World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : பூகோள போர் எதிர்ப்பு கண்டனம்

An event of world historical significance

உலக வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்ச்சி

Statement of the World Socialist Web Site Editorial Board
17 February 2003

Back to screen version

2003, பெப்ரவரி 15-16 வார முடிவில் உலகம் முழுவதிலும் ஒரேநேரத்தில் வீதியில் திரண்ட வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வரலாற்றில் உயிர்வாழும் சம்பவமாகும். இந்நாட்களில் நிகழ்ந்தது என்னவெனில் போருக்கு எதிரான சர்வதேச மனித ஐக்கியத்தின் முன்னர் எதிர்பார்த்திருந்திராத ஒரு விளக்கிக் காட்டலாகும். உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய ஆட்சியின் இராணுவ வாத வெறியின் முன்னே, 10,000,000 க்கும் அதிகமானோர் ஈராக் மீதான ஆக்கிரமிப்புக்கான திட்டங்களுக்கு எதிராகப் பேசி இருக்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் உலக அரசியலில் ஒரு திருப்புமுனையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு அமெரிக்காவிலிருந்து, ஐரோப்பா மற்றும் ஆசியா வழியாக ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா வரையிலான, பெப்ரவரி 15-16-ன் பெருந்திரளான மற்றும் பெரும்பாலும் தன்னெழுச்சியான வெகுஜன அணிதிரளல்கள், மக்களிடமிருந்து ஆளும் தட்டுக்களையும் அவற்றின் செய்தி ஊடக பிரச்சாரவாதிகளையும் பிரிக்கின்ற ஆழமான மற்றும் இணைக்கமுடியாத அரசியல், சமூக மற்றும் ஒழுக்க இடைவெளியை அம்பலப்படுத்தி இருக்கிறது.

இந்த சக்திமிக்க ஆர்பாட்டங்களுக்குப் பின்னர், ஐக்கிய மெரிக்க அரசுகளில் உள்ள புஷ் நிர்வாகத்தினதும் பிரிட்டனில் உள்ள பிளேயர் ஆட்சியினதும் போர்க் கொள்கைகளுக்கான ஜனநாயக ரீதியான அரசியல் முறைமை வாய்ந்ததான அனைத்துப் பாசாங்குகளும் மீட்டுப் பெறமுடியாமல் சிதறுண்டு போயின. லண்டனிலும் கிளாஸ்கோவிலும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலமானது, வாஷிங்டனுடனான கூட்டின் மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலனித்துவ அபிலாஷைகளைப் புதுப்பிப்பதற்கான பிளேயரின் முயற்சிக்கு திகைக்க வைக்கும் மறுதலிப்பாக இருந்தது.

ஐக்கிய அமெரிக்க அரசுகள் முழுவதிலும் உள்ள அனைத்து மாநகரங்களிலும் நடைபெற்ற ஊர்வலங்கள் பற்றியதில், ஏதாவது இருக்குமானால், அவை மிகவும் குறிப்பிடத்தக்கதாகவும் கூட இருந்தன. உலக ஏகாதிபத்தியத்தின் மையத்திலேயே, இடம்பெற்ற வெகுஜன ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், அமெரிக்க மக்கள் புஷ் நிர்வாகத்தின் போர் வெறியாலும் அரசு நிறுவன ஊடகத்தின் இராணுவவாத பிரச்சாரத்தினாலும் வெறுப்புக்கு உள்ளாக்கப்பட்டதைக் காட்டி இருக்கிறது.

பார்சிலோனா, ரோம், பாரிஸ் மற்றும் பேர்லினில் மனித குலம் பரந்த அளவில் பெருக்கெடுத்து வந்ததன் முக்கியத்துவத்தைப் போற்றி வரவேற்க ஒருவர் தவறக்கூடாது. மாபெரும் இம்மாநகர்களில், பிரான்கோ, முசோலினி, பெட்டெய்ன் (Pétain) மற்றும் ஹிட்லரின் ஆட்சிகளால் பிரிதிநிதித்துவம் செய்யப்பட்ட, பாசிசக் காட்டுமிராண்டித்தனத்தின் கசப்பான அனுபவங்கள் மக்களின் நனவில் வாழுகின்றன. ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் உழைக்கும் மக்கள் புஷ் நிர்வாகத்தின் போர் -முழக்கமிடுபவர்களால் முன்வைக்கப்பட்ட பிற்போக்கு அச்சுறுத்தலை இயல்புணர்ச்சியால் புரிந்து கொண்டார்கள்.

முதலாவது எடுத்துக்காட்டில், பெப்ரவரி 15-16 ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், ஈராக் மீதான ஆக்கிரமிப்புக்கு பரந்த அளவிலான மக்களின் எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடாக இருந்தன. ஆனால் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளின் வரலாற்று முக்கியத்துவம் இந்த மிகப் பெரியளவிலான முக்கிய பிரச்சினையை தாண்டிச் சென்றது.

கடந்த இரு நாட்களாக நாம் கண்டிருந்ததும் பங்கேற்றிருந்ததும் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பின் ஒரு புதிய சர்வதேச சமூக இயக்கத்தின் பிறப்பு ஆகும். இந்த அபிவிருத்தியின் கீழ் ஆழமான புறநிலை நிகழ்ச்சிப்போக்குகள் இருக்கின்றன. நாடுகடந்த கம்பனிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும், முதலாளித்துவ உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்பானது, தொழிலாள வர்க்கத்தின் சமூகப் போராட்டங்களின் பூகோள ஒருங்கிணைப்புக்கான அடித்தளத்தை இட்டிருக்கின்றது.

உலகப் பொருளாதாரத்தின் சமாந்தரமில்லாத அபிவிருத்தியானது, தேசிய அரசு எல்லைகளை தாண்டிச்செல்வது போல, வர்க்கப் போராட்டமானது ஒரு புறநிலை வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு என்ற வகையில் இயல்பாகவே தேசிய எல்லைகளைக் கடந்து அடித்துச்செல்ல விழைகிறது. என்றுமில்லா அதிகரித்த நனவுடன், தொழிலாள வர்க்கமானது தேசிய வார்த்தைக் கூறுகளை விடவும் சர்வதேசியத்தில் தன்னை வரையறை செய்துகொள்ளும். டெல் அவிவ் வீதிகளில் போருக்கு எதிராக 3000 யூத மற்றும் அரபு தொழிலாளர்கள் சேர்ந்து அணிநடை இட்டபொழுது, துல்லியமாக இந்தப் போக்குதான் சனிக்கிழமை அன்று அதன் வெளிப்பாட்டைக் கண்டது.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளினது அணிதிரளல்கள் போல, உலகு தழுவியதாக மற்றும் பெரியதாக அவை இருந்தபோதிலும் கூட, அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் தாமே, ஏகாதிபத்திய போரைத் தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புவது ஒரு தவறாக இருக்கும். ஆயினும், இந்த வரலாற்று வார இறுதிப்பகுதியானது, புதிய, ஆழமான முற்போக்கான மற்றும் எதிர்கால புரட்சிகர சக்திகளின் அரசியல் போராட்டத்திற்குள் ஆரம்ப நுழைவைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியமானதாகும்.

ஏகாதிபத்திய போருக்கு எதிர்ப்பின் மாபெரும் சர்வதேச விளக்கிக்காட்டல் மூலம் இப்பொழுது முன்வைக்கப்படும் கடமை, இந்த புதிய இயக்கத்தின் அரசியல் வர்க்க நனவை வளர்த்தெடுப்பதற்கு ஊக்கமூட்டுவதாகும், மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கும் சர்வதேச சோசலிசத்திற்கும் இடையிலான அத்தியாவசிய இணைப்பைப் புரிந்து கொள்ள அதற்கு உதவி செய்வதுமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved