World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைInternational and corporate presure for a political compromise in Sri Lanka இலங்கையில் அரசியல் சமரசத்துக்கான சர்வதேச மற்றும் பெரும் கம்பனிகளின் அழுத்தம் By K. Ratnayake இலங்கையின் அரசியல் நெருக்கடி நான்காவது வாரமாக இழுபட்டுவரும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் ஜப்பானும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் ஏதாவதொரு வகையிலான சமரசத்தை பூசி மெழுக கடுமையான அழுத்தத்தைத் திணித்து வருகின்றன. நவம்பர் 4 அன்று, விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடகவியல் ஆகிய முக்கிய அமைச்சுக்களை அபகரித்ததோடு பாராளுமன்றத்தையும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்ததன் மூலம் குமரதுங்க இந்த முரண்பாட்டை தோற்றுவித்தார். நாட்டின் உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்கான ஐ.தே.மு. மற்றும் தமிழீழிழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு சிங்களத் தீவிரவாதிகளின் எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவந்த நிலைமைக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளை கீழறுப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அப்போதிருந்து, நோர்வே அரசாங்கம் "சமாதான முன்னெடுப்புகளிலான" தனது தலையீட்டை இடைநிறுத்திக் கொண்டது. நவம்பர் 14 அன்று, வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்கிசன், அரசியல் நிலைமை "சீராகும்" வரை ஒஸ்லோ தற்காலிகமாக விலகுவதாக கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். கடந்தவார முற்பகுதியில், நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெயிம், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர்வதற்கான ஆதரவை பெற இந்திய வெளியுறவு அமைச்சரான யஸ்வன்த் சிங்கா மற்றும் அரசாங்க அலுவலர்களைச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் உட்பட இந்திய அரசியல்வாதிகளுடனான ஒரு சிற்றூண்டி வைபவத்தின் போது, இந்திய அரசாங்கத்துடனான அவரின் கலந்துரையாடலின் சுபாவத்தை சுட்டிக்காட்டும் வகையில், சமாதான முன்னெடுப்புகள் "இந்தியாவின் ஆதரவின்றி ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை," என சொல்ஹெயிம் பிரகடனப்படுத்தினார். இந்த நடவடிக்கைகளில் இந்தியா ஒரு "பிரதான காரணி" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படாவிடில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக, டோக்கியோவில் வாக்குறுதியளிக்கப்பட்ட இலங்கைக்கான பில்லியன் கணக்கான நிதியுதவி நெருக்கடிக்குள்ளாகும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. குமாரதுங்கவை இரண்டு வாரங்களுக்கு முன்னர் சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியான ஜெரமி கார்டர், நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு மேலதிக தாமதமும் கடுமையான விளைவுகளைக் கொண்டிருக்கும் என எச்சரித்தார் -- இந்த வரவு செலவுத் திட்டம் நவம்பர் 12 முன்வைக்கப்படவிருந்தபோதிலும் ஒரு வாரம் பின்போடப்பட்டிருந்தது. அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் உப செயலாளர் மொலி வில்லியம்சன், "அமெரிக்க வர்த்தக சமூகம்" "இலங்கை வியாபார மற்றும் அரசியல் நிலைமை விரைவில் வழமைக்குத் திரும்புவதைக் காண மிகவும் அக்கறை கொண்டுள்ளது," என இலங்கை சுதந்திர வர்த்தக வலயங்களைக் கண்காணித்துவரும் முதலீட்டுச் சபையின் தலைவரான அர்ஜுன் மகேந்திரனிடம் தெரிவித்திருந்தார். டெயிலி மிரர் பத்திரிகையின்படி, "நாட்டின் முதலீட்டில் அமெரிக்க பங்களிப்புக்கான எதிர்பார்ப்புகள் உட்சாகமூட்டுகிறது" எனவும் வில்லியம்சன் தெரிவித்திருந்தார். புஷ் நிர்வாக அலுவலர்களும் கூட ஜனாதிபதியையும் ஐ.தே.மு. வையும் இணைந்து செயற்படுமாறு மீண்டும் மீண்டும் ஆலோசனை தெரிவித்திருந்தனர். இந்த அழுத்தங்களோடு இணைந்து, கடந்த செவ்வாய்க் கிழமை நாட்டின் முன்னணி வியாபார அமைப்புகளோடு சேர்ந்து ஒரு விபரமான ஆவணத்தை வெளியிட்ட இலங்கை கூட்டு வர்த்தக சபை, மூன்று அமைச்சுக்களையும் அரசாங்கத்திடம் திருப்பிக் கையளிக்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தது. இந்த ஆவணம், "சமாதான முன்னெடுப்புகளின்" முழுப் பொறுப்பாளராக பிரதமரே இருக்கவேண்டும் என வலியுறுத்தியது. தெற்காசியாவினுள் அமெரிக்க தலையீட்டால் உருவாக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பற்றிக்கொள்வதில் பெரு வர்த்தகர்கள் ஆர்வமாக உள்ளனர். உறுதியான பொருளாதார அரசியல் மற்றும் மூலோபாய நலன்களை நாடும் புஷ் நிர்வாகம், இந்தியாவில் பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கத்தோடு உறவுகொள்வதோடு, இப்போது பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் காரணியாகக் கருதப்படும் இலங்கையின் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டக் கோருகிறது. இந்தக் கோரிக்கைகளுக்கு முகம்கொடுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு முடிவைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இரண்டாவது தடவையாக கடந்த செவ்வாய்க் கிழமை சந்தித்தனர். விக்கிரமசிங்க பெயரளவிலான பிரான்ஸ் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமரச "கூட்டுழைப்பு" சூத்திரத்தை பிரேரித்தார். அதாவது, குமாரதுங்க ஆயுதப் படைகளுக்கு ஆணைத் தளபதி என்றவகையில் ஒரு "பாதுகாப்பு சபைக்கு" தலைமை வகிக்கும் அதேவேளை, பாதுகாப்பு அமைச்சு அரசாங்கத்துக்கு திருப்பிக் கொடுக்கப்படும். குமாரதுங்க ஒரு உத்தியோகபூர்வமான பிரதிபலிப்பை வழங்கத் தவறிய போதிலும், "எதிர்கால வேலைகளுக்கான ஒழுங்குகளை விபரப்படுத்துவற்காக" ஒரு நிர்வாகக் குழுவை நியமிப்பதில் பிரதமருடன் சேர்ந்துகொண்டார். இது இந்த இருவருக்கும் "முக்கியமான தேசிய விடயங்களில் ஒன்றாக செயற்பட" வாய்ப்பை ஏற்படுத்தும். அவர்கள் இருவரும் இரண்டுவராங்களுக்குள் மீண்டும் சநத்திக்க உடன்பட்டார்கள். புதன்கிழமை பாராளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆளும் ஐ.தே.மு.வின் 130 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா, பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை "அதன் கூட்டு சிறப்புரிமையை பிளவுபடுத்துவதாகும்" எனப் பிரகடனம் செய்தார். பின்னர் அரசாங்கம் குமாரதுங்கவின் சவால்கள் எதுவும் இன்றி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தது. இது பங்குச் சந்தையில் ஒரு உடனடி வளர்ச்சியைக் காட்டியது. ஐ.தே.மு.வின் வரவு செலவுத் திட்டத்தை "சிறந்த மற்றும் சமநிலையானது" என புகழ்ந்த சர்வதேச நாணய நிதிய அலுவலரான கார்டர், அனைத்துலக முதலீட்டாளர்களுக்கு ஒரு தெளிவான சமிக்ஞை விடுத்தார். இந்த வரவு செலவுத் திட்டம், ஒரு புதிய சுற்று மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் பெரு வர்த்தகர்களுக்கு மேலதிக சலுகைகளையும் வழங்கியுள்ள அதேவேளை, பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு சிறிய சம்பள அதிகரிப்பும் விவசாயிகளுக்கு உர மாணியமும் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம், ஏற்கனவே சம்பள அதிகரிப்பு நிறுத்தம் மற்றும் மானியங்களில் மேலதிக வெட்டை வலியுறுத்தியுள்ள போதிலும், அதன் நடவடிக்கைகளின் முடிவானது ஆழமடைந்து வரும் பரந்த அதிருப்தி அரசாங்கத்தின் நெருக்கடியை மேலும் உக்கிரப்படுத்தும் என்பதையிட்டு அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது. வியாழக்கிழமை ஐ.தே.மு. பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை அடுத்து ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அரசாங்கத்தின் பேச்சாளரும் ஐ.தே.மு. அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ், விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகளில் பங்குபற்றத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். அவசியமானால் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த நாள் குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி பேச்சாளர் சரத் அமுனுகம, ஜனாதிபதி "பிரதமருடனான அவநம்பிக்கையான உறவை மறந்துவிடுவார்" என ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். அன்றைய தினம் மாலை, தானும் பிரதமரும் ஒரு அதிகாரப்பகிர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, குமாரதுங்க கூட்டு வர்த்தக சபையின் முன்னால் தாமாகவே சமர்ப்பணமானார். அவர்கள் கூட்டாக நியமித்த குழு மீண்டும் டிசம்பர் 15 அன்று அறிக்கை சமர்ப்பிக்கும் எனக் கூறிய அவர், "தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் அவரை நெருக்காவிடில்" பாராளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை என வாக்குறுதியளித்தார். வியாபார அமைப்புக்களை ஏழு நாட்களுக்குள் சந்திப்பதாக அவர் வாக்குறுதியளித்ததோடு இது விக்கிரமசிங்கவாலும் பின்பற்றப்படும். வெள்ளிக்கிழமை ஐரோப்பிய பாராளுமன்றம் அதன் எதிர்ப்பை தெளிவாகக் காட்டியது. அது ஜனாதிபதியின் நடவடிக்கைகள் "சர்வதேச ஆதரவைப் பெற்ற சமாதான முன்னெடுப்புகளை அச்சுறுத்துவதாக" விமர்சித்த அதேவேளை, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் ஐ.தே.மு. அரசாங்கத்தின் "துணிவான நடவடிக்கைகளுக்காக" அதை புகழ்ந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம், "ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறும் ஜனாதிபதியை நெருக்கியது. கூட்டாக நியமிக்கப்பட்ட குழுவானது சமாதானப் பேச்சுக்கள் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் விக்கிரமசிங்கவே கையாளவேண்டும் என்பதில் உடன்பட்டதாக, தற்போது குமாரதுங்கவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் நேற்றைய வெளியீடு பகிரங்கப்படுத்தியது. இந்தக் குழு அதன் சமரச நடவடிக்கைகளில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மட்டுமன்றி, பாதுகாப்பு, பொருளாதாரம், பொலிஸ் மற்றும் ஊடகம் ஆகிய முக்கிய விவகாரங்களையும்" கூட சேர்த்துக்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் அது செய்தி வெளியிட்டது. நவம்பர் 15 லண்டனில் பினான்சியல் டைம்ஸுக்கு வழங்கிய ஒரு செவ்வியில், தனது பயண ஒழுங்கை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக குமாரதுங்க சுட்டிக்காட்டினார். தன்னையும் பிரதமரையும் பற்றிக் குறிப்பிடும்போது, "இப்போதும் நாம் குறைந்தபட்சம் சமாதானம், மற்றும் பொருளாதாரம் போன்ற ஏனைய விடயங்களில் உடன்பட்டுள்ளோம். இது கூடி வேலை செய்வதற்கான ஒரு தங்கமான சந்தர்ப்பம்..." என அவர் பிரகடனம் செய்தார். மீண்டும் நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அரசியல் நிலைமை பதட்டமானதாகவும் மிகவும் பலவீனமானதாகவும் இருப்பதோடு, தமிழ் கட்சிகள் மேலும் மேலும் அமைதியின்மைக்குள் தள்ளப்பட்டுள்ளன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ் காங்கிரஸ் மற்றும் ஏனைய பல குழுக்கள் அடங்கிய விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தாம் குமாரதுங்கவை நம்பப்போவதில்லை என எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா) தலைவரும் ஐ.தே.மு. அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், ஐ.தே.மு.வும் பொதுஜன முன்னணியும் ஒரு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தீர்மானித்தால், தமிழ் கட்சிகள் விடுதலைப் புலிகளோடு அணிசேரும் என கடந்த திங்களன்று எச்சரித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இ.தொ.கா.வும் அக்கறை கொண்டிருப்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளில் அன்றி, கொழும்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான எந்தவொரு அரசியல் தீர்மானத்திலும் தமது சொந்த நிலைமைகளை தற்காத்துக்கொள்வதிலாகும். குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள்ளும் (ஸ்ரீ.ல.சு.க) முரண்பாடுகள் மேலும் கூர்மையடைகின்றன. ஜனாதிபதி, ஐ.தே.மு.வுடன் சமரசத்துக்குச் செல்லக் கோரும் சர்வதேச மற்றும் வர்த்தகர்களின் அழுத்தங்களுக்கு இசைந்து போகும் அதேவேளை, அவரது சகோதரரான அனுரா பண்டாரநாயக்க உட்பட அவரது கட்சியின் முதன்மையான கோஷ்டி ஒன்று, மக்கள் விடுதலை முன்னணியுடனான (ஜே.வி.பி) ஒரு கூட்டணியை நிறுவவேண்டும் என வலியுறுத்துகிறது. மக்கள் நலன் சார்ந்ததாக காட்டிக்கொள்ளும் சிங்களப் பேரினவாத அமைப்பான ஜே.வி.பி, விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு சமாதானத் தீர்வையும் எதிர்க்கிறது. போட்டி நலன்களுக்கிடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியில், ஜே.வி.பி.யுடனான பேச்சுக்களை குமாரதுங்க தொடர்கின்றார். குமாரதுங்க உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற ஜே.வி.பி.யின் கோரிக்கையையிட்டு எந்தவிதமான ஒழுங்குகளும் எட்டப்படாத அதேவேளை, ஜனாதிபதி கடந்த திங்களன்று இடம்பெற்ற ஸ்ரீ.ல.சு.க. மத்திய குழு கூட்டத்தில் "ஜே.வி.பி.யுடனான கொடுக்கல் வாங்கல்களைப் பற்றி ஆராய" நான்கு மத்திய குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார். நவம்பர் 4, குமாரதுங்கவின் ஜனநாய விரோத நடவடிக்கைகளை அடுத்து, ஜே.வி.பி. அவற்றை "அத்தியாவசியமான" நடவடிக்கைகள் என புகழ்ந்தது. ஆனால் இந்த அமைப்பு நவம்பர் 18 வெளியிட்ட ஒரு அறிக்கையில், "வெளிநாட்டு பிற்போக்குச் சக்திகள் தமது உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் ஏனைய ஏஜன்டுகளைப் பயன்படுத்தி" தமது சொந்த நலன்களுக்காக நெருக்கடியை நிர்வகித்து வருவதாக குற்றம்சாட்டியது. அழுத்தத்தை தீவிரப்படுத்துவதன் மூலம் அவர்கள் ஜனாதிபதி மீது செல்வாக்குச் செலுத்துவதில் வெற்றிகண்டுள்ளனர். பெயரளவிலான இடதுசாரிக் கட்சிகள், தமது பங்குக்கு பொது மக்களின் எந்தவொரு தலையீட்டிலிருந்தும் தூர விலகி இருப்பதோடு, பெரு வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் வரிசையில் நின்றுகொண்டுள்ளன. லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க), கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் நவசமசமாஜக் கட்சியும் (ந.ச.ச.க) தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான ஒரே பதிலீடு குமாரதுங்கவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான ஒரு கூட்டணியேயாகும் என வலியுறுத்தியுள்ளன. நவம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட அவர்களின் அறிக்கை ஒன்றில், "நெருக்கடி உடனடியாக தீர்க்கப்படாவிடில், அது முழு சமூகக் கட்டமைப்பையும் பற்றிக்கொள்ளக் கூடும்", ஆகையால் ஆளும் கட்சிகளை சச்சரவு செய்ய வேண்டாம் என ல.ச.ச.க.வும் கம்யூனிஸ்ட கட்சியும் எச்சரிக்கை செய்துள்ளன. |