:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
கொரியா
Blair blurts out the US agenda on North Korea
வடகொரியா மீது அமெரிக்கா நடவடிக்கை: பிளேயர் "வாய் தவறி" வந்துவிட்ட உண்மை
By Peter Symonds
3 February 2003
Back to screen version
ஈராக் மீது படை எடுப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், வெள்ளை
மாளிகை, வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தினால், ஏற்பட்டுள்ள நெருக்கடியை, இராணுவ நடவடிக்கைகள் எதுவும்
இல்லாமல், ராஜீயத்துறை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று பல வாரங்களாக, வலியுறுத்திக் கூறிக்கொண்டு
வருகிறது. என்றாலும் சென்ற வாரம், பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர், ஈராக்கிற்குப் பின்னர், அடுத்து வடகொரியா
என்று வாய் தவறி உண்மையை அம்பலப்படுத்திவிட்டார்.
சென்ற புதன்கிழமையன்று, பிரிட்டன், கீழ் சபையில் கேள்வி நேரத்தில், பிளேயரிடம், மிகக்
கடுமையாக, துருவி துருவி, உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர். ஈராக் மீது அமெரிக்கா படை எடுப்பதை, அரசாங்கம்
ஆதரிப்பதைக் குறியாக வைத்து கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன. அவரது சொந்த தொழிற் கட்சியைச் சேர்ந்த
உறுப்பினரே, "அடுத்து யார்" என்று கேலி உணர்வோடு கூச்சலிட்டார். அப்போது பிளேயர்: "ஈராக் மீது நாங்கள்
நடவடிக்கை எடுத்த பின்னர், அடுத்து... ஆம் ஐ.நா. மூலம், வட கொரியாவோடு, அதன் ஆயுதத் திட்டம் தொடர்பாக
மோத வேண்டி வரும்." என அறிவித்தார்
வெள்ளிக்கிழமையன்று, புஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் புறப்பட்டுச் சென்ற
பிளேயர், மாட்ரிட்டில், நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் தமது கருத்தை மேலும் விரிவுபடுத்தினார்.
ஈராக் ஆயுதங்களைக் குறைக்கவேண்டும் என்பதை உலகம் செயல்படுத்தத் தவறுமானால், ``வடகொரியா, நம்மை ஒரு
பொருட்டாக மதிக்கும் என்று எவரும் நம்புவார்களா?`` என பிளேயர் வியப்புற்றார். பிரிட்டனையும், அமெரிக்காவையும்,
மதித்து நடவடிக்கை எடுக்க, வடகொரியா தவறுமானால், பாக்தாதிற்கு கிடைத்த பரிசு தான், அதற்கும் காத்திருக்கிறது
என்பது பிளேயர் கருத்தில் உள்ள ஆழமான உள்அர்த்தமாகும்.
இப்படி பகிரங்கப்படுத்தியதற்காக, புஷ், பிளேயரை கண்டிக்கவில்லை என்று சொல்வது
தேவையற்றது. சர்வதேசப் பத்திரிகைகள், வடகொரியாவை எள்ளி நகையாடுகின்றன அமெரிக்காவின் இராணுவ மிரட்டலைச்
சுட்டிக்காட்டியதற்காக வடகொரியாவை பரிதவிக்கும் பத்திரிகைகள், விமர்சனங்களில் கவனம் செலுத்தவில்லை. வாஷிங்டன்
மிக மோசமான முறையில் மறைத்து வைத்துக்கொண்டிருக்கும் இரகசியத்தை, பிளேயர், பகிரங்கப்படுத்திவிட்டார். அவ்வளவுதான்.
ஈராக்குடன் தனது போர் முற்றுப்பெறும் நாள் வரை, கொந்தளிப்பை மட்டுப்படுத்துவதற்காக, வடகொரியா மீது சமாதான
நோக்கத்தை வெளிப்படுத்தி வருவது தற்காலிக தந்திரந்தான்.
தற்போது நடைபெற்று வரும் மோதல்களை சென்ற அக்டோபரில் தூண்டிவிட்டதே, வாஷிங்டன்தான்.
யூரினேயித்தைச் செறிவூட்டும் திட்டத்தை மேற்கொண்டிருப்பதாக பியோங்யாங்
(Pyongyang) ஒப்புக்கொண்டதாக
அப்போது வாஷிங்டன் கூறியது. வடகொரியாவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்திவிடுமாறு தனது நட்பு நாடுகளுக்கு நிர்ப்பந்தம்
கொடுத்தது. தனது அணு உலைகளை மூடிவிட்டு, புதிய அணு உலை எதையும் கட்டுவதில்லை என்ற ஒப்பந்தத்தில் 1994-ம்
ஆண்டு பியோங்யாங் கையெழுத்திட்டதற்கு நஷ்ட ஈடாக, வடகொரியாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்ற
நிபந்தனை ஏற்கப்பட்டது. மனித நேய அடிப்படையில் வடகொரியாவிற்கு வழங்கப்பட்டு வந்த உணவு, இதர அடிப்படைப்
பொருட்கள் விநியோகத்தையும் அமெரிக்கா நிறுத்திவிட்டது. வடகொரியா, உணவு, இதர அவசியப் பொருட்கள்
பற்றாக்குறை மிக்க நாடு.
ஒரு மூலையில் தள்ளப்பட்டு, நெருக்குதலுக்கு உள்ளான, வடகொரியா, 1994 ஒப்பந்தத்தை
இரத்துச் செய்தது. சர்வதேச அணு சக்தி ஏஜென்சி ஆய்வாளர்களை வெளியேற்றியது, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டதை விலக்கிக்கொண்டது, அணு உலைகளை மீண்டும், தொடக்கிவிட்டது. ``தீய சக்திகளின்`` அணியில்
பியோங்யாங் சேர்ந்துவிட்டதாக, வாஷிங்டன் முத்திரை குத்திவிட்டது. வாஷிங்டன் தன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கலாம்
என்பது குறித்து பியோங்யாங் கவலை கொண்டிருக்கிறது. தன்னோடு இரு தரப்பு ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள
அமெரிக்கா முன்வந்தால், அமெரிக்காவிற்கு அணு திட்டம் தொடர்பாக உத்தரவாதம் தருவதற்குத் தயாராக இருப்பதாக
திரும்பத்திரும்ப வடகொரியா அறிவித்து வருகிறது.
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா, இராணுவ நடவடிக்கையில்தான் நாட்டம் செலுத்தி வருகிறது.
தென்கொரியாவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் சென்ற டிசம்பரில் நடந்தது. அப்போது வடகொரியாவின் அணு நிலையங்கள்
மீது தாக்குதல் நடத்துவதற்கு புஷ் நிர்வாகம், ஆலோசித்து வந்ததாக வடகொரியா குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
ரோ-மூ-ஹியான், ஜனவரி 18ந் தேதி நடைபெற்ற ஒரு பொது விவாதத்தில் தெரிவித்தார். ``தேர்தல் நேரத்தில்
நிர்வாகத்தில் கணிசமான அளவிற்கு பொறுப்பு வகிக்கும் சில அமெரிக்க அதிகாரிகள், வடகொரியாவைத் தாக்குவதற்கான
சாத்தியக்கூறுகள் பற்றி பேசினர். நல்வினைப் பயனாக, அமெரிக்காவில் கருத்து மாற்றம் ஏற்பட்டது. பிரச்சனையை சமாதான
முறையில் தீர்த்துக்கொள்வோம் என்பதே அந்தக் கருத்து மாற்றம்`` என்று அவர் விளக்கினார்.
அமெரிக்க, தேசிய பந்தோபஸ்து ஆலோசகர், கோண்டலிசா றைஸ்
(Condoleezza Rice), ரோ இன்-(Roh's)
அறிக்கையை மறுத்தார். வாஷிங்டன், ராஜீயத்துறை தீர்வையே
விரும்புவதாக வலியுறுத்திக் கூறினார். ஆனால், வெள்ளை மாளிகையின், வடகொரியா தொடர்பான ஆவேச அறிக்கைகளின்
தன்மை மாறிக்கொண்டிருக்கிறது. ஆயுதக் கட்டுப்பாடுகளுக்கான, அமெரிக்காவின், துணை அமைச்சர் ஜோன் போல்டன்,
ஜனவரி 22-அன்று தென்கொரியாவில் உரையாற்றிய நேரத்தில், ``எல்லா வழிமுறைகளும், பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு
வருகின்றன. இராணுவத் தாக்குதல் நடவடிக்கையை அமெரிக்கா விட்டுவிடவில்லை. ஆனால் வடகொரியா மீது படை எடுக்கும்
நோக்கம் எங்களுக்கு இல்லை`` என அறிவித்தார்.
கடந்த சில நாட்களாக, வடகொரியாவின் அணு உலைகள் மீது அமெரிக்கா, விமானத்
தாகுதல் நடத்தும் சாத்தியக்கூறு நிலவுவதாக, மேலும் குறிப்பான, தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
நியூயோர்க் டைம்ஸ் வியாழக்கிழமையன்று அமெரிக்க அதிகாரிகள் கூறிய உளவு செயற்கைக்கோள்
புகைப்பட விவரங்களைப் பிரசுரித்திருந்தது. வடகொரியாவின் யோங்பையோன்
(Yongbyon) அணு
உலை வளாகத்தில், அணு உலையில் பயன்படுத்தப்பட்ட சிறு குழாய்கள், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு டிராக்குகள்,
போவதும், வருவதுமாக இருப்பதை அமெரிக்க உளவு செயற்கைக்கோள் புகைப்படம் காட்டுவதாக அமெரிக்க அதிகாரிகள்
கூறியுள்ளனர். இப்படி சேமித்து வைக்கப்பட்டுள்ள 8,000 சிறிய கழிகளை, மறுபதனம் செய்தால் (செறிவூட்டினால்) வடகொரியா,
6 முதல் 8 ஆணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவைப்படும் ஆயுதத் தயாரிப்பு - வல்லமையுள்ள, புளுடோனியத்தை வடகொரியா
தயாரித்துவிட முடியும் என்று அமெரிக்க உளவு அமைப்பான CIA
தெரிவித்தது.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில், ஈராக் மீது படையெடுக்க அமெரிக்கா
தயாராகிக்கொண்டிருக்கிற நிலையில் கூட, அமெரிக்க, பாதுகாப்பு அமைச்சர், டோனால் ரம்ஸ்பீல்ட் வடகொரியா மீது
கணிசமான அளவிற்கு ஊன்றி கவனம் செலுத்தி வருவதாக, கோடிட்டுக்காட்டியது. ``சென்ற வாரத்தில் பசிபிக் பகுதி
தளபதிகளுடன் பல்வேறு வீடியோ மாநாடுகளில் (கலந்துரையாடல்கள்) கலந்துகொண்டிருக்கிறார். தென்கொரியாவில் உள்ள
அமெரிக்கப் படைகளின் கமாண்டர் ஜெனரல் லியோன் லாபோர்த் உடனும்
(Leon LaPorte)
இந்த வாரம் வீடியோ மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த வாரமும், ஜெனரல் லாபோர்த் உடன், பேச்சுவார்த்தை
நடத்தவிருக்கிறார். வாஷிங்டனில் ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்கொரியாவிலிருந்து அவர் வந்திருக்கிறார்.
"கொரியாவிற்கு எதிராக, திடீர்த் தாக்குதல் நடத்தும் கருத்தை ரம்ஸ்பீல்ட் தனது
தலைமை இராணுவ ஆலோசகரிடம் வலியுறுத்திக் கூறி வருகிறார். அதுமட்டுமல்ல, ஈராக்குடன், போருக்கு, தயாராகி
வரும் அமெரிக்கா, தனது படைகள், வடகொரியாவை அச்சுறுத்த தேவைப்பட்டால், கொரிய தீபகற்பத்தில் இரண்டாவது
போர் நடத்த தயார் நிலையில் நிற்கும் வகையில் படைகள் நடமாட்டம் இருக்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்
என்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்" என்று நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை விவரிக்கிறது.
வெள்ளிக்கிழமையன்று CBS-செய்தி
அறிக்கை, "பசிபிக்கில் பணியாற்றும் அமெரிக்க கமாண்டர், அட்மிரல் தோமஸ் ஃபார்கோ, அமெரிக்கப் படைகள்
மேலும் பலப்படுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார். ஏற்கனவே, தென்கொரியாவில், 37,000 அமெரிக்கத் துருப்புகள்
நிறுத்தப்பட்டிருப்பதாகவும், மேலும் 2,000 துருப்புகள் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை
விடுத்திருக்கிறார். இரண்டு டஜன் நீண்ட இலக்கைத் தாக்கும் போர் விமானங்கள் -B-52,
மற்றும் B-1
ரகத்தைச் சார்ந்தவை குவாம் பகுதிக்கு அனுப்பப்படவேண்டும். அப்போது வடகொரியா, அமெரிக்க போர் விமானங்கள்
தாக்கும் இலக்கிற்குள் வந்துவிடும். எட்டு F-15
ரக, குண்டு வீசும் போர் விமானங்கள் மற்றும், U-2,
இதர வேவு பார்க்கும் விமானங்கள் ஜப்பானுக்கும், அனுப்பப்படும்"
என்ற விவரங்களை வெளியிட்டது.
இந்தக் கோரிக்கைகளை, ரம்ஸ்பீல்ட் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடி இராணுவ
நடவடிக்கைகளுக்கான சமிக்ஞை அல்ல அது. முன்னெச்சரிக்கையாக கவனமாக திட்டமிடுவதையே காட்டுகிறது என்று பென்டகன்
அதிகாரிகள் வலியுறுத்திக் கூறினார்கள். வடகொரியாவை, அச்சுறுத்தும் வகையிலே இந்த அறிவிப்புகளை எடுத்துக்கொள்ளலாம்.
இதுதான் குறைந்தபட்ச நிலையாகும். இதற்கிடையில் வெள்ளை மாளிகை அதிகாரி அரி பிளீஸ்சர்
(Ari Fleischer),
வெள்ளிக்கிழமையன்று வடகொரியாவுக்கு ஒரு எச்சரிக்கைவிடுத்தார். "அணு உலையில் பயன்படுத்தப்பட்ட, எரிபொருளான,
சிறிய கழிகளை, செறிவூட்ட எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது, வடகொரியா ஆத்திரமூட்டும் செயலில் இறங்குவதாகவே
கருதப்படும்" என்று அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
வடகொரியாவில் பொருளாதார மற்றும் சமுதாய, சீர்குலைவுகளை உருவாக்கும்
நோக்கில், அந்நாட்டை தனிமைப்படுத்தி வைக்குமாறு, சீனா, ரஷ்யா, தென்கொரியா, மற்றும் ஜப்பான் நாடுகள் மீது
வாஷிங்டன், நிர்ப்பந்தங்களைப் பிரயோகித்து வருகிறது. இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வழி எதுவும் இல்லை என வெள்ளை
மாளிகை அறிவித்துவிட்டது. ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சில் வடகொரியாவின் அணுத் திட்டம், குறித்து விவாதிக்க வேண்டுமென,
அமெரிக்கா, வற்புறுத்தி வருகிறது. எந்தத் தடை விதிக்கப்பட்டாலும் அதை போர் நடவடிக்கை என்றே பியோங்யாங்
கருதும் என வடகொரியா அறிவித்துள்ளது.
ஈராக், விவகாரத்தைப் போன்று, வாஷிங்டன், பியோங்யாங் மீது ஆக்கிரமிப்பு நிலை எடுத்திருப்பதற்கு,
மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்பதற்கும், எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இதில்
பியோங்யாங் எந்தத் தவறையும் செய்யவில்லை. வடகொரியாவின் அணுத் திட்டத்தினை, தனக்கு வசதியான,
சாக்குப்போக்காக எடுத்துக்கொண்டு, அமெரிக்கா இந்த மண்டலத்தில் தனது இராணுவ நடமாட்டத்தை அதிகரித்து, நிலைநாட்டி
வருகிறது. ஈராக்கைப் போன்று, வடகொரியாவிடம், பெரும் எண்ணெய் வளமோ அல்லது இதர இயற்கை வளங்களோ
இல்லை. வடகிழக்கு ஆசியாவில் வடகொரியா, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. புஷ் நிர்வாகம்,
மறைமுகமாக, தனது "கேந்திர போட்டியாளர்" என்று அறிவிக்கப்பட்டுள்ள சீனாவை மட்டுமல்ல, அதன் (அமெரிக்காவின்),
நட்புநாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றை குறிப்பாக மிரட்டவும், வடகொரியாவிற்கு, அமெரிக்கா
பூச்சாண்டி காட்டி வருகிறது.
தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு எந்த அளவிற்கு கடுமையான முறையில் வாஷிங்டன்
தயாராகிக்கொண்டிருப்பதை பிளேயர் கோடிட்டுக் காட்டியுள்ளார். வடகொரியாவில், எத்தகைய இராணுவத் தாக்குதல்
நடத்தப்பட்டாலும், கொரிய தீபகற்பம் முழுவதும் போர் வெடிக்கும், விரிவான, பேரழிவை ஏற்படுத்தும் போராக அது
வளர்வதற்கும் சாத்தியம் உள்ளது. |