World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நூலேணி நடையில் செல்கின்றது By K. Ratnayake இலங்கை அரசாங்கம், நவம்பர் ஆரம்பத்தில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாராளுமன்றத்தை இடை நிறுத்தல் உட்பட எதேச்சதிகார நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்பட்ட கூர்மையான அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ் தமது வரவு செலவுத் திட்டத்தை கடந்தவாரம் சமர்ப்பித்தது. ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 12 முன்வைக்கப்படவிருந்த போதிலும், நவம்பர் 19 அன்று பாராளுமன்றம் மீளக் கூடிய போதே சமர்ப்பிக்கக் கூடியதாயிருந்தது. இந்த வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடரானது, பாராளுமன்றத்தை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கும் குமாரதுங்கவின் நடவடிக்கை அரசியலமைப்பு விதிக்கு மாறானது, எனும் சபாநாயகரின் வாதத்துக்குரிய பிரகடனத்துடன் ஆரம்பமானது. இந்தப் பிரகடனத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் இடைமறித்தனர். ஐ.தே.மு. மற்றும் குமாரதுங்கவின் கூட்டணியும் எதிர்க்கட்சியுமான பொதுஜன முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும், பாரளுமன்றக் கூட்டத் தொடரை தமது அரசியல் ஆதரவை பெரிதுபடுத்திக் காட்ட பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தன. நிதியமைச்சர் கே.என். சொக்ஸியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமானது மிகக் கவனமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சமநிலை நடவடிக்கையாகும். இது, பதட்டமான அரசியல் நிலைமையை பிரதிபலிக்கிறது. அரசாங்கம், ஒருபுறம் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கை நிலைமை சீரழிவு சம்பந்தமாக வளர்ச்சி கண்டுவரும் பரந்த அதிருப்தியை நடுநிலைப்படுத்தவும், எதிர்க்கட்சியின் விமர்சனங்களை எதிர்க்கவும் ஒரு தொகை சிறிய சலுகைகளை வழங்கியுள்ளது. இவை யாவும் கடந்த வருடம் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஊற்றெடுக்கும் "சமாதான பங்கீட்டின்" ஒரு அம்சமாக பூசிமெழுகப்பட்டுள்ளன. மறுபுறம், இந்த வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சம், பெரு வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கையின்படி, ஐ.தே.மு.வின் முன்னைய இரண்டு வரவு செலவுத் திட்டங்களில் உள்ள தீவிர பொருளாதார மறுசீரமைப்பை தொடர்வதாகும். பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளின் உண்மையான நோக்கம் இது மட்டுமன்றி, நாட்டின் உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்டுவதும் இந்திய உபகண்டத்துள் திறக்கப்படும் வியாபார வாய்ப்புகளில் இலாபம் பெருவதன் பேரில் இலங்கையை ஒரு மலிவு உழைப்பு சொர்க்கமாக்குவதுமாகும். சொக்ஸி, வரவு செலவுத் திட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அற்பசொற்பங்களைப் பறைசாற்றும் அதேவேளை, தனியார்மயமாக்கல் மூலம் பொதுச் சேவைகளுக்கான செலவை குறைத்தல் மற்றும் தொழில், சேவை வெட்டுக்களை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இரகசியமாக முன்னெடுக்கின்றார். பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அரசாங்க சலுகைகள் ஏற்கனவே மிகவும் எதிர்பார்க்கப்பட்டதாகும். டிசம்பர் 2001ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஐ.தே.மு.வின் வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படும் முதல் சம்பள அதிகரிப்பு இதுவாகும். அடுத்த ஜனவரியில் இருந்து 10 வீதம் அல்லது மாதாந்தம் 1250 ரூபா (13 அமெரிக்க டொலர்கள்) அதிகரிக்கப்படும். அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 10 வீத அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது. இது சராசரியாக மாதாந்தம் வெறும் 800 ரூபாவாகும். இந்த அதிகரிப்பு 2002 டிசம்பரில் இருந்து அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை. வாழ்க்கைச் செலவு சுட்டெண், 2003 அக்டோபர் வரை 2,984ல் இருந்து 3,299 வரை 315 புள்ளிகளால் அல்லது 10.5 வீதத்தால் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் நுகர்வோர் பொருள் மீதான பெறுமதி சேர்ப்பு வரியின் (வற்) பின்னணியில் ஒரு புதிய சுற்று விலை அதிகரிப்பு ஏற்படவுள்ளது. முன்னர் பொருட்கள் 20 வீதம் மற்றும் 10 வீதம் என இரண்டு கட்டங்களாக அமையப்பெற்றன. அடுத்த ஆண்டு முதல் சகல பொருட்களுக்கும் 15 வீதத்தால் வரி விதிக்கப்படும். விலை அதிகரிப்பு விலை வீழ்ச்சியால் சமநிலைப்படுத்தப் படுவதால், இந்த மாற்றம் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அரசாங்கம் கூறுகிறது. எவ்வாறாயினும், காஸ், பெற்றோலிய உற்பத்தி மற்றும் சீனி, பால் போன்ற உணவு வகைகள் உட்பட அடிப்படைப் பொருட்களின் விலையில் 5 வீத அதிகரிப்பை ஏற்படுத்தும். இந்த வரவு செலவுத் திட்டம், கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட உரமானிய வெட்டினால் பெருமளவில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளை அமைதிப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. எடுத்துக் காட்டாக, 50 கிலோ கிராம் யூரியா உரப் பையொன்றின் விலை ஒரே இரவில், ரூபா 350ல் இருந்து 875 ரூபாய்கள் வரை இரண்டு மடங்கு அதிகரித்தது. புதிய வரவு செலவுத் திட்டம் இந்த விலை அதிகரிப்பை 150 ரூபாவால் குறைத்துள்ளது. அரசாங்கம் விவசயிகளின் ஆறு பருவகால பயிர்களுக்கான கடன்களுக்கு 4 சதவீதம் வரை வட்டியைக் குறைக்கும் திட்டங்களை அரச வங்கிகளுக்கு அறிவித்துள்ளது. மத்தியதர வர்க்க வாக்காளரை சமாளிக்கும் விதத்தில், நிதியமைச்சர் வரி விதிப்புக்கான வருமானத்தை ரூபா 240,000 இலிருந்து 300,000 ஆக உயர்த்தியுள்ளார். கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் வங்கிக் கணக்கின் மாதாந்த வட்டி 9,000 ரூபாக்களை விஞ்சினால் அதற்கு வரிவிதிப்பதாக இருந்தது. தற்போதைய வரவு செலவுத் திட்டப்படி மாதாந்த வட்டி 25,000 ரூபாவுக்கும் மேற்பட்டால் மட்டுமே வரி விதிப்புக்கு உட்படுத்தப்படலாம். வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், இந்த வரவு செலவுத் திட்டம் 800 மில்லியன் ரூபாய்களை (8 மில்லியன் அமெரிக்க டாலர்களை) குறைந்த செலவிலான வீடமைப்புத் திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது. அது, 125,000 வறிய குடும்பங்களுக்கு "சுய உதவித் திட்டத்தின்" கீழ் தமது கூரைகளை தாமே சுயமாக அமைப்போருக்கு அஸ்பெஸ்டோ கூரைத் தகடுகளை வழங்குவதாகவும் பிரேரித்துள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவோ வறுமையை ஒழிக்கவோ மிகச் சிறியளவிலேயே உதவும். இவர்களின் நோக்கம் பரந்துபட்டு வரும் அதிருப்தியை அமிழ்த்தி மூடி விடுவதேயாகும். செப்டெம்பரில் 80,000 சுகாதாரத் துறை ஊழியர்கள் சம்பள அதிகரிப்புக்காக 16 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கல்விசாரா பல்கலைக்கழக ஊழியர்கள், புகையிரத ஊழியர்கள், தபால், மின்சாரம் மற்றும் நீர் வடிகால் ஊழியர்கள் உட்பட்ட ஏனைய அரசதுறை ஊழியர்களும் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தங்கள் மற்றும் ஏனைய எதிர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். நெற் பயிர்ச்செய்கை பிரதேசமான வட மத்திய மாகாணத்தில் உள்ள விவசாயிகள், உர மானிய வெட்டு மற்றும் ஏனைய தாக்குதல்களுக்கும் எதிராக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் பிரேரிக்கப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில், வரவு செலவுத் திட்டம் தொழிலாளர் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள நிவாரணம் குறிப்பிடத்தக்க ஒன்றல்ல. அரசாங்கம் அடுத்து வரும் ஆண்டில் 100,000 அரசாங்கத்துறை தொழில்களை வெட்டிச் சாய்க்கும் நோக்குடன் சுயவிருப்புடனான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளது. 2006ம் ஆண்டளவில் மேலுமொரு 200,000 தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் வெட்டிக் குறைக்கப்படுவர். தனியார்மயமாக்கலானது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாங்கமானது 2002 நவம்பர் முதல் 2003 ஆகஸ்ட் இடைப்பட்ட காலப்பகுதியில் அரசாங்க உடமைகளை தனியார் துறைக்கு விற்பனை செய்ததனூடாக 10 பில்லியன் ரூபாய்களை சம்பாதித்தது. அடுத்த ஆண்டில் மேலதிக தனியார்மயமாக்கல் ஊடாக மேலும் 13 பில்லியன் ரூபாய்களை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது. சொக்ஸி, இலாபகரமான பெற்றோலியத் துறை மறுசீரமைக்கப்பட இருப்பதோடு, எதிர்வரும் மாதங்களில் எஞ்சியுள்ள போக்குவரத்து சபைகளும் தனியார் மயமாக்கப்படும், என விளக்கினார். அரசாங்கத்தின் வரையறுக்கப்படாத பண்பானது, அடுத்த மூன்றாண்டுகளில் வரவு செலவுப் பற்றாக்குறையை வீழ்ச்சியடையச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இது 2003ம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 7.8 சதவீதமாக இருப்பதோடு, 2004ல் 6.8 சதவீதமாகவும் 2006ல் 5 சதவீதமாகவும் வெட்டப்படலாம். ஏற்கனவே மிகக் குறைந்த மட்டத்தில் இருந்த கல்வி, சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடுகள், முறையே 2089 மில்லியன் மற்றும் 133 மில்லியன் ரூபாய்களால் வெட்டப்பட்டுள்ளன. ஐ.தே.மு. அரசாங்கத்தின் கீழ், கடந்தாண்டு கல்விக்கான செலவு மொத்த தேசிய உற்பத்தியில் 2.6 சதவீதத்திலிருந்து 2.3 சதவீதமாக குறைவடைந்துள்ள அதேவேளை, சுகாதாரத்துறைக்கான செலவீனம் மொத்த தேசிய உற்பத்தியில் 1.6 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அரசாங்கம் "சமாதான முன்னெடுப்பில்" ஈடுபட்டிருப்பினும் கூட, இராணுவ செலவீனமானது 2003ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 67,386 மில்லியன் ரூபாய்களில் இருந்து 70,105 மில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. இப்பாரிய இராணுவ செலவீனமானது விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முறிவும் ஏற்படுமாயின், அதற்கான தயாரிப்பாக மட்டுமல்லாது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் சுகாதார ஊழியர்களது வேலை நிறுத்தத்தின்போது, ஆஸ்பத்திரிகளில் துருப்புக்களை நிறுத்தி வைத்தது. பாதுகாப்பு செலவீனமானது கல்வி, சுகாதாரத் துறை இரண்டுக்குமான மொத்த செலவீனத்தையும் விஞ்சுகிறது. அடுத்த பிரதான அரசாங்க செலவீனமானது, வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் திட்டமான "புத்துயிர் பெரும் இலங்கையின்" ஒர் அம்சமான உட்கட்டமைப்பாகும். பாதை, நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் கட்டிட அமைப்பு உட்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 110 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அநேகமானவை தனிப்பட்ட வியாபாரிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் 2001ல் 80 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2002ல் 230 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளன. நாட்டில் பதியப்பட்டுள்ள 32,000 தனியார் கம்பனிகளுள் 9,000 மட்டுமே வருமான வரிக்கு உட்படுத்தப்படுவதாகவும், 2,850 கம்பனிகள் மட்டுமே வருமான வரி செலுத்துவதாகவும் சொக்ஸி தெரிவித்தார். அவர், கம்பனிகள் மீது 10 மில்லியன் ரூபா வருடாந்த வருமானத்தின் 1 சதவீதம் அல்லது மொத்த சொத்தில் 10 மில்லியன் ரூபாய்களின் 1 சதவீத வரியுடன் பொருளாதார சேவை வரி ஒன்றை பிரேரித்துள்ளனர். இது இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகின்றது. கடந்த இரு ஆண்டுகளாக உயர் மட்டத்திலுள்ள கொழும்பு பங்குச் சந்தை இலாபத்தில் 15 சதவீத வரியையும் அவர் உருவாக்குவதாக தெரிவித்தார். எந்தவித ஐயத்துக்கும் இடமின்றி, கூட்டுறவு பிரதானிகள் இந்த சொல்லளவிலான வரிவிதிப்புக்ளையோ அல்லது சம்பள மற்றும் சேவைகள் மீதான சிறிய சலுகைகளையோ கூட விரும்பமாட்டார்கள். ஆயினும் அநேக வர்த்க குழுக்கள், அரசாங்கம் எதிர்கொண்டுள்ள கஷ்டமான அரசியல் நிலைமையை கருத்தில்கொண்டு வரவு செலவு திட்டத்துக்கு வரவேற்புத் தந்துள்ளன. இலங்கையில் உள்ள வர்த்தக கைத்தொழில் கூட்டமைப்பு, தனது பிரேரணைகள் கவனிக்கப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை பிரசுரித்துள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனம் "பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்லவல்ல ஆக்கப்பூர்வமான உண்மையான வரவு செலவுத் திட்டம், என வரவு செலவுத் திட்டத்தைப் புகழ்ந்துள்ளது. குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதியான ஜெரமி கார்டர் கூட, தனது குறிப்புக்களில் ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ளார். "இது ஒரு ரடிக்கல் வரவு செலவுத் திட்டமல்ல. பாராட்டுக்குரிய ஒன்றாகும். ஏற்றுக்கொள்ளக் கூடியது," எனவும் அவர் தெரிவித்துள்ளார். "அரச துறையின் அளவு பாரியதாக இருப்பதோடு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று" என எச்சரித்த கார்டர், மேலதிக மறுசீரமைப்பின் தேவையை வலியுறுத்தினார். பரந்த அதிருப்தியை பெரிதுபடுத்தும் இலக்குடன், இந்த வரவு செலவுத் திட்டம் சாதாரண தொழிலாளர்களுக்கு ஒரு சிறிய உதவியையே செய்துள்ளதாக சுட்டிக் காட்டிய எதிர்க் கட்சி, அதன் உள்ளடக்கத்தைக் விமர்சித்தது. ஆனால் பொதுஜன முன்னணியின் வேலைத் திட்டம் ஐ.தே.மு.வின் வேலைத் திட்டத்திலிருந்து வேறுபட்டதல்ல. பொதுஜன முன்னணி 1994ல் இருந்து 2001 வரை பதவியிலிருந்த சமயம், தனது தேர்தல் வாக்குறுதிகளை தூக்கி எறிந்த குமாரதுங்க, தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்படும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் தனியார்மயமாக்கல் மற்றும் "சத்தை மறுசீரமைப்பு" கோரிக்கைகளை அணைத்துக் கொண்டார். |