WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
தென்
அமெரிக்கா
Washington escalates military buildup in Latin America
லத்தீன் அமெரிக்காவில் வாஷிங்டன் இராணுவ வலிமையை பெருக்குகிறது
By Mauricio Saavedra
23 January 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
பயங்கரவாதத்தை எதிர்த்து போர் புரிகின்ற சாட்டில் புஷ் நிர்வாகம் லத்தீன் அமெரிக்காவில்
மிகத்தீவிரமாக இராணுவ வலிமையை பெருக்கிக் கொண்டு வருகிறது. 60களிலும், 70களிலும். வாஷிங்டன் ஆதரவு இராணுவ
ஆட்சி கவிழ்ப்புகள் நடைபெற்று வலதுசாரி இராணுவ சர்வாதிகாரங்கள் பதவி ஏற்ற பின்னர் தற்போது அதை விட
அதிகமாக அமெரிக்கா தனது இராணுவ வலிமையை அங்கு பெருக்கி வருகிறது.
சென்ற நவம்பர் கடைசியில் சிலியிலுள்ள சான்தியாகோ நகரில் லத்தீன் அமெரிக்க நாடுகளின்
பாதுகாப்பு அமைச்சர்களது ஐந்தாவது மாநாடு நடைபெற்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியம்
வரலாற்று ரீதியாக ''தனக்குரிய கொல்லைப் புறமாக'' கருதுவதால், தற்போது அந்தப்பகுதியில் அமெரிக்காவினுடைய
இராணுவவாதம் அதிகரித்து செல்கின்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட்
அமெரிக்காவின் முன்னணி இராணுவ தளபதிகளுடன் கலந்து கொண்டார்.
பயங்கரவாதம், போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல், திட்டமிட்டு குற்றங்களை
புரியும் குழுக்கள் மற்றும் இதர ''புதிய சர்வதேச மிரட்டல்கள்'' ஆகியவற்றை தனது உரையில் சுட்டிக் காட்டிய
ரம்ஸ்பீல்ட், லத்தீன் அமெரிக்க நாடுகள் பங்குதாரர்களாக இணைந்து தங்களது இராணுவ வலிமையையும் திட்டமிடும்
ஆற்றலையும் பெருக்கிக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளின் தரத்தை உயர்த்த
வேண்டுமென்றும் குறிப்பிட்டார். பிராந்திய அடிப்படையில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் முறையை
மேம்படுத்துவதுடன், கடற்படை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு தேவை எனவும், ஒருங்கிணைந்த இராணுவப் படை மூலம்
இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டி ஸ்திரத்தன்மைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லத்தீன் அமெரிக்க
பாதுகாப்பு அமைச்சர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த மாநாடு நடாத்தப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவானது, அல் கொய்தா, ஹிஸ்புல்லா,
மற்றும் இதர இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் பிரேசில், ஆர்ஜன்டினா, மற்றும் பராகுவே ஆகிய மூன்று நாடுகளின்
எல்லைப் பகுதியில் தங்களது தீவிரவாதக் குழுக்களை புகுத்தியிருப்பதாக கட்டுக்கதைகளை பரப்பியது. ஆனால் இந்தக்
கதைகளை இந்த மூன்று நாடுகளும் மறுத்திருக்கின்றன. அப்படியிருந்தும் ரம்ஸ்பீல்ட் பாதுகாப்பு மாநாட்டில் அதே பிரச்சனையை
வலியுறுத்திக் கூறினார். ''ஆயிரக்கணக்கான அல் கொய்தா அணியினர் உலகம் முழுவதும் பரவியிருப்பதாகவும் மேலும்,
அமெரிக்கா, கனடா தவிர இந்தப் பிராந்தியத்தில் மேலும் சில தீவிரவாதிகள் இருப்பதாகவும்'' அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களில் பெரும் பகுதி
கொலம்பியாவில் நடைபெறும் இராணுவத் தலையீடு பற்றியதாகவே அமைந்திருந்தது. செப்டம்பர் 11 ந் தேதி பயங்கரவாதிகளின்
தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து கொலம்பியாவிற்கு நிதி உதவும் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதன் பின்பு இராணுவ
நடவடிக்கைகள் அங்கு அதிகரித்தன. ''போதைப் பொருட்களுக்கு'' எதிரான போர் என்ற அடிப்படையை வாஷிங்டன்
மாற்றிக் கொண்டு ''பயங்கரவாதத்தின் மீதான பூகோளப் போர்'' என்று பிரகடனப்படுத்தியது. சென்ற ஆண்டு அமெரிக்க
பாராளுமன்றம் கொலம்பியாவிற்கு உதவும் சட்டத்திற்கு திட்டவட்டமான அங்கீகாரம் அளித்தது. கொலம்பியா, தனது
நாட்டிலுள்ள கொரில்லா இயக்கத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க இராணுவ உதவியை பயன்படுத்திக்கொள்ளவும்
அனுமதி வழங்கப்பட்டது.
கொலம்பியாவில் பல பில்லியன் டொலர் அளவிற்கு வாஷிங்டன் இராணுவ நடவடிக்கைகள்
மேற்கொண்டிருப்பது பற்றிய தகவல்களைத் தந்த பெரும்பாலான செய்தி ஊடகங்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்களுக்கு
எதிராகவும் கொரில்லா தாக்குதலுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதில் கொலம்பியா கவனம் செலுத்தி வருவதாக
விளக்கம் தந்தன. இதற்கிடையில் பென்டகன், ''ஈராக்கிற்கு எதிராக அண்மையில் நடக்கவிருக்கின்ற போருக்கான''
காரணத்தைப்போல், கொலம்பியாவிலும் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டுக்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து,
அந்நாட்டின் விரிவான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் வளத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில்
உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
கொலம்பியாவின் அரோக்கா ( Arauca)
மாகாணத்தில் உள்ள மிகப் பிரமாண்டமான கனோ-லிமொன் எண்ணெய் வயல்கள், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்
பகுதியைச்சார்ந்த ஒக்சிடென்டல் பெட்ரோலியம் (Occidental
Petroleum) நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ்
பெட்ரோலிய நிறுவனம் கிழக்கு ஆன்தீஸ் மலை அடிவாரத்தில் உள்ள கூசியானா மற்றும் குப்பியாகுவா எண்ணெய் வயல்களை
இயக்கி வருகிறது. புட்டு மாயோ பள்ளத்தாக்கில் 2.5 பில்லியன் பரல் உற்பத்தித்திறன் கொண்ட எண்ணெய் வளத்தை
ஆய்வு செய்வதற்கு கனடா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் கொலம்பிய அரசிடம் உரிமைகள் பெற்றிருக்கின்றன.
கொலம்பியாவில் இருப்பதாக கருதப்படும் எண்ணெய் வளத்தில் 20 சதவிகிதம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி
நடந்து வருவதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது. பக்கத்து நாடுகளான வெனிசூலா எக்குவடோர் ஆகியவை ஏற்கனவே பெரிய
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.
டிசம்பர் 3 ந்தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல்,
கொலம்பியாவிற்கு சென்றார். 2003 ம் ஆண்டில் கொலம்பியாவின் திட்டத்திற்கு அமெரிக்கப் பாராளுமன்றம் 537
மில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் என்று புஷ் நிர்வாகம் கேட்டுக்கொண்டிருப்பதாக பவல் அறிவித்தார். 2000
ம் ஆண்டு முதல் கொலம்பியாவிற்கு உதவுவதற்காக செலவிடப்பட்ட தொகை 2.3 பில்லியன் டொலர்களுக்கு மேல்
இருக்கும். இந்த வகையில் கொலம்பியா அமெரிக்காவின் இராணுவ உதவியை மிகப் பெரும் அளவில் பெற்றுக்
கொண்டுவரும் மூன்றாவது நாடாக அமைந்திருக்கின்றது. கானோ-லிமோன் எண்ணெய்க் குழாய்களை பாதுகாக்கும் இரண்டு
கொலம்பியா இராணுவப் படைப்பிரிவுகளுக்கு பயிற்சியளிப்பதற்காக டசின் கணக்கில் சிறப்பு நடவடிக்கை படைகளை அனுப்புவதற்கு
130 மில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிடப்படும்.
நேரடி இராணுவத் தலையீட்டிற்கு அமெரிக்கப் படைகள் தயார் நிலைக்கு கொண்டுவரப்படுகின்றன
என்பதற்கு இது தெளிவான அடையாளம் ஆகும். கொலம்பியாவில் பணியாற்றிக் கொண்டுள்ள எல்லா அமெரிக்கப் படைகளுக்கும்
எதிர்காலத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதிமன்ற வழக்குகளிலிருந்து விதிவிலக்குத் தருவதற்கு
பிரகடனம் வெளியிடுமாறு கொலம்பியா அரசை பவல் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்தீஸ் மலைத்தொடர் பகுதி நாடுகளான பெரு, எக்குவடோர், பொலிவியா மற்றும்
பனாமாவிற்கு 180 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ததன் மூலம் பென்டகன், கொலம்பியா திட்டம் போன்ற
சாக்குப்போக்கில் மேற்கண்ட நாடுகளிலும் இராணுவத் தலையீட்டிற்கு வழிவகுத்துள்ளது. எக்குவடோரில் ஏற்கனவே பென்டகன்
புகுந்து விட்டதுடன், அமெரிக்கப் படைகள் அந்நாட்டு இராணுவத்திற்கு ஏற்கனவே பயிற்சியளித்தும் வருகின்றன.
இகுட்டோஸ் (Iquitos)
பகுதியில் கூட்டாக பெருவிற்கும், கொலம்பியாவிற்கும், இராணுவப்பயிற்சி தரும் மையம் ஒன்றை பென்டகன்
அமைந்திருக்கின்றதுடன், பொலிவியா நாட்டில் கொக்கோ விளைவிக்கப்படும் பிராந்தியத்திலுள்ள சப்பரே பகுதியில் அமெரிக்க
இராணுவம் நிலை கொண்டிருக்கிறது.
மாநாட்டில் ரம்ஸ்பீல்ட் பென்டகனின் தென் பிராந்திய தலைமையகமான செளத்காம்
(SOUTHCOM)
பாதுகாப்பு அமைப்புப் பற்றி விரிவாக விளக்கினார். இந்த அமைப்பு லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகளில்
இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்த அமைப்பு
உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிராந்தியத்தில் வாஷிங்டனின் அரசியல் மற்றும்
பொருளாதார ஆதிக்கத்தை பலப்படுத்தும் வகையில் தனது இராணுவத்தை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக
இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
''இந்தப் பிராந்தியத்தில் முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றதுடன், மேலும் இந்தப் பிராந்தியம்
பூகோள அடிப்படையில் அருகாமையிலும் உள்ளது. நமது பாதுகாப்பு ஒத்துழைப்பானது நமது படைகளுக்கு நெருக்கடி ஏற்படும்
பட்சத்தில், பெருமளவிற்கு செயல்படுவதற்கு வழிவகை செய்வதற்கற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. தெற்கு கட்டளை
பாதுகாப்பு ஒத்துழைப்பானது, அமெரிக்காவின் செல்வாக்கை விரிவுபடுத்தவும் நமது நண்பர்களுக்கு உறுதியளிக்கவும்
அதே நேரத்தில் நமது எதிரிகளுக்கு அல்லது எதிர்காலத்தில் எதிரிகளாக உருவாக இருப்பவர்களுக்கு, அச்சம் ஊட்டி தடுக்கவும்
பயன்படுத்தப்பட்டு வருகிறது''. என்று தெற்கு கட்டளை தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் கேரி டி.ஸ்பியர் இந்த
ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
அறுபதுகளில் தொடங்கி எண்பதுகள் வரை லத்தீன் அமெரிக்க நாடுகளின் பெரும் பகுதி
இராணுவ ஆட்சியில் இருந்தபோது, தேசிய பாதுகாப்பு முறை ஒன்று உருவாக்கப்பட்டதால் தற்போது அது
நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்த இராணுவ தத்துவத்தின் மையக் கருத்தானது, லத்தீன் அமெரிக்க ஆட்சிகளுக்கு வெளியிலிருந்து
இராணுவ அரசுகளால் மிரட்டல் வரவில்லை என்றும், ஆனால் அந்த நாடுகளில் சொந்த மக்களே ஆட்சிகளுக்கு மிரட்டலாக
வருகின்றனர் என்றும் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை கொண்டிருக்கும். அந்தக் காலகட்டத்தில்
அமெரிக்க ஆதரவு ஆட்சிகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதற்காக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்,
மாணவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் பலர் கொலை செய்யப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர். மற்றும்
சிறைவைக்கப்பட்டனர்.
அந்த நேரத்தில் இந்த ஒடுக்கு முறைகளை நியாயப்படுத்த ''கம்யூனிஸ்ட்டுகளின் நாச
வேலை'' என்ற சாக்குப்போக்கு கூறப்பட்டது. இப்போது புதிதாக தொடக்கப்பட்டுள்ள கூட்டுப் பாதுகாப்பு
முறையை நியாயப்படுத்துவதற்கான சாக்குப்போக்கு ''பயங்கரவாதம்'' ஆகும்.
1999 ம் ஆண்டு பனாமாவில் மூடப்பட்ட தென் பிராந்திய இயங்கு தளத்தின்
(SOUTHCOM)
தலைமை நிலையம் போட்டோ ரிக்கோவிற்கு (Puerto
Rico)
மாற்றப்பட்டது. அதற்குப் பின்னர் மூன்று கூடுதல் விமானத்தளங்கள் எக்குவடோர். நெதர்லாந்தின் கரிபியன் தீவுகள்
(Netherlands Antilles),
மற்றும் எல்சல்வடோரில் அமைக்கப்பட்டன. இந்தத் தளங்களை அடிப்படையாகக்
கொண்டு அமெரிக்க இராணுவம் தனது விமானப்படை வலிமையை கிழக்கு பசுபிக், மேற்கு கரிபியன். மத்திய அமெரிக்கா
மற்றும் தென் அமெரிக்காவின் ஆன்தீஸ் மலைத்தொடர் பகுதிகளில் நிலைநாட்டியுள்ளது.
இந்த விமானத்தளங்கள் ''போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் அதன் நடமாட்ட
பிராந்தியங்களை'' கண்டு பிடித்து அவற்றை கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்படும். இதனை புலனாய்வு கண்காணிப்பு
போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டாலும் இந்தத் தளங்களே இராணுவ தலையீட்டிற்கு
கேந்திர மையங்களாக செயல்பட்டு வருகின்றன.
நவம்பரில் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில் ரம்ஸ்பீல்ட் விரிவாக விவாதித்தபோதிலும்,
புலனாய்வு தகவல்கள் பரிமாற்ற ஏற்பாட்டை ஏற்கெனவே வாஷிங்டன் அங்கு உருவாக்கியிருக்கிறது. இதற்கு முன்னர்
போதைப் பொருட்கள் கடத்துவது சம்மந்தமாக தென் அமெரிக்க கரிபியன் தகவல் பரிமாற்ற மையங்களுக்கிடையே
தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது ஒத்துழைப்பு தரும் நாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்ற
நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மையங்கள் ஆயுதங்கள் தாங்கிய கொரில்லா இயக்கங்களை ஒடுக்குவதற்காக
மட்டுமல்லாமல் இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளங்களின் மீது அமெரிக்க கம்பெனிகள் மேலாதிக்கம் செலுத்துவதற்கு
ஏதாவது மக்கள் எதிர்ப்பு தோன்றுமானால் அதை ஒடுக்குவதற்கும் பயன் படுத்தப்படும்.
இந்தப் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான மாநாடு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு
முன்னர் ஜனாதிபதி ஜோர்ஜ் W.
புஷ் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒரு கோரிக்கை வைத்தார். ஆண்டு துவக்கத்தில்
அமெரிக்க நாடுகள் அமைப்பு நிறைவேற்றிய பயங்கரவாதத்திற்கு எதிரான ஒப்பந்தத்தை அமெரிக்கப் பாராளுமன்றம்
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆபரேஷன் கேன்டர்
(Operation Condor)
என்ற இரகசிய உடன்படிக்கை பாதுகாப்பு படைகளுக்கும், ஐந்து லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரங்களுக்குமிடையில்
உருவாக்கப்பட்டதன் விளைவாக எழுபதுகளின் மத்தியில் சர்வாதிகாரங்களுக்கு எதிரான இடதுசாரி மற்றும் தொழிலாள
வர்க்க இயக்கத்தினர் தீர்த்துக்கட்டப்பட்டனர். தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி பயங்கரவாத அமைப்புகள்
தொடர்பான தகவல்களை சேகரித்து பாதுகாப்புப் படைகளுக்கு தர வேண்டும் என கட்டளையிடப்பட்டிருக்கிறது.
எந்த வகையான தகவல்களை பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பது குறித்து பல ஆண்டுகளுக்கு
முன்னரே தெளிவான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பராகுவேயின் அட்டர்னியும், மனித உரிமைகள் இயக்கத்தை சேர்ந்தவருமான
மார்டீன் அல்மடா, பராகுவே கேனல் அமெரிக்க இராணுவ மாநாட்டிற்கு அனுப்பிய ரகசிய குறிப்பை அம்பலப்படுத்தினார்.
அந்த ரகசியக் குறிப்பு பராகுவே நாட்டில் 1997 முதல் பருவத்தில் ''நாசவேலைக்காரர்கள்'' என்று குற்றம்
சாட்டப்பட்டிருப்பவர்களின் பட்டியலில் நாட்டின் தொழிற்சங்கத் தலைவர்கள் எதிர்கட்சி அரசியல்வாதிகள், மாணவர்கள்,
சமூக மற்றும் விவசாய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தனர். இதேபோன்று இப்போதும் இராணுவ புலனாய்வு
அமைப்புகள் லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் ''நாசவேலைக்காரர்களின்'' பட்டியலை தயாரித்து வருவதாக கருதப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் பென்டகன் பிராந்திய நாடுகளுக்கிடையேயான இராணுவப் பயிற்சி
மற்றும் பன்னாட்டு நடவடிக்கைகளை முடிக்கிவிட்டிருக்கிறது. 2001 ம் ஆண்டில் மட்டும் அமெரிக்க இராணுவம் 17
கூட்டுப்பயிற்சிகளையும் மற்றும் 178 பயிற்சிப்படை நடமாட்டத்தையும் 12,000 க்கு மேற்பட்ட அமெரிக்க
துருப்புகளைக் கொண்டு நடத்தியிருக்கிறது. மிக அண்மையில் மிகப் பெரும் அளவிற்கு கூட்டுப்பயிற்சி 2002 ம் ஆண்டு சிலி
நாட்டில் நடத்தப்பட்டது.
குளிர்யுத்தக் காலத்தில் லத்தீன் அமெரிக்க இராணுவத் தளபதிகளுக்கும் நாட்டுத் தலைவர்களுக்குமிடையே
உறவுகளை வலுப்படுத்தும் அமைப்பாக அமெரிக்க இராணுவப் பயிற்சிப் பாடசாலை செயல்பட்டது. இந்த பயிற்சி பாடசாலைகளிலும்
இதர அமெரிக்க பாடசாலைகளிலும், சிலி நாட்டில் பொது மக்களை கொன்று குவித்த ரகசிய போலீஸ் தலைவர்
மோனுவல் கொன்டராஸ் மற்றும் ஆர்ஜென்டினாவின் இராணுவ சர்வாதிகாரிகளான ஜெனரல் றொபேட்டோ வயோலா
மற்றும் அண்மையில் காலமான லியோ பால்டோ கால்ட்டியரி ஆகியோருக்கு கம்யூனிச சித்தாந்தங்களுக்கு எதிரான
உணர்வுகள் ஊட்டப்பட்டன. SOUTHCOM
ன் சார்பில் அமெரிக்க சர்வதேச இராணுவக் கல்வி மற்றும் பயிற்சி திட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இது ''நமது
ஒருங்கிணைந்த இராணுவக் கல்வி மற்றும் தொழில் நேர்த்தி போன்றவைகளின் முதுகெலும்பாக'' வர்ணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 2684 லத்தீன் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு 2000 ம் ஆண்டில் பயிற்சி
அளித்திருப்பதுடன், மேலும் படிப்படியாக பயிற்சி பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆர்ஜென்டினா, சிலி மற்றும் உருகுவே ஐ.நா பார்வையாளர் குழுக்களாக பணியாற்றவும்
அமைதி காப்புக்குழுவில் பணியாற்றவும் முன்வந்து செயல்படுவதால் ''அமெரிக்கப் படைகள் இதர பணிகளுக்கு திருப்பிவிடப்படுகின்றன''.
இந்த வகையில் ஒத்துழைப்பு நீடித்து வருகின்றதாக ஜெனரல் ஸ்பியர் அறிவித்தார். சிலி பத்து
F-16 ரக போர்விமானங்களை
வாங்குவதற்கு உறுதியளித்திருப்பதால், ''இதன் மூலம் மேலும் ஒத்துழைப்பு விரிவடைந்து இருதரப்பு பயிற்சிகளும் அதிகரிப்பதுடன்,
நாம் இணைந்து செயல்படுவதற்கும் வாய்ப்புகள் பெருகும்'' என்று மேலும் அவர் தெரிவித்தார்.
அத்தகைய ''கூட்டு நடவடிக்கைகள்'' ஏற்கெனவே செயல்படத் தொடங்கியிருக்கலாம்
என்று சென்ற ஜூலை மாதம் Jornal do Brasil
பத்திரிகை ஒன்று செய்தியாக பிரசுரித்து இருந்த போதிலும்,
அந்த பத்திரிகை தகவல் அப்போது பெருமளவில் கவனத்திற்கு வரவில்லை. ஜனாதிபதி ரிக்கார்டோ லாகோஸ் தலைமையிலான
சிலி அரசாங்கம் இராணுவத்தின் மூன்று பட்டாலியன்களின் 2600 படைவீரர்களை கொலம்பியாவிற்கு அனுப்புவது குறித்து
பரிசீலித்து வருகின்றது. அந்தப் பட்டாலியன்கள் அமெரிக்க தலைமையில் இயங்கும் பன்னாட்டு படைகளின் ஒரு பிரிவாக
செயல்படும் என்று அந்த பத்திரிகை தகவல் வெளியிட்டபோது சிலி அரசு அந்தச் செய்தியை திட்டவட்டமாக மறுத்தது.
ரம்ஸ்பீல்ட் அண்மையில் சிலிக்கு விஜயம் செய்த போது அமெரிக்கா தவிர பிற நாடுகளும்
கொலம்பியாவிற்கு இராணுவ உதவியை ஏற்கெனவே தந்து வருவதாக குறிப்பிட்டார். ''சர்வதேச அல்லது பிராந்திய
பிரச்சனைகளை ஒரு தனி நாடு தீர்த்து வைக்க முடியும், எனவே இதர நாடுகள் பங்குபெற விரும்புவது வியப்பிற்கு
எதுவுமில்லை''. என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சான்தியாகோ நாளேடு
La Tercera
விற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அமெரிக்க பாராளுமன்றத்திடம்
SOUTHCOM
ன் பாதுகாப்பு செலவினங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு
ஜெனரல் ஸ்பயர் கோரிக்கை விடுத்தார். ''பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவது, போதைப்பொருட்கள் கடத்துவதை
தடுப்பது, நெருக்கடிகள் ஏற்படும் என்று மதிப்பீடு செய்து தகுந்த நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற முன் எச்சரிக்கை
நடவடிக்கைகளுக்கு தற்போது ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. தற்பாதுகாப்பிற்காக மட்டுமின்றி
நெருக்கடி வரும்முன்பே அதைத் தடுக்கும் தீவிர செயல்பாட்டிற்காகவும் நிதி ஒதுக்கீடு அதிகம் தேவைப்படும்'' என்று
அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்பார்த்து தடுப்பு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பது அமெரிக்காவின் கேந்திர நலன்களைப் பொறுத்தவரை மிகவும் உயிர் நாடியான அம்சம் ஆகும்.
இருபது, முப்பது ஆண்டுகள் சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளை ஏற்று சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு
வந்த பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள் மிக ஆழமான பொருளாதார சமுதாய நெருக்கடியில் ஏற்கெனவே
மூழ்கித் தவிக்கின்றன. இப்படி மோசம் அடைந்துவரும் நிலைமைகளினால் புரட்சிகர கொந்தளிப்புக்கள் தொழிலாள வர்க்கம்
மற்றும் ஒடுக்கப்பட்ட கிராம மக்களிடையே வெடித்துக் கிளம்பலாம் என்று வாஷிங்டன் பயப்படுகிறது. இந்த
ஆபத்துக்காகத்தான் புதிய இராணுவ மூலோபாயத்தை உருவாக்கி அதனை எதிர்கொள்வதற்கு திட்டமிடுகிறார்கள் என்பது
தெளிவாகும்.
See Also :
வெனிசூலா
"வேலை நிறுத்தம்": அமெரிக்க ஆதரவு ஆத்திரமூட்டலின் கூறுகள்
வெனிசூலா
ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கி வாஷிங்டன் சூழ்ச்சி
வெனிசூலா:
இன்னொரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு சீ.ஐ.ஏ ஆயத்தம் செய்து வருகிறதா?
Top of page
|