ஆப்கானிஸ்தானில் கனடா இராணுவத்தினர் மீது குண்டுவீசிய அமெரிக்க விமானிகள் மீது விசாரணை
By Henry Michaels
18 January 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
சென்ற ஏப்ரல் 17 ந்தேதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இரண்டு எப்-16 ரக
போர் விமானத்தின் விமானிகள் ''தமது கூட்டு இராணுவத்தின் மேல்'' எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, நான்கு
கனடா இராணுவத்தினர் கொல்லப்பட்டு மேலும் எட்டு பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்காக, அமெரிக்க
விமானப்படை தனது இரண்டு விமானிகள் மீதும் இந்த வாரம் விசாரணையை துவக்கியுள்ளது. கபட நாடகத்தால் சூழப்பட்டிருக்கும்
இந்த வழக்கை அமெரிக்காவின் லூசியானா விமானப்படை தளத்திலுள்ள பூர்வாங்க இராணுவ நடுவர்மன்றம் விசாரணையை
துவக்கி சாட்சியங்களை பதிவு செய்துள்ளது.
''முப்பத்திரண்டாவது'' பிரிவின் கீழ் விசாரணை என்பது இரண்டு வாரங்கள் நீடிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விசாரணைகளின்போது மேஜர் ஹேரி ஸ்மித் (வயது 37) மற்றும் மேஜர்
வில்லியம் உம்பாக் (வயது 43) இருவரும் தற்செயலாக கொலை செய்துவிட்டார்கள் என்ற நான்கு குற்றச்சாட்டுக்கள்
மீதும் மற்றும் எட்டு கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டின் மீதும் இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவேண்டுமா?
என்று முடிவு செய்யப்படும். ஸ்மித் என்ற விமானி போர் விமானங்கள் பறப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய தகுந்த
கட்டுப்பாட்டை கொண்டிருக்கத் தவறினார் மற்றும் நடவடிக்கை விதிகளையும் மீறினார் என்ற கூடுதல் குற்றச்சாட்டும்
அவர் மீது கூறப்படுகிறது. அத்துடன் விமான கமாண்டர் வில்லியம் உம்பாக் மீதும் சரியான கட்டளையை பிறப்பிக்க
தவறினார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் 64 ஆண்டுகள் சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டு பதவியிலிருந்தும் நீக்கப்படுவதோடு, ஊதியம், படிகள் மற்றும் ஓய்வு கால நலன்கள் என்பன
அவர்களுக்கு கிடைக்காது போகும்.
முதல் தடவையாக இப்போதுதான் அமெரிக்க விமானப்படை இந்த நடவடிக்கைக்காக
தனது விமானிகள் மீது கிறிமினல் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருக்கிறது. இந்த வழக்கு பற்றி விமர்சனம் செய்யும்
வலதுசாரிகளும், மற்றும் ஊடக விமர்சகர்களும் இந்த விசாரணை ஆபத்தான முன்மாதிரியை உருவாக்கிவிடும் என்று
கண்டனம் செய்திருக்கின்றனர். அத்துடன் போர் மண்டலத்தில் குண்டு வீசி தாக்குவதற்கு முன்னர் ஒரு முறைக்கு இரண்டு
முறை சிந்தித்தே அமெரிக்க துருப்புகள் செயல்படவேண்டிவரும் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்கள். ''ஈராக்குடன்
போர் மூழக்கூடும் என்ற அடிப்படையில் அமெரிக்காவின் தேசிய மற்றும் ரிசர்வ் படைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்,
200.000 லிருந்து 250.000 பேர்கள் அந்த மண்டலத்தில் போருக்குச் செல்ல இருக்கின்றனர். குறிப்பாக இவர்களது
உற்சாகம் எந்த அளவிற்கு பாதிக்கப்படலாம் என்பது குறித்து, சில இராணுவ நிபுணர்கள் வியப்பு அடைந்தனர்'' என்று
யு.எஸ்.ஏ. டுடே என்ற பத்திரிகை எழுதியுள்ளது.
பென்டகனிலும், வெள்ளை மாளிகையிலும் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கப்பட
வேண்டுமென்று மேல் மட்டத்தில் முடிவு செய்யப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. காயம் அடைந்த கனடா இராணுவத்தினர்
தங்களது சகாக்கள் குண்டுத் தாக்குதலில் மாண்டது குறித்தும், காயமடைந்தது தொடர்பாகவும் தகவல்களை கொடுத்தனர்.
ஸ்மித் 247 கிலோ கிராம் எடையுள்ள லேசர் வழிகாட்டும் குண்டை தரையில் நின்ற இராணுவ வீரர்கள் மீது வீசியது
தொடர்பாக, முதலாவது அரசு தரப்பு சாட்சியான மூத்த அமெரிக்க அதிகாரி கேனல் லோறன்ஸ் ஸ்டுட்சிரீம் விசாரிக்கப்பட்டார்.
இவர், சவூதி அரேபியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த கூட்டு விமானப்படை நடவடிக்கை மையத்தின்
(CAOC) கீழ்,
ஆப்கானிஸ்தானில் விமானப்படை பிரிவின் துணை இயக்குநராக அந்த நேரத்தில் பணியாற்றி வந்தார். காந்தகார்
அருகிலுள்ள அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த தமார்க் பயிற்சி நிலையத்தில் இரவிலேயே இந்த சம்பவம் நடந்தது.
சாட்சியம் அளித்த லோறன்ஸ் ஸ்டுட்சிரீம், இராணுவ போர்ப் பிராந்திய நடைமுறைகளை
விளக்கி, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சரி என்று வாதாடி அந்த நடைமுறைகளுக்கு விரோதமாக விமானிகள் செயல்பட்டதாகவும்
குற்றம் சாட்டினார். இரண்டு முறை அமெரிக்கா - கனடா இராணுவ விசாரணைகள் நடைபெற்றன. அந்த விசாரணை
அறிக்கைளில் விமானிகள் மீது குற்றம்சாட்ட பரிந்துரைக்கப்பட்டது. தன்னையும் தனது சக விமானியையும், தரையிலிருக்கிற
படையினர் தாக்குகிறார்கள் என்று நினைத்து ஸ்மீத் 20 மில்லி மீட்டர் பீரங்கியை இயக்குவதற்கு அனுமதி கேட்டதை,
மிகவும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதாக இந்த அதிகாரி தனது சாட்சியத்தில் தெரிவித்தார். தரையிலிருந்து விமானத்தை
நோக்கி சுடுகிறார்களா என்பதை சோதனை செய்துவிட்டு சொல்கிறேன் என்று இந்த அதிகாரி கூறிமுடித்து 3
நிமிடங்களுக்குள் ஸ்மீத் தற்காப்பிற்காக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி குண்டுகளை வீசிவிட்டார் என்று, இவர் மேலும்
தனது சாட்சியத்தில் விளக்கினார்.
''இதில் நாங்கள் அவர்களுக்கு (கனேடிய இராணுவத்தினர்) செய்வதற்கு ஒன்றும்
இல்லை. விமானப்படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் நிலவரத்தை வைத்திருந்தனர்'' என்றும், முன்கூட்டியே டமார்க்
பகுதி மற்றும் அதன் சுடும் வட்டாரத்தை, பயிற்சி அனுபவம் மிக்க விமானியும், விமானக்குண்டு வீசி தாக்கும் பயிற்சியாளருமான
ஸ்மித்திற்கு தெரிந்திருக்க வேண்டுமென்று தான் எதிர்பார்த்ததாக தமது சாட்சியத்தில் கேனல் ஸ்டுட்சிரீம் குறிப்பிட்டார்..
அந்த விபத்தில் கொல்லப்பட்டவர்கள் சார்ஜன்ட் மார்க் லெட்சர் (வயது-29)
கோப்ரல் ஐய்ன்ஸ் ஸ்வர்த்டயர் (வயது-24) ரிச்சர்ட் கிரீன் (வயது-21) நாதன் ஸ்மீத் (வயது-27) ஆகியோர்களாகும்.
இவர்கள் கனடாவின் சாதாரண காலாட்படை பிரிவைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது பிரிவு கனடா காலாட்படையைச்
சேர்ந்த இவர்கள் டமார்க் பயிற்சிப் பகுதியில் நேரடியாக குண்டு வீசும் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். பாக்ஸ்டால்
பகுதியில் நடைபெற்ற இந்த விசாரணையை பக்கத்து அறையிலிருந்து இறந்தவர்கள் பலரது உறவினர்கள் உள்ளேயிருந்த
டி.வியிலும், குற்றம் சாட்டப்பட்ட விமானிகளது குடும்பங்கள் தனியாக வேறு இடத்திலிருந்தும் இந்த விசாரைைய பார்வையிட்டனர்.
அந்த இரவு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அதிகாரபூர்வமான அறிக்கை 4,000
பக்கங்களை கொண்டது. ஆனால், அமெரிக்க இராணுவ விசாரணைக்குழு 56 பக்க சுருக்கத்தை மட்டுமே வெளியிட்டது.
இப்படி பகிரங்கமாக வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கையை நம்புவது என்றால், அந்த மரணங்களுக்கு விமானிகளும்
காரணமாகயிருந்தார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை. அந்த விமானிகள் 23,000 அடி உயரத்தில் பறந்து
கொண்டிருந்தார்கள். அப்போது கனடா இராணுவத்தினர் தரையில் 600 அடி தூரம் பாயும் துப்பாக்கி சுடும் பயிற்சியில்
ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் இன்னும் கொஞ்சம் உயரே பறந்து விமானக் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு
விசாரித்திருக்கலாம். அப்படிச் எதுவும் செய்யாமல் ஆப்கானிஸ்தானில் பொதுவாக கண்ணில்பட்ட மக்களை எல்லாம்
தாலிபான் ஆதரவாளர்கள் என்று நினைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதைப்போல், விமானிகளும் கீழே, தரையில் நடந்துகொண்டிருப்பது
என்ன என்று விமான கட்டுப்பாட்டு அறையை விசாரிக்காமலே குண்டு வீசிவிட்டார்கள்.
அமெரிக்க இராணுவமும், புஷ் நிர்வாகமும், விமானிகளை பலிக் கடாக்களாக ஆக்கியிருப்பது
தெளிவாக தெரிகிறது. கனடா இராணுவத்தினர் குண்டுகளை பயன்படுத்தி பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை
விமானிகளுக்கு இராணுவ கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கவில்லை. அதுபோன்ற பயிற்சிகளை இராணுவத்தினர் மேற்கொள்வதை
விமானிகளுக்கு தெரிவிக்கவேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. அவாக்
(AWACS) உளவு விமானத்தில் பணியாற்றிய கனடாவின்
தளபதி உட்பட வேறு எவரும் தரையில் கனடா இராணுவம் ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்
என்று அவர்களுக்கு தெரிவிக்கவும் இல்லை.
மேலும், ஸ்மித் மற்றும் உம்பாக் ஆகிய இரண்டு விமானிகளும் 20 மணிநேர பணியை
முடித்துவிட்டு கீழே இறங்கப்போகிற நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. விமானப் ப்படை ஒழுங்குகளின்படி 12
மணி நேரத்திற்குமேல் ஒருவர் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் இருவரும் இரவு நேரம் பாவிக்கும்
கண்ணாடிகளை பயன்படுத்தியதால், அது தரைப்பகுதி மற்றும் ஆழமான பகுதி பார்வையை திசை திருப்பிவிடும்.
ஆனால் இதில் அமெரிக்காவின் குறிப்பாக, விமானப்படையின் கீர்த்தியை பாதிக்கிற
விபரம் களைப்பை போக்கும் போதை மருந்துகளை உட்கொள்வதற்கு விமானிகளுக்கு அனுமதி கொடுத்தார்கள்
என்பதாகும். குவைத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானத்திலிருந்து குவைத்திற்கும், நீண்ட தூரம் விமானம்
ஓட்டிச் செல்வதால் ஏற்படும் சோர்வைப் போக்கி ''சுறுசுறுப்பு தருகின்ற மருந்துகள்'' பயன்படுத்தப்பட்டதாகவும்,
பணி முடிந்து முகாமிற்கு வரும் விமானிகள் தூங்குவதற்கு தூக்க மாத்திரைகள் தரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
விசாரணை அறிக்கை மாத்திரைகள் ''ஒரு அம்சம் அல்ல'' என்று தெரிவித்தாலும் நிபுணர்கள் அந்த முடிவை ஆட்சேபித்திருக்கின்றனர்.
ஹார்வேர்ட் பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் பிலிப்போர்ட் சேப்பர் அந்த
போதை மருந்து ஒரு விமானி தனது திறமைகளுக்கு அல்லது ஒரு நிலவரம் குறித்து தவறான முடிவு செய்வதற்கு
தூண்டிவிடும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால், இராணுவத்தினர் அந்த மாத்திரைகள் விமானிகள் மிகுந்த முன்
எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கு விழிப்புணர்வைத் தரும் என்று கூறுகின்றனர். விமானப்படையினர் உற்சாகமூட்டுவதற்கு
பயன்படுத்தும் மாத்திரைகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக அமைப்பு அங்கீகரிக்கவில்லை. அந்த மாத்திரையை
கொக்கேயின் ரக போதை மருந்து பட்டியலில் சேர்த்திருக்கிறது.
சாதாரணமாக அமெரிக்காவின் வீதிகளில் இதுபோன்ற போதை மருந்துகளை
''கிளர்ச்சி'' அல்லது ''வேகம்'' என்று அழைக்கிறார்கள். இந்த போதை மருந்துகள் தொடர்பாக, அமெரிக்க
ஏ.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம் வளைகுடா போர் சம்மந்தமான புலனாய்வு செய்தி ஒன்றை ஒளிபரப்பியது, அதில்
அமெரிக்க விமானிகள் அந்த ''உற்சாகம் மூட்டும்'' போதை மாத்திரைகளுக்கு அடிமையாகிவிட்டதாக தகவல் தந்தனர்.
இத்தகைய உற்சாகமூட்டும் மாத்திரைகளை பயன்படுத்தாத விமானிகளை, சில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்குதான் எடுத்துக்கொள்ள
முடியும் என்று அமெரிக்க விமானப்படை அறிவித்ததாகவும் அது தெரிவித்தது.
வெள்ளை மாளிகையின் முன்னாள் போதைப்பொருள் மன்னர், போதைப் பொருட்களுக்கு
இலக்கானோர் பற்றி ஆராய்வதில் நிபுணரான டாக்டர் றொபேர்ட் டூபாண்ட், இவர் ஏ.பி.சி. தொலைக்காட்சிக்கு
அளித்த பேட்டியில் ''இந்த போதைப் பொருள் சாதாரணமாக புழக்கத்தில் வந்துவிடுமானால், அதற்கு இரையானவர்கள்
மனக் குழப்பத்தில் ஆழ்ந்து சாப்பிடுவதைக்கூட விட்டுவிடுவார்கள், அவர்களது முடிவு சரியாகயிருக்காது, அவர்கள் தவறான
காரியங்கள் செய்து கொண்டிருப்பார்கள். போதை மருந்துகளுக்கு இலக்கானவர்களில் இந்த தரப்பினர் மிக மோசமான
நோயாளிகளாக கருதப்படுவார்கள்'' என்று குறிப்பிட்டார்.
விசாரணை துவங்கியதும், மேலும் பல மூத்த அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு கண் துடைப்பு
விசாரணைகள் நடைபெறுகின்றன என்பதற்கான, சான்றுகள் வெளியாகின. இந்த விபத்து நடந்த பின்னர் சென்ற ஜூலை
மாதம் ஸ்மித் மற்றும் உம்பாக் உள்ளடங்கிய 332 வது விமானப்படைப் பிரிவு கேனல் டேவிட் நிக்கோலசின் கண்டனங்கள்
பத்திரிகைச் செய்திகளில் கசிந்தன. 100 முறைகளுக்குமேல் தங்களது சக நாடுகளின் துருப்புக்கள் எங்கு உள்ளன,
என்ற விபரத்தை கூட்டு விமானப்படை நடவடிக்கை மையத்திடம் கேட்டதாகவும், தொலைபேசியிலும் ஈ-மெயிலும் விசாரணை
நடத்தியதாகவும் ஆனால் அதை தலைமை பொருட்படுத்தவில்லை என்றும் ஊடகங்களில் இரகசியங்கள் வெளியிடப்பட்டன.
இந்த கவலைகளை எழுப்பிய கேனல் நிக்கோலசை விசாரணை அதிகாரிகள், தனது யூனிட்டிற்குள் ''அவநம்பிக்கை''
சூழ்நிலையை வளர்ப்பதாக கண்டிக்கப்பட்டார்.
விசாரணையில் உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதோடு, திட்டவட்டமான அரசியல் காரணங்களுக்காக,
வழக்கத்திற்கு மாறான கடும் தண்டனை வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற கவனக்குறைவான
நடவடிக்கைகளுக்கு மூல காரணம் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது அமெரிக்கா அவிழ்த்துவிட்ட இராணுவ ஆக்கிரமிப்புத்தான்
என்பதை மறுப்பதற்கு முயற்சிகளும் நடைபெறுகின்றன.
உற்சாகம் மூட்டும் மாத்திரைகளை பயன்படுத்துவது, இலக்குகளை தவறவிடுவதற்கு காரணமாக
இருக்கலாம். இதுபோன்ற சிவிலியன் சேதங்கள் தவிர்ப்பதற்கு இராணுவம் கடுமையான நடவடிக்கை எடுத்துவருவதாக
வாஷிங்டன் கூறிக்கொள்வது, சிடுமூஞ்சித்தனமான ஒரு ஏமாற்று வித்தையாகும்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி
மக்கள் பலியாகியிருக்கிறார்கள். இவற்றில் மிகப்பெரும்பாலான சம்பவங்கள் குறித்து இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை.
அப்பாவிகள் பாதிக்கப்பட்டதாக ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பவங்கள்கூட, அந்த மக்களை மிகவும் துச்சமாக அமெரிக்கா
மதித்திருக்கிறது என்பது தெளிவாகின்றது. ஜூலை முதல் தேதி ஆப்கானிஸ்தானில் உருஸ்கன் மாகானத்தில் ஒரு கிராமத்தில்
நடைபெற்ற திருமணத்தில் குண்டு வீசி தாக்குதலை நடத்தியதால், 48 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். மேலும் 118
பேர் காயம் அடைந்தனர். அந்தக் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு மொத்தம் 18,500 டொலர் உதவித்தொகை
தருவதாக உறுதிமொழி தரப்பட்டது. அப்படியென்றால் இறந்தவர்கள் ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் 200
டொலர்களும், காயம்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் 75 டொலர்களும் உதவி கிடைக்கிறது, என்று பொருளாகும்.
2001 அக்டோபரில் காபூலில் உள்ள செஞ்சிலுவைச் சங்க வளாகத்தில் அமெரிக்கப்
போர் விமானங்கள் பத்து நாட்களுக்குள் இரண்டு முறை குண்டு வீசி தாக்குதல் நடத்தின. அதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு
மூவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு எந்தவிதமான குற்றச்சாட்டும் தாக்கல் செய்யப்படவில்லை.
இங்கு தெளிவான இரட்டை வேடத்தை காண முடிகின்றது. திருமணத்தில் நடைபெற்ற குண்டு
வீச்சிற்கு மறுநாள் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ரம்ஸ்பீல்ட், இத்தகைய பாதிப்புகள் தவிர்க்க முடியாதது
என்று அறிவித்தார். ''இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறத்தான் செய்யும், எப்போதுமே நடைபெற்றிருக்கின்றன,
எதிர்காலத்திலும் இது நடைபெறத்தான் செய்யும்'' என்று குறிப்பிட்டார். ஆனால் நான்கு கனடா படையினர் மாண்டது
பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்ட விசாரணை நடத்துவதற்கு பென்டகனை ஒருமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த விசாரணைக்கு மற்றொரு காரணம், ஈராக் மீது அமெரிக்கா நடத்தும் படையெடுப்பில்
கனடா பங்கு பெறவேண்டும் என்பதுடன், கனடா மக்களது எதிர்ப்பு உணர்வை அந்நாட்டு அரசு சமாளிக்க வேண்டும்
என்பதாகும். கனடா படையினர் இறந்த நிகழ்ச்சி கனடாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க
விமானிகள் தவறு செய்ததாக விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் கனடா அரசு இழப்பீடு கோரவேண்டும் என்று, ஒரு
ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 85 சதவிகித கனடா மக்கள் குறிப்பிட்டனர்.
இந்த விவகாரத்தில் கடைசியாக ஓர் அம்சத்தை நாம் கவனித்தாக வேண்டும். அமெரிக்க
அரசாங்கமும், அமெரிக்க செய்தி ஊடகங்களும் அமெரிக்கத் துருப்புகள் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்''
வீரம் செறிந்த தள கர்த்தர்களாக போரிடுகிறார்கள் என்று பிரச்சார உத்திக்காக கூறப்பட்டாலும், உண்மையில் அமெரிக்கத்
துருப்புக்களின் நிலைகுறித்து நியாயமான கவலை அரசாங்கத்திற்கு இல்லை.
அமெரிக்கப் போர் விமானிகளிலேயே ஸ்மித் மற்றும் உம்பாக் ஆகிய இருவரும் தலை சிறந்தவர்களாவர்.
அப்படிப்பட்டவர்களின் அனுபவம் எதைக்காட்டுகிறது? அமெரிக்கப் படையினருக்கு போதைப்பொருட்கள் ஊட்டப்பட்டு மிருகங்களாக
நடப்பதற்கும், கொலைகாரர்களாக ஆவதற்கும் அவர்கள் தூண்டப்படுகிறார்கள் என்பதையேயாகும். அரசாங்கத்தின்
நோக்கங்களை அவர்கள் நிறைவேற்றியதும், அல்லது அவர்களது சேவை தேவையில்லை என்று கருதப்படும் நேரத்தில்,
வாஷிங்டனின் இராஜங்கத்துறையானது அரசியல், மற்றும் பிரச்சாரப்போரில் ''சேதம் விளைவிக்கின்ற'' அம்சங்களாக
அவர்களை மாற்றிவிடுகிறார்கள்.
Top of page
|