WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Whither the US dollar?
அமெரிக்க டாலர் எங்கு செல்கிறது?
Nick Beams
25 November 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
அமெரிக்க டாலரின் மதிப்பின் சரிவு, சீராக குறைந்து செல்லுமா அல்லது அமெரிக்க
நிதிச்சந்தைகளிலிருந்து விரைவாக வெளியேறும் நிதிகள் பெரும் நிதி நெருக்கடியைத் தூண்டிவிடுமா? அமெரிக்காவின் கடன்சுமை
புதிய உயர்ந்த நிலைகளுக்குச் சென்று கொண்டிருக்கும்போது, இந்தக் கேள்விதான் உலகெங்கிலும் நிதி மையங்களில்
எழுப்பப்படும் கேள்வியாகும்.
அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் முதலீட்டு நிதிகளின் வரத்து கடந்த 5 ஆண்டுகளில்
மிக குறைந்த மட்டத்திற்கு, ஆகிவிட்டது என்ற செய்தியை அடுத்து, கடந்தவாரம் அமெரிக்க டாலரும் யூரோவிற்கு
எதிராக கிட்டத்தட்ட இதுவரை இல்லாத அளவுக்கு 1.20 டாலர்கள் மிகக்குறைந்து காட்டியது.
அமெரிக்க நடப்புக்கணக்கு பற்றாக்குறை மற்றும் அதன் வெளிநாட்டுக்கடன் இவற்றின்
விவரங்களில், இந்த பய உணர்விற்கான காரணத்தைக் காணமுடியும். இந்த ஆண்டு, நடப்புக்கணக்கின் பற்றாக்குறை
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), 5 சதவிகிதத்திற்கும்
மேலாக உயர்ந்தது; இந்த மட்டத்தை மத்திய ரிசேர்வ் குழு (Federal
Reserve Board) அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஊறு கொடுக்க வாய்ப்பு உள்ள திறன்களுடையது
என அடையாளம் காட்டியுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு, 500 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இந்த தொகை செல்வதால்,
அமெரிக்காவிற்கு முதலீட்டு வரத்து ஒவ்வொரு வணிகம் நடைபெறும் நாளிலும் 2 பில்லியன் டாலர்கள் வந்தால்தான்
திருப்பிக்கொடுக்க வேண்டிய தொகைப் பற்றாக்குறை இடைவெளி சரியாக்கப்படும்; அடுத்த ஆண்டில் இந்தத் தொகை
3 பில்லியன் டாலர்கள் என நாளொன்றிற்கு உயரக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
அதனால்தான், அக்டோபர் 1998ல் நீண்டகால மூலதன நிர்வாகப் பாதுகாப்புநிதி சரிந்ததை
அடுத்து ஏற்பட்ட நெருக்கடியில் காணப்பட்ட மிகக்குறைந்த அளவிற்குப் பின்னர், வெளிநாட்டு நிதிகளின் நிகரவரத்துக்கள்
ஆகஸ்ட் மாதம் 50 பில்லியன் டாலர்களிலிருந்து, செப்டம்பர் மாதம் வெறும் 4 பில்லியன் டாலர்களுக்குக் குறைந்து,
நிதிச் சந்தைகளில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன, பொதுவாக நிதிநிலை தெளிவற்றுப்
போகும்போது உயரும் தங்கவிலையும் ஏழு ஆண்டுகளின் மிக உயர்ந்த அளவான அவுன்ஸ் ஒன்றிற்கு 400 டாலர் என்ற
விலையைக் கண்டது.
திங்கள் கிழமை, Financial
Times இன் ஆசிய செய்திகள் ஆசிரியரான டானியல் போக்ளர், எழுதும் பத்திச்செய்தியில் "மாதத்திலேயே
மிகுந்த பயத்தைக் கொடுக்க கூடிய புள்ளிவிவரம்" என்று நிதி வரத்தின் சரிவைத் தேர்ந்தெடுத்தார். இந்தக்
கீழ்நோக்கு, ஆசிய மத்திய வங்கிகள் தங்கள் நிதியங்களை அமெரிக்காவிலிருந்து வெளியே மாற்றும் முயற்சிகளின்
தொடக்கமாகக்கூட இருக்கலாம் என்ற எச்சரிக்கையையும் அவர் கொடுத்துள்ளார். "கடந்த சில ஆண்டுகளாகவே,
ஆசிய நாடுகள் தங்கள் நாணயமதிப்புக் குறைவிற்காக டாலர்களை வாங்கி, அதை அமெரிக்க வளம் மிகுந்த
சொத்துக்களான, கருவூலப் பத்திரங்களை வாங்குவதில் ஈடுபட்டு வந்தனர். ஆசியா தன்னுடைய பணத்தை, மாற்றுத்திசையில்
செலுத்தினால், டாலர், அமெரிக்கப் பத்திர வருமானங்கள், உண்மையான பொருளாதாரம் இவற்றில் தாக்கம் மிகக்கடுமையாக
இருக்கும்."
அவ்வகையில் நிறையப் பணமே திசைதிருப்புவதற்கு இருக்கிறது. கடைசிப் புள்ளிவிவரங்களின்படி,
கடந்த மாதம் ஆசிய மத்திய வங்கிகளில் அந்நியச்செலாவணி இருப்புக்கள் 1.8 டிரில்லியன் டாலர்கள் ஆகும், அவற்றில்
பெரும்பாலானவை அமெரிக்காவில் வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்தப்பணம் வெளியேறத் தலைப்பட்டால், அமெரிக்க
நிதிச் சந்தைகள் கடுமையாகப் பாதிப்பிற்கு உட்படும். அயல்நாட்டு முதலீட்டாளர்கள் இப்பொழுது அமெரிக்க அரசாங்கத்தின்
வணிகத்திற்கு உட்பட்ட கடனில் 40 சதவீதமும், அமெரிக்கப் பெருநிறுவனப் பத்திரங்களில் 26சதவீதமும், அமெரிக்க
சம பங்குகளில் 13சதவீதமும் சொந்தமாகக் கொண்டுள்ளதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.
மூலதன வரத்துக்களில் ஏற்பட்டுள்ள சரிவைத் தவிர, புஷ் நிர்வாகம், சீனாவிலிருந்து இறக்குமதியாகும்
ஜவுளி, ஆடைகள் ஒதுக்கீட்டு அளவைத் திணிக்க எடுத்துள்ள முடிவும், நிதிச்சந்தையின் மனத்தளர்ச்சிக்குக் காரணம் என்று
கருதப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை Financial
Times ல் வெளியிடப்பட்டுள்ள ஒரு தலையங்கம், இந்த முடிவை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளது.
டாலரின் சரிவு "புறவெளிக்கொப்பான அளவு" சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக யூரோவிற்கெதிராக ஆனது, வரவேற்கத்
தக்கது என்றபோதிலும், "இந்தச் சரிவு குறைவாக, கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டு, பூகோளத் தேவையை மீளவும்
சமன்படுத்த உதவுமா அல்லது சடுதியில் நிகழ்ந்து முலதன முதலீட்டாளரிடையே பெரும் பீதியை ஏற்படுத்துமா என்பது
பெரிய கேள்வியாகிவிட்டது. இதுவரை நடப்புக்கள் பொதுவாக நன்மையையே ஏற்படுத்தி உள்ளபோதிலும்கூட, புஷ்
நிர்வாகம் அழிவிற்குச் செல்லாமல் தடுக்கும் சக்தி சந்தைகளுக்கு உண்டா என்பதை அழுத்தச்-சோதனைக்கு
உட்படுத்துவது போல் தோன்றுகிறது"
சீன ஜவுளி இறக்குமதிக்கு குறைந்த ஒதுக்கீட்டளவு, சர்வதேச வணிகத்தில் அதிக தாக்கத்தை
ஏற்படுத்தாது, ஆனால் சந்தைகள், "அமெரிக்க நிர்வாகத்தின் சண்டைக் கோழி போன்ற அரசியல் முறைக்கு மற்றொரு
சான்றான" இதனால் பீதியடையும்; மேலும், இது "தென்கிழக்கு ஆசியாவை நன்கு அடிப்பது நவம்பர் மாதம் மத்திய
மேற்கில் நல்ல பலன்களைக் கொடுக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலான சர்வதேசப் பொருளாதாரக்
கொள்கையை நடத்துவதுபோல் காணப்படுகிறது" எனக் கட்டுரை தொடர்ந்து எழுதியுள்ளது.
புஷ் நிர்வாகத்தின் இந்தக் காப்பு நடவடிக்கைகள், மத்திய ரிசேர்வ் குழுவின் தலைவர்,
அலன் கிரீன்ஸ்பானிடமிருந்தும் வழமைக்கு மாறான குறைகூறும் கருத்துக்களுக்கு ஆளாகி உள்ளது.
Cato Institute நிதிமாநாட்டில் கடந்தவாரம் தற்பொழுதைய
அமெரிக்க நடப்புக் கணக்குப் பற்றாக்குறைபற்றி உரையாற்றுகையில், கிரீன்ஸ்பான், அமெரிக்க வெளிப்பற்றாக்குறை
2001-ன் பொருளாதாரப் பின்னடைவின் நிலைக்கு குறைந்துவிட்டாலும், பின்னர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP)
5 சதவிகிதமாக இவ்வாண்டு மீண்டுவிட்டது எனக்கூறினார். இந்த விஷயம், இது நிலுவையில் கொடுக்கவேண்டிய கடனை
அதிகமாக்கி, நிதியளிப்பதை அதிகமாக கடினப்படுத்திவிடும் என்பதால், "கூடுதலான கவலையை" கொடுக்கிறது என்று
மேலும் தெரிவித்தார்.
ஆயினும், Morgan Stanley
இன் தலைமைப் பொருளாதார வல்லுனர் Stephen
Roach, சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது போல், "நிதிச் சமநிலையின்மையினை பற்றி மிகப் படைப்பாற்றலுடன்
நியாப்படுத்தும் ஆற்றல் கொண்டவரான" க்ரீன்ஸ்பான், கூடுதலாக வளைந்துகொடுக்கும் தன்மையுடைய சர்வதேச
நிதிமுறையை ஏற்படுத்த மற்றும் மேற்கொண்டு செயல்பட பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்குகள் அனுமதிக்கப்பட்டால்,
பின் "வரலாறு, தற்பொழுதைய சமச்சீரற்ற நிலைமைகள் அதிக தடையில்லாமல் சீரடைந்துவிடும் எனக் கூறுகிறது"
என்று முடிக்கிறார்.
ஆனால், "ஒரு முக்கியமான நடவடிக்கையின் தேவையையும்" வலியுறுத்திவிட்டுத்தான்
க்ரீன்ஸ்பான் தன்னுடைய கருத்துரைகளை முடிக்கிறார். நேரடியாகப் புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பிடாமல்,
"காப்பு நடவடிக்கைகள் என்று வெளிப்படும் சில மேகக்கூட்டங்கள், அடிவானத்தில் அதிகமாய் தென்படுகின்றன" என்று
கூறுகிறார்.
"அத்தகைய காப்புநடவடிக்கைகளுக்கான தொடக்க முயற்சிகள், இப்பொழுதுள்ள பரந்த
சமநிலையின்மைகளின் உள்ளடக்கத்தில், பூகோளப் பொருளாதாரத்தின் வளைந்துகொடுக்கும் தன்மையைக் கணிசமான முறையில்,
அரித்துவிடக்கூடும். இதன்விளைவாக ஊர்ந்துவரும் காப்புக் கொள்கை செயல்படாமல் தடுக்கப்பட்டு, பழைய நிலைக்குத்
திரும்ப வேண்டியது இன்றியமையாததாகும்" என்று தொடர்கிறார்.
"அறிமுகமற்றோரின் கருணை" என்று அழைக்கப்படும் தன்மையுடைய நிலையில் அமெரிக்க
நிதி உறுதித் தன்மை எப்பொழுதுமே இந்த அளவு இருந்ததில்லை என்று உள்ளதைப்பற்றி, க்ரீன்ஸ்பான் கவலையை தெளிவாகவே
தெரிவித்துள்ளார். புஷ் நிர்வாகத்தின் காப்பு நடவடிக்கைகள், முதலில் எஃகிற்கும், இப்பொழுது சீன ஜவுளிகளுக்கும்
என எடுக்கப்பட்டுள்ளது, ஐரோப்பா, ஆசியா என இரு இடங்களிலிருந்துமே பதிலடியைக் கொடுக்கத் தூண்டக்கூடும்,
அதனால் நிதிச்சந்தைகள் உறுதியற்றுப்போகும் நிலைமை ஏற்படலாம் மற்றும் பெரும் நெருக்கடியும் விளையலாம்.
Top of page
|