World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்Pakistan extends ban on Islamic groups இஸ்லாமியக் குழுக்களுக்கு பாகிஸ்தான் தடையை நீட்டிக்கிறது By Vilani Peiris வாஷிங்டனிலிருந்து வரும் அழுத்தங்களின் கீழ், பாக்கிஸ்தான் இராணுவ ஆதரவு பெற்ற ஆட்சி, சென்ற மாதம் ஆறு புதிய குழுக்கள் உட்பட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் மீதான தடையை நீடித்ததுடன், அவற்றின் உறுப்பினர்கள் மீதும் போலீஸ் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்பொழுது தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புகளில், காஷ்மீரில் இந்தியக் கட்டுப்பாட்டை எதிர்த்து நிற்கும் ஆயுதாங்கிய அமைப்புகளும் பாகிஸ்தானுக்குள் குழுவாத வன்முறையில் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படும் ஷியைட்டுக்களின் அமைப்பான இஸ்லாமிய டெஹ்ரிக்-இ-பாகிஸ்தான் மற்றும் சுன்னியை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய-மில்லட்-இ-இஸ்லாம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் இடம்பெற்றுள்ளன. முன்னர் லஸ்கர்-இ-தொய்பா என்றழைக்கப்பட்ட ஜமாத்-உத்-தாவா அரசின் கண்காணிப்பில் இருந்து வருவதாக இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. காஷ்மீர் தாக்குதல்களிலும் 2001-ல் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல்களிலும் சம்மந்தப்பட்டதாக இந்த அமைப்பு மீது இந்தியா குற்றம்சாட்டியது. இந்த ஆறு குழுக்களையும் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட அலுவலங்களை பாகிஸ்தான் போலீசார் மூடிவிட்டனர். ஏறத்தாழ 600 செயல்பாட்டாளர்களை ஒரு லட்சம் ரூபாய் வரை ($US1,745) நன்னடத்தை ஜாமீன் பத்திரம் எழுதித் தருமாறு அரசாங்கம் நிர்பந்தித்தது. மில்லத்-இ- இஸ்லாமியா பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் மவுலானா மொகமது அஹ்மது, தந்துள்ள தகவலின்படி, ''கட்சியைச் சேர்ந்த 50-க்கு மேற்பட்ட செயல்வீரர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்'', கைதுகள் தொடர்கின்றன. இந்த ஆறு அமைப்புகளின் வங்கி கணக்குகளையும் அரசாங்கம் முடக்கியுள்ளது. நவம்பர் கடைசியில் பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி, 897.05 மில்லியன் ரூபாய்கள் இருப்பு முடக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் இதுபோன்ற அமைப்புகளின் நிதிகள் குறித்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் அறிவித்தது. இந்தக் குழுக்களின் வெளியீடுகள் குறித்து ஆராயுமாறு மாகாண நிர்வாகங்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தடைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட சில மணி நேரத்திற்குள், போலீசார் இஸ்லாமிய டெஹ்ரிக் தலைவர் Sajjad Naqvi க் கைது செய்தனர். அக்டோபர் மாதம் அவரது எதிர் அமைப்பான சுன்னி தலைவர் Azam Tariq கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கைது ஷியைட்டுக்களுக்கும் சுன்னிக்களுக்கும் இடையில் மோதல்களைத் தூண்டிவிட முடியும். இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அமெரிக்காவால், தான் அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கவில்லை என்று கூறுவதற்கு இராணுவ ஆட்சி மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நவம்பர் 13 அன்று கராச்சியில் உரையாற்றிய அமெரிக்க தூதர் நான்சி பவல், 2002 தொடக்கத்தில் தடை செய்யப்பட்ட இஸ்லாமியக் குழுக்கள், வேறு பெயர்களில் மீண்டும் தோன்றியிருப்பதாக பகிரங்கமாக கவலை தெரிவித்தார். ''இந்த (இஸ்லாமிய) குழுக்கள் பாகிஸ்தானுக்கு, இந்த மண்டலத்திற்கு, மற்றும் அமெரிக்காவிற்கு பயங்கரமான அச்சுறுத்தலாகச் செயல்படுகின்றன'' என அவர் குறிப்பிட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், பாக்கிஸ்தான் ஜனாதிபதி பெர்வஸ் முஷாரப் நவம்பர் 15 அன்று முதலாவது தடை நடவடிக்கைகளை அறிவித்தார் பின்னர் நவம்பர் 20ல் மேலும் நடவடிக்கைகளை அறிவித்தார். நவம்பர் 16 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய முஷாரப் ''அமெரிக்கா போன்ற நாடுகள் கேட்டுக்கொண்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோளப் போரில் பாகிஸ்தான் மட்டுமே முக்கிய பங்களிப்பு செய்ய முடியும்'' என்று குறிப்பிட்டார். பெருகிவரும் விமர்சனங்களை எதிர்கொள்கையில், இந்தத் தடைகள் நாட்டின் ''தேசிய நலனையும்'' நாட்டின் ''பொருளாதார முன்னேற்றத்தின்'' அவசியத்தையும் கருதி எடுக்கப்பட்டதாக வலியுறுத்திக் கூறினார். அடுத்த சில மாதங்களில் நாட்டில் செயல்பட்டுக்கொண்டுள்ள மதரஸாக்களின் (முஸ்லீம் மதப்பள்ளிகள்) செயல்பாட்டைக் கண்காணிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காகத் தாக்கல் செய்யப்படும் என்று நவம்பர் 18 அன்று உள்துறை அமைச்சர் பைசல் சலே ஹயாத் அறிவித்தார். அத்தகைய நடவடிக்கை பரந்த ரீதியாக இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் கடுமையான எதிர்ப்பை கிளறிவிடும் தன்மை கொண்டது. அமெரிக்க அரசுத்துறை பேச்சாளர் ரிச்சர்ட் பெளச்சர் பாகிஸ்தானால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். தொடர்ந்து நெருக்கமான உறவுகள் நீடிக்க அழைப்பு விடுத்தார், குறிப்பாக ஆப்கானிஸ்தானுடன் எல்லையை மூடிவிட வலியுறுத்தினார். பாகிஸ்தான் எல்லைப் புறங்களிலிருந்து, ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்காரர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் புகுவதைத் தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்க இராணுவமும், அமெரிக்க ஆதரவில் இயங்கி வரும் காபூல் ஆட்சியும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் நிலவரம் சீர்குலைந்து வருவதை சரிக்கட்டுவதற்கு வாஷிங்டன் கவலைகொண்டு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புகளும் அவற்றின் பொம்மை நிர்வாகமும், ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக் குழுக்களின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்ற சூழ்நிலை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஆப்கானிஸ்தானில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தலிபான் ஆட்சியை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு எதிர்ப்புக் குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்று வருகின்ற மோதலுக்கு ஒரு தீர்வுகாண மறைமுகமாக அமெரிக்கா நிர்பந்தங்களை கொடுத்து வருகிறது. ஆசிய மண்டலத்தில் அமெரிக்காவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் வளர்ந்து கொண்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஆசிய மண்டலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தலாக காஷ்மீர் பிரச்சினை நிரந்தரமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் புஷ் நிர்வாகம் அதன் ''பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோளப் போரில்'' வெற்றிகளை நிலைநாட்ட வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. Asia Times சென்ற மாதம் வெளியிட்டுள்ள ஒரு தகவலின்படி பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடுகளையும், பாகிஸ்தானின் தேசிய புள்ளி விபர, அடிப்படை விபரங்களையும் தெரிந்துகொள்வதற்கு வழிவகை செய்யுமாறு பாகிஸ்தானை வாஷிங்டன் கேட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு குழு FBI ஏற்கனவே பாகிஸ்தானுக்குள் பகிரங்கமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அல்கொய்தா அமைப்பின் உறுப்பினர்கள் என்று கூறப்படுபவர்களை கண்டுபிடிப்பதிலும், காவலில் வைப்பதிலும் அது ஈடுபட்டுள்ளது. புஷ் நிர்வாகம், ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைகளை முஷாரப் ஆதரிப்பதன் மூலம் பாகிஸ்தான் சர்வாதிகாரியின் நிலைப்பாடே ஆட்டம் கண்டு வருகிறது. கார்கில் பகுதியில் மலைமுகடுகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு தந்து வந்த ஆதரவை விலகிக் கொண்டதன் மூலம், அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் அடிபணிந்துவிட்டார் என அன்றைய பிரதமர் நவாஸ் செரீப் மீது குற்றம் சாட்டி 1999-ம் ஆண்டு முஷாரப் ஆட்சியை பிடித்துக்கொண்டார். ஆனால் 2001 செப்டம்பர்-11 தாக்குதல்களுக்கு பின்னர், திடீரென்று, முஷாரப் வாஷிங்டன் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கினார். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பாகிஸ்தான் தந்து வந்த ஆதரவை, திடீரென்று கைவிட்டார். அதற்கு பின்னர் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்று, பாகிஸ்தான் இராணுவம் முன்னர் "காஷ்மீர் விடுதலை போராளிகள்" என்று பாராட்டியவர்களை அவர்களது அமைப்புகளை தடை செய்யும் நடவடிக்கையை அவர் எடுத்தார். இதன் மூலம் தான் சார்ந்திருந்த ஆதரவாளர்களான, இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் எதிர்ப்பை உசுப்பி விட்டார். ஆறு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் கூட்டணியான Muttahida Majlis-e-Amal (MMA) சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வலுவான வெற்றிகளை குவித்தது மற்றும் தற்போது அது பலூச்சிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கிறது. முஷாரப்பை சார்ந்துள்ள பிரதமர் ஜபருல்லா ஜமாலி அரசாங்கம் தனது நாடாளுமன்ற பெரும்பான்மையை நிலைநாட்டுவதற்காக MMA வை நம்பியிருக்கின்றது. நவம்பர் 17 அன்று கராச்சியில் MMA தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் முஷாரப் புதிதாக விதித்த தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்தை மீறி MMA வின் தலைவர் ஷா-அகமது நூரணி தடைசெய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தெஹ்ரிக் அமைப்பு MMA ஒரு பகுதியாக நீடிக்கின்றது என்று அறிவித்தார். இந் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனப் பேரணிகள் நடைபெற்றுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள், முஷராப், வாஷிங்டனுடன் நெருக்கமாக உறவு கொண்டிருப்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதுடன், பெரும்பாலான மக்களை எதிர்நோக்கியுள்ள சமூக நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. நேசன் பத்திரிகையில் சென்ற மாதம் பிரசுரிக்கப்பட்டிருந்த பொதுவிவர மதிப்பீடு ஒன்று பொதுமக்கள் இராணுவ ஆதரவு ஆட்சி மீது "அப்பட்டமான அதிருப்தி" கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது மற்றும் போக்குவரத்து, பொது சுகாதாரம், கழிவுநீர் வடிகால் வசதிகள் மற்றும் இதர சேவைகளில் நிலவுகின்ற மோசமான நிலவரம் குறித்து பரவலாக பொதுமக்கள் கவலைகளை தெரிவித்திருக்கின்றனர். இத்தகைய அவசியமான, சமூக தேவைகள் எதையும் பூர்த்தி செய்ய முடியாத முஷாரப், ஆட்சி அதிகாரத்தில் தனது பிடியை இறுக்கிக் கொண்டு வருகிறார். அரசாங்கத்தை எதிர்ப்பவர்களது ஜனநாயக உரிமைகளை மிதித்து துவைப்பதில் வசதியான ஒரு சாக்கு போக்காக இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். |