World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP in Sri Lanka commemorates 15th anniversary of Keerthi Balasuriya's death

இலங்கையில் சோ.ச.க, கீர்த்தி பாலசூரியவின் மறைவின் 15 வது ஆண்டை நினைவு கூர்ந்தது

By our reporter
31 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை), அதன் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க) ஸ்தாபகப் பொதுச்செயலாளரான கீர்த்தி பாலசூரியவின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 21 அன்று கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடாத்தியது. இந்தக் கூட்டத்திற்கு அதிகளவிலானவர்கள் சமூகமளித்திருந்தனர். அவர் 1987 டிசம்பர் 18ம் திகதி 39 வயதிலேயே மாரடைப்பால் அகாலமரமணமானது அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்கு ஒரு துன்பகரமான இழப்பாகும்.

இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் தீவின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்தார்கள். கீர்த்தியின் வாழ்க்கைத் துணைவியும் சோ.ச.க. யின் மத்திய குழு உறுப்பினருமான விலானி பீரிஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சோ.ச.க. வின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் உரை நிகழ்த்தியதோடு, மத்திய குழு உறுப்பினர்களான நந்த விக்கிரமசிங்கவும் மற்றும் தமிழில் அரவிந்தனும் உரையாற்றினார்கள்.

கீர்த்தியின் அரசியல் வேலையின் பொருத்தத்தை தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்று தெளிவுபடுத்துவதன் பேரிலேயே அவரின் மறைவின் 15வது ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக இந்தக் கூட்டத்தை சோ.ச.க. ஒழுங்கு செய்துள்ளது, என பீரிஸ் குறிப்பிட்டார். மார்க்சிசத் தத்துவத்திலும் வரலாற்றிலும் பரந்த அறிவைப் பெற்றிருந்த அவர், யுத்தத்துக்கு பிந்திய காலத்தில் ட்ரொட்ஸ்கிசத்தின் ஒரு பிரபலமான பிரதிநிதியாக விளங்கினார். ஒரு இளைஞன் என்ற வகையில், கலை சம்பந்தமாக தனக்கிருந்த ஆர்வத்தின் ஊடாக லியோன் ட்ரொட்ஸ்கியைப் பற்றி வாசிக்க விளைந்த அவர் விரைவாக ட்ரொட்ஸ்கியின் அரசியல் படைப்புகளில் மூழ்கிப்போனதோடு நான்காம் அகிலத்தின் வேலைத் திட்டத்தின் சரியான தன்மையில் நம்பிக்கை கொண்டவரானார், என அவர் தெளிவுபடுத்தினார்.

நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கூட, கீர்த்தி தனது திடநம்பிக்கைகளில் தடுமாற்றம் கொள்ளவில்லை என பீரிஸ் கூறினார். 1970 களின் முற்பகுதியில், புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பு.க.க. அரச அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த துன்பகரமான நிலைமைகளையும், அதே சமயம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு) நீண்டகாலப் பிரித்தானியத் தலைமைத்துவம் அரசியல் ரீதியில் பலஹீனமாகிக் கொண்டிருந்ததையும் பீரிஸ் விபரித்தார்.

"கீர்த்தி எப்போதும் ட்ரொட்ஸ்கிசத்தில் நம்பிக்கை இழக்கவில்லை." உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் முதிர்ச்சியடையும் போது, நெருக்கடியான நிலைமைகள், அவை நீண்ட காலமானவையாக இருந்தாலும் கூட, முற்றாக மாற்றமடைவதோடு ஒரு பதிலீட்டைத் தேடுவதை நோக்கி தொழிலாளர் வர்க்கத்தை தள்ளும் என அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். ட்ரொட்ஸ்கிசத்தால் மாத்திரமே மனித குலத்தின் சமுதாய விடுதலைக்கான அரசியல் வேலைத் திட்டத்தை வழங்க முடியும் என கீர்த்தி சுட்டிக்காட்டியிருந்தார், எனவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் விஜே டயஸ் சிறப்புரை ஆற்றும் போது, 1964ல் லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க) திருமதி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துக்குள் நுழைந்தமையானது கீர்த்தியின் அரசியல் வளர்ச்சியில் நெருக்கடியான அனுபவங்களாக விளங்கின. முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கான ல.ச.ச.க. வின் முடிவானது, வேலைத் திட்டத்தையும் அது முன்னர் பேணிவந்த ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைகளையும் முழுமையாக காட்டிக் கொடுப்பதை பிரதிநிதித்துவம் செய்ததோடு, அச்சமயம் இளைஞர்களுக்கு மத்தியில் காத்திரமாக விவாதிக்கப்பட்டும் வந்தது.

பண்டாரநாயக்க அரசாங்கத்துக்குள் ல.ச.ச.க. நுழைந்ததை எதிர்த்தவர்கள், அதிலிருந்து பிரிந்து புரட்சிகர ல.ச.ச.க. வை நிறுவிய போதும் முன்னேற்றமான பாதையை வழங்கவில்லை. அரசியல் குழப்பமும் கொந்தளிப்புமான இந்த காலகட்டத்தில், ல.ச.ச.க. முன்னர் பின்பற்றிய நிலைப்பாடுகளை உள்வாங்கியிருந்த, ஆனால் புரட்சிகர ல.ச.ச.க. வின் கொள்கைகளோடு உடன்பாடற்ற இளைஞர்களில் ஒரு பகுதியினர் அதிலிருந்து வெளியேறி ட்ரொட்ஸ்கிசத்துக்கு புத்துயிரளிப்பதற்காக சக்தி குழுவை நிறுவினார்கள். 10 மாதங்களுக்கும் குறைவான காலத்துக்குள், பெரும்பான்மையொன்று ல.ச.ச.க. வில் மீண்டும் இணைந்துகொண்டதை அடுத்து அதன் மத்தியவாத பண்பு வெளிப்பட்டது, என விளக்கினார்.

"ட்ரொட்ஸ்கிசம் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக காட்டிக் கொடுக்கப்பட்டதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? ஏன் அது நடந்தது? இந்த அரசியல் இடர்பாடான நிலைமையை வெற்றிகொள்வது எப்படி? கீர்த்தி உட்பட எஞ்சியிருந்த எம் அனைவரதும் எண்ணங்களில் எழுந்த கேள்விகள் இவையேயாகும். சரியான பதில்களைத் தேடுவதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்," என டயஸ் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நா.அ.அ.கு. இலங்கையில் தலையிடுவதற்கான உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது. 1966 முடிவில் பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகத்தின் (சோ.தொ.க) முன்னணி உறுப்பினரான டோனி பண்டா, புரட்சிகர ல.ச.ச.க. விலிருந்து ஒரு சுயாதீனமான குழுவை கட்டியெழுப்ப தீவுக்கு வருகை தந்தார். அவரது விஜயம், 1964 மாநாட்டில் பண்டாரநாயக அரசாங்கத்தில் இணைவதற்கான ல.ச.ச.க. வின் தீர்மானத்தை எதிர்ப்பதற்காக இலங்கை வந்த சோசலிச தொழிலாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெரீ ஹீலியின் தீர்க்கமான தலையீட்டை அடுத்து இடம்பெற்றது.

பப்லோவாத சந்தர்ப்பவாதம்

"மீண்டும் ல.ச.ச.க. வில் இணைய மறுத்த நாம், பண்டாவின் ஊடாக ல.ச.ச.க. வினதும் புரட்சிகர ல.ச.ச.க. வினதும் கொள்கைகளை எதிர்த்து வந்த நீண்ட கால ட்ரொட்ஸ்கிஸ்டான வில்பிரட் பெரேரா என்ற தோழர் ஸ்பைக்குடன் தொடர்பு கொண்டோம்." ல.ச.ச.க. வின் காட்டிக் கொடுப்புக்கான வேர்கள் கொழும்பில் அன்றி பாரிசிலேயே உள்ளன, என தெளிவுபடுத்திய பெரும் காட்டிக்கொடுப்பு எனும் ஹீலியின் துண்டுப் பிரசுரத்தை அந்த குழு கவனமாக வாசித்தது. அதன் மூலம், ல.ச.ச.க. வின் சீரழிவுக்கான பிரதான அரசியல் பொறுப்பு அதன் வழிகாட்டியான, பிரான்சில் உள்ள நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் சந்தர்ப்பவாத அரசியலிலேயே தங்கியுள்ளது என ஹீலி விளக்கியிருந்தார்.

"கீர்த்தி, ஐக்கிய செயலகம் பிரதிநிதித்துவம் செய்த சந்தர்ப்பவாத போக்குக்கு எதிரான நா.அ.அ.கு. வின் போராட்டத்தை மும்முரமாகக் கற்கத் தொடங்கினார். அவர் தோழர் ஸ்பைக்கின் நூலகத்தின் மிகவும் வழக்கமான வாசகராக இருந்ததோடு, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நான்காம் அகிலத்துக்குள் மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேலால் தலைமை வகிக்கப்பட்ட அப்போதைய திரிபுவாதத்தின் வளர்ச்சி பற்றிய நா.அ.அ.கு. வின் ஆவனங்களை உள்வாங்குவதில் பல மணித்தியாலங்களாக ஈடுபட்டுவந்தார்," என டயஸ் தெரிவித்தார்.

பப்லோவாத மீள்வாதமானது 1940களின் பிற்பகுதியில் யுத்தத்துக்கு பின்னைய முதலாளித்துவத்தின் மீளைமைப்பை அடுத்து உலக ஏகாதிபத்தியத்தினதும் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினதும் சக்தியின் தோற்றத்துக்கு வழங்கிய ஒரு ஆழமான பிரதிபலிப்பாகும். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றலில் முழுமையாக நம்பிக்கையிழந்த பப்லோவாதிகள் "பொதுமக்களின் உண்மையான இயக்கத்துக்குள் இணைந்துகொள்ளல்" எனும் பெயரில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் இயக்கங்களில் செல்வாக்குச் செலுத்தும் பிற்போக்குச் சக்திகளுக்கு -ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம் மற்றும் அரைக்காலனித்துவ நாடுகளில் பலவித முதலாளித்துவ தேசியவாத தலைமைத்துவங்களுக்கும்- அடிபணிந்து போனார்கள் 1953ல் வேலைத்திட்டத்தையும் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைகளையும் காப்பதற்காக நா.அ.அ.கு. நிறுவப்பட்டது.

கீர்த்தி நா.அ.அ.கு. வின் ஆவணங்களில் அவர் மேற்கொண்ட கற்கையின் மூலம் பெற்றுக்கொண்ட நீண்ட படிப்பினைகளை எங்களுக்கும் பகிர்ந்தளித்தார். தொழிலாளர் வர்க்கத்துக்கான ஒரு புரட்சிகர பாதையை, தொழிலாளர் வர்கக்த்தின் அனைத்துலக புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான மார்க்சிஸ்டுகளின் போராட்டத்திலிருந்து பெற்றுக்கொண்ட வரலாற்றுப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் காணமுடியாது என்பதில் அவர் பூரண நம்பிக்கை கொண்டிருந்தார், என டயஸ் விளக்கினார்.

தீவிரமானதும் மற்றும் மேலும் புரட்சிகரமான நிறங்களால் ஆனதுமான பண்டாரநாயக்கவின் திட்டங்களையிட்ட ல.ச.ச.க. வின் வருணிப்புகள், மொஸ்கோவிலும் மற்றும் பீஜிங்கிலும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடன் சேர்ந்து காஸ்ட்ரோவின் கியூபாவை சோசலிசத்தின் பாதையாக மிகைப்படுத்திய பப்லோவாத திரிபுவாதத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மூலங்களைக் கொண்டிருந்ததாக டயஸ் கூறினார். நா.அ.அ.கு. ஆவணங்கள் மீதான கீர்த்தியின் கற்கையானது, ல.ச.ச.க. வின் காட்டிக்கொடுப்பையடித்து காஸ்ட்ரோ, சேகுவேரா, மாவோ அல்லது வட கொரியாவின் இம் இல் சங் போன்றோர்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் தோன்றிய ஒரு தொகை குட்டி முதலாளித்துவ இளைஞர் இயக்கங்களில் இருந்து பு.க.க. வை வேறுபடுத்த அவர்களுக்கு சக்தியளித்தது. பு.க.க. 1968ல் நா.அ.அ.கு. வின் இலங்கைக் கிளையாக அமைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தேசியவாதத்துக்குள்ளும் இனவாதத்துக்குள்ளும் நுளைந்துகொண்டனர், என டயஸ் விளக்கினார்.

"திரிபுவாதத்துக்கு எதிரான நா.அ.அ.கு. வின் போராட்டத்தின் படிப்பினைகளை உள்வாங்கிக்கொள்ளும்போது, கீர்த்தி சோசலிச அனைத்துலகவாத நிலைப்பாட்டில் இருந்தும் ஒரு பரந்த விமர்சனத்துக்காக இத்தகைய எல்லா அமைப்புகளின், விசேடமாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அரசியலை ஆய்வுக்குட்படுத்தினார். இந்தியாவில் நக்சலைட் இயக்கம் சம்பந்தமான அவரது விமர்சனம் பிரித்தானிய சோ.தொ.க.வின் சாதனமான நியூஸ் லெட்டரில் வெளியாகியிருந்ததாக டயஸ் விளக்கினார்.

சோ.தொ.க.வின் ஒழுக்கவிலகல்

1970 களின் முற்பகுதியில் பப்லோவாதிகள் அடிபணிந்துபோயிருந்த அதே அழுத்தங்களுக்கு பிரித்தானிய சோசலிசத் தொழிலாளர் கழகமும் இணங்கிப்போகத் தொடங்கிய அதேவேளை, கீர்த்தியின் உக்கிரமான தத்துவார்த்த வேலை அதன் சீரழிவின் அழுத்தங்களைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை வழங்கியது. பாகிஸ்தான் ஆட்சிக்கு எதிராக கிழக்கு வங்காள தேசிய விடுதலைப் போராட்டத்தில் இந்திய இராணுவத்தின் தலையீட்டிற்கு ஆதரவாக நா.அ.அ.கு. வின் பெயரில் ஆலோசனையின்றி வெளியிடப்பட்டிருந்த அறிக்கையை எதிர்த்து 1971 இல் கீர்த்தி சோ.தொ.க. திற்கு எழுதினார்.

நா.அ.அ.கு. வின் செயலாளர் கிளிவ் சுலோட்டருக்கு கீர்த்தி எழுதிய கடிதத்தில்: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் யுத்தம் ஒரு விடுதலை யுத்தமல்ல... இந்தோ பாகிஸ்தான் யுத்தத்தை எதிர்க்காமல் வங்காள மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தை ஆதரிப்பதும் மற்றும் சோசலிச அடித்தளத்திலான இந்தியாவின் அறிவுபூர்வமான ஐக்கியமும் சாத்தியமற்றதாகும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான யுத்தத்தை எதிர்க்காமல், இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பல மக்கள் பகுதியினரதும் சுயநிர்ணய உரிமையை காப்பதற்கு இன்றியமையாத ஐக்கிய சோசலிச இந்தியாவைப் பற்றி பேசுவது முழு கோமாளித்தனமானதாகும்."

சோ.தொ.க. முன்வைத்த அறிக்கைக்கு வேறுபட்டவிதத்தில், கிழக்குப் பாகிஸ்தானிலான முரண்பாடுகளுக்கான வரலாற்று வேர்கள் 1948ல் இந்தியத் துணைக் கண்டத்தை இனரீதியில் பிரித்ததிலேயே தங்கியுள்ளது என பு.க.க. விளக்கியது. கட்சியானது, இந்தியா தம்மை "கிழக்கு வங்காளத்தின் விடுதலையாளர்கள்" எனக் கூறிக்கொள்வதை நிராகரிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்ததோடு இந்திய இராணுவம் வங்காள மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே தலையிடுகின்றது என எச்சரித்தது. அது நெருக்கடிக்கான தீர்வானது, பிராந்தியத்தில் முதலாளித்துவ ஆளுமைக்கும் மற்றும் ஏகாதிபத்திய ஊடுருவலுக்கும் முடிவுகட்டுவதற்காக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை தொழிலாளர்களின் ஐக்கியத்திலேயே தங்கியுள்ளது என சுட்டிக்காட்டியது.

எவ்வாறெனினும் பு.க.க. அதனது அறிக்கையை விலக்கிக்கொள்ளத் தள்ளப்பட்டது. கீர்த்தி சுலோட்டருக்கு எழுதிய தனது கடிதத்தில்: "அனைத்துலகக் குழுவின் அறிக்கையை நாம் பாதுகாப்பதானது தொழிலாளர் வர்க்கத்துக்கு மத்தியில் பேரளவு குழப்பத்தை உருவாக்கக்கூடும். அனைத்துலகக் குழுவின் அறிக்கையை பாதுகாப்பது கடினமானது என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமற்றதாகும். ஆயினும், அகிலத்துக்குள்ளேயான தெளிவுபடுத்தலானது வேறெதனை விடவும் மிகவும் முக்கியமானதுடன், அகிலத்தைக் கட்டியெழுப்ப போராடாமல் தேசிய பகுதியை கட்டுவதானது எமக்கு சாத்தியமானதல்ல," என குறிப்பிட்டிருந்ததாக டயஸ் சுட்டிக்காட்டினார்.

சோ.தொ.க. தலைமைத்துவம், பு.க.க. வினால் எழுப்பப்பட்ட முக்கியமான அரசியல் வேறுபாடுகளை நா.அ.அ.கு. வின் ஏனைய பகுதிகளுக்குக் கூட அறிவிக்காமல், ஒரு அனைத்துலக கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்படுவதை தவிர்த்தது. அடுத்த தசாப்தத்தில், சோ.தொ.க. வின் சந்தர்ப்பவாத சீரழிவின் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (தொ.பு.க) மோசமான சீரழிவும் இலங்கையிலும் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்திலும் பு.க.க. வின் வேலைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

"சோ.தொ.க, 1972ல் ஒடுக்கப்படும் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை பு.க.க. பாதுகாப்பதை கடுமையாக எதிர்த்தது. இது பண்டாரநாயக்க கூட்டரசாங்கம், தொழிலாளர் வர்க்கத்தைப் இனரீதியில் பிரிக்கவும் மற்றும் தமிழர் விரோத வேறுபாடுகளை உக்கிரப்படுத்தவும் ஒரு இனவாத அரசியல்யாப்பை ஏற்றுக்கொண்ட நிலைமையின் கீழ் இடம்பெற்றது. இதன் பெறுபேறாக சிங்கள, தமிழ் இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கும் மத்தியில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட குட்டிமுதலாளித்துவ தீவிரவாத இயக்கங்களும் தோன்றின.

"1972க்கு முன்னைய நான்கு வருடகாலத்தில், பு.க.க. இந்த கேடுவிளைவிக்கும் அபிவிருத்திகளை எதிர்ப்பதற்காக, ஒரு சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் குட்டிமுதலாளித்துவ மக்களை தொழிலாள வர்க்கத்தைச் சூழ அணிதிரட்டுவதற்காக, தெற்கிலும் அதேபோல் வடக்கிலும் உக்கிரமான போராட்டத்தை முன்னெடுத்து வந்தது. 1970ல் வெளியிடப்பட்ட ஜே.வி.பி. யின் அரசியலும் வர்க்க சுபாவமும் என்ற கீர்த்தியின் நூலானது, சிங்கள இளைஞர்களுக்கு மத்தியில் ஜே.வி.பி. யின் இனவாத, குட்டிமுதலாளித்துவ கொள்கையை அம்பலப்படுத்துவதில் முக்கியமான பாத்திரம் வகித்தது. தமிழர்களுக்கு மத்தியிலான பு.க.க. வின் போராட்டமும் கணிசமான ஆதரவை பெற்றுக்கொண்டது. ஆனால் கட்சியின் நிலைப்பாடானது சோ.தொ.க. வின் அரசியல் நிலைப்பாடுகளால் கடுமையான இடையூறுகளுக்குள்ளானது, என டயஸ் விளக்கினார்.

பு.க.க. வுக்கும் நா.அ.அ.கு. வுக்கும் தமது புரட்சிகர முன்நோக்கானது லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதை தெளிவுபடுத்த முடிந்தது, 1985-86 தொ.பு.க. வுடனான பிளவுவரை மாத்திரமல்ல. கீர்த்தி மரணிப்பதற்கு முன்னர் இறுதியாக வேலை செய்திருந்த ஆவணமான, இந்திய - இலங்கை உடன்படிக்கை மற்றும் வட இலங்கையில் இந்திய இராணுவத்தின் தலையீடு சம்பந்தமாக 1987 நவம்பரில் வெளியிடப்பட்ட நா.அ.அ.கு. அறிக்கையிலிருந்து டயஸ் மேற்கோள் காட்டினார்.

"ல.ச.ச.க.வின் காட்டிக்கொடுப்பு இருந்துகொண்டிருந்த அதேவேளை, முதலாளித்துவ தேசியவாத முட்டுச் சந்துக்கு புறம்பாக, ஒரு பாதையை வழங்கும் ஒரே முன்னோக்கானது தமிழ் மற்றும் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததது. தமிழ் மக்களையும் அதே போல் தெற்கில் சிங்கள மக்களையும் ஒடுக்குவதன் வர்க்க அடிப்படையை அம்பலப்படுத்திய இந்திய ஆக்கிரமிப்பானது, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்க ஆதிக்கத்தின் கீழ் தேசியப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்துடன் இணைக்கவேண்டிய உடனடி அவசியத்தை மறுபடியும் தோற்றுவித்தது."

அரசியல் முன்நோக்கை அபிவிருத்தி செய்வதில் நா.அ.அ.கு. வில் உள்ள தனது சம சிந்தினையாளர்களோடு நெருக்கமாக ஒத்துழைக்க முடிந்தமை, தொ.பு.க. வுடனான பிளவின் பின்னைய கீர்த்தியின் அரசியல் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்களாக விளங்கின. டயஸ், உ.சோ.வ.த. ஆசிரியர் குழு தலைவரான டேவிட் நோர்த் எழுதிய, நாம் பேணும் மரபுரிமைகள் எனும் நூலின் முன்னுரையில் கீர்த்திக்கு வழங்கியுள்ள புகழுரையிலிருந்து மேற்கோள் காட்டி முடிவு செய்தார்.

"இந்த நூலை தயாரித்து எழுதும்போது, அதன் ஆசிரியர் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னைய காலத்தில், மிகவும் அறிவுஜீவி மற்றும் ஒப்பற்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகளில் ஒருவருடன் அவர் மேற்கொண்ட எண்ணிக்கையற்ற கலந்துரையாடல்களில் இருந்து அளவிடற்கரிய நன்மை பெற்றுள்ளார். -கீர்த்தி பாலசூரிய, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைவர்களில் ஒருவரும் இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளருமாவார்...

"சந்தர்ப்பவாதத்தின் அச்சமற்ற ஒரு எதிரியான தோழர் பாலசூரிய, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தாக்குதல்களுக்கு எதிராக அனைத்துலகக் குழுவைக் காப்பதற்கான போராட்டத்தில் தீர்க்கமான பாத்திரம் வகித்தவராவார். அவர் நான்காம் அகிலத்தின் வரலாற்று பற்றிய பரந்த நுண்ணறிவுடனும், மற்றும் பப்லோவாதத்துக்கு எதிரான தசாப்தகால போராட்டத்தை ஆழமாக உள்ளீர்த்துக்கொண்டும் இந்தப் போராட்டத்தில் முன்னெடுத்தார்."

கூட்டத்தின் முடிவில், ஊர்காவற்துறை தீவில் சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் மரண அச்சுறுத்தலை தோல்வியுறச் செய்வதற்கான கட்சியின் பிரச்சார நிதிக்கு சபையோர் பெருந்தன்மையுடன் நிதி வழங்கினர். பலர் பிரத்தியேகமாக கலந்துரையாடினார்கள். கீர்த்தியின் இரு சகோதரிகள் வருகைதந்திருந்ததோடு, அனைத்துலக தொழிலாள வர்க்கத்துக்கான அவரது வேலைகளின் முக்கியத்துவத்தை விளக்கியதற்காக பேச்சாளர்களுக்கு அவர்களின் பாராட்டுக்களையும் வெளிப்படுத்தினர். வருகைதந்திருந்தவர்களில் பலர் நா.அ.அ.கு. வின் வரலாறு பற்றிய கீர்த்தியின் கற்கையானது பு.க.க. வுக்கு ஒரு உறுதியான அரசியல் அடிப்படையை ஸ்தாபிப்பதில் தீர்க்கமான பாத்திரம் வகித்துள்ள விதத்தையிட்டு அவர்கள் விசேடமாக ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.

See Also :

நிரந்தரப் புரட்சியும் இன்றைய தேசிய கேள்விகளும்

சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்

Top of page