World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: The anti-Muslim campaign and the phony debate on secularism

பிரான்ஸ்: முஸ்லீம்களுக்கு எதிரான இயக்கமும் மதசார்பின்மை பற்றிய போலி விவாதங்களும்

By Alex. Lefebvre
13 August 2003

Back to screen version

வெளிநாடுகளிலிருந்து குடியேறிவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற புறநகர் பகுதிகளில் தீவிரமான சமுதாய நெருக்கடி தோன்றி இருப்பதாலும் அத்துடன் ஈராக் போரின் விளைவாக முஸ்லீம் மக்களது கருத்துக்களில் வெடித்துச் சிதறும் கொந்தளிப்புக்கள் உருவாகி இருப்பதும் இணைந்துவிட்டதால் ஏற்பட்டுவிட்ட சிக்கலை சந்திப்பதற்காக பிரதமர் ஜோன்-பியர் ரஃபாரன் (Jean-Pierre Raffarin) பிரான்சு நாட்டு முஸ்லீம்களை கட்டுப்படுத்தவும், அச்சுறுத்தவும் முயன்று வருகிறார்.

ஏற்கனவே, உலக சோசலிச வலைத் தளம் ரஃபாரன் அரசின் பிற்போக்குத்தனமான பாதுகாப்புச் சட்டங்கள், அதன் மூலம் கடுமையான சிறை தண்டனைகள் விதிப்பது, அற்பமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு குற்றங்களுக்கு அபராதங்களை விதிப்பது ஆகியவற்றிற்கு எதிராக எழுதியுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஏழைகள் வாழ்ந்து கொண்டிருக்கிற புறநகர் பகுதிகளில் மக்களுக்கு எதிராக போலீசார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக இது போன்ற தீவிர சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. கட்டுரையைக் காண்க [ New powers proposed for French police, The budget and penal reform in France: an acceleration of reaction].

இதுதவிர 2002-ல் பிரான்சின் உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோஸி பிரெஞ்சு முஸ்லீம்களுக்கான கவுன்சில் (சிஷீஸீsமீவீறீ திக்ஷீணீஸீஃணீவீs பீu சிuறீtமீ விusuறீனீணீஸீசிதிசிவி) அமைக்க நடவடிக்கையை தொடக்கினார். 2002- டிசம்பர் 20-ந்தேதி உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த மாநாட்டில் மூன்று பெரிய முஸ்லீம் அமைப்புகள் பங்கெடுத்துக் கொண்டன. பாரிஸ் மசூதி, பிரான்ஸ் முஸ்லீம்களின் தேசிய சம்மேளனம் (FNMF) பிரான்ஸ் முஸ்லீம் அமைப்புக்களின் யூனியன் (UOIF) ஆகியவை CFCM- அமைப்பது பற்றி அதன் கட்டுக்கோப்பு தொடர்பாக சார்க்கோஸியுடன் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்தின.

அரசாங்கச் செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டி இருப்பதைப்போல் இந்தக் கவுன்சில் பெருகிவரும் முஸ்லீம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு காலத்திற்கேற்ற வசதியான அமைப்பாக ஆளும் வர்க்கங்கள் கருதுகின்றன. ''CFCM- உருவாக்கப்பட்டிருப்பது பிரான்ஸ் நாட்டில் முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதுடன் பிரெஞ்சு அரசாங்க பேச்சு வார்த்தையில் இயல்பான பங்குதாரராக கலந்து கொள்ள முடியும். பிரான்ஸ் நாட்டு இஸ்லாத்தின் தன்மை மறைமுகமாக தீவிரப்படுத்தலின் ஒரு மூல ஆதாரமாக உள்ளது. அதை மாற்றுவதற்காகத்தான் இந்த ஏற்பாடு'' என பத்திரிகைக் குறிப்பு விளக்குகிறது.

CFCM- அரசாங்கம் உருவாக்கிய ஒரு அமைப்பு இயற்கையாக உருவானது அல்ல. முஸ்லீம் சமுதாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை ஒரு வழியாகப் பயன்படுத்தியது. சார்கோஸி ஏராளமான CFCM- அதிகாரிகளை நியமித்தார். அரசாங்கமே ஒப்புக்கொண்டபடி 25%- பதவிகளை அமைச்சர் நியமித்தார். என்றாலும் சில முஸ்லீம் அமைப்புகள் கொடுத்திருக்கும் தகவலின்படி இதைவிட அதிக அளவிற்கே நியமித்திருப்பார்கள். ''தேர்ந்தெடுக்கப்படும்'' பதவிகள் முஸ்லீம் சமுதாயத்தின் பொது வாக்குப்பதிவினால் தேர்ந்தெடுக்கப்படுபவை அல்ல. ஆனால் ஒவ்வொரு மசூதியின் பிரதிநிதிகளாலும் தேர்ந்தெடுக்கப்படும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

CFCM- அமைப்பின் மூன்று உயர்ந்த பதவிகளையும் (தலைவர், மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் இரண்டு துணைத்தலைவர்கள்) டிசம்பர் 20-ந்தேதி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட மூன்று அமைப்புகளின் தலைவர்களுக்கும் அமைச்சர் சார்கோஸி கொடுத்துவிட்டார். பிரான்சின் அரசியல் நிர்வாகத்திற்கு இடம் பெற்றுள்ள சிலர் இந்த மோசடி நியமனக் கவுன்சிலும் கூட அரசியல் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று கருதுகின்றனர். குறிப்பாக UOIF- க்கு உள்ள அடிப்படைவாதத் தொடர்புகள் கட்டுப்படுத்துவதற்கு சங்கடமாக உருவாகலாம் என்ற கவலைகள் தெரிவிக்கப்பட்டன. சென்ற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற CFCM- தேர்தல்களில் UOIF- கணிசமான ஆதரவைப்பெறுகிற அளவிற்கு வெற்றி பெற்றதும் இந்தக் கவலைகள் அதிகரித்தன.

ஏப்ரல் 19-ந் தேதி சார்கோஸி UOIF- அமைப்பின் 20-வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பாரிஸ் வடக்குப்புற நகரான லு பூர்ஜே (Le Bourget) பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எந்த ஒரு பிரெஞ்சுக் குடிமகனையும் போல் முஸ்லீம்களும் தங்களது மதத்தைக் கடைப்பிடிக்க உரிமை படைத்தவர்கள் என்று அவர் பேசியபோது மகிழ்ச்சி ஆரவாரத்தோடு கைத்தட்டி வரவேற்ற முஸ்லீம்கள், முஸ்லீம் பெண்கள் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும்போது தலையில் ''முக்காடு'' எதுவும் அணியக்கூடாது என்று சார்கோஸி கூறியதும், அவருக்கு எதிராக கூக்குரல் எழுப்பினர்.

அதற்குப் பின்னர் விரிவான அடிப்படையில் அமைந்த அரசியல் வட்டாரங்கள், முஸ்லீம்களுக்கு எதிராக பத்திரிகைகளில் இயக்கத்தை நடத்தின. மிகவும் குறிப்பாக பொதுப்பள்ளிக் கூடங்களில் (அரசாங்கம்) ''முக்காடுகள்'' அணிவதற்கு எதிராக இயக்கம் நடத்தினர். பகிரங்கமாக குடியேறிய மக்களுக்கு எதிராக இத்தகைய இயக்கம் நடத்தப்பட்டால் பொதுமக்களது எதிர்ப்பு தூண்டி விடப்படலாம் எனக் கருதி இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்கள் ''மதச்சார்பின்மை'' முழக்கத்தின் கீழ் இதை நடத்தினர். ''மதச்சார்பின்மை'' என்ற சொல் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் நடைபெற்ற கிறிஸ்த்தவ தேவாலயங்களுக்கு எதிரான சமூக கிளர்ச்சிகளிலிருந்து உருவானதாகும். 1905-ம் ஆண்டு அரசையும், மதத்தையும் பிரித்துவைக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதை மீறுகின்ற வகையில் அரசாங்கப் பள்ளிகள் போன்ற அமைப்புக்களில் முக்காடு அணியக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள்.

பிரான்சுவா பரோயின் (François Baroin) மே-24-ல் லு பிகாரோ பத்திரிகையில் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்த மனப்போக்கை நியாயமாக எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஆளும் கன்சர்வேட்டிவ் UMP- கட்சியின் பிரதிநியான பரோயின், பிரதமர் ரஃபாரன் வேண்டுகோளை ஏற்று அவர் ''மதச்சார்பின்மை'' தொடர்பான ஒரு அறிக்கையைத் தயாரித்தார்.

அவர் அறிவித்தார்: ''ஏப்ரல் 21-2002- அதிர்ச்சிக்குப் பதிலளிக்கும் வகையில் (அப்போது புதிய பாசிச வேட்பாளர் லு பென், குடியரசுத் தலைவர் தேர்தலின் முதல் சுற்றில் சோசலிஸ்டுக் கட்சி வேட்பாளர் ஜோஸ்பனைத் தோற்கடித்தார். UMP- வேட்பாளர் சிராக்கை இரண்டாவது சுற்றில் சந்திக்கவிருக்கிறார்.) நமது நாடு தனது உயர்ந்த நெறிகளை மீண்டும் வலியுறுத்த வேண்டும். ஜனநாயகத்தில் உருவாகும் பிளவுகளுக்கு சமுதாயப் புறக்கணிப்பிற்கு எதிராக போரிட்டு நமது கொள்கைகளை அதன் தனித்தன்மைகளை நிலைநாட்டும் அரசியல், மதச்சார்பின்மை திட்டத்தை அதன் மனிதநேய மற்றும் அரசியல் பரிணாமங்களோடு சந்திக்கிற நிலை இப்போது உருவாகியுள்ளது.'' அரசாங்கப் பள்ளிகளில் முக்காடு அணிவதற்குத் தடை விதிக்கவும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவுவதைத் தடுக்கவும் கண்காணிக்கப்படவேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்.

அத்தகைய தடையை நியாயப்படுத்துவது மேலெழுந்தவாரியாக பார்க்கும்போதே அபத்தமானது என்பது தெளிவாகிறது. 2002-ஏப்ரலில் லு-பென் வெற்றி பெற்றதால் உருவான அரசியல் முன்னோக்கு நெருக்கடியை அவரது வழக்கமான ''பலியாட்டுக் கொள்கையை'' அரசாங்கமே நிறைவேற்றுவதன் மூலம் தீர்த்து வைத்துவிட முடியாது. இந்தக் கொள்கையால் லு-பென் உருவாக்கிய மாயத்தோற்றம் வளரும், அவரது ஆவேசப் பேச்சு நியாயப்படுத்தப்பட்டதாக ஆகும்.

உத்தேசத்தடை தெளிவான முரண்பாட்டைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. கிறிஸ்த்தவ தேவாலயங்களையும், அரசையும் முதலில் அரசியல் கட்டுக்கோப்பிலிருந்து பிரித்து வைத்தது மத உரிமையையும், தனிமனித மனசாட்சி உரிமையையும் நிலைநாட்டுவதற்காகத்தான். இப்போது அதையே மத சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய தவறான வரலாற்றுக்கு முரண்பட்ட மதச்சார்பற்ற பாரம்பரியம் பற்றிய கண்ணோட்டம் சில நேரங்களில் வேதனைச் சிரிப்பாகவும் அமைந்து விடுகிறது. செனட் சபை தலைவர் கிறிஸ்ரியன் பொன்ஸ்செலட் (Christian Poncelet) முக்காடு அணிந்த பெண்ணை செனட் சபைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார். அவரது தலைமை பாதுகாப்பு அலுவலர் அலன் மேயார் (Alain Méar), செனட் சபைத் தலைவரின் நடவடிக்கை சரிதான் என வாதிட்டார். லு-மொன்ட் பத்திகைக்கு அளித்த பேட்டியில் அதன் மதச்சார்பற்ற தன்மையின் இயல்பிற்கு ஏற்ப செனட் ஒரு ''புனிதமான இடம்'' என தலைமை பாதுகாப்பு அலுவலர் குறிப்பிட்டார்.

''மதச்சார்பற்ற'' முக்காட்டிற்கு எதிரான இயக்கம் பிரெஞ்சு அரசியலின் இரண்டு முக்கிய கட்சிகளின் ஆதரவையும் பெற்றிருக்கிறது. ரஃபரன் பல அரசாங்க அதிகாரிகள் உள்ளூர் சுதந்திர உரிமைகள் அமைச்சர் பேட்ரிக் டிவெட்ஜான் UMP- பிரதிநிதி ரீனாட் டோனெடு-டி வேபர்ஸ் கல்வி அமைச்சர் லுக் பெரி (Local Liberties Minister Patrick Devedjian, UMP spokesman Renaud Donnedieu de Vabres, Education Minister Luc Ferry), மற்றும் பெரும்பான்மைக் கட்சி சட்டமியற்றுபவர்களான பரோயின் எரிக் ராஊல் பாராளுமன்றத் தலைவர் ஜோன் லூயி தெப்ரே (Baroin, Eric Raoult, and National Assembly president Jean-Louis Debré) ஆகியோர் அரசாங்கப் பள்ளிகளில் முக்காடு அணிவதற்கு எதிராக சட்டம் இயற்றுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எதிர்கட்சி தரப்பில் சோசலிஸ்டுக் கட்சித் தலைவர் (PS) லோரோன் பபியஸ் (Laurent Fabius), கட்சியின் ''சுதந்திர சந்தை'' பிரிவைச் சார்ந்தவர். இவர் மே19-ந் தேதி கட்சி மாநாட்டில் பகட்டுக்கு அடையாளம் காட்டும் மதச்சின்னங்களுக்கு அரசாங்க அமைப்புக்களில் இடம் இல்லை, குறிப்பாக அரசியல் பள்ளிகளில் இடம் இல்லை'' என்று குறிப்பிட்டார். சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் பண்பாட்டு அமைச்சர் ஜாக் லாங் (Jack Lang) ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் என்று வெளிப்படையாக அடையாளம் காட்டும் சின்னங்களுக்கு தடைவிதிக்கும் சட்டம் தேவை என வலியுறுத்தினார். இதன் மூலம் இஸ்லாமிய அடிப்படை வாதம் பரவுவதைத் தடுக்க முடியும் எனக் கருத்துத் தெரிவித்தார்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் (PCF) மேரி ஜோர்ஜ் பஃபே (Marie-George Buffet), ''பள்ளிகளில் முஸ்லீம்கள் முக்காடு அணிவதற்குத்'' தடைவிதிக்கக் கோரினார். ''மதச்சார்பின்மைக்கு உறுதியான மரியாதை'' தேவை என அவர் கூறியதாக கம்யூனிஸ்ட் பத்திரிகை ''லுயூமனித்தே' '(l'Humanité) ஏப்ரல் 30-ந்தேதி செய்தி வெளியிட்டிருக்கிறது.

பிரான்சின் பிரதான கட்சிகளின் முன்னணிப் பிரதிகள் இந்த இன ஒதுக்கல் அடிப்படையிலான முயற்சிகளுக்கு ஆதரவு தந்திருப்பது தனிப்பட்ட அல்லது பிரதானமாக தனிமனித வெறுப்புணர்வுகளில் உருவானதல்ல. அடிப்படையிலேயே பிரெஞ்சு ஆளும் குழுவினர், சமுதாய அடிப்படையில் உழைக்கும் மக்களின் உரிமைகளைத் தாக்கி தகர்ப்பதில் உறுதி எடுத்து செயல்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறி ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மாற்றுத் திட்டம் எதையும் ஆளும் வர்க்கத்தால் தர முடியவில்லை. எனவே இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற பிற்போக்கு கண்ணோட்டங்கள் வளர்வதைத்தடுக்க இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர ஆளும் வர்க்கத்திற்கு வேறுவழியும் இல்லை. ஒரே வழி போலீஸ் ஒடுக்கு முறைதான். அதன் மூலம் முஸ்லீம் சமுதாயம், மேலும் விலகிச்செல்லும் மற்றும் அடிப்படைவாதிகளின் செல்வாக்கும் வளரும்.

அடிப்படைவாதத் தொடர்புகளுடன் முஸ்லீம் அமைப்புக்கள் வளர்ந்து வந்திருப்பது சோசலிஸ்டுக் கட்சியும் (PS) கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF) உழைக்கும் மக்களுக்குத் செய்த துரோகத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த இரண்டு கட்சிகளும், வலதுசாரிப்பக்கம் சாய்ந்து கொண்டு வருகின்றன. வலதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக பாரம்பரியமாக வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்கள், தங்களது உரிமைகளையும், வாழ்க்கை வசதிகளையும் நிலைநாட்ட தொழிலாளர் இயக்கங்களைத் தான் நம்புவார்கள். பிரான்சில் அவர்களுக்கு எந்தவிதமான அரசியல் ஆதரவாளர்களும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இஸ்லாமிய அமைப்புக்கள் மிகவும் குறிப்பாக UOIF -1980-களில் மிகவேகமாக வளரத் தொடங்கின. பிரான்சுவா மித்ரோன் அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்த PS மற்றும் PCF- தங்களது கடைசி சீர்திருத்த சுவடுகளையும் கைவிட்டு முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கின. உள்ளூர் PS மற்றும் PCF தலைவர்கள் குடியேறியவர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டனர்.

குறிப்பாக 1981 பெப்ரவரி ரோபேர்ட் உய் (Robert Hue) அண்மைக்காலம் வரை PCF- இன் பொதுச்செயலாளராக இருந்தவர் பாரிஸ் புறநகர் (Montigny-les-Vitrolles) ஒன்றில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையில் இனவெறிக் கும்பல் ஒன்று மொராக்கோவைச் சேர்ந்த ஒருவரது குடும்பத்தை அவரது வீட்டில் சுற்றி வளைத்துக் கொண்டதுடன், அவர்களை தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும்படி நிர்ப்பந்தித்தது.

இப்போது பிரான்ஸ் நாட்டு முஸ்லீம் சமுதாயத்தை குறிவைத்து தெளிவாக நடவடிக்கை எடுத்தாலும், ''மதச்சார்பற்ற'' இயக்கம் இறுதியாக உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எதிரானதாகவே அமையும். பொதுக்கல்வி தொடர்பாக ரஃபரன் அரசிற்கு இடதுசாரி தொனியில் முழக்கம் எழுப்பமுடிகிறது என்றாலும் அவர் தேசிய கல்விக் கட்டுக்கோப்பையே சிதைக்கும் வகையில் அதிகாரப் பரவல் திட்டம் என்ற முதல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார். ஓய்வூதியங்களை வெட்டி விட்டார்கள் வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டது. இப்போது ஆசிரியர்கள், மற்றும் உழைக்கும் அனைவரிடையேயும் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது. அரசியல் சுதந்திரத்தையும் 1905-ம் ஆண்டு மதச்சார்பற்ற சட்டத்தையும் காக்க முஸ்லீம்கள் மீது விரோதம் அல்லது சந்தேகம் கொள்ளவேண்டுமென்ற கருத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

புரட்சி பாரம்பரியத்தை தலைகீழாகப் புரட்டி கொச்சையாக்கினார்கள்

நடப்பு ''மதச்சார்பின்மை'' கிளர்ச்சியை ஆதரிப்பவர்கள் 1905-ன் சட்டத்தை எடுத்துவைப்பது அந்த ஜனநாயக நடவடிக்கையில் சமுதாய மற்றும் வரலாற்று அர்த்தத்தை தவறாகச் சித்தரித்துக் காட்டுவதாக ஆகும். 19-வது நூற்றாண்டுக் கடைசியில் மூன்றாவது குடியரசுக் காலத்தில் மதச்சார்பு இன்மைக்காகப் போராடியவர்கள் அதை ஒரு குறுகிய நோக்க முழக்கமாக எடுத்துவைக்கவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்த்தவ தேவாலய நிர்வாக முறை சமுதாய பிற்போகுத் தனத்தின் பிரதான அங்கமாக விளங்கியது என்பதை உணர்ந்தே மதச்சார்பற்ற இயக்கம் நடத்தப்பட்டது. உழைக்கும் மக்களது நலனைக் காப்பாற்றுவதற்காக கிறிஸ்தவ ஆலய நிர்வாக அமைப்புக்கள் அரச அதிகாரத்திலிருந்தும், பள்ளிக்கூடங்களிலிருந்தும் விலக்கிவைக்கப் படவேண்டுமென உழைக்கும் மக்கள் கோரினார்கள். 19-வது நூற்றாண்டின் கடைசி 30-ஆண்டுகளில் நடைபெற்ற சமுதாயக் கிளர்ச்சிகளோடு இந்தக் கருத்து பிணைந்திருந்ததுடன் சோசலிச இயக்கத்தின் தீவிர பங்கெடுப்புடன் அறியப்பட்டிருந்தது.

உலகின் முதலாவது தொழிலாளர் அரசான 1871-ம் ஆண்டு பாரிஸ் கம்யூன் அரசு, கிறிஸ்த்தவ தேவாலயங்களையும் அரசையும் பிரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டது. முந்திய மூன்றாவது நெப்போலியன் III அரசு பிரஸ்யாவுடன் ஒரு போரை கிளப்பிவிட்டு அந்தப் போரில் படுமோசமாக நாசம் தரும் வகையில் தோல்வியுற்றது. பேரரசை பிரஸ்யர்கள் பிடித்துக் கொண்டனர். பிரெஞ்சு அரசாங்கம் தெற்கு நோக்கித் தப்பியோடி வெர்சாய் (Versailles) இல் தன்னை அமர்த்திக்கொண்டது. பாரிஸ் நகரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்த நகரமக்களுக்கே வந்தது. நகரமக்கள் ஆயுதந்தாங்கி நகரைக் காத்து நின்று வெர்சாய் அரசாங்கப் பிரதிநிதிகளை வீழ்த்திவிட்டு 1871-மார்ச்சில் கம்யூனை பிரகடனப்படுத்தினர்.

அரசு, மத நிறுவனங்கள் தொடர்பான கேள்வியில், கம்யூன் பிறப்பித்த கட்டளை:- ''பிரெஞ்சு குடியரசின் முதலாவது கொள்கைகள் தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. தனிமனித சுதந்திரங்களிலேயே மனசாட்சி சுதந்திரம் தான் முதன்மையானது. மதத்திற்கு மானியம் வழங்குவது தார்மீக நெறிக்கு எதிரானது. மதம் குடிமக்கள் மீது அவர்களது நம்பிக்கைகளுக்கு விரோதமான நம்பிக்கையைத் திணிக்கிறது. சுதந்திரத்திற்கு எதிராக மன்னராட்சி புரிந்த குற்றங்களுக்கெல்லாம் மத போதகர்கள் உடந்தையாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். எனவே மதம் சம்பந்தமான பொருட்கள் அரசின்வசம் வருகின்றன'' மதச்சின்னங்களையும் வழிபாடுகளையும் பள்ளிகளில் தடை செய்யவும் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இன்றைய ''மதச்சார்பற்ற'' கிளர்ச்சி ஆதரவாளர்களைப் போலல்லாமல் ஆயுதந்தாங்கிய பாரிஸ் நகரத்து மக்கள் ஒரு குறிப்பிட்ட இனக்குழுக்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கவில்லை. அது வெளிப்படையான சர்வதேச இயக்கம். ஜேர்மன் தொழிலாளியான லியோ பிராங்கல் (Leo Frankel) தொழிலாளர் நல அமைச்சரானார், போலந்து நாட்டைச் சேந்த J.பிப்ரோஸ்கி, W.ராப்லெஸ்கி (யி. ஞிணீதீக்ஷீஷீஷ்sளீவீ ணீஸீபீ கீ. கீக்ஷீரதீறீமீsளீவீ) இருவரும் முக்கியமான இராணுவப் பதவிகளில் நியமிக்கப்பட்டனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை இப்படி முக்கியமான பதவிகளில் நியமிப்பதை நியாயப்படுத்தும் வகையில் ''கம்யூனின் கொடி உலகக் குடியரசின் கொடி'' என்று பிரகடனம் செய்தது. பாரிஸ் வென்டோம் (Vendôme Square) சதுக்கத்தில் நெப்போலியன் பிடித்த வெளிநாட்டு இராணுவங்களின் பீரங்களிலிருந்து கிடைத்த உலோகத்தால் வார்க்கப்பட்டிருந்த ''வெற்றித் தூணை'' கம்யூன் உருக்கி விட்டது. ஏனெனில் அந்த உலோகத்தூண் தேசிய வெறுப்புணர்வைத் தூண்டுவதாக இருந்தது.

கம்யூனின் கல்லறையில் தான் பாரிஸ் நகரத்திலிருந்து மூன்றாவது குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. வெர்சாய் அரசாங்கம், பாரிஸ் நகரத்தின்மீது குண்டு வீசித்தாக்கி நகரத்தைப் பிடித்துக்கொண்டு குடியரசின் ஆதரவாளர்கள் 20,000-பேருக்கு மேல்கொன்று குவித்தது. 1880-களில் பணக்கார முதலாளித்துவக் குழுக்கள் மூன்றாவது குடியரசில் அதிகாரத்தில் இருந்ததால் பொதுமக்களது நிர்பந்தங்களை ஏற்று அதற்கு முன்னர் தேவாலயங்கள் நடத்தி வந்த பல்வேறு அரசாங்க அமைப்புக்களை மதச்சார்பற்றவையாக அறிவித்தன. மருத்துவ மனைகள், மற்றும் கல்லறைகள் 1881-ல் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள், 1882-ல் மதத்திலிருந்து பிரிக்கப்பட்டன. 1884-ல் அரசாங்க நிகழ்ச்சிகளில் இறைவணக்கம் நீக்கப்பட்டது. 1884-ல் மணவிலக்குச் செய்யும் உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டது.

1905-சட்டம், ட்ரேஃபுஸ் விவகாரத்தைத் (Dreyfus affair) தொடர்ந்து இயற்றப்பட்டதாகும். 18-வது நூற்றாண்டில் இறுதியில் நடைபெற்ற திட்டவட்டமான அரசியல் நிகழ்ச்சி அது. இராணுவத்தின் உயர் மட்டத்தில் பெருமளவில் கத்தோலிக்கர்கள் அதிகாரிகளாக இருந்ததால், யூத அதிகாரியான ஆல்பிரட் ட்ரேஃபுஸ் மீது பொய் வழக்குத் தொடர்ந்தனர். அவர் ஜேர்மனிக்கு உளவாளியாகச் செயல்பட்டார் என குற்றம் சாட்டி 1894-ம் ஆண்டில் பாலைவனத்தீவு ஒன்றில் அவருக்கு ஆயுள் முழுவதும் தனிமைச்சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கத்தோலிக்க தேவாலயங்கள் அதன் பத்திரிகையில் பல கத்தோலிக்க குருமார்கள் ட்ரேஃபுஸ் உளவாளி என்றும் ஒரு யூதர் என்றும் குற்றம் சாட்டிவந்தனர். அறிவாளிகளும், சோசலிஸ்டுகளும் அவருக்காக நீண்ட கிளர்ச்சி நடத்திய பின்னர் ட்ரேஃபுஸ் தண்டனை 1900-த்தில் இரத்துச் செய்யப்பட்டது. பிரான்சின் முதன்மை மேல் முறையீட்டு நீதிமன்றம் அவர் மீது கூறப்பட்ட எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் இரத்து செய்தது. அவர் 1906-ல் முன்னர் பணியாற்றிய அதே நிலையில் இராணுவ அதிகாரி பதவியும் தரப்பட்டது. 1995-ம் ஆண்டுதான் பிரெஞ்சு இராணுவம் ட்ரேஃபுஸ் மீது தவறான குற்றச்சாட்டுக்களை கூறியது என்பது அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ட்ரேஃபுஸ் விவகாரத்தில் தேவாலயங்களின் பங்கு பற்றியும், பிற்போக்கு இராணுவ வட்டாரங்களோடு அவர்களுக்குள்ள தொடர்புகள் தொடர்பாகவும் பொது மக்களுக்கு கத்தோலிக்க மதகுரு பீடங்கள் தொடர்பாகவும் வெறுப்புணர்வு வளர்ந்தது. மற்றும் வேலை நிறுத்தங்கள் பெருகின. உழைக்கும் வர்க்கம் போர்க் குணம் பெற்றது. இந்தச் சாதகமான சூழ்நிலையில்தான் 1905-ன் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் அதிகாரபூர்வமாக பிரெஞ்சு அரசு மதத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

பிரெஞ்சின் மதச்சார்பற்ற நிலைக்கான கிளர்ச்சியை வலதுசாரிகள் தலைகீழாகப் புரட்டி கொச்சைப்படுத்த முயன்று வருகின்றனர். இதில் அவர்களது அகந்தைப்போக்கு அதிகமாகவே உள்ளது. ஆளும் பழமைவாத (கன்சர்வேடிவ்) UMP- கட்சிக்கு மன்னர் ஆதிக்கவாதிகளோடும், வலதுசாரி கத்தோலிக்க சக்திகளோடும், விரிவான தொடர்புகள் உள்ளன. சில முன்னணித்தலைவர்கள் ரஃபாரன் மற்றும் சார்கோஸி போன்றவர்ள் தாராளவாத வலது (Droite Libérale- DL) கட்சியிலிருந்து வந்தவர்கள். DL- கட்சியின் வரலாற்று ஆணிவேர் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற மதர்சார்பற்ற இயக்கங்களுக்கு எதிரான போக்கு கொண்டவர்களிடம் தான்.

சமூக அறிவியல் (சமூக விஞ்ஞான) உயர் படிப்புக்கான கல்விக்கூடத்தின் (EHESS) தலைவர் மார்ஷல் கோசே உடன்'' (Marcel Gauchet) லு பிகாரோ நடத்திய பேட்டி இன்றைய ஆளும் வர்க்கத்தில் மதச்சார்பற்ற அணியினரிடம் அரசாங்கத்தையும் மதத்தையும், பிரித்து வைப்பதில் உறுதிப்பாடு இல்லை என்பதை தெளிவுபடுத்துவதாக இருக்கிறது. ''ஒரு குறிப்பிட்ட மதச்சார்பின்மை மக்கி மறைந்துவிட்டது. மூன்றாவது குடியரசில் இருந்து கிடைத்த தீவிரமான மத குருக்களுக்கு எதிரான மதச்சார்பின்மை இப்போது இல்லை. பொது அரங்குகளில் மதம் இப்போது மிக எளிதாக தெளிவாக, கண்ணுக்குப்படுகிறது. எனவே அமைதியான, ஆக்கபூர்வமான வகையைச் சார்ந்த மதச்சார்பின்மைதான் உருவாக வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்'' இவ்வாறு கோசே கருத்து தெரிவித்திருக்கிறார். பிரெஞ்சு குடிமகன் என்ற தேசிய அடையாள உணர்வை உருவாக்க உதவும் 'புதுவகை' மதச்சார்பின்மை உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இத்தகைய கருத்துக்கள் குடியரசு மொழியில் ராஃபாரன் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சாரத்தை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சு மக்களிடையே சில பிரிவுகள் இத்தகைய கருத்துக்களை காதில் போட்டுக் கொள்கிறார்கள். அல்லது குறைந்த பட்சம் சகித்துக் கொள்கிறார்கள்.

தொழிற்சங்க அதிகாரத்துவ பிரிவுகளும் தீவிர இடதுசாரி அணியைச்சேர்ந்த அவர்களது சகாக்களும் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மதச்சார்பின்மை கிளர்ச்சிக்கு பின்னால் தங்களது முழுவலிமையும் காட்டி அணிவகுத்து நின்கின்றனர். 1989-களிலும் மற்றும் 1994-களிலும் முக்காட்டிற்கு எதிராக இதற்கு முன்னர் இயக்கங்கள் நடந்தபோது முக்காடு போட்ட மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை அவர்கள் ஆதரித்திருக்கிறார்கள். தொழிலாளர் கட்சியான PT- க்கு மிக நெருக்கமாக உள்ள தொழிற்சங்கமான FO- இந்த தொழிற்சங்கம் ஜூன்-25 அன்று 1905-சட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் வலதுசாரி வட்டாரங்கள் வரலாற்றை முறைகேடாக புரட்டியிருப்பது பற்றியோ அல்லது குடியேறிய மக்களது உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் பற்றியோ எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. பென்ஷன் வெட்டுக்கள் தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்படி தொழிற்சங்க அதிகாரத்துவம் தேசியவாத அணுகுமுறையில் செல்வது இனவெறி அரசாங்க பிரச்சாரத்திற்கு ஊக்கமூட்டுவதாக அமையும்.

தற்போதைய 'மதச்சார்பின்மை' வாதிகளின் பிரச்சாரம் எடுத்துக் காட்டுவது என்னவென்றால் நிலைபெற்றுவிட்ட பிரெஞ்சின் அரசியல் சக்திகள் எதுவும் மதத்தையும், அரசாங்கத்தையும் சட்டபூர்வமாக பிரித்து வைத்திருக்கும் நிலைப்பாட்டை காத்து நிற்கும் வல்லமை இல்லாதவை. மற்றும் குடியேறிய மக்கள் வாழுகின்ற பகுதிகளில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் செல்வாக்கு வளர்ந்து கொண்டு வருவதை தடுத்து நிறுத்தும் வல்லமை இல்லாதவை. பிரான்சில் நிலைநாட்டப்பட்டுவிட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பகிரங்கமாக அல்லது மறைமுகமாக வலதுசாரிகளுடன் சேர்ந்து கொண்டு மதச்சார்பின்மை பாரம்பரியத்தை இன ஒதுக்கல் அடிப்படையில் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக பார்க்கும்போது அவர்களுக்கு அரசியல் அடிப்படையில் தங்களது கருத்துக்களை பிறர் ஏற்கச் செய்வதற்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போலீஸ் ஒடுக்கு முறையையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

பிற்போக்குத்தனமான மதக்கண்ணோட்டங்களை எதிர்த்து போராடுவதற்கு- கிறிஸ்தவ, யூத மற்றும் முஸ்லீம் அடிப்படைவாத கண்ணோட்டங்களை எதிர்த்து போராடுவதற்கு- சமுதாய நிபந்தனைகளையும், ஜனநாயக உரிமைகளையும் காத்து நிற்பதற்கு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உழைக்கும் மக்களில் எல்லா பிரிவினரையும் அரவணைத்து செல்லுகிற தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தினால்தான் மட்டுமே செயல்படுத்த முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved