World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Massive turnout at demonstration against Bush and Iraq war

பிரிட்டன்: புஷ் மற்றும் ஈராக் போருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்பு

By Mike Ingram
21 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

லண்டனில் நவம்பர் 20 ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ்.W.புஷ்ஷினுடைய வரவைக் கண்டித்து நடைபெற்ற கண்டனப் பேரணியில் 150,000 த்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இந்தக் கண்டனப் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் 100,000 மக்கள்தான் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தபோதும், மாறாக அதிகமான மக்கள் ஆர்வத்துடன் இப்பேரணியில் பங்கு எடுத்துக் கொண்டனர். நவம்பர் 20 ந் தேதி அன்று போலீஸாரும், செய்தி ஊடகத்துறையினரும் புஷ்ஷின் வருகைக்கு நிலவும் எதிர்ப்பின் அளவைக் குறைத்து மதிப்பீடு செய்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இருப்பினும், போலீசார் குறைந்தபட்சம் 100,000 பேர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர் என்று தயக்கத்துடன் ஒப்புக்கொள்ளத் தள்ளப்பட்டனர்.

மத்திய லண்டன் பகுதியில் உள்ள மாலேட் தெருவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெஸ்ட்மினிஸ்டர் பகுதிக்கு செல்வதற்காக அணிதிரண்டு கொண்டிருந்தனர். இப்படி மாலேட் தெருவில் திரண்டவர்கள் பல கிலோ மீட்டர்கள் தூரம் வரை பின்னோக்கி ஹுஸ்டன் ரயில்வே நிலையம் வரை திரண்டு கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், நாடாளுமன்றம் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பகுதிக்கு அணிவகுத்து வந்த நேரத்தில் கூட பல்லாயிரக்கணக்கான மக்கள் மேலும், மேலும் அந்தத் தெருவில் அதிகாரப்பூர்வமான கண்டனப் பேரணி பதாகையின் கீழ் திரண்டு கொண்டிருந்தனர்.

செய்தி ஊடகங்கள், மிகக் குறைந்த அளவிற்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கு எடுத்துக் கொள்வார்கள் என்று செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் தொடக்கத்தில் போலீசார் ஆர்ப்பாட்டங்களில் 30,000 த்திற்கு குறைந்தவர்கள் தான் இடம்பெறுவார்கள் என்று மதிப்பீடு செய்திருந்தனர். CNN வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியைப்பற்றி செய்தி சேகரிப்பதில் கவலைப்பட போவதில்லை என்றும், புஷ்ஷிற்கும், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் எழுந்துள்ள எதிர்ப்பானது மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சியானது லண்டனில் அலுவலக வேலை நடைபெறும் நாளின்போது மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டமாக அமைந்துவிட்டது. தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள டிராப்பால்கர் (Trafalgar) சதுக்கம் நிரம்பி வழிகின்ற அளவிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். BBC யின் (Six O'Clock News) செய்தியில் ''மக்கள் சமுத்திரம்'' என்றும் ''மகத்தான'' பேரணி என்றும் இதனை வர்ணித்தார்கள்.

கண்டனப் பேரணியில் வந்துகொண்டிருந்த முதல் அணியினர் சதுக்கத்தை அடைந்தபோது, அதற்கு முன்பே அங்கு திரண்டிருந்த, அலுவலகங்களில் இருந்து நேரடியாக டிராபால்கர் சதுக்கத்திற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களை வரவேற்றனர். அன்றைய தினம் அலுவலகங்கள் மூடப்பட்ட பின்னர் கண்டனப் பேரணி மீண்டும் தொடங்கிவிட்டது என்று சொல்லுகின்ற அளவிற்கு லண்டன் தொழிலாளர்கள் திரண்டு வந்து கண்டனப் பேரணியில் கலந்துகொண்டனர். டிராபால்கர் சதுக்கத்தில் பேரணி அதிகாரப்பூர்வமாக வந்தடைந்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் கூட, ஊர்வலம் தொடங்கிய முனையிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கொண்டிருந்தனர்.

புஷ்ஷூம், பிரதமர் டோனி பிளேயரும் இணைந்து நடத்திய பத்திரிகை மாநாட்டிற்கு ஒரு சில மணி நேரத்திற்கு பின்பு இப்பேரணி தொடங்கியது. இந்த மாநாட்டில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் ஈராக்கில் எடுத்த நடவடிக்கைக்கு சட்டப்பூர்வமாக நியாயம் கற்பிக்க முயன்றதுடன், ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' நியாயம் தான் என்று இஸ்தான்புல் சம்பவங்கள் நிரூபிப்பதாகவும் குறிப்பிட்டனர். ஆனால், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நோக்கில் அமைந்த வெளிநாட்டுக் கொள்கைதான் பயங்கரவாத அச்சுறுத்தலை தூண்டிவிடுகிறதே தவிர, அதனைக் குறைப்பதாக இல்லை என்று இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட பலர் கருதினார்கள்.

அணிவகுப்பு நடைபெற்ற வழித்தடத்தில் 5,000 போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டிருந்ததுடன், தலைநகரின் பல பகுதிகளில் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு 40 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அமைதிக்கு ஊறு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தினாலும், அவர்கள் பற்றிய வேறு விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. அன்றைய தினம் காலையில் ஸ்கொட்லாந்து யார்ட் போலீசார் ஐரோப்பாவிலிருந்து வந்துள்ள 1000 த்திற்கும் மேற்பட்ட அராஜகவாதிகள், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டு நாச வேலைகளை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை செய்தனர். ஆனால் எந்தவிதமான வன்முறைச் சம்பவமும் நடைபெறாமல் பேரணி நடைபெற்றதால், அவர்களது கூற்று தோல்வியடைந்தது.

லண்டன் நகரம் தனது வெறுப்பை புஷ்ஷிற்கும், பிளேயருக்கும் தெளிவாக எடுத்துக்காட்டிவிட்டது. தொழிலாளர்கள் அலுவலகங்களில் இருந்து திரண்டுவந்து பேரணியில் கலந்துகொண்டவர்களை வழி நெடுகிலும் உற்சாகமாக வரவேற்றனர். எடின்பேர்க் மற்றும் மான்செஸ்டர் ஆகிய நகரங்களிலும் தனித்தனியாக கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. லண்டனுக்கு பயணம் செய்ய முடியாத நிலையில் இருந்தவர்கள் இந்த நகரங்களில் நடைபெற்ற கண்டனப் பேரணிகளில் பங்கு எடுத்துக்கொண்டனர்.

அத்துடன், தலைநகருக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் கணிசமான அளவிற்கு லண்டன் பேரணியில் கலந்துகொண்டதுடன், அதில் பல்வேறுபட்ட தரப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். பெருமளவு கல்லூரி மாணவர்கள் உட்பட எல்லா வயதினரும், சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரும் இப்பேரணியில் இடம்பெற்றனர்.

ஈராக்கிலிருந்து அனைத்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், போர்க் குற்றங்கள் புரிந்ததாக புஷ்ஷைக் கண்டித்தும் அமெரிக்காவில் 2000 ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை குடியரசுக் கட்சி சூறையாடிவிட்டதாகவும், பல்வேறு வகையான கண்டன முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பொதுமக்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன் அமெரிக்காவில் இரண்டாவது ஜனநாயகப் புரட்சி நடைபெற வேண்டும் என்றும் சிலர் முழக்கம் எழுப்பினர். "1776 ல் நடைபெற்ற போர் இதற்காகவா!" என்று ஒரு பதாகையில் முழக்கம் எழுதப்பட்டிருந்தது.

பாக்தாத்தில் அமெரிக்க ஆதரவாளர்களான ஈராக் தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்கள் சதாம் ஹுசேனின் சிலையை சிதைத்ததை கேலி செய்யும் வகையில், ஜோர்ஜ் புஷ்ஷின் மிகப் பிரம்மாண்டமான உருவப் பொம்மையை சிதைத்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பிய கைதட்டலும், முழக்கமும் அவர்கள் தலைக்கு மேல் பறந்த ஹெலிகொப்டர் எழுப்பிய ஒலியையே மறைத்துவிட்டது.

ஆறாவது வகுப்பில் படிக்கின்ற மாணவர்கள் தெற்கு இங்கிலாந்து டார்சட் பகுதியிலிருந்து ஒரு குழுவாக ஊர்வலத்தில் வந்து கலந்துகொண்டனர். அவர்கள் ஏந்தி வந்த ஒரு பதாகையில் ''ஜோர்ஜ் புஷ் மக்கள் செல்வாக்கு இல்லாதவர். தார்மீக ஒழுக்கம் இல்லாதவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர். அவருக்கு வரவேற்பு இல்லை'' என்ற முழக்கம் அடங்கியிருந்தது.

உலக சோசலிச வலைத்தள நிருபர்களுக்கு, CJ மற்றும் மே (CJ and May) ஆகிய மாணவர்கள் பேட்டியளித்தபோது, இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற கண்டனப் பேரணிகளில் தாங்கள் கலந்துகொண்டதாக தெரிவித்தனர். அத்தோடு, ''அவர்கள் (புஷ்ஷூசும், பிளேயரும்) பிறர் சொல்வதை செவிமடுத்து கேட்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவர்கள் இருவருக்கும் ஜனநாயகத்தில் அக்கறை இல்லை'' என்று குறிப்பிட்டனர்.

சாக்ரா (Sahra) என்ற மாணவி பேட்டியளிக்கும்போது ''லண்டன் பாடசாலை மாணவர்களுக்காக நான் வருந்துகின்றேன். அவர்கள் பாடசாலைகளில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டால் அவர்களை பாடசாலைகளிலிருந்து இடை நிறுத்திவிடுவார்கள். அமெரிக்க மக்கள் எந்த அளவிற்கு புஷ்ஷிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ அந்த அளவிற்கு இங்கு நாம் பிளேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஈராக் போருக்கு முன்னர் இந்த இருவருக்கும் இடையில் பிளவு நிலவியது. புஷ் சட்ட விரோதமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அமெரிக்காவில் அடுத்த தேர்தலில் மாற்றம் ஏற்படும். அதற்கு இந்த ஆர்ப்பாட்டம் உதவும்'' என்று குறிப்பிட்டார்.

''டோனி பிளேயர் புஷ்ஷின் நெருங்கிய கூட்டாளியாக செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். புஷ் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டக்கூடாது. அரசியல் நோக்கில் எதிர்காலத்தை கணக்கிட்டு பார்த்தால் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும். எதிர்காலத்தில் அவர்கள், ஒன்றிற்கு இரண்டு முறை சிந்தித்தே செயல்படுவார்கள்'' என்று அந்த மாணவர் மேலும் குறிப்பிட்டார்.

தென்கிழக்கு பகுதியில் உள்ள கென்ட் நகரில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வரும் ஹாலி (Haley) என்பவர் டிராபால்கர் சதுக்கத்திற்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். உரிய நேரத்தில் ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருந்ததால் தனது எதிர்ப்பை உணர்த்துவதற்காக டிராபால்கர் சதுக்கத்திற்கு நேரடியாக வந்திருந்தார். அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டதாவது: ''புஷ் அமெரிக்காவிற்கு திரும்பிச் செல்லவேண்டும். பிளேயர் அவரது லண்டன் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது கொடுமையானது. லண்டன் மக்களது பணம் இதற்காக செலவிடப்படுகிறது. மத்திய கிழக்கு, பாலஸ்தீனம் மற்றும் அமெரிக்காவின் இராணுவக் கொள்கை ஆகியவற்றின் உண்மையான தன்மைகளை நாம் ஆராய வேண்டும். புஷ்ஷோ அல்லது பிளேயரோ தங்களது நாடுகளின் உணர்வுகளை எதிரொலிப்பவர்கள் அல்லர். புஷ் ஒரு மோசடியான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல ஆண்டுகள் அவர் பின்லேடன் குடும்பத்தோடு நண்பராகயிருந்தவர். உலக ஆதிக்கத்தை பண பலத்தால் நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தை பயங்கரவாதம் என்ற முகமூடியால் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்'' என்று குறிப்பிட்டார்.

லண்டனில், கடந்த பிப்ரவரி மாதம் 15 ந் தேதி 2 மில்லியன் மக்கள் கலந்து கொண்ட பேரணியில் பங்கு எடுத்துகொண்ட இளம் பெண்களில் ஒரு குழுவினர் பேட்டியளித்தனர். அப்போது தாங்கள் முற்றிலுமாக போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இப்போதும் ஈராக் தொடர்பான கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் குறிப்பிட்டனர். ''நாங்கள் அமெரிக்காவிற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கைக்கு முற்றிலும் எதிர்ப்பாக உள்ளோம். அவர்கள் மக்களை நடத்துகின்ற முறையினால் உயிர்ச்சேதம் ஏற்படுகின்றது. அவர்களது கூட்டணியை மற்றும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். போரை எதிர்ப்பதால் பயங்கரவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் நாம் ஆதரிக்கிறோம் என்று எடுத்துக்கொள்ள முடியாது'' என்று தெரிவித்தனர்.

''பிளேயர் எங்களுக்கு பொறுப்பானவர். எங்களது பிரதமர், நாங்கள் சிந்திப்பதை அவர் கருத்தில் கொண்டாகவேண்டும். தற்போது பிளேயர் பிரிட்டிஷ் மக்களது கருத்துக்களை பிரதிபலிப்பதாக நான் நினைக்கவில்லை. இப்போது நடக்கின்ற ஆர்ப்பாட்டத்திற்கு சர்வதேச அளவில் தாக்கம் இருக்கின்றது. சாந்தியாகோவிலிருந்து எனது நண்பர் தொலைபேசியில் அழைத்தார். இதே போன்று உலகம் முழுவதிலும் இந்த தாக்கம் நிலவத்தான் செய்யும். இவ்வளவு மகத்தான பேரணியை எதிர்கொள்வது புஷ்ஷிற்கு தலைகுனிவாகத்தான் இருக்கும். இந்த மகத்தான பேரணியில் எல்லா வயதினரும், அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தை அவ்வளவு துச்சமாக அவர்கள் தள்ளிவிட முடியாது. இந்தப் பேரணி சமுதாயத்தின் ஒரு பிரிவினரது கருத்தை மட்டும் எடுத்துக்காட்டவில்லை'' என்று அந்த இளம் பெண்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

''இராணுவவாதத்தையும் போரையும் எதிர்ப்பதற்கு ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம்'' என்ற தலைப்பில் பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கையை உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்கள் துண்டு அறிக்கைகளாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் விநியோகம் செய்தனர். சோசலிச சர்வதேச கொள்கைகள் அடிப்படையில் புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்தியது. இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட பலர் தாங்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் நிரந்தர வாசகர்கள் என்று குறிப்பிட்டனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நிறுவப்பட்ட 50 ஆண்டுகளை குறிக்கும் வகையில் நவம்பர் 30 ந் தேதி லண்டனில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.

Top of page