ஜெமா இஸ்லாமியாவின் அரசியல் தோற்றமும், அதன்
கண்ணோட்டமும்
பகுதி 1
By Peter Symonds
12 November 2003
Back to screen version
"ஜெமா இஸ்லாமியா என்றால் என்ன?" என்ற கேள்விக்கு, 18 மாதங்கள் முன்புவரை
பலரும் பதில் கூறியிருக்கமுடியாது. ஆனால், 2002 அக்டோபர் பாலி (Bali)
குண்டுவீச்சுக்களுக்கு பின்னர், "ஜெமா இஸ்லாமியா" என்பது, எல்லா வீடுகளிலும்கூட இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும், பயங்கரவாத
வன்முறைக்கும் மிகவும் தெரிந்த சாதாரண பெயராகப் போய்விட்டது. இதன் இழிவான தன்மை நன்கு அறியப்பட்டுவிட்டாலும்கூட,
இவ் அமைப்பைப்பற்றி உண்மையான விஷயங்கள் எழுதப்படவில்லை.
கடந்த ஆண்டில், அமெரிக்க தலைமையிலான ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கும், புஷ் நிர்வாகத்தின்
"பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கும்" நியாயம் கற்பிக்க ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஜோன் ஹோவார்ட் ஜெமா
இஸ்லாமியா உடைய நடவடிக்கைகளை, ஒரு சந்தர்ப்பமாக்கிக்கொண்டார். தென்பசிபிக் பகுதியில், ஆஸ்திரேலியா நவ-காலனித்துவ
விருப்பங்களைப் புதுப்பிக்கவும், ஹோவார்ட் அரசாங்கம், உள்நாட்டிற்குள், ஜனநாயக உரிமைகளையும், குடியுரிமைகளையும்
தாக்குவதற்கும் ஜெமா இஸ்லாமியா ஒரு சாட்டாகப் போய்விட்டது.
ஆஸ்திரேலிய செய்தி ஊடகம், குறிப்பாக, முர்டோக்கின் வெளியீடுகள், பாலி
தாக்குதலுக்குப் பின்னர் பயம், சந்தேகம், உறுதியற்றதன்மை என்ற சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டுள்ளன.
விசாரணைகள், வழக்குகள் பற்றிய செய்திகள், மிகப் பரபரப்புடனும், சிலசமயம் வெளிப்படையான இனவெறி உடையதாகவும்
வெளியிடப்படுகின்றன. புதிய "பயங்கரவாத'' சதிகள் அச்சுறுத்தல்கள் பற்றி எச்சரிக்கைகள் தொடர்ந்து வருகின்றன;
இவை பெரும்பாலும் உறுதிசெய்யப்படாத மற்றும் பெயரிடாத போலீஸ், உளவுத்துறை மூலங்களாக உள்ளன.
இந்தோனேசியாவில், வேறுவிதமான சற்று குழப்பமானவகையில் ஜெமா இஸ்லாமியா பற்றிய
கருத்து நிலவுகிறது. அங்கு பரந்த அளவில், அமெரிக்க தலைமையிலான ஆப்கானிஸ்தான், ஈராக் போர்களுக்கு முற்றிலும்
உண்மையான எதிர்ப்பு உள்ளது. மேலும், பல மக்கள் ஜெமா இஸ்லாமியாவுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில்
இந்தோனேசிய இராணுவம் வாஷிங்டன், கான்பெராவின் வெளிப்படையான ஆதரவில் அடிப்படை ஜனநாயக உரிமைகள்
இல்லாதொழித்து மீண்டும் தன்னுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி ஆழ்ந்த கவலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இதன்விளைவாக, சாதாரண இந்தோனேசிய மக்கள், அமெரிக்க, ஆஸ்திரேலிய நோக்கங்கள்
பற்றி ஆழ்ந்த சந்தேகத்தைக் கொண்டுள்ளதோடு, ஜெமா இஸ்லாமியா பற்றிக் கூறப்படுபவற்றையும், பாலி குண்டுவீச்சுக்கள்
மற்றும் ஏனைய பயங்கரவாதக் கொடுமைகள் பற்றிய கருத்துக்களையும் நம்பத் தயாராக இல்லை. ஜெமா இஸ்லாமியா
அமைப்பு, அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் ஒரு வகுக்கப்பட்ட அரசியல் திட்டம் பற்றி எதுவும் வெளியிடுவதில்லை. இதனால்
மக்கள் மத்தியில் அது பற்றிய இத்தகைய தெளிவற்ற தன்மையுள்ளது.
"இஸ்லாமியச் சமூகம்" என்று பொருள்படும் "ஜெமா இஸ்லாமியா", பெயர்கூட விவாதத்தை
உருவாக்கியுள்ளது. ஜெமா இஸ்லாமியா மீதான தாக்குதல்கள், பெரும்பாலான இந்தோனேசிய மக்கள்மீது மேற்கொள்ளப்படும்
தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்படலாம். ஜெமா இஸ்லாமியாவை பாலி நடப்புக்களுக்குக் குற்றம் கூறுவது, பலருக்கு
அமெரிக்காவில் ஓகலகோமா மாநில குண்டு வீச்சிற்கு "கிறிஸ்தவ சமூகம்" முழுவதையும், இந்தியாவில் அயோத்தி மசூதி
இடிப்பிற்கு "இந்து சமூகம்" முழுவதையும் குற்றஞ்சாட்டுவது போன்றே தோன்றும். அதனால்தான், சர்வதேச நெருக்கடிக்
குழுவின் (International Crisis Group -ICG)
ஆய்வாளர், சிட்னி ஜோன்ஸ், "இந்தோனேசிய மக்களில் பாதிக்கும் குறைவானவர்கள்தான் ஜெமா இஸ்லாமியா இருக்கிறது
என்பதைக்கூட நம்பத் தயாராக உள்ளனர்" எனத் தெரிவிக்கிறார்.
ஆனால் ஜெமா இஸ்லாமியா உண்மையிலேயே இருக்கிறது. அப்துல்லா சுங்க்கர் (Abdullah
Sungkar), அபுபேகர் பஷீர் (Abu
Bakar) இருவரும் மலேசியாவில் புலம்பெயர்ந்திருந்தபோது,
1990களில் முறையாக ஜெமா இஸ்லாமியா நிறுவப்பட்டது என்பதற்கு பல மூலங்களிலிருந்தும் நிறைய சான்றுகள் இருக்கின்றன.
இந்தோனேசியாவிலுள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் சிலவற்றுடன், குறிப்பாக மத்திய ஜாவாவிலுள்ள
சோலோவிற்கு (Solo)
அருகில் பஷீரின் என்க்ரூகி (Ngruki)
கிராமப் பள்ளியுடன் நெருங்கிய தொடர்பு உடையது. எனவேதான் ஜெமா இஸ்லாமியா
சில சமயம், என்க்ரூகி இணைய தளம் என்று அழைக்கப்படுகிறது.
அரசியல் நோக்கங்களையும், சட்டரீதியான குறைகளையும் கொண்டிருந்த போதிலும்கூட,
பாலி நீதிமன்ற வழக்குகள் ஜெமா இஸ்லாமியாவின் பயங்கரவாதக் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் நிச்சயமாகத் தொடர்பு
கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இதுவரை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நான்கு நபர்களும் இந்த அமைப்புடன்
நீண்டகாலத் தொடர்புகள் கொண்டிருந்தனர். ஒருவர் அரசாங்க சாட்சியாக மாறி, தன்னுடைய தொடர்பை ஒப்புக்கொண்டு
ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மற்ற மூன்று நபர்களும் தாங்கள் முதலில் கொடுத்திருந்த வாக்குமூலங்களிலுருந்து
பின்வாங்கிய போதிலும்கூட, குண்டுவீச்சில் ஓரளவு பங்கு கொண்டதை ஒப்புக்கொண்டு, வெளிப்படையாக அக்கொடூரமான
விளைவுகளைப் பாராட்டியுள்ளனர்.
ஜெமா இஸ்லாமியா இன் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றிய பெரும்பாலான
குற்றச்சாட்டுக்கள் நீதிமன்ற சோதனை முறைகளுக்கு உட்பட்டதில்லை. இவை, 200 ''ஜெமா இஸ்லாமியா சந்தேகத்திற்கு
உரியவர்கள் என்று" மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், மற்றும் சில நாடுகளில்
சிறைபிடிக்கப்பட்டவர்களை ஆதாரமாக உடையவை ஆகும். இவர்களில் பலரும் மாதக்கணக்கில், சிலர் வருடக்கணக்கிலும்,
அவர்களுடைய அடிப்படை ஜனநாயக, சட்டபூர்வ, உரிமைகள் ஆணவத்துடன் மீறப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைத்து
வைக்கப்பட்டுள்ளனர். சிலபேரை பொறுத்தவரையில், அவர்களிடமிருந்து மனோரீதியாகவும், உடலளவிலும் சித்திரவதைக்கு
உட்படுத்தப்பட்ட பின்னரே, தகவல்கள் பெறப்பட்டன. இதன் விளைவாக, தகவல்கள் பெரும்பாலானவை போலியானவை
மட்டுமல்லாது பல நீதிமன்றங்களிலும் ஏற்கத்தகுந்தவை அல்ல எனத் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.
ஜெமா இஸ்லாமியா உடைய பயங்கரவாத முறைகள் பற்றி செய்தி ஊடகத்தின் இடைவிடாத
கவனம், முக்கியமான பிரச்சினைகளை குழப்பத்தில்தான் தள்ள உதவியுள்ளன. வரலாற்று ரீதியாக பரந்த அளவில்
மாறுபட்டுள்ள தன்மைகளையுடைய அமைப்புக்களும் குழுக்களும், பெரிதும் வேறுபட்ட நோக்கங்களுக்காக பயங்கரவாத
நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. அவற்றைப் போலவே, ஜெமா இஸ்லாமியா ஒரு திட்டமிட்ட அரசியல் முன்னோக்கை
கொண்டுள்ளது. அதன் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, கண்ணோட்டம் ஆகியவைபற்றி ஆராய்ந்தால்தான் அது ஏன் தோன்றியது,
எந்த நலனுக்கு அது ஆதரவளிக்கிறது, யாரின் ஆதரவை அது வேண்டிநிற்கின்றது என்பவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்.
ஓர் ஆழ்ந்த பிற்போக்கு அரசியல் போக்கு
ஜெமா இஸ்லாமியா உடைய, மறுக்கமுடியாத தத்துவார்த்த தலைவர்களாக முதலில்
பஷீரும், 1999ல் அவர் இறப்பதற்குமுன் வரை சுங்கரும் இருந்துள்ளனர். முறையான அரசியல் ஆவணங்களை வெளியிடவில்லை
என்றாலும், இருவரும் பல பத்தாண்டுகள், இஸ்லாமின் "விரோதிகள்" மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்துவதை நியாயப்படுத்தும்,
பிற்போக்கான அரசியல் அடிப்படைவாதக் கண்ணோட்டத்தைப் பெரிதாகச் சித்திரித்திருந்தனர்.
உடனடியாக தெரியவருவது என்னவெனில், ஜெமா இஸ்லாமியாவுக்கும் தன்னுடைய ஜென்மவிரோதி
என அது அறிவித்துள்ள, தற்போதைய அமெரிக்க நிர்வாகத்திற்கும் இடையே உள்ள சிந்தனாவாத போக்கிற்கும் இடையிலான
சமாந்தரத் தன்மைகளாகும். வெளிப்படையான வார்த்தை வளங்களை கணக்கிலெடுத்துக் கொண்டால் தமது ''இஸ்லாமை
பாதுகாப்பதை'' நியாயப்படுத்த பஷீரும், சுங்கரும் பிரயோகிக்கும் கவனமற்ற, பிற்போக்குவாத வார்த்தைகள், வெள்ளை
மாளிகையில் புஷ்ஷும் அவருடைய கூட்டத்தினரும் பயன்படுத்தும் சொற்களையே வியத்தகு அளவில் ஒத்திருக்கின்றன.
"நாகரிகத்தை", "தீமையின் அச்சிலிருந்து" பாதுகாப்பது என்ற பெயரில், புஷ்
"முன்கூட்டிய தாக்குதல்கள்" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் சட்டவிரோதமான இராணுவ
நடவடிக்கைகளை ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான, குற்றமற்ற சாதாரண குடிமக்கள் உயிரிழப்பிற்குக் காரணமாய்
இருந்தார். இதேபோல், பஷீரும், சுங்கரும் சமரசம் செய்யப்படமுடியாத அளவிற்கு "நன்மைக்கும்", " தீமைக்கும்"
அதாவது, "அல்லாவைப் பின்பற்றுபவர்களுக்கும்", "சாத்தானைப் பின்பற்றுபவர்களுக்கும்" இடையேயான தீர்க்கமுடியாத
முரண்பாடுகளை பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்கள் பாதுகாக்கப்படுவதற்காக, "ஜிகாத்" (சொற்பொருள்படி,
போராட்டம்) மேற்கொள்ளுவதை நியாயப்படுத்தியுள்ளனர்.
எல்லா இடத்திலும் உள்ள மதவெறியர்களைப்போலவை, ஜெமா இஸ்லாமியாவும் ஒவ்வொரு
சமூக பிரச்சனைக்கும் ஒழுக்கமற்ற தன்மைதான் காரணம் என்று கூறுகிறது. வேலையின்மை, வறுமை, பணவீக்கம், உயர்ந்த
வரிகள், விவசாயத்தில் விளைச்சல்குறைவு, பொதுவான சமூக நெருக்கடிகள் அனைத்திற்கும் காரணமாக, நெறியற்ற பாலியல்
உணர்வுகள், குடிப்பழக்கம், புலன் இன்பவாழ்க்கை, பொருந்தாத ஆடைகள், கடினமாக உழைப்பு இல்லாதது, மெக்கா
திசையை நோக்கி அன்றாடம் ஐந்து முறை தொழாமல் இருத்தல் ஆகியவை கூறப்படுகின்றன. அப்படிப்பட்ட பட்டியல், புஷ்
நிர்வாகத்தின் சமூக அடித்தளமான அமெரிக்க வலதுசாரி கிறிஸ்தவ அடிப்படையாளர்கள் கூட்டத்திலும், அதேபோன்றே
பொருத்தமாகக் கொள்ளப்படும். இச்சமூக பிரச்சனைகளுக்கான ஜெமா இஸ்லாமியாவின் தீர்வான ஷகீரா (இஸ்லாமிய)
சட்டம் மூலம் காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளை வழங்குவது, அமெரிக்காவின் வலதுசாரிகள் சட்டம் ஒழுங்கு,
''குடும்ப மதிப்பு'', அரச மரண தண்டனை போன்றவற்றை கோருவது போன்றதே.
நியூசிலாந்தின் கல்வியாளரான ரிம் பெஹ்ரெண்ட் (Tim
Behrend) பஷீரின் உபதேசங்களைச் சுருக்கி கூறுவதாவது; "இஸ்லாமிய
அறம், நாகரிக மேம்பாடு, சர்வதேச அரசியலுக்கு இனப்பூச்சு பூசும் கொள்கை போன்றவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால்,
பஷீருடைய உபதேசங்கள் மிகமுக்கியமான முறையில் அறநெறிப்போக்கை உடையவை.... பஷீரைப் பொறுத்தவரை தற்போதைய
சுற்றுசூழல் மிகவும் சகிப்புதன்மையானது. அவர் kafir
கொள்கைகளை உருவாக்கும் வகையில், மக்கள் ஜனநாயகம்,
வட்டி அதிகம் உடைய வங்கிமுறை, பாலியல் அடிப்படையில் சமூகத்தில் சமத்துவம், பொருளாதார நலன்களுக்காக தர்மமில்லாத
(பண்பாட்டளவிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத) நடத்தை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [Reading
Past the Myth: The Public Teachings of Abu bakar Bashir, February 2003, p.7]
1999ல் வெளிநாட்டு வாழ்க்கையிலிருந்து இந்தோனேசியாவிற்கு திரும்பிய பின்னர், பஷீரும்,
சுங்கரும் ஒரு கருத்துக்கட்டுரையை, "இந்தோனேசியாவின் சமீபத்திய நெருக்கடி: காரணங்களும், விடைகளும்" என்ற பெயரில்
வெளியிட்டனர். யூத எதிர்ப்புவாத, இன உணர்வுத்தன்மை ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ள இக்கருத்தாய்வு,"நெறிபிறழ்ந்த
டச்சுக்காரர்கள்", "தீய இயல்புடைய ஜப்பானியர்கள்", "நெறிபிறழ்ந்த சீனர்கள், கிறிஸ்தவர்கள்" ஆகியோருக்கு எதிரானதாகவும்,
இந்தோனேசியா கடந்த நூற்றாண்டில் அடக்குமுறைக்கு உட்பட்டதற்குக் காரணம் இஸ்லாமியமுறை அரசாங்கம் இல்லாததால்
தான் எனக்கூறப்படுகிறது. ஆசியப் பொருளாதார நெருக்கடியிலுருந்து விளைந்த கெடுதல்கள் அனைத்துமே, அல்லாவின்
மாட்சிமையை, நாம் அலட்சியப்படுத்துவதால் தோன்றும் ஒருவிதமான சமயஞ்சார்ந்த தண்டனைகள்தான்" எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பொழுதுள்ள அரசியல் நிலைப்பாட்டோடு ஒத்துப்போவது என்பது இயலாத காரியம். முஸ்லிம்கள் செய்யக்கூடியது இரண்டுதான்:
இஸ்லாமிய முறையில் ஷாரியத்தைச் செயல்படுத்தி வாழ்வது அல்லது அதை அடைவதற்காக உயிரையும் அர்ப்பணிப்பது என
கூறினர்.
அத்தகைய கருத்துக்கள் பழைமையானவை, வினோதமானவை என்பது மட்டுமல்லாமல்,
அறிவியல்பூர்வமக சொல்லின் பொருளின்படி, பிற்போக்கானது ஆகும். ஜெமா இஸ்லாமியா மத சார்பு அற்ற அரசாங்கமுறைக்கும்,
அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் சமாதானப்படுத்த முடியாத அளவு விரோதப்போக்கை கொண்டுள்ளது. அதன் இலக்கு,
பழைய சமயம் சார்ந்த கற்பனை உலகில், பிரபுத்துவமுறைச் சமுதாய உறவுகளான எஜமானுக்கும் வேலைக்காரனுக்கும்,
சமயகுருவுக்கும் தொழுகைக்கூட்டத்திற்கும், கணவனுக்கும் மனைவிக்கும் என்ற உறுதிச்செய்யப்பட்ட, முன்னரே முடிவுசெய்யப்பட்டுவிட்ட,
எதிர்க்கமுடியாத சமூக நெறிகளின் தொகுப்பிற்குட்பட்டு இருக்கும். இது சமயநெறிகளால் நியாயப்படுத்தப்பட்டு, மீறப்பட்டால்,
மிகக்கடுமையான வருந்தவைக்கும் தண்டனைகளைக் கொடுக்கும்.
எவ்விதத்திலும், ஜெமா இஸ்லாமியா தொழிலாள வர்க்கத்தையோ, ஒடுக்கப்பட்ட மக்களின்
நலன்களையோ பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை. இதன் வேலைதிட்டங்களும், முன்னோக்குகளும், இந்தோனேசிய முதலாளித்துவ
வர்க்கத்தின் ஒரு பின்தங்கிய தட்டின் பொருளாதார, சமூக அபிலாசைகளை வெளிப்படுதும் தன்மையைக் கொண்டு, தனக்கு
மறுக்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளையும், இலாபங்களையும் மீட்க இஸ்லாமைப் பயனுடைய கருவியாக கருதும் அமைப்பு
ஆகும். அதே நேரத்தில், வகுப்புவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிட்டு, உழைக்கும் மக்களை அறியாமையிலும்,
பிரிவினைகளிலும் ஆழ்த்திவைத்து கீழ்மட்டத்திலிருந்து எந்த சவாலும் வராமல் பார்த்துக்கொள்ளும் கருத்தையும் கொண்டிருக்கிறது.
தொடரும்.......
|