World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தோனேசியா The political origins and outlook of Jemaah Islamiyah ஜெமா இஸ்லாமியாவின் அரசியல் தோற்றமும், அதன் கண்ணோட்டமும். பகுதி 3 By Peter Symonds ஜெமா இஸ்லாமியாவைப்பற்றிய மூன்று-பகுதிகள் கொண்ட தொடரில், முடிவுப் பகுதியைக் கீழே வெளியிடுகிறோம். தெற்காசியாவில், ஆப்கானியப் போரினால் ஏற்படுத்தப்பட்ட வலைப்பின்னல் இஸ்லாமிய தீவிரக்குழுக்களை நெருக்கமாகக் கொண்டுவந்தது. இது பிலிப்பைன்சில் அல் கொய்தா நிலைகொண்டிருந்ததால் எளிதாக்கப்பட்டதாக தோன்றுயது. 1993ம் ஆண்டையொட்டி, சுங்க்கரும், பஷீரும் ஜெமா இஸ்லாமியாவைத் தோற்றுவித்தனர். நீண்ட காலமான அவர்களின் வெளிநாட்டு வாழ்க்கை காரணமாக அவர்கள் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் நிறையத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். உதாரணமாக, ஜெமா இஸ்லாமியா உறுப்பனர்கள், பிலிப்பைன்சிலுள்ள MILF (Moro Islamic Liberation Front) உடன் தொடர்பு கொண்டு, ஆப்கானிஸ்தானின் கடினமாகக் கொண்டுவந்த நிலைமைக்கு மாற்றீடாக அதன் தளங்களை இராணுவ பயிற்சிகளுக்கு பாவித்தனர். இந்தோனேசியாவிற்குள் தொடர்ந்து வலுவிழந்து கொண்டிருக்கும் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் வகையில், பல இஸ்லாமிய அமைப்புக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான முழு நனவான முயற்சியை சுகார்ட்டோ மேற்கொண்டு வந்தார். 1990களின் ஆரம்பத்தில், மெக்காவிற்குப் புனித யாத்திரையை வெளிப்படையான காரணமாகக் கொண்டு, இந்தோனேசிய இஸ்லாமிய அறிவுஜீவிகள் அமைப்பு ஒன்றை (Indonesian Association of Islamic Intellectuals-ICMI) இவருடைய நெருங்கிய நண்பர் B.J.Habibie தலைமையில் ஏற்படுத்தினார். ICMI தன்னுடைய நாளிதழான Republika வை வெளியிடுவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. முஸ்லீம்களுக்கு, விகிதாசார அடிப்படையில் அரசாங்க அதிகாரத்துவத்திலும், இராணுவத்திலும் பிரதிநிதித்துவம் மற்றும் ஓர் இஸ்லாமிய வங்கியை நிறுவுதல், இஸ்லாமிய நீதிமன்றங்களின் கெளரவத்தை உயர்த்துவதற்கான சட்டம் ஆகிய மற்றைய சலுகைகளும் கொடுக்கப்பட்டன. சுகார்ட்டோவின் தந்திரோபாயங்கள் விரைவில் பலன் கொடுக்கத் தொடங்கின. Dewan Dakwah Islamiayah Indonesia உடைய தீவிரக்கருத்துடைய தலைவர்களும் இவருக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கி, KISMI என்ற (Indonesian Committee for Solidarity with the World of Islam) உலக இஸ்லாமுடன் ஒற்றுமையான இந்தோனேசியக்குழு அமைக்கப்படுவதற்கு பெரிய முக்கியத்துவத்துடன் செயல்பட்டனர். KISMI சுகார்ட்டோவுடன், அவருடைய மருமகன் ஜெனரல் பிரபவோ சுபியன்டோ மூலம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்துடன், பொஸ்னியா, காஷ்மீர், செச்சனியா, அல்ஜீரியா ஆகியவற்றில் முஸ்லிம்கள் அடக்குவதை எதிர்க்கும் "இஸ்லாமிய நற்பணிகளுக்காக" பாடுபடும் இயக்கமாக அமைந்தது. பஷீரும், சுங்க்கரும் வெளிநாட்டிலிருந்தபோதும், தொடர்ந்து சுகார்ட்டோவை எதிர்த்தும் இருந்தநிலையில், இப்புதிய சூழ்நிலை ஜெமா இஸ்லாமியா உடைய அரசியலுக்கு உறுதியாக ஊக்கமளிப்பதாக இருந்தது. ஜெமா இஸ்லாமியா உடைய வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக 1997-98ல் ஆசிய நிதி நெருக்கடி அமைந்தது. இந்தப் பொருளாதார வீழ்ச்சி அப்பகுதி முழுவதும் சமூக, அரசியல் நெருக்கடிகளை அதிகரிக்க காரணமானது. இந்தோனேசியாவில், ரூபாவின் மதிப்பு கீழே சரிந்து விழுந்ததுடன், வங்கி முறை திவாலாகியும் போனது. கடனில் மூழ்கியிருந்த நிதியமைப்புமுறை முழுச்சரிவின் விளிம்பிற்கு கொண்டுவரப்பட்டது. வறுமை, வேலையின்மையின் அளவுகள் மிகக் கடுமையாக உயர்ந்தன. பொருளாதார, சமூக நெருக்கடிக்கு பதிலாக நீண்டகால தாக்கங்களை கொண்ட கட்டுமான சீரமைப்புக்களைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகார்ட்டோ அமெரிக்காவாலும் , சர்வதேச நாணய நிதியத்தாலும் வலியுறுத்தப்பட்டார். சுகார்ட்டோவின் நிலமை விரைவில் தக்கவைத்துக்கொள்ள முடியாதது போல் ஆகிவிட்டது. பொருளாதார, அரசியல் அதிகாரத்தில் இவர் கொண்டிருந்த ஏகபோக உரிமையை அச்சுறுத்திய சர்வதேச நாணய நிதியத்தால் வலியுறுத்தல்களை செயல்படுத்த விருப்பமில்லாத நிலையில், இந்தோனேசிய ஜனாதிபதி வாஷிங்டனுடைய நிபந்தனையற்ற ஆதரவை இழந்தார். அதேநேரத்தில், மாணவர்கள் தலைமையில் இவருடைய 32 ஆண்டுகால சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்புக்களை முடிவிற்கு கொண்டுவரவும், வாழ்க்கைத்தர சரிவைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் நடத்திய தாக்குதல்களின் வளர்ச்சியையும் இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1998 மே மாதம், சுகார்ட்டோ பதவியிலிருந்து கீழிறங்கி, அதிகாரத்தைத் தன்னுடைய உற்ற நண்பரான துணைத்தலைவர் ஹபிபியிடம் ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். குறிப்பிடத்தகுந்த வகையில், சுங்க்கர், பஷீர் மற்றும் ஜெமா இஸ்லாமியா சுகார்ட்டோவின் வீழ்ச்சியில் எந்தப் பங்கையும் கொள்ளவில்லை. இந்தோனேசியாவிற்குள் KISMI உம் மற்றைய வலதுசாரி இஸ்லாமியக் குழுக்களும் ஜனாதிபதியை கசப்பான இறுதி முடிவுவரை ஆதரித்தன. சுகார்ட்டோ வெளியேற்றப்பட்டதும் அவர்கள் தங்கள் ஆதரவை ஹபிபீக்குக் கொடுத்தனர். 1998ல் ஹபிபீ புதிய நெருக்கடி ஒன்றைச் சந்திக்க, அதிகாரத்தின்மீது தன்னுடைய பிடியை இறுக்கிக் கொள்ள சிறப்புப் பாராளுமன்றக் கூட்டத்தைப் பயன்படுத்த முயற்சித்த பொழுது, KISMI இவருக்குப் பாதுகாப்பு கொடுக்க உதவியது. தடிகளுடனும் கத்திகளுடனும் கூடிய குண்டர்களான 1,00,000 ''ஆதரவாளர்கள்'' பெரும்பாலானவர்கள் இந்த அமைப்பின்மூலம் வந்தவர்களேயாவர். அவர்கள் ஹபிபீயின் ராஜிநாமா கோரி, உண்மையான ஜனநாயகமுறைத் தேர்தல்கள் நடத்தக் கோரிவந்த பெரும் எதிர்ப்பாளர்களை, மிரட்டவும் தாக்கவும் செய்தனர். ஆனால், ஹபிபீயுடைய ஆட்சியை முட்டுக்கொடுத்து நிறுத்திய முக்கியமான பங்கினை, முதலாளித்துவ "சீர்திருத்தவாதிகள்" எனப்பட்ட மேகாவதி சுகர்ணோபுத்திரி, அப்துர் ரஹ்மான் வாகித், அமியன் ரைஸ் போன்றோர் கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டங்களின் உச்ச கட்டத்தில் இம்முன்று பேரும், ஹபிபீயின் குறைந்தபட்ச நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து திறமையுடன் ஆர்ப்பாட்டங்களை மூர்க்கமாக அடக்கப்படுவதற்குப் பச்சைவிளக்கு காட்டினர். எதிர்ப்பு இயக்கம் வலுவிழந்தபின்னர், இராணுவம் தன்னுடைய அதிகாரத்தை மீண்டும் வலியுறுத்துக்கொள்ளுவதற்காக இனமோதல்களை திட்டமிட்டுத் தூண்டிவிட்டது. 1999ல் கிழக்கு திமோரில் சுதந்திரம் கோருபவருக்கு எதிரான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட ஜாகர்த்தா சார்பான துணைஇராணுவத்துடன், இந்தோனேசிய தேசிய இராணுவம் (TNI) இன் தலைமை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. இராணுவம் 2000 ஆண்டில் மாலுகசிலும், சுலேவெசியிலும் நடைபெற்ற இனக்கலவரங்களிலும் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருந்தது. இந்தோனேசியாவின் தொழிலாள வர்க்த்தின் பிரிவினர் அனைத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒரு உண்மையான சமூக சமத்துவத்திற்கான போராட்டத்திற்காக அணிதிரட்டுவதற்கான ஒரு முற்போக்கான மாற்றீடு இல்லாத நிலையில், ஜெமா இஸ்லாமியா உம் மற்றைய இஸ்லாமியத் தீவிரவாதக்குழுக்கள் இனவாத பதட்டங்களைச் சுரண்டுதலுக்கு எளிதாயாற்று. மத்தியதர வகுப்பினரும், சிறுவணிகர்களும் நிதி நெருக்கடியினால் திடீரென்று திவாலாகிப்போனதால், தங்கள் புது அவலங்களுக்கு ஊழல் மிகுந்த, செல்வாக்குடைய கிறிஸ்தவர்களும், சீன இனத்தாரும்தான் காரணம் என்ற பிரச்சாரத்தை நம்புவதற்குத் தயாராக இருந்தனர். சிறப்பான வருங்காலம் வரும் என்ற கனவுடனிருந்த, தொழில்நுட்பக் கல்வி அல்லது பல்கலைக்கழகப் படிப்புடன் இருந்த இளைஞர்கள் தங்கள் வேலைகள் பறிபோவதைக் கண்முன்னே பார்த்தனர். "சீர்திருத்தவாதிகளுடைய" வெற்றுச் சொற்களில் அவர்கள் விரைவில் நம்பிக்கையிழந்து, முழுச்சமுதாய நிலைபற்றியும் அதிருப்தி அடைந்தனர். சிலர் திக்கற்ற நிலையில், மனம் நொந்து ஜெமா இஸ்லாமியாபோன்ற போராளிகள் கூட்டத்திலும், இஸ்லாமியக் குழுக்களிடத்தும் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும், ஜெமா இஸ்லாமியா உடைய அமெரிக்க எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கும் பரந்த அளவிலான ஆதரவாளர்கள் கிடைத்தது. சமூக விளைவுகளில் அழிவைத் தரக்கூடிய, வாஷிங்டனுடைய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின்மீது பல இந்தோனேசியர்களும் சீற்றம் அடைந்தனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த விரோதம் ஆஸ்திரேலியத் தலைமையிலான கிழக்கு திமோரில் தலையீடு, ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்கத் தலையீடு, பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் தொடர்ந்து அடக்கிவருவதற்கு அமெரிக்க ஆதரவு போன்றவற்றால் மேலும் கூடுதலாயிற்று. இவை அனைத்தும் "இஸ்லாமிய விரோத சதிக்கு'' நிரூபணங்கள் என்று ஜெமா இஸ்லாமியா எடுத்துக்கூறுவதற்கு காரணமாயின. பயங்கரவாதத் தாக்குதல்கள் பஷீர், சுங்க்கர் மற்றும் ஜெமா இஸ்லாமியா உறுப்பினர்கள் 1999ல் இந்தோனேசியாவிற்குத் திரும்பி தங்கள் இஸ்லாமியப் பள்ளிகளின் சிறிய வலையை விரிவுபடுத்த ஆரம்பித்தனர். சுங்க்கரின் மரணத்திற்குப்பிறகு, பஷீர் தத்துவார்த்த தலைவர் என்ற பங்கை ஏற்றுக்கொண்டார். இவர் இந்தோனிசிய முஜாகெய்தின் குழுவையும் (Mujaheddin Council of Indonesia- MMI) நிறுவினார். ஓர் இஸ்லாமிய நாடு அமைக்கப்படுவதை மிகவும் ஆர்வத்துடன் விரும்பிய மற்ற தனிநபர்களும் குழுக்களும் இதில் அடக்கம் ஆகும். 2000 ஆகஸ்டில், இந்தோனேசிய முஜாகெய்தின் குழு தன்னுடைய முதல் பேரவையை Yogyakarta வில் நடத்தியது. இதில் நீதிக்கட்சியின் தலைவரான ஹிதயத் நூர் முகம்மது ஆகியோர் உட்பட சுமார் 1,500 பேர் இக்கூட்டத்தில் பங்கு பெற்றனர். முக்கிய இஸ்லாமிய அமைப்புக்களுடன் இப்பேரவை தொடர்பு உடையதாக, பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பஷீர் பிரகடனப்படுத்திக் கொண்டார். இப்பேரவையின் முக்கிய வலியுறுத்துதல்கள், அறவழியிலான கண்டனங்கள் ஆகும். மதுப்பொருட்கள் தடை, மகளிரின் மீது தடைகள் சுமத்துதல் அடக்கமாகும். ஆனால் இந்தோனேசிய முஜாகெய்தின் குழு (MMI) தன்னுடைய போராளிகளையே தேர்ந்தெடுத்து, இராணுவத்தின் இரகசிய ஒப்புதலுடன், 5000 பேர் உயிர்களைக் குடித்த மலுக்காவில் (Malukus) நடைபெற்றுவந்த இனவாத சண்டைகளில் பங்குபெற அனுப்பிவைத்தது. பதிலுக்கு, மலுக்காப் மோதல் ஜெமா இஸ்லாமியாவுக்கு இராணுவப் பயிற்சியும் அனுபவமும் பெறுவதற்கான நிலைமைகளை வழங்கியதோடு, தத்துவார்த்த ரீதியிலும் ஆழ்ந்த நம்பிக்கையுடைய புதிய உறுப்பினர்களையும் அளித்தது. 1999-2000ஆண்டுகளில், இந்தோனேசியாவில் பயங்கரவாதக் குண்டுவீச்சுக்கள் தொடங்கலாயின. அவற்றில் இரண்டிற்கு ஜெமா இஸ்லாமியா குறிப்பாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டு நத்தார் பண்டிகைக்கு முன்பு, ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நாடு முழுவதிலும் பரந்து மேற்கொள்ளப்பட்டன. ஆறு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து 11 நகரங்களில் 30 வெடிகுண்டுகள் கிறிஸ்துவ தேவாலயங்கள் அல்லது மதபோதகர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் வெடிக்குமாறு செய்யப்பட்டன. இதில் 19 பேர் உயிரிழந்தனர், மற்றும் 120 பேர்கள் காயமுற்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாலிப் படுகொலைகள் நிகழ்ந்தன. இவற்றைச் செய்தவர்களில் சிலர், பஷீர்-சுங்க்கர் இணைப்பின் மூலம் ஆப்கானிஸ்தானத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். Jemaah Islamiyah in South East Asia :Damaged but still Dangerous இல் வந்துள்ள சர்வதேச நெருக்கடிக் குழு (ICG) அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் சயாபின் முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுடைய பெயர்களும், அவர்கள் பயிற்சி பெற்ற தேதிகளின் விவரம் அடங்கிய நீண்ட பட்டியலும் உள்ளது. இந்தப் பட்டியலில் பாலித்தாக்குதலிலும், 2000ம் ஆண்டு தேவாலயத்தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த முக்கிய நபர்களின் பெயர்களும் அடங்கியுள்ளன. உதாரணமாக, பாலித் தாக்குதல்களில் மொத்தம் தண்டனைக்குட்பட்ட நான்கு பேரில், முச்லஸ் என்ற அலி குப்ரான்(1986), அலி இம்ரோன் (1990), அப்துல் அஜிஸ் என்ற இமாம் சமுத்ரா(1991) என்ற மூன்று நபர்கள் ஆப்கானிஸ்தானிலும் பணிபுரிந்திருக்கின்றனர். ஆனால், இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களின் முழுக்கதை இன்னமும் சொல்லப்படவில்லை. இந்தோனேசிய இராணுவத்தின் பங்கு பற்றிய மிக வெளிப்படையான கேள்விக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை. இந்தோனேசியாவின் பரந்த பாதுகாப்பு, உளவுத்துறையினருக்கு மிகப்பெரிய முற்தயாரிப்பின்மூலம்தான் நிகழ்ந்திருக்கக்கூடிய பாலிக் குண்டு வீச்சுக்கள் பற்றி எதுவுமே தெரியாது என்பது ஏற்பதற்கில்லை. ஆனால், இராணுவ அதிகாரிகள் இத்தாக்குதல் பற்றி என்ன முன்தகவல்கள் பெற்றிருந்தனர் என்பது குறித்தும் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. ஓர் இராணுவ அதிகாரி அடைத்துவைக்கப்பட்டது உட்பட இந்தோனேசிய தேசிய இராணுவம் பற்றி பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான குறிப்புக்கள் உடனடியாகக் கைவிடப்பட்டுவிட்டன. அரசியல் அடாவடிச் செயல்களில், இந்தோனேசிய தேசிய இராணுவத்திற்கு நீண்டகால, இழிந்த வரலாறு உள்ளது. பல பத்தாண்டுகள் இஸ்லாமியத் தீவிரக் குழுக்கள் மற்றும் பல போராளிக்குழுக்கள், ஆயுதமேந்திய கும்பல்கள் இவற்றில் ஊடுருவல் செய்து அவற்றைத் திரிபுபடுத்தும் வேலையில் அனுபவம் நிறையவே உள்ளது. இந்த ஆண்டு, சிலமாதங்கள் முன்பு ஓர் அதிகாரி உட்பட ஆறு சிறப்புப்படை வீரர்களுக்கு முக்கிய பாப்புவா தலைவர் ஒருவரை அரசியல் படுகொலை செய்ததற்கு தண்டனை வழங்கப்பட்டது. மேலும், மிக வியக்கத்தக்க பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தப் போதுமான அல்லது நடக்க அனுமதிக்க தக்க முகாந்திரங்கள் உள்ளன. இதில், இப்பொழுது அமெரிக்கத் தேசியச்சட்டமன்றத்தில் தடைவிதிக்கப்பட்டிருக்கும் கூடுதலான இராணுவ உதவிக்கான காரணங்களை நியாயப்படுத்த நிகழ்ச்சிகள் தோன்றியுள்ளதும் அடங்கும். பாலித்தாக்குதல்களில், பஷீரின் பங்கு என்ன என்பது தெளிவில்லாமல்தான் உள்ளது. சர்வதேச நெருக்கடிக் குழு அறிக்கைகள், ஜெமா இஸ்லாமியாவுக்குள் இந்தோனேசிய முஜாகெய்தின் குழுவை (MMI) பயன்படுத்தி நடைமுறையிலுள்ள கட்சிகளில் செல்வாக்கு பெறுவதில் ஆர்வம் காட்டும் பஷீருக்கும், தங்கள் இராணுவத்திறமையை வெளிப்படுத்த ஆர்வத்துடனிருக்கும் இளைய ஆப்கானிஸ்தான போர் அனுபவம் கொண்டோருக்குமிடையே பிளவுகள் இருப்பதை நிரூபிக்கின்றன. 2000ம் ஆண்டு நத்தார் பண்டிகை தாக்குதல்களையொட்டி, பஷீர்மீது வழக்கு நடந்து அவர் விடுதலை செய்யப்பட்டார் என்றாலும், பாலித்தாக்குதல்களுக்காக அவர்மீது குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாகப் பாலித் தாக்குதல்களைத் திட்டமிட்டிருந்தாலும் அல்லது அவற்றிற்கு ஒப்புதல் கொடுத்திருந்தாலும், கொடுக்காவிட்டாலும், அறிவற்ற அரசியல் கண்ணோட்டத்தினால் 202 நிரபராதியான மக்கள் கொலை செய்யப்பட்டதற்கான முழுப் பொறுப்பையும் பஷீர்தான் ஏற்கவேண்டும். அத்தகைய கோரநிகழ்ச்சிகளை, "வெற்றி" எனக் களித்துப் பாராட்டும் எந்த அமைப்பும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களோடு எந்தத் தொடர்பும் அற்றவர்கள் ஆவர். ஜெமா இஸ்லாமியா உடைய, ஓர் மத்தியகால உலக அறநெறியின் கீழ் குருமார்களால் நடத்தப்படும் சமுதாயம் என்ற கண்ணோட்டம் பெரும்பாலான உழைக்கும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கும் விருப்புகளுக்கும் சமரசத்திற்கிடமில்லாத முறையில் எதிரானதாகும். ஜெமா இஸ்லாமியா உடைய தோற்றமும் இந்தோனேசிய மக்களில் குறிப்படத்தகுந்த பிரிவுகளைக் கவரக்கூடிய அதன் திறமையும் பெரும்பாலான இந்தோனேசிய மக்களை எதிர்கொண்டுள்ள ஆழ்ந்த, அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளைத் தீர்க்க திறமையற்ற முழு ஆளும் செல்வந்த தட்டினரின் தீய வெளிப்பாடுதான் ஆகும். மத்தியகாலவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதங்கள் இவற்றில் ஆழ்ந்துள்ள மற்றொரு முதலாளித்துவக் குழுவின் பிரிவு அதிகாரத்தைக் கைப்பற்றுவதால், நெருக்கடிக்கு முடிவு ஏற்படப்போவதில்லை. உண்மையான சமூக சமத்துவமும் நீதியும் சிலருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமான ஜனநாயக உரிமைகள் என்ற அடிப்படையில் சமுதாயம் சோசலிச மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டால்தான் முடிவு கிடைக்கும். இதற்கு, தற்போதைய பொருளாதார, சமூக ஒழுங்கமைப்பிற்கு எதிராகப் போராட எல்லா பிரிவுகளையும் சேர்ந்த தொழிலாளர்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைக்கும் ஓர் அரசியல் இயக்கம் இந்தோனேசியா மட்டுமல்லாமல் ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் அமைக்கப்படவேண்டியது இன்றியமையாததாகும். முடிவுற்றது. |