World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Political stupidity or provocation?

Brandenburg "anti-racist group" attacks World Socialist Web Site

அரசியல் மடத்தனமா அல்லது ஆத்திரமூட்டுதலா?

பிராண்டன்பேர்க்கின் "இனவெறி-எதிர்ப்புக்குழு" உலக சோசலிச வலைத் தளத்தை தாக்குகிறது

By Peter Schwarz
3 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

சிலசமயம், அரசியல் முட்டாள்தனம் எங்கு முடிந்து, அரசியல் ஆத்திரமூட்டல் எங்கு தொடங்குகிறது என்பதைக் கூறுவது கடினமாகும். எவ்வாறாயினும், இரண்டுக்கும் இடையே உள்ள எல்லை, ஒரு திரவ தன்மையைத்தான் கொண்டுள்ளது.

ஜேர்மனியின், பாசிச-எதிர்ப்பு வலைத் தளமான Inforiot இல், அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த ஒரு கட்டுரை, இவ்விரு தன்மைகளின் பக்குவமற்ற கலவையாகத்தான் உள்ளது. "இனவெறி-எதிர்ப்பாளர்கள் மீது உலக சோசலிச வலைத் தளம், குற்றஞ்சார்ந்த தாக்குதல்களை நடத்துகிறது!" என்ற தலைப்பில் இக்கட்டுரை வெளியிடப்பட்டு, "பிராண்டன்பேர்க் ஆன்டிரா" என்று கையெழுத்திடப்பட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளத்தை வன்முறை சார்ந்துள்ள "இடது தீவிரத்தின்" ஒரு பகுதி என்று காட்ட முற்படும் உளவுத்துறையின் முயற்சிகளை எதிர்ப்பதற்காக உலக சோசலிச வலைதளத்தை மிகக் கடுமையான முறையில் அக்கட்டுரையில் அவதூறு செய்துள்ளது.

WSWS, பிராங்பேர்ட்-ஒடெர் குடிவரவு -அகல்வு அலுவலகத்தில் செப்டம்பர் 16, 2003 அன்று நடாத்தப்பட்ட தாக்குதலுக்குக் கருத்தளவில் தூண்டியதென்று பிராண்டன்பேர்க் உளவுத்துறை குற்றஞ் சாட்டியிருந்தது. அரசின் குடியேற்றக் கொள்கைபற்றி குறைகூறி, 2001ம் ஆண்டு வெளியிட்டிருந்த உலக சோசலிச வலைதளக் கட்டுரை ஒன்று சம்பவ இடத்தில் காணப்பட்டதாகக் கூறி, இதை நியாயப்படுத்த முற்பட்டது. இந்தக் கட்டுரை, சரிபார்க்கக்கூடிய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், எவ்விதத்திலும் வன்முறை தேவை என்று கூறாவிட்டாலும், "இத்தகைய கட்டுரைகள்தாம் வன்முறைச் சம்பவங்களுக்கு பாதையமைக்கின்றன" என உளவுத்துறை கூறுகிறது. WSWS இந்த அவதூறை மறுப்பது மட்டுமல்லாமல், சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கும் உரிமையைச் செலுத்தத் தயாராக இருக்கும். (பார்க்க:" ஜேர்மனி : பிராண்டன்பர்க் உளவுப்பணித்துறை உலக சோசலிச வலைதளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது")

இந்தக் கட்டுரை, குடி வரவு-அகல்வு அலுவலகத்தின் மீதான தாக்குதலை, "அடையாளம் தெரியாத "இனவெறி-எதிர்ப்பாளர்களால்" இருக்கும் என்றும், "அதனுடைய தத்துவார்த்த எழுத்துக்கள், பிறரது செயல்முறை நடவடிகைககளுக்கு பொறுப்பாவதைக்" கண்டு அதில் WSWS பெருமிதம் அடைய வேண்டுமே ஒழிய அவர்களிலிருந்து ஒதுங்கக் கூடாது என்றும் "Antira" கட்டுரை விளக்குகிறது.

"தீவிர, போர்க்குணம் மிக்க இடது சாரியினரை" மதிப்புக்குறைக்கும் வகையிலும், தன்னுடைய விசாரணையை நடத்துவதன் மூலம் "போலீசாருக்கு நடைமுறையில் உதவுதலை" நிறைவேற்றுவதாக WSWS கட்டுரை மீது மேலும் குற்றம் சாட்டியுள்ளது. இங்கு நாம் பிரசுரம் செய்ய விரும்பாத, மிக மட்டமான, மதிப்பற்ற திட்டுக்களின் தொகுப்போடு, கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய கருத்தில் WSWS சோசலிஸ்டும் அல்ல, புரட்சிகரமானதுமல்ல, இனவெறி-எதிர்ப்பைக் காட்டுவதுமல்ல, ஒரு பொதுவான "இடது அணித் தோற்றத்திற்கு கணிசமான ஆபத்துகொடுக்கும் அமைப்புத்தான்" என்று கட்டுரையாளர் தெரிவிக்க முற்படுகிறார்.

இடது-சாரி அரசியலும் வன்முறையும்

"இனவெறி அடக்குமுறைக் கருவி" என தீவிரமாகத் திட்டினாலும், உளவுத்துறையோடு ஒரு பிரச்சினையில் கட்டுரையாளர் "அன்டிரா" இணைந்து நிற்பது தெரிகிறது: இடதுசாரி அரசியலும், வன்முறையை பயன்படுத்துதலும் ஒன்றேதான் என்பதுதான் அது.

இவரைப் பொறுத்தவரையில், இரவுநேரத்தில் ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது, போராளியான இனவெறி எதிர்ப்பாளரின் இயல்பான செயலே ஆகும். எவ்வாறு அத்தகைய செயல் இனவெறியையும், தீவிர இனப்பற்றையும் எதிர்க்க உதவும் என்பதைப்பற்றி விளக்கத்தேவையில்லை என அவர் நினைக்கிறார். அரசாங்க அலுவலகக் கட்டிடங்களைத் தகர்ப்பது எவ்வாறு அகதிகளுக்கோ, வெளிநாட்டவருக்கோ உதவக்கூடும் என்பதும், குடியேறுபவர்களின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களைத் தடுக்கும் என்பதும், அத்தகைய அரசாங்க தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் கருத்தைத்திரட்ட உதவும் என்பதும் மர்மமாகத்தான் உள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளில் இடதுசாரி அல்லது சோசலிச கொள்கைகளுக்கு பொதுவாக எந்த இசைவும் கிடையாது. "மக்களுடைய ஆட்சி" என்ற சொல்லின், முதல் பொருளின் அடிப்படையில், சோசலிச அரசியல் ஜனநாயகம் சார்ந்தது ஆகும். அவை உழைக்கும் மக்களுடைய அரசியல் நனவை வளர்க்கவும், அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கவும் முயலுகின்றன. பெரும்பாலான மக்கள் அரசியலில் தீவிரமாக ஈடுபடவும், தங்கள் விதியைத் தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளவும் அவை பாடுபடுகின்றன. பிராங்க்பேர்ட் (ஒடெர்) செயல் பெரும்பாலான மக்களுடைய கருத்துக்களை அவமதிக்கவே செய்யும்; இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களினால் அவர்களுக்கு எந்தப்பயனும் விளையாது. அரசியலில் குழப்பம் அடைந்துள்ள இளைஞர்களின் பழிவாங்கும் செயல் என்று வேண்டுமானால் அதிகபட்சம் கூறிக்கொள்ளலாம்; மோசமான அர்த்தத்தில், அது கலப்பற்ற ஆத்திரமூட்டல் செயலாகும்.

பிராங்க்பேர்ட் (ஒடெர்) தாக்குதலுக்குக் காரணமானவர்களை "புரட்சியாளர்கள்" என "அன்டிரா" கட்டுரையாளர் விவரித்துள்ளது சுத்த மடைத்தனமானது ஆகும். பெரும்பாலான மக்களுடைய இயக்கங்களே புரட்சிகள் ஆகும். பொதுவாக ஒரு சிறு செல்வந்த தட்டின் சலுகையாக உள்ள அரசியல் நிகழ்வுகளில், தனிப்பட்ட, பெரிய அளவில் மக்கள் தலையிடும் தன்மையைக் கொண்டவையாக அவை இருக்கும். அரசு அதிகாரத்துடன் மறைவான நாசவேலைகள், பூசல்கள் இடுவது மற்றும் தனிப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் நிகழ்த்துவது இவற்றுடன் புரட்சிகர அரசியலை இனங்காணலானது, அனைத்து எதிர்ப்பியக்கங்களிலும் வன்முறைச்சதியை கருதும் போலீஸ், உளவுத்துறை இவற்றின் சிந்தனையூற்றின் ஆயுதக்கிடங்கில் இருப்பவை ஆகும்.

அராஜகவாதிகளது வட்டாரங்கள்தான், சிலசமயங்களில் தனிப்பட்ட வன்முறைச் செயல்களை, புரட்சிகர அரசியலின் வழிவகை என விவரித்துள்ளனர். அவர்களுடைய நோக்கம் பொதுமக்களை அரசியலில் எழுச்சி பெறுவதற்காக வியத்தகு "பிரச்சார நடவடிக்கை" வழியாகக் கிளறுவது ஆகும். நடைமுறையில் இது எதிர்மறை விளைவுகளைத்தான் கொடுத்துள்ளது. அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் வெகு ஜனங்களின் மீது செயலிழக்கும் பாதிப்பைக் கொண்டு வரும், அதே நேரத்தில் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு ஆளும் வர்க்கத்திற்குத் தேவையான பாசாங்கான காரணத்தை வழங்கும்.

மார்க்சிசவாதிகள் எப்பொழுதுமே அத்தகைய முறைகளை நிராகரித்துள்ளனர். 1911ல் லியோன் ட்ரொட்ஸ்கி கூறியது போல், "அராஜகவாதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நேரெதிரான போராட்டத்திலும், சமூக ஜனநாயகமானது, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வலிமை போதாத இடத்தில், வைக்கும் இராசயன மாற்றுபோன்ற செயற்கை முறையில் சமுதாய உந்துதலுக்கு வகை செய்யும் அத்தகைய முறைகளையும், வழிமுறைகளையும் நிராகரிக்கிறது.

சோசலிசமும் ஜனநாயகமும்

"அன்டிரா" கட்டுரை, தொழிலாள வர்க்கத்தின் மீதான இகழ்ச்சி, ஜனநாயக உரிமைகளுடன் இணைத்துக் கூறப்படுகிறது. "அன்டிரா" கட்டுரையாளர், WSWS ஆசிரியர் குழுவால் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு, மறைவில்லாத விரோதப் போக்கை பதில்விளைவாகக் காட்டுகிறார். WSWS பேச்சுரிமைக்கு பெரும் மதிப்புகொடுக்கும் நிலையிலும், உளவுத்துறையால் கூறப்படும் அவதூறுகளை எதிர்க்கும் நிலையிலும் இருக்கும்போது, "அன்டிரா" கட்டுரையாளர் அத்தகைய நிலைப்பாட்டை, "அரசையும், சட்டத்தையும் தீவிரவாதமுறையில் குறை கூறாததாக" எடுத்துக்கொள்ளுகிறார்.

Inforiot ல், "அன்டிரா" கட்டுரையிலுள்ள கருத்துக்களைப் போலவே, "lil x-quadrat" எனக் கையெழுத்திடப்பட்டு வெளிவந்துள்ள கடிதம் ஜனநாயக உரிமைகள் இருப்பதைக் கூட மறுக்கிறது: "முடிவில், எல்லா புரட்சிகர நடவடிக்கைகளும், தனித்தனியான சட்டத்தொகுப்புக்கள் இவற்றை வெளிப்படையாக கூறாவிட்டாலும்கூட, முதலாளித்துவ முறையின்படி சட்டவிரோதமானதாகும்."

இந்த இரு கடிதங்களிலுமே, "புரட்சிகர நடவடிக்கை", "போராளிகளின் கிளர்ச்சி" போன்ற வழக்கமாகக் கூறப்பட்டு பொருளிழந்துவிட்ட சொற்கள், மிகப்பெரிய அளவிலான நம்பிக்கையற்ற தன்மையை மறைத்து வெளிப்பட்டுள்ளன. அரசாங்கம் தடையற்ற, முழுமையான அதிகாரங்களைக் கொண்டு, தன் விருப்பப்படி, ஜனநாயக உரிமைகளையும் நசுக்கலாம் என்று இரண்டும் கூறுகின்றன.

ஆனால், அரசின் வெகுமதிபோல், அதிகாரிகள் நினைத்தவேளை திரும்ப எடுத்துக்கொள்ளும் உரிமைகளாக ஒன்றும் ஜனநாயக உரிமைகளின் தன்மை இல்லை. இறுதிப்பகுப்பாய்வில், அவை, தொழிலாளர் இயக்கத்தின் பல பத்தாண்டு காலப்போராட்டங்களின் விளைவு ஆகும். வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, மற்ற ஜனநாயக உரிமைகள் கெய்சர் வில்கெல்மால் வழங்கப்பட்டுள்ளது, சமூக ஜனநாயகத்தால் மேற்கொள்ளப்பட்ட அரசியலின் விளைவு ஆகும். வைமர் அரசியலமைப்பில் தொகுத்துக் கூறப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகள், ஜேர்மனியில் 1918ல் நிகழ்ந்த புரட்சிக்குக் கொடுக்கப்பட்ட சலுகையாகும். இன்றைய ஜேர்மனிய அரசியல் அமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகள், நாஜி ஆட்சிச் சரிவிற்கு பின்விளைவாகவும், தொழிலாள வர்க்கத்திடையே பரந்திருந்த முதலாளித்துவ எதிர்ப்புப் போக்குகளுடைய விளைவாக வந்தவை ஆகும்.

இன்று இந்த உரிமைகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உட்பட்டு வருவதோடு, சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி உட்பட, நடைமுறையிலுள்ள கட்சிகளால், ஒழுங்காகப் பாதுகாக்கப் படுவதில்லை. ஆனால், பெரும்பாலான மக்கள் தொகையின் கணிசமான எதிர்ப்பைச் சந்திக்காமல், அவை சர்வாதிகார முறையிலான ஆட்சிகளால் அகற்றப்பட்டு வேறுவிதமாகக் கொடுக்கப்படும் என்பது நினைத்துப் பார்க்கமுடியாதது ஆகும். இந்த உண்மையில்தான், சோசலிசக் கொள்கைகளின் அடிப்படைகள் உள்ளன. தொழிலாள வர்க்கத்தின், இப்பொழுதுள்ள சமுதாய, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்காமல், சோசலிச முன்னோக்கை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது.

அரசின் தூண்டுதல்கள்

தொழிலாள வர்க்கத்தைப் பற்றிய அவமதிப்பு, ஜனநாயக உரிமைகளைப் பற்றிய கவனமின்மை, அரசு சர்வ வல்லமை வாய்ந்தது என்ற நம்பிக்கைதான் "அன்டிரா" கட்டுரை கூறும் "தனித்தியங்கும் தோற்றம்" என்பது ஆகும்; இத்தகைய நிலை அரசு தூண்டுல்களை விளைவிக்கும் உயர் இலக்குக் களமாகத்தான் இருக்கும்.

பெரிய ஆர்ப்பாட்டங்களின் கடைசிப் பகுதிகளில் திடீரென்று தோன்றி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தல், கார்களை உடைத்தல், எரிபொருட்களை வீசியெறிந்துவிட்டு மறைந்துவிடும் "கறுப்புக் குழு" என்று அழைக்கப்படுவதையும், அதன் பின்னர் போலீசார் குற்றமற்ற, அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து நொருக்குதலையும் கவனித்தவர்களுக்கு இது தெளிவாகும். மீண்டும் மீண்டும் முகமூடியணிந்த இந்தக் "கறுப்புக் குழுவினர்" பங்கு பெறுவதைப் பார்த்தவர்கள், அவர்கள் எவ்வாறு போலீசாரோடு நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர் என்பதை அறிவர்.

ஜூலை 2001ல், G8 உச்சிமாநாட்டின்போது இதைப்பற்றிய இக்கருத்து நல்ல முறையில் சான்றாகப் பதிவாகியுள்ளது. அப்பொழுது, "கறுப்புக் குழுவினர்" அமைப்பைச் சேர்ந்த விடுகாலிகள் போலிசாருடன் பேசிக்கொண்டிருந்த பின்னர், அரச படைகளால் சிறிதும் தொந்திரவிற்கு உட்படாமல் நாசவேலையில் ஈடுபட்டுச் சென்றபின்னர், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தாக்குவதற்கு காரணம் கொடுத்துவிட்டுச் சென்றதை, பல நிருபர்கள் பார்த்தும், சிலர் படமெடுத்தும் உள்ளனர். பாதுகாப்புப்படையினர் பல போலீஸ் ஒற்றர்களையும், நன்கு தெரிந்திருந்த வலதுசாரித் தீவிரவாதிகளையும் அராஜகவாதிகளாக மறைக்கப்பட்ட வகையில் வேலைக்கமர்த்தினர் என்பதையும் அவர்கள் நூற்றுக்கணக்கான கடை கண்ணாடி ஜன்னல்களை நொருக்கி, பல கார்களுக்குத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் நகர்ந்தனர் என்பதையும் அரசாங்க வக்கீல்கள் பின்னர் கண்டறிந்தனர்.

அரசியல் மடமைக்கும், ஆத்திரமூட்டுதலுக்கும் இடையேயுள்ள எல்லையை அத்தகைய நிலைகளில் கஷ்டப்பட்டுத்தான் கண்டறியமுடியும். ஆனால் எங்கு எல்லை உள்ளதோ, அங்குகூட, தன்னிச்சை "அதி- புரட்சியாளர்கள்" உடைய நடவடிக்கைகள் மற்றும் அரசுக்கான ஆதரவு என்பது பொதுவாக நாம் நினைப்பதைவிட மிகநெருக்கமாகத்தான் உள்ளது. இதற்கான சான்று, ஜேர்மனியில் மிகவும் அறியப்பட்ட கல் எறிகாரரான Joschka Fisher உடைய வாழ்க்கை வரலாற்றில் உள்ளது.

"புரட்சிகரமான போரிடல்" என்பதில், வெறும் ஜன்னல் கண்ணாடிகளை மட்டும் உடைப்பதில் திருப்தியடைந்து விடாமல், தன்னுடைய ஏவுதல்களைப் போலீசார்மீதும் செலுத்திய பிஷரின் வாழ்க்கைக்கும், ஹெசியன் மாநிலத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அமைச்சராக அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதற்கும் இடைப்பட்ட ஆண்டுகள் பத்துத்தான். இப்பொழுது அவர் இந்த நாட்டின் வெளியுறவு மந்திரியாகவும் துணை அதிபராகவும் விளங்குகிறார். பிஷருடைய கதை பொதுவாக, வெற்றிபெற்ற புனிதப் போலின் (Pauline) மாற்றம் போல் என்று கூறப்படுகிறது. ஆனால், "புரட்சிகரப் போராட்டம்" குழுவிலிருந்து நாட்டின் மிக உயர்ந்த அரசாங்கப் பதவிக்குச் சென்ற ஏறுவழி முழுவதும், தொழிலாள வர்க்கத்தின் மீது விரோதமும், இகழ்ச்சியும் நிறைந்த, ஒரு பொது இழையைக் காணமுடியும்.

பிராங்க்பேர்ட் (ஒடெரில்) தாக்குதல்

நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டு விட்டதால், WSWS ஆசிரியர்குழு, பிராங்பேர்ட் (ஒடெரில்), குடிவரவு-அகல்வு அலுவலகத்தில் நடந்த தாக்குதல் பற்றிய பின்னணியை வெளிக்கோண்டு வருவதில் மிகப்பெரிய அக்கறை கொண்டுள்ளது. இதுவரை இந்தத் தாக்குதலின் குறிப்பிடத்தக்க ஒரே விளைவு, பிராண்டன்பேர்க் உளவுத்துறை WSWS மீது நடத்திய தாக்குதல்தான்.

இரண்டரை மாதங்கள் ஆகியும்கூட, போலீசாரும், அரசாங்க வக்கீல்களும் மேற்கொண்ட விசாரணைகள் எந்த விளைவையும் கொடுக்கவில்லை. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு சிந்தனையளவில் பொறுப்பு என்று WSWS ஐ குற்றஞ்சாட்ட இரகசிய உளவுத்துறை இத்தனைகாலம் காத்திருக்கவில்லை. எனவே கீழேயுள்ள வினாக்கள் கேட்கப்பட்டாக வேண்டும்: இரண்டு ஆண்டுகள் முன்பு வெளிவந்த WSWS கட்டுரையை குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் யார் வைத்தது, தாங்கள் வெளியிட்டதைத் தவிர உளவுத்துறைக்கும் போலீசாருக்கும் விவரங்கள் கூடுதலாகத் தெரியுமா, இந்த விஷயத்தில் வேறு ஏதேனும் அரசாங்க அமைப்பிற்கும் தொடர்பு உண்டா?

பிராங்பேர்ட் (ஒடெர்) டில் தாக்குதல் பற்றிய விசாரணையைத் தானும் தனியாக மேற்கொள்ளுவதால், WSWS இனவெறி-எதிர்ப்பு இயக்கத்தைத் தாக்குதலுக்கும் கண்டனத்திற்கும் உட்படுத்துகிறது என்று "அன்டிரா" கட்டுரையில் வந்துள்ள குற்றச்சாட்டு இழிந்ததும் அவலட்சணமானதும் ஆகும். இதே காரணத்தை ஒட்டி, 2001 ஜூலையில் ஜெனோவாவில், நடந்தவற்றின் பின்னணியை ஆராய்ந்த செய்தியாளர்கள், குடியுரிமை அமைப்புக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரையும், பூகோளமயமாக்கல்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் என்று குற்றச்சாட்டி "அடக்குமுறைக்கு" உட்படுத்தப்படலாம். உண்மையில், அரசாங்கத் தூண்டுதல்கள் எந்த அளவிற்கு இருந்தது என்பதை முற்றிலும் அறியவந்ததனால், அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் இறுதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.

WSWS இன் ஆசிரியர் குழுவிற்கு பிராங்க்பேர்ட் (ஒடெர்) தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்று தெரியாது. இதுதான் இனவெறியையும், தீவிர இனப்பற்றையும் அழிக்கக் கூடியது என்ற, அரசியலில் தவறான வழியில் அழைத்துச் செல்லப்படும் இளைஞர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்பதை ஒதுக்க முடியாது. அவ்வாறாயின், சட்டத்துடனும், போலீசுடனும் அவர்கள் கஷ்டப்படவேண்டி இருந்தால் "அன்டீரா" கட்டுரையின் ஆசிரியர்தானே ஒழிய, WSWS ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் அல்லர். "அன்டிரா" கட்டுரை மிகவும் பொறுப்பற்றதாகும். அக்கட்டுரை அரசியலில் முட்டாள்தனமான, பொருளற்ற செயல்களுக்கு காப்புக் கொடுத்து நியாயப்படுத்துவதோடு, அரசியலில் அப்பாவியாக உள்ள இளைஞர்களை எளிதில் சிறைக்கூடத்திற்கு குற்றவாளிகளாக தள்ளக்கூடிய, பொறியில் தள்ளிவிட்டு விடும்.

See Also:

ஆத்திரமூட்டும் இரகசிய ஒற்றர்களும் குற்றவாளிகளும், பிராண்டன்பேர்க் உளவுப்பணித்துறையின் கீழ் வேலை பார்க்கின்றனர்

பிரான்டன்பேர்க் உளவுத்துறையினர் உலக சோசலிச வலைத் தளத்தின் மீது அவதூறு கூறுகின்றார்கள்: பிராங்பேர்ட்-ஓடர் இல் உண்மையில் நிகழ்ந்தது என்ன?

ஜேர்மனி : பிராண்டன்பர்க் உளவுப்பணித்துறை உலக சோசலிச வலைதளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது


Top of page