World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்Pro-US Iraqi factions enlisted for counterinsurgency operations அமெரிக்கச் சார்புடைய ஈராக்கியப் பிரிவுகள் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தயாராகின்றன By James Conachy கைப்பொம்மையான ஈராக்கிய ஆட்சிக் குழுவின், அமெரிக்கச் சார்புடைய அரசியல் கட்சிகளின் தளத்திலிருந்து 700 முதல் 1000 வரையானவர்களைக் கொண்டு "பயங்கரவாத எதிர்ப்புப் படைப்பிரிவு" என்ற சிறப்புப் படையைத் தேர்ந்த்தெடுக்க புஷ் நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளதாக Washington Post டிசம்பர் 3 ம் தேதி இதழ் அறிவித்துள்ளது. ஈராக் மீதான அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு எதிராக வளர்ந்துவரும் எதிர்ப்பிற்கு, அமெரிக்கா பயன்படுத்த நோக்கங் கொண்டுள்ள வழிமுறைகள் பற்றி இந்த முடிவு பிரச்சினைக்குரிய வினாக்களை எழுப்புகிறது. போஸ்ட் தெரிவித்துள்ளபடி, ஈராக்கிய தேசிய காங்கிரஸ், ஈராக்கியத் தேசிய உடன்பாடு, குர்திஸ்தான் நாட்டுப்பற்று ஒன்றியம், குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சி மற்றும் ஈரானிய ஆதரவுடைய ஈராக் இஸ்லாமியப் புரட்சியின் தலைமைக் குழு (SCIRI) ஆகிய ஐந்து கட்சிகளும் தமது பிரிவிலிருந்து 120 லிருந்து 200 பேர்களைக் கொடுப்பர். இப்பிரிவிற்குத் தலைமைப் பொறுப்பானது ஈராக்கியப் போலீசாரிடமோ அல்லது இராணுவத்திடமோ இல்லாமல், அரசாங்க குழுவின் உள்துறை அமைச்சகத்திடம் இருக்கும். மேற்குறிப்பிட்ட கட்சி ஒன்றின் செய்தித் தொடர்பாளர் கருத்தின்படி, இப்பிரிவு நிறுவப்பட்டதானது "முடிந்துவிட்ட நடவடிக்கையாகும்". இந்தப்பிரிவு களத்தில் இறக்கப்படுவதற்கு முன்பு, ஒரே ஒரு மாதப் பயிற்சி மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. New York Times உடைய தகவலின்படி, இப்பிரிவின் துவக்கப்பணி "கொரில்லா நடவடிக்கைகளைப்பற்றி உளவு அறிவதும், தேவையானால் வீடுகளில் சோதனையிடுதலுமாக" இருக்கக் கூடும். போஸ்ட், இதனுடைய பங்கு பணிகள் பாக்தாத்திலும் அதன் சுற்றுப் புறத்திலும், "ஹுசேன் விசுவாசிகளையும், மற்ற எதிர்ப்பாளர்களையும் கைப்பற்றுதல்" என்றும், அதன் பணிகளுக்காக அமெரிக்க இராணுவத் தலைமையிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்தப்பிரிவின் ஒவ்வொரு உட்பிரிவும், பொதுவாகக் கிரீன் பெரெட்டுக்களின் (Green Berets) 12 பேர் அடங்கிய, இரகசிய நடவடிக்கைகளுக்குப் சிறப்புப் பயிற்சி பெற்ற, ஓர் அமெரிக்க சிறப்புப் படை குழுவுடன் சேர்ந்து பணியாற்றும். ஆனால், வெகு குறுகிய காலத்திற்குள் ஈராக்கிய உட்பிரிவு தன்னுடைய அதிகாரத்திலேயே "முழு அளவில் கிளர்ச்சி எதிர்ப்புச் செயல்பாடுகளில்" ஈடுபடும். இந்த முடிவினால் உடனடியாக எழுகின்ற கேள்வி என்னவெனில் இத்தகைய பிரிவிற்கு அமெரிக்கா ஏன் ஒப்புதல் கொடுத்துள்ளது என்பதுதான். இதுவரை புஷ் நிர்வாகம், ஈராக்கின் மீதான கட்டுப்பாட்டை குறிப்பிட்ட கட்சிகளுக்கோ அல்லது தனிப்பட்ட அரசியல் தலைவர்களுக்கோ விசுவாசம் காட்டாதவரிடம்தான் அரசாங்கக் கருவியை ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறிவந்துள்ளது. மேலும், அரசியலில் பாரபட்சமில்லாத பொதுப் பணியையும், நீதித்துறையையும் அமைக்கப் போவதாகவும் கூறிவந்துள்ளது. அத்துடன், வெள்ளைமாளிகை ஆறுமாத காலத்திற்குள் ஈராக்கின் இறைமையை, தற்காலிக ஈராக்கிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது. ஆனால் இப்பொழுது, வெளிப்படையாக விசுவாசங்களை இன அல்லது குறுங்குழுவாத முறையில் கொண்டுள்ள அரசியல் கட்சிகள் அல்லது ஈராக்கிய தேசிய காங்கிரசின் தலைவரான அகமது சலாபியிடம் விசுவாசம் காட்டும், தனி நபர்களைத் தேர்ந்தெடுத்து ஓர் இராணுவப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் உட்குறிப்புக்கள் ஈராக்கில் பதியாமலில்லை. அரசாங்க குழுவின் சுயேச்சை உறுப்பனரான காஜி யாவர் என்பவர், இத்திட்டத்தில் பங்கு கொள்ளும் கட்சிகள் மற்றும் அமெரிக்க இராணுவத்தினருக்கு இடையேதான் இதுபற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்: "நான் மிகுந்த சீற்றத்திலுள்ளேன். இது யுத்தப் பிரபுக்களையும், உள்நாட்டுப் போரையும் தோற்றுவிக்கக் கூடும். நான் எனக்கென ஒரு இராணுவக் கூட்டம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமா?...நான் இருக்கும் இராணுவக் குழுக்களை கலைக்க வேண்டுமே ஒழிய அவற்றை நெறிப்படுத்திவிடக்கூடாது. இது ஈராக்கிய மக்களிடையே தவறான குறிப்புக்களைக் கொடுக்கும்'' என்றார். மிக அதிக உயர்ந்த நிலையிலுளள சன்னி மதப்பிரிவான முஸ்லிம் உலுமாக் குழு, இத்திட்டத்தை, "இது பிரித்தாளும் முறையாக இருப்பதுடன், பாவமன்னிப்பு மற்றும் இனவாதத்தைக் கொண்டு சுரண்டி ஆட்சி நடத்துவதாகும்" என்று கண்டனத்திற்கு உட்படுத்தியுள்ளது. மதகுருமார்கள், இத்திட்டம் நாட்டிலுள்ள பிளவுகளை மேலும் பெரிதுபடுத்தம் என்பதோடு சன்னிகளை "எதிர்ப்பு சக்திகளின் பாதகாப்பை நாடி ஓடச் செய்யும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைவிட ஆழ்ந்த பீதியான வினாவானது: இப்பொழுதுள்ள படைகளால் செய்யப்படாத எந்த நடவடிக்கைகளை, "பயங்கரவாத எதிர்ப்புப் படைப்பிரிவு" செயல்களாகக் கொள்ளும்? என்பதாகும். ஈராக்கில் 150,000 மேற்பட்ட அமெரிக்க மற்றும் இதர நாட்டுப் படையினர் உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான அமெரிக்க உளவுத்துறைப் பணியாளர்களும், சிறப்புப்படை ஒற்றர்களும் உள்ளனர். இவர்கள் சீட்டுக்கட்டுத் தலைவர்கள் என்று அழைக்கப்படும், பழைய பாத்திஸ்ட் ஆட்சியின் மூத்த தலைவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களை வேட்டையாடி வருகின்றனர். இடைக்கால அதிகாரமோ (ஆட்சியோ) ஏற்கனவே 140,000 ஈராக்கியர்களைக் கொண்ட புதிய போலீஸ் படை, சிவில் பாதுகாப்பு பாரமிலிட்டரி படை, ஆகிவற்றிற்காகத் ஆட்களைத் திரட்டியுள்ளதாகக் கூறிவருகிறது. இதுபற்றி அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பெல்டு, 2004 இடைப்பகுதிக்குள் 225,000 பேர் பணியில் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார். அத்துடன் ஈராக்கியப் படையில் இருந்த உட்கூறுகளையும் ஏற்கனவே அதிக அளவில் அமெரிக்கர்களால் எதிர்ப்பைத் தடுக்க உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இப்படைப் பிரிவு எதற்காகத் தேவைப்படுகிறது? New Yorker பத்திரிகையில் டிசம்பர் 8 ல் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்று இதற்கு ஊகமான பதிலைத் தருகிறது. சேமர் ஹெர்ஷ் (seymour Hersh) என்னும் ஆய்வுச் செய்தியாளர் திரட்டிய தகவலின் அடிப்படையில், அமெரிக்க இராணுவம், பென்டகன் அதிகாரிகள் ஏற்கனவே "தடுக்கமுடியாத ஆள்வேட்டை" என்று பெயரிட்டுள்ள புதிய எழுச்சி-எதிர்ப்பு தந்திர உத்திமுறைக்கு மாறியுள்ளனர். ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இஸ்ரேலியரின் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, அமெரிக்கா ஈராக்கிய உளவாளிகளை, அடிமட்ட எதிர்ப்புக் குழுக்களுள் ஊடுருவச் செய்து, அவர்களுடைய உறுப்பினர்கள், பொருளுதவி, பண உதவி செய்பவர்களை அடையாளம் கண்டு, அமெரிக்கச் சிறப்புப்படையினரைக் கொண்டு அவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்பதாகும்.சர்வதேசச் சட்டத்தில் போர்க்குற்றமான இந்தப் படுகொலைத் திட்டத்திற்கு சமாந்திரமாக, வியட்நாம் போரில் "Operation Phoenix" என்று அழைக்கப்பட்ட நடவடிக்கையுடன் தவிர்க்கமுடியாத ஒப்புமைகளைத்தான் இது காட்டுகிறது. 1967 ல், தெற்கு வியட்நாமில் கொரில்லா நடவடிக்கைகளை நசுக்க முடியாமல் போன அமெரிக்கா, வியட்நாம் தேசிய விடுதலை முன்னணியின் (Vietnamese National Liberation Front - Viet Cong) ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்டவர்களுக்கு எதிராக படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தப் படுகொலை நடவடிக்கையின் செயல்கள் 1973 வரையிலும்கூடத் தொடர்ந்திருந்தது. 1968 லிருந்து 1972 வரை, 26,000 த்திற்கும் மேலான சந்தேகத்திற்குரிய வியட்கொங் போராளிகள், அரசியல் செயல்வீரர்கள், கிராமத் தலைவர்கள், ஆசிரியர்கள், கொரில்லாப் போராளிகள் ஆகியோர்கள் அமெரிக்கச் சிறப்புப்படைகளாலும், தெற்கு வியட்நாமின் உளவாளிகளாலும் எதிர்ப்பை நசுக்கவதற்காகக் கொலைசெய்யப்பட்டனர் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இதைத்தவிர, மற்றும் 33,000 பேர் குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் கைதுசெய்யப்பட்டு, வியட் கொங்கின் நடவடிக்கைகளைப் பற்றித் தகவல் அறியும் பொருட்டு மிருகத்தனமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஹெர்ஷின் அறிக்கையானது, மாதக்கணக்காகியும் எதிர்ப்புக்களை நசுக்க முடியாமல் ஏற்பட்டுள்ள தோல்வியினால், ஈராக்கில் தாக்குதல் குழுக்களை அமைக்கும் முறையில் மாறுதல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறுகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, மே மாதம் முதல் அமெரிக்க இராணுவம், அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கான சோதனைகளை நடத்தி 50,000 ஈராக்கியரை அடைத்து வைத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இடைக்கால அரசாங்கம் தற்பொழுது 5,000 "சந்தேகத்திற்குரியவர்களை'' அதன் சிறைச்சாலைத் தொடர்களில் அடைத்து வைத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் ஆக்கிரமிப்பின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்திருப்பது மட்டுமின்றி நாடெங்கிலும் பரவி இறப்பையும் பெருக்கியுள்ளது. அமெரிக்க தந்திரமுறையின் முக்கிய தாக்கம், அமெரிக்கப் படைகளுக்கும் அவர்களுடைய உள்ளுர் கூட்டாளிகளுக்கும் எதிரான ஈராக்கிய எதிர்ப்பு நடவடிக்கையை உயர்த்தியுள்ளதோடு மட்டுமின்றி, இந்த எதிர்ப்பிற்கு ஆதரவு வலிமையுடையதாகவும் ஆக்கிவிட்டுள்ளது. "அமெரிக்கர்களும் இஸ்ரேலிய அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளபடி, மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்னவெனில் உளவுப் பணியாகும்" என்று ஹெர்ஷின் ஆதாரங்கள் தெரியப்படுத்துகின்றன. "நாம் மரபு வழியிலான இந்தப் பெரிய படையை வைத்திருந்தும், நம்முடைய வீரர்கள் உட்கார்ந்த நிலையிலேயே சுடப்படுகிறார்கள், மற்றும் நாம் செய்வது பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. நமக்கு எந்தத் துப்பும் இல்லை. உலகின் இப்பகுதியில் செயலாற்ற மனத்திலும் மிக அருவருப்பான உணர்வையும் கொண்டிருக்கிறோம்" என்று ஒரு பென்டகன் அதிகாரி அறிவித்தார்: பாக்தாத்தின் இடைக்கால அதிகாரத்தின் ஆலோசகர் ஒருவர், அமெரிக்க அரசியல், இராணுவ வட்டாரங்கள் கொண்டுள்ள முடிவைப்பற்றிச் சுருக்கமாகக் கூறியதாவது: "வெற்றிக்கு ஒரே வழி, மரபற்ற முறையில் நடப்பதுதான். நாமும் அவர்களுடைய விளையாட்டையே விளையாடுவோம். கொரில்லாமுறைக்கு எதிராகக் கொரில்லா முறை. பயங்கரவாதத்திற்கு எதிராகப் பயங்கரவாதம். நாம் ஈராக்கியர்களை பீதியடையச் செய்து பணியவைக்க வேண்டும்." அமெரிக்கர்களுக்கு, இஸ்ரேலியரின் முக்கிய ஆலோசனை என்னவெனில், "இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் அமைத்துள்ள முறையில், தக்க தகவல் தருவோரின் வலைப்பின்னலை அமைக்கும் வழிவகைகளை கண்டறிய வேண்டும்" என்பதாகும். "மேற்குக் கரையிலும், காசாப் பகுதியிலும், ஹமாஸ்ஸின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அமைப்புகளுக்குள் ஊடுருவி, தற்கொலை தாக்குதல் நடத்தும் திறனுடையவர்களையும், அவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிப்பவர்களையும் சேர்த்துச் சிறைபிடித்தோ அல்லது அவர்களைக் கொலை செய்யவோ முடிகிறது" என்று இஸ்ரேலிய உளவாளிகள் கூறியுள்ளனர். New Yorker கட்டுரையானது, அமெரிக்க இராணுவ வட்டாரங்களில் எவ்வாறு அத்தகைய ஈராக்கிய தகவல் தருவோரையும், உளவாளிகளையும் கொண்ட வலைப்பின்னலை அமைப்பது தொடர்பாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரானவர்களைக் கண்டுபிடிப்பதிலும், தகவல்களைக் கசக்கிப் பெறுவதிலும் யார் மனத்தளவில் "அருவருப்பு'' இல்லாமல் செயல்படுவர் என்பது தொடர்பாகவும், விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டுகிறது.ஹெர்ஷ், சதான் ஹுசேனின் பழைய இரகசியப் போலீசாரைத் தேர்ந்தெடுக்கலாமா என்ற யோசனையிலும் CIA இருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஒரு பழைய CIA அதிகாரி முரட்டுத்தனமான வெளிப்படையுடன் கூறினார்: "அமெரிக்கத் துப்பாக்கி சுடுவோரும், ஈராக்கிய உளவுத்துறையினரும்... நாம் ஈராக்கிய உளவுத்துறைக்கு புத்துயிர் கொடுத்து, முகத்தை நிமிர்த்தி வைத்துக் கொண்டு, டெல்டா மற்றும் நிறுவன துப்பாக்கிகாரர்களை வீடுகளை உடைக்கச் செய்து அவர்களை (எதிர்ப்புப் போராளிகளை) சிறைபிடிக்க வேண்டும்." பாத்திஸ்ட் கருவிகளின்மீது வெளிப்படையான நம்பிக்கையைக் காட்டுவது ஈராக்கிலும், சர்வதேச அளவிலும், தெளிவான அரசியல் சிக்கல்களை உருவாக்கி மேலும், அத்தகையமுறை ஈராக்கை "விடுதலை செய்வதற்காகப்" ஆக்கிரமித்தோம் என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்கக் கூற்றுக்களையும் கீழ்ப்படுத்துகிறது. ஆகவே இதற்கு மாற்றானது என்னவெனில், இதன் அரசியல் கைக்கூலிகளின் படைகளை ஈராக்கிய உளவுத்துறையின் பொதுவில் காட்டப்படும் முகமாகப் பயன்படுத்துவது ஆகும். இக்கட்சிகளின் இராணுவக் குழுக்கள் மிகச் சிறந்த முறையில் இப்பணிக்குத் தகுதி பெறுகிறார்கள். குர்திஷ் pesh merga, மற்றும் அகமது சலாபி, ஈராக்கியத் தேசிய உடன்பாட்டின் அயத் அலவி ஆகியோர் அமெரிக்க உளவுத்துறையுடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பு உடையவர்களாவர். பல நேரங்களில் அவர்கள் அமெரிக்கப் பயிற்சியை, இரகசிய நடவடிக்கைகளுக்காகப் பெற்றும் உள்ளனர். அதேநேரம், அவர்கள் ஈராக்கின் மதம், மொழிகள், இன, பழங்குடி மரபுகள் பற்றிய நுட்பங்களையும் நன்கு அறிந்தவர்களாவர். மேலும், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கிய மக்களை அடிபணிய வைப்பதில் அனைத்துத் தீவிரத்தையும் காட்டவேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு படைப்பிரிவிற்கு நபர்களைக் கொடுத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வெளிப்படையாக அமெரிக்காவிற்கு, அதன் ஈராக்கின் மீதான ஆக்கிரோஷச் செயல்களுக்கு இணைந்து ஒத்துச் செயலாற்றி வருகின்றனர். பல ஈராக்கியர்கள் அவர்களை தேசத் துரோகிகள் என்றே கருதுகின்றனர். இப்பொழுது அவர்கள் வசமுள்ள அரசியல் அதிகாரம், இதையொட்டி அவர்களுடைய ஆதரவாளர்களுக்குக் கிடைத்துள்ள சிறப்புச் சலுகைகள் ஆகியவை அனைத்துமே, அமெரிக்காவின் கட்சிக்கார-நாடாக ஈராக் நிலைத்திருந்தால்தான் இவர்களுக்கும் நிலைத்திருக்கும். அமெரிக்கா, அதன் கூட்டாளி நாடுகளின் படைகள் இல்லாவிடில், இந்த நிர்வாகக் குழு ஒரு நாள்கூட அதிகாரத்தைச் செலுத்த முடியாது. ஆகவே, தக்க ஊக்கத்துடன் கைதேர்ந்த முறையில் உருவாகும் இந்தப் படைப்பிரிவானது, வேவுபார்க்கவும், சித்திரவதை செய்யவும், கொலைபுரியவும், மற்றும் புஷ் நிர்வாகத்தின் அழுக்கான செயல்கள் அனைத்தையும் செய்யத் தகுதி கொண்டுள்ளது. |