World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்க

California universities and public schools face massive budget cuts

கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளின் செலவு வெட்டப்படுகிறது

By Kim Saito
15 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் (University of California (UC) மற்றும் கலிபோர்னியா அரச பல்கலைக்கழகங்களை (California State University) சேர்ந்த சுமார் 6 லட்சம் மாணவர்கள் உடனடியாக 10 முதல் 15 சதவிகித கட்டண உயர்வை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் மாணவர்கள் குளிர்கால விடுமுறைக்குப் பின்னர் திரும்பும்போது படிப்புக்கட்டண உயர்வை சந்திக்க வேண்டியிருக்கிறது. அடுத்த 18 மாதங்களில் கலிபோர்னியா மாநில பட்ஜெட்டில் துண்டுவிழும் தொகை 34.8 பில்லியன் டொலர்களாக இருக்கும் என்று கவர்னர் கிரே டேவிஸ் ஆரம்பத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து சென்ற மாதம் உயர்கல்வி அதிகாரிகளது அவசரக்கூட்டம் நடைபெற்றதில், இதுவரை இல்லாத அளவிற்கு ஆண்டின் நடுப்பகுதிக்கு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கலிபோர்னியா மாநில பட்ஜெட்டின் துண்டுவிழும் தொகை எவ்வளவாகயிருக்கும்? மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஹெர்ப் வெசன் இதுபற்றி கூறும்போது, ''இந்த பட்ஜெட்டில் துண்டுவிழும் அளவு மிக ஆழமானதாகவும், மிக பரவலானதாகவும் இருக்கும். மாநிலத்தின் சம்பளப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு பூங்கா மேற்பார்வையாளரையும், ஒவ்வொரு கல்லூரி பேராசிரியரையும் மற்றும் ஒவவொரு நெடுஞ்சாலை கண்காணிப்பு அதிகாரியையும் பதவியிலிருந்து நீக்கினாலும் துண்டுவிழும் தொகையை ஈடுகட்டிவிடமுடியாது. அதற்குப் பின்னரும் 6 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை நிலவவே செய்யும்'' என்று குறிப்பிட்டார்.

அரையாண்டு முறை செயல்பட்டு வரும் பேர்க்லி பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னிய அரச பல்கலைக்கழக வளாகங்களில் 2003 ஜனவரி 3ம் ந்தேதி முதல் கட்டண உயர்வு செயல்படத் துவங்கிவிட்டது. காலாண்டு தேர்வு முறையில் நடத்தப்பட்டுவரும் கலிபோர்னிய வளாகங்களிலும், படிப்புக்கட்டணங்கள் மார்ச் 2003 ல் உயரும். கடந்த 1994 ஆம் ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டதன் பின்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 6 ந்தேதி, கவர்னர் டேவிஸ் 2002-03 மாநில பட்ஜெட் திருத்த மதிப்பீடுகளுக்கான ஆலோசனைகளை வெளியிட்டதுடன், நிதிப்பற்றாக்குறை பற்றி விவாதிப்பதற்காக, மாநில சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் ஒன்றையும் நடத்தினார். 12 நாட்களுக்குப்பின்னர், துண்டுவிழுந்த தொகையை 35 பில்லியன் டொலர்களுக்கு சரிக்கட்டியபோதும், 2002-2003 ஆண்டிற்கான பொதுச் செலவு பட்டியலில் இடம்பெற்ற 77 பில்லியன் டொலர்களில் இது 45 சதவீதமாகும். பட்ஜெட் சட்டத்தின்படி அப்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை இதுவாகும். அதற்குப் பின்னர், ஆண்டின் நடுப்பகுதியில் அவசரமாக கல்விச் செலவீனங்களில் 1.734 பில்லியன் டொலர்களைக் குறைக்கும் ஆலோசனைகளை வெளியிட்டார். இக் கல்வித்திட்டங்கள் அந்த மாநில பட்ஜெட்டில் 98 வது, ஆலோசனை திட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கலிபோர்னியா ஒரு தனி நாடாக இருக்குமானால், பிரான்ஸ் மற்றும் இத்தாலியிலும் பார்க்க உலகின் 5 வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும். 35 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருப்பதுடன், அமெரிக்காவிலேயே அதிக மக்கள் தொகையுள்ள மாநிலமாகவும் கலிபோர்னியா விளங்குகின்றது. இங்கு மிகப்பெரும் பணக்காரர்களும், பரம ஏழைகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். டாட்காம்.பூம் (dot.com boom) என்று அழைக்கப்படுகிற இன்டர்நெட் அபரிமித வளர்ச்சிக்காலத்தில் ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு இங்கு உயர்ந்தது. சிலிகோன் பள்ளத்தாக்கு, கிரேட்டர் சான் பிரான்ஸிஸ்கோ பகுதியில் உருவான பல்வேறு உயர் தொழில்நுட்ப கம்பெனிகள் மூலமும், ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பங்குகள் மூலமும் கம்பெனிகள் வரியும் ஊழியர்கள் மூலம் கிடைக்கும் வருவாயும் மிகப்பெரும் அளவிற்கு வளர்ந்து கலிபோர்னியா மாநிலமே திடீரென்று பணக்கார மாநிலமாக மாறியது.

எனவே, அண்மைக் காலத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் அரச பல்கலைக்கழகங்கள் புதிய வளாகங்களை அமைத்தன. புதிய அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகரித்தது. ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்ந்தது. பொது சுகாதார வசதிகள் விரிவடைந்தன. புதிய சாலைகள் அமைக்க ஒப்புதல் தரப்பட்டது. மாநில ஊதியம் பெறும் ஊழியர்கள் புதிதாக 40,000 பேர் நியமிக்கப்பட்டனர்.

இருந்த போதிலும், பங்கு மார்க்கெட்டில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக உயர் தொழில்நுட்ப தொழில்கள் முடங்கிவிட்டன. எரிபொருள் நெருக்கடி உருவாயிற்று. கடந்த இரண்டாண்டுகளில் பங்குகள் வரி, முதலீட்டு லாப வரி ஆகியவற்றின் மூலம் கிடைத்து வந்த 17 பில்லியன் டொலர்கள் 5 பில்லியன் டொலர்களாக குறைந்துவிட்டது. தற்போதய பற்றாக்குறையில் இது பாதித் தொகையாகும். ஆனால், மாநில அரசியலமைப்பின் படி பற்றாக்குறை பொருளாதார அடிப்படையில் மாநிலம் செலவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மாநில சட்டமன்றத்தில் சட்டமன்ற ஆய்வாளர் எலிசபெத் ஹில் உரையாற்றியபோது, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடனடியாக உருவாகும் பிரச்சனைகள் துண்டுவிழும் தொகைக்கும் அப்பால் செல்லும் என்று விளக்கிக் கூறினார். அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் 12 முதல் 15 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. கவர்னர் செலவினங்களை குறைத்திருப்பதை ''நம்பகத்தன்மை'' உள்ளதாக ஹில் குறிப்பிட்டதுடன், சிறைச்சாலைகள் உட்பட சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எந்தவிதமான குறைப்பும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தொழிலாள வர்க்க மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு உயர்ந்த கல்வியை வழங்கிவருவதில் தேசிய முன்மாதிரியாக கலிபோர்னியா கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கல்வி கற்போர் எண்ணிக்கை இங்கு அதிகரித்து வருகின்றது. வகுப்பறைகள் நிரம்பிவிட்டன. லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்லூரிப் பட்டத்தை பெறமுடியாத அளவிற்கு படிப்புக் கட்டணங்களும் உயர்ந்துவிட்டன.

மிகப்பெரிய பொதுக்கல்வி அமைப்பான ''மக்கள் பல்கலைக்கழகம்'' என்று அழைக்கப்படும் கலிபோர்னியா அரச பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு டிசம்பர் 16 ந்தேதி அன்று கூடி படிப்புக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தது. இக்கூட்டம் நடக்கும்போது வெளியில் மாணவர்கள் கட்டண உயர்விற்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு, ''கட்டணத்தை உயர்த்துவது பதிலல்ல'' என்றும், ''கலிபோர்னியா அரச பல்கலைக்கழக மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தவர்கள்'' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தி வந்தனர்.

எல்லா உயர்நிலைப் பாடசாலைகளிலிருந்தும் பட்டம் பெற்றுவரும் மாணவ, மாணவியரில் முன்னனியில் இருக்கும் 3 ல் 1 பகுதியினருக்கு மாநில பல்கலைக்கழகங்கள் இடம் கொடுக்க வேண்டியது சட்டப்படி கட்டாயம் ஆகும். மாநில பல்கலைக்கழகங்கள் தவிர, இதர பல்கலைக்கழகங்கள் அவற்றிற்கு இணையாக கருதப்படுகின்றன. அத்தகைய பல்கலைக்கழகங்கள் உயர்நிலைப் பாடசாலைகளில் பட்டம் பெற்றுவரும் 12 சதவிகித முன்னணி மாணவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமென்று மாநிலம் சட்டம் இயற்றியுள்ளது. ஸ்டான்ட்போர்ட் பகுதியில் இயங்கும் கல்விக் கொள்கை ஆராய்ச்சிக்குழு கலிபோர்னியா கல்விக் கொள்கை பற்றி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் 2010 ல் கலிபோர்னியா அரச பல்கலைக்கழகங்களில் கூடுதலாக ஒரு லட்சம் மாணவர்கள் சேர்ந்துவிடுவார்கள். 2020 ம் ஆண்டில் இதர பல்கலைக்கழகங்களில் மாணவர் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகமாகும் என்று தகவல் தந்திருக்கின்றது.

கலிபோர்னியா அரச பல்கலைக்கழகங்களின் ஆண்டு பட்ஜெட் 3 பில்லியன் டொலர்களில் 60 மில்லியன் டொலர்கள் குறைக்கப்படுகின்றன. இதனால், ஊதியத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதுடன், புதிதாக நியமனங்கள் எதுவும் செய்யாமல் ஆட்குறைப்பு செய்யப்படும். அத்துடன் மேலும் படிப்புக் கட்டணம் உயர்த்தப்படும் நிலை ஏற்படலாம் என்று கலிபோர்னிய அரச பல்கலைக்கழக துணைவேந்தர் சார்லஸ் ரீட் தெரிவித்தார். இங்குள்ள 23 பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டில் மட்டும் 406,896 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இது புதிய சாதனை அளவாகும். பட்டம் பெறுவதற்கு முன்பு ஒவ்வொரு அரையாண்டுக்கும் கட்டணத்தில் 72 டொலர்கள் உயர்த்தப்படுவதால், ஆண்டிற்கு கட்டணம் 1,428 டொலர்களிலிருந்து 1,572 டொலர்களாக உயர்த்தப்படுகின்றது. பட்டதாரி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் 1,506 டொலர்களிலிருந்து 1,734 டொலர்களாக உயர்த்தப்படுகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் தனது 180,000 மாணவர்களின் படிப்புக் கட்டணத்தை 135 டொலர்களுக்கு உயர்த்துகிறது. இதனால், பட்டம் பெறுவதற்கு முன்பு கல்வி கற்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் 11.2 சதவிகிதமும், பட்டதாரிகளுக்கு 11.8 சதவிகிதமும் உயருகின்றது. ஒவ்வொரு காலாண்டிலும் பட்டதாரி மாணவர்கள் கூடுதலாக 150 முதல் 400 டொலர்கள் வரை செலுத்தவேண்டும். இவை படிப்பு முறைகளுக்கு பரவலாக விதிக்கப்படும் கட்டணங்களுக்கு கூடுதலாக கட்டவேண்டியவையாகும். வர்த்தகம், சட்டம், கால்நடை மருத்துவம், கண்மருத்துவம், மருந்தகம், தாதி முதலிய பல்வேறு தொழில் சார்ந்த படிப்புக்களில் சேரும் மாணவர்களையும் இந்தக் கட்டண உயர்வு பாதிக்கிறது.

''இந்த ஆண்டு இது பிரச்சனை, அடுத்த ஆண்டு பேரழிவாகிவிடும்'' என்று கலிபோர்னியா அரச பல்கலைக்கழக துணைவேந்தர் சார்லஸ் ரீட் சான்ஜோஸ் மெர்குரி நியூஸ் (San Jose Mercury News) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பாடசாலைப் படிப்பை இடையில் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் கூடுதல் கட்டணங்களை சமாளிப்பதற்கும் நேரடியாக பல்கலைக்கழக உதவி நிதியில் சேர்ந்துவிடுகிறார்கள். மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் கால் கிரான்ட்ஸ் (Cal Grants) என்பது படிப்பிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். ஏழை மாணவர்களின் கட்டண உயர்வைச் சரிக்கட்டும் வகையில் இந்த ஸ்கொலர்ஷிப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரச கல்லூரிகள்

கலிபோர்னியாவின் அரச கல்லூரி என்பது இரண்டாண்டு கல்வியை அடிப்படையாகக் கொண்டு, மாநிலம் முழுவதிலும் 108 கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இங்கு 2.9 மில்லியன் மாணவர்கள் பயின்று வருகின்றனர். உலகிலேயே மிக அதிக அளவிலான மாணவ மாணவியருக்கு உயர் கல்வியை இது வழங்கி வருகின்றது. இங்கு கல்விக் கட்டணம் மிகக்குறைவு என்பதால், லட்சக்கணக்கான தொழிலாள வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அரச கல்லூரிகளில் படித்துவிட்டு, பின்னர், மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாறி உயர் கல்வியைப் பெறுகின்றனர்.

கவர்னர் டேவிஸ் டிசம்பர் 6 அன்று, ஆண்டின் நடுப்பகுதி பட்ஜெட் ஒதுக்கீடு வெட்டில், மாநில அரச கல்லூரிகளுக்கான ஒதுக்கீட்டிலும் 215 மில்லியன் டொலர்கள் குறைப்பும் அடங்கும் என்று அறிவித்தார். அவர் ஒட்டுமொத்தமாக எல்லாச் செலவினங்களிலும் 3.66 வீதம் வெட்டுவதற்கான ஆலோசனையை வெளியிட்டார். பட்ஜெட் கூட்டத்தில் பொதுவாகச் செய்யப்பட்ட இந்தக் குறைப்பானது K-12 மற்றும் அரச கல்லூரிகளுக்கான ஒதுக்கீட்டையும் பாதிக்கிறது. இதற்கான மொத்தத்தொகை 97,457,000 டொலர்கள். மேலும் சொத்துவரி வருவாய் 37 மில்லியன் டொலர்கள் குறைவதால், இதை ''ஈடுகட்ட'' மாநில நிதி ஒதுக்கீடு எதுவும் இருக்காது.

இறுதியாகக் கவர்னர் டேவிஸ் பொது ஒதுக்கீடுகளில் 80 மில்லியன் டொலர்கள் வெட்டப்படுவதாக அறிவித்தபோது, இதன் விளைவு என்ன? என்பதை மாநில நிதித்துறை விளக்கியது. அதாவது, 2001-02 ல் K-12 மாணவர்களைச் சேர்த்துக்கொண்ட கல்லூரிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதி ஒதுக்கீடு இதுவாகும். அதை வேறு வகையில் சொல்வதென்றால், பொதுப் பாடசாலைகளிலிருந்து, வழக்கமாக, உயர்நிலைப் பாடசாலைகளிலிருந்து மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும், நகரக் கல்லூரிகளுக்கு இனி மாநில நிதி கிடைக்காது என்பதாகும்.

உடனடியாக, கலிபோர்னியா அரச பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகிவற்றை பின்பற்றி கட்டண உயர்விற்கு, சிட்டி கல்லூரி துணைவேந்தர் நஸ்பாம் முடிவு செய்துவிடாவிட்டாலும், 2003-04 ஆம் ஆண்டிற்கு கவர்னர் உத்தேசிக்கும் எதிர்கால செலவுக் குறைப்புகளுக்கு, முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக, அவசர ஆய்வுக்குழுக்களை அவர் நியமித்திருக்கிறார். அத்தோடு செலவினங்கள் குறைக்கப்பட வேண்டிய பகுதிகளை தெளிவாக, சுட்டிக்காட்டுமாறு பல்கலைக்கழக வளாக நிர்வாகிகள் அனைவருக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எல்லாச் செலவின வெட்டுக்களையும் கணக்கிடும்போது, இந்தப் பாடசாலை ஆண்டில் மட்டும் பாடசாலைகள், கல்லூரிகளுக்கான செலவினங்கள் 1.9 பில்லியன் டொலர்கள் குறைக்கப்படுகின்றன. அல்லது ஒரு மாணவருக்கு 300 டொலர்கள் வீதம் செலவு குறைக்கப்படுகிறது.

மாநில பட்ஜெட்டில் ஆலோசனை 98 என்பது, கல்விக்கான குறைந்தபட்ச நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்து தருவதுடன், நிதியை கணக்கிடுவதற்கான நடைமுறையும் இதில் அடங்கியுள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் மொத்த தொகையில் கிட்டத்தட்ட பாதி கல்விக்கான ஒதுக்கீட்டில், இப்போது மிகவும் வேதனை தரும் வெட்டு விழுகிறது. இதர வெட்டுக்களில், முதல்வர்கள் பயிற்சி, மிகவும் ஆபத்தான இளைஞர்களுக்கான திட்டங்கள் கல்லூரிக்கான ஆயத்தத்தேர்வுகள், படிப்பை இடையில் நிறுத்திவிடாது தடுக்கும் திட்டம், கல்வித் தொழில்நுட்பம் ஆகியவையும் அடங்கும்.

டொட்.கொம் (dot.com) தொழில் மந்த நிலை வீழ்ச்சியோடு சேர்ந்து, 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியும், மாநிலத்தின் நிதி நிலைப்போக்கைக் கணிசமான அளவிற்கு மாற்றிவிட்டது. அப்போது நடைபெற்ற வரி - எதிர்ப்பு இயக்கம், காரணமாக ஆலோசனை 13 வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அது நிரந்தரமாக சொத்து வரிகளுக்கு உச்ச வரம்பை நிலைநாட்டியதாகும்.

தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள செலவினங்கள் குறைப்பு மூலம், ஏற்படும் நீண்ட கால அடிப்படையிலான தாக்கத்தை கணக்கிடவேண்டும். ஒரு காலத்தில், நாட்டிற்கே முன் மாதிரி என்ற கல்வி முறை தொடர்ந்து சீர்குலைந்து வருவதுடன், சமுகத் திட்டங்கள் யாவும் அடியோடு அழிந்துவருகின்றன. ஏழை, பணக்கார பாடசாலைகளுக்கிடையில் ஏற்றத் தாழ்வுகள் விரிவடைந்துவிட்டன. மாநில வருவாயில் பெரும்பகுதி வருமான வரிதான். 1970 ல் 18.5 சதவீதம் வருமான வரி மூலம் கிடைத்தது. தற்போது 50 சதவீதம் வருமான வரி மூலம் கிடைக்கிறது.

அமெரிக்காவில், ஒருவருக்கான கல்விச் செலவு வரிசையில் கலிபோர்னியா தற்போது 38 வது வரிசையில் உள்ளதால், இந்த நிலை அடியோடு சீர்குலைந்துவிடும். மாநிலம் முழுவதிலும் உள்ள கலிபோர்னியா ஆசிரியர் சங்கத்தின்படி, அரசுப் பாடசாலைகளில் 6 மில்லியன் மாணவர்களும், 268,000 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின் உள்பகுதிகளிலுள்ள நிதி ஆதாரங்கள் மிகக் குறைவாக உள்ள பாடசாலைகள், கல்லூரிகள் செயல்பாடுகள் பெருமளவு பாதிக்கப்படும். நடுநிலையான மதிப்பீட்டின்படி செல்வச் செழிப்புள்ள நடுத்தர வகுப்பினர் வாழுகின்ற பகுதிகளில் செயல்படும் பாடசாலைகள் கூட, 25 சதவீதமான ஆசிரியர்களை ஆட்குறைப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பாடசாலை பணியாளர்கள், தோட்டக்காரர்கள், தாதியர்கள் மற்றும் கல்வி ஆலோசகர்களும் ஆட்குறைப்பிற்கு இலக்காகின்றனர். 35,000 ஆசிரியர்களை வேலையிலிருந்து நீக்கப்போவதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

கலிபோர்னியா ஆசிரியர்கள் சங்க பிரதிநிதி பெக்கி ஜோகல்மன் சக்ரமன்டோபி (Sacramento Bee) என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்த வெட்டுக்கள் கலிபோர்னியாவில் ஒவ்வொரு வகுப்பறையிலும் படிக்கும், மாணவர்களை நேரடியாக பாதிக்கப்போகிறது. அது மிகவும் சீரழிவை ஏற்படுத்தும். ஆண்டின் நடுப்பகுதியில் இப்படி நடப்பதால் பாடசாலைகள் நடைபெறவே முடியாத நிலைமை ஏற்படபோகிறது'' என்று குறிப்பிட்டார்.

பாடசாலைகள், அரச கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் தொழிற் சங்கங்களுடன், ஊதியத்தை குறைத்துக்கொள்வது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு மாநில கல்வி அமைச்சர் ஜெர்ரி மசோனி பதிலளிக்கும்போது, ''அத்தகைய பேச்சுவார்த்தையை தள்ளிவிட முடியாது, எல்லா பிரச்சனைகளும் தனது கவனத்தில் இருப்பதாக கவர்னர் கோடிட்டு காட்டியுள்ளார்'' என்று பதிலளித்தார்.

வகுப்பறை குறைப்பு (CSR) நடவடிக்கை மூலம் 20 மாணவர்களைக் கொண்டுள்ள மூன்றாவது பிரிவு வகுப்பறைகள், பட்ஜெட் நெருக்கடியால் அடுத்து பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டிசேர்ட் சன் (Desert Sun) பத்திரிகை பிரதிநிதி, பாம்ஸ்பிரிங் யூனிபைஸ் மாவட்ட பாடசாலை கண்காணிப்பாளர் வில்லியம் டியசைட்டை பேட்டி கண்டார். ''வகுப்பறைகள் குறைக்கப்படுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அது பரிசீலனையில் இருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டதுடன், தனது மாவட்டத்தில் 5 மில்லியன் டொலர் அளவிற்கு செலவு குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்ற முறை பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்ட நேரத்தில் பொருள்கள் வழங்குதல், பராமரிப்பு அலுவலக பணி நேரம் மற்றும் வகுப்பறைக்கு பிந்திய திட்டங்கள் வெட்டப்பட்டன. ''எங்களது பட்ஜெட்டில் 85 சதவிகிதமான மக்கள் பாதிக்கப்படப்போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது'' என்று மேலும் இந்த அதிகாரி தெரிவித்தார்.

மாநில கல்வி கண்காணிப்பாளர் டெலைன் ஐன்ஸ்ரைன் செலவு குறைப்பு பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ''வகுப்பறைகள் மாறுகின்றன. படிப்புக்கான பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படப்போகிறது. பாடசாலைக்கு அப்பால் நடக்கும் திட்டங்கள் இனி இருக்காது. இனி நூலகங்களுக்கு எந்த நூலும் வாங்க முடியாது. பாட நூல்களை மாணவர்கள் வாங்கமாட்டர்கள். பாடசாலை பேருந்துகளை மாணவர்கள் பாவிப்பதை தொடரமாட்டார்கள் அல்லது அந்தக் கட்டணத்தை பெற்றோர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, லோங்பீச் மற்றும் பசதேனா மாவட்டப் பாடசாலைகளில் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. லோங்பீச் மாவட்டத்தில் இந்த ஆண்டு செலவினங்களின் வெட்டு 28 மில்லியன் டொலர்களாகயிருப்பதுடன், 4,000 ஆசிரியர்களுடன் பணி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் மருத்துவ உதவி செலவினங்கள் 4 மில்லியன் டொலர்கள் வெட்டப்படவேண்டும் என்றும், ஊதியம் இல்லாமல் வாரம் ஒரு மணி நேரம் கட்டாய டியூசன் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் கோரி வருகின்றது.

இர்வின் பாடசாலை நிர்வாகக்குழுவின் கண்காணிப்பாளர் டீன் வால்ட் கோகல் உத்தேச செலவின குறைப்புகள் மிகப்பரவலாக அதிருப்தி தரத்தக்கது என்றும் மாவட்டத்தில் நிதி நிலையையே சீர்குலைத்துவிடுமென்றும் கூறியதாக, Irvine World News பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது. மாவட்டத்தின் பட்ஜெட் 173.4 மில்லியன் டொலர்களாகும். இதில் ஜூலை வரை 4.3 மில்லியன் டொலர்கள் அளவிற்கு செலவினங்கள் குறைக்கப்படவேண்டும். இந்த 4.3 மில்லியன் டொலர்கள் என்பது 100 பேரின் ஆண்டு ஊதிய வருமானம் 43,000 டொலர்களுக்கு சமமாகும். இது எல்லா வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் 5 ல் 1 பங்காக இருப்பதுடன், முழு ஆண்டிற்கும் வழங்கப்படும், பொருட்கள் மற்றும் எல்லா புத்தகங்களின் விலையிலும் பாதியாகும்.

ஊழியர்கள் பதவியில் நிலவும் வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்கள் நிரப்பப்படமாட்டார்கள். உதவித்தொகைகள் மற்றும் ஆலோசனை செலவினங்கள் எதுவும் இல்லாது செய்யப்படும். மாவட்ட அளவிலான செலவினங்கள், உபகரணங்கள் வாங்குவது ஆகிய நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும். ஊழியர்களுக்கு மிகை நேரம் (overtime) படி கிடைக்காது. வாங்கப்படும் ஒவ்வொரு பொருளையும், செலவையும் நுணுக்கமாக ஆராய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Top of page