World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Terror blasts in Istanbul: atrocities aid Bush's "war on terror"

இஸ்தான்புல்லில் பயங்கர குண்டு வெடிப்புகள்: புஷ்ஷின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு'' உதவும் அட்டூழியங்கள்

By Justus Leicht and Peter Schwarz
21 November 2003

Back to screen version

12 மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில், கடந்த வியாழனன்று இரண்டாவது தடவையாக நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள், நகரத்தையே உலுக்கிவிட்டுள்ளது.

இஸ்தான்புல் நகரத்தில் இருக்கும் போயாக்லு (Beyoglu) பகுதியில் உள்ள பிரிட்டனின் துணைத் தூதரகம் (consulate) எதிரில் வெடிகுண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன், இந்த நகரத்தின் லெவன்ட் பகுதியில் அமைந்துள்ள ஆங்கிலோ-ஆசியன் வங்கியான HSBC யின் பிரதான கிளை முன்பாகவும் குண்டுகள் வெடித்தன. இத்தாக்குதல்களில், முதலில் கிடைத்த தகவலின்படி 27 பேர் மாண்டனர், 450 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். இஸ்தான்புல்லில் பணியாற்றிய பிரிட்டனின் கொன்சல் ஜெனரல் ரோஜர் ஷோர்ட்டும் மாண்டவர்களில் அடங்குவார்.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இந்தக் குண்டுவெடிப்பை இரத்தக்களறி என்றே கூறுகின்றனர். பிரிட்டன் துணைத் தூதரக அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் ஜேர்மனியின் கோத்தே இன்ஸ்டியூட் ஊழியர் ஒருவர் Spiegel-Online க்கு பேட்டியளிக்கும்போது, அந்தத் தெருக்களில் ''மக்கள் இரத்தக் கறைபடிந்தவர்களாக'' நடமாடினர் என்றும், ஒரு டெலிவரி வண்டி பிரிட்டீஸ் துணைத் தூதரக அலுவலகத்தை நோக்கிச் சென்றதைத் தொடர்ந்து ''கடுமையான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது'' என்றும் கூறினார். HSBC வங்கிக்கு முன்பாக வெடித்த குண்டு அருகாமையில் இருக்கும் வர்த்தக வளாகத்தையும் அதிரவைத்தது. அங்கு ஆயிரக்கணக்கான சாதாரண துருக்கி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் நிரம்பி இருந்தனர்.

கடந்த சனிக்கிழமை காலை அதே போன்று இரண்டு குண்டுத் தாக்குதல்கள் யூதர்களின் ஆலயங்கள் மீது நடாத்தப்பட்டது. ஒன்று பெத் இஸ்ரேல் யூதர் ஆலயம். மற்றொன்று இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய யூதர் ஆலயமாகும். அங்கு, யூதர்களது ஓய்வு தினமான நவே சலோம் (Neve Schalom) சப்பாத்திற்காக (Sabbath) நிறைய பக்தர்கள் திரண்டிருந்தனர்.

இந்த இரண்டு குண்டு வெடிப்புகளிலும் 24 பேர் மாண்டனர். கொல்லப்பட்டவர்களில் மிகப்பெரும்பாலோர் அருகாமையில் உள்ள மசூதிகளில் அல்லது கடைகளில் காவலர்களாகப் பணியாற்றி வந்த முஸ்லீம்கள் ஆவர். அத்துடன் இத்தாக்குதல்களில் 300 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துருக்கி அதிகாரிகளும், இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்க அரசாங்கங்களும் இந்தக் குண்டு வெடிப்புகளுக்கு அல்கொய்தா இயக்கம்தான் பொறுப்பு என்று உடனடியாகத் தெரிவித்தனர். வியாழன்று, பிரிட்டனின் வெளியுறவு அமைச்சரான ஜாக் ஸ்டிரோ, குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்களின் தூசிகள் மறைவதற்கு முன்னரே அல்கொய்தான் பொறுப்பு என்று பத்திரிகைகளுக்கு அறிக்கையொன்றைக் கொடுத்தார்.

பின்னர் துருக்கி செய்தி நிறுவனமான அனதொலுவிற்கு (Anadolu) அனாமத்து பேர்வழி ஒருவர், தொலைபேசியில் அழைத்து அல்கொய்தாவும், துருக்கியின் தீவிரவாத இஸ்லாமிய குழுவான IBDA-C (Warriors Front for an Islamic Great Middle East) யும் தான் தொடர்ந்து நடைபெற்ற இக்குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பு என்று குறிப்பிட்டார். அத்தோடு IBDA-C இயக்கமானது, இதற்கு முன்னர் நடைபெற்ற யூத ஆலயத் தாக்குதலுக்கு பொறுப்பு என்று கூறப்பட்டது.

சிறிது நேரம் கழித்து, வியாழனன்று அரபு மொழி செய்திப் பத்திரிகை ஒன்றிற்கு வந்த மின்னஞ்சலில், அல்கொய்தாவோடு இணைந்துள்ள ''அபு அப்சல் மஸ்ரி தியாகிகள்'' (The Martyrs Brigade of Abu Hafs el Masri) படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இத்தாக்குதல்களுக்கு பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்தோடு, கடந்த சனிக்கிழமை இரண்டு தற்கொலை குண்டுதாரிகளை அவர்களது மரபியல் அணு, ஆய்வு மூலம் நிரூபித்திருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். துருக்கியின் கீழ்ப்பகுதி நகரமான பிங்கோல் பகுதியைச் சேர்ந்த அந்த இருவரும், தீவிரவாத இஸ்லாமிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் ஒருவர் ஆறு முறை ஈரானுக்குச் சென்று வெடிகுண்டு பயிற்சி பெற்று நிபுணராகி வந்திருப்பதாக NTV தொலைக்காட்சி அலைவரிசை தகவல் தந்தது.

எப்படி இருந்தபோதிலும் இதுவரை வெளியிடப்பட்டுள்ள செய்திகள் முழுவதிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. துருக்கியின் உள்துறை அமைச்சரான அப்துல் காதிர் அக்சு, IBDA-C அமைப்பு இந்தக் குண்டு வெடிப்புகளுக்குப் பொறுப்பு என்று கூறுவதை ஏற்கமுடியாது என்றும், இந்தக்கூற்று நம்பகத்தன்மை உள்ளதல்ல என்றும் குறிப்பிட்டார். துருக்கியில் செயல்பட்டு வரும் எந்த அமைப்பும், இவ்வளவு பெரும் தாக்குதல்களை நடத்தும் வல்லமை பெற்றவையல்ல என்றும் அவர் விளக்கினார்.

இதன்மூலம் இன்னொரு கேள்வி எழுகிறது. அது, துருக்கிக்குள் இவ்வளவு அதிகமான வெடி பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கடத்தி வந்து, குண்டுகளை ஒரே நேரத்தில் எப்படி வெடிக்கச் செய்யமுடியும் என்பதாகும். அத்தோடு இரண்டு வேறு வேறு இடங்களில் இந்தக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

இந்தக் குண்டுத் தாக்குதல்களில் அல்கொய்தா இயக்கம் பங்கெடுத்திருக்குமா? என்பது குறித்து சில பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை நிபுணரான போயஸ் கனோர் ''இந்த நேரம் வரை அல்கொய்தா இயக்கத்தின் தொடர்ப்பு குறித்து எந்த அடையாளமும் இல்லை'' என்று Turkish Daily News ற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த யூனைட்டெட் சர்வீஸஸ் இன்ஸிடியூட்டைச் சேர்ந்த முஸ்தபா அலானி Reuters க்கு அளித்த பேட்டியில் ''துருக்கியில் அல்கொய்தா இயக்கம் செயல்படவில்லை. எனவே அல்கொய்தா இயக்கம் இந்த குண்டுத் தாக்குதல்களில் சம்மந்தப்பட்டிருக்கிறது என்று கூறுவது மிகக் கடினமானது. இரண்டு நாடுகளில் சவூதி அரேபியாவிலும், ஈராக்கிலும் மட்டுமே தற்பொழுது அல்கொய்தா இயக்கம் செயல்பட்டு வருகிறதென்று நான் நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

இஸ்தான்புல் பயங்கர குண்டு வெடிப்புகளுக்கு உண்மையிலேயே யார் பொறுப்பு? என்பது தெளிவில்லாமலேயே உள்ளது. ஆனால், அமெரிக்க, பிரிட்டன் அரசாங்கங்கள் அதே போல துருக்கி இராணுவத்தின் ஒரு பகுதியினருக்கு ஏற்ற தருணத்தில் இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

ஈராக்கை ஆக்கிரமித்து, தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வருகின்ற நிலைமையில், இஸ்தான்புல்லில் நடைபெற்ற இரத்தக்களறியை பயன்படுத்தி, பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயரும் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷூம் தங்களது ஈராக் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளனர். பிரிட்டன் தூதரக அலுவலகத்தில் தாக்குதல் நடந்து சில மணி நேரத்தில், லண்டனில் கூட்டாக இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, ''நாங்கள் தொடங்கிய பணியை முடிக்க உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறோம்'' என்று புஷ் சபதம் செய்தார். ''இப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது, நாம் பின்வாங்கவோ, அல்லது ஒரு அங்குலம் கூட விட்டுக்கொடுக்கவோ முடியாது. நமது பணி ஈராக்கிலும், உலகின் இதர பகுதிகளிலும் பூர்த்தியாகும் வரை நாம் உறுதியாக நிற்கவேண்டும்'' என்று டோனி பிளேயர் தெரிவித்தார்.

இத்தாக்குதல்களை பயன்படுத்திக் கொள்ளும் துருக்கி இராணுவம்

அலை அலையாக துருக்கியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை பயன்படுத்தி துருக்கி இராணுவம், அரசாங்கத்தின்மீது தனக்குள்ள செல்வாக்கை மீண்டும் வலியுறுத்தி நிலைநாட்ட முயன்று வருகிறது. கடைசியாக நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர், உடனடியாக இராணுவத்தினர் தெருக்களில் அணிவகுத்து வந்து, வாகனங்கள் செல்லும் பாதையை மறித்து தடுத்து நிறுத்தினர். அத்தோடு துருக்கி போலீசாருடன் இணைந்து பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொண்டனர். ஒரு டசின் படையினர் தலைக்கவசங்கள், முகமூடிகள், எந்திரத்துப்பாக்கிகள் சகிதம் குண்டு வெடித்த HSBC கட்டடத்திற்கு அருகாமையில் நடமாடினர்.

மதவாத இஸ்லாமிய AKP கட்சி (நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி) வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது முதல், இராணுவம் அவநம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இராணுவ ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக, தொடர்ந்து வதந்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன.

ஈராக் போருக்குப் பின்னர் அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் இடையில் பதட்டங்கள் கணிசமான அளவிற்கு முற்றிக் கொண்டு செல்கிறது. இராணுவம், ஈராக் போரில் கலந்து கொள்வதற்கு தீவிரமாக ஆதரவு இயக்கம் நடத்தியது. ஆனால் துருக்கி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட வாக்கெடுப்பில், பெரும்பாலான AKP நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈராக் போரில் துருக்கியை இரண்டாவது போர் முனையாகப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவிற்கு அனுமதி வழங்குவதில்லை என்று முடிவு செய்தனர். அந்த வாக்கெடுப்பு நடந்த பின்னர், துருக்கிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க பாதுகாப்புத்றை துணை அமைச்சர் போல் உல்பொவிச் இராணுவத்தை மேலும் ஊக்குவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு மேலாக ''வலிமையான தலமைப் பொறுப்பை'' துருக்கி இராணுவம் ஏற்கவேண்டுமென வலியுறுத்தினார்.

IBDA-C அமைப்பானது தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பின் பங்கு பற்றி சந்தேகத்திற்கு இடம் தருவதாக உள்ளது. இந்த அமைப்பானது 1970 களில் இஸ்லாமிய தீவிரவாதிகள், முன்னாள் மாவோயிஸ்டுகள் ஆகியோரை இணைத்து உருவாக்கப்பட்டது. யூதர்களுக்கு எதிரான செமிட்டிச எதிர்ப்பும், கிறிஸ்தவர்களுக்கு விரோதமான போக்கும் கொண்டதாக இந்த அமைப்பு செயல்படுகின்றது. ஆனால் இந்த அமைப்பானது தனது பிரசுரங்களில் ஈராக்கிற்கு எந்தவிதமான அனுதாபமும் தெரிவிக்கவில்லை.

1990 களில் இந்த அமைப்பு தொடர்ந்து பல குண்டுத் தாக்குதல்களை நடத்தியதால் பயங்கரத்தன்மை பெற்றது.1994 ல் மட்டும் இந்தக் குழு 90 தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. கடுமையான விமர்சனங்களில் ஈடுபடும் அறிவுஜூவிகள், மற்றும் மத சிறுபான்மையினரைக் குறிவைத்து இந்த அமைப்பினர் தாக்குதல்களை நடத்தினர். ஆனால் போலீஸ், இராணுவம் அல்லது மேற்கத்திய இலக்குகளை இவர்கள் தாக்கவில்லை.

குர்து தொழிலாளர் கட்சியின் (PKK) இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக எழுதிக்கொண்டிருந்த நிருபர் உகுர் மும்கு (Ugur Mumcu) கொலை செய்யப்பட்டதற்கு IBDA-C தான் பொறுப்பு என்று கூறப்படுகிறது. 1994 ல் பிரபல திரைப்பட விமர்சகரும், எழுத்தாளருமான ஓனட் குட்லர் (Onat Kutlar) கொலையில் இந்தக்குழு சம்மந்தப்பட்டிருந்தது. மற்றும் யூத சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இவர்களால் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

துருக்கி புலனாய்வு படைப் பிரிவினர் IBDA-C யில் ஊடுருவுயுள்ளனர் என்பதற்கு தெளிவான அடையாளங்கள் காணப்படுகின்றன. 1980 ல் துருக்கியில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததும், இராணுவத் தளபதிகள் இடதுசாரிப் போக்குகளையும் குர்து தேசியவாதப் போக்குகளையும் தடுத்து நிறுத்துவதற்காக, இஸ்லாமிய வலதுசாரி அடிப்படைவாதிகளை ஒருங்கிணைக்கும் அமைப்பை உருவாக்கினர். இந்தச் சூழ்நிலையில்தான் இஸ்லாமிய அமைப்புகள் செழித்து வளர முடிந்தது. இஸ்லாமிய ஹிஸ்புல்லாவிற்கும், போலீஸ் சிறப்புப் படைகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் நிலவியதை நாடாளுமன்ற விசாரணைக் குழுக்களின் அறிக்கை மூலம், சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

1994 ம் ஆண்டு நாட்டிற்கே, அரசியல் அச்சுறுத்தலாக இஸ்லாம் வளரக்கூடும் என்ற நிலை தோன்றியதும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிராக ஒடுக்குமுறை நடவடிக்கைகளை இராணுவம் தீவிரப்படுத்தியது. 1999 ல் PKK அமைப்பானது துருக்கி அரசிற்கு கீழ்ப்படிந்தது. இதே நேரத்தில் இஸ்லாமியக் குழுக்கள் பாரியளவில் அழிக்கப்பட்டதுடன், இக்குழுக்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். அதற்குப்பின்னர் இந்த அமைப்புகள் எந்தத் தாக்குதலிலும் ஈடுபட்டதாக கூறப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, IBDA-C அமைப்பு தனது சொந்த வளங்களைக் கொண்டு இஸ்தான்புல்லில் இரண்டு பயங்கர தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்துகிற அளவிற்கு வாய்ப்பு வசதிகளை கொண்டிருக்கவில்லை. ஆயினும், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் குண்டுத் தாக்குதலில் இடம்பெற்றிருந்தாலும், மற்றவர்கள் பின்னணியில் இருந்து கொண்டு இவர்களை இயக்கியிருக்கலாம்.

இந்தக் குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட அரசியல் அணுகூலம் என்ன என்று குறித்து துருக்கி ஊடகங்கள் அனைத்துமே ஒருமித்து, ஒரே கருத்தை வலியுறுத்தியுள்ளன. அது, இந்த தாக்குதலின் விளைவாக துருக்கி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையே மேலும் நெருக்கமான உறவுகளும், ஒத்துழைப்பும் ஏற்படும் என்பதாகும். அரபுப் பிராந்தியத்திலேயே பெரும்பாலான முஸ்லீம் மக்களைக் கொண்ட துருக்கி, வாஷிங்டனுடனும், இஸ்ரேலுடனும் இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்புகளை ஒரே நேரத்தில் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றது.

Turkiye என்ற செய்திப் பத்திரிகையில் ஒரு விமர்சனம் வெளியிடப்பட்டிருக்கிறது அது வருமாறு; ''இந்த செய்தியை துருக்கி மற்றும் உலகம் பின்பற்றவேண்டும். அமெரிக்காவுடன் தொடர்ந்து ஒத்துழைத்துக் கொண்டிருந்தால் இது போன்ற துயரங்களை சத்தித்தே ஆகவேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக தெளிவான நிலைப்பாடு எடுக்கவேண்டும். ஈராக்கில் அக்கறை செலுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். இதுதான் உண்மையான செய்தி என்றால் துருக்கியில் இது உண்மையிலேயே எதிர்விளைவை ஏற்படுத்தும் பயங்கரவாத செயல்களுக்கு நாம் சலுகை காட்டக்கூடாது. வாஷிங்டனுடன் நமது உறவுகளை இன்னும் நெருக்கமாக ஆக்கிக் கொள்ளவேண்டும். யூதர்களுக்கு, எதிரான இந்த தாக்குதல் துருக்கிக்கு பிடிக்காதது. எனவே, இஸ்ரேலுடன் துருக்கி மேலும் நட்புறவு பாராட்டவேண்டும்.''

''அமெரிக்காவுடன் இணைந்து துருக்கி செயல்படக்கூடாது என்று எச்சரிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் துருக்கியில் நேர்மாறான விளைவைத்தான் இது உருவாக்கும். அமெரிக்கா, இஸ்ரேல் அணியில் தன்னை பலப்படுத்திக் கொள்ளவே துருக்கியும் விரும்பும். அத்தோடு துருக்கியும், அமெரிக்காவும் பயங்கரவாத செயல்களை பிரதான அச்சுறுத்தலாக கருதுகின்றன'' என்று Hurriyet என்ற இன்னொரு பத்திரிகை விமர்சனம் செய்து எழுதியுள்ளது.

இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் பிற்போக்குவாதிகள் மேற்கொண்டுள்ள ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். இதற்கு பின்னணியாக யார் இருக்கிறார்கள் என்பது தெளிவற்றதாக தெரிகின்றது. துருக்கியின் ரகசியசேவை அல்லது மேற்கத்திய புலனாய்வு சேவைகள் நேரிடையாக இதில் சம்மந்தப்பட்டிருக்காவிட்டாலும், அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் ஆகிய நாடுகளின் கொள்கைகள்தான் இத்தகைய பேரழிவிற்கு காரணம் ஆகும்.

ஈராக்மீது இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தி, இராணுவப் பலத்தால் அடிமைபடுத்தி வைத்திருப்பது, இஸ்ரேல், பாலஸ்தீன மக்களது உரிமைகளை அடக்கி ஒடுக்குவது ஆகிய நடவடிக்கைகள் என்பன பூகோள அளவில் புதிய இனப் பதட்டங்களை உருவாக்கி பிற்போக்கு சக்திகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. புஷ் மற்றும் ஷரோன் அரசாங்கங்கள் மிகுந்த சிடுமூஞ்சித்தனமாக ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்று கூறிக்கொண்டு வருவது மத்திய கிழக்கு முழுவதிலும் பயங்கரவாத தாக்குதல்களை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றது.

இது யூத மத நம்பிக்கை கொண்டவர்களையும் பாதிக்கிறது. துருக்கியில் உள்ள பெரும்பாலான முஸ்லீம்கள் எந்தக் காலத்திலும், அங்குள்ள யூதர்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை.1492 ம் ஆண்டு ஸ்பெயினில் யூதர்களுக்கு எதிராக போர் தொடுக்கப்பட்டபோது, துருக்கி சுல்தான் பேயாகித் II (Sultan Beyazit II) 100,000 க்கும் மேற்பட்ட யூதர்களுக்கு துருக்கியில் அடைக்கலம் தந்தார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் ஜேர்மனியிலும் நாஜிக்கள் மற்றும் பாசிஸ்டுகள் காலத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதிலிருந்து தப்பி வந்தவர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஈராக் போரின் காரணமாக யூத சமுதாயம் பாதுகாப்பற்ற மற்றும் அச்சநிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved