World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European Union to deport immigrants

ஐரோப்பிய ஒன்றியம் புலம் பெயர்ந்தோரை நாடு கடத்தும்

By Elisabeth Zimmermann
27 November 2003

Back to screen version

இந்த மாதத் தொடக்கத்தில், ஒரு கூட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரத்தை நிறுவுவற்கான திட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்துறை மந்திரிகளால் வெளியிடப்பட்டது. 2005லிருந்து, இந்தப்புதிய ஐரோப்பிய ஒன்றிய அதிகார அமைப்பு, புலம் பெயர்ந்தோரையும், அகதிகளையும், ஐரோப்பிய எல்லைகளுக்குள் நுழையாமல் தடுக்கும் திட்டம் ஒன்றை ஒருங்கிணைக்கச் செயல்படும். இதைத்தவிர, அந்த அமைப்பு, அதிகாரபூர்வமான குடியிருப்புத் தகுதி இல்லாத தஞ்சம் கோருவோரையும் புலம்பெயர்ந்தோரையும் நாடுகடத்துவதற்கும் பொறுப்பாக இருக்கும்.

இத்திட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்பயணங்களை பயன்படுத்தும் முறையொன்றைக் கருத்தில் கொண்டுள்ளது. தாங்கள் கடைசியாக பிரஸ்ஸல்சில் கூடியபோது, ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை மந்திரிகள், அத்தகைய நடவடிக்கைகளுக்கு பணத்தேவை மற்றும் ஒழுங்கமைத்தல் பற்றி விரிவான திட்டம் ஒன்றிற்கு உடன்பாடு தெரிவித்தனர்.

இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்குத் தலைமை தாங்கும் இத்தாலி, "மூன்றாம் நாடுகளிலிருந்து வரும் குடிமக்களை, ஒவ்வொரு தனிநாட்டின் திருப்பியனுப்புதல் முறைகள் பற்றிய நடவடிக்கைக்கேற்ப, திருப்பியனுப்பும் விமானப்பயணங்களை ஒழுங்கமைத்தலுக்கான" சட்டவரைவு ஒன்றைத் தாக்கல் செய்தது.

கூட்டு எல்லைகள் முகவாண்மையை உருவாக்குவதற்கான திட்டத்துடன் சேர்த்து இம்முன்மொழிவு, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் வாக்கெடுப்பிற்கு வரவிருக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் உள்ள அகதிகளையும், புலம்பெயர்ந்தோரையும், விரட்டியடிப்பதற்கான தீவிர முயற்சிகளின் பின்னணியில்தான் இந்த நடவடிக்கைகள் இருக்கின்றன. இதைத்தவிர, இந்த நடவடிக்கைகள் மூலம், அரசாங்கச் செலவினங்கள் குறைக்கப்படுவதற்கும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப்பகுதி விரிவுபடுத்துவதற்கான தயாரிப்புக்களின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

திட்டமிடப்பட்ட இந்தக் கூட்டு எல்லைகள் முகவாண்மை, தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடைய இறையாண்மையை மீறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை; தனி நாடுகள் குடியேற்றக் கொள்க்ைகள் பற்றிய தங்கள் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும். இந்த முகவாண்மை, எல்லைகளை ரோந்து செய்தலுக்கு தொழில்நுட்ப உதவியளித்து, பெருமளவில் மக்கள் திருப்பியனுப்பப்படல் மற்றும் நிதியூட்டல் இவற்றிற்கு உதவி செய்யும்.

குடியிருப்பு அனுமதியில்லாத புலம்பெயர்ந்தோரை பெரிய அளவில் திருப்பி அனுப்புவதற்கு, பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள், ஏற்கனவே சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து திருப்பியனுப்பியுள்ளன. இத்தகைய விமானத் திருப்பியனுப்புதல்கள், இனி மறுமதிப்பீடு செய்யப்பட்டு, குறைவான செலவில் ஏற்பாடு செய்யப்படும்.

சிறப்பு விமானங்கள் மூலம் அதிகமாகத் திருப்பியனுப்புவதற்கு முக்கிய காரணம், இத்திருப்பியனுப்புதலைச் சாதாரணப் பயணியர் விமானங்கள் மூலம் செய்யும்பொழுது ஏற்படும் எதிர்ப்புக்களும், விளம்பரங்களும் தவிர்க்கப் படமுடியும் என்பதேயாகும். விமானப்பயணிகளும், செலுத்தும் குழுக்களும், போலீசார் அனுப்பும்போது மேற்கொள்ளும் வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை அடுத்து, முன்பு பல திருப்பியனுப்புதல்கள் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.

ஜேர்மனியிலிருந்தும், மற்ற பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும், புலம் பெயர்ந்தோரை திருப்பியனுப்பம் பொழுது, பல அபாயகரமான நிகழ்ச்சிகள் நடத்துள்ளன. ஆனாலும், உள்துறை மந்திரிகள், இந்த மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான வழக்கத்தை நிறுத்துவதற்கு தயாராக இல்லை. மாறாக, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தாத, பொதுவான தன்மை படைத்த பல குறைந்த அளவு தரங்களின் பட்டியல் ஒன்றை நிர்ணயித்துள்ளனர்.

பரிந்துரைகள் கூறுகின்றன: "பலாத்காரத்தைப் பயன்படுத்துவது காரணத்தோடு ஏற்கும் தரமுடையதாக இருக்கவேண்டும்." மற்றொரு குறிப்பு, கடந்த சில ஆண்டுகளில் மூச்சுத்திணறலினால் ஏற்பட்டுள்ள இறப்புக்களைப் பற்றிக் கவனம் செலுத்தி, இத்தகைய கட்டாய நாடுகடத்தல் நடவடிக்கைகள் "வெளியே அனுப்பப்படுபவர் சிரமமின்றி மூச்சு விடத் தக்கவகையில்" கண்டிப்பாக அமையவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. அவநம்பிக்கையூட்டும் முறையில், அறிக்கை தொடருகிறது; "நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த முயலும் நபரின் கெளரவத்தையும் உடல் சுதந்திரமும் காக்கும் வகையில், அவரை நகரமுடியாமல் செய்யும் முயற்சிகளைக் கொள்ளுவது சாத்தியமானதே."

இந்த தனிவிமானங்களில் நாடுகடத்தப்படுவோர், அவர்களுக்கென தனியான "காப்பாளர்களைக்" கொண்டிருப்பர். இத்தகைய காப்பாளர்கள் போலீஸ் அதிகாரிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. புதிய வழிகாட்டி விதிமுறைகளின்படி, தனியார்துறைப் பாதுகாவலர்கள் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான, நாடுகடத்தப்படுவோர் சிறப்பு விமானவழி திருப்பியனுப்புதல்கள், பொதுப்பார்வைக்கு அப்பால் நடைபெறுமாதலால், அவர்கள் நடத்தப்படும் முறை கூடுதலான ஆபத்துக்களைக் கொண்டு, அபாயகரமான விளைவுகளை அதிகரிக்கக் கூடியவை என்று ஒருவர் கட்டாயம் கருத இடமுண்டு.

நவம்பர் 7ம் தேதி, Süddeutschen Zeitung -ல் வந்துள்ள அறிக்கையின்படி, ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஓட்டோ ஷிலி (சமூக ஜனநாயகக் கட்சி), தஞ்சம் கோரும் உரிமைகளை இன்னும் கடுமையான தாக்குதல்களுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவருகிறது. இச்செய்தித்தாளின்படி, நவம்பர் தொடக்கத்தில், பிரஸ்ஸல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உள்துறை, நீதி மந்திரிகள் மாநாட்டில், ஐரோப்பா தவிர மற்ற நாடுகள் "பாதுகாப்பான மூன்றாம் நாடுகள்" தானா என்பதைப் பற்றிய மதிப்பீட்டிற்கும் உட்படுத்தப்படவேண்டுமென ஷிலி, வலியுறுத்தியதாகத் தெரிவிக்கிறது.

"பாதுகாப்பான மூன்றாம் உலக நாடுகள்" என்ற பெயர்சூட்டுதல் 1993ல், ஜேர்மன் சட்டத்திருத்தங்களில் பெரிய மாற்றங்கள் கொண்டுவந்தபொழுது, மரபு வழியிலான தஞ்சம் கோரும் உரிமையை அகற்றிவிட்டபோது, நடைமுறைக்கு வந்தது. இதன்படி, ஜேர்மன் அதிகாரிகள் "பாதுகாப்புடையவை" எனக்கருதும் நாட்டிற்கு, ஒரு தஞ்சம் கோருவோரை, விசாரணை ஏதுமில்லாமல், தனிநபரிடம் முறையான தஞ்சம் கோரும் சான்றுகள் இருந்தாலும், திருப்பிவைக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளனர்.

ஜெனிவா அகதிகள் பொது இணக்க உடன்பாடு அல்லது ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்பாடு, இவற்றில் கையெழுத்திடாத அல்லது இவற்றிற்கு உட்படவேண்டிய கட்டாயமில்லாத நாடுகளுக்கு, இப்பொழுதுள்ள முறைகளை விஸ்தரிக்க என ஷிலி விரும்புகிறார். "பாதுகாப்பான மூன்றாம் நாடுகள்" எனக்கூறப்படுபவை, அகதிகளைத் தஞ்சம் கோர அனுமதித்தாலும், அது பொருந்தும் என ஏற்கவேண்டிய தேவையில்லை என்ற கருத்தையும் அவர் கூறுகிறார்.

ஏனைய உள்துறை மற்றும் நீதித்துறை மந்திரிகளின் ஆட்சேபணைகள் கிளம்பியதை எதிர்கொள்கையில், ஷிலி தன்னுடைய திட்டத்தை திருப்பப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், இவருடைய நடவடிக்கைகள் முற்றிலும் இவர் சிலகாலமாக பின்பற்றிவந்திருக்கும் முறையுடன் ஒத்ததாக உள்ளன -இந்தப் போக்கு மற்ற சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும், குறிப்பாக இங்கிலாந்தாலும், ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது.

1993ம் ஆண்டு திருத்தப்பட்ட தஞ்சம் கோருவோர் சட்டத்தின்படி, ஜேர்மனி தன் நாட்டோடு இணைந்திருக்கும் எல்லைகள் உடைய அண்டை நாடுகளை, பாதுகாப்பான மூன்றாம் நாடுகள் என்று அறிவித்துள்ளது. இதையொட்டி பல புகலிடம் நாடுவோருக்கு ஆச்சரியமான விளைவுகள் ஏற்பட்டன. Süddeutschen Zeitung ல் நவம்பர் 7-ம் தேதி வந்த ஒரு கருத்துரையில், செய்தியாளர் Heribert Prantl ஜேர்மனியிலுள்ள அதிகாரத்துவத்தின் தர்க்கம் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதனைப்பற்றி எழுதுகிறார்:

"போலந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு இவற்றிலிருந்து ஜேர்மனிக்குப் புகலிடம் கோரிவருபவர்கள், தான் அரசியல் அடக்குமுறையினால் அந்த நாட்டில் பட்டுள்ள கஷ்டங்கள் பற்றி முகம் திணறும் வரை பேசலாம்; தன்னுடைய உடம்பில் உள்ள சித்திரவதைத் தழும்புகளையும் காட்டலாம், தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள மரணதண்டனை அறிவிப்பின் நகலையும் காட்டலாம் --இவை அனைத்தும் பொருட்படுத்தப்படமாட்டா. ஜேர்மனிக்கு அவர் வந்து சேர்ந்த வழி ஒன்றுதான் கணக்கிலெடுக்கப்படும். அந்த அடிப்படையில்தான் உள்ளே அவர் அனுமதிக்கப்படுவார், அல்லது உடனே திருப்பி அனுப்பப்படுவார்.

"புதிய ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டி விதிகளின்படி, ஜேர்மனியின் புகலிட சட்ட மையக்கருத்தின்படி அமைந்துள்ள வழிகாட்டி விதிகள், முன்பிருந்த தொடக்க புகலிட நடவடிக்கைகளின் குறைந்தபட்ச தரங்களை ஏற்பது மட்டுமின்றி, அவற்றை விடக் கடுமையாவும் இருக்கும் என ஷிலி கூறுகிறார். இந்தப் பார்வையில், உலகில் எந்த நாடும் பாதுகாப்பான மூன்றாம் நாடு என அறிவிக்கப்படலாம்."

ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை மந்திரிகள் மாநாட்டின் ஏற்பாடுகளின்போது, பல மனித உரிமைக் குழுக்கள் ஐரோப்பிய ஒன்றிய புகலிடம் கேட்போர்மீது கூடுதலாகத் தீவிர நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

சிலகாலமாகவே, "பாதுகாப்பான மூன்றாம் நாடுகள்" பற்றி விவாதம் இருந்து வருகிறது. தற்போதைய கிழக்கத்திய விரிவாக்கச் சுற்று முடிவடைந்த பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையை ஒட்டிய எல்லா நாடுகளும், ரஷ்யா, பெலாரஸ் 2004ல், மோல்தவியா 2007ல், "பாதுகாப்பான மூன்றாம் நாடுகள்" என்று அறிவிக்கப்படலாம். கூட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் "பாதுகாப்பான மூன்றாம் நாடுகள்" பட்டியலைத் தயாரிக்க முடியவில்லை என்றால், ஒவ்வொரு நாடும் தானே ஒரு பட்டியலைத் தயாரித்து, அரசியல் அடக்குமுறையிலிருந்து தப்பி ஓடி வரவேண்டும் என்பவர்களுடைய தலைவிதியைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல், அங்கிருந்து வரும் தஞ்சம் கோருவோரைத் திருப்பி அனுப்பிவிட முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved