ஜனநாயகக் கட்சியும், தாராளவாத அமைப்பினரும் கம்யூனிசத்திற்கு
தூண்டில் போடுபவர்களாக உள்ளனர். இந்த தூண்டில் போடுபவர்களுக்கு பின்னணியில் அரசும், போலீஸாரும் இருந்து
வருகின்றனர்.
போருக்கு எதிரான இயக்கமானது முதலாளித்துவத்திற்கு எதிரான இயக்கமாக உருவாக்கப்பட
வேண்டும். பூர்ஷ்சுவா கட்சிகளிடமிருந்தும், எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகக் கட்சியிடமிருந்து சுயாதீனமான முறையில்,
தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் வெகுஜன இயக்கம் அணிதிரட்டப்படுவது மையப்புள்ளியாக இருக்கப்படவேண்டும்.
பெரு வர்த்தகத்தின் நலன்களை பிரதிபலிக்கும் கட்சிகளுக்கு கட்டுப்பட்டவையாக எந்த இயக்கம் நடத்தப்பட்டாலும்,
அந்த இயக்கம் இறுதில் தோல்வியடைந்துவிடும், செயலற்று முடங்கிவிடும் என்பது வரலாற்றில் நீண்ட துயரமிக்க அனுபவத்தின்
மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இங்குதான் உலக சோசலிச வலைத் தளத்திற்கும், உலகத் தொழிலாளர் கட்சிக்கும்
இடையே அடிப்படையான அரசியல் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உலகத் தொழிலாளர் கட்சி ஜனநாயக
கட்சியுடனும், மற்றும் AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும்
அரசியல் உடன்பாடு வைத்துக்கொள்ள விரும்புகிறது. உண்மையில் இந்த சக்திகள், போர் எதிர்ப்பு இயக்கத்தினூடாக
உலகம் தொழிலாளர் கட்சி மீது ஆதிக்கம் செலுத்த வழி வகைகள் செய்கின்றன.
அத்தோடு, அவர்களை சமாதானம் செய்து தங்கள் பக்கம் சேர்த்துக்கொள்ள முடியும்
என்று இந்தக் கட்சியும் நம்புகிறது. இதுதான், ஸ்ராலினிச பிற்போக்குப் பாரம்பரியமான தொழிலாள வர்க்கத்தை
தாராளவாத பூர்ஷ்சுவாசிகளுக்கு அடிமைப்படுத்தும் கண்ணோட்டமாகும். இந்தக் கொள்கையால்தான் 1930 களில் ஸ்ராலினிச
கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கிய ''மக்கள் முன்னணி'' அரசியல் மிகப்பெரிய சீரழிவுகளை சந்தித்தன.
தற்போது அமெரிக்காவின் தாராளவாதக் கொள்கைகள் நீண்ட நெருக்கடியில் உள்ளன.
ஆளும் வர்க்கத்தின் மிகத் தீவிரமான வலதுசாரிகளிடம் தாராளவாதிகள் சரணடைந்துவிட்டதால் இந்த அரசியல் நிலைப்பாடு
மிகுந்த வெறுக்கத்தக்க வடிவங்களை எடுத்திருக்கிறது. இதுதான் உலகத் தொழிலாளர் கட்சி, அல் சார்ப்டன் போன்றவர்களை
போர் எதிர்ப்பு பேரணிகளில் அணிவகுக்க செய்துகொண்டிருக்கிறது. இத்தகைய அற்பர்கள் நியாயமான மக்கள் தலைவர்கள்
போல் காட்டப்படுவதை, அவர்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் நம்பகத்தன்மைகளை உலகத் தொழிலாளர் கட்சி
தந்து கொண்டிருக்கின்றது.
முதலாளித்துவத்திற்கு எதிரான தீவிரமான எதிர்ப்பு எதுவாகயிருந்தாலும், அதை கைவிட்டுவிட்டுதான்
ஜனநாயகக் கட்சியோடும், தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் இவை கூட்டணி வைத்துக்கொள்ள முடியும். உழைக்கும்
மக்களுக்கு நியாயமான குரல் கொடுப்பதை இந்த அணியோடு ஒருபோதும் சேர்த்துக்கொள்ள முடியாது. போர் எதிர்ப்பு
இயக்கம் விரிவடைவதற்கு பதிலாக ஜனநாயகக் கட்சி மற்றும்
AFL-CIO அதிகார வர்க்கம், ஜனநாயக ரீதியான கருத்துப் பரிமாற்றங்களின் குரல்வளையைத் திருகி
இந்த இயக்கத்தின் சமூக அடித்தளத்தையும் மிகக் குறுகலான எல்லைக்குள் கொண்டுவந்துவிடும். அத்துடன் இவர்கள்
போர் எதிர்ப்பு நடவடிக்கையை தீங்கற்ற வேடிக்கை விளையாட்டாகவும் ஆக்கிவிடுவார்கள். பாராளுமன்ற ஜனநாயகக்
கட்சியினர், இந்த இயக்கத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் சூத்திரதாரிகளாக ஆகிவிடுவார்கள். இதனுடைய விளைவு
என்னவென்றால், தொழிலாள வர்க்கம் ஓரங்கட்டப்பட்டு அவர்களது நலன்கள் யாவும் நசுக்கித் தள்ளப்பட்டுவிடும்
என்பதாகும்.
ஏகாதிபத்திய போரை ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவினருக்கு விடுக்கப்படும் தார்மீக
வேண்டுகோள்கள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது. அல்லது, ஜனநாயகக் கட்சி மீது நிர்ப்பந்தங்களை கொண்டுவந்து
ஏகாதிபத்திய போரை நிறுத்திவிட முடியாது. அத்தகைய உத்திகள் பயனற்று இறுதியில் தோல்வியில் முடிந்துவிடும். சர்வதேச
தொழிலாள வர்க்கம்தான் ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சியை தடுத்து நிறுத்தி, உலகப் போர் அபாயத்தையும்
தடுக்க முடியும். ஏனென்றால் தொழிலாள வர்க்கம் மட்டுமே, முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீசும் வல்லமை
பெற்றது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உண்மையான ஜனநாயக சமுதாயத்தை தொழிலாள வர்க்கம்தான்
உருவாக்கும் வல்லமை பெற்றதாகும்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பரவலான இந்த இயக்கம், தங்களது
பொதுவான கவலைகள் போர் எதிர்ப்பு ஆகியவற்றை மட்டும் முன்னிலைப்படுத்தக் கூடாது. ஆனால் அவர்களது தேவைகள்,
மற்றும் நலன்களான சிறப்பான வேலைகள், கல்வி, சுகாதார சேவைகள், வீட்டு வசதிகள், ஜனநாயக உரிமைகள்
ஆகியவற்றையும் முன்னிலைப்படுத்தும் திட்டங்களை அறிவிக்க வேண்டும். இந்தத் தேவைகளை சோசலிச வேலைத்திட்டத்தின்
மூலம்தான் பூர்த்தி செய்ய முடியும்.
உண்மையான பரவலான ஜனநாயக முறையில் அமைந்த போர் எதிர்ப்பு இயக்கம்
உழைக்கும் மக்களிடம் துணிவாக தலையிட்டு கருத்துக்களை எடுத்து வைக்கவேண்டும், சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை,
குடியிருப்பு இல்லாத நிலைமை மற்றம் புஷ் நிர்வாகத்தின் கிறிமினல் கொள்கைகள் ஆகியவற்றிற்குள்ள தொடர்புகளை
தொழிலாளர்களுக்கு விளக்கவேண்டும். இரண்டு பெருவர்த்தகக் கட்சிகளையும் உடைத்துக்கொண்டு புதிய சுயாதீனமான
சோசலிச இயக்கத்தை உருவாக்கி, அதற்கான கருத்துக்களை தொழிலாளர்களிடம் தெளிவுபடுத்தவேண்டும். போருக்கும்
இராணுவமயத்திற்கும் எதிராக வெற்றிகரமான இயக்கம் நடத்தவேண்டும் என்றால், இந்த தீங்குகளுக்கான மூல ஆதாரமான
லாப நோக்கையே தொடவேண்டும். அப்படி தொடுகின்றபோது அது சர்வதேச இயக்கமாகவும், சர்வதேச
மூலோபாயத்தைக் கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட தொழிலாளர் இயக்கம், போதுமான அரசியல் நனவைக் கொண்டதாக,
நண்பர்களையும், எதிரிகளையும் பகுத்துப் பார்க்கின்ற திறமை கொண்டதாக இருக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை
தாங்கி நிற்கிற தூண்களான நியூயோர்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் கெட்ட எண்ணத்தோடு தருகின்ற
ஆலோசனைகளை நிராகரிக்கின்ற வல்லமை கொண்டதாக, இந்த தொழிலாளர் இயக்கம் வளர வேண்டும்.
See Also :
வாஷிங்டன் போஸ்ட்
கட்டுரையாளர் மைக்கேல் கெல்லி உலக தொழிலாளர் கட்சி மீது காட்டும் கம்யூனிச பூச்சாண்டி
போருக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்
Top of page
|