World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Day three of US media coverage of Hussein's capture: no let-up in the hysteria

ஹுசைன் கைப்பற்றப்பட்ட மூன்றாம் நாளைய அமெரிக்க ஊடகச் செய்திகள்: வெறித்தனமான வெளியீட்டில் குறைவு இல்லை

By David Walsh
17 December 2003

Back to screen version

ஈராக்கியத் தலைவர் சதாம் ஹூசைனைப் பிடித்தது, அதற்குப்பின் நடந்தவற்றைப் பற்றி அமெரிக்கச் செய்தி ஊடகம் தகவல் வெளியிடும் முறையில், இன்னும் வெறித்தனம் குறைந்ததற்கான அடையாளத்தைக் காட்டவில்லை. மாறாக, பெரும்பாலான பொதுமக்களிடையே தன்னுடைய இரத்தவெறியைத் பரப்பிவிடுவதில் தோல்வியுற்றபின், செய்தி ஊடகம், அனைத்து தடுப்புணர்வையும் இழந்துள்ளதோடு, கண்ணியத்தையும் காப்பாற்றிக்கொள்ளவில்லை என்பதையும் கூறத்தேவையில்லை.

"கொல்லுக", "சித்திரவதைப்படுத்துக", மற்றும் "மரணம்" போன்ற பேச்சுக்கள்தான் காற்றலைகளிலும், செய்தித்த தாள்களின் பத்திகளிலும் நிறைந்திருக்கின்றன. செய்தி ஊடகம் முழுவதும், ஒரு கொலைவெறித் தொத்துவியாதி பரந்து நிற்பதுபோன்ற தோற்றம்தான் காணப்படுகிறது. எவருமே இதற்கு விதிவிலக்கல்ல போலும். எப்பொழுதும் நெறிமுறைகளுடன் வரம்பிற்கு உட்பட்டிருக்கும், National Public Radio உடைய, புதிய இங்கிலாந்தில் முறையாக ரோஜாவை எவ்வாறு வளர்ப்பது என்று அடிக்கடி நாம் பேசக் கேட்டிருக்கும் Diane Rehm கூட, தன்னுடைய செவ்வாய்க்கிழமைக் காலை உரையில், ஹூசைனை எத்தகைய சிறந்தமுறையில் தீர்த்துக்கட்டுவது நல்லது என்பதைப்பற்றிய ஆய்வினைக் கொண்டிருந்தார். அவருடைய விருந்தினர்களில் ஒருவராக, ஹென்றி கிசிங்கரும் இருந்தார்; தன்னுடைய வரையற்ற கடந்தகாலத்தையொட்டியோ என்னவோ, ஈராக்கியத்தலைவருக்கு மரணதண்டனை பற்றி திருமதி ரெஹ்மைவிட, குறைவான உற்சாகத்தைத்தான், கிசிங்கர் காட்டினார்.

பலமாதங்கள் தன்னைத் துரத்துபவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளில், நிலத்தடிக்குள் வெறுமே படுக்கக்கூட முடியாத பொந்து ஒன்றுக்குள் இருக்க வேண்டிய இழிந்த நிலைமைகளுக்குத் தள்ளப்பட்டுவிட்ட ஹூசைன் பற்றி, அமெரிக்கச் செய்தி ஊடகம் மிகுந்த வெறுக்கத்தக்க நிலைமைகளைக் காட்டியுள்ளது. தொலைபேசிமூலம்கூட ஒருவரிடமும் அவர் தொடர்பு கொண்டிருந்திருக்க முடியாது.

மேற்கு வேர்ஜீனியாவின், ஜனநாயகக்கட்சி செனட் உறுப்பினரும், செனட் மன்றத்தின் உளவுத்துறைக்குழுத் துணைத் தலைவருமான, ஜே ராக்பெல்லர்: "இந்த இடத்தையும், கைப்பற்றப்பட்ட சூழ்நிலையையும் பார்க்கும்போது, சதாம் எதிர்ப்பியக்கத்தை நிர்வகிக்கவில்லை என்பதும், அவரிடம் அதிக அதிகாரக்கட்டுப்பாடோ அல்லது செல்வாக்கோ இருந்திருக்க முடியாதென்பதும் தெளிவாகிறது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் கவலை அளிப்பதும் ஆகும்; ஏனென்றால் எதிர்ப்பாளர்கள் அமெரிக்காவை எதிர்த்துப் போராடுகின்றனர் என்றுதான் பொருளே ஒழிய சதாமுக்காக அல்ல என்பது அர்த்தமாகிறது." என ஒப்புக்கொண்டார்.

உண்மையில், நாட்டின் தேசிய எதிர்ப்பு அதன் ஒற்றுமையின் "அடையாளத்தை" இழந்துவிட்டது என்று கூறப்பட்டாலும்கூட, அமெரிக்கப் படைகளின்மீதும், அவர்களுடன் ஒத்துழைக்கும் ஈராக்கியர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்து விடவில்லை. அதுவும் அவர் ஒற்றுமையின் அடையாளமாக இருந்தார் என்று கூறப்படுவதும் ஐயத்திற்குரிய கருத்தேயாகும். அக்கருத்துக்கு மாறாக, பல ஈராக்கியர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பின் எதிர்ப்பாளர்கள் பக்கம் சேரத்தயங்கிய காரணமே, அவர்களை "ஹூசைன் சார்புடையவர்" என்ற பூச்சுக்கு உட்படுத்திவிடுவார்கள் என்ற பயம்தான் என்று பல பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈராக்கியரும், அமெரிக்கப் படைவீரர்களும் தொடர்ந்து உயிரிழந்த வண்ணம்தான் இருக்கின்றனர்.அமெரிக்கப் படையினர் பிரித்துப்பாராது குண்டுத்தாக்குதல் மூலம் சமராவின் மத்தியபகுதியில் உறுதிசெய்யப்படாத எண்ணிக்கையில் அருகிலிருந்த சாதாரணக்குடிமக்களைக் கொன்றிருந்த, நவம்பர் 30 படுகொலையை நினைவுறுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அதே நகரத்தில் டிசம்பர் 15 அன்றும் அமெரிக்கப் படைகள் 11 "சதாமின் விசுவாசிகள்" என்று கருதப்பட்டவர்களைக் கொன்றன. எப்பொழுதெல்லாம் நிரபராதியான மக்கள் தரையில் இறந்து வீழ்ந்து காணப்படுகிறார்களோ, அப்பொழுதெல்லாம், எதிர்ப்பாளர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறும் குழந்தைகளை "மறைப்புத் தடுப்பாகக்" கொண்டு தாக்க முற்பட்டபோது அமெரிக்கப்படைகள் பாதுகாப்பை மேற்கொண்டன என்று கூறப்படுவதை ஒருவர் ஏற்கவேண்டும் என்று ஆகியுள்ளது. ஓர் அமெரிக்க வீரர், செவ்வாயன்று பாக்தாத்தின் வடக்கே இராணுவ வாகனத் தொடர் ஒன்று சாலையோர வெடிகுண்டால் தாக்கப்பட்டபோது இறந்து போனார்; திக்கிரித்தில் ஒரு வெடிப்புச் சம்பவத்தில் மூன்று அமெரிக்கர்கள் காயமுற்றனர்.

மனநலம் குன்றிய விடையிறுப்பு

ஹூசைனின் கைது, அமெரிக்கச் செய்தி ஊடகத்தினால் மிகுந்த அதிகாரச் செருக்குடனும், "மிகைப்படுத்தப்பட்ட பரபரப்புடனும்" வெளியிடப்பட்டது ஒரு நோய்க்குறித் தன்மையைத்தான் கொண்டிருக்கிறது. மிக இழிந்த, சமநோக்கற்ற இடங்களைத்தவிர, மற்ற இடங்களில் எதிர்பார்க்கப் பட்ட விளைவு இல்லாத நிலைக்கு, அது இன்னமும் கூடுதலாக எதிர்விகிதத்தில் தடையற்றுப் பரபரப்பைக் காட்டியது. பலரும் அரசியலளவில் அல்லது ஒழுக்கநெறி அளவில் குழம்பியிருந்தாலும், அமெரிக்காவில் அத்தகைய நிலைமை உறுதியாக இருந்தாலும், சதாம் ஹூசைன் கண்டுபிடிக்கப்பட்டது, பொதுமக்களிடையே மின்தாக்குதல் அதிர்ச்சி போன்ற விளைவு எழுச்சியைக் காட்டிவிடவில்லை.

அமெரிக்காவில் பொதுவான பிரதிபலிப்பு, மரத்துப்போன பொருட்படுத்தாத நிலைதான். சிந்திக்கும் எவரும், ஹூசைன் பிடிபட்டது ஈராக்கிலோ அல்லது அமெரிக்காவிலோ மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பவில்லை.

செய்தி ஊடகம் மடைதிறந்தாற்போல் செய்திகளை வெளியிட திடுதிப்பென அழுத்தம் மிகுவது, எதிர்ப்பின் தன்மையைக் குறிகாட்டுகிறது. அவை எதிர்பார்க்கின்ற பொதுமக்களிடமிருந்து விளைவு கிடைக்கவில்லை என்றால், குரல்கள் இன்னும் அதிகமாக உரக்கக் கிறீச்சிட்டு உயரும். அமெரிக்காவில் மக்களிடையே சந்தேகத்தையும், எதிர்ப்பு உணர்வையும் பிரச்சாரங்கள் உடைத்துத் தகர்க்க முடியவில்லை. மக்களுடைய ஐயுறவாதம் "தகர்ப்பதற்கு கடினமாக உள்ளது" என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முழு சட்டவிரோதமான படையெடுப்பு, ஈராக்கிய ஆக்கிரமிப்பு அனைத்தையும் நியாயப்படுத்துவதுபோல், ஹூசைனைக் கைது செய்யப்பட்டுள்ளது செய்தியாக அளிக்கப்படுகிறது. ஈராக்கிய ஆட்சியின் பேரழிவு ஆயுதங்களிலிருந்து பாதுகாப்பு போர் மட்டும்தான் என்ற கருத்துத்தான் மக்களிடையே "விற்பனை" செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன், இப்பொழுது அது ஒரு வெறும் நம்பிக்கையற்ற பிரச்சாரக்கருவிதான் என்று அனைவருமே பரவலாக அறிவர்.

பேரழிவு ஆயுதங்கள், ஈராக்- அல்கொய்தா தொடர்பு, அமெரிக்க க்ரூஸ் ஏவுகணைகள், பிராட்லி போரிடும் வாகனங்கள் இவற்றின் மூலம் "விடுவிக்கப்படவேண்டும்" என்ற ஈராக்கிய மக்களின் விருப்பம் என்பது பற்றிய அமெரிக்க ஊடகம் மற்றும் அரசியல் நிறுவனங்களின் அனைத்து கூற்றுக்களையும் வாதங்களையும், போரின் போக்கு மதிப்புக்குறைவிற்கு உட்படுத்தியுள்ளது.

செய்தி ஊடகமும், அரசாங்கமும் இவற்றின் விளைவுகளுக்குக் கண்ணைமூடிக் கொண்டு பாராமல் இருந்தாலும், மக்களுடைய நனவில் இவை தாக்கத்தைக் கொண்டுள்ளவையாகும். ஒருவர் அரசாங்கப் புள்ளி விவரங்களை தீவிர நம்பிக்கையுடன் எடுத்துக்கொள்வாரேயானாலும் கூட, 40 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மக்கள் போரை எதிர்க்கத்தான் செய்கின்றனர்.

அமெரிக்க மக்கட்தொகையின் பரந்த தட்டுக்கள், உள்ளுணர்விலேயே, ஈராக்கியப் போரைப்பற்றி ஊழல் மலிந்தது, கறைபடிந்தது என்றுதான் "நுகர்ந்துள்ளனர்"; இது எண்ணெய், பெருநிதி பற்றிய பூசல் என்றும், புஷ் மற்றும் கார்ப்பொரேட் அமெரிக்காவிலுள்ள அவருடைய நண்பர்களால் தங்கள் நலனுக்காகத் தாங்களே, தொடுத்த போர் என்றே அறிவர். 1983 டிசம்பர் மாதம் ரொனால்ட் றேகனுடைய பிரதிநிதியாக டோனால்ட் ரம்ஸ்பெல்ட் ஹூசைனைச் சந்தித்தது உட்பட, அமெரிக்க-ஈராக்கிய உறவுகள் 1980களில் எவ்வாறு இருந்தன என்பது பற்றி பலரும் அறிவர். அமெரிக்காவின் "நண்பர்களில்" ஒருவராகத்தான் ஹூசைன் இருந்தார் என்பதையும், பின்னர் அமெரிக்காவின் புவிசார்-அரசியல் பேரவாக்களுக்கு ஒவ்வாத விரோதியாகப் போனார் என்பதையும் அனைவரும் அறிவர்.

ஹிட்லரோ, முசோலினியோ தங்கள் விதியைச் சந்தித்த பொழுது, பூகோளம் முழுவதும் உண்மையான மக்கள் ஆரவாரக் கொண்டாட்டம் இருந்தது. இவர்கள் ஜனநாயகம் மற்றும் உழைக்கும் மக்களின் சீற்றம்வாய்ந்த விரோதிகள் என்று உணரப்பட்டிருந்தனர். இந்த வகையில் எளிதாய் சேர்க்க முடியாத, ஒரு சிறிய, வளர்ச்சியடையாத நாட்டின் சர்வாதிகாரியாகத்தான் சதாம் ஹூசைன் இருந்தார்.

செய்தி ஊடகம், முக்கியமான உண்மைகளைப் பற்றி பொய்கூறியும், மறைத்தும் தகவல்கள் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும், உண்மை, அதில் சில பகுதிகளாவது மக்களின் சில பகுதிகளுக்குக் கசிந்து சென்று அடைந்துள்ளது. மில்லியன் கணக்கான மக்களுடைய பொருளாதாரக் கஷ்டநிலை, நிறைந்த செல்வம் உடையவர்கள் இதுகாறும் இல்லாத முறையில் வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர் என்ற உணர்வோடு சேர்ந்து கொண்டு, அமெரிக்க மக்களுடையே குருட்டுத்தனமான தேசபக்த நம்பிக்கையை மதிப்புக்குறைவிற்கு உட்படுத்திவிட்டது.

செய்தி ஊடக வெளியீடானது, வெள்ளை மாளிகையில் வசிக்கும் மனிதரைப் போலவே நோயுற்றதாகவும், அருவருப்பூட்டுவதாகவும், பழிவாங்கும் உணர்வு கொண்டுள்ளதாகவும் இருக்கிறது.

திங்களன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் கூறிய கருத்துக்களும், எதிர்பார்த்ததைப்போலவே முட்டாள்தனமாகவும், பொய்யாகவும்தான் இருந்தன. இவர் ஹுசைன் "ஒழிந்தது நல்லதே" எனக்கூறி; " மிஸ்டர் சதாம் ஹூசைன், நீங்கள் இல்லாவிட்டால் உலகம் நன்றாகவே இயங்கும். உங்கள் மீது சூடு படரத் தொடங்கியவுடன், நீங்கள் ஒரு பொந்து ஒன்றைத் தோண்டி அதற்குள் ஊர்ந்துவிட்டீர்கள் என்பதை அறிய வேடிக்கையாக இருக்கிறது. எங்கள் வீரமிகுந்த படையினர், நல்ல புத்திசாலித்தனத்துடன், உங்களைக் கண்டு பிடித்துவிட்டனர். நீங்கள், உங்களுடைய நாட்டிலேயே மக்களை மிருகத்தனமாக நடத்தி அவர்களுக்கு வழங்காத, நியாயத்தின்முன் நிறுத்தப்படுவீர்கள்." என தெரிவித்தார்

மனித ஆளுமை விதங்களில் பிறரை விரட்டும், ஒழுக்க அளவில் நலிந்த, பிறர் துன்பத்தில் இன்பம் காணும் புஷ், பழைய ஈராக்கிய ஜனாதிபதியைவிட உயர்ந்தவரா? உண்மையில் இடம் கொடுத்து வீம்புக்குணம் நிறைந்துவிட்ட, திறமையற்ற பணக்காரக் குழந்தை, குடும்பச் சூழ்நிலை, தனித்தொடர்புகள் இவற்றால் மட்டுமே அடைந்த "வெற்றி" என்பதைக் கொண்ட சமுதாயப்பிரிவில் இருக்கும் புஷ், ஹூசைனின், இப்பொழுது இறந்துவிட்ட அவருடைய இருமகன்கள் உட்பட, தனிவட்டத்தில் இருந்த ஈராக்கிய ஆளும் வட்டத்திலிருந்த ஊழல் மிகுந்த கூறுபாடுகளிலிருந்து பெரிதும் வேறுபட்டவர் அல்லர்; புஷ்ஷிடம் இப்பொழுது கூடுதலான இராணுவப்படைகள் இருக்கின்றன. அதைத்தவிர, ...

அமெரிக்க ஜனாதிபதி, ஹூசைனை, "ஏமாற்றுக்காரர், அவர் ஒரு பொய்யர்" என்று கூறியுள்ளார். ஆனால் யார் பொய்யர்?

தன்னிடம் பேரழிவு ஆயுதங்கள் கிடையாது என்றும், தனக்கும் ஓசாமா பின் லேடனுக்கும் தொடர்பு கிடையாது என்றும் ஹூசைன் கூறியிருந்தார். இப்பிரச்சினையில் அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். மாறாக, மார்ச் 8ம் தேதி 2003ல், தன்னுடைய வாராந்திர வானொலி உரையில், ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்: "ஈராக்கியச் சர்வாதிகாரி வெளிப்படையாகத் தடைசெய்யப்பட்ட சில ஏவுகணைகளை உற்பத்திசெய்து, அழித்துள்ளார். ஆயினும் நம்முடைய உளவுத்துறை அறிக்கைகளின்படி, இந்தச்சில ஏவுகணைகளை அழித்துக்கொண்டிருக்கும் போதே, அவர் அதேபோன்ற ஏவுகணைகள் உற்பத்திசெய்வதற்கு உத்திரவிட்டுள்ளார். ஈராக்கிய அதிகாரிகள் ஆயுத ஆய்வாளர்களுடன், ஒவ்வொரு 12-லிருந்து 24 மணிநேரத்திற்குள் வேறு வேறு இடங்களுக்கு சந்தேகப்படும் பொருட்களை நகர்த்தும் செல் (shell) விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஈராக்கிய ஆயுத விஞ்ஞானிகள், ஐ.நா.ஆய்வாளர்களுடன் உடன் ஒத்துழைத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளனர்" என அறிவித்தார்.

புஷ் பொய்கூறிக் கொண்டிருந்தார், அவருக்கு அது தெரியும் என்பது மட்டுமல்லாமல், அவருடைய குற்றஞ்சார்ந்த ஆட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். படையெடுப்பு தொடங்குவதற்குச் சில நாட்கள் முன்பு, மார்ச் 15ம் தேதி அன்று, அமெரிக்க ஜனாதிபதி: "முந்தைய ஆயுதங்கள் ஆய்வுகளிலிருந்து, மில்லியன்கள் கணக்கில் மக்கள் உயிரைக் குடிக்கக்கூடிய, கடுகு ஊக்கிகள், பொடுலினம் டாக்சின், சரின் போன்றவை உட்பட சதாம் பெரிய அளவு உயிரியல், இரசாயன கிரியா ஊக்கிகளுக்குக், கணக்குச் சொல்லமுடியாமல் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். ஈராக்கிய ஆட்சி பயங்கரவாதத்தை புரக்கவும், நிதியளிக்கவும் திட்டங்கள் கொண்டுள்ளது என்பது தெரியும். அந்த ஆட்சி, மனிதக் கேடயம் போல், இராணுவத் தளவாட இடங்களைச் சுற்றிக் குற்றமற்ற மக்களை இருத்த இருக்கின்றது என்பதையும் நாம் அறிவோம்." எனக் கூறினார்.

அனைத்தும் பொய்கள்

அமெரிக்க ஆட்சி, ஹூசைனைப் பிடித்ததற்கு ஆவேசமான இறுமாப்புடன் நடந்து கொள்ளும் முறை, பலவற்றை வெளிப்படையாகவே புலப்படுத்துகிறது. அருவருப்பூட்டும், தடையற்ற கொண்டாட்டத்திற்குள், மிகப் பெரிய அளவில் போரின் போக்கு, எதிர்பாராத கஷ்டங்கள், தடைகள், ஈராக்கிய மக்களின் எதிர்ப்புக்கள், அமெரிக்க மக்களிடையே உற்சாகமின்மை இவற்றால் விளைந்த பெரும் ஏமாற்றத்தின் குவிப்புக்கள் அடங்கியியுள்ளன.

இதையும் தாண்டி, வெளிப்படுவது அமெரிக்க முதலாளித்துவத்தின் தன்மை, அதன் இதயத்தளத்தில் அயோக்கியத்தனமான முரட்டுத்தனம் ஆகும். மொத்தத்தில் ஈராக்கிய ஜனாதிபதியுடைய முக்கிய குற்றங்களுள் ஒன்று என்ன? அமெரிக்காவை அலட்சியம் செய்தார், புஷ், மூத்தவர், இளையவர் என்று இரண்டுபேரையும் துச்சமாக மதித்தார், மற்றவர்களுக்கு அப்படிச் செய்யமுடியும் என்று வழிகாட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் மன்னிக்கப்படமாட்டாதவை. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு: "அமெரிக்க ஏகாதிபத்தியம், இரக்கமற்ற கொடூரத்தன்மை, கொள்ளைமுறை, சொல்லின் முழுப்பொருளில் குற்றமும் நிறைந்தது என்பதுதான் சாராம்சம் ஆகும்." எனக் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார்.

"முறைமையான" அமெரிக்க வணிகத்திற்கும், கொள்ளைக்கூட்டத்திற்கும் இடையே உள்ள பிரிவு தள்ளிவிடக் கூடிய அளவு குறைவாகப் போய்விட்டது; அதாவது இப்பொழுது அதன் அளவு மைக்ரான்களில்தான் கணக்கிடப்பட முடியும் என்று ஆகியுள்ளது. ஹூசைன் கைப்பற்றப்பட்டது பற்றிய, இழிவான ஆர்ப்பாட்டம், பழைய ஈராக்கிய ஜனாதிபதியைவிட, அவர் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பேரழிவை விட, மத்தியகிழக்கு புவிசார் அரசியலைவிட, அமெரிக்க மக்களுடைய ஆளும் செல்வந்த தட்டினரைப் பற்றிக் கூடுதலாகத் தெரிவிக்கிறது.

ஒரு கேள்வி கட்டாயமாகக் கேட்கப்படவேண்டியதாக இருக்கிறது: ஹூசைனுக்குப் பின் அடுத்த இலக்கு யார்? எந்த அயல்நாட்டுத்தலைவர், பெரும்பாலன அமெரிக்க மக்களுக்கு இப்பொழுது தெரியாதவர், அரக்கன் என்று சித்தரித்துக் காட்டப்படப் போகிறார்? எவருக்கு எதிராக, மிகப்பரந்த, அறியாமை நிறைந்த, வன்முறையை கக்கும் பிரச்சார இயந்திரம் இயக்கப்படப் போகிறது? அடுத்ததாக எந்த விரும்பத்தகா நாடு பல்லாயிரக் கணக்கான அமெரிக்கப் படைகளால் "விடுவிக்கப்படுவதற்கு" காத்திருக்கிறது? ஏற்கனவே திட்டங்கள் தயாரிக்கப் பட்டுவிட்டன என்பது மட்டும் உறுதி.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved