WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
US occupation authority tramples on Iraqi workers' rights
அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகம், ஈராக்கியத் தொழிலாளர்களுடைய உரிமைளை மிதித்து
நசுக்குகிறது
By Alex Lefebvre
25 November 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் ஜனநாயக விருப்பங்கள் கொண்டுவரப்படும் என்னும் புஷ்
நிர்வாகத்தின் பலருமறிந்த கூற்று, ஈராக்கிய தொழிலாளர்களின் சட்டபூர்வ மற்றும் பொருளாதார நிலையைக்
காணும்போது, பொய்யுரையாகத்தான் உள்ளது. நிறுவனமயப்பட்ட செய்தி ஊடகத்தில் இதைப் பற்றிய அறிக்கைகள் மிகக்குறைவாகவே
வந்துள்ளன. ஆனால், கசிந்து வந்துள்ள செய்திகள், உழைக்கும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில்
அமெரிக்க அரசாங்கம் அதிக விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் தெரிவிக்கின்றன.
அக்டோபர் கடைசியில், ஈராக்கிற்குச் சென்றிருந்த செய்தியாளர் டேவிட் பேகன், ஈராக்கிய
தொழிலாளர் உறவுகளில், அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகம், தற்காலிக இடைக்கால கூட்டணி நிர்வாகம் இரண்டும்,
நாட்டின் வேலைசெய்வோர் தொகுப்பில் பெரும்பான்மையினராக இருக்கும் பொதுப் பணித்துறைத் தொழிலாளர்ளை
நடத்தும் முறையில், அவை எவ்வாறு ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் உள்ளன என்பதுபற்றி விரிவாகக் கூறும் பல
கட்டுரைகளை எழுதியுள்ளார். அக்டோபர் 30ம் தேதியன்று,
democracynow.org க்கு
ஒரு பேட்டி கொடுத்துள்ளார்; மேலும், நவம்பர் 9 அன்று
Los Angeles Times பேகனால் "An
Anti-Labor Line in the Sand" என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தன்னுடைய கட்டுரைகள் சிலவற்றை அவர் பட்டியலிட்டு
dbacon.igc.org என்ற வலைத் தளத்தில்
போட்டுள்ளார்.
CPA வலைத்தளத்தில் உள்ள ஆவணங்களின்படி,
கடந்த செப்டம்பர் மாதம் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிர்ணயித்துள்ள ஊதியவிகித முறை பின்வருமாறு: பெரும்பாலான
தொழிலாளர்களுக்கு மாதம் 60 டாலர்கள், மிகச் சிறிய அளவு பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கு 120 டாலர்கள்,
நிர்வாகிகளுக்கும் மேலாளர்களுக்கும் 180 டாலர்கள், மிக உயர்நிலையிலுள்ள அதிகாரிகளுக்கு 400 டாலர்கள் ஆகும்.
மாதம் 60 டாலர் என்பது, பெரும்பாலான அரசாங்கத் தொழிலாளர்களுக்கு, ஐ.நா.
சுமத்தியிருந்த பொருளாதாரத் தடைகளினால் சீரடைந்திருந்த பொருளாதார நிலையிலிருந்த, சதாம் ஹுசைன்
ஆட்சிக்காலத்தின் கடைசியில் கொடுக்கப்பட்ட ஊதிய அளவிற்குக் கிட்டத்தட்ட சமமானதொகைதான். ஆனால், ஹுசைன்
ஆட்சி தன்னுடைய தொழிலாளர்களுக்கு கொடுத்து வந்த, இலாபத்தில் பங்கு, உணவு, வீட்டுவசதிகளில் உதவித்தொகை
என்ற சலுகைகளையும் நீக்கிவிட்டு இந்தத் தொகையை CPA
கொடுக்கிறது.
அதன் விளைவாக, பொதுத்துறை ஊழியர்கள் ஈராக்கில் வரவு செலவீனங்களைச் சமாளிக்கமுடியாமல்
திணறுகிறார்கள். Los Angeles Timesல்
நவம்பர் 9ம் தேதி வந்த கட்டுரையில், பேகன் எழுதினார்: "பாக்தாதிற்குப் புறநகரத்தே, அல் தாவுரா எண்ணெய்
சுத்திகரிப்பில், தொழிலாளர்கள், மாதம் சராசரி 60 டாலர்கள் வருமானத்தில் குடும்பம் நடத்த முடியாது என்பது
ஆலை மேலாளருக்கு நன்கு தெரியும்; எனவே அவர்களை வேலையில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக அவர்களுக்கு
எண்ணெய் கொடுத்து, அதை அவர்கள் குழந்தைகள் ஆலைக்கு வெளியில் கூவிவிற்கின்றனர்."
CPA கூட்டாகப் பேரம் பேசும் உரிமைகளை
ஈராக்கியத் தொழிலாளர்களுக்கு கொடுக்க மறுத்துள்ளது, இது அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ள ஐ.நா. சர்வதேசத்
தொழிலாளர் அமைப்பின் (ILO)
சட்டங்களை மீறிய செயலாகும்.
ஈராக்கிய தொழிலாளர்களுடன் நடத்திய விவாதங்களில், பேகன், பொதுத்துறைத்
தொழிலாளர்கள் சங்கங்கள் அமைப்பது, அல்லது கூட்டாகப் பேரம் பேசுவது ஆகியவற்றைத் தடைசெய்யும் சதாம்
ஹுசைனால் இயற்றப்பட்ட 1987சட்டத்தை CPA
தொடர்ந்து செயல்படுத்துவதையும் அறிந்தார்.
democracynow.org
க்குக் கொடுத்த பேட்டியில் பேகன் கூறினார்: "நாங்கள் டாக்டர் நெளரி
பஷாட் எனும் உதவி தொழிற்துறை அமைச்சரையும், அவருடைய ஆங்கில உதவியாளர் லெஸ்லி பிண்ட்லே என்னும் பெண்மணியையும்
சந்தித்து, மிகவெளிப்படையாக, கூட்டணி அரசாங்கம் 1987 சட்டங்களைத்தான் செயல்படுத்தப்போகின்றனவா எனக்
கேட்டோம். அவர்கள் அந்தக் கேள்விக்குப் பதில் கூற மறுத்துவிட்டனர்."
democracynow.org
யிடம், CPA
தலைமை நிர்வாகி போல் ப்ரீமர் வேலைநிறுத்தங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், வேலைநிறுத்தம் செய்பவர்கள்
அமெரிக்க சிப்பாய்களின் விரோதிகள் என்றும் கூறியுள்ளார் என பேகன் தெரிவித்தார். 2003 ஜூன் மாதம் திட்டமிடப்பட்டிருந்த
முனிசிபல் தேர்தல்களை ப்ரீமர் ரத்து செய்தபோது, "தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள்" என்று ஒரு பட்டியலை
விநியோகித்தார், அதில் பெரும்பாலன விதிகள் ஈராக்கியச் செய்தி ஊடகத்தை இலக்காக கொண்டிருந்தவை என்றும்
கூறினார்.
"எவரேனும் ஆலைகளில் வேலையை அல்லது எவ்விதமான பொருளாதார முயற்சிகளையும்
சீர்குலைக்க முயன்றாலும், எந்தவிதமான வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டிவிட்டாலும், அவை பி பிரிவின்படி, தடைசெய்யப்பட்ட
நடவடிக்கைகளில் உட்படும். இதற்குத் தண்டனை, ஆக்கிரமிப்பு நிர்வாகம் அவர்களை கைது செய்யும், அவர்கள்
போர்க்கைதிகள் போல் நடத்துப்படுவர்." என்று பேகன் கூறினார்.
வேலையற்றோர் சங்கத்தின், காசிம் ஹடியும் மற்றும் 54 தொழிற்சங்கச்
அங்கத்தவர்களும், ஆகஸ்ட் தொடக்கத்தில் வேலையற்றோரை அமெரிக்கா நடத்தும் விதத்தையும் ஈராக்கில் அமெரிக்க
நிறுவனங்களுடைய நடவடிக்கைகளையும் எதிர்த்து அமைதியான உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், அமெரிக்கப்
படைகள் அவர்களைக் கைது செய்து வைத்துள்ளது.
இப்பொழுதுள்ள வேலையின்மை விகிதமான 70-75 சதவிகிதத்தில்,
CPA நிர்வாகத்தினர்
வேலையின்மைச் சலுகைகள் எதற்கும் ஏற்பாடு செய்யும் முறையைக் கொண்டுவரவில்லை. பேகன்
democracynow.org
பேட்டியாளருக்கு கூறியதாவது; " [தொழிற்துறை
துணை அமைச்சர்]
பஷட், தான் எவ்வாறு ஒரு புதிய வேலையில்லாதோர் நலத்திட்டத்தை கொண்டுவர
இருக்கிறார், அதன் நன்மைகள் யாவை என்பது பற்றி நீண்ட விளக்கம் கொடுத்தார், ஆனால் துரதிருஷ்டவசமாக எந்த
நாடும் அதற்கு பண உதவி கொடுக்க முன்வரவில்லை என்பதையும் விளக்கினார். அதில் அமெரிக்காவும் அடங்கும்."
அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள ஈராக்கில் உள்ள ஈராக்கியத் தொழிலாளர்கள் மட்டும்
இந்த கஷ்டமான நிலைமைகளை எதிர்கொள்ளுவதில்லை; ஈராக்கில் மாபெரும் வேலையின்மை வீதம்
இருந்தபோதிலும்கூட, அப்பகுதி முழுவதிலிருந்தும் வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள அயல்நாட்டுத் தொழிலாளர்களும்,
அமெரிக்க நிர்வாகத்தை நடத்த கட்டாயமாகத் தேவைப்படுகிறார்கள். பிரிட்டனின் நாளேடு,
Financial Times
ஏன் குறைவான ஊதியத்திற்கு வெளியிலிருந்து தொழிலாளர்கள் வருவிக்கப்படுகின்றனர் எனக் கேட்டதற்கு, ஈராக்கில்
ஆளெடுக்கும் துறையின் தலைவரான கர்னல் டாமன் வால்ஷ் கூறினார்: "நாங்கள் ஈராக்கியர்களைப் புறக்கணிக்கிறோம்
என்று பொருளில்லை. பாதுகாப்புப் பார்வையில், ஈராக்கியர்கள் தீய சகவாசத்தின் விளைவுகளுக்கு எளிதில் உட்படுவர்"
என்றார்.
ஹாலிபேர்ட்டனின் துணைநிறுவனமான கெலோக், ப்ரெளன், ரூட்டின் துணை ஒப்பந்தநிறுவனமான
டாமிமியில் வேலைசெய்யும், ஒரு பெயர்கூற விரும்பாத, பாகிஸ்தானிய மேலாளர் மிக வெளிப்படையாகத் தெரிவித்தார்:
"ஈராக்கியர்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தானவர்கள். அவர்களை நாங்கள் நம்புவதற்கில்லை."
பாகிஸ்தான், இந்தியா. பங்களாதேசம், நேபாளம் இவற்றிலிருந்து நாளொன்றுக்கு 3
டாலர் கொடுத்து டாமிமி கிட்டத்தட்ட 1800 தொழிலாளர்களை நியமித்துள்ளது; அந்த நிறுவனம்தான் அப்பகுதியிலுள்ள
1,80,000 அமெரிக்கப் படைகளுக்கு உணவும் வழங்க ஏற்பாடும் செய்கிறது. இந்தத் தொழிலாளர்களுக்கு இரண்டு
ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விடுப்பு கொடுக்கப்படும். "சில டஜன்" ஈராக்கியர்களை சுத்தப்படுத்தும் தொழிலுக்காக
டாமிமி அமர்த்தி உள்ளது.
இந்தக் குறைந்த ஊதியங்கள், மட்டமான வேலைநிலைமைகள், ஆக்கிரமிப்பு அதிகாரிகளினால்
செயல்படுத்தப்படும் சங்க அமைப்பிற்கெதிரான விதிகள், இவையனைத்தும், புஷ் நிர்வாகம், அமெரிக்காவிலும், உலகெங்கிலுமுள்ள
அதன் பெருநிறுவன ஆதரவாளர்களாலும் செயல்படுத்தப்படும் பொதுக் கொள்கைகளின் பிரதிபலிப்பு ஆகும். ஈராக்கியப்
படையெடுப்பிற்கு எதிர்ப்பு தீவிரமாகத் தெரிவித்த தொழிலாளர் அமைப்பான
USLAW (US Labor Against the War)
அமெரிக்கப் போரெதிர்ப்புத் தொழிலாளர் அமைப்பு, ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஈராக்கில் அமெரிக்க
அரசாங்கத்திடம் ஒப்பந்தம் பெற்றிருக்கும் 18 முக்கிய அமெரிக்க பெரு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் இல்லாத
நிறுவனங்கள் அல்லது பெரும்பாலும் சங்க அமைப்பிற்கு எதிரான வரலாற்றைக் கொண்ட தொழிற்சங்கங்கள் இல்லாத
நிறுவனங்கள் எனக் கூறியுள்ளது.
புஷ் நிர்வாகத்தின், ஈராக்கியத் தொழிலாளர்களையும், தொழிற் சங்கங்களையும் ஜனநாயக
விரோதமாக நடத்தும் முறை, அந்நாட்டின்மீது படையெடுத்து, ஆக்கிரமிப்புச் செய்ததின் அடிப்படைத் தன்மையிலிருந்து
வெளிவருகிறது. CPA
உடைய பொருளாதாரக் கொள்கைகள், அரசாங்கக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி, நாட்டையும் அதன் எண்ணெய்
வளங்களையும், தடையற்ற அமெரிக்க நிறுவனங்கள் சுரண்ட வகைசெய்யும் பொதுத்திட்டத்தின் கீழ் ஓரணி சேர்ந்து வருவதாகத்தான்
இருக்கின்றன. அமெரிக்க நிறுவனங்கள் ஈராக்கியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டம் போடும் இடங்களில்,
அவை எந்த உண்மையான தொழிலாளர் உரிமைகளும் பாதுகாப்புக்களும் இல்லாத, அகற்றப்பட்ட உழைப்புச் சந்தையை
அவர்கள் விரும்புகின்றனர், எனவே தொழிலாளர்களை ஈவிரக்கமற்ற மட்டத்திற்கு சுரண்ட கீழ்ப்படுத்த முடியும்.
ஈராக்கியப் பொருளாதாரத்தை உடைத்து, ஈராக்கியச் சொத்துக்களை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு,
"அதிர்ச்சி வைத்தியம்" என்ற முறையில் பழைய சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு, அதன்
தொழில் துறை, நிதியக்குவிப்புக்கள் அழிக்கப்பட்டதுபோல் செய்யவேண்டும் என்பதே, புஷ் நிர்வாகத்தின் இறுதித்திட்டமாகும்.
சதாம் ஹுசைனின் ஆட்சி வீழ்ந்த பின், ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பொக்கிஷங்களைக்
கொண்டிருந்த வரலாற்றுப், பண்பாட்டு அரிய பொருட்களும் நிறைந்திருந்த அருங்காட்சியகங்கள் உட்பட அரசாங்கச்
செல்வங்கள் சூறையாடுதலை அனுமதித்த வெற்றிபெற்ற அமெரிக்கப் படைகளின் முடிவு இத்தகைய நோக்கங்களைத்தான்
அடிப்படையாகக் கொண்டிருந்தது. நாட்டின் மீதான கட்டுப்பாட்டைப் பெற்றவுடன், ஆக்கிரமிப்புப் படைகள் மிகப்பெரிய
வேலையிழக்கக் கூடிய மூடல்களுக்கு, குறிப்பாக இராணுவத்தில், உத்தரவு இட்டது. ஜூன் 8ம் தேதி, ஈராக்கிய
தொழில் துறையைப் பாதுகாத்த அனைத்து காப்புவரிகளையும் நீக்கினர்; அரசாங்கத்திற்கு உடைமையான நிறுவனங்கள்
அனைத்திற்குமான மானியத்தொகைகளையும் குறைத்தனர். இறுதியாக
CPA செப்டம்பர்
21, ஆணை எண் 39, உத்தரவின்படி, 100 சதவீதம் அயலார் முதலீட்டு ஈராக்கிய நிறுவனங்களை அனுமதித்து, அனைத்து
இலாபங்களையும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அனுப்ப அனுமதியும் கொடுத்தது.
ஈராக்கிய பொருளாதாரத்தில் இந்தக் கொள்கைகள் பெரும் அழிவுதரும் விளைவுகளை ஏற்படுத்தின;
முதலில் இவை நாட்டின் மாபெரும் வேலையில்லாத் திண்டாட்ட விகிதத்தில் பிரதிபலித்தன. மற்ற குறிகாட்டிகளும், அமெரிக்கப்
படையெடுப்பு, ஆக்கிரமிப்பு இவற்றினால் தோன்றியுள்ள பொருளாதார பேரழிவிற்குச் சான்றுகளாக உள்ளன.
அக்டோபர் 10ம் தேதியன்று,
BBC, உலக வங்கி
கொடுத்துள்ள மதிப்பீடுகள் பற்றிக் குறிப்பிடுகையில், ஈராக்கியப் பொருளாதாரம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 22 சுருங்கிவிடுமெனக்
கூறியுள்ளது. தனிநபரின் சராசரி வருமானம், ஆண்டு ஒன்றுக்கு, 1980ன் 3,600 டாலர்களிலிருந்து, 2001ல் 770-
1,020 டாலர்கள் ஆகவும், 2003ல் 450 - 610 டாலர்கள் ஆகவும் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. ஜேர்மனிய
வெளியுறவுத்துறையின் வலைதளத்தின்படி, ஈராக்கியப் பொருளாதாரப் பகுப்பாய்வு, நாட்டின் தொழில்துறை திறனில்
12சதவீதம் மட்டுமே இப்பொழுது பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஐநாவின் வளர்ச்சித்திட்ட நிர்வாகியான மார்க் மால்லோக் பிரெளன்,
Associated Press
க்கு, நவம்பர் 4 அன்று, ஈராக்கிய மக்கட்தொகை 60 சதவீதம் அமெரிக்க உணவு அளித்தலை நம்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
Quest Economics Database
அறிக்கையை மேற்கோள் காட்டிய Washington
Post ஆகஸ்ட்
28 கட்டுரையையே இது பிரதிபலிக்கிறது; இதன்படி, "பெரும்பாலான ஈராக்கியர்கள்... வேலையின்றி, காசின்றி,
அமெரிக்க உணவு உதவியை நம்பியுள்ளனர்" என்று கூறப்படுகிறது.
இந்த "அன்னதானங்கள்", உண்மையில் ஐ.நாவின் எண்ணெய்க்கு உணவு என்ற திட்டத்தின்கீழ்
ஈராக்கிய எண்ணெய் விற்பனையிலிருந்து வரும் பணத்திலிருந்து வருவதாகும்; இது இப்பொழுது
CPA உடைய
கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. ஈராக்கியர்கள் தங்கள் உணவு ரேஷன்கள் சிலவற்றை மருந்து போன்ற மற்றத்தேவைகளுக்காக,
விற்பதாக Post
மேலும் தெரிவிக்கிறது.
ஈராக்கிய சொத்துக்களை, அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு தனியார்மயமாக்குதல்
மூலம் விற்றுவிடும் புஷ் நிர்வாகத்தின் நீண்டகாலத் திட்டத்திற்கும் கடுமையான இடர்ப்பாடு வந்துள்ளது. அத்தகைய
விற்பனை, 1907ம் ஆண்டு, போர்விதிகள் பற்றிய ஹேக் உடன்பாட்டை மீறுகிறது என்பது ஒரு பிரச்சினையாகும்; ஈராக்கிய
அரசியலமைப்பிற்கு அவை சட்டவிரோதமாகையால், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் இயன்ற அளவு அவற்றிற்கு
கீழ்ப்பட்டுத்தான் நடக்கவேண்டும். இதையும்விட முக்கியத்துவமானது என்னவென்றால், அமெரிக்கப்படைகள் ஆயுதமேந்திய
ஈராக்கியப் போராளிகளை அடக்கமுடியாமல் இருப்பது, முதலீடு செய்யத் திறன் உடையோருடைய ஊக்கத்தை தகர்த்துள்ளது.
Boston Globe
ல் வந்துள்ள கட்டுரை ஒன்று, புஷ்ஷின் திட்டங்கள் பற்றி, தாராள சார்பு உடைய,
ஆனால் இருக்கும் அமைப்புக்களின் தன்மையோடு ஒத்துப்போகும் பொருளாதார வல்லுனர்கள், உலக வங்கியின் பழைய
தலைவர் Joseph Stiglitz,
ஸ்ராலினிசத்திற்குப்பின் போலந்தை "அதிர்ச்சி வைத்தியத்திற்கு" உட்படுத்திய திட்டத்தின்
சிற்பி Jeffrey Sachs
போன்றோரால் வைக்கப்படும் தந்திரோபாய ஆட்சேபனைகள் பற்றி விவரிக்கிறது. அது கூறுவதாவது;
"இப்பொழுதுள்ள வன்முறையிலும், அரசாங்க அமைப்புக்களுடைய நிச்சயமற்ற சட்டநிலையிலும், ஈராக்கில் அயல்நாட்டு
முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரேவழி, சொத்துக்களை வாங்குவதில் அவர்களுக்கு அவற்றின் மதிப்பைவிட மிகக்குறைந்த
அளவில் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்."
Globe
தொடர்புகொண்ட பொருளாதார வல்லுனர்கள், "ஈராக்கிய மயமாக்குதல்"
ஈராக்கியத் தொழிலாளர்களுக்கு, தனியார்மயத்தை ஒருகால் ஏற்கப்படக்கூடியதாக ஆக்கலாம் என்ற பக்திபூர்வ
நம்பிக்கையை வெளியிட்டனர். Globe
எழுதுகிறது: "இதற்குப் பதிலாக, முழுஉரிமை பெற்ற ஈராக்கிய அரசாங்கம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் வரை,
பொருளாதாரம், மெதுவான மாற்றத்திற்குட்படுத்தப்பட்டு, மானியத்தொகைகளை பாதுகாத்து, தனியார்மயத்தைத்
தாமதப்படுத்த வேண்டும் எனப் பொருளாதார வல்லுனர்கள் வாதிடுகின்றனர்."
ஆனால், அமெரிக்கப் படைகள் ஓர் கைப்பாவை ஈராக்கிய அரசாங்கத்தை நிறுவும் முயற்சியில்
வெற்றிபெற்றாலும், இத்தகைய திட்டங்களுக்குப் பொதுமக்கள் விரோதத்தை எதிர்கொள்ள வேண்டும். ஈராக்கிய அரசாங்கச்
சொத்துக்களை அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டியது மட்டுமல்லாமல், பெரும்பாலான மக்கள்தொகையை
வறுமையில் தள்ளும் முயற்சியாகவும் போய்விடும். டேவிட் பேகன், அல் தெளராவின் சுத்திகரிப்பு நிலைய மேலாளரிடம்
பேசியபொழுது, மேலாளர் தெரிவித்ததாவது: "[சுத்திகரிப்பின்
3000பேரில்]
நான் 1,500 தொழிலாளர்களை வெளியே அனுப்பவேண்டும். அமெரிக்காவில்
ஒரு நிறுவனம் தொழிலாளர்களை வெளியே அனுப்பும்போது, வேலையின்மைப் பாதுகாப்பு போன்றவை உள்ளன,
அவர்கள் பட்டினியால் இறக்க மாட்டார்கள். இங்கு நான் பணியாளர்களை வெளியே அனுப்பினால், அவர்களையும்,
அவர்கள் குடும்பங்களையும் கொல்வதற்கு ஒப்பாகும்."
இந்தப் பின்னணியில், எந்த அமைப்பு, புஷ் நிர்வாகத்தின் நோக்கங்களுக்கு எதிராகத்
தொழிலாளர்களைத் திரட்டினாலும், CPA
அதை விரோதத்துடனும், பயத்துடனும் பார்க்கிறது. பேகன் தன்னை
democracynow.org க்காகப்பேட்டி
கண்டவரிடம் கூறினார்: "ஆக்கிரமிப்பை ஒட்டிய பொருளாதார நிலமையும், இந்தத் தனியார்மயமாக்குதலைப் பற்றிய
திட்டங்கள் அன்றாடம் ஈராக்கிய தின ஏடுகளில் அறிவிக்கப்படுவதனால் ஏற்படும் கவலையும், தொழிலாளர்கள்
சங்கங்கள் அமைப்பதற்கு ஊக்குபவையாக இருக்கின்றன."
Top of page
|