World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
பூகோள போர் எதிர்ப்பு கண்டனம்
Berlin: Largest demonstration in post-war German historyபேர்லின்: இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான ஜேர்மன் வரலாற்றில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் By a WSWS reporting team ஈராக்கிற்கு எதிரான போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமையன்று பேர்லினில் திரண்ட கண்டன ஆர்ப்பாட்டக்காரர்கள் 5 இலட்சத்திற்கு மேலிருக்கும் என்று இது போன்ற ஆர்பாட்டங்களில் கலந்து கொண்ட மக்களை வழமையாக குறைத்தே மதிப்பீடு செய்யும் அதிகாரபூர்வமான போலீஸ் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பேர்லின் நகரின் கிழக்கு மற்றும், மேற்கு பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டக்கார்ர்கள் திரண்டு வந்தனர். ஏராளமான மக்கள் திரண்டுவிட்டதால் ஊர்வலங்களாக வந்தவர்கள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னரே மத்திய பேரணியில் கலந்து கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மதியத்தில் இருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரன்டன்பேர்க் நுழைவாயிலின் இரண்டு பக்கங்களிலும் பேர்லின் நகர் முழுவதிலும் ஆர்பாட்டக்காரர்கள் நிரம்பி வழியும் நிலை காணப்பட்டது. ஜேர்மனியில் 1983-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 250,000 பேர் கலந்து கொண்டனர். ஜேர்மன் எல்லைக்குள் அமெரிக்க அணு -ராக்கெட்டுக்களை நிறுத்திவைப்பதற்கு நேட்டோ அமைப்பு முடிவு செய்ததை கண்டிக்கும் வகையில் பொன் நகரில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டம் தான் இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஜேர்மனியில் நடந்த மிகப்பெரிய வரலாறுகாணாத பேரணி என்று கூறப்பட்டது. அதைவிட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் தற்போது ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குடும்பங்களோடு, குழந்தைகளும் கலந்து கொண்டு முன்னணியில் நின்றனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பள்ளிக் குழந்தைகளும், தொழிற்சங்க பதாகைகளை ஏந்தி வந்த தொழிலாளர்களுடன் கலந்துகொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டக்கார்களில் பாடசாலை மாணவர்கள் முழு வகுப்புடன் கலந்துகொண்டனர். 750-பேருந்துகள் மற்றும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனி இரயில்கள் மூலம் நாடு முழுவதிலிருந்து ஆர்ப்பாட்டக்கார்ரகள் வந்திருந்தனர். வயதானவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது ஈராக் மீதான போருக்கு ஜேர்மனியின் பரவலான சமுதாய எதிர்ப்பு நிலவுவது ஆர்ப்பாட்டங்களிலிருந்து தெரியவந்தது. அணிவகுப்பின் பிரதான முழக்கங்களில் ஒன்று ''எண்ணெய்க்கு இரத்தம் சிந்தக்கூடாது'', மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஐரோப்பா குறித்து இழிவுபடுத்தும் வகையில் கூறிய சொற்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் ''பழைய ஐரோப்பா ஆர்ப்பரிக்கிறது'' முதலிய வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பேரணியில் கொண்டுவரப்பட்டன. ''பற்றையுள் நெருப்பு வேண்டாம் அது காட்டுத்தீ போல் பரவிவிடும்;'' ''ஹீல் புஷ்'' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் கொண்டு வரப்பட்டன. போருக்கு எதிரான கிளர்ச்சியையும் மற்றும் ஜேர்மனியில் அதிகரித்துவரும் சமுதாய நெருக்கடிகளையும் சம்பந்தப்படுத்துகின்ற பல பதாகைகள் கொண்டுவரப்பட்டன. அந்த பதாகைகளில் ஒன்றில் ''போர் மற்றும் ஆயுதங்களுக்கு செலவிடுவதற்கு பதிலாக கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் செலவிட வேண்டும்'' என்று எழுதப்பட்டிருந்தது. ஈராக்கிற்கு எதிரான போருக்கு ஜேர்மனி அரசு அதிகாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் வெகுஜன கிளர்ச்சியோடு தன்னை சம்மந்தப்படுத்தாமல் ஒதுங்கி நின்றது. இந்த பேரணியில் மூன்று கூட்டங்களில் அரசின் சார்பில் எவரும் கலந்துகொண்டு பேசவில்லை. சமூக ஜனநாயக கட்சியினதும் (SPD) மற்றும் பசுமைக் கட்சியினதும் பதாகைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக காணப்பட்டன. ஜேர்மன் பிரதமர் ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயக கட்சி-SPD) தனது சமூக ஜனநாயக கட்சி- பசுமைக் கட்சி கூட்டணி அரசை சேர்ந்த எவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று திட்டவட்டமாக கேட்டுக்கொண்டார். அப்படியிருந்தும் பசுமைக் கட்சியை சேர்ந்த Jürgen Trittin உம், Renate Künast உம் ஜேர்மன் பாராளுமன்ற சபாநாயகரான Wolfgang Thierse (சமூக ஜனநாயக கட்சி) உம் மற்றும் பிரபல சமூக ஜனநாயக் கட்சி தலைவரான Heidemarie Wieczorek-Zeul ஆகியோர் பேரணியில் பங்கு எடுத்துக்கொண்டனர். இறுதிப் பேரணியில் பிரதான பேச்சாளராக சேவைகள் மற்றும் அரசாங்க தொழில்துறை தொழிற்சங்க தலைவர் Ver.di, Frank Bsirske பசுமைக்கட்சி உறுப்பினர் என்ற முறையில் அவர் தனது உரையை அண்மையில் மூனிச் நகரில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஸ்கா பிஷ்ஷர் (Joschka Fischer) ஆற்றிய உரையை சுட்டிக்காட்டி ஆரம்பித்தார். இம்மாநாட்டில் ரம்ஸ் பீல்ட் போரை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்போது பிஷ்ஷர் ''நான் வருந்துகிறேன் உங்களது கருத்தை நம்பமுடியாமல் உள்ளது'' என்று குறிப்பிட்டார். ''போரை ஆரம்பிப்பதற்காக கூறப்படுகின்ற காரணங்கள் முழுமையாக ஏற்க இயலாதவையாக உள்ளன'' என்று Frank Bsirske கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர் அமெரிக்காவின் போர் திட்டங்களை கண்டித்தார். அமெரிக்காவின் போர்திட்டங்கள் ஈராக்கோடு நின்று விடப்போவதில்லை என்றும், இதில் அணு ஆயுதங்களை பயன்படுத்துகின்ற சாத்தியக் கூறுகள் இருப்பதாக குறிப்பிட்டார். அமெரிக்காவின் மேலாதிக்கத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் ஏற்கனவே பல நாடுகள் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை அழித்து ஒழிக்கும் தீவிரவாத கவிழ்ப்பு முயற்சிதான் இப்போது சர்வதேச மட்டத்தில் நிகழ்கின்றது என்று குறிப்பிட்டார். இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் முற்றிலும் நியாயமானவையும் தேவையானவையும் என அவர் குறிப்பிட்டார். உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் பேர்லின் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் பல தகவல் மையங்களை நிறுவியது. அவற்றிற்கு கணிசமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. பொதுவாக ஆர்ப்பாட்டங்களை மட்டும் ஆதரித்த இதர துண்டுப்பிரசுரங்களை போலல்லாமல் உலக சோசலிச வலைத்தளம் வெளியிட்ட பல்லாயிரக்கணக்கான அறிக்கைகள் போருக்கு எதிரான அரசியல் மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்தை எடுத்துக்காட்டியது. பல ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தக் கருத்துக்கு இணக்கம் தெரிவித்தனர். போர் எதிர்ப்பு இயக்கம் என்பது ஜேர்மன் அல்லது பிரான்ஸ் அரசுகளின் நலன்களோடு கட்டுண்டு விடாமல் சுதந்திரமானதாக செயல்பட வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தள அறிக்கை வலியுறுத்தியது. இந்தக் கருத்தை பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக் கொண்டனர். வடக்கு ரெய்ன் வெஸ்ட்பாலியா (North-Rhine Westphalia) பகுதியிலிருந்து பல நண்பர்களோடு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜோர்க் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளித்த போது புஷ் ஆலோசகர்கள் மற்றும் அவரது அரசியல் இடம் பெற்றிருப்பவர்களும் எண்ணெய் தொழிலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் என்பது தெரியும்போது போருக்கான தர்க்க ரீதியான அடிப்படை தெளிவாகி விடும்'' என்று கருத்து தெரிவித்தார். போருக்கு எதிராக தாங்களே சொந்த முறையில் பொது மக்கள் கண்டனம் தெரிவிப்பது நல்லது எல்லாவற்றையும் அரசின் பொறுப்பிலேயே விட்டு விடக்கூடாது. போருக்கு எதிராக குரல் கொடுத்த முதலாவது அரசின் பிரதிநிதி ஷ்ரோடர். ஆனால் அவர் ஜேர்மன் நலன்களை முன் நிறுத்தவே முயல்கிறார்'' என்றும் ஜோர்க் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேருந்தில் ஹம்பேர்க் நகரிலிருந்து வந்திருந்த பெர்ன்ட் என்னும் ஆசிரியர் அமெரிக்க ராக்கெட்டுகளை ஜேர்மனியில் நிறுத்தி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க 1983ல் பொன் நகரில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் பங்கெடுத்துக்கொண்டவர். அவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளிக்கையில் ''இவ்வளவு பெருந்திரளான மக்கள் திரண்டு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பொன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களை விடமிகப்பெரியதாகவே இருக்கவேண்டும் அதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் இத்தகைய ஆர்பாட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகிற அளவிற்கு அவசியம் ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது. உலகில் உள்ள அரசுகள் எந்தப் படிப்பினைகளையும் பெற்றுக் கொள்ளவில்லை'' என்று குறிப்பிட்டார். ''இந்தப் போர் முற்றிலும் நியாயப்படுத்த முடியாதது. சதாம் ஹூசேனிடம் இருப்பதாக அமெரிக்கா கூறும் ஆயுதங்கள் அவரிடம் இருக்கிறது என்பதற்கு எந்த விதமான சான்றும் இல்லை. புஷ் இந்தப் போரை நடத்துவதில் உறுதியுடன் நிற்பது உலகிலுள்ள மக்களை தீவிரமயப்படுத்திக்கொண்டு வருகின்றது. புஷ் தனது கொள்கைகளை வெறியுடன் கடைபிடித்து வருவதை ஆராயும் போது மேற்கு நாடுகளுக்கு எதிராக பின்தங்கிய நாடுகளில் வெறுப்புணர்வு உள்ளது என்பதில் வியப்பிற்கு இடம் இல்லை.'' ''மற்றவர்களைப் போல் நானும் இந்தப் பிரச்சனையில் ஜேர்மனியின் கருத்து என்பதை நான் கவனமாக கவனித்து வருகிறேன். நான் இங்கு வந்திருப்பது ஷ்ரோடரினதோ அல்லது பிஷ்ஷரின் கரத்தை வலுப்படுத்துவதற்காக அல்ல. எல்லாவற்றிற்கும்மேலாக, கொசாவோ போருக்கு அவர்கள் ஆதரவளித்தது அவர்கள் முழுக்க அமைதிவாத நோக்கில் இயங்குவதில்லை என்பதை தெளிவுபடுத்தியது''. நான் எனது மாணவர்களைப் பற்றியும் எனது தொழிலையும் பற்றியும் நான் கவலைப்படுகிறேன். வளைகுடாப் போரில் ஜேர்மன் மக்களுக்கு ஏற்பட்ட செலவு 15 பில்லியன் டொலர்கள். நான் வசதிகளும், புத்தகங்களும் இல்லாத சீரழிந்துகொண்டிருக்கும் ஒரு பாடசாலையில் பணியாற்றி கொண்டிருக்கிறேன். புதிய போருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்? நாங்கள் இந்த மடைத்தனத்தை தடுத்து நிறுத்தவேண்டும். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தை நிறுத்த பிந்தியிருக்கலாம். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் மேலும் போர்களை தடுப்பதற்கான முக்கிய மைல் கற்களாக விளங்குகின்றன.'' என்று பெர்ன்ட் தனது பேட்டியில் குறிப்பிட்டார். |