World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

South East Asia braces for political fallout from Iraq war

ஈராக் போரின் விளைவுகளில் இருந்து தென்கிழக்கு ஆசியா விலகிக்கொள்ள விரும்புகிறது.

By John Roberts
11 February 2003

Back to screen version

ஈராக்கிற்கு எதிராக தனது போரைத் தொடுப்பதற்காக புஷ் நிர்வாகம் தயாரிக்கையில், நிச்சயமாகப் பின்தொடரவிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளுக்காக தென்கிழக்காசியாவில் உள்ள ஆளும் தட்டுக்கள் நடுக்கத்துடன் தயார் செய்து வருகின்றன. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் உள்ள அரசாங்கங்கள் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கான அவர்களின் தேவைக்கும் அமெரிக்க வலுச்சண்டைக்குப் போதல் மீதான வளர்ந்து வரும் பொதுமக்களின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அது பரந்த அளவிலான எதிர்ப்புக்களாய் சினந்து எழுதலை அச்சுறுத்துகிறது.

இவ்வனைத்து மூன்று நாடுகளிலும், மூத்த அரசியல் பிரமுகர்கள், ஐ.நா பாதுகாப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் மூடிமறைப்பைக் கொண்டிராத எந்த அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும் எதிர்ப்பினை எச்சரிக்கையுடன் வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் அமைதி இன்மை மற்றும் இப்பிராந்தியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுபவர்கள் உள்பட, இஸ்லாமிய அடிப்படைவாதப் போக்குக்கான வளர்ந்து வரும் ஆதரவு பற்றி எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். உயர்ந்துவரும் எண்ணெய் விலைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் அவற்றின் விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றி கவலைகளும் கூட எழுப்பப்பட்டிருக்கின்றன.

இந்தோனேசியாவில், ஒரு தொடரான எதிர்ப்புக்கள், அவை எவ்வளவு ஒப்பீட்டளவில் சிறிய அளவினதாயினும், எந்தவித ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் வளர்ந்து வரும் குரோதத்தை சுட்டிக்காட்டி இருக்கின்றன. ஞாயிறு அன்று, முஸ்லிம் அடிப்படையாகக் கொண்ட நீதிக்கட்சியின் 70000 ஆதரவாளர்கள் என்று மதிப்பிடப்படுபவர்கள், ஜகார்த்தாவில் ஊர்வலத்தை நடத்தினர், அது பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியே தொடங்கி ஐ.நா அலுவலகம் மற்றும் அமெரிக்க தூதரகத்திற்கும் சென்றது. எதிர்ப்பு ஊர்வலத்தினர் "ஈராக் மீதான போரை நிறுத்து" மற்றும் "அமைதியையும் மனிதகுலத்தையும் காப்பாற்றுங்கள்" என்று அறிவிக்கும் அட்டைகளை உயர்த்திப் பிடித்திருந்தனர்.

அமெரிக்க நடவடிக்கைகளில் இருந்து தன்னைத் தள்ளிவைத்துக்கொள்ளும் முயற்சியில், வெளியுறவு அமைச்சர் ஹசன் விராயுதா இந்தோனேசியா அமெரிக்க போர் உந்துதலுக்கு எதிரான முயற்சியில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கும் தூதுவர்களை அனுப்பி இருப்பதாக ஜனவரி 31 அன்று அறிவித்ததன் மூலம், ஜனாதிபதி புஷ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரைக்கு, பதிலிறுத்தார். இந்தோனேசியா ஏற்கனவே அணிசேரா இயக்கத்தின் உறுப்பினர் நாடுகளை அணுகி இருப்பதாக அவர் கூறினார். "சட்டம், அரசியல் அல்லது ஒழுக்கக் கண்ணோட்டத்திலிருந்து எந்தப் போரும் நியாயப்படுத்தக் கூடியதல்ல என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்" என்றார்.

அமெரிக்க அரசு செயலர் கொலின் பாவெல், கடந்தவாரம் ஐ.நாவில் ஆற்றிய உரையை அடுத்து ஹசன் பின்வருமாறு: "ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துதற்கு போதுமான ஆதாரத்தை இந்தோனேசியா பார்த்திருக்கவில்லை. (ஐ.நா) பாதுகாப்பு சபைக்கு வெளியில் எந்தவிதமான ஒருதலைப்பட்சமான முடிவையும் இந்தோனேசியா ஏற்காது." என குறிப்பிட்டார் இஸ்லாமிய அடிப்படையிலான ஐக்கிய வளர்ச்சிக் கட்சியின் தலைவர், உதவி ஜனாதிபதி ஹம்ஜா ஹஜ் (Hamzah Haz) இதேபோன்ற ஆட்சேபனைகளை குரலெழுப்பி, "நாங்கள் எந்தத் தாக்குதலையும் நிராகரிக்கிறோம்.... ஐக்கிய அமெரிக்க அரசுகள் தன்னைக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் ஒருதலைப்படசமாக செயல்படாது என நாம் நம்புகிறோம்" என்றார்.

இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய இரு இஸ்லாமிய அமைப்புக்களான --நாத்லத்துள் உலம்மா (NU) மற்றும் முஹம்மதியா ஆகியன அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு அவற்றின் எதிர்ப்பை குறிகாட்டி இருக்கின்றன. அவற்றின் தலைவர்கள், பெப்ரவரி 4-7 அன்று திட்டமிடப்பட்ட அமெரிக்க காங்கிரசினால் மதங்களுக்கிடையிலான பிரார்த்தனைக் கூட்டத்தொடருக்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினைப் புறக்கணித்தனர். உலகின் மிகப் பெரிய முஸ்லிம்கள் பெருந்தொகையினராய் இருக்கும் நாட்டில் 75 மில்லியன் மக்களை இணைந்த உறுப்பினராகக் கொண்டுள்ளதாகக் கூறிக்கொள்ளும் இந்த பழமைவாத அமைப்புக்கள், கடந்த காலத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் உயர் மட்ட தொடர்புகளை வைத்திருந்தன.

புஷ்-ன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரைக்குப் பின்னர், முகம்மதியவின் தலைவர் சிஜாஃபி மாரிஃப் (Sjaffii Maarif) அமெரிக்க ஜனாதிபதியை "சதாம் ஹூசைனை விடவும் மிக ஆபத்தானவர்" என்று கண்டனம் செய்தார் மற்றும் எந்தவிதமான போரும் ஆயிரக்கணக்கான ஈராக்கியரின் உயிரிழப்பை விளைவிக்கும் என்று எச்சரித்தார். இம்மோதலின் அரசியல் விளைபயன் பற்றி தெளிவாகக் கவலைப்படும் விதமாக, அவர் அண்மையில் ஜகார்த்தா போஸ்ட் பத்திரிகையிடம், "அது இந்தோனேசியர்களை மட்டும் தீவிரமயப்படுத்தாது மாறாக மத்திய கிழக்கில் உள்ள மக்களையும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் உள்ளவர்களையும் கூட தீவிரமயப்படுத்தும். அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் அது உலகரீதியாக அமைதியின்மையை ஏற்படுத்தும்" என்றார்.

தலைமைப் பாதுகாப்பு அமைச்சர் சுசிலோ பம்பாங் யுதோயோனோ (Susilo Bambang Yudhoyono) ஈராக் மீதான எந்தப் போரும் வீதிகளில் எதிர்ப்பினைத் தூண்டிவிடும் என எச்சரித்தார். ஜனவரி 28 அன்று போலீஸ் அதிகாரிகள் இந்தோனேசியாவில் வெளிநாட்டவர் நலன்களைப் பாதுகாக்க தாங்கள் சிறப்புக் குழுக்களை அமைத்திருந்ததாக வெளிப்படுத்தினர். யுதோயோனோ ஜகார்த்தா போஸ்ட் -இடம் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் சொத்துக்களைப் பாதுகாக்க அரசாங்கம் அதனால் முடிந்தவற்றைச் சிறப்பாகச் செய்யும் என்று கூறினார். மேலும், "ஈராக்கியப் பிரச்சினை அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக நாம் அக்கறையுடன் அழைக்கின்றோம் என்பதே எமது அடிப்படை நிலைப்பாடு. ஈராக் மீதான எந்தப் போரையும் நாம் ஆதரிக்கவில்லை" என்றார்.

முன்னாள் உயர் தளபதி யுதோயோனோ போன்றவர்களின் கூற்று மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்படக் கூடாது. அவரது கூற்றுக்கள் ஈராக் மீதான அமெரிக்கப் போர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை சீர்குலைக்கும் என்று ஆளும் வட்டங்களில் உள்ள பரவலான கவலைகளைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக இராணுவமானது சுகர்த்தோ சர்வாதிகாரத்தின் கீழ் அது அனுபவித்த அமெரிக்க ஆயுதப்படைகளுடனான நெருங்கிய தொடர்புகளை மறுபடி ஏற்படுத்த முயற்சித்து வந்து கொண்டிருக்கின்றது.

பிலிப்பைன்சில், ஜனாதிபதி குளோரியா மக்காபகல் அரோயா, தெற்கு மிண்டானாவோவில் உள்ள முஸ்லிம் பிரிவினைவாத கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவ "பயிற்சித் திட்டங்கள்" உள்பட, புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போரை" பலமாய் ஆதரித்து இருக்கிறார். ஆயினும், முக்கிய அரசியற் பிரமுகர்கள் பலர், ஈராக் மீதான அமெரிக்கப் போருக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படையாகக் குரல் எழுப்பி காட்டி இருக்கின்றனர்.

ஜனவரி 31 அன்று, உதவி ஜனாதிபதி டெபிஸ்டோ குய்ங்கோனா, போருக்கு எதிராக மணிலாவில் நடைபெற்ற 3000 பேர் பங்கேற்ற எதிர்ப்பில் தலைமை வகித்த ஈராக்கிய தூதரகத்திலிருந்து வந்த முதல்நிலை செயலருடன் தானும் சேர்ந்து கொண்டார். மிண்டானாவோவில் அமெரிக்கத் துருப்புக்கள் இருப்பதை எதிர்த்து தனது வெளியுறவு அமைச்சர் பதவியை கடந்த ஆண்டு துறந்த போதும் தொடர்ந்து உதவி ஜனாதிபதியாக அவர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். முந்தைய நாள் அன்று, மணிலா ஆர்ச் பிஷப் கார்டினல் ஜெய்ம் சின் (Jaime Sin) புஷ் நிர்வாகத்தின் "நேர்மையற்ற போர் முயற்சிகளுக்கு" ஆதரவைக் கைவிடுமாறு அரோயோவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அரோயோ மத்தியகிழக்கில் வேலை செய்யும் நூறாயிரக் கணக்கான பிலிப்பினோக்களுக்காக அவர்கள் இராணுவ மோதலில் சிக்கிக் கொள்ள நேரிடலாம் என்பதற்கான பொது அக்கறை பற்றியதை வெளிக்காட்டுமாறு நிர்பந்திக்கப்பட்டார். குவைத்தில் தற்போது வேலைபார்த்து வரும் 60,000 பிலிப்பினோக்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை தனிப்பட்ட முறையில் சோதித்துப் பார்ப்பதற்கு ஜனாதிபதி கடந்தவாரம் அந்நாட்டிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். இன்னும் 120,000 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலும் 850,000 பேர் செளதி அரேபியாவிலும் வேலை செய்து வருகிறார்கள். பிலிப்பைன் அரசாங்கமானது இஸ்ரேலிலும் குவைத்திலும் வேலைபார்க்கும் தனது குடிமக்களுக்காக விஷவாயு தடுப்பு முகமூடி, உணவு மற்றும் குடிநீரை வழங்கி இருக்கிறது.

போராடிக் கொண்டிருக்கும் பிலிப்பைன் பொருளாதாரத்தின் மீது போரின் பாதிப்பு பற்றியும் கூட மணிலா கவலை கொண்டிருக்கிறது. அரசாங்கமானது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் 30 நாட்களுக்கு மூலப் பொருள் சரக்கு சேமிப்புக்கும் மொத்தமாய் வழங்குபவர்கள் 15 நாட்களுக்கு இருப்பு வைத்திருக்கவும் ஆணையிட்டிருக்கிறது. இந்நாடானது அதன் எண்ணெய் அளிப்புக்களில் பாதிக்கும் மேற்பட்டதை செளதி அரேபியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் பெறுகின்றது. கடந்த வாரம் பொருளாதார திட்டமிடல் செயலாளர் ரோமுலோ நேரி (Romulo Neri) நாட்டின் ஏற்றுமதிகள் 2003-ல் 5 லிருந்து 8 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார், ஆனால் "ஈராக்குடனான போரை அடுத்து ஏற்றுமதி தொடர்ந்து உயரும் என்று "கூறுவது கடினமானது" என எச்சரித்தார்.

மலேசியாவில், பிரதமர் மகாதிர் மொகம்மது "நாம் நம்பவில்லை, நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.... ஈராக் அல் கொய்தாவுடன் தொடர்பு வைத்திருக்கிறது அல்லது பரந்த பேரழிவுகர ஆயுதங்களை வைத்திருக்கிறது" என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று அறிவித்ததன் மூலம், புஷ் நாட்டு மக்களுக்க ஆற்றிய உரைக்கு பதில் கொடுத்தார். இருப்பினும், கடந்தவாரம் ஒரு பேட்டியில், "ஐ.நா கூறினால், அவ்வாறே நாம் நடப்போம்" என்று கூறி, மலேசியா அமெரிக்கப் போருக்கு ஆதரவளிக்கும் என்பதைக் குறிகாட்டினார். ஆனால் அவர் போரானது இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவை உயர்த்த மட்டுமே செய்யும் என எச்சரித்தார். "அதனால்தான் ஈராக்கை தாக்குவதன் மூலம் முஸ்லீம் உலகத்தில் அமெரிக்கா கோபத்தை அதிகரித்துவிடக் கூடாது என நான் உணருகின்றேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அது பங்களிப்பு செய்யாது" என்றார்.

புஷ்-ன் "பயங்கரவாதம் மீதான போரை" மகாதிர், வாஷிங்டனுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் உள்நாட்டில் அவரது அரசியல் நிலையை வலுப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்தி வருகிறார். அவர், "பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள்" என்றவாறு வழக்குகள் இன்றி எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உள்பட டசின் கணக்கான மக்களை பிடித்து சிறையில் வைத்திருக்க, நாட்டின் கொடூரமான உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். ஊழல் மற்றும் பாலியல் தகா நடத்தை என்ற இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதாக முன்னாள் உதவி பிரதமர் அன்வர் இம்ராஹிம்மை சிறையில் தள்ளி இருக்கும் மகாதிர் தொடர்பான எந்த விதமான விமர்சனத்தையும் புஷ் நிர்வாகமானது கைவிட்டுவிட்டது.

ஆனால் அமெரிக்க போர் திட்டங்களுக்கு பல மலேசியர்களின் குரோதமானது மகாதிரை ஒரு வகை அடக்கமான விமர்சனத்தைக் குரல் கொடுக்குமாறு நிர்பந்தித்திருக்கிறது. வாஷிங்டனை நேரடியாக எதிர்ப்பதைக் காட்டிலும், அவரது கூர்மையான கொடுக்குகளை ஆஸ்திரேலிய அராசங்கத்திற்காகவும் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புக்கு அதன் அடிமைத்தனமான ஆதரவுக்கும் ஒதுக்கிக் கொண்டு, அதனை அமெரிக்காவின் "துணை ஷெரிஃப்" என்று அவர் முத்திரை குத்தினார். எவ்வாறாயினும் போருக்கு எதிரான எதிர்ப்பு, இந்தவார இறுதியில் திட்டமிடப்பட்ட போர் -எதிர்ப்புப் பேரணிகளுடன், தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

தாய்லாந்தில், போருக்கான உந்துதலை எதிர்த்து கடந்த வாரம் பாங்காக்கில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான இளம் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். "அமைதிக்கான முஸ்லிம்கள்" என்று தன்னை அழைத்துக் கொண்ட இக்குழுவினர், "எண்ணெய்க்காக இரத்தம் சிந்த வேண்டாம்" மற்றும் "வெள்ளை மாளிகையில் பைத்தியக்காரத்தனத்தை தடுத்து நிறுத்து" என்று கூறும் வாசக அட்டைகளை ஏந்திக் கொண்டு சென்றனர் மற்றும் "போரை தடுத்து நிறுத்த அனைத்து சாத்தியமான அமைதி நடவடிகைக்களையும் எடுக்க" உறுதி பூணும் அறிக்கையை வெளியிட்டனர். தெற்கு தாய்லாந்தின் முஸ்லிம்களை பேரளவில் கொண்ட பகுதிகளில், அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு முஸ்லிம் இளைஞர்களின் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.

ஈராக் மீதான வாஷிங்டனின் ஆக்கிரமிப்பிற்கும் உலகில் எங்கணும் அதன் இராணுவ அச்சுறுத்தலுக்கும் முன்னுள்ள வாரங்களில், தென்கிழக்கு ஆசியாவில் நிலவும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்கள் கூர்மை அடையும் என்பதில் ஐயமில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved