World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

IMF/World Bank policies pave way for continuing famine in Africa

ஆபிரிக்காவில் பஞ்சத்தை நீடிக்கச் செய்யும், சர்வதேச நாணய நிதியம்/உலக வங்கிக் கொள்கைகள்

By Brian Smith
5 February 2003

Back to screen version

ஆபிரிக்க கண்டத்தில் 25 நாடுகளைச் சேர்ந்த 38 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு பஞ்சத்தின் காரணமாக, உணவு தேவைப்படுவதாக, உலக உணவு திட்ட அமைப்பு (The World Food Programme - WFP) மதிப்பீடு செய்திருக்கின்றது.

கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வரட்சி மற்றும் பருவ நிலை தாறுமாறாக உள்ளதால் 2003ம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக கருதப்படுகிறது. 1980 களில், 1990 களில் நிலவிய கடுமையான பஞ்சத்தை போன்று அல்லது அதைவிட மோசமான பஞ்சம் ஏற்படப்போகிறது என்று எதிர்பார்ப்பதாக, மிகப்பெரும்பாலான உணவு உதவி அமைப்புகள் மதிப்பீடு செய்திருக்கின்றன. இங்கு நிலைமையை மேலும், சிக்கலாக்குகிற வகையில், எய்ட்ஸ் நோய் மிகப்பெரும் அளவில் வளர்ந்திருக்கிறது. ஐ.நா./ஒருங்கிணைந்த பிராந்திய தகவல் தொடர்புகள் (IRIN) அறிக்கைகளின்படி சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கொள்கைகள் தான் இத்தகைய மோசமான நிலவரத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்று கூறுகின்றது.

ஆபிரிக்க கொம்பு முனை (Horn of Africa) பகுதிகளில் தொடங்கி, பாரிய ஏரிகள் (Great Lakes) வழியாக, ஆபிரிக்காவின் தென்பகுதி மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அவ்வளவு பிரபலம் அல்லாத மேற்கு சாகல் பகுதியிலும், பஞ்சம் நிலவுகிறது. அந்தப் பகுதியில், பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள மொரித்தானியாவில் 420.000 மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டு மக்கள் தொகையில் இது 6 ல் 1 பகுதியாகும். மேலும், 10 லட்சம் விவசாயிகளும் மந்தை மேய்ப்பவர்களும் ''உணவு பாதுகாப்பு'' இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதுடன், அவர்களில் 3 ல் 2 பகுதியினர் ''மிகவும் கடுமையாக'' அல்லது மிகவும் ''மோசமாக'' உணவு கிடைக்காத நிலையிலிருப்பதாகவும் கருதப்படுகிறது.

சாதாரண சூழ்நிலைகளில் மொரித்தானியா மிக ஏழ்மையான, கிராமத்துப் பொருளாதார முறைகளைக் கொண்டிருப்பதுடன், தனது சொந்த உற்பத்தி மூலம் 25 சதவிகித மக்களுக்கு மட்டுமே உணவு வழங்கும் நிலையிலும் இருக்கின்றது. கூடுதலாக 5 மாத உணவு தேவைகளை வர்த்தக அடிப்படையில் இறக்குமதி செய்கிறார்கள். மீதமிருக்கும் 7 மாதங்கள் பற்றாக்குறை காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. அந்த 7 மாதங்களில் விவசாயிகள் தாங்கள் சேமித்து வைத்த உணவுத் தானியங்களையும், காடுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களையும் சாப்பிடுகிறார்கள். விறகு விற்றும் மற்றும் நிலக்கரி விற்றும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். திடீரென்று ஒரு ஆண்டுக்கு முன்னர் ஏற்பட்ட புயலின் காரணமாக 20 பேர்கள் பலியானதுடன், 120.000 கால்நடைகள், வெள்ளாடுகள், மற்றும் செம்மறி ஆடுகள் ஆகியவையும் இறந்தன. அறுவடை செய்யப்பட்ட தானியங்களில் கால் பகுதியும், சேமித்து வைக்கப்பட்ட 6 மெட்ரிக் தொன் அரிசியும் அழிந்துவிட்டன. ஏற்கனவே, வரண்டு கிடந்த மேய்ச்சல் நிலத்தை இது மேலும் பாதிக்கச் செய்துவிட்டதோடு 6,000 வீடுகள், பாடசாலைகள், இதர கட்டிடங்களும் அழிந்துபோயின.

இந்த நாட்டில், முப்பது ஆண்டுகளாக பருவ நிலை சீர்குலைந்து வரட்சியும், பாலைவனமும் பரவிக் கொண்டிருக்கின்றதோடு, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் கண்டிராத மிகக் கடுமையான வரட்சியும் 2002ம் ஆண்டில் தாக்கியது. கிழக்கு, மேற்காக 200 கிலோ மீட்டர் அகலத்திற்கான பகுதி வேளாண்மை பிராந்தியத்திலிருந்து பாலைவன நிலைக்கு சென்றுவிட்டது. உயிர் நாடியான ஜூன் மாத மழை காலம் கடந்து தாறுமாறாக பெய்ததால் வானத்தை நம்பி பயிர்களை விளைவிப்பது, நடுவது தாமதப்படுத்தப்பட்டுவிட்டது அல்லது தள்ளி வைக்கப்பட்டது. சாதாரணமாக தண்ணீர் தேங்கி நின்று அறுவடை செய்கின்ற பருவம் என்பது மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை நீடிப்பது வாடிக்கையாகும். ஆனால், தற்போது 12 நாட்கள் மட்டுமே அந்த நிலையில் உள்ளது.

புயலைத் தொடர்ந்து வரட்சி வந்ததால், சம்பிரதாய முறையில் உயிர் வாழ்வதற்கு பின்பற்றப்படும் உத்திகள் பற்றாக்குறைக் காலத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டன. பற்றாக்குறை காலங்களில் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களது ஆடு, மாடுகள் சிலவற்றை அறுத்து விற்பதும், அவைகளை தாங்களும் உணவாக பயன்படுத்திக் கொள்வதும் வாடிக்கையாகும். வரட்சியின் காரணமாக, இந்த ஏற்பாடும் பாதிக்கப்பட்டு மேலும், காடுகளில் இயற்கையாக வளரும் உணவு வகைகளும் வழக்கமான அளவிற்கு கிடைக்காமல் போனது.

இதனைத் தொடர்ந்து, 160.000 மெட்ரிக் தொன் தானிய பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் மதிப்பீடு செய்திருந்தபோதிலும், சர்வதேச அளவில் உணவு உதவி நன்கொடைகள் சரியாக கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் கிழக்கு மற்றும் தெற்கு ஆபிரிக்காவின் பகுதிகளில் நிலவும் இதைவிட கடுமையான பஞ்சம்தான்.

சத்துள்ள உணவுக் குறைபாடு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பருவம் வந்தோரிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களின் எடை குறைகிறது, மாலைக்கண் நோய் ஏற்படுகிறது, வாந்தி பேதி உருவாகிறது, மற்றும் பசியோடு தொடர்புடைய மரணங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. அம்மை போன்ற நோய்கள், எதிர்பார்க்கப்பட்டாலும் தற்போது, குடி தண்ணீர் வழங்குவது ஓரளவிற்கு மேம்பாடு அடைந்திருப்பதால், மிகப்பெரிய பஞ்சம் வராமல் தள்ளி வைக்கப்படுகிறது. விரக்தி அடைந்த விவசாயிகள், முற்றாத கதிர்களை வெட்டி வீழ்த்தி வருகின்றனர். உயிர் வாழ்வதற்காக, அடுத்த ஆண்டு விளைச்சலுக்காக கையிருப்பு வைத்திருக்கும் தானிய விதைகளை உணவாக சாப்பிட்டு வருகிறார்கள். காட்டில் விளையும் விஷப் பொருள் கலந்த பெர்ரி ரக பழங்களை சாப்பிடுவதால், ஏற்படும் மரணம் அதிகரித்து வருகிறது. கழுதைகள் மூலம் தண்ணீர் கொண்டு வருகிறார்கள். ஆனால், அந்தக் கழுதைகள் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் சில இடங்களில் செத்துக் கிடக்கின்றன.

பல கிராமத்து மக்கள், நகரங்களிலிருந்து வருகின்ற நிச்சயம் இல்லாத வாராந்திர கார் சேவைகள் மூலம், நகரங்களில் உள்ள உறவினர்கள் பணம் கொடுத்து அனுப்புகிறார்களா? என்பதைப் பார்த்து காத்துக்கிடக்கின்றனர். நகரங்களில் நிலவரம் மிகவும் மோசமாகப் போகிறது. கிராமங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வெளியேறி நகரங்களில் வந்து குடியேறிக்கொண்டு வருகிறார்கள். மேய்ச்சல் நிலம் கடுமையாக சீர்குலைந்து கொண்டு வருவதால், வடபகுதியிலிருந்து செனகல் ஆற்றுப் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக கால்நடைகள் வெளியேறிச் செல்லும்போது, அவற்றில் பல இடையில் மாண்டுவிடுகின்றன.

மொரித்தானியாவிற்கு அடுத்து கேப்வெர்டே, செனகல், காம்பியா, மற்றும் மாலி ஆகியவை மேற்கு சாகல் பகுதியில் மிகவும் ஆபத்தான வரட்சி நிலையில் உள்ளன. அப்பகுதிகளைச் சேர்ந்த 160.000 பேருக்கு உணவு உதவி தேவைப்படுகின்றது. கினி-பிசோ, சார்ட், புர்கினாபசோ, மற்றும் நைஜர் ஆகியவற்றிலும், வரட்சி ஆபத்து நிலவுகிறது. மாலி போன்று கடைசி இரண்டு நாடுகளும், நிலத்தால் சூழப்பட்டவை. இந் நாடுகளுக்கு கடற்கரைப் பகுதிகளிலிருந்து வருகின்ற கால்வாய்கள் மூலம் தண்ணீர் கிடைக்க வேண்டும். இந்த நிலைமை ஐவரி-கோஸ்ட் போரினால் மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வழக்கமான சப்ளை போக்குவரத்துக்கள் இங்கு சீர்குலைந்துவிட்டன.

ஆபிரிக்க கொம்பு முனை பகுதியில் பஞ்சம் இன்னும் மிகப்பெரிய அளவில் கவலை தருகின்ற அம்சமாகவே உள்ளது. இதில் எதியோப்பியா, எரித்திரியா, மற்றும் சூடான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எதியோப்பியாவில் 14 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கடுமையான அல்லது குறிப்பிடத்தக்க உணவு பற்றாக்குறையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக FEWS NET தகவல் தந்திருக்கிறது. இங்குள்ள மொத்த மக்களில் இந்தத் தொகை கால்பங்காகும். நவதானியங்கள், பருப்பு வகைகள் உற்பத்தி 9.27 மில்லியன் மெட்ரிக் தொன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது சென்ற ஆண்டு உற்பத்தியைவிட 25 சதவிகிதம் குறைவாகும். வழக்கமாக, வரட்சிக்கு இலக்காகும் எத்தியோப்பியாவின் கிழக்குப் பகுதியில் சென்ற ஆண்டு உற்பத்தியைவிட 81 வீதம் குறைவாகவே விளைச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.29 மில்லியன் மெட்ரிக் தொன் தானியங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும், இவற்றில் 328.000 மெட்ரிக் தொன் வர்த்தக அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் என்றும், 140.000 மெட்ரிக் தொன் உறுதியளிக்கப்பட்டுள்ள உணவு உதவி திட்டங்கள் மூலம் கிடைக்கும் என்றும், தற்போது ''அவை வந்து கொண்டிருப்பதாகவும்'' FEWS தகவல் தந்திருக்கின்றது. மீதம் துண்டு விழுவது 1.83 மில்லியன் மெட்ரிக் தொன்கள் ஆகும். இதை ஈடுகட்ட 1.44 மில்லியன் தொன் உணவு உதவியும் 75 மில்லியன் டொலர் நிதி உதவியும் வழங்கப்பட வேண்டுமென்று ஐ.நா.வும் எத்தியோப்பிய அரசாங்கமும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

1980களின் தொடக்கத்தில் எத்தியோப்பியாவில் நிலவிய கடுமையான பஞ்சத்தோடு இன்றைய நிலவரத்தை ஒப்பிட்டபோதிலும், இப்போது நிலவுகின்ற பஞ்சம் அதைவிட மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் அடிப்பட்டுவிட்டனர். 1984/85 ல் 8 மில்லியன் மக்கள் தான் பாதிக்கப்பட்டனர். இது தவிர, 1981 ம் ஆண்டு தனி நபர் வருமானம் 190 டொலராக இருந்தது. ஆனால் 2001 ல் இது 108 டொலராக குறைந்துவிட்டது. எய்ட்ஸ் தொற்று நோயாக பரவிக்கொண்டிருப்பதால், ஒவ்வொரு வீட்டிலும், தனி நபர் உழைப்பை நம்பி வாழுகின்ற மக்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கிறது. பல வீடுகளில் குழந்தைகள் வேலை செய்து தங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. எய்ட்ஸ் தொற்று நோயால் பல விவசாயிகள் நாற்று நடவோ, அறுவடை செய்யவோ, முடியாத அளவிற்கு உடல் நலிவுற்றிருப்பதால், திடகாத்திரமாகயிருப்பவர்கள் அவர்களை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

எரித்திரியாவில், 3 ஆண்டுகளாக வரட்சி நிலவுகிறது. 2002 ல் கடந்த 15 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான வரட்சி ஏற்பட்டிருக்கிறது. வரட்சியால் 68 வீதமான மக்கள் அதாவது 2.3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு 477.000 மெட்ரிக் தொன் உணவுத் தானியங்கள் தேவை என்றும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. தற்போது சூடான், மற்றும் எத்தியோப்பியா எல்லைகள் மூடப்பட்டுவிட்டன. ஈராக்கிற்கு எதிரான போர் நிலவரம் காரணமாக சூடான், மற்றும் எத்தியோப்பியா எல்லைகள் மூடப்பட்டுவிட்டுதால் இந்நிலைமை மேலும் கடுமையாகியிருக்கிறது.

சூடான் தனது நாட்டின் தென்பகுதியில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, செப்டம்பர் 2003 வரை 78.000 மெட்ரிக் தொன் உணவு உதவிகள் மற்றும் 117.000 வீடுகளுக்கு 1.800 மெட்ரிக் தொன் விதைகள் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்திருக்கிறது. 1999 முதல் சூடானுக்கு உணவு உதவி தேவைகளும் அதிகரித்து வருகிறது. அகதிகளும், எத்தியோப்பியாலிருந்து கால்நடைகளும், சோமாலியாவிற்கு வந்துகொண்டிருப்பதால் மேலும் நிலவரம் மோசமடைகிறது.

கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தில் நிலவரம் மிகக் கடுமையாக இல்லை என்றாலும், தன்சானியாவில் 77,000 பேர்களும், ருவான்டா நாட்டில் 86,000 பேர்களும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். புரூன்டியில் கொரில்லா போரின் காரணமாக நிலவரம் மோசமடைந்து 7,500 மக்களுக்கு உலக உணவு உதவி திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது. உகண்டாவில் வரட்சியால், 40 முதல் 50 வீதமான சோள உற்பத்தி பாதிக்கப்பட்டு தற்போது இதற்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

ஆபிரிக்காவின் தென் பகுதியில் பஞ்சத்தால், பாதிக்கப்பட்டுள்ள பிரதான நாடுகள் ஷாம்பியா, ஷிம்பாவே, மற்றும் மாலாவி ஆகியவையாகும். மொசாம்பிக், மடகாஸ்கர், லேசாத்தோ மற்றும் சுவாசிலாந்து ஆகியவையும் பாதிக்கப்பட்டு, உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளன.

ஷாம்பியாவில், வரும் மார்ச் அல்லது ஏப்ரல் வரை மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு உணவு உதவி தேவைப்படும். உணவு உதவி கோரிக்கையில் 13 வீதம் மட்டுமே இங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மூன்றாவது ஆண்டாக தொடர்ந்தும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மோசமான பருவ நிலை காரணமாக இங்கு ''உயிர் வாழ்வதற்கான உத்திகள்'' அனைத்தும் பயன்படுத்தப்பட்டும் எதுவும் முடியாமல் போய்விட்டன.

சிம்பாவேயில் 8 மில்லியன் மக்களுக்கு (66%) உணவு உதவி தேவையாக இருப்பதுடன், முறையான பொருளாதாரம் சீர்குலைவதற்கும் அனுமதிக்கப்பட்டுவிட்டது. இந்த நாடு இப்போது பண்டமாற்று பொருளாதாரத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது என்று, Stratfar வலைத் தளம் விளக்கியுள்ளது. தற்போது பணவீக்கம், 198 வீதமாக இருப்பதுடன் 2003 ல் பண வீக்கம் 500 வீதத்தை தொட்டுவிடும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்புகிறது. இந்த பண வீக்கத்தில் 60 வீதமானவை உணவு விலை சம்மந்தப்பட்டது என்று கூறிய ஜனாதிபதி முகாபே, பண வீக்கத்தை கட்டுப்படுத்த ஊதிய முடக்கத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். இது சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கையாகும். ஏப்ரல் மாதத்திற்கான 3 லட்சம் மெட்ரிக் தொன் உணவு தேவைப்பட்டபோதும், அதில் 3 ல் 2 பங்குதான் வந்து சேர்ந்திருக்கின்றது.

மாலாவியில், சாதாரண காலத்திலேயே மொத்த உணவுத் தேவைகளில் 10 சதவிகிதம்தான் உற்பத்தியாகும். ஆனால், கடுமையான மழை, வெள்ளம் மற்றும் அண்மையில் ஏற்பட்ட டெல்பினா சூறாவளி ஆகியவற்றால் இந்த நாட்டின் நிலைமை மிகவும் ஆபத்தாகிவிட்டது. டெல்பினா 23.500 ஹெக்டர் பயிர்களை நாசமாக்கி, 57.000 வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் கொலாரா தொற்றுநோய் ஏற்பட்டு நாடே சீரழிவில் சிக்கிவிட்டதாக ஜனாதிபதி முழுஜி (Muluzi) பிரகடனப்படுத்தி உணவு மற்றும் இதர உதவிகள் தேவை என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தெற்கு ஆபிரிக்காவின் இதர பகுதிகள் என்று எடுத்துக்கொள்ளும்போது, டெல்பினா சூறாவளியின் தாக்கத்தால் மொசாம்பிக்கும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நாட்டில் பயிர் விளையும் பருவம் இது. இதற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால், இங்கு சத்தூட்டக் குறைவு பெருகி வருகிறது. உணவு உதவி தேவைப்படுவோர் எண்ணிக்கை 6 லட்சத்திலிருந்து 1.4 மில்லியனாக உயர்ந்துவிட்டது. லெசாத்தோவில், மலைப் பகுதிகளில் கடுமையான பனி பொழிந்திருப்பதால் நிவாரண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டில் மலைப் பாங்கான பகுதிகள் தான் அதிகமாக பிடித்துக்கொண்டுள்ளன. எல்னைனோ (ணிறீ ழிவீமஷீ) தாக்கத்தால் ஆபிரிக்கா முழுவதிலும் பருவநிலை இன்னும் பாதிக்கப்பட்டே வருகிறது. 2003ம் ஆண்டு முழுவதிலும் மேலும், வரட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரவலான வளர்ந்து வருகின்ற பஞ்சம், ஆபிரிக்க கண்டம் முழுவதையும் பாதித்து, கோடிக்கணக்கான மக்கள் நேரிடையாக சாவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். சத்தூட்ட குறைவின் காரணமாக, அல்லது பசியால் வரும் நோயின் காரணமாக நேரடியாக மக்கள் மடிகின்றனர். பருவ நிலையில் தீவிர தன்மைகள் ஆபிரிக்காவிற்கு புதிது அல்ல. பருவ நிலைகளால் மட்டும் இந்த பஞ்சம் ஏற்பட்டுவிடவில்லை. ''இரண்டு தொடர்ந்த பருவ நிலைகளில் மழை வராத காரணத்தினால் மட்டும் இந்த மண்டலத்தில் ஆழமான நெருக்கடி ஏற்பட்டுவிடவில்லை'' என்று IRIN மதிப்பீடு செய்துள்ளது.

ஆபிரிக்க நாடுகள் இப்படி பஞ்சத்தில் வீழ்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், நீண்ட காலமாக இடையீடு இன்றி நடைபெற்றுவரும் பொருளாதார வீழ்ச்சிதான். அண்மையில் யூனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் ஷாம்பியாவில், 2000 ஆண்டில் ஐந்து வயதுக்கு குறைந்த 59 வீதமான குழந்தைகள் சத்தூட்டக் குறைவு உள்ளவர்கள் என்றும், இது மாலாவி நாட்டில் 49 வீதமாகவும், லெசாத்தோவில், 44 வீதமாகவும், சிம்பாவேயில் 27 வீதமாகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியது.

சந்தை சீர்த்திருத்தங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி உருவாக்கியுள்ள ''வாஷிங்டனின் கருத்து ஒற்றுமையை'' IRIN ஆட்சேபித்துள்ளது. இந்த பொதுக் கருத்தானது, ''அரசாங்கத்தின் தலையீட்டை வெறுப்பதுடன், குறுகிய கால நிதி நலன்களை மட்டுமே கவனிக்கிறது. நீண்ட கால உணவு பாதுகாப்பில் நாட்டம் செலுத்துவதில்லை'' என்று IRIN விமர்சனம் செய்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார சீரமைப்பு திட்டங்களின் கீழ் அரசாங்கம் மக்களுக்கு ''உணவு பாதுகாப்பு உறுதிமொழியாளராக'' விளங்க முடியாது. உணவுப் பொருட்களுக்கு அதற்கான வாரியங்களே விலையை நிர்ணயிக்கின்றன. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் முறையை அரசாங்கம் கைவிட்டுவிட்டு, தனியாரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுள்ளது. இது தவிர ஏழை மக்கள் சார்ந்திருக்கும் சமூக சேவைகள் மற்றும் சிறிய விவசாயிகளுக்கான உதவித் தொகைகள், மானியங்கள் யாவும் வெட்டப்பட்டுவிட்டன.

ஆபிரிக்காவின் மிகப்பெரும்பாலான நாடுகளில் பிரதான உணவு உற்பத்தியாளர்கள் சிறிய விவசாயிகள் தான். அவர்களுக்கு கடன் வசதி மானிய அடிப்படையில் விதைகள், உரங்கள் வழங்கப்பட்டு வந்தால், அவர்களே நாட்டு மக்களுக்கு உணவு வழங்குகின்ற வல்லமை உள்ளவர்களாகயிருப்பார்கள். அவர்கள் உபரியாக சேமித்து வைக்கும் தானியங்களை முறையாக வரட்சி அல்லது வெள்ள பாதிப்பு நேரங்களில் பயன்படுத்திக் கொண்டால், இங்கு பஞ்சமும் இல்லை, பட்டினியும் இல்லை. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையால் உதவித்தொகைகள், மானியங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. அரசாங்கத்தின் கொள்முதல் ஏற்பாடுகள் கைவிடப்பட்டுவிட்டன. ஆபிரிக்க வேளாண்மை ''சுதந்திர சந்தைக்கு'' திறந்துவிடப்பட்டுவிட்டது. இதன் விளைவுதான் இன்றைய பஞ்சமும் பிணியுமாகும்.

உலக வங்கி வேளாண்மைக்கு அளித்து வந்த உதவி 1979-81 ல் 31 வீதமாகயிருந்து 1999-2000 ல் 10 வீதத்திற்கு வீழ்ச்சியடைந்துவிட்டது. சர்வதேச நாணய நிதியம் தானே தயாரித்துள்ள மதிப்பீடுகளின்படி ஷாம்பியா நாட்டில், அரசாங்க சந்தைகளில் தனியார் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக, 1991 முதல் 94 வரை கிராமங்களில் வறுமை 30 வீதமாக அதிகரித்துவிட்டது.

இதில் வேதனை என்னவென்றால், பஞ்சத்தால் வாடும் எல்லா நாடுகளுமே தாங்க முடியாத கடன் சுமையில் சிக்கித் தவிப்பதுதான். இதற்கு முக்கியமான காரணம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை மேற்கொண்ட கொள்கைகள் தான். இந்த நாடுகளை கடன் வாங்க அவை இரண்டும் ஊக்குவித்தன. இந்தக் கடன்களை திரும்ப செலுத்தவேண்டிய அவசியத்தில், கட்டாயத்தில், தள்ளப்பட்ட ஏழை நாடுகள், உலகச் சந்தையில் உணவை வாங்கும் வல்லமையை இழந்துவிட்டன. நன்கொடைகள் தரும் நாடுகளையே நம்பி வாழ்ந்தன. இந்த நாடுகளில் மாலாவி மட்டுமே தாம் உதவியோடு பெறுகின்ற ஒவ்வொரு டொலரிலும் 39 சதங்களை சர்வதேச கடன்காரர்களுக்கு திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved