World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியாHeavy losses for Congress in Indian state elections இந்திய மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்புகள் By Sarath Kumara இந்தியாவில் தேசிய அளவில் பிரதான எதிர் கட்சியான காங்கிரஸ் சென்ற வாரம் நடைபெற்ற நான்கு மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களில் கடுமையான தோல்விகளை சந்தித்தது. மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தனது ஆட்சி அதிகாரத்தை இழந்தது. யூனியன் பிரதேசமான தில்லியில் மட்டுமே தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சிக்கு (BJP) அதிகம் தேவைப்பட்ட உற்சாகம் இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் கிடைத்திருக்கிறது. ஏனெனில் பல்வேறு மாநில தேர்தல்களில் BJP- தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்திருக்கின்றது மற்றும் அடுத்த ஆண்டு தேசிய அளவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் சென்ற வெள்ளிக்கிழமையன்று காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டி ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது "ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பின் காரணி" விளைவாக கட்சி தோல்வி அடைந்திருப்பதாக்க் குறிப்பிட்டதன் மூலம் தனது கட்சி சந்தித்த தோல்வியை குறைத்து மதிப்பிட முயற்சித்தார். ஆயினும், அவரது கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் திவாலை எளிதாக ஒப்புக்கொள்வதாய் இருக்கிறது. தேர்தல் நடைபெற்ற நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் செல்வாக்கை இழந்து நிற்கின்றது. தேசிய அளவில் ஆட்சி செய்கின்ற பி.ஜே.பி-மீது பரவலாக வெறுப்பு உணர்வு நிலவினாலும், காங்கிரஸ் கட்சி அதன் பகிரங்க சந்தைக் கொள்கைகளின் காரணமாக இந்த நான்கு மாநிலங்களிலும் மிகவும் செல்வாக்கிழந்து உள்ளது. எந்த அளவுக்கு இழப்பு என்பது பின்வருமாறு வெளிப்படுத்தப்படுகிறது. * மத்திய பிரதேசத்தில் பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அதன் தேர்தல் கணிப்பெண் 230-உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 124லிருந்து 38-இடங்களாக அழுத்தப்பட்டிருக்கின்றன. பி.ஜே.பி- 83லிருந்து 173-இடங்களாக அதிகரித்திருக்கிறது. *ராஜஸ்தானில் சென்ற முறை சட்டமன்றத்தில் 150-இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது 56-இடங்களை மட்டுமே பிடித்திருக்கின்றது. 200-உறுப்பினர் கொண்ட சட்ட சபையில் பி.ஜே.பி அதன் பங்கை 33-லிருந்து 120 ஆக உயர்த்தி இருக்கின்றது. * மத்திய பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து 2000-ம் ஆண்டில் தான் சட்டிஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் தற்போது 36-இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கின்றது. முன்னர் 48-எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் சார்பில் இடம் பெற்றிருந்தனர். அதேவேளை பி.ஜே.பி- 36-இடங்களில் இருந்து 50-இடங்கள் என்கிற அளவிற்கு தனது கணக்கை அதிகரித்துள்ளது. * தில்லியில் காங்கிரஸ் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டாலும் நான்கு இடங்களை இழந்துவிட்டது. தற்போது காங்கிரஸ் 51-லிருந்து குறைந்து 48-இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றது. அதே நேரத்தில் பி.ஜே.பி-15-லிருந்து 20-இடங்களாக தனது நிலையை உயர்த்திக் கொண்டிருக்கின்றது. இந்த நான்கு மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சி சமூக செலவினங்களை வெட்டல், மறு சீரமைப்பு மற்றும் தனியார் மயமாக்கல் ஆகிய அதன் கொள்கைகள் மூலம் ஏற்கெனவே உயர்ந்த அளவு வேலையின்மை மற்றும் வறுமையை கூட்டியுள்ளது. கட்டமைப்பு வசதிகள் காங்கிரஸ் ஆட்சியில் சிதைந்து விட்டதையும் நான்கு ஆண்டு வறட்சிக்கு பின்னர் ராஜஸ்தான் விவசாயிகள் இருண்ட எதிர்காலத்தை எதிர்கொண்டிருப்பதையும் "மின்சாரம், சாலை மற்றும் தண்ணீர்" என்ற முழக்கங்களை வைத்து பிரச்சாரம் செய்து, மக்களிடம் உருவாகியிருந்த ஆத்திரத்தை பி.ஜே.பி- தனக்கு சாதகமாக இந்த தேர்தலில் பயன்படுத்திக் கொண்டது. சென்ற ஆண்டு ராஜஸ்தானில், குறைவாக மதிப்பிடப்பட்ட அரசாங்க புள்ளிவிபரங்களின் படி வறட்சியாலும் வறுமையினாலும் 20-பேர் மாண்டனர். இது சம்பந்தமான நடப்பு புள்ளி விபரங்கள் பிரண்ட் லைன் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 20-ஆண்டுகளுக்கு மேலாக ராஜஸ்தானில் 66,000- சிறுதொழில் தொழிற் கூடங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், 59-பெருந்தொழில்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், அந்தப் பத்திரிகை புள்ளி விபரங்களை வெளியிட்டிருக்கின்றது. இதே நடைமுறைதான் மத்திய பிரதேசத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மாநிலத்தில் அரசாங்கத் தொழில்கள் தனியார் உடைமையாக்கப்பட்டு விட்டன. கல்வி வசதிகள் குறைக்கப்பட்டுள்ளன, மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நாட்டின் தலைநகரான தில்லியில் பி.ஜே.பி- தலைமையிலான மத்திய அரசாங்கம் தில்லி குடிசைப் பகுதிகள் சீரமைப்பிற்கு எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் குரோதத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது. வலதுசாரி அடிப்படையிலான சட்டம் ஒழுங்கு இயக்கத்திற்கு ஆதரவு தருமாறு ஆட்சியில் இருந்த முதலமைச்சர் ஷீலா தீட்சித் பெருமுதலாளிகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்தார் மற்றும் தில்லி நகரை சர்வதேச தரத்திற்கு உயர்த்திக் கொண்டிருப்பதாக கூறினார். காங்கிரஸ் சந்தித்த கடுமையான தோல்வி அக்கட்சிக்குள் பெருமளவில் துக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ''நாம் நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டு இன்னும் அதிகமாக பாடுபட வேண்டியுள்ளது'' என்று கட்சித்தலைவர் சோனியா காந்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு இன்னும் அவகாசம் இருப்பதாக கட்சி தலைவர் சோனியா காந்தி ஆறுதல் கூறினார். ஆனால் சோனியா காந்தியோ அல்லது இதர மூத்த தலைவர்களோ கட்சிக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் காண்பதற்கு எந்தவிதமான ஆலோசனையும் கூறவில்லை. பி.ஜே.பி- குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும் அவற்றை ஆழமாக ஆராய்ந்தால் இரண்டு பெரிய கட்சிகள் மீதும் வளர்ந்து வருகின்ற மக்களது அதிருப்தியை தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துக் காட்டுவதை அறிந்து கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி-ஏராளமான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது ஆனால் அக்கட்சிக்கு 1998- தேர்தலில் 34 சதவீத-வாக்குகள் கிடைத்தது, தற்போது 39 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு 9 சதவீதம் குறைந்திருக்கின்றது. இதைவேறு வகைகளில் விளக்குவதென்றால் சிறிய கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு 4சதவீதம் இந்த தேர்தலில் அதிகரித்திருக்கிறது. ராஜஸ்தானிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது. பெரிய கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகள் 78-சதவிகிதத்தில் இருந்து 75-சதவிகிதமாக குறைந்துவிட்டது. தில்லி பெருநகரத்தில் 47-சதவிகித மக்கள் வாக்களிப்பைப் பற்றி கவலைப்படவில்லை. தேர்தல் முடிவுகள் கோடிட்டு காட்டியிருப்பது போல், மக்களில் பலர் பி.ஜே.பி-மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் எந்தவிதமான வேறுபாட்டையும் காணவில்லை. இரண்டு கட்சிகளுமே சர்வதேச மூலதனத்தின் சார்பில் பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கியினால் கோரப்படும் பொருளாதார சீரமைப்பு வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் பி.ஜே.பி- இந்து வகுப்பு வாதத்தின் பிரதான அம்சங்களை காங்கிரசும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இந்து பழைமை வாதிகள் பசுக்களை புனிதமானது என்று கருகிறார்கள்- அப்படிப்பட்ட பசுக்களை எப்படி பாதுகாப்பது என்பது இரு கட்சிகளாலும் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் சிறப்பு அம்சமாக இருந்தது. இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டுள்ள பிரதான ஸ்ராலினிச கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ-எம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) இரண்டு பெரிய கட்சிகளின் மீதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திகளால் பயன் பெறவில்லை. மத்தியப் பிரதேசத்தில் ஒரு இடத்திலும் ராஜஸ்தானில் ஒரு இடத்திலும் தான் சிபிஐ(எம்) வெற்றி பெற்றிருக்கிறது. பி.ஜே.பி-யின் வகுப்புவாத பிரச்சனைகளை காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக கடுமையான விமர்சனம் செய்கின்ற அதே நேரத்தில் இந்த இரண்டு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளும் பி.ஜே.பி-க்கு மாற்றாக காங்கிரஸ்தான் முற்போக்கான கட்சி என்று சித்தரித்து வருகின்றன. தேர்தல் முடிவுகளை பெரு வர்த்தக பிரிவுகள் உடனடியாக பாராட்டி வரவேற்றுள்ளன. பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்துவதற்கு பி.ஜே.பி-யை தலைசிறந்த அரசியல் கருவியாக இந்தியாவில் பெரு வர்த்தக பிரிவுகள் கருதுகின்றன. மும்பை பங்குச் சந்தையில் 30-பங்குகள் அடங்கிய குறியீட்டு எண் தேர்தல் முடிவுகள் வெளியான வெள்ளிக்கிழமையன்று 20-புள்ளிகள் உயர்ந்தன. இந்திய வர்த்தகர்கள் சபையின் தலைவர் சைலேஷ் ஹரி பக்தி, தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவிக்கும் போது "தேர்தல் முடிவுகளின் போக்கு தொழில் துறைக்கும் சந்தைகளுக்கும் ஆக்கபூர்வமான ஊக்குவிப்பாக அமைந்திருக்கிறது" என்று கருத்து தெரிவித்தார். இந்திய தொழில்கள் சம்மேளனத்தின் டைரக்டர் ஜெனரல் என்.எஸ்- சீனிவாசன் பிஜேபி -க்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார், பிஜேபி பதவிக்கு வந்துள்ள மூன்று மாநிலங்களிலும் "பொருளாதார சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு பெருக்கத்தில் முன்னேற்ற பாதையில் செல்லவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடப் போவதாக கோடிட்டுக் காட்டி பிஜேபி உடனடியாக அந்த கோரிக்கைக்கு பதிலளித்தது. இந்தியாவின் வர்த்தக அமைச்சர் அருண் ஜேட்லி பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "மேலும் பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு இது வலிமையான வாக்காகும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். பெரு வர்த்தக நிறுவனங்கள் கோருகின்ற கொள்கைகளை செயல்படுத்தினால் தனியார்மயத்தை பெருக்கினால், அரசு செலவினங்களை குறைத்தால் வேலைவாய்ப்புக்கள் குறையும், தொழிலாளர் நிலைமைகள் பாதிக்கப்படும் சமூக சேவைகளும் குறையும், இவற்றின் மூலம் மிகப்பெரும் அளவிற்கு எதிர்ப்பு உருவாகும் என்பதை இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாய்பேயி தெளிவாகவே அறிந்திருக்கிறார். நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் நிர்வாகத்திற்கு எதிராக மக்களிடையே உருவாகியுள்ள அதிருப்தியை பிஜேபி -தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதே தவிர, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் "ஆள்பவருக்கு எதிரான காரணியை" சந்திக்க வேண்டியிருக்கும். எனவேதான் நான்கு மாநில சட்டசபைகளிலும் பிஜேபி வெற்றி பெற்றிருந்தாலும் உடனடியாக தேசிய நாடாளுமன்ற தேர்தலை நடத்தப்போவதில்லை என்று வாஜ்பாயி அறிவித்திருக்கிறார். |