World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் US soldiers' families, veterans go to Iraq to oppose war அமெரிக்க படையினரின் குடும்பத்தினர், முன்னாள் இராணுவத்தினர் போருக்கு எதிர்ப்பாக ஈராக் செல்கின்றனர் By Bill Vann அமெரிக்கப் படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் படையினரின் தூதுக் குழு ஒன்று, இரண்டு வார சுற்றுப் பயணமாக, ஞாயிற்றுக் கிழமை அன்று பாக்தாத் வந்து சேர்ந்தது. மிகப் பெரும்பாலோர், ஈராக்கில் அமெரிக்கா படையெடுத்து பிடித்துக் கொண்டதை எதிர்த்துக் குரல் எழுப்பி வருகின்றனர். ஈராக்கில் புஷ் நிர்வாகம் கடைப்பிடித்து வரும் கொள்கைகளின் உண்மையான விளைவுகளை மற்றும் அமெரிக்கப் படையினர் மற்றும் ஈராக் மக்கள் இருதரப்பும் எதிர்கொள்ளும் நிலவரங்களை நேரில் தெரிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தனர். இந்த தூதுக் குழுவிற்கு தலைமை தாங்கி வந்திருப்பவர் பெர்னாண்டோ சுவாரஸ் டி சோலர், மெக்சிகன் நாட்டு குடிமகன் ஆவார். சாந்தியாகோ அருகில் உள்ள கலிபோர்னியாவில் எஸ்கான்டிடோ பகுதியில் அவர் தற்போது வாழ்ந்து வருகிறார். அவரது 20 வயது மகன் ஜீஸஸ் அல்பேர்டோ, சென்ற மார்ச் மாதம் அமெரிக்கா படையெடுத்துச் சென்ற பொழுது பலியான முதல் கடற்படை வீரர்களில் ஒருவராக இருந்தார். அந்த இளைஞர் அமெரிக்கா வீசிய வெடிக்காத திரள் குண்டு (cluster bomb) ஒன்று பட்டதால் மாண்டார். அவரது மகன் இறந்ததை அடுத்து, 48 வயது நிரம்பிய, அவரது தந்தை சுவாரெஸ், ஈராக்கில் அமெரிக்காவின் கொள்கைக்கு பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினார். "சட்ட விரோதப் போரில்" அமெரிக்கா ஈடுபட்டிருப்பதாகக் கண்டனம் செய்து உடனடியாக எல்லா அமெரிக்க துருப்புக்களும் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரி வருகிறார். அவர் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் "நாங்கள் செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பது சாமாதானப் பணி" எனக் கூறினார். "ஈராக் மக்கள் நாங்கள் அவர்களது எதிரிகள் அல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும், நாங்களும் இந்தப் போரினால் துன்பமடைந்துள்ளோம் என்பதைக் காட்டுவதுதான் இதன் குறிக்கோள்" என்றார். அவர் தன்னுடன் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ குழந்தைகளால் ஈராக் பள்ளிக் குழந்தைகள் மற்றும் அமெரிக்க இராணுவத்தினருக்கு எழுதப்பட்டுள்ள சுமார் 2000 கடிதங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அதில் கலிபோர்னியா வாட்சன் வில்லா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி எழுதிய கடிதம் ஒன்று, இந்தப் போரில் தங்களது பெற்றோர்களை இழந்துவிட்ட ஈராக் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்கிறது. அவரும் அவருடன் வந்த இதர தூதுக் குழுவினரும் ஈராக் குழந்தைகளுக்கு ஆடைகளையும் இதர பரிசுப் பொருட்களையும் கொண்டு வந்திருக்கின்றனர். "ஈராக்கிற்கு பயணம் செய்வதே பாதுகாப்பானதல்ல என்று மற்றவர்கள் எங்களை எச்சரித்தனர். ஆனால் சாதாரண அமெரிக்கர்கள் சமாதானத்தையே விரும்புகின்றனர் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு நாங்கள் விரும்பினோம்" என சுவாரெஸ் கூறினார். ஈராக் இளைஞர்கள் இராணுவ சீருடையில்தான் அமெரிக்க கொடியைப் பார்க்கின்றனர். அந்தக் கொடியை தங்களது வாழ்வையும், குடும்பத்தையும் அழிக்கும் ஒன்றாகப் பார்க்கின்றனர். அப்படிப்பட்டவர்களை சந்திக்க வேண்டியது மிக மிக முக்கியமானதாகும்" என்று சுவாரெஸ் குறிப்பிட்டார். அமெரிக்க ஆக்கிரமிப்பில் அதிகாரம் செலுத்தி வரும் அதிகாரிகள் இராணுவத்தினரது உறவினர்களுடன் குரோதத்தை அரிதாகவே மறைக்க முடிகிறது. அந்த தூதுக் குழுவின் பாதுகாப்பிற்கு தாங்கள் உறுதி செய்துதர முடியாது என்று கூறிவிட்டனர். அந்த தூது குழு ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தளங்களுக்கு செல்லக்கூடாது என்று இராணுவம் தடை விதித்திருக்கின்றது. இதன் மூலம் ஈராக்கில் பணியாற்றுபவர்கள் அந்த தூதுக் குழுவில் வந்திருக்கின்ற தங்கள் பிள்ளைகளையோ அல்லது கணவன்மார்களையோ சந்திப்பதைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். மேலும் இந்த பயணத்தை ஏற்பாடு செய்தவர்களுள் ஒருவர், பெண்டகன் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவிடாது ஏனைய உறவினர்களை கருத்தை மாற்றிக்கொள்ள அச்சுறுத்தும் செயலூக்கமான பிரச்சாரத்தை நடத்தியதாக குற்றம் சாட்டி இருக்கிறார். தற்போது இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தங்களது உறவினர்கள் எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கைக்கும் இலக்காகிவிடக் கூடாது என்பதற்காக ஈராக்கிற்கு வரவிரும்பிய பலர் முதலில் விருப்பம் தெரிவித்து பின்னர் விலகிக் கொண்டனர் என்று சான்பிரான்சிஸ்கோவை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைக் குழுவான பூகோள பரிவர்த்தனையின் (Global Exchange) இயக்குநர் மெடியா பெஞ்சமின் கூறினார். தனது கணவர் தயார்நிலை இராணுவப் பிரிவில் பணியாற்றி வருவதாகவும், தான் அந்த தூது குழுவில் இடம் பெறுவது தெரிந்ததும் தனது கணவனுக்கு கடுமையான பணிகள் கொடுக்கப்பட்டதாகவும், தொலைபேசி அழைப்புக்கள், மின்மடல் இவையும் மறுக்கப்பட்டதாக ஒரு பெண் தெரிவித்தார். ஈராக்கில் பணியாற்றுகின்ற தங்களது கணவன்மார்களை இராணுவ தளபதிகள் கண்டித்ததால் இரண்டு பெண்கள் இந்த பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. 10 உறுப்பினர்கள் தூதுக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் ஈராக்கில் ஆக்கிரமிப்புப் படையில் பணியாற்றும் துருப்புக்களின் பெற்றோர்கள், வட கரோலினா, போர்ட் பிராக்கை தளமாகக் கொண்ட படையினரின் இரு மனைவியர், முன்னாள் இராணுவத்தினர் நான்கு பேர் வியட்நாமிலும், பாரசீக வளைகுடா போரிலும் பங்கு கொண்டவர்கள் அவர்களில் இருவரது குழந்தைகளும் தற்பொழுது ஈராக்கில் பணியாற்றி வருகின்றனர். இந்த தூதுக் குழுவினர் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர், அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாக அதிகாரிகளையும் இராணுவ தளபதிகளையும் சந்திக்க விரும்புகின்றனர். அதேபோல அமெரிக்கா உருவாக்கியுள்ள ஈராக் நிர்வாக குழு உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச விரும்புகின்றனர். அன்னாபெல் வலென்சியா, அரிசோனா டங்சன் பகுதியை சேர்ந்தவர், அவரது இரண்டு குழந்தைகள் தற்பொழுது ஈராக்கில் பணியாற்றி வருகின்றனர். அவர் ஈராக்கிற்கு சென்று தனது பிள்ளைகளை பார்க்கவும், ஈராக் மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கவும் விரும்புகின்றார். "ஈராக் மக்களோடு நான் பேச விரும்புகிறேன் மற்றும் அமெரிக்காவிலுள்ள நாங்கள் அவர்களது சகோதரர்கள் என்று கூற விரும்புகிறேன்." "மேலும் ரத்தம் சிந்துவதை நாங்கள் விரும்பவில்லை" என்று அரிசோனா டெய்லி ஸ்டார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார். எனது இரண்டு பிள்ளைகளும் இந்நாட்டுக்கு வந்து சேர்ந்ததும் ஈராக் எதிர்ப்பினரின் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். எனது 22 வயது மகன் சுவனி பரசூட் படை வீரர் இராணுவத்தின் 82 வது விமான பிரிவில் பணியாற்றி வருகிறார், பாக்தாத் அருகில் சாலையில் வைக்கப்பட்ட வெடிகுண்டில் காயமடைந்து மயிழையில் உயிர் தப்பிவிட்டார். 24 வயதான, எனது புதல்வி கிசலி, இராணுவத்தின் நான்காவது காலாட் படைப் பிரிவில் பணியாற்றி வருகிறார், திக்ரித் அருகே அவர் எதிர் தாக்குதலுக்கு இலக்கானார் என்ற விவரங்களையும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார். அவரும் அவரது கணவரும் ஆரம்பத்தில் ஈராக் படையெடுப்பை ஆதரித்தனர் எனினும், அதற்குப் பின்னர் அன்னாபெல் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக திரும்பி போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார். "போர் தொடங்கிய பொழுது நாங்கள் அதை ஆதரித்தோம்." "ஆனால் போர் முடிந்து விட்டது இன்னமும் எங்களது பிள்ளைகள் ஈராக்கிலேயே இருக்கின்றனர். இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம். இராணுவ அதிகாரிகள் ஆறு மாதங்களில் எங்களது பிள்ளைகள் திரும்பி விடுவார்கள் என்று பொய் சொல்லியிருக்கிறார்கள்" இவ்வாறு அவர் டெய்லி ஸ்டார் பத்திரிகையிடம் குறிப்பிட்டார். அரிசோனா, தெம்பே பகுதியில் ஒரு உணவு விடுதி உரிமையாளரான மைக்கேல் லோப்பர்சியோவும் தூதுக் குழுவில் ஈராக் வந்திருக்கிறார். அவரது புதல்வர் அந்தோனி இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கலவரம் நிறைந்த பல்லூஜா நகருக்கு அருகில் அவர் பணியாற்றி வருகிறார். வேலைகள் இல்லாத, மருத்துமனைகள் இல்லாத மற்றும் அடிப்படை மருந்து வசதிகள் இல்லாத நிலைமைகளின் கீழே, தான் சந்தித்த ஈராக் மக்கள் "நாளுக்கு நாள் நம்பிக்கையை இழந்து கொண்டு வருகின்றனர்" என்று அவர் கூறினார். ஈராக்கில் புஷ் நிர்வாகம் தொடர்ந்து அந்த நாட்டை பிடித்துக் கொண்டுள்ளதையும் ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் கொள்கை பற்றி அமெரிக்காவில் பொது மக்களிடையே எந்த விதமான அக்கறை கொண்ட விவாதமும் நடக்கவில்லையே என்று லோப்பர்சியோ தனது அதிருப்தியை தெரிவித்தார். "எனக்கு ஒரு அம்சத்தில் குழப்பம் ஏற்பட்டது, நான் இளைஞனாக வளர்ந்து வரும் பொழுது வியட்நாம் போர் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஒவ்வொருவரும் மிகவும் ஐயுறவாதத்துடன் நோக்கினர்" என்று லோப்பர்சியோ லொஸ்ஏஞ்சல்ஸ் டைம்ஸிடம் கூறினார். "இந்தப் போரைப் பொறுத்தவரை மக்களுக்கு அக்கறையில்லை. நாம் ஜாக்கோ, கொபே பிரயான்ட் ஆகியோர் மீதுதான் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் எங்கு கவனம் செலுத்த வேண்டுமோ அந்த வகையில் இந்த பயணம் சிறிதளவாவது உதவுமானால், அது இந்த பயணத்திற்கு வெற்றியாக அமையும். ஏனென்றால் நாம் இன்றைக்கு ஈராக்கில் செய்து கொண்டிருப்பது வர இருக்கின்ற பல தலைமுறைகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று லோப்பர்சியோ கூறினார். பெர்னான்டோ சுவாரெஸ் டெல் சோலார் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தப் பயணம் மேற்கொண்டதற்கான தனிப்பட்ட நோக்கம், எனது புதல்வன் கொல்லப்பட்ட இடத்திற்கு சென்று, அவன் ரத்தம் சிந்திய மணலை ஒரு புட்டியில் போட்டு சேகரித்துக் கொண்டு வர விரும்புகிறேன். "அந்த மண்ணை எனது புதல்வன் நடமாடிய எஸ்காண்டிடோ பூங்காவில் கொண்டு வந்து வைப்பேன். அதில் ஒரு வெள்ளை ரோஜா செடியை நடப்போகிறேன். அவன் மறைந்த இடம் தொலை தூரத்தில் இருப்பதால் அதில் ஒரு பகுதியை கொண்டு வர விரும்புகிறேன்" இவ்வாறு அந்த தந்தை கூறினார். |