WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
சீனா
US-China tensions loom over Taiwan
தைவான் தொடர்பாக அமெரிக்க-சீன பதட்டங்கள் முற்றுகின்றன
By John Chan
5 December 2003
Back
to screen version
கடந்த 30 ஆண்டுகளில் இருதரப்பிற்கும் இடையில் மிகச்சிறந்த உறவுகள் நிலவுவதாக அதிகாரப்பூர்வமாக
அறிக்கைகள் விடப்பட்டபோதிலும், தைவான் பற்றிய அந்தஸ்து தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில்
மீண்டும் சர்ச்சை தோன்றியுள்ளதை அடுத்து பதட்டங்கள் வெடித்துள்ளன.
தைவான் குடியரசுத் தலைவர் சென் ஷுய்-பியானும், அவரது சுதந்திர ஆதரவு சகாக்களும்,
தைவானை தனி தேசிய அரசாகப் பிரகடனம் செய்வதற்கு பொதுமக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவார்களானால்
''படை பலத்தைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்'' என்று அண்மைய வாரங்களில் சீனா பலமுறை எச்சரிக்கை
செய்து வந்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ''ஒரே சீனா'' கொள்கையின்படி தைவான்
சீனாவின் ஒரு மாகாணமாகவே கருதப்பட்டு வருகிறது. ஐ.நா- அமைப்புகளிலும் இடம்பெறவில்லை மற்றும் தூதரக அங்கீகாரமும்
அளிக்கப்படவில்லை
அடுத்த ஆண்டு தைவான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கையில், தைவானின் அரசியல்
சட்டத்தை மாற்றப்போவதாக சென்கூறி வருவதற்கு பதிலடியாக சீனாவின் அச்சுறுத்தல் வருகின்றது. தைவான் தீவு அரசியல்
சட்டத்தில் சீனக் குடியரசின் ஒருபகுதி (ROC)
என்றே இன்னும் வரையறுக்கப்படுகிறது. 1949ல் மாவோ சேதுங் படைகள் இந்த முக்கிய நிலப்பகுதியில் இக்குடியரசைத்
தூக்கி எறிந்தன.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு தூதுக்குழுவினரிடம் நவம்பர் 10-ந்தேதி, சென்-ஷுய்-
பியான், தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், தைவானை தனிநாடாக அறிவிக்க வகைசெய்யும் பொதுமக்கள் வாக்கெடுப்பை
2006- டிசம்பர் 10-ந்தேதி நடத்தப் போவதாகவும் 2008-மே 20-ந்தேதி இது அமுலுக்கு வரும் என்றும் கூறினார்.
நவம்பர் தொடக்கத்தில், தைவானின் துணைப்பாதுகாப்பு அமைச்சர் சென் சாவோ-மின், தனது அரசாங்கம் ''புதிய தேசத்தை
உருவாக்கப் போரில்'' சண்டையிடுவதற்கு தயாராக உள்ளதாக அறிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து வெளிவரும்
Strait Times நாளேடு, நவம்பர் 21-ந்தேதி பிரசுரித்துள்ள
தகவல், சீனாவிற்கும் தைவானுக்கும் இடையில்
போர் தொடங்குமானால் அமெரிக்க விமானந்தாங்கிப் படைப்பிரிவுகள் தைவானுக்கு ஆதரவாகத் தலையிடுமானால் அவற்றைத்
தாக்கக் கூடிய வகையில் சீனா தனது கடற்படைப்பிரிவுகள் இரண்டு குரூஸ் ஏவுகணைகளைத் திரட்டி வைத்துள்ளது உள்பட,
சீன இராணுவம் ''முன்னேற்பாடாக படைகளை அணிதிரட்டுவதில்" நுழையும் விளிம்பில் இருந்ததாகக்
கூறுகிறது. 1996-ம் ஆண்டு சீனாவிற்கும் தைவானுக்கும் இடையில் மோதல்கள் முற்றிய போது, கிளிண்டன் நிர்வாகம் தைவான்
நீரிணைக்கு இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்களை அனுப்பியது.
தைவானின் சுதந்திரத்தை அதிகாரபூர்வமாக புஷ் நிர்வாகம் ''ஆதரிக்காது'' என்று
அறிவித்திருந்தாலும் தைவான் தேசியவாதிகளுக்கு அமெரிக்கா ஆதரவு தரக்கூடும் என்ற சாத்தியக் கூறு மிகப்பெரிய அச்சுறுத்தல்
என்று சீனா கருதுகிறது. நவம்பர் 22-அன்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்குப் பேட்டியளித்த சீனப் பிரதமர்
வென் ஜியாபோ வாஷிங்டன் ''எந்த விதமான தவறான சமிக்கையையும்'' சென் சூய்-பியனுக்கு காட்டவேண்டாம் என
வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ''தைவானின் பிரிவிணைச் செயல் திட்டத்தை மேற்கொள்ள தைவான் நிர்வாக
அமைப்புக்களின் தலைவரால் பயன்படுத்தப்படும் பொதுவாக்கெடுப்பு அல்லது அரசியலமைப்பு சட்டம் அல்லது இதர தந்திரங்கள்
மேற்கொண்டாலும் அவற்றை எதிர்ப்பதில் அமெரிக்கா தனது நிலையைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் '' என அவர்
கூறினார்.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள
China Daily நவம்பர் 27-ல் தைவான் தொடர்பான
அமெரிக்காவின் கொள்கையை தெளிவில்லாமல் குழப்பமாக இருப்தாக விமர்சித்தது மற்றும் இக்கொள்கை ''தைவான் தீவின்
பிரிவினைவாதிகளை ஊக்குவிக்க உதவுகிறது மற்றும் ஒரே சீனா கொள்கையையும் அதேபோல சீன-அமெரிக்க உறவுகளின்
அரசியல் அடித்தளத்தையும் சீர்குலைக்கும்'' என்று அறிவித்தது.
தைவான் நாடாளுமன்றத்தில் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வகைசெய்யும் மசோதா, சீனாவுடன்
தைவான் இணையவேண்டுமென வற்புறுத்தும் தைவானின் இரண்டு கட்சிகளான தேசியவாத அல்லது கோமிண்டாங் கட்சி
(KMT)
மற்றும் மக்கள் முதன்மைக் கட்சி (PFP)
கொண்டு வந்த திருத்தங்களை ஏற்று தீவிரமாகத் திருத்தப்பட்ட பொழுது சீனாவின்
கண்டனத்தின் கடுமை நவம்பர் 29--ம் தேதிக்குப் பின்னர் ஓரளவிற்குத் தணிந்தது. சீனக் குடியரசிலிருந்து தைவானின்
பெயரை மாற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவதைத் திருத்தங்கள் தடுத்து நிறுத்துகின்றன, அல்லது கொடியையோ,
எல்லையையோ அல்லது தேசிய கீதத்தையோ மாற்றுவதற்குச் சட்டத்திருத்தம் தடை செய்கிறது. தைவானுக்கு வெளிநாட்டு
அச்சுறுத்தலோ அல்லது போரோ ஏற்பட்டால்தான் அத்தகைய ''தற்காப்பு வாக்கெடுப்பு'' நடத்தவியலும்.
அப்படி இருந்தும் சென் ஷுய்-பியன் தனது நிகழ்ச்சி நிரலை மூர்க்கமாகச் செயல்படுத்துவதில்
உறுதி கொண்டிருக்கிறார் மற்றும் மோதல் போக்கையும் சந்திக்கத் தயாராகவே உள்ளார். நவம்பர் 30-ந்தேதி அவர்
உரையாற்றும் போது சீனாவிடம் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் உள்ளன. அவற்றின் மூலம் தைவான் மீது தாக்குதல்கள்
நடத்தப்படலாம் என்பதே பொது ஜன வாக்கெடுப்பு நடத்துவதை நியாயப்படுத்துவதாகும். இது தீவின் அந்தஸ்தினை மறுவரையறை
செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது ஜனநாயக முற்போக்குக் கட்சி பேரணியில் உரையாற்றிய சென், ''அடுத்த ஆண்டு
மார்ச் 20-ந்தேதி தேசிய இறையாண்மையை பேணிக்காக்கவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாம் பொதுஜன
வாக்கெடுப்பு நடத்த முடியும். தற்போது தைவானுக்கு வெளிநாட்டு ஆபத்து சூழ்ந்திருக்கிறது, (ஆகையால்) தைவானின் தேசிய
இறையாண்மை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம். கம்யூனிஸ்டுகள் நம்மைத்தாக்கும் வரை நாம் காத்துக்
கொண்டிருந்தால், அது மிகவும் காலங்கடந்த நடவடிக்கையாக அமைந்துவிடும். அப்போது பொதுஜன வாக்கெடுப்பு
நடத்த வேண்டிய அவசியமில்லாது போய்விடலாம்'' எனக் குறிப்பிட்டார்.
அவரது அறிக்கை அவரது நிர்வாகத்தின் குறுகியகால தேர்தல் கணிப்புகளை அடிப்படையாகக்
கொண்டிருக்கிறது. சீனாவுடன் தைவானை இணைக்கக் கோரும் கட்சிகளை விட தேர்தலில் சென் செல்வாக்கு குறைந்து
கொண்டிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதால் சீனாவிற்கு ஆத்திரமூட்டி அது மிரட்டல் விடுக்குமானால் அந்த இராணுவ
மிரட்டலை எதிர்த்து நிற்பதாகக் காட்டி மக்களின் ஆதரவைத் திரட்டத்திட்டமிட்டிருக்கிறார். அவரும் ஏனைய தைவான் தேசிய
வாதிகளும் இராணுவ மோதல்கள் ஏதாவது நடக்குமானால் அதில் புஷ் நிர்வாகம் தைவானின் உதவிக்கு வரும் என்று கணித்துச்
செயல்பட்டு வருகின்றனர்.
அமெரிக்க-சீன உறவுகள்
சீனாவை தனது பிரச்சாரத்தின் போது அமெரிக்காவிற்கு ஆசிய பசிபிக்கில் ''மூலோபாய
போட்டி'' நாடு என்று காட்டிய பின்னர் புஷ் 2001-ம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். 2001 ஏப்ரலில்
சீனாவின் வான்வெளியில் ஊடுருவிய அமெரிக்க உளவு விமானமும், சீன ஜெட் போர்விமானமும் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து
வாஷிங்டன் சீன உறவுகள் மிக மோசமான அளவிற்கு நெருக்கடிக்கு உள்ளாயின. அந்தக் சர்ச்சைக்கிடையில், அதற்கு முன்னர்
எப்போதும் நடைபெற்றிராத அளவிற்கு தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
சீனாவின் தாக்குதல்களிலிருந்து ''தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு என்னென்ன எடுக்கிறதோ"அந்நடவடிக்கைகளுக்கு
அமெரிக்கா உதவும் என்று புஷ் தொலைக்காட்சிப் பேட்டியில் அறிவித்தார்.
செப்டம்பர்-11 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் உறவுகள் சற்று சீரடைந்தன.
பொருளாதார அடிப்படையில் அமெரிக்காவின் சந்தைகளையும், முதலீடுகளையும் நம்பி இருக்கும் சீனா ''பயங்கரவாதத்திற்கு
எதிரான போரில்'' அமெரிக்காவை ஆதரிப்பதன் மூலம் பதட்டங்களை தணித்துக் கொள்வதற்கான வாய்ப்பைத் தரும்
என்றும் அமெரிக்கா தற்காலிகமாகவாவது தன்னை ஆதரிக்கும் என்றும் சீனா எதிர்பார்த்தது.
ஆசியா டைம்ஸ் நவம்பர் 18-ந்தேதி கூறியது: ''பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு
எதிராக சீனா அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துழைத்து வருவது வடகொரியா அணுசக்தி தொடர்பான நெருக்கடியில்
அமெரிக்காவிற்கு ஆதரவுகாட்டி வருவது, மண்டலப் பாதுகாப்பு, இருதரப்பு வர்த்தகம், தைவான் பிரிவினைவாதத்தை ஒடுக்குவது,
க்சின்ஜியாங்கை (சீனாவிலுள்ள மேற்கத்திய முஸ்லீம்கள் நிறைந்துள்ள வளமிக்க மாகாணம்) ஸ்திர நிலமைக்கு கொண்டுவருதல்
சீனாவிற்குப் பல்வேறு பயன்களைத் தந்திருக்கிறது. சீன நாணயத்தை மறுமதிப்பீடு செய்வது அல்லது வர்த்தகத்தில் உபரி
போன்ற பிரச்சனைகள் பொருளாதாரப் பிரச்சனைகள் என்று மட்டுமே சீனா கருதுகிறது. இது போன்ற பிரச்சனைகளை
அரசியலுக்கு விரிவுபடுத்த சீனா விரும்பவில்லை. அப்படிச் செய்வது உள்நாட்டில் அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகளை
எளிதாகக் கிளறிவிடும் என்று சீனா கருதுகிறது.''
பூகோள அளவில் அமெரிக்காவின் இராணுவவாதம் நடவடிக்கைகள் வெடித்துக் கிளம்பியதைத்
தொடர்ந்து உலக அரங்கில் தனது ராஜியத்துறை செல்வாக்கை வளர்த்துக் கொள்ள தனது சொந்த முயற்சிகளை மேற்கொண்டதும்,
அது இருதரப்பு மோதல்களுக்கு வித்திடுவதாக அமைந்துவிட்டது.
அக்டோபர் மாதம் புஷ் ஆஸ்திரேலியச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். சீனப்
பிரதமர் ஹூ ஜிண்டாவோ பயணத்தை ஒட்டி இந்தப் பயணம் அமைந்தது. ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இதர தென்கிழக்கு
ஆசிய நாடுகள் ''தைவான் நீரிணைப் பகுதியில் அமைதி நிலவுவதில்'' உதவுவார்கள் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகக்
குறிப்பிட்டார். குறிப்பாக புஷ் சீனாவைப் குறிப்பிட்டுக் கருத்துத் தெரிவிக்கவில்லை. இப்படி புஷ் சீனாவைக் குறிப்பிடாமல்
விட்டு விட்டது சீனா அமைதிக்கு மிரட்டலாக உள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் தான் என்று பெய்ஜிங் மற்றும் இதர
பகுதிகளில் விமர்சனங்கள் வந்தன.
ஹூ ஜிண்டாவோ, பேங்காக்கில் தென் கிழக்கு ஆசிய நாடுகள்
அமைப்புடன் (Association
of South East Asian Nations ASEAN) ''மூலோபாய
பங்குதாரர்'' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் கான்பெராவில் புஷ் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். சீனாவின்
வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளை விரிவாக்க அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த மண்டலத்தில் சீனா மிகப்பெரிய
ஏற்றுமதி சந்தையாக வளர்ந்துள்ளதனால், கிழக்கு ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு வளர்வது குறித்து வாஷிங்டனில் கவலைகள்
பெருகி வருகின்றன.
நியூயோர்க்கிலிருந்து பிரசுரிக்கப்பட்டு வரும்
Foreign Affairs சஞ்சிகை சீனாவின் வெளியுறவுக்
கொள்கைச் "செயல்பாடு" அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போக்கிற்கு ஏற்புடையதாக அமையாது என்று எச்சரித்துள்ளது.
''அமெரிக்கர்கள் சீன வெளியுறவுக் கொள்கையின் ஓர் அம்சம் குறித்து எப்போதுமே நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டும். சீனாவின் வெளியுறவுக்கொள்கை வெளியுறவுகள் வளரும்போது அதை தனது நலனுக்கு பயன்படுத்திக்
கொள்வதில் சீனா தேர்ச்சி பெற்று வருகிறது. இன்றைய தினம் சீனா
மிகவும் நுட்ப முறையில் தனது அணுகுமுறைகளை அமைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவை மிகவும் நீக்குப் போக்குள்ளவை
அல்லது கண்ணியம் மிக்கவை என எடுத்துக்கொள்ள முடியாது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளது கொள்கைகளைச்
சீர்குலைத்து விடவோ, அவற்றிற்கு சவால் விடவோ, சீனா தனது நிலைப்பாட்டை உயர்த்திக் கொண்டு வருவதால் சீனாவின்
புதிய ஆற்றல்கள் சில நேரங்களில் வாஷிங்டனின் குறியிலக்குகளை சீர்குலைத்துவிடும்.....
''தற்போது சீனா சர்வதேச விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு தனது நலன்களை
மேம்படுத்த முயன்று வருகிறது. ஆனால் இந்த முறையின் சில அம்சங்கள் குறித்து சீனா அதிருப்தி கொண்டிருக்கிறது,
குறிப்பாக அமெரிக்காவின் மேலாதிக்கம் மற்றும் சிறப்பறாக தைவான் நிலைப்பாட்டிலாகும் ''
சீன- அமெரிக்க உறவுகள் எளிதில் நொருங்கும் தன்மை நவம்பர் மாதம் சீனாவின்
ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா தடை விதித்ததில் கோடிட்டுக்காட்டிகிறது. அமெரிக்க உற்பத்தியாளர்களும் தொழிற்சங்க
அதிகாரிகளும் நிர்பந்தம் கொடுத்ததால் நவம்பர் 18-அன்று சீன துணிகளுக்கு கடுமையான கோட்டா நிபந்தனைகளை புஷ்
விதித்தார். அதைத் தொடர்ந்து ஆறுநாள் கழித்து சீனாவின் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளுக்கு 46-சதவிகிதம் காப்பு
வரி விதித்தார். அதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவிலிருந்து கோதுமை இதர தானியங்களை இறக்குமதி செய்யும் திட்டங்களை
ரத்து செய்தது.
சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ அடுத்த வாரம் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள
இருக்கிறார். வர்த்தக தகராறுகள் பற்றிய பேச்சுவார்த்தைகளுடன் சேர்த்து, தைவானில் பதட்டங்கள் அதிகரிக்குமானால்
புஷ் நிர்வாகம் அது தலையிடாது என்று உறுதிமொழி பெறுவதற்கு சீனா முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், புஷ் அத்தகைய உறுதிமொழிகளை தர விரும்பமாட்டார்.
இதன் விளைவாக, தைவான் ஜனாதிபதி தேர்தலுக்கு இட்டுச்செல்லும் அடுத்த மூன்று
மாதங்களும் கிழக்கு ஆசியாவில் நிலையை கொந்தளிக்கும் மற்றும் முன்கணிக்க முடியாதவையாக வடிவெடுத்து வருகின்றன. |