WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
California's Governor Davis
denounces "right-wing power grab"
கலிஃபோர்னியாவின் கவர்னர் டேவிஸ் "வலதுசாரி அதிகார பறிப்பை" கண்டிக்கிறார்
By Bill Vann
25 August 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
ஆகஸ்ட் 19ம் தேதி, லொஸ் ஏஞ்சலஸிலுள்ள கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில்,
தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஆற்றிய உரை ஒன்றில், கலிஃபோர்னியாவின் கவர்னர் க்ரே டேவிஸ், கடந்த நவம்பர்
தேர்தல்களின் முடிவைத் திருப்பியழைத்தல் வாக்கெடுப்பு மூலம் மாற்றும் முயற்சியை ``வலதுசாரியினரின் அதிகாரப்
பறிப்பு`` எனக் கண்டித்தார்.
``இந்தத் திருப்பியழைத்தல் கலிஃபோர்னியாவைவிடப் பெரிய விஷயமாகும்`` என்று
கூறிய டேவிஸ், ``தேர்தல்களில் வெற்றிபெற முடியாத குடியரசுக் கட்சியினர் நாடெங்கிலும் அதைத் திருடும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளதின் ஒரு பகுதிதான், இப்பொழுது இங்கு நடந்துகொண்டிருக்கிறது`` எனவும் அறிவித்தார்.
``1998-99ல் ஜனாதிபதி கிளின்டன் மீது பதவி நீக்க விசாரணையை ஏற்படுத்தியதில்
தொடங்கி வரிசையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளில் இதைத் தொடர்புபடுத்திய டேவிஸ், இவை வலதுசாரி
அணி குடியரசுக் கட்சி அரசியல் வாதிகளால் செலவு செய்யப்பட்டு நடத்தப்படுவதாகவும் கூறினர். ``அது புளோரிடாவிலும்
தொடரப்பட்டு, அவர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திய அளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்குப்போடும் உரிமையை
இழந்தனர்`` என்று வெள்ளை மாளிகையில் புஷ்ஷை இருத்திய 2000-ம் ஆண்டு திருடப்பட்ட தேர்தல் பற்றியும் குறிப்பிட்டார்.
``இந்த ஆண்டு அவர்கள் கொலராடோவிலும், டெக்சாசிலும் கூடுதலான பாராளுமன்ற
இடங்களையும் சட்டமுறையிலான தொகுதி மாற்ற முறைகளையும் மாற்றித் திருட முற்படுகிறார்கள்`` என்று தொடர்ந்த
டேவிஸ், ``இங்கு, கலிஃபோர்னியாவில், கடந்த நவம்பரில் குடியரசுக் கட்சியினர் கவர்னர் தேர்தலில் தோற்றுப்போயினர்.
இப்பொழுது அடுத்த ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்பாகவே இந்த திருப்பியழைத்தல் முறை மூலம் அந்த முடிவை மாற்ற
முயற்சி செய்கின்றனர்`` எனக் குறிப்பிட்டார்.
மற்றபடி, பயனற்ற விஷயங்களையும், மீண்டும் தன்னுடைய சொந்த நிர்வாகத்தின்
பிற்போக்கான கொள்கைகளை பொய்யான முறையில் நியாயப்படுத்திக் கொண்டிருந்த அவர் பேச்சில், டேவிஸ் இத்தகைய
அரசியல் வெடிகுண்டு ஒன்றைப் போட்டார். வெள்ளை மாளிகையையும், அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும்
கட்டுப்படுத்தும் கட்சி அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் சதியை
உருப்படுத்திக் காட்டுகிறது என்பது கலிஃபோர்னியாவிலும், நாடு முழுவதிலும் வேலைசெய்யும் கெடுநோக்குடைய அரசியல்
வழிமுறையை அவருடைய விளக்கம் சித்தரித்துக்காட்டியிருக்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) இந்தத் திருப்பியழைத்தல் முயற்சியை,
தீவிரமாக எதிர்ப்பதுடன், இதைத் தோற்கடிக்க கலிஃபோர்னிய தொழிலாள வர்க்கத்தை அணிதிட்டப் போராடி வருகிறது.
செல்வம் கொழிக்கும், புதிய பாசிச நோக்குடைய குடியரசு கட்சியின் ஒரு பிரிவு, சமுதாயப் பணிகள் சீர்குலைதல்,
வேலையின்மைப் பெருக்கம் போன்றவை மீதான கலிஃபோர்னியர்களின் கோபத்தை பிற்போக்கு நோக்கங்களுக்காக
பயன்படுத்தும் வகையில் திருப்பியழைத்தல் முயற்சியை மேற்கொண்டுள்ளதை சோ.ச.க கண்டிக்கிறது. இந்தத் திட்டத்திற்கு
ஏற்பாடு செய்து பணம் செலவழிப்பவர்களது நோக்கம், நவம்பர் தேர்தல் முடிவை மாற்றிப் புதிய அரசாங்கத்தையும்
கொள்கைகளையும் கொண்டு வருவது, அது பின்பற்றும் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் டேவிசும் ஜனநாயகக்
கட்சியும் கடைபிடிக்கும் கொள்கைகளையும் விடப் பின்னோக்கு கொண்டவையாகும்.
இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்கையில் சோ.ச.க, டேவிஸிற்கோ, திருப்பியழைத்தலில்
தன்னை வேட்பாளராக ஏற்படுத்திக்கொண்ட லெப்டினன்ட் கவர்னர் க்ரூஸ் புஸ்டமன்ட் க்கோ, ஜனநாயகக் கட்சிக்கு
முழுமையாகவோ ஆதரவைக் கொடுக்கவில்லை. சோ.ச.கட்சியுடைய ஆதரவு, லொஸ் ஏஞ்சலஸ் குடியுரிமை வழக்குரைஞரும்,
சோ.ச.க ஆதரவாளரும், தேர்தலில் எக்கட்சியையும்
சாராமல் நிற்கும் வேட்பாளராகவும் உள்ள ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுக்குத்தான். பேர்ட்டன், உழைக்கும் மக்களின்
நலன்களில் கலிஃபோர்னிய நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கமுடைய ஒரு சோசலிசத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
பேர்ட்டனின் வேட்பு மனுவை ஆதரித்து இந்த மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை
ஒன்றில் சோ.ச.க அறிவித்ததாவது: ``வாக்குரிமை உட்பட
ஜனநாயக உரிமைகள் பலவற்றை மதிப்புக் குறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள வலதுசாரியினரின் முயற்சிகளின் தொடர்ச்சியாகத்தான்,
டேவிஸ் பதவி விலகக்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையும் அமைந்துள்ளது; இது ஜனநாயக அரசியல் நடைமுறைகளையும்
பாதிப்பதாகும். பில் கிளின்டனுக்கு எதிரான பதவி நீக்க விசாரணையின் சாராம்சமாகவும் இதுதான் இருந்தது. அதைத்
தொடர்ந்து புளோரிடாவில் தேர்தல் திருட்டிற்கும் 2000ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் திருடப்படுவதும் தொடர்ந்தது.
இந்த சதிகள் அனைத்துமே இறுதிப் பகுப்பாய்வில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவையாகும்.``
ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான இந்த சதியை அம்பலப்படுத்தியதில் சோ.ச.கவுக்கு
நீண்ட பின்னணி உள்ளது. தன்னுடைய பங்கிற்கு, டேவிசிடம் ஒன்றும் கிடையாது. கிளின்டனுக்கு எதிரான பதவி நீக்க விசாரணையின்போதோ
அல்லது 2000 தேர்தல்கள் திருடப்பட்டபோதோ, அவற்றைப் பற்றி அவர் எதிராகப் பேசியது இல்லை. இப்பொழுது
அதே அரசியல் முறைகளுக்கு பலிக்கடாவாக அவரே ஆளாக்கப்படுப்படும் போதுதான், அவரும் அவருடைய
ஆலோசகர்களும் பிரச்சினைகளை எழுப்ப முடிவு செய்துள்ளனர்.
செய்தி ஊடகம், குடியரசுக் கட்சி, மற்றும் பசுமைக் கட்சிகள் டேவிசுடைய உரையைக் கடுமையாகத்
தாக்குதல்
இந்தக் கேள்விகளை எழுப்பியதற்குச் செய்தி ஊடகத்திலிருந்தும் அதிகாரபூர்வமான அரசியல்
முறைகளின் இருபுறத்திலும் உள்ள அரசியல் விரோதிகளிடமிருந்தும் டேவிசுக்குக் கிடைத்த பதில் கிட்டத்தட்ட முழுமையான
கண்டனம் தான்.
கலிஃபோர்னியாவின் நாளேடுகளின் தலையங்கப் பக்கங்கள், வரவு செலவுத் திட்டக்
குறைபாடுகளுக்கும், மின் சக்தி நெருக்கடி இவருடைய நிர்வாகத்தின் கீழ் ஏற்பட்டதற்கும் வாக்காளர்களுக்கு
`மன்னிப்பு` தெரிவிக்காதது ஏமாற்றத்தைத்தான் கொடுத்துள்ளது என்று சாடின. தேசிய அரசியல் தன்மையில்தான்
கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் முயற்சி வந்துள்ளது என்பது பற்றிய இவருடைய கருத்தைப் பொருத்தமற்றது எனவும்,
பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் முயற்சி என்றும் அவை உதறித்தள்ளிவிட்டன.
San Francisco Chronicle
இவருடைய பேச்சை, ``எதிர்பார்க்கப்பட்ட பூசலுக்கான அழைப்பு``
என்று வர்ணித்தது; Los Angeles Times-ன்
அரசியல் நிருபர் தன்னுடைய கட்டுரைக்கு "டேவிஸ் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தார்`` என்ற தலைப்பைக் கொடுத்தார்.
டேவிசுக்கு எதிரான வலதுசாரி குடியரசுக் கட்சி போட்டியாளரில் ஒருவரான பில் சைமன்
இப்பொழுது போட்டியில் இல்லை, அவர் குறிப்பிட்டதாவது: ``யாரோ ஒருவருடைய தவறு, இது ஒரு சதி, இது ஜனாதிபதி
புஷ் செய்தது, இது தேசியப் பொருளாதாரம் பற்றியது, இது எல்லாமேதான் என்று கேட்கிறோம், ஆனால் க்ரே டேவிஸ்
பற்றியதைத் தவிர.`` கவர்னருடைய குற்றச்சாட்டான ``வலதுசாரி அதிகார பறிப்பு`` பற்றிப் பேசுகையில் இந்தத்
திருப்பியழைத்தல் ``அடிமட்ட மக்கள் இயக்கம், மக்களுடைய விருப்பத்தைச் சிறிதும் கண்டுகொள்ளாத கவர்னர் பொறுப்புக்கூறும்
முறையைக் கொள்ளவேண்டும் என்ற கருத்தைத் தான் சார்ந்துள்ளது" என்றார்.
``இடது`` புறமிருந்து டேவிசை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும், பசுமை கட்சியின்
வேட்பாளர் பீட்டர் காமிஜோ (Peter Camejo),
சைமனுடைய கருத்துக்களையே எதிரொலித்து, டேவிசின் குடியரசுக் கட்சி சதி பற்றிய கூற்றுக்கள் ``உண்மையானவையென்றே
கூறமுடியாது`` என அறிவித்தார். பொதுமக்களுடைய கருத்தை சட்டபூர்வமாக வெளிப்படுத்துவதே திருப்பி அழைத்தலின்
தன்மை என்று அவரும் வாதிட்டுக் கூறியனார்: ``குடியரசுக் கட்சியினர், (டேவிசுக்கு) அவருக்கு 22 சதவிகித வாக்குத்தான்
வந்துள்ளது என்பதையும் சதி செய்து தெரிவித்துவிடவில்லை`` என்றார்.
குடியரசுக் கட்சி, பசுமை கட்சி, இரண்டுமே கலிஃபோர்னியத் திருப்பியழைத்தலை
அடிமட்ட மக்கள் விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது என்று பரப்பிக் கொள்ளும் முயற்சியே அழுத்தமான மோசடியாகும்.
வலதுசாரிக் குடியரசுக் கட்சியினர் செலவழித்துள்ள 3 மில்லியன் டாலர்கள் முதலீடு பெரும்பாலான தொகை பல மில்லியன்
உடைய குடியரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும், கார் அபாய அழைப்புப் பிரபுவுமான
Darrel Issa
கொடுத்தது- இல்லாவிட்டால், இந்த திருப்பியழைத்தலை வாக்குச்சாவடிக்குக் கொண்டுவரும் முயற்சி 2003ல் நடந்திருக்காது;
பல முந்தைய கவர்னர்களுக்கு எதிரான அத்தகைய முயற்சிகள் பலிக்காதது தெரிந்ததே.
டேவிஸ் அரசாங்கத்திற்கு எதிராக பரந்திருக்கும் விரோதப்பாங்கை சுரண்டி, ஒரு பதவியிலிருக்கும்
கவர்னரை, மக்கள் விருப்பப்படி மறுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது மாதத்திற்குள்ளாகவே, திருப்பியழைத்தல் கையாளப்படுகிறது
என்பதில் சந்தேகமில்லை. டேவிசுக்கு எதிரான மக்கள் விரோதப்போக்கு, மாநில அரசாங்கம் கையாளும்
பிற்போக்குக் கொள்கையினால் விளைந்தவை; அவற்றால் நாட்டின் முழுப் பொருளாதார நெருக்கடியின் சுமையும் கலிஃபோர்னியாவின்
தொழிலாளர் வர்க்கத்தின் மீது வைக்கப்படுகின்றது; அதிலும் குறிப்பாக மிகக் கடுமையாக நசுக்கப்பட்டுள்ள சமுதாய
அடுக்குகள் அதைத் தாங்க வேண்டியுள்ளது; பணி நலன் சேவைகளின் வெட்டாலும், பிற்போக்கு வரி முறைகளாலும்
அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திருப்பியழைத்தல் நடத்துபவர்களின் நோக்கமோ இந்த அடுக்கு
மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதுதான்.
``செய்தி ஊடகப் பிரமுகர்`` அரியன்னா ஹபிங்டன் (Arianna
Huffington) காமெஜோவோடு (Camejo)
இணைந்து பிரச்சாரம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளவர், ஒரே நேரத்தில், அரசியல் சதி குடியரசுக் கட்சியின் திருப்பியழைத்தலிலோ,
கிளின்டன் பதவி நீக்க விசாரணையிலோ இல்லை என்ற முக்கியமற்ற அறிவிப்பைக் கொடுத்தார். டேவிசுடைய
கருத்துக்களை ``இரு வேறு தொலைவிலுள்ள கருத்துக்கள்`` என்று விவரித்த இந்த அம்மையார் ``1998ல் பில்
கிளின்டன் கூறிய உரையை, இதை விட சிறந்ததாகக் கேட்டுள்ளேன்`` என்றார்.
தேர்தல்களைத் திருப்பும், அரசியலில் மோசடி செய்யும் நாடு தழுவிய உந்துதல் என்ற
டேவிசின் வர்ணனை மிகுந்த கவலைக்கிடமான விஷயமாகும். நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுடைய ஜனநாயக உரிமைகளும்,
உழைக்கும் மக்களின் வேலை வாய்ப்பு, வருமானம், சமுதாய நலன்கள் ஆகியவற்றை நேரடியாகப் பாதிக்கும், அரசியல்,
பொருளாதாரக் கொள்கைகளும் பணயம் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த விஷயங்களை நகைச்சுவையாக ஹபிங்டன் மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை. செய்தி
ஊடகம் கிளின்டன் பதவி நீக்க விசாரணையை பெருமளவில் பாலியல் அவதூறாக எடுத்துக்கொண்டது; டெக்ஸாஸில் சட்டமன்ற
ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டு சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்தகொள்ள
வற்புறுத்தலைத் தடுக்க மாநிலத்தை விட்டு ஓடிப்போனதும், அவ்வுறுப்பினர்களை பிடிக்க மன்ற பெரும்பான்மை கட்சித்
தலைவர் டொம் டிலே Homeland Security
Department உதவியை நாடியதும் இகழ்வான நகைச்சுயைாகத்தான்
சித்தரிக்கப்பட்டது. கலிஃபோர்னியாவில் திருப்பியழைத்தல் முயற்சியே சர்க்கஸ் என்ற வர்ணனைக் குறிப்பிற்குட்பட்டிருப்பது
பெரும்பாலான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிட வந்துள்ளதனால்தான்.
சராசரி உழைக்கும், கலிஃபோர்னியக் குடிமகனின் விரோதத்தினைவிட, டேவிஸின்
கொள்கைக்கு திருப்பியழைத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளோரின் ஆதாரங்களின் விரோதம் மாறுபட்ட தன்மையையுடையது.
பெரு நிறுவன இலாபத்தையும் தனி நபர் சமுதாயப் பிரமிடின் உச்சியில் இருப்பவர் செல்வம் குவிப்பதையும் எந்தத்
தடை வந்தாலும் அதை அகற்றிவிட குடியரசுக் கட்சியின் வலதுசாரிப் பிரிவு உறுதியாக உள்ளது.
டேவிஸ் 2000-2001ல் ஆற்றல் நெருக்கடியைக் கையாண்ட முறையைக் குறைகூறுபவர்கள்தாம்,
தங்கள் இலாபத்திற்காகவும் பங்குகள் விலையுயர்விற்காகவும் அரசாங்கத்தைக் குற்றஞ்சார்ந்த முறையில் மோசடி செய்த
அதே ஆற்றல் நிறுவனங்களான என்ரோன் போன்றவற்றை ஆதரித்துள்ளனர். டேவிஸின் வரவு செலவுத்திட்டப்
பற்றாக்குறையைக் குறை கூறுபவர்கள்தாம் புஷ் நிர்வாகத்தோடு அரசியலில் இணைந்து நிற்கிறார்கள்; புஷ் நிர்வாகம்தான்
தன்னுடைய பெரும் வரிச் சலுகைகளை பெரும் செல்வந்தர்களுக்குக் கொடுப்பதற்காக மிகப்பெரிய தேசிய நிதி
நெருக்கடியை மாநிலங்கள் பால் தள்ளிவிட்டது.
டேவிஸ் கூறாமல் விட்டது என்ன?
குடியரசுக் கட்சியினரிடம் அதிகாரத்தைக் குவிப்பதற்கான தேசிய உந்துதலின் பகுதியாக,
தம் அரசியல் விரோதிகளால் ஜனநாயக நடைமுறைகள் மிதித்துத் தள்ளப்படுகின்றன என்று டேவிஸ் குற்றஞ்சாட்டியுள்ள
போதிலும்கூட, இது ஏன் நடக்கிறது என்பதை விளக்க முயற்சிக்கவில்லை அல்லது இந்த ``வலதுசாரி அதிகாரப் பறிப்பின்``
பின்னணியில் என்ன நோக்கங்கள் உள்ளன என்பதைப் பற்றியும் அவர் விரிவாகக் கூறவில்லை. திருப்பியழைத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள்,
பெரும்பான்மையான உழைக்கும் மக்களிடமிருந்து உயர்மட்ட வருவாயுள்ளவர்களுக்கு மிகப்பெரிய அளவில் செல்வம் மாற்றப்படுவதைப்
பற்றியும் அவர் எச்சரிக்கை விடுக்கவில்லை.
மேலும், டேவிஸ் திருப்பியழைத்தல் இன் பின்னே இருக்கும் அரசியல் சதி பற்றிய முக்கியத்துவத்திற்கும்
அதைப் பற்றி கூறும்போது அவருடைய குரலின் தன்மைக்கும் இருந்த வருந்தத்தக்க வேறுபாடு, அப்பேச்சைக் கேட்டவர்களால்
உணர முடிந்தது. டேவிசின் "மரக்கட்டை உணர்ச்சித் தன்மை", புகழை ஈர்க்காத தன்மை, இவை தான் அதற்குக்
காரணம் என்று செய்தி ஊடகம் கருதியுள்ளது. ஆனால் கவர்னரின் இளிப்புக்களுக்குப் பின்னணியில், தன்னுடைய அனல்கக்கும்
கருத்துக்களைப் பற்றி அவரே சங்கடப்பட்டிருக்கவேண்டும்; ஏனெனில் பெரும்பாலான பார்வையாளர்கள், தொழிற்சங்கங்களின்
உதவியுடன் ஜனநாயகக் கட்சி திரட்டியிருந்த தொழிலாளர்களே அவர் பேச்சைக் கேட்க வந்தவர்கள் ஆவர்.
இது டேவிசின் ஆதரவு நிறைந்த தொகுதியாளர் கூட்டமல்ல. இதே பெரு வர்த்தக, நிதி
நிறுவனங்களோடுதான் அவர் பல காலம் நெருங்கிய ``சிறப்பு நலன்களை`` வளர்த்து வந்துள்ளார்; இந்த செல்வந்த
தட்டுதான் குடியரசுக் கட்சியினால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு டேவிசைப் பதவியில் இருந்து கீழேயிறக்கத் திருப்பியழைத்தல்
முயற்சியைக் கையாள்கிறது. ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நிக்கர் (Arnold
Schwarzenegger), டொம் மக்களின்டக் (Tom
McClintock) அல்லது பீட்டர் உபிரோத் (Peter
Ueberroth) தொடர நினைக்கும் பொருளாதார, அரசியல் செயல்பட்டியலை அவர் நேரடியாகத்
தாக்க முடியாது; ஏனென்றால் இவற்றை எதிர்ப்போருக்கும் செயல்படுத்துவோருக்கும் இடையே உள்ள வேறுபாடு,
அளவிலே தான் ஒழிய தன்மையில் இல்லை என்பதை அவர் நன்கு அறிவார்.
மக்கள் ஆதரவைப் பொறுத்தவரையில், குடியரசுக் கட்சியினர் கலிஃபோர்னியாவை, ஏன்
நாடு முழுவதையும் தங்களிடமிருந்து நழுவிச்செல்லும் தன்மை உடையதாகத்தான் உணர்கிறார்கள். 1980களிலும் 1990ன்
தொடக்க ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்தோர் நலனுக்கு எதிராக இவர்கள் கொண்டிருந்த அரசியல் பார்வை -அனைத்து
அத்தியாவசிய சேவைகளும் தொகுக்கப் பெறா ஊழியருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் அளிக்கப்படமாட்டாது என்ற
முன்மொழி 187ஐ அப்பொழுதிருந்த கவர்னர் பீட்டே வில்சனும் இப்பொழுதைய வேட்பாளர் ஷ்வார்ஸ்நிக்கரும் ஆதரித்திருந்தனர்-
இப்பொழுது அவர்கள் மீதே திருப்பிப் பாய்ந்துவிட்டது; பதிவுபெற்ற புலம்பெயர்ந்தோர் வாக்காளர் பட்டியல் பெருகிவிட்டது.
திருப்பியழைத்தல் பிரச்சாரம், மூன்று வருடத்திற்கு முன்பு புளோரிடாவில் தேர்தலைத்
திருடப் பயன்படுத்திய உத்தி போலவும், இன்று டெக்சாசில் தொகுதி மாற்றியமைப்பு செய்தல் போலவும், இந்த சக்திகளின்
பெருகிவரும், எப்படியும் சாதிக்கவேண்டும், என்ற ஏக்க வெளியின் அடையாளமாகவும், அவற்றின் ஜனநாயக மரபுகளை
மீறி, அதிகாரத்தைக் கொள்ளவேண்டும் என்ற உறுதியாகவும், இடதுசாரிப் பக்கம் உழைக்கும் மக்கள் திரும்பக்கூடியதாய்
எழும் ஆபத்தை திருப்பி அடிக்க உறுதிகொண்டுள்ள நிலையையும் தெளிவாக்குகிறது. குடியரசுக் கட்சியினர், குறிப்பாக,
எந்தத் தேர்தல் முடிவும் இறுதியானது இல்லை என்ற நிலையை இப்பொழுது கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள்
அவர்களுக்கு எதிராகச் சென்றால், தங்களிடத்திலுள்ள கிட்டத்தட்ட கணக்கிலடங்கா தேர்தல் பணத் தொகுப்பினால்
அதிகார நெம்புகோல்களைப் பயன்படுத்தி மக்கள் தெரிவித்துள்ள விருப்பத்தை தலைகீழாய் மாற்றக் கருதுகின்றனர்.
ஜனநாயகக் கட்சி, வலதுசாரிக் குடியரசுக் கட்சித் திட்டத்தை எதிர்க்க வலிமையின்றி
இருப்பதாலும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைப் பற்றி பொருட்படுத்தாமலும் இருப்பதால், இந்த சக்திகள்
அத்தகைய வழிவகைகளை பெரும் திறமையுடன் செய்கின்றன. ஆதாரமற்ற அடிப்படையில் கிளின்டன் கவிழ்க்கப்படுவதற்கு
கிட்டத்தட்ட அனுமதித்ததும், 2000 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் திருட்டை ஏற்றுக்கொண்டதும், போர் அல்லது எந்த
அடிப்படைப் பிரச்சினையின் பேரிலும் புஷ்ஷை எதிர்ப்பதில்லை என்று 2002ல் கொண்ட மூலோபாயம் - இடைக்காலத்
தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கு மகத்தான தோல்விக்கு வழி வகுத்தது.
டேவிசும், ஜனநாயகக் கட்சியும், திருப்பியழைத்தல் முயற்சியை முறியடித்து
சாக்ரமென்டோவில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டால், அவை சமுதாய நிலைமைகள் மற்றும் கலிஃபோர்னியாவில்
அடிப்படை ஜனநாயக உரிமைகள் போன்றவற்றில் பிற்போக்குச் சக்திகளின் தாக்குதல்களை குறிப்பிடத்தக்க முறையில்
தடுத்து நிறுத்திவிட முடியாது. ஒரு குறுகிய நிதிரீதியான செல்வந்த தட்டு ஒருபுறமும், பெரும்பாலான மக்கள் மறுபுறமுமாக
இது காறும் இல்லாத அளவு எதிரெதிராக நிற்கும் நிலையில், ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியினர்
போலவே, பிந்தையவர்களின் நலன்களைக் காவு கொடுத்து முந்தையவர்களின் நலனையே பாதுகாப்பர்.
ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பும், கலிஃபோர்னியாவிலும், நாடெங்கிலும் இயற்றப்படும்
பிற்போக்கு சமூகக் கொள்கைகளைத் திரும்பப்பெறலும், உழைக்கும் மக்களின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலில்தான்
தங்கி இருக்கிறது. அதுதான் கலிபோர்னியாவில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் முடிவான இலக்காகும்.
See Also :
குடிமையுரிமை வழக்கறிஞரும் சோசலிஸ்டுமான ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன், கலிபோர்னியாவின் திருப்பி அழைத்தல்
தேர்தலில் வேட்பாளராகிறார்
சோசலிச சமத்துவக் கட்சி கலிஃபோர்னியாவில் ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனின் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கிறது
கலிபோர்னியாவின் கவர்னர் பதவிக்கான சோசலிஸ்ட் வேட்பாளர், ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டன், கிழக்கு அமெரிக்க
மின் இருட்டடிப்பின் மீதான முழு விசாரணையைக் கோருகிறார்
Top of page
|