World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

War plans against Iraq aggravate conflict over Cyprus

ஈராக்கிற்கு எதிரான போர் திட்டங்கள் சைப்ரஸ் மோதல்களை மோசமடைய செய்கின்றது

By Justus Leicht
24 January 2003

Back to screen version

கடந்த வாரங்களில், பல்லாயிரக்கணக்கான சைப்ரஸில் வாழும் துருக்கி இனமக்கள், சைப்ரஸ் தீவின் கிரேக்கப் பகுதியுடன் இணைக்கவேண்டும் என்றும், ஐரோப்பிய யூனியனில் சேர்க்கப்படவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ''வடக்கு சைப்ரஸ் துருக்கிய குடியரசு (TRWC) தலைவர் ராஃப் டெங்டாஷிற்கு (Rauf Denktash) எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சைப்ரஸ் பிரிவினை முடிவிற்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த யோசனையை ராஃப் டெங்டாஷ் தடுத்துவிட்டார். துருக்கி மட்டுமே TRNC இனை அங்கீகரித்துள்ளது.

சென்ற வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 50,000 முதல் 70,000 வரை பொதுமக்கள் கலந்துகொண்டனர். இது தீவின் துருக்கிய பகுதிகளில் வாழும் மக்களில் இதில் மூன்றில் ஒரு பகுதியாகும். இதற்கு எதிராக டெங்டாஷ் இற்கு ஆதரவு வழங்க நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர்.

இவ் எண்ணிக்கையானது சைப்ரஸின் வடக்குப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த துருக்கி தேசிய உணர்வு தனது ஆதரவு முழுவதையும் இழந்துவிட்டது என்பதை காட்டுகின்றது.

சைப்ரஸ் பிரிவினை 1974 ஆண்டு துருக்கிப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு பின்னர் ஆரம்பமாகியது. மக்களில் மூன்றில் ஒரு பகுதியினரான கிரேக்கர்களும், துருக்கியர்களும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்தத் தீவில் சமாதான சகவாழ்வு நடத்தி வந்த கிரேக்கப் பெரும்பான்மையினரும் துருக்கிய சிறுபான்மையினரும் இரண்டு ''இனச்சுத்திகரிப்பு'' செய்யப்பட்ட பகுதிகளில் பிரிக்கப்பட்டனர்.

இன வெறி கொண்ட கிரேக்க தேசியவாத குழுவினரின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பதிலாக துருக்கி படை எடுப்பை நடத்தியது. ஏதென்சில் ஆட்சி புரிந்துவந்த இராணுவக் குழுவினரின் ஆதரவோடு மிதவாத கிரேக்க தேசியவாதியான, ஜனாதிபதி மக்காரியோஸ் (Makarios) ஆட்சியை அவர்கள் கவிழ்த்துவிட்டு படுபயங்கரமான பயங்கரவாதி நிக்கோஸ் சாம்சனை (Nicos Sampson) பதவியில் அமர்த்தினார்கள்.

துருக்கி படை எடுப்பிற்குப் பின்னர், சைப்ரஸ் பிரச்சனையை ஏதென்சிலும், அங்காராவிலும் உள்ள வலதுசாரி அரசியல்வாதிகளும், இராணுவ அதிகாரிகளும் தேசிய உணர்வுகளைத் தூண்டிவிடும் சாக்காகப் பயன்படுத்திக்கொண்டனர். எவ்வாறிருந்தபோதிலும், பொருளாதார வளர்ச்சிப்போக்கு இவ்வகை தேசிய உணர்வுகளுக்கு வேட்டு வைத்துவிட்டன. நீண்ட காலமாக ஒன்றுசேர்ந்த சமூக அதிருப்திகளின் வெளிப்பாடுதான் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வெளிப்பட்டன.

சைப்ரஸின் துருக்கிப் பகுதி, மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். விளைச்சல் நிலப்பரப்பு என்று எடுத்துக்கொண்டால் நாட்டின் மொத்த விளைச்சல் பரப்பில் இது மூன்றில் இரண்டு பங்காகும். ஆனால் வாழ்க்கைத் தரத்தில் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் மிகப்பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள கிரேக்க தென்பகுதிக்கும் சர்வதேச அளவில் விலக்கி வைக்கப்பட்டுள்ள துருக்கி வடக்கிற்கும் இடையில் பொருளாதார நிலை இடைவெளி விரிவாகிக்கொண்டே போகிறது. இந்த இடைவெளி வடக்கின் துருக்கியின மக்களை வெகுவாகப் பாதிக்கிறது. தெற்கில் தனிநபர் வருமானம் வடக்கைவிட மூன்று மடங்கு அதிகமாகும். 1970கள் முதல் வடக்கு துருக்கி பகுதியில் வாழும் மக்களில் 10,000 இற்கு மேற்பட்டவர்கள் வெளியேறி சென்றுவிட்டார்கள். கடந்த காலத்தில் துருக்கி வலதுசாரி குடியேற்றவாசிகள் அந்த மக்கள் வெளியேறிய இடங்களில் குடியேறினர். தெற்கு சைப்பிரசில் தமது உழைப்பிற்காக பல துருக்கி தொழிலாளர்கள் தினசரி கிரேக்க எல்லையைத் தாண்டி தெற்கு சைபிரஸிற்கு வருகின்றனர். சர்வதேச மானியங்கள் மற்றும் சுற்றுலா வளர்ச்சி காரணமாக தெற்குப் பகுதி பொருளாதாரம் மகத்தான வளர்ச்சி கண்டது. ஆனால், வடக்குப் பகுதியில் பண வீக்கமும், பண மோசடிகளும் அதிகரித்தன. துருக்கி மக்கள் வறுமையில் மூழ்கினர்.

அண்மையில் ஐரோப்பிய யூனியன் தெற்கு சைபிரசை புதிய உறுப்பினராக ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது. இந்த முடிவின் மூலம் சைபிரஸ் தீவின் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் நிலவுகின்ற சமூக பாகுபாடுகள் ஆழமாகிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

துருக்கி இராணுவத்தின் எதிர்ப்பு

துருக்கியில் சென்ற நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் AKP (நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி) வெற்றிபெற்றது. அந்தக் கட்சித் தலைவர் ரிசெப் தாயிப் எர்டோகான் (Recep Tayip Erdogan) புதிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துகிற நோக்கத்தில் சைபிரஸ் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. டிசம்பரில் ஐரோப்பிய ஒன்றியம் சைப்பிரசை 2004 இல் முழு உறுப்பினராக ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது. மற்றும் சைபிரஸ் பிரிவினையை சமாளிக்க ஐக்கிய நாடுகள் சபை புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது.

எவ்வாறிருந்தபோதிலும், டெங்டாஷ் துருக்கி இராணுவ தலைமையின் ஆதரவோடு ஐ.நா வின் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்திவிட்டார். டெங்டாஷ் இற்கு எதிராக, சைபிரசில் உள்ள துருக்கி மக்கள் தெருக்களில் கண்டன பேரணிகளை நடத்திக்கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ஏர்டோகான் மக்களது உறுதியான முடிவை புறக்கணித்துவிட முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும், உயர் பதவிகளில் உள்ள இராணுவ அதிகாரிகள் துருக்கி நாட்டு ஊடகங்களில் பல்வேறு அறிக்கைகளைகளில் சைப்பிரசிற்கு ஐ.நா. முன்வைத்துள்ள திட்டம் துருக்கியின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது என்று கூறியிருக்கின்றனர்.

துருக்கி இராணுவம், வடக்கு சைப்பிரஸை பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காரணங்களுக்காகவும், கொள்கை அடிப்படையிலும் விடாப்பிடியாக தன்வசம் வைத்திருக்கிறது.

கொள்கை அடிப்படையில் துருக்கியை உருவாக்கிய கமால் அதார்துர்க் (Kemal Atatürk) பாரம்பரியத்தை நிலைநாட்டுகிற வகையில் சைப்பிரசிற்குள் வழமைக்குமாறான முறையில் தங்களது ஆதிக்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று துருக்கி வாதிட்டு வருகிறது. சைபிரஸ் தொடர்பாக தங்களது நிலையிலிருந்து பின்வாங்கினால், அது தனது தேசியவாத அடையாளம் கடுமையாக பாதிக்கப்படும் என்று துருக்கி கருதுகிறது.

துருக்கி சைப்பிரசின் வடபகுதியை பிடித்துக்கொண்டு இரண்டாக பிரித்திருப்பது பொருளாதார ரீதியில் இராணுவ அதிகாரிகளுக்கும், டென்டாஸ் ஆட்சியை தாங்கி பிடித்திருக்கும் தூண்களான பாசிச கிரிமினல் கும்பல்களான சாம்பல் நிற ஓநாய்கள் (Gray Wolves) என்று அழைக்கப்படுபவர்களும் மிகப்பெரும் அளவிற்கு வருமானம் பெற்றுக்கொள்ள முடிகின்றது. இத்தகைய குழுவினரால் தான் வடக்கு சைப்பிரசில் செயல்பட்டு வரும் சூதாட்ட, கேளிக்கை விடுதிகளிலும் மற்ம் பல்வேறு வங்கிகளிலும் நீண்ட காலமாக நாணய மாற்று மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். இந்த பணம் போதைப் பொருள் வர்த்தகத்திலிருந்து வருவதாகும். இது துருக்கியில் சிறுபான்மை குர்திஸ் இனத்தினர் மீது நடத்தி வரும் போருக்கு எதிராக துருக்கி எடுத்து வரும் ஒடுக்குமுறைக்கு இந்த மோசடி பணம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குர்திஸ் தேசிய இயக்கமான PKK முற்றாக அடிபணிந்துவிட்ட நிலையில், இராணுவத்திற்குள் உருவாகிவிட்ட மாஃபியா கும்பல்கள் கடந்த 15ஆண்டுகளில் குர்திஸ் இனத்தவருக்கு எதிரான போரில் செயல்பட்ட விதம் துருக்கியின் பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமைந்துவிட்டதாக இராணுவத்தில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். இன்னும் அந்தக் கும்பல் சைப்பிரஸின் கேந்திர முக்கியத்துவம் தமக்கு மிகவும் முக்கியமானதாக கருதுகின்றது.

தற்போது வடக்கு சைப்பிரஸ், இராணுவ பாதுகாப்பில் உள்ள ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. 2 லட்சம் மக்களும், 35,000 துருப்புகளும் அங்கு உள்ளன. துருக்கியிலிருந்து அனுப்பப்பட்ட துருப்புக்கள் போலீஸ் மற்றும் தீயணைப்பு படை உள்ளடங்கலாக பொது நிர்வாகத்தில் மிகப்பெரும்பாலான பகுதியை தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். மத்திய தரைக்கடலில் கிழக்குபகுதியில் மிகப்பெரிய இராணுவ தளமாக சைப்பிரஸ் தீவு உள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய்கள் பாக்கூவிலிருந்து (Baku), மத்திய தரைக்கடல் கடற்கரையில் சைப்பிரஸிற்கு எதிராக அமைந்துள்ள துருக்கி கரையில் உள்ள சீகான் (Ceyhan) என்ற இடத்தில் முடிவடைகிறது. துருக்கிக்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் இடையிலான கடல் மார்க்கத்தில் சைப்பிரஸ் அமைந்திருக்கிறது. (தரை மார்க்கம் சிரியா வழியாகச் செல்கிறது).

அமெரிக்காவின் பங்கு

அமெரிக்காவின் போர்த் திட்டங்கள் காரணமாக தங்களது நிலை வலுப்படுத்தப்பட்டிருப்பதாக துருக்கியின் இராணுவ தலைவர்கள் கருதுகின்றனர். ஈராக்கிற்கு எதிரான போரில் துருக்கி ஒரு முக்கியத்தளமாக பயன்படுத்தப்பட இருக்கிறது. ஈராக்கிற்கு எதிரான துருக்கியின் வடக்கு முனையில் தனது ஏராளமான இராணுவ பிரிவுகளை நிறுத்தி வைப்பதற்கு அங்காரா அனுமதிக்கவேண்டும் என்று வாஷிங்டன் கோரி வருகிறது. பென்டகன் 80,000 அமெரிக்க இராணுவ வீரர்களை துருக்கியில் நிறுத்தியிருப்பதாகவும், துருக்கியின் எட்டு விமானத் தளங்களையும், மற்றும் மூன்று சிவிலியன் துறைமுகங்களையும் பயன்படுத்திக்கொள்ள போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்திருக்கின்றன.

இதுவரை துருக்கியின் AKP- அரசு இந்த அமெரிக்க கோரிக்கைகளை முழுவதும் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டிவருகிறது. துருக்கி அரசு அமெரிக்காவின் நிதியிலும், கடன்களையும் நம்பி இருந்தாலும் பொதுமக்களது எதிர்ப்பு உருவாகலாம் என்று இன்னும் பயந்துகொண்டிருக்கிறது. அண்மையில் துருக்கியில் நடத்தப்பட்ட மக்கள் வாக்கு கணிப்பில், 80-90% துருக்கியர்கள் தங்களது பக்கத்து நாட்டின் மீது படையெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவேதான், அமெரிக்க அரசு தற்போது நேரடியாக இராணுவத்திற்கு வேண்டுகோள் விடுகிறது. திங்களன்று அமெரிக்க இராணுவ தளபதி ரிச்சர்ட் மியர்ஸ் (Richard Myers) அங்காராவிற்கு விஜயம் செய்தார். அங்கு துருக்கி இராணுவ தலைமை அதிகாரி ஹில்மி ஒசாக்குடன் (Hilmi Özkök) இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்குப் பின்னர், இரண்டு நாடுகளுக்கு இடையில் நிலவுகின்ற நெருக்கமான மூலோபாய ஒத்துழைப்பை புகழ்ந்துரைத்தார்.

பொதுமக்களை திருப்திபடுத்துவதற்காக போரில் துருக்கியின் நிலை குறித்து முடிவு செய்யும் பொறுப்பை அரசாங்கத்திடம் விட்டுவிட்டதாக இராணுவ தலைமை அறிவித்தது. ஆனால், அமெரிக்க செய்தி நிறுவனமான UPI இன் ஒரு செய்தியின்படி இரகசியமாக, வேறுமுறைகளில் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ''துருக்கி இராணுவ தலைமைத் தளபதி, பிரதமர் அப்துல்லா குல்வுடன் (Abdullah Gul) தனது சொந்த தந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஈராக் பிரச்சனை தொடர்பாக, அரசாங்கம், எந்த விதமான "முடிவும் எடுக்காத நிலையில்" இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருப்பது, துருக்கி இராணுவப் படைகளை அதிர்ச்சியடைய செய்திருப்பதாக, பிரதமரிடம் ஈராக் இராணுவ தலைமை தளபதி கூறியதாக, இராணுவத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்க்கோள்காட்டி UPI செய்தி கொடுத்திருக்கிறது. அதில் ''துருக்கி இராணுவ தளபதிகள் அமெரிக்காவை ஆதரிப்பதில் குறியாக இருக்கின்றனர். ஏனெனில் வாஷிங்டன் போருக்குச் செல்வதென்று தெளிவாக முடிவு செய்துவிட்டது. இந்நிலையில் வெற்றிபெறும் தரப்பில் துருக்கி இருந்தால்தான், ஈராக்கின் எதிர்காலம் மற்றும் குர்திஸ்ட்டுகளின் நிலை மற்றும் தமது பங்கு குறித்து போருக்குப்பின் முடிவுகள் மேற்க்கொள்ளப்படும்போது துருக்கி அந்த பேச்சுவார்த்தைகளில் பிரதான இடம்பெற முடியும் என்பதாக இராணுவ தளபதிகள் கருதுகின்றனர்'' என குறிப்பிட்டது.

2003 ஜனவரி 16ம் திகதியிட்ட நியூயோர்க் டைம்ஸ் நாளேட்டில் கட்டுரையாளர் வில்லியம் சபர்ட் (William Safire) துருக்கி சம்மந்தமாக வாஷிங்டனின் அணுகுமுறையை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். ஏகாதிபத்திய இறுமாப்போடு அந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது. அந்தக் கட்டுரை துருக்கியை நீண்ட கால நம்பகத்தன்மையுள்ள நட்பு நாடு என வர்ணிக்கிறது. ''துருக்கியில் ஜனநாயகம் வளர்ந்திருப்பது அந்தக் கூட்டணியில் நிச்சயமற்ற ஓர் அம்சத்தை உருவாக்கிவிட்டது. புதிதாக, சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அங்காராவில் பதவியேற்றுள்ள அரசின் வேர்கள் மதச் சார்பின்மையைவிட இஸ்லாமிய தத்துவத்தில் ஆழமாக உள்ளன. எனவேதான், ஜனாதிபதி, புஷ் உருவாக்கியுள்ள ஈராக்கிற்கு எதிரான போக்கு உள்ளவர்கள் கூட்டணியில் சேர்ந்துகொள்வதில் துருக்கி உறுதியற்றதாக இருப்பதாக'' அந்தக் கட்டுரையாளர் குற்றம் சாட்டுகின்றார்.

துருக்கி எந்த அளவிற்கு பொதுமக்களது கருத்திற்கு மதிப்புக் கொடுக்கிறது என்பதை ஐரோப்பிய மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காகத்தான், இதற்கு முன்னர் அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருந்த இராணுவத் தலைமை ஒதுங்கிக் கொண்டிருக்கின்றது என்றும் அந்தக் கட்டுரையாளர் கூறுகிறார்.

தன் பக்கம் உறுதியான வல்லரசு ஒன்று எதிர்வரும் பத்தாண்டுகளில் இருக்க வேண்டுமென்றால் துருக்கியின் புதிய தலைவர்கள் என்ன செய்யவேண்டும்? என்பதை அந்தக் கட்டுரையாளர் துருக்கி அரசிற்கு தெளிவாக கற்றுக்கொடுக்கிறார். அவர் ''முதலில் அமெரிக்கப் படைகளை வரவேற்பதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தின் மூலம் ஆக்கபூர்வமான ஏற்பாடுகளை செய்யவேண்டும். அதற்குப் பின்னர் இன்னும் ஒரு படி மேலே சென்று ஈராக்கிற்கு வடக்குப் பகுதியில் உள்ள தனது எல்லையில் 1 இலட்சம் துருக்கி துருப்புக்களை தாங்களே முன்வந்து குவிக்க வேண்டும்'' என்று அந்த நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் ஆலோசனை கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் இராணுவத் தலைமை AKP அரசின்மீது தனது நிர்ப்பந்தங்களை முடிக்கிவிட்டிருக்கிறது. சென்ற வாரத் தொடக்கத்தில், இராணுவ தளபதி ஓஸ்காக் (Özkök) நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கண்டித்துடன், துருக்கியின் உண்மையான அதிகாரம் உறவு எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாக தெரிவித்தார். இஸ்லாமியவாதிகள் என சந்தேகப்படுபவர்கள் மீது இராணுவம் சதி செய்ததென்பதை நிராகரித்ததுடன், பொது கட்டிடங்களில் நடமாடுபவர்கள் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை எந்த வகையிலும் தளர்த்தப்படக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார். சைப்பிரஸ் துருக்கிக்கு அத்தியாவசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என குறிப்பிட்ட அவர், இதன் மூலம் வரவிருக்கும் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என்று துருக்கி இராணுவ தளபதி கூறினார்.

துருக்கி இராணுவ தளபதியின் எச்சரிக்கைக்கு உடனடியாக அரசாங்கம் காதுகொடுத்து நடவடிக்கை எடுத்தது. சில நாட்கள் கழித்து துருக்கி வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சைப்பிரஸ் தொடர்பான துருக்கியின் கொள்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது. சைப்பிரஸ் தொடர்பான எந்தத் தீர்வாகயிருந்தாலும் இரண்டு நாடுகளின் ''இறையாண்மை'' சமத்துவத்தை, அதாவது வடக்கு சைப்பிரஸ் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாகயிருக்க வேண்டும் என அறிக்கை விடுத்தது. துருக்கி பிரதமர் குல் ''ஜனாதிபதி'' டென்டாஸின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்தார். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவு தரும் என்று அறிவித்தார். துருக்கிப் பகுதி சைப்பிரஸ் மக்கள் கிரேக்கர்களது பணத்திற்கும், ஆத்திரமூட்டலுக்கும், பலியாகி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக, தற்போது துருக்கி அரசு கூறிவருகிறது. ஐ.நா. திட்டத்தை துருக்கி ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசு அறிவித்துள்ளது.

ஈராக் போரில் துருக்கியின் ஆதரவு தொடர்பாக AKP அரசு அதிகாரபூர்வமாக அமெரிக்காவிற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது. துருக்கியின் இராணுவத் தளங்களை 150 நிபுணர்கள் சோதனையிடுவதற்கு அனுமதித்துள்து. இதற்கு பிரதி உபகாரமாக அமெரிக்காவின் ஏற்றுமதி இறங்குமதி வங்கி (US Export Import Bank) துருக்கிக்கு 14 அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர்களை வாங்குவதற்கு கடன் வழங்கியிருக்கிறது.

ஈராக்கிற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு அந்த ஹெலிகொப்டர்கள் பயன்படலாம் என்பதால் துருக்கி இராணுவம் சைப்பிரஸ் தொடர்பாக தனது நிலையை விட்டுக்கொடுக்காமல் உறுதியுடன் நிற்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved