World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Bush's PR stunt in Baghdad underscores US crisis

பாக்தாதில், புஷ்ஷின் பொது உறவு பகட்டு விளம்பர செயல் அமெரிக்க நெருக்கடியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது

By Patrick Martin
29 November 2003

Back to screen version

ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்காக, சரிந்து கொண்டிருக்கும் மக்கள் ஆதரவைத் திரட்டும்வகையில், வெள்ளை மாளிகையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஜனாதிபதி புஷ், பாக்தாத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை காண நன்றிகூறும் தினத்தன்று (Thanksgiving Day), விஜயம் செய்தமை, நிர்வாகத்திலுள்ள நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையைத்தான் வெளிப்படுத்துகின்றது.

இந்தப் பொதுஜன உறவை வளர்ப்பதற்கான சாகசச்செயல், துருப்புகள் ஆராவாரத்துடன் வரவேற்பதும், ஜனாதிபதி வான்கோழி விருந்துகளை அவர்களுக்கு வழங்குதலும் ஆகிய நிகழ்ச்சிகளின் தொலைக்காட்சித் தோற்றம், தேர்தல்களில் புஷ்ஷின் நிலையை உயர்த்தும் என கார்ல் ரோவ் போன்ற அரசியல் ஆலோசகர்கள், நம்பிச் செயல்பட்டுள்ளனர். ஆனால், இப்பயணத்தின் சூழ்நிலைகள், இரவில் ஒரு திருடன் போல் பாக்தாதிற்குள் புகுந்து வெளிவந்த செயல், தான் ஆக்கிரமித்துள்ள நாட்டில், அமெரிக்கக் கட்டுப்பாடு எவ்வளவு இலேசான, உடைந்து விடும் தன்மையைக் கொண்டுள்ளது என்பதைத்தான் விளக்கியுள்ளது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், தன்னுடைய அரசாங்கம் "ஒரு குண்டர், கொலைகாரர் கும்பலுக்காக, பினவாங்காது" என்று 600 பேர் அடங்கிய சிப்பாய்கள் கூட்டத்தில், புஷ் தெரிவித்தார். ஆனால் இந்தப் பயணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளோ, கையளவு பயங்கரவாதிகள் அல்லது சதாம் ஹுசேனின் விசுவாசிகளின் எதிர்ப்பைக் காட்டிலும், அமெரிக்கவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு ஆயுதமேந்திய எதிர்ப்பு மிக போதியளவு உள்ளது என்பதைத்தான் தெரிவிக்கிறது.

விமானநிலைய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குக் கூட விமானம் பற்றி அடையாளம் தெரியாத அளவு, இரகசிய முறையில் விமானப்படை ஒன்று, பாக்தாதிற்குள் பறந்து நுழைந்தது. டெக்சாஸ், கிராபோர்டிலுள்ள அவருடைய பண்ணையிலிருந்து, புஷ் அடையாளமிடப்படாத கார் ஒன்றில் அழைத்து வரப்பட்டு, போலி அடையாள அழைப்பில், விளக்குகளும் அணைக்கப்பட்டு, விமானப்படை விமானம் ஒன்று, இரு அமெரிக்க ஜெட் போர்விமானங்கள் புடைசூழப் பறந்தது. ஈராக்கில் தரையில் இரண்டரை மணிநேரம் மட்டுமே இருப்பதற்காக, புஷ் ஆகாயத்தில் 27 மணி நேரம் செலவழித்தார்.

நிர்வாகத்தின் முற்றுகை மனப்போக்கு, ஜனாதிபதியைத் தொடர்ந்து சென்ற கையளவு நிருபர்கள், புகைப்படமெடுப்போர்மீது சுமத்திய தடைகளினால் புலப்படுகிறது. புஷ் தன்னுடைய பண்ணையை விட்டு நீங்கிய இரண்டு மணி நேரத்திற்குள்ளேதான், அவர்களுக்கு நேருக்கு நேராக அறிவிப்புக் கொடுக்கப்பட்டது, தாங்கள் செல்கிறோம் என்பதை அவர்கள் தங்களது பத்திரிகை ஆசிரியர்களுக்கோ அல்லது தங்கள் குடும்பங்களுக்கோ தெரிவிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்செய்தி கசிந்தது எனத்தெரியவந்தால், விமானம் திருப்பிக் கொண்டு செல்லப்பட்டு விடும் என்றும் அவர்களிடத்தில் புஷ் தொடர்புத்துறைத் தலைவர் டான் பார்ட்லெட் கூறிவிட்டார்.

விமானப்படை எண் ஒன்று, வாஷிங்டனுக்குத் திரும்பும் பயணம் மேற்கொள்ளும் வரை பாக்தாத்தில் புஷ் தோன்றியதைப் பற்றிய செய்தி அறிவிப்பு செய்தலும் அனுமதிக்கப்படவில்லை.

இத்தகைய அசாதாரண பாதுகாப்பு, ஜனாதிபதி தனிப்பட்டமுறையில் தைரியத்தை வெளிப்படுத்தி, படைகளுடன் ஆபத்தைப் பகிர்ந்து கொள்ளுகிறார் என்ற மிகைப்பட்ட தோற்றத்தைக் கொடுப்பதற்கு எடுக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும்கூட, ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் நிலைமை, பென்டகன் அதிகாரிகள் தெரிவிப்பதைவிட மிகுந்த அபாயத்தில்தான் உள்ளது என்பதைத்தான், இது குறிக்கிறது.

அமெரிக்க அதிகாரிகள், பாதுகாப்பு நிலைமை முன்னேறி வருவதாகவும், பாக்தாதிற்கு மேற்கிலும், வடக்கிலும் உள்ள சுன்னி ஆதிக்கம் நிறைந்த முக்கோணப்பகுதியில்தான் பெருமளவு ஆயுதமேந்திய எதிர்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் புஷ்ஷின் சொந்தப் பயண நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட, ஆக்கிரமிப்பு படைகளின் தலைமையிடமாகிய பாக்தாத் விமான நிலையத்தைச் சுற்றிக்கூட அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாடு வலுவற்றதாக இருக்கக்கூடும் என்றுதான் தெரிவிக்கிறது.

"ஈராக்கில் பாதுகாப்பு நிலைமை மிகமோசமாகத்தான் உள்ளது போலும் என்பதை, முன்னறிவிப்பின்றி இரவில், விளக்குகளையும் அணைத்துவிட்டு விமானத்திலிருந்து இறங்கி, மிகக் கடுமையான இராணுவப் பாதுகாப்பிற்கு உட்பட்ட இடத்திலிருந்து வெளியே வராமல் திரும்பிய புஷ்ஷின் விஜயம் மற்றும் புஷ்ஷுடன் வந்தவர்கள் அனைவரும் துப்பாக்கிக்குண்டுகள் துளைக்கமுடியாத கவசங்கள் அணிந்திருந்ததோடு, விமானம் பயணிக்கும்போது இருக்கவேண்டிய விளக்குகள், விமான ஓட்டியின் அறை விளக்குகள் இவை அணைக்கப்பட்டு, இருண்ட பகுதியொன்றில் இறங்கியது" ஆகியவை உறுதிப்படுத்துவதுபோல்தான் இருக்கிறது என ஈராக்கிய மக்கள் உணரக்கூடும், என்று Washington Post இந்தப் பயணத்தைப் பற்றிய மதிப்பீட்டில் தெரிவிக்கிறது.

அமெரிக்க அரசாங்கம் எதிர்கொண்ட, "எஞ்சியவர்கள்" என இப்பொழுது கூறப்படும் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு தொந்திரவு கொடுத்துக்கொண்டு இருப்பவர்களைவிட, மகத்தான எதிரிகளோடு நடந்த போர்களில், போர்ப்பகுதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதிகள் மேற்கொண்ட முந்தைய பயணங்களில் காணப்பட்டதைவிட, புஷ்ஷின் போக்கு முற்றிலும் தீவிர முரணாக இருந்தது.

வியட்நாம் போரின்போது, இரண்டு முறை, அமெரிக்கப் படைகளைக் காண லிண்டன் ஜோன்சன் சென்றுள்ளார், ரிச்சார்ட் நிக்சன் ஒருமுறை சென்றுள்ளார். ஜனாதிபதிப் பயணம் பற்றிய சரியான விவரங்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டு இருந்த போதிலும்கூட, பயணங்களும், படைவீரர்கள் குழுக்களிடையே அவர்கள் தோன்றியதும் மிகப் பரந்த அளவில், செய்திகளாக வெளிவந்தன. இரண்டாம் உலகப்போரின்போது, ரூஸ்வெல்ட், டெஹ்ரானிலும், யால்டாவிலும் உச்சி மாநாட்டிற்குச் சென்றிருந்தார்; ட்ரூமன் வெற்றிகொள்ளப்பட்ட நாடான ஜேர்மனியில் இருந்த போஸ்ட்டாமிற்கு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாக்தாதிற்கு மூடி மறைத்து, இரகசியமாக, நாடகமாடி புஷ் சென்றது போல், செல்லவில்லை.

பாக்தாதிலிருந்து திரும்பிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலிசா ரைஸ், பயணச் சூழ்நிலைகள் பற்றிப் பாதுகாக்கும் முறையில்தான் பேசினார். போரில் அமெரிக்கா வலுவிழந்ததைத்தான் இத்தைகைய கடும் பாதுகாப்பு குறிக்கிறது என்பதை அவர் மறுத்துள்ளார். ஈராக்கிய படையெடுப்பிற்கு பிறகு "எதுவும் மாறவில்லை என்று கூறுவது உண்மையாகாது" என ABC தொலைக் காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் இவர் கூறினார்.

"நாட்டின் பெரும்பாலான பகுதிகள் உறுதித்தன்மையுடன்தான் உள்ளன. ஈராக் இன்னும் அபாயகரமான இடம் என்பது வெளிப்படையாகத் தெரிந்ததுதான், அதில் இரகசியம் ஒன்றுமில்லை" என்று அவர் கூறினார். கடந்த வாரம் நிலத்திலிருந்து ஆகாயத்திற்குச் செலுத்தப்பட்ட ஏவுகணையொன்று, பாக்தாத் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்றைத் தாக்கியதை அடுத்து, பயணம் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஈராக்கில் கொல்லப்பட்ட இராணுவத்தினரில், ஒருவர் இறப்புச் சடங்கில்கூட கலந்துகொள்ளவில்லை என்பதற்கும், போர்ப்பகுதியிலிருந்து வரும் இறந்தோரின் சவப்பெட்டிகளை பற்றி செய்தி ஊடகம் தகவலளிப்பதற்குப் பென்டகன் தடைவிதித்துள்ளதற்கும் பெரிய அளவில் புஷ் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். அத்தகைய குறைகளுக்கு விடையிறுக்கையில், இந்தவார தொடக்கத்தில்கூட, ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் உள்ள கொலராடோ மாநிலத்தின் கார்சன் கோட்டைக்கு போராயத்த அணி ஒன்றிற்கு புஷ் சென்றிருந்ததையும், நடந்து கொண்டிருக்கும் போரில் கொல்லப்பட்ட ஐந்து வீரர்களின் குடும்பங்களுக்கும் தனிப்பட்டமுறையில் சென்று துக்கத்தில் பங்கு பெற்றதையும் அவர் குறிப்பிட்டார்.

படைகளின் தலைவிதியைப்பற்றி புஷ் கவலைப் படுவதில்லை என்ற குறைபாடு கூறுதலுக்குப் பதில் போலவும், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தன் தோற்றத்தை உயர்த்திக் கொள்ளவும்தான் புஷ் இந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்ற கருத்துக்களை, ரைஸ் மறுத்தார். "ஜனாதிபதி ஒரு விஷயத்தில், அதுவும் ஒரே விஷயத்தில் தீவிரமாக இருந்தார். அது, நன்றிகூறுதல் தினத்தன்று படைகளுடன் சிறிது நேரம் கழிக்கவேண்டும்" என்பதாகும் என இவ்வம்மையார் கூறினார். பாக்தாத்திற்குப் பயணிக்க வேண்டும் என்ற முடிவு, வெள்ளை மாளிகையின் "ஜனாதிபதியின் கொள்கை திட்டமிடும் பகுதியிடங்களிலிருந்து வெளிந்தது" என்ற ரைஸ் இப்பயணம் பற்றி புஷ்ஷின் முக்கிய அரசியல் ஆலோசகரான கார்ல் ரோவ் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதை மறுக்கவில்லை.

பாக்தாதிற்கு புஷ்ஷுடன் உடன் சென்றிருந்த செய்தி ஊடகத்தினர் தேர்வில் நிச்சயமாக ரோவின் பங்கு தெரிகிறது. வலதுசாரி, உரத்தகுரலுடைய போர் ஆதரவு Fox News-க்கு இப்பயணம் பற்றி முன்கூட்டி தகவல் கொடுக்கப்பட்டிருந்தது என்பதுடன் விமானப்படை விமானம் ஒன்று வாஷிங்டனுக்குப் புறத்தே நின்று, நிகழ்ச்சியைப் பதிவு செய்ய, அனுமதியளிக்கப்பட்ட ஒரே நிறுவனமான, பாக்சின் புகைப்படக் குழுவினரை ஏற்றிச்சென்றது.

CNN உடைய புகைப்படக் குழுவினர் புதன்கிழமையன்று வெள்ளை மாளிகை நிருபர் கூட்டத்திலிருந்து, நன்றிகூறுதல் தின விடுமுறையை ஒட்டி இனிச் செய்திகள் இராது எனக்கூறப்பட்டு, வெளியே அனுப்பப்பட்டுவிட்டனர். CNN உடைய வாஷிங்டன் அலுவலகத் தலைவர் காத்ரின் க்ராஸ், வாஷிங்டன் போஸ்ட் இடம் பேசுகையில், "நாங்கள் எல்லோருமே, வெள்ளை மாளிகை எந்தமுறை உகந்தது எனக் கருதினாலும், ஜனாதிபதி படைகளுக்கு உற்சாகமளிப்பதில் ஊக்கமாகத்தானிருந்தோம். ஆனால் வெள்ளை மாளிகை ஜனாதிபதியுடன் செல்வதற்கு அதன் விருப்பமுள்ள ஆட்களையே தேர்ந்து எடுத்தது; ஏன் இவ்வாறு அவர்கள் செய்தனர் என்பதுபற்றி அறிய நாங்கள் ஆர்வத்துடன்தான் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இப்பயணம் பற்றி தொலைக் காட்சி தகவல் மடைபோல் வந்தது என்றாலும், நன்றிகூறும் தினத்தன்று, ஈராக்கில் நடந்த மற்ற சம்பவங்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியின் நீண்டகால திட்டங்களுக்கு ஏற்றதாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஈராக்கிய அரசாங்க குழுவிலுள்ள, ஈராக் தேசிய காங்கிரசின் பென்டகனுடைய செல்ல கையாள் அகமது சலாபி உட்பட, நான்கு உறுப்பினர்களோடு புஷ் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், குழுவின் தற்போதைய தலைவரான ஜலால் தலபானி, நஜாப்பில் பெரிய அயத்தொல்லா அலி சிச்டானியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். இந்த மூத்த ஷியாப்பிரிவின் சமயகுரு, புஷ் நிர்வாகத்தின் சமீபத்திய திட்டமான வசந்தகாலத்தில் ஈராக்கிய மாநிலங்களில் கவனத்துடன் செயல்பட்டு குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தால், அரசியலமைப்பு இயற்றும் சபைக்கு உதவியாக இருக்கும் என்பதற்குத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். சிஸ்டானி, புதிய அரசியலமைப்பை இயற்றும் அமைப்பு, ஆக்கிரமிப்பு ஆட்சியினரால் பொறுக்கியெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டிருக்காமல், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், சிஸ்டானியின் உதவியாளருமான, மெளவாஃபக் அல்--ரூபையி, செய்தி ஊடகத்திற்குக் கூறியதாவது: "சில ஈராக்கியர்கள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களையொட்டி விரைவுபடுத்தப்பட்டு வருகிறதோ என்று இம்முயற்சியைப் பற்றிக் கருதுகின்றனர்." இந்த மதிப்பீட்டை சலாபியும் ஏற்று, அரசியலமைப்பு நிகழ்ச்சிப்போக்குகளுக்கான அமெரிக்க கால அட்டவணை பற்றித் தெரிவித்தார். "இது முழுவதுமே திட்டமிடப்பட்ட முறை, அக்டோபர் மாதம் ஜனாதிபதி புஷ்ஷே, புதிய ஈராக்கிய அரசாங்கத்தை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு விமானநிலையத்திற்கு வரக்கூடிய வகையில் இருந்தது. அதிலிருந்து பின்புறம் கணக்கிட்டால், அமெரிக்கர்கள் இந்த அட்டவணையை ஏன் வலியுறுத்தி வருகின்றனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்."

ஈராக்கிய எதிர்ப்புக்களை அடக்குவதற்கு கையாளப்படும் முயற்சிகளின் மிருகத்தனமானமுறையை மற்றொரு நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. ஒரு பழைய ஈராக்கிய விமானப்படைப் பாதுகாப்புத் தளபதி, அபெட் ஹமெட் மெளஹெளஷ், அக்டோபர் 5ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க விசாரணைக்கு உட்பட்டிருந்தபோது, புதன் கிழமையன்று இறந்து போனார். தளபதி மெளஹெளஷ், உடல்நலம் சரியில்லை என்று கூறிக்கொண்டே நினைவிழந்தார், இராணுவ டாக்டர் ஒருவர் இவர் உயிர்பிரிந்துவிட்டதாகக் கூறிவிட்டார். ஒரு செய்திச் சேவையின் அறிவிப்பின்படி, "மரணத்தின் காரணமும், கேள்வி கேட்கப்பட்ட வழிவகைகளும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved