World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் Bush calls for Hussein's execution: a portrait of sadism and ignorance புஷ், ஹுசைனுக்கு மரணதண்டனையைக் கோருவது: பிறர் துன்பத்தில் மகிழ்தலும், அறியாமை நிறைந்ததுமான ஒரு சித்திரம் By Bill Vann ஜோர்ஜ் டபுள்யூ. புஷ், தேசியத் தொலைக்காட்சி பேட்டி கொடுத்தது, ABC News ஆல் செவ்வாய் இரவன்று ஒளிபரப்பப்பட்டதை அடுத்துச், செய்தி ஊடக அறிவிப்புக்களில், சதாம் ஹுசைனுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி கோரியது மிகுதியாய் குவிமையப்படுத்தப்பட்டிருந்தது. நியூ யோர்க்கிலிருந்து வெளிவரும் Daily News, பத்திரிகை புஷ்ஷின் கருத்துக்களை, "சதாம் எலியை கொல், ஜனாதிபதி கூறுகின்றார்", ("Zap rat Saddam, sez Prez") என்ற தலைப்பில் வெளியிட்டது. தனிப்பட்ட சீற்றத்தின் உணர்வுகளினால் உந்தப்பட்டு, ஒரு கடுமையாகப் பேசும் தலைவர், பழைய ஈராக்கிய ஜனாதிபதி தன்னுடைய குற்றங்களுக்கு "இறுதித் தண்டனை" பெற்றாகவேண்டும் என வலியுறுத்தியதுதான் பொதுவாகச் சித்தரித்துக்காட்டப்படும் தோற்றமாகும். இப்பேட்டியை முழுவதும் பார்த்தவர்களுக்கும், புஷ்ஷின் பழைய கதைகளை அறிந்தவர்களுக்கும், அத்தகைய பாதிப்பு தோன்றியிருக்காது. இவர் டெக்ஸாசின் கவர்னராக இருந்தபோது, "இறுதி தண்டனை" என்பது முற்றிலும் வாடிக்கையான நிகழ்வுகளாக இருந்தது. அமெரிக்க வரலாற்றிலேயே, எந்த கவர்னர் ஆட்சியைவிடவும் கூடுதான முறையில், 152 மரணதண்டனைகள் இவரால் நிறைவேற்றப்பட்டன; ஒருமுறை, மன அளவில் பாதிக்கப்பட்டிருந்தவருக்கும் உட்பட, மனித உயிர்களைக் கொல்லும் உத்தரவு கொடுப்பதற்குமுன்பு, ஒவ்வொரு வழக்கிற்கும் சராசரி 15 நிமிட அவகாசமே கொடுத்து வழக்கின் தன்மையைக் கேட்டறிந்தார். அவர் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற பின்னர், மத்திய ஆட்சி வழங்கும் மரணதண்டனையை (Federal Death Penalty) அமெரிக்காவில் 1963க்குப் பின்னர் முதல் முறையாக மீண்டும், கடந்த மார்ச் மாதம் ஈராக்கியப் படையெடுப்பு தொடங்குவதற்கு சற்று முன்னர்தான், ஒரு பழைய பாரசீக வளைகுடாப்போரில் பங்கெடுத்த ஒருவருக்கு மரணதண்டனை உத்தரவு கொடுத்ததின் மூலம், தொடக்கிவைத்தார். புஷ்ஷைப் பொறுத்தவரையில், மரணதண்டனை வழங்குதல், அதிகாரம் பெற்றவர் துய்க்கின்ற புளகாங்கிதம் என்பதைவிட, ஒழுக்க உணர்வின் சீற்றம் என்பது குறைவானதாகும். இவருடைய பிறர் துன்பத்தில் களிப்படையும் இயல்பும், இந்த இறுதி அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் "போதை" யும், ("kick") மரணதண்டனை பெற்றிருந்த கார்லா பயே றுக்கர் (Karla Faye Tucker) என்ற டெக்சாஸ் பெண்மணி கருணை காட்டுமாறு இரங்கியதை, அவரை அரசு முறையில் கொல்வதற்கு உத்தரவு கொடுப்பதற்குமுன்பே, பொது இடத்தில் வைத்து நையாண்டி செய்ததில் வெளிப்பட்டது. "இவர் ஒரு இழிவான கொடுங்கோலர், நீதி கொடுக்கப்படவேண்டும், இறுதி நீதி. ஆனால் அது அமெரிக்க ஜனாதிபதியினால் முடிவு எடுக்கப்படமாட்டாது, ஈராக்கிய மக்களால்தான் ஏதேனும் ஒரு விதத்தில் முடிவெடுக்கப்படும்," என்றார் புஷ். பின்னர் பாதுகாப்பாகச் சேர்த்துக் கொண்டார்: "நமக்கு கங்காரு நீதிமன்றம் (அதிகாரம் இல்லாத நீதிமன்றம்) தேவையில்லை." ஆனால், சரியாக அதைத்தான் வாஷிங்டன் செய்து கொண்டிருக்கிறது. "ஈராக்கியக் குடிமக்கள்" எதையும் நிர்ணயிக்கப் போவதில்லை. அவர்கள் ஓர் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கு கட்டுப்பட்ட மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமோ அல்லது வாக்குப்போடும் வாய்ப்போ பல ஆண்டுகளுக்கு, அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. அமெரிக்கா ஒரு கருவியைத் தோற்றுவித்து, காலம் காலமாக கெளரவப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்கக் கொள்கையான "நியாயமான வழக்கு விசாரணை செய்யுங்கள்; இறுதியில் தூக்கிலிடுங்கள்" என்பதை அடிப்படையாகக் கொண்டு சதாம் ஹுசைனுக்குத் தீர்ப்பு வழங்கப்படும். தன்னுடைய தடையற்ற அதிகாரத்தின் கீழுள்ள நீதிமன்றத்தை தவிர, வேறு எதையும், ஹுசைன் மீது விசாரணை நடத்த அனுமதிக்கும் விருப்பம், புஷ் நிர்வாகத்திற்குக் கிடையாது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உட்படும் பழைய அமெரிக்க உடன்பாட்டை ரத்து செய்துவிட்ட பின்னர், எத்தகைய அவ்வித மன்றத்தையும் முறைப்படுத்தக்கூடாது என்பதில் அது உறுதியாக உள்ளது. புஷ், செனி, ரம்ஸ்பெல்ட், டொமி பிராங்க்ஸ் இன்னும் மற்றவர்கள், ஈராக்கியப்போர் தொடுத்ததற்கும், பல்லாயிரக் கணக்கான ஈராக்கியக் குடிமக்கள் கொல்லப்பட்டதற்கும், ஒரு நீதிமன்றத்தின்முன் போர்க்குற்றங்களுக்காக நிறுத்தப்படக்கூடும் என்ற நியாயமான அச்சங்கள் அதற்கு உண்டு. சர்வதேச நீதிமன்றங்கள் மரணதண்டனையை காட்டுமிராண்டித்தனமான தண்டனை என்று ஒதுக்கிவிட்டதால், அமெரிக்கா, ஒரு கைப்பாவை ஈராக்கிய நீதிமன்றத்தின் மூலம், சதாம் ஹுசைனுக்கு, ஈராக்கிய மக்களுடைய விருப்பத்தைத்தான் நிறைவேற்றுகிறோம் என சொல்லிக்கொண்டு, விரைவில் மரணதண்டனைக்கு ஏற்பாடு செய்யக்கூடும். அப்படிப்பட்ட நடைமுறையில், மற்றொரு நன்மை என்னவென்றால், இறந்த மனிதர்கள் கதைகள் கூறிக்கொண்டிருக்க மாட்டார்கள். சர்வதேச நீதிமன்றம் முன்பு, ஹுசைன் தான் கொண்டுள்ள ஒரே பாதுகாப்பைப் பயன்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்: இவர் செய்த குற்றங்களிலேயே மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும், ஈரான்-ஈராக் போர், குர்துகளை விஷவாயுவினால் கொன்றது, ஷியைட்டுக்களை அடக்கியது போன்றவை, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நிர்வாகங்களின் நேரடி ஆதரவைப் பெற்றவை அல்லது மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டவை என்பதாகும். அமெரிக்கா எவ்வாறு ஹுசைனை நடத்தவேண்டும் என்பதில் உள்ள அரசியல் பின்னணிகளின் பிரச்சினைகள் பற்றி, புஷ் அறிந்திருக்கிறாரா என்பது சந்தேகம்தான். அபூர்வமாக, மிகக்கூடுதலான நேரம் நிகழ்ந்த இப்பேட்டியில் இருந்து வெளிப்பட்ட தோற்றம், அரசியலில் அறியாமை மிகுந்தும், பழிவாங்கும் போக்கும் கொண்ட ஒரு நபர் அவர் என்பதுதான். அவரைப் பேட்டி கண்ட Diane Sawyer, கிட்டத்தட்ட ஓர் அரசாங்க நிறுவனம் போன்றவர்; இவருடைய "செய்தித்துறை" நற்சான்றுகள், நிக்சனுடைய வெள்ளை மாளிகையில் வெற்றுப்பணி புரிந்ததிலும், பின்னர் இழிவுபடுத்தப்பட்டுவிட்ட ஜனாதிபதியுடன் சான் கிளெமென்டிற்குச் சென்று அவருடைய நினைவுக்குறிப்புக்களை எழுதியதிலும்தான் வேரூன்றி இருக்கிறது. ஆனால் இத்தகைய மிருதுவான, நம்பிக்கைக்குரிய நண்பரால் கேள்விக்குட்படுத்தப்படுவது கூட, புஷ்ஷிற்குப் பெரிய சோதனையாகத் தோன்றியது. இவருடைய வினோதமான முகபாவங்களும், பயம் மிகுந்த உடல் மொழியும், ஒவ்வொரு வினாவும், இவருடைய குறைந்த அறிவிற்கு அப்பால் அமைந்து, அழுத்தத்தைக் கொடுத்துவிடுமோ என்ற உள்பயத்தைத் தூண்டி, அவருடைய உரையெழுதுபவர்கள், அரசியல் ஆலோசகர்களிடம் பொறுக்கியெடுத்துக் கொண்ட சில வழக்கமான சொற்பிரயோகங்களிடம் தஞ்சம் புக வைத்தது. எனவே, சாயர் விசாரணையைத் தொடக்கும் வகையில், நிர்வாகத்தின் கொள்ளையிடும் போருக்குப் போலிக்காரணமான, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பற்றி, எந்தத் தடையத்தையும் காண்பதில் அமெரிக்க இராணுவம் தோல்வியுற்றதைச் சுட்டிக்காட்டியபோது, புஷ் மோசமாக பதைபதைப்பு அடைந்தார். ஈராக்கிய ஆட்சி, அணுவாயுதங்களைத் தயார் செய்யும் நிலைக்கு வெகு சமீபத்திலுள்ளது, இராசயன, உயிரியல் ஆயுதங்களை நூற்றுக்கணக்கான தொன்களில் கொண்டுள்ளது என்பதுபற்றிய நிர்வாகத்தின் கூற்றுக்களைப் பற்றி, சாயர் கேட்டதற்கு, புஷ் விடையிறுத்தார்: "இதோ பாருங்கள், சதாம் ஹுசைன் ஆபத்தான மனிதன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது, எங்களிடம் நிறைய சான்றுகள் நிரூபிப்பதற்கு இருந்தன, 9/11க்குப் பின்னர், அமெரிக்காவை இன்னமும் பாதுகாப்பான நாடாக அமைப்பதற்கு, ஜனாதிபதி செயல்பட்டாக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை " சாயர் கேள்வியைத் தொடர முயற்சித்தபோது, புஷ், சிறுபிள்ளைத்தனமாக பதிலளித்தார்: "நீங்கள் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கலாம், என்னுடைய விடை அப்படியேதான் இருக்கப்போகிறது. சதாம் ஆபத்தான மனிதர், இப்பொழுது நாம் அவரிடமிருந்து விடுபட்டுவிட்டதால், உலகம் நன்றாகத்தான் செயல்படும்." பழைய வெள்ளைமாளிகை உதவியாளர், ஒத்துப்போகும் முறையில் வேறு ஒரு விஷயத்திற்கு நகர்ந்தார். மற்றொரு மிகவித்தியாசமான கேள்வி-பதிலில், சாயர் புஷ்ஷிடம், அவருடைய உதவியாளர்கள் தயாரிக்கும் குறிப்புக்கள்தான் அவருடைய செய்திகள் பற்றிய ஆதாரம் என அறிவித்திருந்ததைப் பற்றிக் கேட்டார். "தமது சொந்தக் கருத்தை கூறாதவர்களிடமிருந்து எனக்குச் செய்திகள் கிடைக்கின்றன. அவர்கள் என்னிடம் நடப்பில் உள்ள செய்திகளைக் கூறுகின்றனர், அன்றாட முறையில் உண்மைகளைக் கிரகித்துக் கொள்ள அது எனக்கு எளிதாகும்" என புஷ் பதில் கூறினார். "ஒருவேளை இடைவிடாத விமர்சனத்தைப் படிப்பது, கடினமானது என்பதால் இம்முறையைக் கொண்டுள்ளாரா" என்று சாயரால் வினாவப்பட்டதற்கு, புஷ் பதில் சொன்னார்: "வேறுவிதங்களில் தகவல்கள் கிடைக்கும்போது, எதற்காக அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்? நான் ஓர் அதிருஷ்டசாலி, என்னிடம்... என்னுடைய நிர்வாகத்தில் எல்லாதரப்பட்டவர்களும், பற்பல பொறுப்புக்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் வந்து இதுதான் நடக்கிறது, இது நடக்கவில்லை என்று கூறுகின்றனர்." அமெரிக்க ஜனாதிபதியின் அரசியலில் பின்தங்கிய நிலைமையும், வெளியுலக நடப்பு பற்றி வெள்ளை மாளிகையின் தனிப்பட்ட அசட்டைத்தன்மையையும் வேறு எதுவும் எடுத்துக்கூறப் போவதில்லை. செய்தித்தாள் படிப்பதில் அவருக்கு இருக்கும் இகழ்வு, திறமைக் குறைவு, செய்தித்தாள்கள் படிப்பதன்மூலம் போட்டியிடும் நலன்கள், மாறுபட்ட கொக்கைகள் பற்றி ஆராய்ந்து ஓர் அரசியல் பார்வையை அமைத்துக் கொள்ளும் ஆர்வமும் அற்ற நிலையை இதைவிடத் தெளிவாக வேறொன்றும் விளக்க முடியாது. இவருடைய அகநிலைப் பார்வையும், குறைந்த அறிவுத்திறமையும் இவரை வெகு எளிதில் விருப்பப்படி நடக்க வைக்க இடமளிக்கின்றன. இவருக்குக் கீழ் வேலை செய்பவர்களும், ஆலோசகர்களும், தாங்கள் விரும்பும் கொள்கைகளுக்கு ஏற்ற "உண்மைகளை" அவருக்குக் கொடுக்கின்றனர்; புஷ்ஷோ பரந்த உலகில் நடக்கும் அரசியல் விவாதத்தைப்பற்றி, அதிக அக்கறை இல்லாத நிலையில், இவருடைய நிர்வாகத்திற்குள்ளேயும், இவருடைய பணியாளர்களிடையேயும் உள்ள விரோத சக்திகளைக்கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இவர் இல்லை. இத்தகைய மனிதரை, பெயரளவுக்கு தலைமை நிர்வாகி எனக் கொண்ட பின்னர், ஈராக்கிய போரையொட்டி, இவருடைய நிர்வாகம் மகத்தான தவறுகளைச் செய்ததும், அக்கொள்கைகளினால் தொடர்ந்து ஈராக்கிய மக்களும், அமெரிக்க வீரர்களும் உயிர்நீப்பதும் அன்றாட வாடிக்கையாகிவிட்டதைப் புரிந்து கொள்வது கஷ்டமில்லை. அமெரிக்க ஆட்சி வட்டங்களிலேயே, புஷ், தான் வகிக்கும் பதவிக்கு மிகவும் தகுதியற்று இருக்கிறார் என்பது நன்கு தெரியும். இவருடைய அமைச்சர் குழுவில் ஆதிக்கம் செலுத்தியும், அவருடைய முக்கிய அரசியல் தளமாகச் செயல்படும் பெருநிறுவன குற்றஞ்சார்ந்த கொள்ளைக் கூட்டத்திற்கு, இவருடைய பொது அறிவு அல்லது புத்திசாலித்தனம் இவைகள் அற்ற தன்மை, தங்களுடைய இலாப நலன்களுக்காக இவரை இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுக்கும் கருவியாகப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது. |