World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Political crackdown in China as leadership prepares mass privatisations

சீனாவில் பெரும் தனியார்மயமாக்கலுக்கு தலைமை தயாரிக்கையில் கடும் அரசியல் நடவடிக்கை.

By John Chan
26 November 2003

Back to screen version

சீன அரசாங்கம் டஜன் கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களை ''அரசாங்க அதிகாரத்தை சீர்குலைப்பதாக'' அல்லது ''சமூக ஒழுங்கை சிதைப்பதாக'' குற்றம்சாட்டி, அண்மை மாதங்களில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றது. 1998 - 99 ம் ஆண்டில் சீன ஜனநாயக் கட்சி மற்றும் பாலூன் ஜாங் மத (Falun Gong religious) இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த இரண்டு அமைப்புகளின் பெரும் பகுதி போலீஸ் அரசால் சிதைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் வருமாறு:

நவம்பர் 13 அன்று ஹிபீ மாகாணத்தின் Shijiazhuang நகர நீதிமன்றத்தில் வர்த்தகர் Cai Lujun என்பவர் நாசவேலை செய்ததாக மூன்று ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார். சீன விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்கும் கட்டுரைகளை இணையத் தளத்தில் அவர் எழுதினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டாகும்.

Hubei மாகாண இங்ஜங் நகரத்தைச் சேர்ந்த 40 வயது மருத்துவ அதிகாரியான டூ-டாபின் (Du Daobin) நவம்பர்11 அன்று கைது செய்யப்பட்டார். அவர், சமூகப் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டதுடன், இணையத் தளத்தில் அரசிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த, நவம்பர் மாதம் முதல் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகத்தை (Beijing Normal University) சேர்ந்த 23 வயது மாணவர் டூயுடியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி மனு ஒன்றை இணையத் தளத்தில் வெளியிட்டதற்காகவே கைது செய்யப்பட்டார்.

அதே நாளில் பெய்ஜிங் வாசியான ஜியாங்-லீசூங் என்பவர் ''ஜனநாயகத்திற்கு ஆதரவான'' இணையத் தளத்தின் தலைவர் என்று குற்றம்சாட்டப்பட்டு, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தகவல் தந்துள்ளது.

ஜியா- சுவாங் மாகாணத்தைச் சேர்ந்த 39 வயதான லுவோ-ஜாங்பு என்ற தொழிலாளி, மாணவர் லியோ-டி-யை விடுதலை செய்ய வேண்டும் என்று இணையத் தளத்தில் கட்டுரைகளை எழுதினார் என்பதற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ''அரசாங்க அதிகாரத்தை சீர்குலைத்தார்'' என்பதுதான் அவர் மீதான பிரதான குற்றச்சாட்டாகும்.

அக்டோபர் 30 ந் தேதி 13 கிராம மக்களுக்கு ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஹொங் கொங்கில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றிய தகவல் மையம் தகவல் தந்திருக்கின்றது. அவர்கள் கிழக்கு சாங்டன் மாகாண யூட்டாய் பகுதியைச் சேர்ந்த டாக்சன் கிராமவாசிகள் ஆவர். ஆகஸ்ட் 2 ந் தேதியன்று உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் தங்களது நிலத்தை முறைகேடாக பறிமுதல் செய்ததை கண்டிக்கும் வகையில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் ''சமூக ஒழுங்கை சீர்குலைத்ததாக'' அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஏப்ரல் மாதம் தெற்கு Fujian மாகாண Sanming நகரில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் இரண்டு முதல் பதினாறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்த எட்டுப் பேர் மீது, 2000 ம் ஆண்டில் ''நாசவேலை'' செய்யும் தொழிற்சங்கத்தை அமைத்ததாகவும், இணையத் தளத்தின் மூலம் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்கங்கள் பற்றிய ஒரு நூலை இறக்கம் செய்ய (downloaded) முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தடை செய்யப்பட்டுள்ள மத அமைப்புக்கள் மீது தற்போது அரசியல் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவம்பர் 12 ம் தேதியன்று ஐந்து பாலுங்கா மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. ''தீய மதச்சடங்குகள் மூலம் சீனச் சட்டங்கள் செயலாக்கம் பெறுவதை சீர்குலைத்ததாக'' அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சீனாவின் இன்றைய அரசியல் மற்றும் சமூக அமைப்புக்களை விமர்சனம் செய்கிற டஜன் கணக்கான மக்களை, தங்களது பொருளாதாரக் கொள்கைகளால் பீதியடைந்திருக்கும் ஸ்ராலினிச ஆட்சியாளர்கள் தற்போது சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு சீனாவில் மிகவேகமாக மூலை முடுக்கெல்லாம் கருத்துப் பரிவர்த்தனைகள் எளிதாக நடந்து கொண்டிருப்பதால் இந்த ஆட்சியாளர்களின் பீதி அதிகரித்துள்ளது.

''சீனாவில் மேலும் சமூகப் பிரச்சனைகள் பெருகிக் கொண்டிருப்பதுடன், மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கு இணையத் தளத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்'' என்று மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான தகவல் நிலைய இயக்குநர் Frank Lu என்பவர் AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தனியார்மய வேலைத்திட்டம்

தனியார்மயமாக்கல் திட்டத்தை முடுக்கி விடுவதற்கு பெய்ஜிங் முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில், அரசாங்கம் எதிர்ப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொழிலாளர்களையும், விவசாயிகளையும் மிரட்டுவதற்காகவும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு உறுதிமொழி தருவதற்காகவும் இவ்வாறு பெய்ஜிங் ஆட்சியாளர்கள், எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அடித்தளத்தில் இருந்து உருவாகும் எந்தவித எதிர்ப்பையும் பெய்ஜிங் ஆட்சி சகித்துக் கொள்ளாது. அதை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முழு வலிமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக்கொள்ளும்.

அக்டோபர் மாதம் 14 ந் தேதி நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில், எரிபொருள் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான 196 மூலோபாய நிறுவனங்கள் உட்பட அரசாங்கத்திற்கு சொந்தமான நடுத்தர மற்றும் பெருந் தொழில்களின் பெரும்பான்மை பங்குகளை தனியாருக்கு விற்றுவிட கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால், கடந்த காலத்தில் மூலோபாய தொழில்கள் என்று அறிவிக்கப்படும் எந்த தொழிலிலும் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்காது என்று அறிவிக்கப்பட்டது.

1990 கள் முழுவதிலும் அரசாங்கத் தொழில்கள் சீரமைக்கப்பட்டதாலும், வேளாண்மை உற்பத்தி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் முதலாளித்துவ ஆளும் செல்வந்த தட்டு ஒன்று வளர்ந்தது. பில்லியன் கணக்கான டாலர்கள் பணம் வெளிநாட்டு முதலீடுகளாக வந்து குவிந்ததால் இந்த தட்டுக்கள் கொழுத்தன. அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் 1997 ல் 262,000 ஆக இருந்தது. சென்ற ஆண்டு 159,000 ஆக திடீரென்று வீழ்ச்சியடைந்துவிட்டன. சென்ற ஆண்டு தலைமையேற்ற ஜனாதிபதி ஹூ ஜுண்டாவோ (Hu Jintao) இதில் மேலும் வேகமாக செல்வதற்கு விரும்புகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் முதலீட்டு வங்கியான கோல்மேன்சாச்சில் (Goldman Sachs) ஒரு நிர்வாக இயக்குநராக பணியாற்றி வரும் பிரண்ட்ஹூ என்பவர் நவம்பர் 12 ந் தேதி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்தார். ''சீன ஜனாதிபதியின் அறிவிப்பானது கொள்கை ரீதியில் மிகப்பெரிய மாற்றமாகும். நான் மூத்த தலைவர்கள் பலரோடு நடத்திய உரையாடல்களில் கொள்கை வகுப்பது தொடர்பாக பேசியிருக்கிறேன். அவர்கள் பாரிய தனியார் மயமாக்கலுக்கு உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிகிறது. எனக்குத் தெளிவாக மூலோபாயம் என்கின்ற சொல்லின் பொருள் குறைந்து கொண்டே வருகிறது. தனியார் துறையைச் சார்ந்தவர்கள் சிறப்பாக செயல்படும் போது அரசாங்கம் அந்தத் தொழில்களிலிருந்து வெளியேறிவிட வேண்டும்'' என்று அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

எடுத்துக்காட்டாக தெற்கு சீனாவில் சிறப்பு பொருளாதார மண்டலமாக செயல்பட்டு வரும் Shenzhen மண்டலத்தில் இந்தப் புதிய கொள்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மண்டலத்து தண்ணீர் வழங்கும் துறையை பிரான்சின் தனியார் நிறுவனமான Veolia நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள்.

அக்டோபர் 8 ந் தேதி ஆட்சியின் அரசியல் போக்கிற்கு மற்றொரு அடையாளம் தெளிவாக தெரிந்தது. அது, மத்திய கட்சி பாடசாலையில் (Central Party School) எதிர்கால சீன நிர்வாக தலைவர்களுக்கு வெளிநாட்டு ஊடக அதிபரான ரூபர்ட் மூர்டோக் (Rupert Murdoch) உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 100 க்கு மேற்பட்ட கட்சி அதிகாரத்துவங்கள் ரூபர்ட் முர்டோக்குடைய உறுதி மொழியை கைதட்டி ஆரவாரத்தோடு வரவேற்றார்கள். அரசாங்கத்திற்கு சொந்தமான ஊடகங்களின் நிர்வாகம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றப்படும் போது கட்சியின் பிடிப்பிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. மாறாக ''பொதுக்கல்வி'' அதிகரிக்கும் மற்றும் ''தேசிய ஒற்றுமை பெருகும்'' என்று முர்டோக் குறிப்பிட்டதை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

''திறந்த சந்தை வாய்ப்புக்களை பெருமளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக அவை திறந்து விடப்படும் போது கட்சிக்கு அதிகார இழப்பு எதுவும் ஏற்படாது'' என்று குறிப்பிட்ட முர்டோக் அதற்கு விளக்கமும் தந்தார். ''தற்போது ஊடகங்களை கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. கட்சியிலிருந்து அந்த அதிகாரம் தனியாருக்கு வழங்கப்படும் போது கட்சியானது ஊடகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க முடியும். சீனத் தலைவர்களும் மக்களும் அதனால் கிடைக்கும் வெகுமதிகளால் கூடுதல் அதிகாரங்களையே பெறுவார்கள்'' என்று முர்டோக் மேலும் விளக்கம் அளித்தார்.

சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சந்தைச் சீர்திருத்தங்களால் பெய்ஜிங் ஆட்சியோடும் நாடுகடந்த நிறுவனங்களுடனும் தொடர்புடைய முதலாளித்துவ ஆளும் செல்வந்த தட்டுத்தான் லாபம் அடைய முடியும். எடுத்துக்காட்டாக சென்ற மாதம் சீன ஜனாதிபதி ஹூ ஜுண்டாவோவின் புதல்வி சீனாவிலேயே 11 வது பெரும் பணக்காரரான Mao Daolin என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் NASDAQ பட்டியலில் இடம் பெற்றுள்ள செய்தி நிறுவனமான சினாவின் (Sina) தலைமை நிர்வாகியாக முன்னர் பணியாற்றி வந்தவர். அவருக்கு தனிப்பட்ட முறையில் 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு சொத்துக்கள் உள்ளன.

பெரும்பாலான சீன மக்களைப் பொறுத்த வரையில், முதலாளித்துவ உறவுகள் மீண்டும் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் கொடூரமான சமூக நிலமைகளும் அநீதிகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன. பல கோடி தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில்களின் கதவடைப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதைவிட அதிகமான அளவிற்கு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த சிறு விவசாயிகள் அவர்களது நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும். அதிகாரப் பூர்வமான சீன செய்தி நிறுவனமான Xinhua நவம்பர் 24 ந்தேதி அன்று ஓர் எச்சரிக்கையை வெளியிட்டது. அது, சீனாவின் 94 மில்லியன் கிராமத் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து நகரங்களுக்கு வந்திருக்கின்றனர். அவர்களுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு கூலிபாக்கி உள்ளதால், இதன் மூலம் சமூக கொந்தளிப்பு ஏற்படக் கூடும். இந்த மாதம் சீனாவின் துணி மற்றும் ஆடைகள் வர்த்தகத்திற்கு அமெரிக்கா தடைவிதித்திருக்கிறது. இந்தத் தடையின் மூலம் 15 மில்லியன் ஆடைத் தொழிலாளர்கள் மற்றும் 100 மில்லியன் விவசாயிகளுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தது.

உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகளின்படி பொது சேவைகளை தனியார் மயமாக்கியதன் விளைவாக 20 மில்லியன் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி கிடைக்கவில்லை. மருந்துகளின் விலைகள் உயர்ந்து கொண்டு போவதால் மக்களில் பாதிப்பேர்களுக்குமேல் மருத்துவ மனைகளுக்கே செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் மருத்துவமனைகளில் இப்போது கட்டணம் வசூலிக்கிறார்கள். உலகில் தற்போது வருத்துகின்ற புதிய காசநோயாளிகளில் கால்வாசிப்பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 20 மில்லியன் மக்களுக்கு மஞ்சல் காமாலை நோய் உருவாகின்றது. 2010 ம் ஆண்டில் எய்ட்ஸ் நோய் தாக்குதல் அளவு 10 மில்லியன் அளவிற்கு செல்லும் என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான சீனாவின் மத்திய அரசாங்க சிந்தனையாளர் குழு ஒன்று அண்மையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. அது, அமெரிக்க சீன உறவுகளின் தன்மை இறுக்கமாக இல்லை எந்த நேரத்திலும் பிளவுகள் உருவாகலாம். சீனாவில் மிகத் தீவிரமான சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் உருவாகிக் கொண்டு வருவதால் இப்போது தொடங்கி 2010 ம் ஆண்டுக்குள் எந்த நேரத்திலும் இருதரப்பு உறவுகளில் ''அதிர்ச்சித்தரும் தொய்வுகள் மற்றும் பிளவுகள் உருவாகலாம்'' என்று அந்தக் குழு எச்சரித்திருக்கின்றது.

சமூகக் கொந்தளிப்பு

பெய்ஜிங், கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில், அண்மை வாரங்களில் வேலை இழப்பு, அரசாங்க ஊழல்கள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக மக்களது அதிருப்தியும், கண்டனங்களும் பெருகிக் கொண்டு வருகின்றன.

நவம்பர் 23 அன்று அரசாங்கத்திற்கு சொந்தமான, Xiangfan நகரத்தில் உள்ள கார் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 7,000 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டது, மற்றும் அரசாங்க ஊழல்களைக் கண்டித்து, Hubei பிராந்தியத்தில் உள்ள இரண்டு பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி விட்டனர். அரசாங்கத்திற்கு சொந்தமான இத்தொழிற்சாலையை மறுசீரமைப்பு செய்வதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்தோடு கண்டனம் தெரிவித்த 5 தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் 14 ந் தேதியன்று, 1700 விவசாயிகளுக்கும் Fujian மண்டலத்திலுள்ள Minhou County யில் 500 போலீஸ் அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. பல ஏக்கர் நிலங்கள் 20,000 யென்னிலிருந்து 3000 யென்னாக குறைத்து நஷ்ட ஈடாக அவர்ளுக்கு கொடுத்ததற்கு எதிராக கண்டனம் செய்தபோது அது மோதலாக வெடித்தது. இதில் 100 க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் காயமடைந்தனர்.

அக்டோபர் 28 ந் தேதியன்று 1000 த்திற்கு மேற்பட்ட கண்டன ஆர்ப்பாட்டக்காரர்கள் சாங்டன் மாகாண நகர அரசாங்க நிர்வாக அலுவலகத்தின் மீது திடீரென்று புகுந்து கொண்டனர். நடைபாதை சமையல் வியாபாரிகளை விரட்டுவதற்கு அதிகாரிகள் முயலும்போது திட்டமிட்டே அவர்கள் மீது அரசாங்க வாகனத்தை ஏற்றி, ஒருவரின் சாவிற்கு காரணமாக இருந்தார்கள் என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். அப்போது திரண்டிருந்த 800 போலீஸ் அதிகாரிகளோடு நடைபெற்ற மோதலில் குறைந்த பட்சம் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஷாங்காய் மாகாணத்தில் பொதுமக்கள் கண்டனம் தெரிவிப்பது மிக அபூர்வமாக ஆகிவிட்டது. ஏனென்றால் அந்த அளவிற்கு கண்டிப்பான அரசியல் கட்டுப்பாடு அங்கு நிலவுகிறது. அந்த நகரத்தில் கூட நவம்பர் 5 ந் தேதியன்று நகர மண்டபத்திற்கு வெளியே 500 தொழிலாளர்கள் திரண்டு அரசிற்கு சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி மூடப்படுவதால் 1,100 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.

ஹொங் கொங்கிலிருந்து வெளியிடப்பட்டு வரும் China Labour Bulletin வெளியிட்டுள்ள ஒரு தகவலின் படி, சென்ற அக்டோபர் மாதம் முதல் ஒரு கிரேன் தொழிற்சாலையை சேர்ந்த 600 தொழிலாளர்கள் தொடர்ந்து கண்டனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். அரசிற்கு சொந்தமான நிறுவனத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ''இலவசமாக விற்றது'' போன்ற ஊழல் மலிந்த விற்பனையை அவர்கள் ஆட்சேபித்து வருகின்றனர். இந்த விற்பனை மூலம் 5000 தொழிலாளர்களில் 60 சதவீதம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள்.

நவம்பர் 12 அன்று அமெரிக்கப் பத்திரிகையான Chicago Tribune ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது. சீனாவில் நிலவுகின்ற சமூகக் கொந்தளிப்பு வெடித்துச் சிதறும் அளவிற்கு முற்றிக் கொண்டிருப்பதாக அந்த பத்திரிகை எழுதியிருந்தது. சட்ட மீறல்களும், ஒத்துழையாமையும், கலவரங்களும் சீனாவில் வழக்கமாக நடைபெறும் வாடிக்கையாகிவிட்டது. வழக்கமாக ஒடுக்கப்பட்டு வரும், ஆனால் ஒரு நாளைக்கு அதிருப்தி கொண்ட சீன மக்கள் அனைவரும் திரண்டு விடுவார்களோ என்ற சிம்ம சொப்பணத்தில் சீனத் தலைவர்கள் உள்ளனர். ஏழை விவசாயிகளில் தொடங்கி, நகரங்களில் வாழ்கின்ற வேலையில்லா மக்கள் உட்பட அனைவரும் ஒன்று திரண்டு எங்கே? கிளர்ச்சி நடத்தி விடுவார்களோ என்று சீனத்தலைவர்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதாக இப்பத்திரிகை எழுதியிருக்கின்றது.

எனவேதான், இப்போது அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் எந்த இயக்கம் தொடங்கினாலும் அதை உடனடியாக பரவாமல் தடுத்து நிறுத்துகின்ற போலீஸ் அரச கெடுபடி நடவடிக்கைகளில் ஜனாதிபதி ஹூ ஜுண்டாவோ ஈடுபட்டிருக்கிறார்.

நவம்பர் 13 அன்று லண்டன் எகானமிஸ்ட் வார இதழ் கீழ்கண்டவாறு எழுதியிருக்கின்றது. ''முன்னாள் ஜனாதிபதி, தனது எதிர்ப்பாளர்கள் மீது கடுமையான, கொடூரமான நடவடிக்கை மேற்கொண்டாலும் அரசியல் சீர்திருத்தங்களில் ஓரளவிற்கு ஊக்குவிப்புக்களை வழங்கினார். சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டார். சில நகரங்களில் கவர்னர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுப்பதை அனுமதித்தார். ஆகவே, அதே போன்று கெடுபிடிகளுக்கு நடுவிலும் அரசியல் சீர்திருத்தங்களில் புதிய ஜனாதிபதி கவனம் செலுத்துவார்'' என்று இப்பத்திரிகை எழுதியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved