World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Michael Jackson's tragedy

மைக்கல் ஜாக்சனது துன்பியல்

By David Walsh
1 December 2003

Back to screen version

மைக்கல் ஜாக்சன் கைதுசெய்யப்பட்டு, சிறார் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதற்காக குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதையடுத்து, அமெரிக்க மக்கள், இப்பொழுது புகழ்பெற்றோரதும் மற்றும் அவர்களது பாலியல் வாழ்வு தொடர்பு பற்றிய புதிய அவதூறுகளையும் கேட்கவேண்டிய கட்டயாத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். பலவிதமான செய்தி ஊடகங்களும், தங்கள் வழக்கமான பரபரப்புச் செய்திகள், வதந்திகள் பரப்புவதில் போட்டி, பெருங்குரலில் கூவுதல், மட்டமான உணர்வுகளைத் தூண்டுதல் ஆகியவற்றை வெளியிட, மற்றொரு புதிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

பலமாதங்களுக்கு செய்திப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஜாக்சனுடைய வழக்குப்பற்றிய விவரங்கள், மட்டமான காட்சிப் பொருளாக அளிக்க இருப்பது நமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது; இக்காலக்கட்டத்தில், செய்தி ஊடக அறிவாளிகளும், பேச்சுத்தலையர்களும், ஓர் ஆழ்ந்த சிந்தனைப் பார்வையைக் கொடுக்காமல், தத்தம் அரிய அற அறிவுரை வழங்குதல், எள்ளிநகையாடுதல் அல்லது நமட்டுச் சிரிப்புச் சிரித்தல், ஆகிய செயல்களில் ஈடுபடுவர்.

இந்த வருத்தம் தரும் நிகழ்ச்சியில், செய்தி ஊடகம் பலவிதங்களில் செயல்படுகிறது: மக்களுடைய கவனத்தை உண்மையான அழுத்தம் நிறைந்த பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்புதல், அதிலும் குறிப்பாக ஈராக்கில் நடந்து கொண்டிருக்கும் வன்முறை, இறப்பு போன்றவற்றிலிருந்து, மக்களுடைய நனவை எத்தகைய முறையையும் கடைப்பிடித்து மாசுபடிய, மரத்துப்போக வைத்தல், விற்பனை அதிகரித்து விளம்பரங்கள் வருமானம் மிகைப்படுவதற்காக எவ்வித "இரத்தம் பீறிடும் நிகழ்வையும்" ஓடித், தேடிப் பிடித்து வெளியிடல், இன்ன பிற வழிகளிலும் ஈடுபடுதல் ஆகியவை அடங்கும்.

இதுவரை வழக்கில் எந்த உண்மையும் வழங்கப்படவில்லை; மைக்கல் ஜாக்சன், தான் குற்றமற்றவர் என கருதிக்கொள்ளும் சட்டபூர்வ உரிமையைக் கொண்டுள்ளார். கலிஃபோர்னியாவில், சாந்தா பார்பாராவிற்கு வடக்கிலுள்ள ஜாக்சனுடைய நெவர்லாண்ட் பண்ணையில் விருந்தாளியாக இருந்த ஒரு 12 அல்லது 13 வயது புற்றுநோய் பாதிப்பிலுருந்து தப்பிய சிறுவன் இவர்மீது குற்றஞ்சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது (பாடக விருந்தோம்புவர் தன்னுடைய பண்ணையில் மிக ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளுக்கு, நிகழ்ச்சிகள் அளிப்பது வழக்கம்).

பாடகருக்கு ஆதரவாக இருப்பவர்கள், பையனுடைய தாயார், ஜாக்சனிடமிருந்து பெருந்தொகை பறிப்பதற்காக, இந்த சட்டபூர்வமான நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர். ஜாக்சனுடைய வக்கீல், மார்க் கெரகாஸ், நவம்பர் 25ம் தேதி, செய்தி ஊடகத்திற்குக் கோபத்துடன் கூறினார்: "இதுவரை நடந்தவற்றைக் கண்டு, பணம், பணத்தைப் பறிப்பதைத்தவிர இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வேறு உண்மைக் காரணம் ஏதுமில்லை என்று எவரும் நினைக்காவிட்டால், அவர்கள் தங்களுடைய நெவர்லாண்டில் இருப்பதாகத்தான் கொள்ளவேண்டும்."

பையனுடைய தாயார் மிகத்தவறான குற்றச்சாட்டுக்களைக் கூறும் வரலாற்றை கொண்டிருக்கிறார் என்றும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன. கடந்த பெப்ரவரி மாதம், இருவரும் ஜாக்சனைப் புகழ்ந்து பேசி, முறையற்ற செயல் நடந்தது என்ற கருத்தை நிராகரிக்கும், தாயாரும் அவர் மகனும் உரையாடியுள்ள ஒலிப் பதிவுநாடா ஒன்றும் வெளிவந்துள்ளது. இந்த ஒலிநாடாவில், அப்பெண்மணி அவர்களுடைய வாழ்க்கையில் ஜாக்சனைக் கொண்டு வந்ததன்மூலம் கடவுள் அவர் குடும்பத்திற்கு ஆசீர்வாதம் செய்துள்ளதாகக் கூறப்படுவதும், தன்னுடைய மகனுக்கு அவர் "தகப்பனார் உரு" போல் இருந்தாரெனவும் அதில் கூறியிருக்கிறார். அத்தகைய கருத்துக்களையே கூறும் கையெழுத்திடப்பட்ட வாக்குமூலம் ஒன்றும் இருப்பதாகக் கூறப்படுகிறது. பையனின் தகப்பனாருடைய வக்கீலும், ஜாக்சனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்க்கருத்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

ஜாக்சனுக்கு எதிராக சாந்தா பார்பாரா அதிகாரிகள் மேற்கொண்ட பிரச்சாரம், பிற்போக்கான அரசியல், சமூக உயரொலிக் குறிப்புக்களைக் கொண்டுள்ளது. மாநில அரசாங்க வக்கீலான டாம் ஸ்னெட்டன், ஒரு பழைய விரோதக் காரணத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புடைய, பழமைவாத குடியரசுக் கட்சியினராவார். 1993ம் ஆண்டு, இதையொத்த குற்றச் சாட்டுக்களுக்காக ஜாக்சன் மீது குற்றவழக்கை நடத்த நம்பிக்கையுடன் இருந்தார்; ஆனால் வழக்கைத் தொடர்ந்திருந்த குடும்பத்தாரோடு, பாடகர் நீதிமன்றத்திற்குப் புறத்தே உடன்பாடுகொண்டுவிட்டார்.

ஸ்நெட்டனை, குறைந்த மூடிமறைத்தலே இருந்த எழுத்து, ஒலிநாடாப்பதிவுத் தாக்குதல் இவற்றின்மூலம், பாடகர் பின்னர் அவருக்குப் பதிலடி கொடுத்தார். கடந்த புதன்கிழமை குற்றச்சாட்டுக்களை அறிவிப்பதற்காகக் கூட்டியிருந்த செய்தியாளர் கூட்டத்தில், மாவட்ட வழக்குரைஞர், தன்னுடைய களிப்பை அடக்கிக்கொள்ளவே முடியவில்லை. ஜாக்சனுடைய பண்ணைக்கு, மிக அதிகாரத்தோரணையுடன் மாவட்ட ஷெரிப் அலுவலகத்திலிருந்து 70 நபர்கள் முரட்டுத்தனத்தோடு உள்ளே புகுந்தவிதமே, சாந்தா பார்பரா அதிகாரிகளின் அணுகுமுறையைச் சுட்டிக்காட்டுகிறது.

ஸ்னெட்டனுடைய "தனிப்பட்ட காழ்ப்புச்சண்டை" மைக்கலுடைய தமையனார்களில் ஒருவராகிய ஜேர்மைன் ஜாக்சனால் ABC News க்குக் கொடுத்த பேட்டியில் கண்டனத்திற்குட்படுத்தப்பட்டது. அவர் மேலும் கூறியதாவது: "அவர்கள், மக்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத, ஒரு இனவெறி பிடித்த செங்கழுத்துக் கூட்டத்தினர்." இதற்கு முன்னதாக ஒரு CNN பெண் செய்தியாளர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடிய ஜேர்மைன் ஜாக்சன் இந்த வழக்கே "துவேச அடிப்படையிலான சட்டமுறைப்படா ஒரு நவீன வழக்கு மன்ற நடவடிக்கையைகும்*" (a modern-day lynching''*) எனக்கூறினார். கடந்த காலத்தில் மைக்கல் கடுமையாகப் பலவற்றைக் கூறியிருந்த, அவருடைய தந்தை உட்பட, முழு ஜாக்சன் குடும்பமும் பாடகருக்கு ஆதரவான பாதுகாப்போடு உறுதுணையாக நிற்கின்றது.

ஒரு கலாச்சார, அறப்போரில், ஐயத்திற்கிடமின்றித் தன்னை ஒரு புனிதப் போர்வீரராகத்தான் ஸ்னெட்டன் கருதிக்கொள்கிறார். இந்த நாட்டில் ஒரு சமூக தட்டு, ஜாக்சனைப்பற்றி மிக மட்டமான கருத்தைத்தான் கொண்டிருக்கிறது என்பதோடன்றி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் குற்ற விசாரணையிலிருந்து தப்பியது பற்றி கசப்பான உணர்வு கொண்டிருப்பதோடு அவரைச் சிலுவையில் அறைவதைப் பெரிதும் விரும்புகிறது. வலதுசாரி சக்திகளால் மிகவும் ஒடுக்குமுறைமிக்க ஆத்திரமும் வெறுப்பும் தூண்டப்பட்டு, அவருக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளது. ஜாக்சன் மீதான இத்தாக்குதலின் நோக்கங்களும் மற்றும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், ஒஸ்கார் வைல்ட் மீதான குற்றச்சாட்டுகளும், நோக்கங்களும் வித்தியாசமானதாக இருந்தாலும், தற்போதைய பிரச்சனையில், 1895 இல் ஒஸ்கார் வைல்டிற்கு எதிரான பிரச்சாரத்தினை ஒத்த தன்மைகள் காணப்படுகின்றன.

ஒரு சிதைந்த, ஒருகால் இந்த குற்றங்களில் தீவிரமான மனக்கோளாறுக்கும் உட்பட்டவர் ஜாக்சன் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அவர் புரிந்துள்ளாரா என்பதும் வேறு விஷயம். வழக்கின் உண்மைகள் எதுவாயினும், சட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகளும், செய்தி ஊடகமும் அவரை விசாரணைக்கு உட்படுத்தவில்லையென்றால், அவரை அத்தகையவராகக் கண்டுபிடித்துக் காட்டியிருப்பார்களோ என்று நமக்குக் கூறத் தோன்றுகிறது.

கிறுக்குத்தனமாக நடந்து கொள்ளும் முறை, அதிலும் பாலியல்துறையில், கணிசமான அமெரிக்கச் சட்டப்-போலீசார் நிர்வாகத்தால் கிட்டத்தட்ட முழுக் குற்ற நடவடிக்கைக்குச் சாட்சியமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஜாக்சன் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டு, சமுதாயத்திலிருந்து பிரித்துவைப்பது நியாயப்படுத்தப்பட்டாலும், ஒரு மனிதத்தன்மை நிறைந்த சமுதாயம் அவரைக் கோபத்துடனும், வெறுப்புடனும் பார்க்காமல், வருத்தத்துடனும், ஏன், பரிவுணர்வுடன்தான் அணுகும்.

தான் யார் என்பதைப்பற்றி மைக்கல் ஜாக்சனுக்கே சிறிதளவுதான் தெரிந்துள்ளது என்பது வெளிப்படயாக அறிந்திருக்கும்போது, மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன என்று எப்படி முடிவு கட்ட முடியும்? இவருடைய வாழ்க்கைச் சரிதம் ஒரு பெரும் கிராமியப் பாடல் போல் அமைந்துள்ளது. இந்தியானா மாநிலத்தில், ஷிகாகோவில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் ஒன்றான, காரி என்ற இடத்தில், ஓர் எஃகு ஆலையில் கிரேன் செலுத்துபவரான ஜாக்சனுக்கு, ஒன்பது குழந்தைகளில் ஒருவராக 1958ல் பிறந்த மைக்கல், தன்னுடைய ஐந்து வயதில் ஜாக்சன் 5 என்ற இசைக் குழுவில் முக்கிய பாடகராக தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கினார்.

1968TM, Motown Records இக்குழுவிடம் ஒப்பந்தம் செய்த பின்பு, தொடர்ச்சியான பெரும்புகழ் பெற்ற பாடல்கள் வெளிவந்தன. 1970களின் பிற்பகுதியலிருந்து தனிப்பாடகராக இசைத்து, சர்வதேச மக்கள் இசைத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் முன்னணி பாத்திரமாக இவர் சிறந்திருந்தார். 1982ல் தயாரிப்பாளர் Quncy Jones உடன் இணைத்து, வெளிவந்த இவருடைய இரண்டாம் பாடல்தொகுப்புக்கள், பெரும் வியப்புத் தரும் வகையில், ஏழு உயர்புகழ்ப் பாடல்களைக் கொண்டு, உலகெங்கிலும் 50 மில்லியன் பதிவுகளுக்கும் மேலாக விற்பனையாகி, வெற்றியைக் கொடுத்தது. 1984ம் ஆண்டு, சாதனைகள் பலவற்றை முறியடிக்கும் வகையில் எட்டு Grammy பரிசுகளைப் பெற்றார்.

ஜாக்சன் வெளிப்படையாகவே, தன்னுடைய கஷ்டங்களைக் கூறியுள்ளார். தன்னுடைய தந்தை மிகுந்த வற்புறுத்தல், கட்டுப்பாடு கொண்டிருந்தவராகவும், தான் தொடர்ந்து அடி, உதைகளுக்கு உட்பட்டிருந்ததாகவும், இவர் கூறுவதை இவருடைய சகோதரர்களே உறுதி செய்துள்ளனர். ஜோசப் ஜாக்சன் இவரைக் கேலிசெய்து எள்ளிநகையாடுவார் என்று, இவருடைய மகனே தெரிவித்திருக்கிறார்.

"நான் அவருடைய தங்கக் குழந்தையோ இல்லையோ, எனக்குத்தெரியாது, ஆனால், மிகக் கண்டிப்புடனும், கடுமையுடனும், மிக உக்கிரத்துடனும்தான் அவர் இருந்தார். ...என்னை அவர் பார்க்கவரும் சில நேரங்களில், நான் தலைசுற்றி, வாந்தியெடுத்துக் குழறிவிடத் தொடங்கி விடுவேன்" என்று அவர் Oprah Winfrey இடம் 1993ல் தெரிவித்துள்ளார். அந்தப்பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் பெரும்பகுதி தனிமையிலும், வருத்தத்திலும் கழிந்துள்ளதாகவும், அதுதான் அவருடைய விதிபோலும் என்ற கருத்தைக் கொடுத்துள்ளார்.

மிகச்சிறிய குழந்தைப் பருவத்திலிருந்தே, ஜாக்சன் ஒரு பிரபலமானவராக இருந்து விட்டார். அவர் எப்படி இருக்கிறாரோ, அப்படியிருக்க பொழுதுபோக்கு வர்த்தகத் துறைதான் (entertainment business) உதவியுள்ளதால், அது கண்டனத்திற்குரியது ஆகும். பொய்மை, எப்பொழுதும் பொதுமக்களுக்குக் காட்டவேண்டிய முகம் ஒன்று, தனிப்பட்ட கஷ்டங்களை மறைத்துக் கொள்ளவேண்டிய நிலை, இவையெல்லாம் தங்களுடைய கூலியை, குறிப்பாக ஜாக்சனைப் பொறுத்தவரைத் தெளிவாகவே, எடுத்துக்கொண்டுவிட்டன.

இவ் இசைக் கலைஞர், தான் பல ஆண்டுகளாகவே, "அரங்கத்திலிருக்கும் போதுதான் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும்", அதுதான் அவருடைய உண்மையான "இல்லம்" என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார். அரங்கில் உண்மையாக இருந்ததை (அரங்கின் உண்மையை), உண்மையாகவே எடுத்துக்கொண்டதற்காக, இவரை யாரும் குறைகூறக்கூடாது.

ஒரு கறுப்புக் கலைஞர், எக்காலத்திலும் மிகப்பெரிய "கடந்து செல்லலைச்" செய்து, தன்னுடைய உண்மை அடையாளத்தையும் மறைத்துவிட வேண்டியிருந்த நிலை, கூடுதலான, ஆபத்து நிறைந்த முக்கியத்துவத்தையும் அளித்திருக்க வேண்டும். ஜாக்சனுடைய உடல்மாற்றத்தைப்பற்றி, எதற்காக எவரும் வெளிப்படையாக அதிர்ச்சி அடையவேண்டும் அல்லது பெருங்கோபம் அடைய வேண்டும்? பண்பாட்டின் தனக்குரிய வாதங்களைத்தான் அவர் பின்பற்றியுள்ளார், அதன் இடைவிடா பொய்மைக்கும், பொய்த்தோற்றத்திற்கும் அவற்றின் கோரமான, ஆனால் தர்க்கபூர்வமான முடிவிற்கு, அடிமையாக இருத்தல் என்பதைத்தான் அவர் பின்பற்றியுள்ளார்.

ஒரு வாழ்க்கை முழுவதும் கேளிக்கைத் துறையின் இழைக்கூண்டிற்குள் செலவிடப்பட்டு, ஒருநேரத்தில் இவருடைய ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவுசெய்யும் மிகப்பெரிய குழுவினரால் சூழப்பட்டுமிருந்த, அதே உண்மைகளைக் கொண்டிருந்ததில் கட்டுண்ட நிலையில்தான் இவருடைய முதிர்ச்சியற்றதன்மை இருந்தது. "பீட்டர் பான் மனஉணர்வு" (Peter Pan complex,), வெளிப்படையாகத் தெரிந்த போலித் திருமணங்கள், இவருடைய மூன்றாவது குழந்தைக்கு மாற்றுத்தாய், அனைத்துமே ஒரு மனிதன் வேறுபட்ட வலியுறுத்தல் தொகுப்புக்களின் கட்டாயத்தில் மோதி தடுமாறும் நிலையைத்தான் காட்டுகின்றன.

"அமெரிக்கா'', அதாவது அதிகாரபூர்வமான பொதுமக்கள் கருத்து, இவர் வெளிப்படையாக எப்படி இருக்கவேண்டும் என விரும்பியதோ, --கூடுதலான வெள்ளைப் பாணியில், பாலியலில் பயமுறுத்தாமல், பாலுறவில் பெரும்பாலோர் பின்பற்றுவது, ஒரு பெற்றோராக--இப்படி வாழ்வதற்கு இவர் மேற்கொண்ட திகைப்பான, இறுதியில் பரிதாபத்திற்குரிய முயற்சிகள் அனைத்துமே, இவருடைய உண்மையான இயல்பு உள்ள இடத்தின் கருத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்து அவரைப் பிரித்து வைத்தன. இந்த போலித்தனம், உண்மையை இழந்து இவற்றை எதிர்கொண்ட ஜாக்சன், தன்னுடைய வாழ்வு கூடுதலான களிப்பைக் குழந்தைபோல் இருந்து அனுபவித்தால்தான் பெறும் என்ற ஓர் உண்மையைத்தான் நம்பிக்கையுடன் பற்றியுள்ளார் போலும்.

வெற்றி அழிவைத்தரும், கூடுதலான வெற்றி கூடுதலான அழிவைத்தரும் என்பது அமெரிக்காவில் அடிக்கடி நடக்கிறது. அதிக செயலற்ற, தொழிலாள வர்க்கத்தின் குடும்பத்தைச் சேர்ந்த இயல்பிற்கு மிகவும் மிஞ்சிய திறமையுடைய சிறுவனான மைக்கல் ஜாக்சன், தன்னுடைய உள்ளக் குரலின் மாற்று ஈடுபாடுகளினால் அல்லாமல், அமெரிக்க கேளிக்கைத்துறையின் எலும்பை நொருக்கும் கருவியால்தான், மிக முக்கியத்துவமான கணத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

ஜாக்சனுடைய மாபெரும் தனிவெற்றி, அமெரிக்க நாட்டில் ரீகன் ஆட்சிக் காலத்தில்தான், பலரும் செல்வந்தராவதற்காகத் தங்களுடைய அல்லது மற்றவர்களுடைய, தீவிரக் கொள்கைகளைத் தங்களுக்குப் பின்னால் ஒதுக்கிவைத்த 1970களோடு இணைந்திருந்தது. சுயநலம், இன்பநாட்டவாதம், தனிநபர்வாதம், பேராசை இவைகளுக்கெல்லாம் பெருமைக்குரிய இடம் அளிக்கப்பட்டன. அபூர்வமான திறமை பெற்றிருந்த இசை, நடனம், பாடலியற்றும் கலைஞரான ஜாக்சன், தன்னுடைய இசையின் மூலம் ஒரு கருத்தை வெளியிடும் ஆற்றலை பிறவிக் குணத்தின் இயல்பினாலோ, இடைவிடா ஒத்திகைமூலமோ அல்லது பெற்றோர் அழுத்தத்தினாலோ கொள்ளவில்லை.

ஜாக்சன் 5, இசையுலகில், குறிப்பாக மோடெளனில் (Motown) வந்தது, பரந்த அளவு எதிர்ப்புக் காலத்தில் ஆகும். "கறுப்பு முதலாளித்துவத்தில்" அயரா நம்பிக்கை கொண்டிருந்த, பெரி கொர்டியின் உரிமைக்குட்பட்ட இந்த இசைப்பதிவு நிறுவனம், அன்றிருந்த தீவிரத்தன்மையுடன் தொடர்பு பெறாமல் இல்லை.

1971ல், கோர்டியும், பாடகர் மார்வின் கேயியும் (Gordy and singer Marvin Gaye), பிந்தையவருடைய விருப்பமாகிய "என்ன நடக்கிறது?" என்ற வியட்நாம் போரெதிர்ப்புப் பாடலைப் பதிவு செய்வதில் பூசலிட்டுக்கொண்டனர். கேயேவுடைய ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் வியட்நாமில் இறந்துவிட்டார், அவருடைய சகோதரர் மூன்றுமுறை அங்கு பயணித்துள்ளார்; அந்த நேரத்தில் அவர் கூறியிருந்தார்; "என்னைச் சுற்றிலும் குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்பொழுது, நான் காதல்பாடல்களைப் பாடவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது எவ்வாறு தகும்?" என இரைந்தே வியந்தார். மற்ற, ஸ்டீவ் வொண்டர் போன்ற கறுப்புப் பாடகர்களும் 1970களின் முற்பகுதியில் ரிச்சர்ட் நிக்சன் பற்றிக் குறைகூறிய பாடல்களைப் பதிவு செய்துள்ளனர். கர்ட்டிஸ் மேபீல்டும் (Curtis Mayfield) போர், இனவெறி இவற்றிற்கெதிராக மிக வெளிப்படையாக உரைத்தவராவார்.

அவர்களுடைய தவறு இல்லையென்றாலும், இசைத்துறையின் "ஆன்மா" (Bubblegum) எனக்கூறப்படும், மாற்றுக்களுக்குத் துணைபுரிந்திருக்கின்றனர். 1970களில் தன்னடைய குழந்தை இசைத் தோற்றத்திலிருந்து, ஜாக்சன் வெளிவந்துவிட்டார் என்றாலும், அவருடைய சாதனையைப் பற்றிக் கூடுதலாக மதிப்பீடு கொடுக்கவேண்டிய அவசியமில்லை. மிக உயர்ந்த திறமைகளை வெளிப்படுத்தினாலும்கூட, அவருடைய பாடல்களின் உள்ளுரைகள் குறிப்பிட்டுக் கூறும் அளவு உயர்ந்த உள்ளுணர்வுகளையோ, உறுதியாக எதிர்ப்புத்தன்மையின் உயரங்களையோ எட்டவில்லை. ஜாக்சன் பற்றிய செய்தி ஊடக விவாதங்களில், நாம் அவருடைய உண்மையான நிறைவுகளை, செய்தியாளர்கள், துறை உட்பிரிவினர் இசைத்தட்டு விற்பனை, தனிச் சொத்துக் குவிப்பு இவற்றின் அடிப்படையில் காட்டிய மிகப்பெரிய வியப்புணர்விலிருந்து, பிரித்துத்தான் போற்றிக் காட்டவேண்டும்.

1970களின் பிற்பகுதிகளும், 1980களும், நன்கு தீட்டப்பட்டு ஒளிரும், ஆனால் பொருளற்ற களிப்புத்துறையின் "blockbuster" அரங்கு அதிரவைக்கும் லூகாஸ்-ஸ்பியல்பர்க தயாரிப்புக்களான, Star Wars, நட்சத்திரப் போர்கள், இன்டியானா ஜோன்ஸ் தொடர்கள், E.T இவற்றுடனும், தொலைக்காட்சியில் டல்லாஸ், டைனாஸ்டி போன்றவை வெளிவந்ததைக் கண்ணுற்றன. மீண்டும் அவர் தவறெனக் கூறமுடியாத ஜாக்சனுடைய இசைப்பதிவுகள், இந்தப் பொதுச் சித்திரத்தில், உணர்ச்சிப் பெருக்கூட்டும், ஆற்றல் நிறைந்த ஆனால் இறுதியில் ஒப்பிட்டுக் காணும்போது, ஆபத்தில்லாத பொது மனிதராகத்தான், சரியாக அமைந்துள்ளது.

இந்தக் கண்ணோட்டத்தில், ஜாக்சனைப் படைக்க உதவியபின்னர், அவருடைய கவர்ச்சியைத் திரித்தும், தனிப்பட்ட கிறுக்குத்தனங்களை வளர்த்த பின்பும், நிர்வாகம் இப்பொழுது அவரை வேறு ஒரு நோக்கத்திற்குப் பயன்படுத்தப் பார்க்கிறது: ஊழல் மிகுந்த, எவ்வளவிருந்தும் நிறைவு காணாத செய்தி ஊடகம் மக்களுடைய அதிருப்தியை, அதிகாரத்திலுள்ளவரை அச்சுறுத்தலுக்குட்படுத்தாத அல்லது குறைந்த அளவு அச்சுறுத்தலையே கொடுக்கக் கூடிய வேறு வழிகளுக்குத் திருப்புதலில் இந்த ஆண்டு பாதிப்பிற்குட்படுத்தப்படுபவர் என்பதே ஆகும் அது.

மைக்கல் ஜாக்சனுடைய நீதிமன்ற வழக்கு எவ்வாறு முடிவடைந்தாலும், ஒரு வருத்தமான, பெருந்துன்பியலான விதியைக் கூட இந்தக் கலைஞர் எதிர்கொள்ளக் கூடும் எனத்தோன்றுகிறது. அமெரிக்க சமுதாயத்தைப் பற்றிய, அதிலும் இவர் புகழ்வாய்ந்தும் பாதிக்கப்பட்டுமுள்ள, குறிப்பாக, கேளிக்கைத்துறை பற்றிய நிகழ்வுகளின் தன்மையின் போக்கு அந்த திசையைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

(*Lynching,1880-1960 வரை குறிப்பாக அமெரிக்காவின் தெற்குபகுதியில் கறுப்பு அமெரிக்கர்களை துவேசமுறையில் வழக்குகள் இல்லாமல் தண்டித்து, துன்புறுத்திய சட்டமுறைப்படா வழக்கு மன்ற நடவடிக்கையை குறிக்கிறது, மொழிபெயர்ப்பாளர் குறிப்பு)


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved