World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil

Meetings on 50 years of the International Committee of the Fourth International

Peter Schwarz: "The founding principles have been confirmed"

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 50 ஆண்டுகள் பற்றிய கூட்டங்கள்

பீற்றர் சுவார்ட்ஸ்: "அடிப்படைக் கோட்பாடுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன"

By Peter Schwarz
6 December 2003

Back to screen version

உலகம் முழுவதிலும் உள்ள மரபுவழி ட்ரொட்ஸ்கிச வாதிகளுக்கு, நான்காம் அகிலத்தின் செயலாளராக அப்பொழுது இருந்த மிசேல் பப்லோவின் திருத்தல்வாதப் போக்கை எதிர்த்துப் போரிட, அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சி (US Socialist Workers Party SWP), நவம்பர் 16ம் தேதி ஓர் பகிரங்கக் கடிதத்தின் மூலம் அழைப்பு விடுத்தது. ஜேம்ஸ் பி. கனனால் எழுதப்பட்ட இப் பகிரங்கக் கடிதம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடிப்படைக்கு வித்திட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனிய, பிரிட்டிஷ் பகுதிகள், the Partei fur Soziale Gleichheit, மற்றும் Socialist Equality Party இரண்டும் பிராங்பேர்ட்டிலும், லண்டனிலும் நவம்பர் 23, 30 தேதிகளில் இந்த நிகழ்ச்சியை மகிழ்வுடன் நினைவு கூரவும், கடந்த 50 ஆண்டுகளில் இதன் அரசியல் பணியின் முக்கியத்துவத்தை, மறு ஆய்வு செய்யவும் கூடின. இவ்விரு கூட்டங்களிலும், ICFI -இன் செயலாளரான பீற்றர் சுவார்ட்சும், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரான கிறிஸ் மார்ஸ்டனும் சிறப்பு உரை ஆற்றினர்.

பீற்றர் சுவார்ட்சின் சிறப்புரையைக் கீழே வெளியிட்டுள்ளோம். கிறிஸ் மார்ஸ்டனுடைய உரை, டிசம்பர் 8, திங்களன்று வெளியிடப்படும்.

ஒரு புதிய தொழிலாளர் கட்சியின் அவசியம்

இன்று நாம் மகிழ்வுடன் நினைவு கூரும், நான்காம் அகிலத்தின் அனத்துலகக் குழு தோற்றுவிக்கப்பட்டது, 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியாகும். ஆயினும்கூட, அதனுடைய சுடர்விட்டுப் பிரகாசிக்கும் முக்கியத்துவம் இன்றளவும் பொருத்தமுடையது ஆகும்.

இன்றைய உலகநிலை, ஆழ்ந்த அரசியல் நெருக்கடியின் தன்மையைக் கொண்டுள்ளது.1990 களின் ஆரம்பத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்கும் ஒருவர், சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, "வரலாற்றின் முடிவை"ச் சுட்டிக்காட்டுகிறது என குறிப்பிட்டதற்கு முற்றிலும் மாறாக, சோவியத் ஒன்றியத்தின் தகர்ப்பு, குளிர் யுத்த காலத்தில், குளிர்சாதனப் பெட்டிக்குள் உறையவைக்கப்பட்டிருந்த அனைத்து மோதல்களையும், முரண்பாடுகளையும் வெளிக்கொண்டு வந்துள்ளது.

இன்றைய நெருக்கடியின் நிலநடுக்க மையத்தானமாக இருப்பது அமெரிக்காவாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சர்வதேச உறுதித்தன்மையின் இதயமாகக் கருதப்பட்ட இந்த நாடு, இப்பொழுது உலகம் முழுவதும் உறுதியற்ற நிலைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த காரணியாகிவிட்டது. தன்னுடைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகம் முழுவதையும் தன்னுடைய நலன்கள், சிறப்புத் தோற்றம் இவற்றைக் காக்க, திருத்தியமைக்கும் முயற்சியில் செயல்பட வேண்டியதாக உள்ளது. அவ்வாறு செய்யும் போக்கில், முன்பு தேசிய, சர்வதேச அரசியல், சமூக முரண்பாடுகள் வெடித்து விடாமல் அமைதிப்படுத்திய இயங்கு முறைகள் அனைத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது.

1980களில் றொனால்ட் றேகன் தலைமையில் அமெரிக்க சமுதாயம் ஆழ்ந்த துருவமுனைப்படலைக் கண்டது; இது 1990களில் பங்குச் சந்தையின்பூரிப்பால் இன்னும் தீவிரமாயிற்று. இதன் விளைவாக சமுதாயச் செல்வம் ஒரு சிறிய செல்வந்த தட்டைச் சென்று அடைந்ததோடு, அடிப்படை சமுதாயப் பாதுகாப்பு முறைகள் அழிக்கவும் பட்டன. இதன் விளைவாக, தற்போதைய அமெரிக்க சமுதாயத்தில் துருவமுனைப்படல், வரலாறு காணாத அளவிற்கு இருக்கிறது. நாட்டுச் செல்வத்தின் நாற்பது சதவிகிதம், மக்கள் தொகையின் உயர் சதவிகிதத்தினரிடம் குவிந்துள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவை விட இது இரு மடங்காகும். பொதுவாக பெரிய அமெரிக்க வர்த்தக நிறுவனத்தின் முதலாளி இன்று சராசரித் தொழிலாளரைவிட 475 மடங்கு அதிக ஊதியம் பெறுகிறார்.

அவ்வளவு கடுமையான வித்தியாசங்கள் ஜனநாயக உறவுகளோடு பொருந்தாதவை ஆகும். இந்த சமூக துருவமுனைப்படலால் தான், தீவிர வலதுசாரி, அரைப்பகுதி குற்றஞ்சார்ந்த சிறுகுழு, அதிகாரத்தின் மிக உயர்ந்த இடங்களில் நேரடியாக உயர்ந்திருக்க முடிந்துள்ளது. ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷே, வெளிப்படையான பாசிச சக்திகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள, கிறிஸ்தவ வலதுசாரி, மற்றும் அமெரிக்க செல்வந்த தட்டின் ஆக்கிரோஷமான கூறுபாடுகளைச் சார்ந்தவர் ஆவார். ஆனால், ஜனநாயகக் கட்சியினரின் பங்கைப் பொறுத்தவரை இதற்கு கடும் எதிர்ப்பின் எந்த விதமான அடையாளமும் காணப்படவில்லை. முந்தைய ஜனாதிபதி கிளிண்டனுக்கு எதிரான பெரிய குற்ற விசாரணை கொண்டுவருவதற்கு ஆதரவு கொடுத்ததுடன், சென்ற ஜனாதிபதித் தேர்தல் திருடப்பட்டதையும் ஏற்றனர். ஈராக்கியப் போரைத் தடையின்றித் தன்விருப்பப்படி நடத்த புஷ்ஷிற்கு இடமளித்ததுடன், அந்த நாட்டு ஆக்கிரமிப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வாக்களித்துள்ளனர். எந்த நிதி ஆதிக்க உயர் சிறு குழுவிலிருந்து குடியரசுக் கட்சியினர் வருகின்றனரோ, அதே குழுவிலிருத்து தான் ஜனநாயகக் கட்சினரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தச் சலுகைகள் நிறைந்த சிறுகுழு ஆட்சிக்கும் பெரும்பாலான மக்களுக்கும் இடைவெளி வேறுபாடுகள் அதிகமாகும் பொழுது ஜனநாயகக் கட்சியினர் அதைப் பற்றி தீவிர எதிர்ப்புக் காட்ட இயலாத நிலையில் தான் இருக்கின்றனர்.

அமெரிக்கா, தவிர்க்க முடியாத அளவிற்கு புரட்சிகர மோதலை எதிர்கொள்ளும் திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அந்த வழியில் சென்று கொண்டிருக்கும்போது, உலகத்தையும் பெருங்குழப்பத்தில் ஆழ்த்துவதோடு, மிகப்பெரிய முறையில் சமூக முரண்பாடுகளையும் தீவிரமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கிலிருந்து உலகத்தின் எந்தப் பகுதியும் ஒதுக்கப்படவில்லை. சர்வதேச அளவில் எந்தப் பக்கம் திரும்பினாலும், இந்தச் சமூக துருவமுனைப்படலைக் காண முடியும்.

முன்பு ஒப்பீட்டளவிலான சமத்துவத்தால் பண்பிடப்பட்ட சோவியத் ஒன்றியம், இன்று உலகில் மிகச் சமத்துவமற்ற சமுதாயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் வறுமையிலும் செய்வதறியா வகையிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ள நிலையில், 17 தனிநபர்கள் பில்லியனர்கள் என்ற மதிப்பிடத்திற்கு உயர்ந்துள்ளனர். இதே நிலைதான் பெரும்பாலான மக்கள், நம்பிக்கை தளர்ந்த, வெறும் உயிர்தரிக்கும் நிலையில் மட்டும் வாழ்வதற்கு இழிந்து விட்டபோது, பழைய அதிகாரத்துவ துறைசார்ந்த அல்லது குற்றஞ் சார்ந்த தொகுப்பின் அணிகளில் இருந்து வந்த ஒரு சிறு தட்டினர், முண்டியடித்துக் கொண்டு உயரடுக்கிற்குச் செல்லும் இதே போன்ற நிகழ்ச்சிப்போக்கு கிழக்கு ஐரோப்பாவில் நடைமுறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆபிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய உலகின் மிக வறுமையான பகுதிகளில் மக்கள், நிதி மூலதனத்தினால், முறையாக இரத்தம் உறிஞ்சப்பட்ட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். போதிய உணவு, குடிநீர், மருத்துவப் பாதுகாப்பு இவையின்றி மில்லியன் கணக்கில் மக்கள் துயரம் தோய்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்தகைய பாதிக்கப்பட்ட நிலைமையில் வாழும் மக்கள், தொழில் துறையில் முன்னேறியுள்ள நாடுகளில், ஒரு சட்ட ஆதாரமில்லாத அடிமை முறை போன்ற வேலையைப் பெறும் நம்பிக்கையில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து, எல்லை கடந்து வருகின்றனர்.

மேற்கு ஐரோப்பாவில், 1980களில் அரசாங்கங்கள் செய்து முடிக்க இயலாமல்போன செயலான, நலன்புரி அரசின் முழுத் தகர்ப்பை, சில மாதங்களிலேயே செய்து முடிக்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றன. சமூக ஒத்திசைவு மற்றும் விட்டுக்கொடுப்பு போன்ற கொள்கைகளுக்கான புறநிலையான அடிப்படையை இப்பொழுது காண முடியவில்லை.

முதலாளித்துவத்தின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தை ஈராக் போர் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஈராக்கிய எண்ணெய்க் கிணறுகளின் மீதும், அப்பகுதியின் புவியியல் முறை முக்கியத்துவத்தினால் அதையும் பலவந்த முறையைக் கையாண்டு இரண்டையும் கைப்பற்றுவதற்காகவும் அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறி, தானே நிறுவியுள்ள சர்வதேச அமைப்புக்களின் விதிமுறைகளையும் மீறி, மிக இழிந்த பொய்களைக் கூறி, தம்மை பெருமதிப்பு குறைவிற்கு உட்படுத்திக் கொண்டு விட்டது.

மிக உயர்ந்த இராணுவ வலிமை இருந்தும் கூட, அமெரிக்கா இப்போரில் வெற்றி காணமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு, எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வருகின்றது. உள்நாட்டில் புரட்சி வெடிப்பு ஏற்படாமல், தன்மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு, அமெரிக்காவால் படைகளை பின்வாங்கிக் கொண்டும் வரமுடியவில்லை. இந்தச் சங்கட நிலையிலிருந்து மீள்வதற்கு, இன்னும் கூடுதலான பொறுப்பற்ற தாக்குதலையும் "மண்ணை எரித்தல்" கொள்கைக்கு மாற்றிக் கொண்டு ஈராக்கிய மக்களுக்கு மட்டும் இலக்காகக் கொள்ளாமல் அதன் அண்டை நாடுகளுக்கும் தன்னுடைய நட்புநாடுகளுக்கும் கூடத் தொடர்ச்சியான பாதிப்பை எதிர்விளைவாகக் காட்டிவருகிறது. இவ்விதத்தில் ஈராக்கியப் போர், வரவிருக்கின்ற இன்னும் பெரிய, கூடுதல் வன்முறை கொண்ட ஏகாதிபத்தியப் போர்களுக்குக் கட்டியம் கூறியுள்ளது.

இத்தகைய நிலைமைகளில், உலகெங்கிலுமுள்ள கணக்கிலடங்கா மக்கள், தங்களுடைய மிக அடிப்படையான நலன்கள், தற்போதுள்ள சமுதாய நிலைப்பாடுகளோடு பொருந்தாத தன்மையிலுள்ளதை அறிந்து வருகின்றனர். கடந்த காலத்தில் மக்கள் வாக்களித்த மற்றும் ஆதரவளித்த அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், முற்றிலும் திவாலாகிவிட்டன என்பதை நிரூபிக்கின்றன.

ஐேர்மனியில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆளும் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD), பசுமைக் கட்சியும், மூச்சுத்திணறக்கூடிய அளவு பாய்ந்து வலதுபுறம் சென்றுள்ளன. அதிபர் ச்சுரோடரின் தற்போதைய "2010 செயற் பட்டியலோடு", (Agenda 2010) இவருக்கு முன்பிருந்த பழமைவாத ஹெல்முட் கோலுடைய சமுதாயத் திட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பிந்தையது இன்னும் மிகுந்த நேர்த்தியான முன்னேற்றத் தோற்றத்தைக் காட்டுகிறது. இப்பொழுது சமூக ஜனநாயகக் கட்சிக்கான எதிர்ப்பானது, அவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை குறைவு, வாக்குகள் குறைவு இவற்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 1990களின் தொடக்கத்திலிருந்து, சமூக ஜனநாயகக் கட்சி 300,000 உறுப்பினர்களை இழந்துள்ளதோடு, இந்த விகிதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. சென்ற ஆண்டு 26,000 உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியேறியுள்ளனர்; இந்த ஆண்டு ஏற்கனவே 30,000 பேர் வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை, மரணம் அடைந்ததால் உறுப்பினர் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவான 7000 த்தை அடக்கவில்லை. கருத்துக் கணிப்பில் சமூக ஜனநாயகக் கட்சி உடைய மதிப்பு ஆழ்ந்து சரிந்துள்ளது, மற்றும் முதல் முறையாக மேற்கு ஜேர்மன் மாநிலத் தேர்தலில் அது 20 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே சமீபத்திய பவேரியத் தேர்தலில் பெற்றது. அதையும் விடச் சமீபத்திய உள்ளூராட்சித் தேர்தல்களில், பிராண்டன்பேர்க் மாநிலத்தில் பத்தில் ஒருவர் தான் சமூக ஜனநாயகக் கட்சிக்கு வாக்குப்போட ஆர்வம் காட்டினர்.

மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் சமூக ஜனநாயகத்திற்கு இத்தகைய நிலைதான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ரொனி பிளேயரின் புதிய தொழிற்கட்சி, ஒரு வெற்றுக்கூடே தவிர வேறொன்றுமில்லாமல் உள்ளது. பிரான்சில், மரபுவழியிலான இடதுசாரி கட்சிகள், நாட்டின் வலதுசாரி அரசாங்கம் விரைவில் ஆதரவு இழந்த நிலையைப் பயன்படுத்த இயலாத நிலையில் தான் உள்ளன.

சமீபத்திய கருத்துக் கணிப்புக்களிலும், தேர்தல்களிலும் பழமைவாதிகள் மற்றும் வலதுசாரி கட்சிகளுக்கு கூடுதலாகியுள்ள செல்வாக்கு, மக்கள் அனைவரும் வலதுபுறம் திரும்பிவிட்டனர் என்ற கருத்தைப் பிரதிபலிக்காது. இந்தநிலை, முதலிலும் அடிப்படையிலும் பழைய சீர்திருத்தத் தொழிலாளர் கட்சிகளின் வீழ்ச்சியைக் காட்டுகின்றது. அதனால் வலதுசாரி சக்திகள் அச்சுறுத்தல் கொடுக்கமுடியாதவை என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. மக்கள் தள ஆதரவில்லாத புஷ் ஆட்சியின் செயல் முறையினால் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதைக் காணமுடியும்.

உழைக்கும் மக்களுடைய நலன்களைப் பிரதிபலித்து, அவர்களுடைய அக்கறைகளை எடுத்துரைக்க கூடிய புதிய கட்சி ஒன்று அமைப்பது, இன்றைய அரசியலில் மிக முக்கியமான பணியாகும். மனிதகுலத்தின் வருங்காலமே இப்பணியைச் செய்து முடிப்பதில் தான் இருக்கிறது.

கடந்த சில வாரங்களிலும், மாதங்களிலும், உலகம் முழுவதும் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு வளர்ந்துள்ளதற்கான தெளிவான அடையாளங்கள் காணப்படுகின்றன. இவை உலக வர்த்தக அமைப்பு, நாடுகளின் தலைவர்கள் கூட்டங்களுக்கு எதிரான பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பெப்ரவரி 15ம் தேதி, உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; நலன்புரி அரசு தகர்ப்பிற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் பெருகிய வண்ணம் நடந்துள்ளன. நவம்பர் 1ம் தேதி, பேர்லினில் 100,000 மக்கள் கூடி, அரசாங்கத்தின் "செயற்பட்டியல் 2010" க்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பிரதான தொழிற்சங்கங்கள் புறக்கணித்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

ஒரு மகத்தான சமூக இயக்கத்தைக் கட்டியம் கூறி வரவேற்பவையே இத்தகைய பெருகிவரும் சமுதாய, அரசியல் எதிர்ப்புக்கள் ஆகும். ஆனால் இத்தகைய இயக்கம் உழைக்கும் வர்க்கம் தன்னுடைய விதியைத் தானே நிர்ணயித்துக்கொள்ள ஒரு மூலோபாயத்தை இயல்பாக வளர்த்துக் கொள்ள வகைதெரியாமல் இருக்கிறது. இங்குதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 50 ஆண்டுகால வரலாற்றின் முக்கியத்துவம் இருக்கிறது.

அரை நூற்றாண்டிற்கும் மேலாக, மிகக் கடினமான சூழ்நிலைகளின் கீழ், அனைத்துலகக் குழுவானது, புரட்சிகர மார்க்சிசத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும், பாதுகாத்து வருகிறது. குறுகியகால அரசியல் ஆதாயங்களுக்காக, உழைக்கும் வர்க்கத்தின் நீண்ட நாள் நலன்களைத் தியாகம் செய்துவிடும் ஒவ்வொரு முயற்சியையும் அது தடுத்துள்ளது. நான்காம் அகிலத்தின் திட்டங்கள் இன்று, உழைக்கும் வர்க்கத்தின் புதிய எழுச்சியுடன் இயைந்து நின்று, அதை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் அடிப்படையாகத் திகழ்கிறது. பழைய கட்சிகள் ஏன் தோல்வியுற்றன என்பதைத் தெரிந்து கொள்ளாமல், 20ம் நூற்றாண்டின் அரசியல் அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாமல், புதிய தொழிலாளர் கட்சியை வளர்க்க முடியாது. இந்த விதத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு பிரத்தியோகமான, தனிச்சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. இதன் வரலாறு 20ம் நூற்றாண்டுப் படிப்பினைகளின் சாராம்சமான வெளிப்பாடு ஆகும்.

பப்லோவாதத்திற்கெதிரான போராட்டம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 1953ம் ஆண்டு, அப்பொழுது மிசேல் பப்லோவினாலும், பின்னர் ஏர்னஸ்ட் மண்டேலாலும் கலைத்து விடக்கூடிய போக்கைக் கொண்டிருந்த பப்லோ வாதத்திலிருந்து நான்காம் அகிலத்தின் வேலைத் திட்டத்தைக் காப்பாற்றுவதில் நிறுவப்பட்டது. 1953ல் எது ஆபத்திற்குட்பட்டிருந்தது?

சர்வதேச தொழிலாள வர்க்கம், 1920களின் முடிவுகளிலும் 1930களிலும் கண்ட தோல்விகளுக்கு மூலகாரணம், ஸ்ராலினிசத் தலைமையில் கம்யூனிச அகிலம் (மூன்றாம் அகிலம்), தவறானதும் எதிர்ப்புரட்சிகர கொள்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடித்ததுதான் என்று லியோன் ட்ரொட்ஸ்கி பகுத்தாய்ந்து கண்டிருந்தார். 1923ல் இடது எதிர்ப்பைத் தொடங்கியதிலிருந்தே, ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வளர்ச்சிக்கு எதிராகப் போராடி இருந்தார், அதன் தேசியத் திட்டத்தையும், அதன் தாறுமாறான தந்திர உத்திகளையும், சற்றும் கருணைகாட்டாத விமர்சனத்திற்கு உட்படுத்தினார். ஸ்ராலினிசத் தேசியக் கருத்துருவான "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்பதற்கு எதிராக சோசலிசப் புரட்சியின் சர்வதேசத் தன்மையை அவர் வலியுறுத்தி வந்தார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி, முதலாளித்துவ கோமிண்டாங்கிற்குத் தாழ்ந்து, பணிந்து செல்வதை ட்ரொட்ஸ்கி எதிர்த்தார். 1927ல் இவருடைய நிலைப்பாட்டின் சரியான தன்மை, ஷாங்காயில் கம்யூனிஸ்டுகளின் படுகொலைக்கு கோமிண்டாங் ஏற்பாடு செய்ததிலிருந்து துன்பம் நிறைந்த வகையில் உறுதிப்படுத்தப்பட்டது. ஜேர்மனியில் நாஜிக்களை எதிர்ப்பதற்கு, கம்யூனிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் ஒரு ஐக்கிய முன்னணிக்கு முன்மொழிந்தார். சமூக ஜனநாயகமும், பாசிசமும் இரட்டைக் குழந்தைகள் என்று அறிவித்த, தொழிலாள வர்க்கத்தைப் பிளந்த, அதன்மூலம் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்ற வழிசெய்த, ஸ்ராலின் மற்றும் தால்மன் ஆகியோரின் கொள்கைகளிலிருந்து விளையக்கூடிய பேரழிவுகள் பற்றி எச்சரிக்கை விடுத்தார். பிரான்சிலும், ஸ்பெயினிலும், தொழிலாள வர்க்கத்தை அதன் "ஜனநாயக முதலாளித்துவ வர்க்கத்துடன்" பிணைத்து, தொழிலாளர் இயக்கத்தை செயலிழக்கச்செய்து, அது தோல்வியுறுவதற்கு அனுமதித்த மக்கள் முன்னணி அரசியலை சவால் செய்தார்.

1933ல், ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வியை அடுத்து, என்ன நடந்தது என்பது பற்றி கம்யூனிச அகிலத்தில் ஊன்றி ஆய்வு செய்யாததை அடுத்தும், ட்ரொட்ஸ்கி, புரட்சியைப் பொறுத்த வரையில் மூன்றாம் அகிலம் சாகுந் தறுவாயில் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார், மற்றும் நான்காம் அகிலத்தை நிறுவத்தேவையான பணிகளில் ஈடுபட்டார். இது பின்னர் பாரிசில் 1938ல் தோற்றுவிக்கப்பட்டது.

இதன் ஸ்தாபகத் திட்டம் கூறுகிறது: "முதலாவதாக அழுகிக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் புறநிலைமைகளால், இரண்டாவதாக பழைய தொழிலாளர் அமைப்புக்களின் துரோகத்தனமான அரசியலால் பரந்துபட்ட மக்களுடைய தகவமைவு (நோக்குநிலை) தீர்மானிக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் தலைமை நெருக்கடி, மனிதகுலப் பண்பாட்டின் நெருக்கடியாக ஆகியிருப்பது, நான்காம் அகிலத்தால் மட்டுமே தீர்த்து வைக்கப்படமுடியும்."

இன்னொரு பந்தி கூறுகிறது: "இரண்டாம், மூன்றாம், ஆம்ஸ்டர்டாம், மற்றும் அராஜகவாத, சிண்டிகலிச அகிலங்களின் அதிகாரத்துவங்கள் மீதும் அவற்றைச் சுற்றிவரும் இடைநிலைவாத அமைப்புக்கள் மீதும், நான்காம் அகிலம் சமரசமற்ற போரை அறிவிக்கிறது... இவை அனைத்துமே, எதிர்காலத்திற்கு உறுதியளிக்கும் அமைப்புக்கள் அல்ல, கடந்தகாலத்தின் இழிந்த, தப்பிய எச்சங்களாகும்."

1950 களின் தொடக்கத்தில் இந்தக் கருத்துருக்களுடன் பப்லோவாதிகள் முறித்துக் கொண்டனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான நான்காம் அகிலத்தின் போராட்டத்தின் விளைவாக சோசலிசப் புரட்சியைக் கருதாமல், மாறாக, நிகழ்ச்சிகளின் அழுத்தத்தின் கீழ் இடதுபுறம் செல்லும் ஸ்ராலினிச அதிகாரத்துவம், குட்டிமுதலாளித்துவ தேசியவாதிகள், மற்ற சமூக சக்திகளின் நடவடிக்கைகளில் இருந்து எழும் ஒரு உற்பத்திப் பொருளாகப் பார்த்தனர். இந்த கருத்துருவின்படி, நான்காம் அகிலத்தின் பணி, தொழிலாள வர்க்கத்திடையே சோசலிச நனவிற்காகப் பாடுபடுதல், மற்றும் தொழிலாளர்களை அவர்களின் புரட்சிகரப் பாத்திரத்தை ஆற்றுவதற்கு இயலச்செய்வதில் அரசியல் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்கள் இவற்றை அபிவிருத்தி செய்தல் என்பது கிடையாது. மாறாக, பப்லோவாதிகள் தங்கள் பணியாக, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினரிடையே "புரட்சிகரப்" போக்குகளைத் தேடலும் அதற்கு ஆதரவு கொடுப்பதும் என பார்த்தனர். இது நான்காம் அகிலத்தைக் கலைப்பதற்கான சூத்திரம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

பப்லோவாதிகள், ட்ரொட்ஸ்கிச கருத்துருவான ஸ்ராலினிச அதிகாரத்துவம் எதிர்ப்புரட்சிகரமானது என்பதைத் திருத்தியதோடல்லாமல், அதற்கு ஒரு முற்போக்கு பாத்திரத்தையும் கொடுத்தனர். இவ்வாறு செய்ததின்மூலம் அவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு, மேலோட்டமான, பதிவுவாத வகையில் விளைவைக் காண்பித்தனர்.

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்கள், இரண்டாம் உலகப்போரின் முடிவில் வெளிவந்தாலும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் அவை காட்டிக் கொடுக்கப்பட்டன அல்லது நேரடியாகவே நசுக்கப்பட்டன. இந்த இலக்கை இத்தாலியிலும், பிரான்சிலும் உண்மையிலேயே முதலாளித்துவ அரசாங்கங்களில் நுழைந்துவிட்டதன் வழியாக அடைந்தன. சோவியத் ஆக்கிரமிப்பற்கு உட்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பாவில், ஒவ்வொரு தனித்த மக்கள் இயக்கத்தையும் அவர்கள் மூச்சுத்திணறடித்தனர். ஆயினும், 1948க்குப் பிறகு, ஸ்ராலினிச அதிகாரத்துவம், ஆக்ரோஷமான அமெரிக்க குளிர் யுத்த கொள்கைக்கு, கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் விடையிறுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியதாயிற்று. அந்நாடுகளில், அடிப்படைத் தொழில், வங்கிமுறை, செய்தி ஊடகம் மற்றும் போக்குவரத்துத்துறை ஆகியவை பகுதியாகவோ, முழுமையாகவோ தேசியமயமாக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சிகளின் அடிப்படையில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஒரு புரட்சிகரப் பங்கை ஆற்றமுடியும் என்ற முடிவிற்கு பப்லோ வந்தார். இதற்காக, தேசியமயமாக்கப்படல், உழைக்கும் வர்க்கத்தின் தீவிரப்பங்கு இல்லாமலும், அதிகாரத்துவம் தன்நிலையைக் காத்துக்கொள்ளும் வகையிலும்தான் நடந்துள்ளது என்பதைப் புறக்கணித்து விட்டார். ஸ்ராலினிசம் உலக அளவில் எதிர்ப்புரட்சிகர பங்கைத்தான் செலுத்திக் கொண்டு வருகிறது என்பதையும், கிழக்கு ஜேர்மனியில் 1953 ஜூன் 17 அன்று நடந்த தொழிலாளர்கள் எழுச்சியை நசுக்கியது, 1956ல் ஹங்கேரியில் மக்கள் எழுச்சியை நசுக்கியது என விளக்கப்பட்டுள்ள சான்றுகள் தெரிவிக்கும், இப்படியாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தை மிருகத்தனமாக நசுக்கியதையும் அவர் புறக்கணித்தார்.

பப்லோவைப் பொறுத்தவரை, சமூக யதார்த்தம் என்பது முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே நடக்கும் வர்க்கப் போராட்டத்தால் இனியும் தீர்மானிக்கப்படவில்லை என்பதாக இருந்தது, (இதில் ஸ்ராலினிசம் முதலாளித்துவ வர்க்கத்தின் முகவாண்மைப் பணியை மேற்கொண்டது) ஆனால்- அவர் எழுதியவாறே அவருடைய எழுத்துக்களில், "புறநிலை சமூக யதார்த்தம்" என்பது "முதலாளித்துவ ஆட்சி", "ஸ்ராலினிச உலகம்" என்பவற்றைக் கொண்டுள்ளது.

அவர் இன்னமும் அதிகமாகச் சென்று, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அபிவிருத்தி அடைந்ததைப்போல், "ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளின் நூற்றாண்டுகள்" காலகட்டத்தில் இடம்பெறுவதைப் போல சோசலிசத்திற்கான பாதை அமையும் என்றும் விவரித்தார். இத் தத்துவத்தின்படி, நான்காம் அகிலத்தினுடைய பகுதிகளை கட்டி அமைக்கத் தேவையில்லை. இருக்கும் அமைப்புக்கள் ஒன்றில் ஸ்ராலினிசக் கட்சிகளுக்கு ஆலோசகர்களாக செயல்படலாம் அல்லது ஸ்ராலினிச கருவியமைப்புக்குள்ளேயே தங்களைக் கரைத்துக் கொள்ளலாம் என்றார்.

இதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் காலனித்துவ நாடுகளில், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் முக்கிய பங்கை ஆற்றிவந்திருந்த தேசிய இயக்கங்கள் மீதும் பப்லோ கொண்டிருந்தார். அந்நாடுகளில் தொழிலாள வர்க்கம், தேசிய முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து, தனித்து நின்று தன்னை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களை நம்பக்கூடாதென்றும் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியிருந்த போதிலும், பப்லோ தேசிய இயக்கங்களில் தொழிலாள வர்க்கம் தன்னை முற்றிலும் கரைத்துக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். கடைசியில் அவர் அல்ஜீரியாவிற்குச் சென்று பென் பெல்லா அரசாங்கத்தில் அமைச்சராகி, ஆபிரிக்கா முழுவதும் தேசிய இயக்கங்களுக்கு உத்தரவாதமும், ஆதரவும் கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். இந்தப் பங்கின்போது, அவர் மாஸ்கோ அதிகாரத்துவத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டார்.

தொழிலாள வர்க்கத்தின் மீது அவநம்பிக்கை

சோசலிச சமுதாயத்தை நிர்மாணிப்பது, தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ்தான் முடியும் என்றும், நான்காம் அகிலத்தின் பகுதிகளை கட்டி அமைத்தால்தான் அது முடியும் என்றும் வலியுறுத்திய அனைத்துலகக் குழுவின் நிலைப்பாட்டைவிட, 1953ம் ஆண்டு பப்லோ எடுத்த நிலை, மேம்போக்காகப் பார்க்கும்போது, "நடைமுறைக்கு ஏற்றது", "யதார்த்தமானது", மற்றும் "நம்பிக்கையூட்டுவது" என்று தோன்றலாம். உண்மையாகவே, பப்லோவாதிகள் எடுத்த நிலைப்பாடு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத்திறனில் ஆழ்ந்த அவநம்பிக்கையைப் பிரதிபலிப்பது ஆகும்.

இந்தப் பிரச்சினையைச் சற்று விரிவாகக் கூற விரும்புகிறேன்; ஏனெனில், இதேபோன்ற நிலைகள் கணக்கிலடங்கா அரசியல் இயக்கங்களில், குறிப்பாக ஜேர்மனியில் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளன. பப்லோவும், மண்டேலும் தங்கள் கருத்துக்களில் தனியே நிற்கவில்லை, சொல்லப்போனால் பரந்திருந்த சிந்தனைப் போக்குகளுக்கு அவர்கள் தங்கள் பிரதிபலிப்பை காட்டியிருந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் திறனைப்பற்றி பல போக்குகள் சந்தேகம் தெரிவித்திருந்தன. அவர்கள், 1920, 1930களின் தோல்விகளுக்கு, சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலினிசத் தலைவர்கள் கையாண்ட தவறான அரசியல் போக்கைக் காரணமாகக் கருதாமல், தொழிலாள வர்க்கத்தின் சமூகப் பண்பிலேதான் காரணம் தேடினர்.

உலகப் போரின் பேரழிவு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நிலை, உலகப் போருக்குப்பின் வெளிவந்த நாஜிக் குற்றங்கள், ஸ்ராலினிசத்தால் ஒரு தலைமுறைப் புரட்சியாளர்களே அழிக்கப்பட்டமை, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் புரட்சிகரப் போராட்டங்கள் மூச்சுத்திணற அடிக்கப்பட்டமை, இறுதியாக 1950 களின் தொடக்கத்தில் பொருளாதார மற்றும் அரசியல் உறுதித் தன்மையையும், சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளின் ஒப்பீட்டளவிலான பலம் உட்பட, தொடர்ச்சியான நிகழ்வுகளிலிருந்து, தொழிலாள வர்க்கம் புரட்சிகரப் பங்கைச் செய்வதற்கு இயல்பிலேயே இயலாதது என்று பொது முடிவிற்கு அவர்கள் வந்தனர்.

நான்காம் அகிலத்தில் பிளவு ஏற்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், போரின் கடைசி ஆண்டுகளில் எழுதப்பட்டு 1947ல் வெளியிடப்பட்ட ஆவணம் ஒன்று இந்த முறையில் தக்க முன்மாதிரியாக உள்ளது. இந்த ஆவணம் வெளிப்படையாகக் கூறுவதாவது: "தொழிலாளர்களுடைய செயலாற்றும் இயலாமை, ஆட்சியாளர்களுடைய சூழ்ச்சித்திறனால் ஏற்பட்டது அல்ல, அது தொழில்துறைச் சமுதாயத்தின் தர்க்கரீதியான விளைவு ஆகும்."

தொழிலாள வர்க்கத்தின் இயலாமை, தொழிற்துறை மயமாக்கப்பட்ட சமூகத்தின் தர்க்கரீதியான விளைவு எனப்படும் இந்தக் கருத்தாய்வு, பெரிய வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டு, பலவடிவங்களில் திரும்பத் திரும்ப கூறப்பட்டது, உதாரணமாக: "உற்பத்திமுறை நெடுங்காலமாக இயைந்து இயங்குவதற்கு செய்யும் சமூக, பொருளாதார, விஞ்ஞான எந்திரங்கள் இன்னும் சிக்கலாகவும் துல்லியமாகவும் ஆக, அவை கொடுக்கக் கூடிய அனுபவங்கள் அதிக வறுமையின் தன்மையைக் கொண்டுவிடும்." இந்தவகையில், "அனுபவம் நிறைந்த நாடுகளின் உலகம் இரண்டிலும் வாழக்கூடிய நிலைக்கு" இயற்போக்குடையதாக இருக்கும்.

இன்னும் சற்று ஊன்றிப்பார்த்தால், இந்த உரைமூலம், "எளிதாகச் சர்வாதிகாரத்திற்குத் தாழ்ந்து நிற்பதற்கு தயாரான தொழில்நுட்பம் பயின்ற மக்களின் புதிரான தன்மை" மற்றும் அவர்களுடைய "ஜனரஞ்சக அறிவுப் பிறழ்ச்சிக்கு தன்னை அழித்துக் கொள்ளும் நாட்டம்" பற்றிப் பேசுகின்றது. இங்கு தொழிலாள வர்க்கம் தன்விருப்பமற்ற மாக்கள்கூட்டம் போல், மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிவிடும் எந்த மற்றும் ஒவ்வொரு வலதுசாரி பேச்சாளருக்கும் எளிதில் மயங்கிவிடும் கும்பலாகச் சித்தரிக்கப்படுகிறது.

இந்தச் சொற்றொடர்கள், Max Horkheimer, Theodor W. Adorno ஆகிய இருவரும் எழுதியுள்ள Dialectic of Englightenemnt என்ற பிராங்க்பேர்ட் பள்ளி (Frankfurt School) சிந்தனையாளர் வரிசையில் எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் காணப்படுகிறது; இன்றுவரை இது ஜேர்மன் மற்றும் சர்வதேச அறிவுஜீவித வாழ்க்கையில் நிலைத்த செல்வாக்கை கொண்டுள்ளது. 1968 மாணவர் இயக்கமும், பசுமைக் கட்சியும் கணிசமாக பிராங்க்பேர்ட் பள்ளி சிந்தனையினால் கணிசமான அளவு செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தன என்பதை நாம் அறிவோம்.

ஹோர்க்ஹைமரும், அடோர்னோவும் தங்களை முதலாளித்துவத்தின் இடதுசாரி விமர்சகர்கள் என்று கருதுபவர்கள் ஆவர். அவர்கள் இருவரும் பலரால் மார்க்சிச வாதிகளாக (தவறாக) விவரிக்கப்படுகின்றனர். ஆனால், முதலாளித்துவ சமுதாயத்தில் அதன் புறநிலையான காரணத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகரப் பங்கு உண்டு என்னும் மார்க்சிச நிலைப்பாட்டை அவர்கள் உறுதியாக நிராகரித்துள்ளனர். மேலும், முதலாளித்துவத்தின் அபிவிருத்தி மற்றும் அதன் முரண்பாடுகள் இவற்றின் வளர்ச்சி, தொழிலாள வர்க்கத்தை செயலிழக்கவும் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொள்ளமுடியாததாகவும் ஆக்க பயன்படுகின்றன என்று கூறும் அளவிற்கு கருத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் ஆளும் முதலாளி வர்க்கம் அனைத்து அதிகாரத்தையும் கொண்டு, தங்கள் விருப்பப்படி, தொழிலாளர்களைச் சுரண்ட, ஆட்டிவைக்க, ஏமாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர்.

அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள், "ஆணையிடப்பட்ட வாழ்க்கைத்தரத்தின் ஒவ்வொரு உயர்வும், ஐயத்திற்கிடமில்லாத வளர்ச்சியின் போக்குடைய தேவையை ஒட்டி நிகழும்போது, இன்னமும் அதிகமான அளவிற்கு அவர்களை வலிமை இழக்கச்செய்துவிடும் என்று, ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இயந்திரங்களைப் பழுதின்றிக் காக்கும் தொழிலாளர்களுடைய வாழ்க்கைத் தரம் உறுதியளிக்கப்பட்டால், அவர்களுடைய வேலைநேரப்பகுதியில் குறைவாக சமுதாய ஆட்சியாளர்களுக்குச் செலவிடப்படும் வகையில் ஒதுக்கப்பட்டால், எஞ்சிய தேவையற்றவர்கள், பெரும்பாலான மக்கள், மற்றொரு இராணுவப்பிரிவுபோல கடும் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டு, இவ்வமைப்பு முறையின் தற்கால, வருங்கால பெரியதிட்டங்களுக்கு உதவ அதிகப்படி பொருள்போல விளங்குவர். பெரும்பாலான மக்களுக்கு உணவு கொடுக்கப்பட்டு, உறைவிடம் கொடுக்கப்பட்டு, வேலையில்லாப் பட்டாளம் போல் நடத்தப்படுவர். அவர்களுடைய கண்ணோட்டத்தில், இந்த நிர்வகிக்கப்பட்ட வாழ்க்கையில் வெறும் பொருட்கள் போல் இருத்தல், தற்கால வாழ்வின், மொழி, அறிந்துகொள்ளுதல் உட்பட அனைத்துத் துறைகளிலும் செயலாற்றல், புறநிலைத் தேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும், அதற்கு எதிராக அவர்கள் எதுவும் செய்யமுடியாது என்றும் நம்புகிறார்கள்."

இத்தகைய தோற்றம், உழைக்கும் மக்களை ஒரு புரட்சிகரச் செயலுக்கு இடமில்லாமல் செய்துவிடுகிறது. இந்தத்தீய வட்டத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி, Horkheimer, Adorno இருவரும் கூறுவது, "விமர்சன சிந்தனை" (அதாவது, இவர்களைப் போன்ற புத்திஜீவிகளால் சமுதாயம் விமர்சிக்கப்படுவது ஒன்றுதான்).

ஹோர்க்ஹைமரும், அடோர்னோவும் சென்ற அளவிற்கு, பப்லோவும், மண்டேலும் செல்லவில்லை. ஆனால், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு திரும்பிய முறையில், புரட்சியை அது செயல்படுத்திவிடும் திறனுடையது என்று அவர்கள் கருத்துத் தெரிவித்த முறையில், பிராங்க்பேர்ட் சிந்தனையாளர்களின் குழுவைத் தோற்றவித்தவர்களுடைய எண்ணங்களின் செல்வாக்கிற்கு வலுவாக ஆட்பட்டிருந்தனர் என்பது தெளிவேயாகும். அவர்கள், பிந்தையவர்களுடைய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயல்பு பற்றி ஆழ்ந்த அவநம்பிக்கையைத்தான் கொண்டிருந்தனர்; இவ்வர்க்கத்தை ஒரு ஜடப் பொருளாகத்தான் கருதி இருந்தனர், வரலாற்றின் விஷயமாகப் பார்க்கவில்லை.

மார்க்சிசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இடையிலான சக்திகளின் உறவு

பப்லோவாதிகள் ஏற்றுக் கொண்டிருந்த கருத்துருக்கள் நடைமுறை விளைவுகளைக் கொண்டிருந்தன. நான்காம் அகிலத்தின் பெயரில் அவர்கள் ஸ்ராலினிசத்தையும், குட்டிமுதலாளித்துவ தேசியவாதத்தையும் திருத்தத்துடன் ஏற்றமை, மார்க்சிச புரட்சிகர முன்னோக்கிலிருந்து அதிகாரத்துவத்தின் கருவிகளோடு மோதல் கொள்ள வந்த தொழிலாளர்களை துண்டித்து அனுப்ப வசதியாக இருந்தது. அதேநேரத்தில், பப்லோவாதிகள் தங்களால் முடிந்த அளவிற்கு, கீழ்த்தரமான தந்திரங்களையும், ஆத்திரமூட்டுதல்களையும் கையாண்டு, நான்காம் அகிலத்தைத் தனிமைப்படுத்த முற்பட்டனர்.

இலங்கையில், லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), அரசியலளவில் பப்லோவாதிகளை ஆதரித்து, ஒரு முதலாளித்துவக் கூட்டணி அரசாங்கத்தில் சேர்ந்து, சிங்கள பேரினவாதத்திற்கு நிபந்தனையற்று சரணடைந்து, இன்றளவும் தொடர்கின்ற குருதிபெருகும் உள்நாட்டுப் போருக்கும் அடிப்படையைத் தோற்றுவித்தது. இலத்தீன் அமெரிக்காவில், பப்லோவாதிகள் கொடுத்த அழைப்பின் விளைவினால், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், கொரில்லாப் போர்முறையையை மேற்கொண்டு தங்கள் உயிரை இழந்தனர். காட்டுப் பகுதிகளில் தளங்களிலிருந்த இப்போராளிகள் நகரத்திலிருந்த தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரிக்கப்பட்டதனால், இராணுவம் மற்றும் அரசு அமைத்திருந்த கொலைப் படைகளுக்கு எளிதில் இலக்காயினர்.

ஆனால், இறுதி ஆய்வுகளில், புறநிலை அவர்களது கொள்கைகளுக்கு சாதகமாக இருந்ததால், அனைத்துலகக் குழுவை மட்டும்தான் தனிமைப்படுத்த முடிந்தது. ஸ்ராலினிஸ்டுகள், சீர்திருத்தவாதிகள், தொழிற்சங்க அமைப்புக்கள் ஆகியவற்றின் ஆதிக்கமும், காலனித்துவ மக்களிடையே எழுந்த தேசிய இயக்கங்களின் பிடியும், சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் வளர்ச்சி அடைய பெரும் இடர்பாடுகளை ஏற்படுத்தின.

இந்தச் சூழ்நிலையின் கீழ், பப்லோவாதம் அனைத்துலகக் குழுவிற்குள்ளும் எதிர் விளைவுகளைக் கொண்டிருந்தது. 1963ம் ஆண்டு, அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி, பப்லோவாதிகளுடன் சரணடைந்ததோடு, அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஐக்கிய செயலகத்தையும் (United Secretariat) அமைத்தது. 1971ம் ஆண்டில், பிரெஞ்சு, சர்வதேச கம்யூனிச கழகம் (French Organisation Communiste Internaionaliste -OCI), அனைத்துலகக் குழுவிடமிருந்து பிரிந்து, பிரான்சுவா மித்திரோனின் சோசலிச கட்சியின் (PS) முக்கியமான, முட்டுக்கொடுக்கும் தூணாக மாறியது. 1990களில், சோசலிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான பதவிகள், பழைய OCI உறுப்பினர்களால் --பிரெஞ்சுப் பிரதம மந்திரி பதவி உட்பட-- நீண்டநாட்கள் வகிக்கப்பட்டன. இறுதியாக, 1970 களில் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) அதிகரித்த அளவில் பப்லோவாத நிலைப்பாடுகளுக்கு தொடர்ந்து மாறிச்சென்றது.

1985-86ல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான உடைவு, பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கும், அனைத்துலகக் குழுவின் புரட்சிகர மார்க்சிசத்திற்கும் இடையிலான சக்திகளின் உறவில் ஒரு மாற்றத்தைப் பிரதிபலித்தது. இந்த உடைவானது, மிகச்சக்திவாய்ந்த அதிகாரத்துவக் கருவியான ஸ்ராலினிசக் கிரெம்ளின் அதிகாரத்துவம் பொறிந்துபோதலுக்கு முன்னோடிபோல் இருந்தது. இதன் பின்னர், பப்லோவாதிகள் சிதறுண்டு போயினர் அல்லது பிரேசில், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில், முதலாளித்துவ அரசியல் முகாமில் முழுமையாக நுழையும் நிகழ்ச்சிப்போக்கில் உள்ளனர். தன்னுடைய பங்கிற்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் தொடர்புச் சாதனமுமான உலக சோசலிச வலைத் தளமும், அதிகரித்த அளவில் செல்வாக்குப் பெற்று, இன்று மார்க்சிசத்தின் உண்மையான குரலாக ஏற்கப்பட்டுள்ளன.

இந்த சக்திகளின் உறவில் ஏற்பட்ட மாற்றம், புறநிலை நிகழ்வுப்போக்கில் தன்னுடைய மூலத்தைக் கொண்டுள்ளது. முதலாளித்துவ சமுதாயத்தில் ஏற்பட்ட துருவமுனைப்படலால், பப்லோ தன்னை தகவமைத்திருந்த (திசைவழிப்படுத்தியிருந்த) அதிகாரத்துவக் கருவிகளும், குட்டிமுதலாளித்துவ உருவாக்கங்களும் தகர்ந்து போயிருக்கின்றன. அமெரிக்காவின் புஷ் நிர்வாகத்தில் பொதிந்துள்ள முதலாளித்துவ பிற்போக்கு, உலகம் முழுவதும் புஷ்ஷின் தலைமையை அதிகமாகத் தொடர்ந்து ஏற்கும் அனைத்து ஸ்தாபனமயப்பட்டுள்ள கட்சிகளுக்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் பதிக்கப்பட்டுள்ள சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிக்கும் இடையே மையப் பாதை என ஒன்று இனிக் கிடையாது.

பப்லோவாதத்தின் ஐந்தொகை

பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் ஆனபின்னர், பப்லோவாதத்தின் இருப்பு நிலைக் குறிப்பை எழுதுவது சாத்தியமாக இருக்கிறது.

பப்லோவாதத்தின் "நூற்றாண்டுகள் உயிர்வாழும் ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்" என்னவாயின?

40 ஆண்டுகளாக பப்லோவாத ஐக்கிய செயலகம், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திடம் புரட்சிகர மற்றும் இடதுசாரிச் சிந்தனைப் போக்குகளை நன்கு ஆய்ந்து சில புதியவற்றையும் கண்டுபிடித்துள்ளது. மண்டேலுடைய கடைசிப் புத்தகங்களுள் ஒன்று, சோவியத் தலைவர் மிகையில் கோர்ப்பசேவிற்கு, சுடர்வீசும் புகழாரமாக உள்ளது. இப்புத்தகம் பொறிஸ் யெல்ட்சினுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஆயினும் அச்சின் மை உலர்வதற்குள்ளாகவே, கோர்ப்பசேவ் அரசியலின் உண்மை முக்கியத்துவமான சோவியத் ஒன்றியத் தகர்ப்பு, அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்து விட்டது. ட்ரொட்ஸ்கியே முன்கூட்டி என்ன நிகழக்கூடும் என கூறியது உறுதியாகிவிட்டது. தொழிலாள வர்க்கம் ஒன்றில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தூக்கி எறியும் அல்லது அக்டோபர் புரட்சியின் தேட்டங்கள் எல்லாவற்றையும் அழித்து, ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்கும் என்று அவர் 1930களில், எச்சரித்திருந்தார். சோவியத், மற்றும், சர்வதேச தொழிலாள வர்க்கம், இந்தத் தோல்விக்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்தன, தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

பப்லோவினாலும், மண்டேலினாலும் முழுமையாகப் புகழ் சூட்டப்பட்ட தேசிய இயக்கங்களின் தலைவிதி என்னவாயிற்று?

அவை மொத்தமாக, ஏகாதிபத்தியதுடன் அமைதியைக் காக்கத்தான் விரும்புகின்றன. ஒன்றுகூட, உண்மையான தரத்தில் ஏகாதிபத்தியத்திலிருந்து சுயாதீனமான நிலையை அடைய முடியவில்லை. எந்த நாடுகளில் அவை அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்ததோ அங்கெல்லாம் அவர்கள் சுதந்திர வர்த்தக வலையங்களை அமைத்து, ஏகாதிபத்தியம் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதற்குத் தங்கள் எல்லைகைளைத் திறந்து விட்டுள்ளனர். இதுதான் சீனா, வியட்நாம், தென்னாபிரிக்கா, நிகரகுவா ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது, இப்பட்டியலைப் பெருக்கிக் கொண்டே போகலாம். எந்த நாடுகளில் எல்லாம் தேசிய இயக்கங்கள் அடக்கப்பட்டு உள்ளனவோ, அங்கெல்லாம், யாசர் அரஃபாத் போல், அரஃபாத் விதியே விளக்குவது போல், அதைவிட குறைந்த வெற்றி வாய்ப்பு நம்பிக்கையுடன், அத்தலைவர்கள் அமெரிக்காவை அன்புடன் தங்கள் பக்கம் ஈர்க்க, வெள்ளை மாளிகை புல்தரையில் தங்களுக்கு வரவேற்பு கிடைக்காதா என்று ஏங்கி நிற்கின்றன.

இதில் மிகப்பரிதாபமான உதாரணம், குர்திஷ் தொழிலாளர் கட்சியின் (PKK) தலைவர் அப்துல்லா ஒஷ்லானுடைய (Abdullah Öcalan) நிலைமைதான். மிக இழிந்த சூழ்நிலைக்குட்படுத்தப்பட்டு அவர் வைக்கப்பட்டுள்ளார் என்றாலும்கூட, அவர் தொடர்ந்து துருக்கிய, சர்வதேச முதலாளித்துவத்திற்கு, மத்திய கிழக்கில் ஒழுங்கை உறுதிசெய்வதற்குத் தன் பணிகளைச் செய்து வருகிறார். மற்றொரு உதாரணம் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆவர். சிங்கள முதலாளித்துவ வர்க்கத்துடன் பேரம் பேசி ஓர் உடன்பாடு கண்டு தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை நாடுகடந்த நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

ட்ரொட்ஸ்கியாலும் அனைத்துலகக் குழுவாலும் போராடப்பட்ட முன்னோக்குகள், முற்றிலும் சரியானவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன: பாட்டாளி வர்க்கப் புரட்சியின் துணை விளைபொருளாகத்தான், தேசிய அடக்குமுறையிலிருந்து விடுதலை அடைய முடியும். மகத்தான ஜனநாயகப் பணிகள் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில்தான் உறுதியாக அடையப்பெறும். ஒரு காலகட்டம் முழுவதும், இந்தத் தீர்விற்கான வழி, தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ தேசியவாதத்திற்கு அடிபணிவதற்கு பப்லோவாதிகளால் ஊக்குவிக்கப்பட்டு, தடைக்கு உட்படுத்தப்பட்டது.

பப்லோவாத அமைப்புக்களின் அரசியல் திவால் தன்மை, அவை எளிதில் மறைந்து விடும் என்று பொருளாகிவிடாது. பழைய அதிகாரத்துவக் கட்சிகளின் சரிவில், முதலாளித்துவ வர்க்கம், திருத்தல்வாத குழுவைத்தான், அதன் வருங்கால ஆட்சிப் பணியாளர்களாக தேர்ந்தெடுக்கத்தக்க திறன் இருப்பதாகத் தொடர்ந்து காண்கிறது.

அடோர்னோ, ஹோர்க்ஹைமர் இவர்களுடைய செல்வாக்கிற்குட்பட்ட 1968 எதிர்ப்புத் தலைமுறை, எவ்வாறு உயர்ந்து முக்கியமான அரசாங்கப் பதவிகளைப் பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம். ஜோஷ்கா பிஷ்சர் போன்றோரின் வாழ்க்கைப் போக்கு முற்றிலும் பிராங்பேர்ட் சிந்தனையாளரின் எண்ணங்களின் பொறுப்பினால் என்று கருதிவிடுவது மிக வெகுளித்தனமாகிவிடும். ஆயினும்கூட, தெருச் சண்டைக்காரர் நிலையிலிருந்து ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி என்ற நிலைக்கு உயர்ந்த அவருடைய வாழ்க்கைப் போக்கில், அரசியல் தர்க்கவியலின் அடிநீரோட்டமுறை இருக்கத்தான் உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் கல்விக்குப் பதிலாகப் போலீசுடன் சண்டையிடுதல் மாற்றாக இருந்த, தெருச் சண்டைக்காரரின் அரசியலில், இன்றைய வெளியுறவு மந்திரி காண்பிக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான இகழ்ச்சி முன்பு இருந்ததுபோலவேதான் இருப்பதைக் காண்கிறோம்; இந்த இகழ்ச்சிக்கு தத்துவார்த்த அளவில் ஹோர்க்ஹைமரும், அடோர்னோவும் துணை நிற்கின்றனர்.

முதலாளித்துவ அரசாங்கங்களில் பதவிகளை எடுத்துக்கொள்வது, 1968ல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழைய உறுப்பினர்களான பிஷ்சர் போன்றார் 1970களில் பசுமைக் கட்சியை நோக்கித் திரும்பிய அவர்களோடு மட்டும் நின்று விடவில்லை. இந்தப் பட்டியலில் பழைய அல்லது இப்பொழுதும் "ட்ரொட்ஸ்கிச வாதிகள்" என்று சொல்லிக்கொள்வோரும் அடங்குவர். இவர்களில் மிகவும் அறியப்பட்டவர், சந்தேகத்திற்கிடமில்லாமல், OCI இல் 20 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த, பழைய பிரெஞ்சுப் பிரதம மந்திரியாக இருந்த லியோனல் ஜோஸ்பனும் கூடத்தான்.

பிரான்சின் முன்னணி நாளேடான Le Monde இன் தலைமை ஆசிரியரான எட்வி பிளெனெலும் (Edwy Plenel) ஒரு பழைய பப்லோவாதிதான். 1970 களில் Ligue Communiste Revolutionnaire (LCR) ல் உறுப்பினராக இருந்ததோடு, அதன் மத்திய குழுவிலும், ஆசிரியர் குழுவிலும் (அவர்களுடைய நாளிதழான Rouge இல்) பலகாலம் இருந்தவராவார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஒரு வாழ்க்கைச் சரிதத்தை வெளியிட்டார்; அதில் தன்னுடைய கடந்த கால அரசியல் வாழ்வைப் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, பல பத்தாயிரக்கணக்கான பிரெஞ்சு மக்களும் அதேபோன்ற சிந்தனைப் பள்ளியில் பயின்றவர்கள்தான் என்று இறுமாப்புடன் கூறுகிறார்.

பிரான்சின் ஸ்தாபன அமைப்பு, இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ள LCR, Lutte Ouvriere (LO) கூட்டணி, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐரோப்பிய மற்றும் பிராந்திய தேர்தல்களில் கணிசமான வெற்றிகளை அடையமுடியும் என்ற எண்ணத்தில் மூழ்கத் தலைப்பட்டிருக்கிறது. LCR முதலாளித்துவ அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கத் தயாராக உள்ளது என்பதற்கு நிறைய அடையாளங்கள் தெரிகின்றன. இந்த ஆண்டு வசந்த காலத்தில், இந்த அமைப்பு ஜாக் சிராக்கிற்கு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் சுற்றில் வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தது. எவர் பழமைவாத முதலாளித்துவ அரசியல் வாதிக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தாலும், அவர்கள் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைவதற்கும் தயங்க மாட்டார்கள்.

மற்றய நாடுகளில், பப்லோவாத ஐக்கிய செயலகத்தோடு இணைந்த அமைப்புக்கள், முதலாளித்துவ அரசியலில் சமீபகாலமாக முக்கிய பங்கை வகித்து வருகின்றன. பிரேசிலில், பப்லோவாதிகள் தங்களை நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான "லூலா" வின் (Luis Inacio da Silva) தொழிலாளர் கட்சியினுள் கரைத்துக் கொண்டு விட்டனர். பப்லோவாதிகள் அரசாங்கத்தில் ஒரு மந்திரிப் பதவியையும், சில பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையும், எண்ணற்ற ஏனைய உறுப்பினர்கள் உள்ளூராட்சி மற்றும் வட்டார முன்னணிப் பதவிகளையும் பெற்றுள்ளனர்.

இத்தாலியில், பப்லோவாதிகள் நீண்டகாலமாகவே, Party Rifondazione Communista (PRC) விற்குள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். மண்டேலின் மரணத்திற்குப் பின்னர் ஐக்கிய செயலகத்தின் முக்கிய தலைவராக வெளிப்பட்ட லிவியோ மைடன் (Livio Maitan) ஒரு PRC மத்திய குழுவின் உறுப்பினராக இருப்பதுடன், கட்சித் தலைவரான Fausto Bertinotti-க்குக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுள்ள ஆலோசகர்களுள் ஒருவராகவும் உள்ளார். 1994ல் இருந்து 2001 வரை, Rifondazione மைய-இடது அரசாங்கத்தைப் பதவியில் தக்கவைத்துக்கொள்ள முக்கிய பங்கை கொண்டிருந்ததோடு, ஐரோப்பிய நாணயமுறை ஒன்றியத்தில் சேருவதற்கான முக்கிய முன்நிபந்தனையான தேசிய வரவு-செலவுத் திட்டத்தை வெட்டிக் குறைப்பதனை இத்தாலிய நலன்புரி அரசுத் திட்டங்களைத் தகர்த்ததன் மூலம் செய்தது. பல சமயங்களில், மைய-இடது அரசாங்கம் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குகளைப் பெறுவதற்காகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் PRC ஐத்தான் நம்பியிருந்தது.

அநேகமாக மேலைநாடுகளிலேயே கம்யூனிச எதிர்ப்பு ஒருவேளை மிக அதிகமாக இருக்கக் கூடிய அமெரிக்காவிலும் கூட, பப்லோவாதிகள் உத்தியோகபூர்வமான முதலாளித்துவ அரசியலுடன் இணைந்து செயல்படுவதைக் காணமுடியும். சமீபத்தில் நடந்த கலிபோர்னிய கவர்னர் திருப்பியழைத்தல் தேர்தலில், பசுமைக் கட்சியின் முக்கிய வேட்பாளரான பீட்டர் காமெஜோ, முந்தைய காலகட்டத்தில் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நின்றவர் ஆவார். 1960களில் காமெஜோ சோசலிசத் தொழிலாளர் கட்சியின் இளைஞர் அமைப்பிலிருந்து அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களை வெளியேற்றியதில் முக்கிய பங்கு கொண்டிருந்தவர் ஆவார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மிக ஆச்சரியப்படத்தக்க முறையில் அரசியல் நிறுவன அமைப்பு காமெஜோவை நட்புமுறையில் நடத்தியது. ஒருதனிமனிதன் பெயரில் கரிபூசுவதற்காக அவனுடைய அந்தரங்க வாழ்க்கையின் உள்விவகாரங்களைத் தோண்டியெடுப்பதில் சிறிதுகூட மன உறுத்தல் பார்க்காமல் செயல்படும் ஒரு நாட்டில், எவருமே காமெஜோவின் "ட்ரொட்ஸ்கிச" கடந்த காலம் பற்றிக் கவனம் செலுத்த விரும்பவில்லை.

முதலாளித்துவம் இப்பொழுது பப்லோவாதிகளுடைய சேவைகளைக் கோர நேரும் நிலையிலுள்ளது, அதன் நெருக்கடித்தன்மையின் அடையாளத்தைக் காட்டுகிறது. அனைத்துலகக் குழுவிற்கும் பப்லோவாதத்திற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி, தொழிலாளர் சக்திக்கும், முதலாளித்துவ ஆட்சிக்கும் இடையே உள்ள இடைவெளி ஆகும்.

இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழு, ஒரு பெரிய மக்கள் இயக்கமாக இன்னும் வரவில்லை; ஆனால் அதன் வேலைத்திட்டங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு குரலையும், நனவான வெளிப்பாட்டையும் கொடுத்துள்ளது. அது WSWS வாசகர் வட்டத்தின் வளர்ச்சியிலிருந்து உறுதியாகிறது. இது தன்னை மிக அதிக அளவில் படிக்கப்படும் சர்வதேச சோசலிச வலைத் தளமாக இணையத்தில் நிறுவிக் கொண்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன், ஜேம்ஸ் பி. கனனால் மேற்கோள் காட்டப்பட்ட "ஸ்தாபித கோட்பாடுகள்" உறுதிப்படுத்தப்பட்டு அவற்றின் பொருந்தும் உண்மைநிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. என்னுடைய உரையை பகிரங்கக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்தக் கோட்பாடுகளை மேற்கோள் காட்டி முடிக்கிறேன்:

"1. முதலாளித்துவத்தின் மரணவேதனையானது, மோசமாகிவரும் பொருளாதார மந்தநிலைகள், உலகப் போர்கள், பாசிசம் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிப்பாடுகள் மூலம் நாகரிகத்தையே அச்சுறுத்தும்...

"2. இந்த முடிவில்லா பள்ளத்தில் சரிவதைத் தடுக்க, முதலாளித்துவம், உலக அளவில் சோசலிசத்தின் திட்டமிட்ட பொருளாதாரத்தால் மாற்றப்பட்டு, முதலாளித்துவத்தின் தொடக்க கட்டத்தில் பெறத்தொடங்கிய ஏற்றம் போல் ஏற்றம் காணப்படவேண்டும்.

"3. இது சமுதாயத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ்தான் சாதிக்கப்பட முடியும். ஆனால் சமூக சக்திகளின் உலக உறவுமுறைகளுக்கு இப்பொழுது இருப்பது போல் சாதகமாகத் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் பாதையில் செல்வதற்கு எப்போதும் அது இருந்ததில்லை என்றாலும்கூட, தொழிலாள வர்க்கம் தாமே, தலைமை நெருக்கடியைக் காண்கிறது.

"இந்த உலக- வரலாற்று நோக்கத்தை நிறுவவும், செயல்படுத்தவும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சியைக் கட்டியாக வேண்டும், அதாவது ஜனநாயகத்தையும் மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக இணைக்கும் திறனுடைய ஒரு போரிடும் கட்சியாக, லெனினால் வளர்த்தெடுக்கப்பட்ட மாதிரியில் கட்டியாக வேண்டும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved