World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Britain: demonstrators speak out against war vs. Iraq

பிரிட்டன்: ஈராகிற்கு எதிரான யுத்தத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்

By our correspondent
21 January 2003

Back to screen version

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் தலைமையில் நடாத்தப்படும் யுத்தத்திற்கு பிளேயர் அரசாங்கம் ஆதரவு காட்டுவதை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டித்தனர், வாரக்கடைசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச அளவில் போருக்கு எதிரான கிளர்ச்சியை பெருமளவில் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. பெப்ரவரி 15ல் சர்வதேச அளவில் இத்தகைய ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெறவிருக்கின்றன.

லீவர்பூல், கார்டிஃப் மற்றும் பிராட்போட் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போருக்கு எதிரான அணிவகுப்புக்களில் கலந்துகொண்டனர். லண்டன், பெர்மின்ஹாம், மற்றும் நொட்டிங்ஹாமில் ஜனவரி 18 அன்று மெழுகுவர்த்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது. வாஷிங்டன் டி.சி. பகுதியில் போரை நிறுத்தக்கோரும் பேரணியை ஒட்டி லண்டனில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் லீவர்பூலிலும், கார்டீஃப் பகுதியிலும், கலந்துகொண்டனர். லண்டனில் உள்ள நோர்த்வூட் ராணுவ தளத்தில் பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தலைமையகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கண்டனம் தெரிவித்தனர்.

அயர்லாந்தில் Shannon விமான நிலையத்திற்கு வெளியில் 1000 இற்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஈராக்கை தாக்குவதில் ஈடுபடுத்தப்படும், அமெரிக்க இராணுவ விமானங்கள் இந்த விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அணு ஆயுத குறைப்பிற்கு ஆதரவாக, பிராட்போர்ட் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 3000-பேர் கலந்துகொண்டனர். அதில் நகரில் வாழும் ஆசிய மக்கள் பெருமளவில் பங்கு கொண்டனர். உலக சோசலிச வலைத் தளம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலரை பேட்டி கண்டது.

பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமாதான ஆய்வுகள் துறையில், படித்து வரும் பெல்ஜிய மாணவர் அலெக்ஸாண்டர், இந்த அணிவகுப்பில் தான் கலந்துகொண்டதற்கான காரணத்தை விளக்கினார்.

``பொதுமக்களுக்கு அரசியல் ரீதியில் நியாயமாக பதிலளிக்க வேண்டிய கடமை, இல்லாத காரணத்தினாலேயே இந்த நெருக்கடி தோன்றியிருக்கிறது என்று நம்புவதால் நான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறேன். அமைதி நிறைந்த நிலையான உலகை மக்கள் விரும்புகிறார்கள். மக்களது கருத்தை கேட்பதற்கு அரசாங்கங்கள் மறுக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதான, ஆவேச பேச்சுக்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உலகம் முழுவதும், நீதியும், மக்களுக்கு மதிப்பும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்`` என்று அலெக்ஸாண்டர் குறிப்பிட்டார்.

``தொழிற்கட்சி அரசாங்கம், மற்றய அண்மைக் காலத்து பிரிட்டிஷ் அரசாங்கங்களைப்போல வெள்ளை மாளிகையின் எடுபிடியாகவே செயற்பட்டு வருகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் உண்மையிலேயே இந் நாட்டு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கமாக இருக்குமானால், அவர்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் முடிவுகளை செய்திருக்கமாட்டார்கள்`` என்றும் அலெக்ஸாண்டர் குறிப்பிட்டார்.

உலக சோசலிச வலைத்தளம், போரை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும் என்பதனையிட்டு அலெக்ஸாண்டர் என்ன கருதுகிறார் என வினவியது.

``சர்வதேச சமுதாயமே, ஒட்டுமொத்தமாக பொறுப்பு ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே போரை தடுத்து நிறுத்த முடியும். பிரிட்டனில் அதற்காக முறையான சாசனத்தை அறிமுகப்படுத்த வேண்டும். மேலை நாடுகள் முழுவதிலும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இங்குள்ள மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மக்களக்கு அரசாங்கங்கள் அவற்றின் ஆவேச உரைகள் என்ற கபட நாடகத்தின் பின்னணியில் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதை விளக்கவேண்டும்`` என அலெக்ஸாண்டர் பதிலளித்தார்.

ஐ.நா.வின் பங்கு குறித்து அலெக்ஸாண்டர் கண்டனம் தெரிவித்தார். "துரதிருஷ்டவசமாக ஐ.நா. அதன் பந்தோபஸ்து கவுன்சிலின் கருவியாக எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகில் மிகப்பெரிய தார்மீக அமைப்பாக உருவாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் பலம்வாய்ந்த ஆழும் உயர் தட்டினர் உருவாக்கும் செயல்திட்டப்படி செயல்படுகின்ற அமைப்பாக அது இயங்கி வருகின்றது" என அவர் குறிப்பிட்டார்.

இந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட மற்றொரு இளைஞரான Rob என்பவரை உலக சோசலிச வலைத்தளம் பேட்டி கண்டது.

"நாம் ஈராக்குடன், போருக்கு செல்லக்கூடாது என நான் உறுதியாக நம்புகிறேன். அந்த போருக்குப் பின்னால் எந்த நல்ல நோக்கமும் இல்லை. அந்த போருக்கு கவலைப்பட வேண்டிய எந்த முகாந்திரமும் இல்லை. பொருளாதாரம் சம்பந்தப்பட்டதுதான் அந்த போர். எண்ணெய்யும், ஆயுதங்களும் தான் அதன் குறிக்கோள். சுதந்திர வர்த்தகம் நடைபெற வேண்டும். அது நீடிக்கவேண்டும் என்பதுதான் இந்தப் போரின் பின்னால் இருக்கின்ற மிகப்பெரிய நோக்கமாகும்" இவ்வாறு Rob கருத்துத் தெரிவித்தார்.

ஐ.நா.வின் பங்கு பற்றி தெளிவு எதுவும் இல்லாதவராக Rob காணப்பட்டார். ``ஐ.நா. பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்த காலத்தில இந்த தினத்தில் எந்தவொரு தேசிய அரசிலும் பார்க்க வலுவான, அதிகம் அதிகாரம் படைத்த ஒரு உலக அமைப்பு தேவை என்று கருதுகிறேன். ஐ.நா. அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டதாக இருக்கக்கூடாது, மாறாக அமெரிக்காதான், ஐ.நா.விற்கு கட்டுப்பட்டதாக இருக்கவேண்டும்`` என்று அவர் குறிப்பிட்டார்.

போரை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும் என்பதனையிட்டு Rob என்ன கருதுகிறார் என கேட்டது. "இது நல்ல கேள்வி, இதற்கு விடை எனக்கு தெரிந்திருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இந்த போரை தவிர்ப்பதற்கு ராஜதந்திர முறையின் மூலம் தீர்வு காணலாம் என்று நான் கருதுகிறேன். சதாம் ஹூசேனிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யவேண்டுமென்றால் போருக்கு செல்லாமல் அதை செய்வதற்கு வேறு வழி இருக்கிறது. அதற்கு பதிலாக நீண்ட கால அடிப்படையில் உலக பொருளாதார முறையை சீர்திருத்தி செல்வத்தை சற்று அதிகமாக, சீராக விநியோகிக்கலாம்.

பொதுமக்கள் தங்கள் உள்ளத்தில் உள்ளதை பகிரங்கமாக வெளியில் சொல்வதற்கு உற்சாகப்படுத்த வேண்டும். மிகப்பெரும்பாலான மக்கள் மிகுந்த அசட்டையுடன் இருக்கின்றனர். தங்கள் கருத்து எதனையும் சொல்வதில்லை. தங்களுக்கு என்று எந்தக் கருத்தையும் உருவாக்கிக்கொள்வதில்லை. பொதுமக்கள் தங்களது வார்த்தைகளை வெளிப்படுத்துவது அவசியமாகும்". என Rob விளக்கினார்.

உலக சோசலிச வலைத்தளம், தொழிற் கட்சி அரசாங்கம் இந்தப் போரில் மும்மரமாக ஈடுபட்டிருக்கிறது என்பதையிட்டு Rob இடம் கேட்டபோது அதற்கு அவர்; "பாரம்பரிய அர்த்தத்தில் இந்த அரசாங்கத்தை, தொழிற் கட்சி அரசாங்கம் என நாம் அழைக்கமுடியும் என நான் கருதவில்லை. தற்போது தொழிற் கட்சிக்கும் பழமைவாத கட்சிக்கும் (Conservatives) இடையில் வேறுபாடுகள் நூலிழைப்போன்று மிக மெல்லியதாக இருப்பதால், அவ்வாறு இவ் அரசாங்கத்தினை அர்த்தப்படுத்துவது உண்மையில் கடினமானதாகும்." என்றார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved