World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைCloser Sri Lanka-India economic and defence ties இலங்கை-இந்திய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் நெருக்கமடைகின்றன By Wije Dias இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைக்கால இந்திய விஜயமானது, நாட்டில் நீடித்த உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்டும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் தற்போதைய முயற்சிகளில் செல்வாக்குச் செலுத்தும் பரந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை சுட்டிக்காட்டுகின்றது. விக்கிரமசிங்கவும் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியும் அக்டோபர் 21 அன்று புது டில்லியில் சந்தித்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவை விரிவுபடுத்தல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை ஒழுங்குபடுத்தல் திட்டங்களை அறிவிக்கும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். விசேடமாக, பிராந்தியத்தினுள் இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான கூட்டணியில், இலங்கைக்கான ஒரு பிரதான பாத்திரத்தை செதுக்கிக்கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உணர்த்தும் இந்தத் திட்டங்களை கொழும்பில் உள்ள பெரு வர்த்தகர்களும் ஊடகங்களும் பெரிதும் வரவேற்றுள்ளன. ஒரு கூட்டுக் குழுவினால் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலமைந்த, பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கை ஒன்று 2004 மார்ச் மாதத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்தப் பிரேரணைகள், தற்போதைய பண்ட வணிகத்தில் ஈடுபட்டுவரும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினுள் சேவைகளையும் சேர்த்து அதை விரிவுபடுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு பெருக்கத்துக்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். 2002 மார்ச்சில் அமுலுக்கு வந்த ஆரம்ப நடவடிக்கைகள், ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை குறிப்பிடத்தக்களவு உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய உடன்படிக்கையானது, இரு தசாப்தங்களாக நீடித்த அழிவுகரமான யுத்தத்துக்குப் பின் பொருளாதாரத்தை மீண்டும் உயர்பெறச் செய்வதன் பேரில், இலங்கையை தெற்காசியாவுக்கான ஒரு முதலீட்டு மற்றும் வர்த்தக மையமாக மாற்றுவதற்கான விக்கிரமசிங்கவின் திட்டங்களுக்கு மற்றுமொரு முண்டுகோலாகும். ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது, பொதுத் துறையை வெட்டித் தள்ளுவதோடு தீவை தெற்காசியாவில் சிங்கப்பூருக்கு ஒத்த நாடாக மாற்றுவதையும் இலக்காகக் கொண்ட பொருளாதார மற்றும் மறுசீரமைப்பு பிரேரணைகள் உள்ளடங்கிய "புத்துயிர் பெறும் இலங்கை" என்ற தனது வேலைத்திட்டத்தை மே மாதம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பில் ஒரு ஆரவாரமான பொருளாதார நடவடிக்கை காணப்படுகிறது. பிரதான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், உலகம் பூராவும் வர்த்தக சந்தைகளில் ஈடுபடும் வர்த்தகப் பிரதிநிதிகள், வியாபாரப் பேரவைகள் மற்றும் வணிக கள மன்றங்களால் பிரத்தியேகப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் இந்தியாவுடன் மட்டுமன்றி அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் இடம்பெற்று வருகின்றன. இலங்கையின் உட்கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புவதனால் ஏற்படும் உள்ளார்ந்த இலாபம் மற்றும் நாட்டின் மலிவான, பயிற்றப்பட்ட உழைப்பு வழங்கலை சுரண்டல், அதே போல் பிராந்திய நடவடிக்கைகளுக்காக இலங்கையை மாற்றியமைத்தல் என்பவற்றில் முதலீட்டாளர்கள் கண்வைத்துள்ளனர். விக்கிரமசிங்க-வாஜ்பாயி அறிக்கையானது நெருங்கிய பாதுகாப்பு உடன்படிக்கைக்கும் அழைப்பு விடுக்கின்றது. "இந்தியா, இலங்கையின் பாதுகாப்பில் தொடர்ச்சியாக அக்கறை செலுத்தும் அதே வேளை, அதன் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பதிலும் ஈடுபடும்," என அது பிரகடனப்படுத்தியுள்ளது. இரு நாடுகளது பாதுகாப்பு செயலாளர்களும் ஒரு பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்துக்கான அடித்தளத்தை கட்டியெழுப்பும் முகமாக வெகு விரைவில் சந்திக்கவுள்ளனர். பாதுகாப்பு உறவுகள் ஏற்கனவே வளர்ச்சி கண்டுவந்துள்ளன --கடந்த வருடம் இந்தியா 2000 இலங்கை பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. 2000 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 700 பாதுகாப்பு படையினரே இப்பயிற்சியைப் பெற்றிருந்தனர். ஆனால் கொழும்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஏற்பாடாவிடில் இந்த வளர்ச்சியுறும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகள் விரைவில் முறிந்துவிடக் கூடும். இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அடித்தளமாக, தீவின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஒரு இடைக்கால நிர்வாக சபைக்கான பிரேரணைகளை விடுதலைப் புலிகள் வெளியிடுவதற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்னர் தான் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்தார். விடுதலைப் புலிகள் தமது பிரேரணைகளை அறிவிப்பதற்கு முன்னதாகவே அவர்கள் மீது அதிகளவு அழுத்தம் கொடுப்பதே இந்தக் கூட்டறிக்கையின் நோக்கமாகும். அது எந்தவொரு இடைக்கால நிர்வாக ஒழுங்கமைப்பும் "இலங்கையின் ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்ற வரம்புக்குள்" அமையவேண்டும் என வலியுறுத்துகிறது -- இது விடுதலைப் புலிகளின் சுதந்திர அரசு ஒன்றுக்கான முன்னைய கோரிக்கையை உறுதியாக நிராகரிப்பதாகும். இரு பிரதமர்களும், இடைக்கால நிர்வாக சபைக்கான விடுதலைப் புலிகளின் திட்டங்கள் "நடைமுறைக்குறியதாகவும் முழுமையானதாகவும்" அமையவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு மெல்லிய மறைமுகமான எச்சரிக்கையின் மூலம், "பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு கூட்டு எதிர்ப்புக்கு" அழைப்புவிடுத்த இந்த அறிக்கை, "பயங்கரவாதத்துக்கு அரசியல், மதம் அல்லது கருத்தியல் ரீதியிலான எந்தவொரு நியாயப்படுத்தலும் இருக்க முடியாது," எனக் குறிப்பிடுகின்றது. இந்தியா, அமெரிக்காவுடனும் ஏனைய சில நாடுகளுடனும் சேர்ந்து விடுதலைப் புலிகளை ஒரு "பயங்கரவாத இயக்கமாக" முத்திரை குத்தியுள்ளது. ஒட்டு மொத்தமாக பார்ப்பின், இப்பிரகடனம், இந்தியா விடுதலைப் புலிகளை கொழும்புடன் கொடுக்கல் வாங்கல்களுக்குச் செல்ல நெருக்குவதன் பேரில், தனது கணிசமான அரசியல் மற்றும் இராணுவ பலத்தை பயன்படுத்துவது உட்பட, இலங்கை விவகாரங்களில் ஒரு பெரும் பாத்திரத்தை வகிக்க முயற்சிப்பதை சுட்டிக் காட்டுகிறது. விடுதலைப் புலிகள் இந்தியாவின் மறைமுக அச்சுறுத்தலுக்கு தெளிவாக எதிர்ச் செயலாற்றினர். விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழ் கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், விக்கிரமசிங்கவின் டெல்லியுடனான பகிரங்க உறவு ஒரு துண்பகரமான மற்றும் விரும்பத்தகாத நினைவுகளை மீண்டும் தட்டி எழுப்புகிறது" என எச்சரித்திருந்தது. அது, "கூட்டுறவுடனான பேச்சுவார்த்தை மூலம் அடையும் தீர்வுக்கு எதிரான வகையில், ஒரு அரசியல் தீர்வுக்காக விடுதலைப் புலிகளை கட்டாயப்படுத்த முயற்சிக்கின்றது" என இலங்கைப் பிரதமரைக் குற்றஞ்சாட்டுகிறது. "பிரச்சினைக்குரிய தீர்வை முன்னெடுப்பதற்கான கடமைகளை ஒரு இராணுவ கொள்ளையடிப்பை நோக்கித் திருப்புகிறது" எனவும் அப்பத்திரிகை விக்கிரமசிங்கவை குற்றஞ்சாட்டுகிறது. இந்திய-இலங்கை உடன்படிக்கை "விரும்பத்தகாத நினைவுகள்" என்பது 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் இந்தியா இலங்கையில் நேரடியாகத் தலையிட்ட கடந்த காலத்தை நினைவூட்டுகிறது. இந்த உடன்படிக்கையின் கீழ், அமைதி காக்கும் படை என்ற பெயரில் புது டில்லி 150,000 துருப்புக்களை வட இலங்கைக்கு அனுப்பிவைத்தது. ஆனால் இந்தத் தலையீடு வேகமாக நிலைகுலைந்து போனது. இந்திய "அமைதி காப்பவர்களின்" உண்மையான நோக்கம், விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவதும் ஆட்டம் கண்ட கொழும்பு அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதுமே ஆகும். தெற்கில், அரசாங்கம் இந்தியப் படையின் இருப்புக்கு எதிராக உக்கிரமடைந்த சிங்கள பேரினவாத பிரச்சாரத்தின் அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்த அதே வேளை, வடக்கில் இந்திய துருப்புக்களுக்கும் விடுதலைப் புலி போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன. 1990ல் ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாச தீவிலிருந்து தமது துருப்புக்களை அகற்றிக்கொள்ளுமாறு இந்தியாவைக் கோரினார். கடந்த தசாப்தத்தில், இந்திய அரசாங்கங்கள் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்வது பற்றி விழிப்புடன் இருந்தன. 2000 மே மாதத்தில், விடுதலைப் புலி போராளிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவை கைப்பற்றி, யாழ் குடாநாட்டின் நுனிப்பகுதியில் பெருந்தொகையான இராணுவத்தினரை பொறிக்குள் தள்ளியபோது, புது டில்லி இலங்கை இராணுவத்துக்கு உதவி வழங்க மறுத்தது. இலங்கையிலான இந்தியாவின் புதிய தலையீடுகள் ஊற்றெடுப்பது, வாஷிங்டனுடனான இந்தியாவின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளின் ஒரு பாகமாகவாகும். தெற்காசியாவானது, அமெரிக்கா மூலோபாய நலன்களைக் கொண்டுள்ள சீனா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்குக்கும் அருகாமையில் அமைந்திருப்பதால், புஷ் நிர்வாகம் தெற்காசியாவின் பிராந்திய பாதுகாப்பில் மிகவும் செயற்திறம் வாய்ந்த பாத்திரத்தை ஏற்குமாறு வாஜ்பாயி அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிராந்தியத்தியத்தை ஸ்திரமற்ற நிலைமைக்குள்ளாக்கும் நீண்டகால காரணியாக இருந்து வந்துள்ள இலங்கை பிரச்சினைக்கு முடிவுகட்டுமாறும் அமெரிக்கா நெருக்கி வருகின்றது. அமெரிக்க அரச பிரதி செயலாளரான கிறிஸ்டினா ரொக்கா, அக்டோபர் 29 நடந்த அமெரிக்க காங்கிரஸ் கமிட்டிக்கு முன்வைத்த அறிக்கையில்: "அதிகரித்துவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆழமான இந்திய-அமெரிக்க கூட்டுறவானது, இந்தியாவிடம் அமெரிக்கா எதிர்பார்க்கும் நெருக்கமான உறவை பிரதிபலிக்கின்றது," என பிரகடனம் செய்தார். அதே சமயம், விடுதலைப் புலிகள் கொழும்புடன் 20 மாதகால யுத்த நிறுத்தத்தை கடைப்பிடித்திருந்தாலும் கூட, அமெரிக்கா தொடர்ந்தும் அவர்களை பயங்கரவாத அமைப்பாகவே கருதும், எனப் பிரகடனப்படுத்திய ரொக்கா, விடுதலைப் புலிகள் மீது ஒரு அழுத்தத்தையும் திணித்தார். விக்கிரமசிங்க தன் பங்குக்கு, விடுதலைப் புலிகளை காலடிக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக புஷ் நிர்வாகத்தின் நல்லெண்ணத்தைப் பெற தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார். அண்மையில் நிகழ்ந்த ஐ.நா. பொதுக் கூட்டத் தொடரின் போது, இலங்கை பிரதமர் ஈராக் மீதான அமெரிக்காவின் கிறிமினல் ஆக்கிரமிப்பை பகிரங்கமாக ஆதரிக்க தனது பேச்சை பயன்படுத்திக்கொண்டார். "அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் தலையீடு செய்வதை தவிர்ந்த வேறெந்த வழியுமே இருக்கவில்லை.... ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி ஒரு உலக பொலிஸ்காரனுக்கான தேவையை உருவாக்கி விட்டுள்ளது", என அவர் பிரகடனம் செய்தார். இந்த வாரம் விக்கிரமசிங்க வாஷிங்டனுடன் பேச்சு நடத்த புறப்படும் அதே வேளை, இலங்கை பொறியியல் மற்றும் மருத்துவ அலுவலர்கள் ஈராக்கிலுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படையுடன் இணையவுள்ளதாக ஐ.தே.மு. அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.தே.மு. அரசாங்கம் இந்த அடையாள உந்துதலானது புஷ் நிர்வாகத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவுமென தெளிவாக கணிப்பிட்டுள்ளது. விக்கிரமசிங்க இந்த ஆண்டு வாஷிங்டனுக்கு இரண்டாவது தடவையாக உத்தியோகபூர்வமாக
விஜயம் செய்கின்றார். இதற்கு முன்னர் சுமார் இரு தசாப்தங்களாக எந்தவொரு இலங்கை பிரதமரும் வெள்ளை
மாளிகைக்கு அழைக்கப்படவில்லை. பிராந்தியத்தில் வாஷிங்டனின் பரந்த பொருளாதார மூலோபாய திட்டங்களோடு, விடுதலைப்
புலிகளுக்கும் கொழும்புக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களை இறுதியாக உறுதிப்படுத்துவதற்கான அமெரிக்க அழுத்தங்கள்
திரைமறைவில் விரிவுபடுத்தப்படுவதை இந்த அறிகுறிகள் உறுதிப்படுத்துகின்றன. |