World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை இலங்கையில் அரசியல் ஸ்தம்பித நிலை ஆழமடைகிறது By K. Ratnayake இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தைகளை நேரடியாக முறித்துக்கொண்டு, அரசாங்கத்துடன் செயலாற்றுவதற்கான தனது சொந்த பிரேரணைகளை கடந்த வெள்ளிக் கிழமை வெளியிட்டதை அடுத்து, குமாரதுங்கவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான ஒரு சமரசத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் பிரச்சினைக்குள்ளாகி உள்ளன. குமாரதுங்க ஒரு மாதத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பு, உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சுக்களை அபகரித்து, பாரளுமன்றத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்ததோடு அவசரகால நிலைமைகளையும் அமுல்படுத்த முனைந்ததன் மூலம் அரசியல் நெருக்கடி ஒன்றை தோற்றுவித்தார். அவர் ஐ.தே.மு. 19 வருடகால உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்கான அதன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகளவு சலுகைகளை வழங்குவதோடு "தேசிய பாதுகாப்பை" நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும் குற்றம் சாட்டினார். அவரது ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் இலக்கு, யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலமான எந்தவொரு தீர்வையும் எதிர்க்கும் சிங்களப் பேரினவாத குழுக்களுக்கு நேரடியாக அழைப்பு விடுப்பதாகும். ஆனால் வாஷிங்டன் உட்பட்ட பெரும் வல்லரசுகள், தமது சொந்த இலக்குக்காக பெயரளவிலான சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஒரு சமரசத்தை அடைவதற்காக குமாரதுங்கவும் விக்கிரமசிங்கவும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, அவர்களின் அலுவலர்களைக் கொண்டு நியமிக்கப்பட்ட குழுவும் கடந்த மூன்று வாரங்களுள் ஐந்து தடவைகள் கூடியுள்ளது. எல்லாக் கலந்துரையாடல்களும் மூடிய கதவுக்குள் இடம்பெற்ற அதேவேளை, தீர்மானங்கள் காற்றில் மிதப்பதாக ஊடகங்களுக்கு அறிகுறிகள் கசிந்துள்ளன. எவ்வாறெனினும் குமாரதுங்க கடந்த வெள்ளிக்கிழமை, தனது சொந்த பிரேரணைகளின் விபரங்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை திடீரென ஊடகங்களுக்கு வெளியிட்டார். "முழுமைப்படுத்தப்பட்ட தேசிய அரசாங்கத்துக்கான" தனது முன்னைய அழைப்பை விக்கிரமசிங்க கவிழ்த்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். கூட்டுக் குழுவில் உள்ள பிரதமரின் பிரதிநிதி "ஆச்சரியத்தை" வெளிப்படுத்தியதோடு குமாரதுங்கவின் ஆவணம் வெளியிடப்படுவதற்கு முன்னர் தனக்கு ஒரு பிரதி தன்னும் கொடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார். குமாரதுங்கவின் பிரேரணைகள், சமரசத்துக்கு பதிலாக அவரது கரங்களைப் பலப்படுத்துவதோடு விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்துக்குள்ள வலிமையையும் கீழறுக்கும். "ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணைப்பாளராக செயற்படுவதற்கு" ஒரு உதவி பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க மட்டும் அனுமதிப்பதோடு, குமராதுங்க மூன்று அமைச்சுக்களின் முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பார். அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களை தொடர்ந்தாலும் இரண்டு புதிய குழுக்களுக்கு பதிலளிக்க வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமரும் தலைமை வகிக்கும் ஒரு கூட்டு சமாதானப் பேரவை "முழு சமாதான முன்னெடுப்புக்களையும் கண்காணித்து நிர்வகிக்கும்". "சமாதானத்துக்கு உதவவும் இனப்பிரச்சினைக்கு இறுதியான தீர்வு காணவும்," பங்களிப்பு செய்வதன் பேரில் ஆலோசனைகள் மற்றும் தீர்மானங்களை வழங்க ஒரு சமாதானத்துக்கான ஆலோசனை குழுவொன்று ஸ்தாபிக்கப்படும். இரண்டாவது குழுவின் கட்டமைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இது எல்லா அரசியல் கட்சிகளில் இருந்து பிரதிநிதிகளையும், பாதிரியார்கள், சேவையாளர்கள் மற்றும் ஏனைய தேசிய குழுக்குளையும் உள்ளடக்கியதாக விளங்கும். வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டால், நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எந்தவொரு எந்தவொரு சலுகையும் வழங்குவதை எதிர்க்கும், மற்றும் சில சந்தர்ப்பங்களில் யுத்தத்தை பரிந்துரைக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சிங்கள உறுமய மற்றும் உயர்மட்ட பெளத்த துறவிகளும் இந்த "சமாதானக் குழுவில்" அமர்ந்திருப்பர். குமாரதுங்கவின் திட்டமானது அரசாங்கத்தை சங்கடத்துக்குள் தள்ளுவதற்கு வரையப்பட்டதாகும். இது "சமாதான முன்னெடுப்புகளுக்கு" தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அதன் விளைவுகள், விடுதலைப் புலிகளுடனான கொடுக்கல் வாங்கல்களை முழுமையாக எதிர்ப்பவர்களை உள்ளடக்கிய குழுக்களோடு சேர்த்து முடிந்துவிடுவதாகும். கடந்த வாரம் விக்கிரமசிங்கவும் ஐ.தே.மு. வும் இந்தப் பிரேரணைகளை பகிரங்கமாக நிராகரித்தது ஆச்சரியத்துக்குரியதல்ல. திங்கட்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பிரதிநிதிகள் அடங்கிய குழு இன்னுமொரு தடவை கூடிய போதிலும் பெறுபேறுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இரு தலைவர்களும் இன்று மீண்டும் சந்திக்கவுள்ளனர். குமாரதுங்கவின் முன்னறிவிக்க முடியாத நிலையோடு ஆளும் வட்டாரத்தில் உள்ள ஏமாற்றங்களை புதன் கிழமை டெயிலி மிரர் பத்திரிகையின் வர்ணனையாளர் ஒருவர் சாரம்சம் செய்திருந்தார். "ஜனாதிபதியின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, பொறுமையும் சாமர்த்தியமுமே இறுதி விடயங்களாகும். மற்றும் ஏதாவதொரு முடிவு காணப்பட்டால், ஜனாதிபதி பருவகால அரசியல்வாதிகளை தொடர்ந்தும் திடுக்கிடச் செய்யும் துடுக்குத்தனமான அரசியலைக் கைவிட வேண்டும்" என அவர் பிரகடனம்செய்தார். அரசியல் சமபல நிலையை உருவாக்கும் நடவடிக்கை எவ்வாறாயினும் குமாரதுங்கவின் தலைகீழ் நடனங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஒரு தர்க்கம் இருக்கின்றது. அவர் ஒரு ஆபத்தான சமநிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார். ஒரு பக்கம் அவரால் பெரும் சர்வதேச சக்திகளை வெறுப்பூட்டவும் முடியாது, மறுபக்கம் அவர் தனது சொந்த பொதுஜன முன்னணியின் உள்ளும் மற்றும் வெளியிலும் சிங்களப் பேரினவாதத்தின் அரசியல் அழுத்தங்களுக்கும் ஆளாகின்றார். கடந்த வெள்ளிக் கிழமை வரை அவர் அரசாங்கத்துடன் சமரசம் காணத் தயாராவதாகக் காட்டிக் கொண்டார். கடந்தவார முற்பகுதியில் பொதுஜன முன்னணி பாராளுன்றத் தலைவர்கள் பாராளுமன்றத்தில் ஐ.தே.மு.விடம் கேள்விகள் எழுப்பாமல் இருக்க உடன்பட்டனர். பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான ஜனாதிபதியின் தீர்மானம் அரசியல் யாப்புக்கு அப்பாற்பட்டது என்ற சபாநாயகரின் பிரகடனத்தையிட்டு பொதுஜன முன்னணி ஒரு விவாதத்தைக் கோராது எனவும் அவர்கள் அறிவித்தார்கள். இரண்டு நடவடிக்கைகளும் குமாரதுங்கவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான பேச்சுக்களுக்கு தடங்கல் ஏற்படாமல் அரசியல் பதட்ட நிலைமையை இலகுபடுத்துவற்காக வடிவமைக்கப்பட்டிருந்தன. அரசியல் ஸ்தம்பித நிலைமைக்கு முடிவுகட்டுவதன் பேரில் கூட்டு வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்தித்தார்கள். இரு தலைவர்களும் அதிகாரப் பகிர்வு சமரசம் ஒன்றையிட்டு உடன்பாடுகொண்டுள்ளார்கள் என அவர்கள் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெளிவுபடுத்தினார்கள். கொழும்பில் உள்ள பெரு வர்த்தகர்களில் செல்வாக்கான பகுதியினரைப் பொறுத்தளவில், யுத்தமானது வெளிநாட்டு முதலீட்டுக்கும் மற்றும் இந்தியக் துணைக் கண்டத்தில் திறந்து விடப்பட்டுள்ள பொருளாதார வாய்ப்புகளுக்கும் பொறுக்கமுடியாத தடையாக உள்ளது. அதேசமயம், எவ்வாறெனினும், குமாரதுங்க ஒரு மாதத்துக்கு முன்னர் அரசாங்கத்துக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மெச்சிய ஜே.வி.பி.யின் அதிகரித்துவரும் விமர்சனங்களுக்கும் முகம் கொடுக்கின்றார். நவம்பர் 24 மத்திய கொழும்பில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில், ஜே.வி.பி. தலைவர்கள் ஜ.தே.மு.வுடன் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான குமாரதுங்கவின் விருப்பத்தை கண்டனம் செய்ததோடு, ஐ.தே.மு.வின் அழுத்தங்களுக்கு இசைந்து போவதானது அவரின் "அடிமைத்தனத்தையே" காட்டுகிறது எனவும் பிரகடனப்படுத்தினர். எதிர்க்கட்சியான பொதுஜன முன்னணியில் பிரதானக் கட்சியான குமாரதுங்கவின் ஸ்ரீ.ல.சு.க.வில் உள்ள ஒரு பகுதியினர், விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு தீர்மானத்துக்கும் எதிராக தமது பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஜே.வி.பி.யுடன் ஒரு கூட்டணியை அமைப்பதில் அக்கறை கொண்டுள்ளனர். ஜே.வி.பி.யின் செல்வாக்கிலான தேசாபிமான தேசிய முன்னணி, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளரான கிறிஸ் பெட்டனின் அன்மைய சந்திப்பை கண்டனம் செய்தது. பெட்டன் குமாரதுங்கவை சந்திப்பதற்காக கொழும்பு வந்தபோது, ஜே.வி.பி. பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து ஜனாதிபதி இல்லத்துக்கு அருகாமையில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட குமாரதுங்கவின் பிரேரணைகள் ஸ்ரீ.ல.சு.க. வில் உள்ள இத்தகைய தட்டினரை சாந்தப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பாகமாகும். இந்தத் திட்டங்களை நிராகரித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விக்கிரமசிங்கவின் செயலாளரான பிரட்மன் வீரக்கோன், "சில முக்கியப் பகுதிகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை. ஆனால், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்கள் பற்றிய விடயங்களிலேயே பெரும் பிரச்சினை இருந்து கொண்டுள்ளது," என்றார். பிரதான அரசாங்கப் பேச்சாளர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவும், "அரசியல் நெருக்கடிக்கு பொருத்தமான தீர்வை அமைக்கவும்" தூண்டுவதன் பேரில் கடந்த வாரம் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்தார். சமரசம் காணப்படாவிடில், விளைவு ஒரு பொதுத் தேர்தலாக இருக்கும். பெரு வர்த்தகர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் எதிர்பார்த்திருப்பதும் இதுவேயாகும். வியாபாரத் தலைவர்கள் இறுதியாக நடந்த தேர்தலில் இருந்து இரண்டு வருடங்களுக்குள் இன்னுமொரு தேர்தலுக்கான செலவு பற்றி முறைப்பாடு செய்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழான தேர்தல் ஒன்று, பாராளுமன்றத்தில் உள்ள சக்திகளின் சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை. ஆகவே தற்போதைய அரசியல் முட்டுச் சந்தை மட்டுமே உக்கிரப்படுத்தும். இந்த அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலைமைக்கு மத்தியில், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் மத்தியில் அமைதியின்மை காணப்படுகிறது. கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நாடு பூராவும் உள்ள பத்தாயிரக் கணக்கான சுகாதாரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததோடு, நிரந்தர சம்பள உயர்வுக்கான தமது கோரிக்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதனன்று, ஆயிரக்கணக்கான தனியார்த் துறைத் தொழிலாளர்கள், தொழிலாளர் சட்டத்தை மட்டுப்படுத்தி வேலை கொள்வோருக்கு தொழிலாளர்களை குறைக்க அனுமதிப்பதற்கு எதிராக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அதே புதன் கிழமை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் நீர் வளத்தைக் கட்டுப்படுத்த ஒரு அதிகார சபையை நிறுவுவதற்கும் மற்றும் நீர் பாவனைக்கு பணம் அறவிடுவதற்கும் எதிராக கொழும்பு மத்திய புகையிரத நிலையத்தின் முன்னால் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்த அபிவிருத்திகளையிட்டு ஆளும் கும்பல் மேலும் மேலும் அமைதியற்றுள்ளது. வர்த்தகத் தலைவர்கள் சந்தை மறுசீரமைப்பை அமுல்படுத்தவும், தீவை வெளிநாட்டு முதலீட்டுக்கான ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றவும், விடுதலைப் புலிகளுடனான ஒரு கொடுக்கல் வாங்கலை கோருகின்றனர். ஆனால், அதற்குப் பதிலாக கொழும்பில் தீர்வுக்கான அறிகுறிகளே தென்படாத ஒரு அரசியல் நெருக்கடி இருந்து கொண்டுள்ளதோடு, பொருளாதார மறு சீரமைப்பின் அழிவுகரமான சமூக விளைவுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வருகின்றது. |