:
ஆசியா
US establishes closer military ties with Nepal
நேபாளத்துடன் அமெரிக்கா நெருக்கமான இராணுவ உறவை
உருவாக்குகின்றது
By Anura Jayaweera
27 January 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
நேபாளத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ள உள் நாட்டுப்போரை வசதியான சாட்டாக
கொண்டு அமெரிக்க நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரகசியமாக அந்நாட்டுடன் நெருக்கமான இராணுவ மற்றும்
அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதியாக புஷ் பதிவியேற்றுக் கொண்ட பின்னர் அமெரிக்க
அரசின் உயர்மட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் மூன்று முறை நேபாளத்திற்கு விஜயம் செய்திருக்கின்றனர். கடைசியாக
நேபாள விஜயத்தை மேற்கொண்டவர் அமெரிக்க உதவி வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்ரீனா றோக்கா (Christine
Rocca) ஆவர்.
சென்ற டிசம்பர் 13-முதல்15-வரை காத்மாண்டுவில் றோக்கா தங்கியிருந்தார். அப்போது
அவர் மன்னர் காயனேந்திரா அவரது பிரதமர் லோகேந்திர பகதூர் சந்த் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்
பாதுகாப்பு உயர்அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக இடம்
பெற்றது, சென்ற ஆண்டு மட்டும் 100-க்கணக்கானோர் பலியானதும், அரசியல் நெருக்கடியை ஆழமாக்கிய
மாவோவாத கெரில்லாக்களுடன் நடந்து கொண்டிருக்கும் யுத்தமாகும். 1996ல் கெரில்லாக்கள் கிளர்ச்சி தொடங்கிய
பின்னர் இதுவரை இச்சண்டையில் 7200 பேர் இறந்துவிட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
கூட்டம் முடிந்த பின்னர் ''மாவோ கொரில்லாக்கள் அமைப்பு சர்வதேச அடிப்படையில்
எந்த பயங்கரவாதிகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை. ஆனால் அவர்களது வன்முறை தொடர்ந்து நீடித்துக்
கொண்டிருக்குமானால், அத்தகைய நடவடிக்கை பற்றியும் பரிசீலிக்கவேண்டி வரலாம். நேபாளத்திற்கு பாதுகாப்பு
உதவி தருவதன் மூலம் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போரிடுவதற்கு நேபாள அரசிற்கு உதவ நாங்கள் உறுதியளித்திருக்கிறோம்''
என்று றோக்கா குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு நேபாளத்தின் அபிவிருத்தி நிதியாக 24-முதல்38-வரை மில்லியன் டாலர்கள்
வரை வழங்கப்படும் என்றும் அதற்கு அப்பால் கூடுதலாக இராணுவ உதவி கிடைக்கும் என்றும் றோக்கா உறுதியளித்தார்.
நேபாளத்திலுள்ள அமெரிக்க தூதர் மைக்கேல் இ மாலினோஸ்கி (Michael
E. Malinowski) ஜனவரி ஆரம்பத்தில் றோக்காவின் கருத்தை வலியுறுத்திக் கூறினார். ''மாவோயிச
புரட்சிக்காரர்கள், சமரச பேச்சு வார்த்தைக்கு வருவதற்கு இணங்கவைக்கப்படவேண்டும், இதற்கு பாதுகாப்பு உதவி
பயன்படும், இப்போது அதற்கு முடிவு செய்துவிட வேண்டும்; நிலைமை மோசமானால், செலவு அதிகமாகும்'' என்று
அவர் குறிப்பிட்டார்.
நேபாள இராணுவத்திற்கு 17-மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ தளவாடங்களை
வழங்க புஷ் நிர்வாகம் உடன்பட்டிருக்கின்றது. இதில் முதலாவது பட்டியலில் இடம் பெறும் 3,000-
M -16-ரக துப்பாக்கிகள் இந்த மாத ஆரம்பத்தில்
நேபாளத்திற்கு வழங்கப்பட்டன. மேலும் 2,000-துப்பாக்கிகள் வழங்கப்பட இருக்கின்றன பசுபிக் கட்டளை நிலையத்தில்
உள்ள அமெரிக்க இராணுவ குழு தற்போது நேபாளத்தில் தங்கி அந்நாட்டு இராணுவத்திற்கு ஒரு மாத கூட்டு இராணுவ
பயிற்சி அளித்து வருகிறது.
நேபாள அரசியலின் ஸ்திரமின்மை இந்திய துணைக்கண்டத்தில் ஏற்படுத்தும் ''தாக்கம்''
தொடர்பாக வாஷிங்டன் கவலை அடைந்திருக்கிறது. மாவோவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை பயன்படுத்தி சீனாவின்
எல்லையில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடான நேபாளத்தில் புஷ் நிர்வாகம் உயர் செல்வாக்கை
நிறுவிக்கொள்வதற்கு வாய்ப்பாகிவிட்டது. 2000ம் ஆண்டில் அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் புஷ் பெய்ஜிங் (சீனா)
அமெரிக்காவிற்கு ''கேந்திர முக்கியத்துவமான போட்டியாளர்'' என அறிவித்தார். கடந்த 2 ஆண்டுகளில் அவரது
நிர்வாகம் சீனாவை சுற்றியுள்ள நாடுகளுடன் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கைகளையும்
உருவாக்கியுள்ளதுடன், இராணுவத்தளங்களை அமைந்திருக்கிறது அல்லது வலுப்படுத்தியுள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்தில், சீனாவை தனது பிராந்திய எதிரியாக கருதும் இந்தியாவுடன்
வாஷிங்டன் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்த்து வருகின்றது. இந்திய அரசும் நோபாளத்திற்கு இராணுவ உதவியை
வழங்கிவருவதுடன், மாவோயிச கிளர்ச்சிக்காரர்கள் இந்தியாவில் புகலிடம் தேடுவதை தடுப்பதற்காக தனது எல்லையை
மூடுவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
பல ஐரோப்பிய நாடுகள் (அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடான பிரிட்டன்
உட்பட) நேபாளத்தின் இராணுவ வலிமையை பெருக்குவதற்கு உதவி வருகின்றன. பிரிட்டனின் வெளியுறவுத்துறை அதிகாரி
Sir Michael Jay இது சம்பந்தமாக சென்ற மாதம்
கருத்து தெரிவிக்கும் போது ''இப்படியான பிரச்சனைகளை அணுகுவதற்கு நேபாள ஆயுத படைகளுக்கு தேவையான
அளவிற்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை, இதர வசதிகளும் தேவையான அளவிற்கு கிடைக்கவில்லை, பயிற்சியும்
போதுமான அளவிற்கு தரப்படவில்லை'' என்று குறிப்பிட்டார். இராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு பிரிட்டன்
நேபாளத்திற்கு 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் வழங்கி வருகிறது. பெல்ஜியம் நேபாள இராணுவத்திற்கு 500 இயந்திர
துப்பாக்கிகளை வழங்கியிருக்கிறது.
நேபாளத்திற்கு இராணுவ உதவி தருபவர்கள் நேபாள ஆட்சியின் ஜனநாயக விரோத
தன்மையை அடியோடு புறக்கணித்து விடுகிறார்கள். மன்னர் கையநேந்திரா
(Gayanendra) தனது மிதமிஞ்சிய அரசியல் சட்ட அதிகாரங்களை
பயன்படுத்தி சென்ற அக்டோபர் மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் செர் பகதுர் டாபாவின்
(Sher Bahadur Deuba) அரசை பதவியிறக்கினார்.
தனது சொந்த நிர்வாகத்தை ஷந்த் (Chand) தலைமையில்
அமைத்தார். அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் குறித்து மன்னர் வாஷிங்டனுக்கும், சீனாவிற்கும் தகவல் வழங்கியிருந்தபோதும்,
அந்த இரண்டு அரசுகளும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, என்றும் இந்து நாளேடு செய்தி வெளியிட்டது.
நேபாள விஜயத்தின்போது றோக்கா, மாவோயிச கிளர்ச்சிக்காரர்களை எச்சரிக்கை
செய்யும்போது நாட்டின் நிச்சயமற்ற அரசியல் நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று
கேட்டுக்கொண்டார். எல்லாக் கட்சிகளும் மன்னர் தரப்பும் ஒன்றுபட்டு அரசியல் வன்முறைக்கு எதிராக ஓரணியில் திரண்டு
நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அரசியல் கட்சிகளுக்குள்ளேயும் மாவோயிச கிளர்ச்சிக்காரர்களை
எப்படி சமாளிப்பது என்பதில் கடுமையாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா
அல்லது போரை முடுக்கி விடுவதா என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
டாபாவின் நேபாள காங்கிரஸ் (NC)
கட்சியில் கடுமையான பிளவு நிலவுகிறது. தனது எதிர் கோஷ்டி தலைவரும், மாவோயிச கிளர்ச்சிக்காரர்களுடன்
சமரச பேச்சு நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூறிய கிரிஜா பிரசாத் கொய்ராலாவை (Girija
Prasad Koirala) சென்ற ஆண்டு டாபா கட்சியிலிருந்து வெளியேற்றினார். டாபா அதற்கு பல மாதங்களுக்கு
பின்னர் மன்னரது ஆதரவோடு இராணுவ தாக்குதலை தொடுத்தார். அப்போது கொய்ராலா குழுவினர் நாட்டின்
அவசரநிலை பிரகடனம் நீட்டிக்கப்பட்டதை ஆதரிக்க மறுத்துவிட்டதால், டாபா மே மாதம் நாடாளுமன்றத்தை கலைத்து
நவம்பர் மாதம் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இதற்கு பதிலாக கொய்ராலா கட்சி தலைவர் என்றவகையில்
டாபாவை பதவியிலிருந்து நீக்கினார்.
அதிகரித்துவரும் அரசியலில் கொந்தளிப்பு நிலைமையில், மன்னர் இராணுவத்தின் ஆதரவோடு
தனது அரசியலமைப்பு சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்து விட்டார். தனது
சொந்த வலதுசாரி நிர்வாகத்தை ஏற்படுத்தினார். மேலும் தேர்தல்களை காலவரையின்றி தள்ளிவைத்தார். அதற்கு
சில வாரங்களுக்கு முன்னர் மாவோ கொரில்லாக்கள் சிந்துளி மற்றும் அர்கா காஞ்சி மாவட்டங்களில் 100-க்கு மேற்பட்ட
பொலிசாரையும் இராணுவத்தினரையும் கொன்றனர். தற்போது பல்வேறு மண்டலங்களில் அரசின் கட்டுப்பாடு மிகவும் பலவீனமாக
உள்ளது.
ஷந்த் நிர்வாகத்திற்கு கணிசமான மக்கள் ஆதரவு இல்லை. நாடாளுமன்றத்தை மீண்டும்
கூட்டுமாறு நேபாள காங்கிரசும், நேபாள மாணவர் யூனியனும், மன்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளனர்.
ஆனால் அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் மிகவும் தற்காலிகமானவை. நவம்பரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில்
உரையாற்றிய நேபாள காங்கிரஸ் தலைவர் கொய்ராலா ''நான் விரும்புவது எல்லாம் மன்னரது நலன்தான்'' என்று
குறிப்பிட்டார். வேறு பல நாடாளுமன்ற கட்சிகளும் கண்டனம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.
டிசம்பர் கடைசியில் காத்மண்டு இரண்டு நாட்களுக்கு வெறிச்சோடிக் கிடந்தது. மாவோ
கிளர்ச்சியாளர்களுக்கு தலைமை வகிக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (CPN-M)
அரசரின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
CPN-M- கட்சிக்கு தொழிலாளர்களிடையே கணிசமான ஆதரவு
இல்லை. மேலும் தனது கட்டளைகளை நிறைவேற்ற அக்கட்சி மிரட்டல்களை பயன்படுத்தி வருகிறது. இந்த வகையில்
மன்னருக்கும் அவரது பிரதமருக்கும், மக்களிடையே தோன்றியுள்ள வெறுப்புணர்வை மாவோ புரட்சிக்காரர்கள் தமக்கு
சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
வேலை நிறுத்தம் நடந்து சில நாட்களுக்குள் மாவோயிச கிளர்ச்சிக்காரர்களுடன் பேச்சு
நடத்த அரசாங்கம் முன்வந்தது. ஷந்த் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மாவோ
புரட்சிக்காரர்கள் சமரச பேச்சை புறக்கணித்து விடவில்லை. டிசம்பர் தொடக்கத்தில்
CPN-M-தலைவர் பிரச்சாந்த அரசாங்கத்துடன் சமரச
பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தான் ஒரு குழுவை அமைத்திருப்பதாக கோடிட்டு காட்டியதுடன்,
போட்டிக்குழுக்களையோ அல்லது அரசாங்க சொத்துக்களையோ தாக்கவில்லை என்று உறுதியளித்தார்.
CPN-M - கோரிக்கைகளுக்கும் சோசலிசத்திற்கும்
எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து நேபாளத்தில் இடைக்கால அரசை
அமைக்க வேண்டுமென்றும் மன்னர் ஆட்சியை இல்லாதொழிக்க அரசியல் அமைப்பு நிர்ணய சபையை கூட்ட வேண்டுமென்றும்
பிரசந்தா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பெயரளவிற்கு சோசலிசம் என்று சொல்லிக் கொண்டாலும்
CPN-M- கட்சி பெரிய,
சிறிய வர்த்தகர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகவே விளங்குகிறது. அத்துடன் தங்களது பொருளாதார அபிலாஷைகளுக்கு
மன்னராட்சியும், அதன் நிர்வாகமும் தடைக்கல்லாகயிருப்பதாக அந்தக் கட்சி கருதுகிறது.
உடன்பாட்டு பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் சண்டை தொடர்ந்து
நடந்து கொண்டே இருக்கிறது. டிசம்பர் ஆரம்பத்தில் பாதுகாப்புப் படைகள் ஏழு மாவட்டங்களில்
17-கொரில்லாக்களை கொன்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஏழு மாவட்டங்களில் ரோஜ்பூர், மற்றும் கன்சன்பூர்
மாவட்டங்கள் அடங்கும் டிசம்பர் 5-ம் தேதியன்று புரட்சிக்காரர்கள் லகான் போலீஸ் நிலையத்தில் திடீர்தாக்குதல்
நடத்தி மூன்று போலீஸ்காரர்களை கொன்றுவிட்டனர். ஜனவரி 12ந் தேதிக்கு முந்தைய வாரத்தில் எட்டு மாவோயிச
கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பால்பா, ஜம்லா, மற்றும் தாதிங்
உட்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளன.
உலகிலேயே மிக ஏழ்மையான நாடுகளில் நேபாளமும் ஒன்று. மக்களில் 42% பேர் வறுமைக்கோட்டிற்கு
கீழே வாடுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. சாரசரி தனிநபர் வருமானம் 220-அமெரிக்க டாலர்கள், வேலையில்லாத்திண்டாட்டம்
52% அளவிற்கு உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அரசாங்கம் பெட்ரோல் மற்றும் சமையல் வாயு விலையை 13
முதல்18% வரை உயர்த்தியது. அதற்கு காத்மாண்டுவில் ஆவேசமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இத்தகைய ஆழமான சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் மாவோயிச கிளர்ச்சிக்காரர்கள்
ஏழை கிராம மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கின்றனர். மிக கடுமையான வறுமையில் சிக்கித்தவிக்கும் நேபாள மக்களின்
வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக புஷ் நிர்வாகமும் மன்னரும் அவரது நிர்வாகமும் மற்றும் அரசியல்
கட்சிகளும், நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யும் சர்வதேச நாணய நிதியத்தினது பொருளாதார சீரமைப்புத்திட்டங்களை
ஆதரிக்கின்றன. மாவோயிச கிளர்ச்சிக்காரர்களுடன் பேரம் பேசுகின்ற முயற்சி தோல்வியடையுமானால், அவர்களுக்கு
எதிரான போரை தீவிரபடுத்துவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Top of page
|