World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா A travesty of justice: Acquittals in cases of communal violence in India நீதியின் கேலிக் கூத்து: இந்தியாவில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறை வழக்குகளில் விடுதலைகள் By Sarath Kumara சென்ற ஆண்டு மார்ச் மாதம் இந்திய மாகாணங்களில் ஒன்றான குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகள் தொடர்பாக இழுத்தடிக்கப்படும் நீதிமன்ற விசாரணைகள், இந்தியாவின் அதிகாரபூர்வமான நிர்வாக அமைப்பு முழுவதும் எந்த அளவிற்கு இந்து பேரினவாத போக்கில் சிக்கித்தவிக்கின்றது என்பதை அம்பலப்படுத்திக்கொண்டிருக்கின்றன. 2002 பிப்ரவரி மாதம் இந்து தீவிரவாத குழுவான உலக இந்து சபையின் (VHP) ஆதரவாளர்கள் பயணம் செய்த ஒரு இரயிலில் ஏற்பட்ட வன்முறையால் இரயிலில் 58-பேர் மாண்டனர், அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் வன்முறைகள் தலைவிரித்தாடின. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து VHP, பஜ்ரங்தள் மற்றும் இதர பேரினவாத குழுக்கள் உடனடியாக முஸ்லீம்கள் மேல் பழிபோட்டனர். மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் மறைமுக ஆதரவோடு பேரினவாத குழுக்கள் திட்டமிட்டே முஸ்லீம் குடும்பங்கள், அவர்களது வீடுகள் மற்றும் வர்த்தக அமைப்புகள் மீது சூறையாடல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. சுமார் 2500 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், பிரதானமாக முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர், கற்பழிப்பிற்கு இலக்காகினர், அல்லது வீடுகளை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த திட்டமிட்ட வன்முறை மிக விரிவான அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தின் அங்கமாகும். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வி கண்டது. அந்தச் சூழ்நிலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி மற்றும் பி.ஜே.பி-ன் ஒரு பிரிவினர் இந்த வகுப்புவாத கலவரங்களை ஒரு கருவியாக பயன்படுத்திக்ாெகண்டனர். இந்து பேரின வாதத்தை நேரடியாக கிளப்பிவிட்டு சென்ற டிசம்பர் மாதம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்றது. மிகவும் கொந்தளிப்பான வகுப்புவாத சூழ்நிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. தனிப்பட்ட குண்டர்களுக்கு எதிராக அசைக்க முடியாத சாட்சியங்கள் இருந்த நிலையிலும், இந்தக் கலவரங்கள் நடந்து 18 மாதங்களுக்கு பின்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட எவரும் தண்டிக்கப்படவில்லை. இதில் மிக முக்கியமான ஒரு வழக்கு வதோதரா பகுதியில் பெஸ்ட் பேக்கரி (அடுமனை) தீ வைத்து கொளுத்துப்பட்டது சம்பந்தப்பட்டதாகும். இந்த சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர், இவர்களில் 11 பேர் முஸ்லீம்கள் மற்றும் மூவர் இந்துக்கள். ஒரு கும்பல் அந்த பேக்கரிக்கு தீ வைத்தபோது அந்த 14 பேரும் உயிரோடு எரிந்து மாண்டனர். விரைவில் தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்த வழக்கு நடைமுறைகளுக்கு "விரைவு பாதை" அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பலரின் சாட்சியங்களின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர்கள் என்ன நடந்தது என்பதைக் கண்டிருந்தனர் மற்றும் குற்றம் புரிந்தவர்களை அடையாளம் காட்டினர். இந்த வழக்கில் பிரதான சாட்சி சாஹிரா ஹபிபுல்லா ஷேக். இவர் இந்த பேக்கரி உரிமையாளரின் மகள், அவர் தனது பேக்கரி கட்டிடத்தை எவ்வாறு முரடர்கள் தீவைத்து கொளுத்தினார்கள் என்பதை விரிவாக விவரித்தார். தனது தந்தை கொல்லப்பட்ட விபரத்தையும் தெரிவித்தார். ஆனால் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது 73 இதர சாட்சிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த சாஹிராவும் மற்றும் 41 சாட்சிகளும் திடீர் என்று பல்டி அடித்தனர். இப்படி அவர்கள் தங்களது அறிக்கைகளை ஏன் மாற்றிக்கொண்டார்கள் என்பதை பற்றி எந்தவிதமான கேள்வியையும் கேட்காத விசாரணை நீதிபதி எச்.யு.மகிதா உடனடியாக ஜூன் 27 அன்று குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்தார். சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது "ஒரு துளிகூட ஆதாரம் இல்லை" என்று அவர் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சிகள் இட்டுக்கட்டிய தகவல்களை தெரிவித்ததாக நீதிபதி குற்றம் சாட்டினார். அந்த நீதிபதியின் தீர்ப்பு 24 பக்கங்களைக் கொண்டது. தனது தீர்ப்பில் அவர் பார்சி மதக்குழுக்கள் இந்தியாவில் செயல்படுவது குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். எந்த சாதிக்கோ, அல்லது சமுதாயத்திற்கோ எந்தவிதமான இடையூறுகளையும் உருவாக்காமல்" சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வரும் முன்மாதிரி சிறுபான்மை சமுதாயம் பார்சிக்கள் என்று நீதிபதி வர்ணித்திருக்கிறார். இதன் குறிப்பாக சுட்டும் பொருள், முஸ்லீம்கள் முன்மாதிரி சமுதாயம் அல்ல, எனவே அவர்களுக்கு உரிய ஏற்ற தண்டனைதான் கிடைத்திருக்கிறது என்பது தெளிவாகின்றது. அதற்குபின்னர், ஒன்று தெளிவாகத் தெரிந்தது. சாஹிராவும் அவரது தாயாரும் தீர்ப்பிற்கு பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். தாங்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் கொலை செய்துவிடுவதாக மிரட்டப்பட்டதாகவும், இதனால் அறிக்கையை மாற்றிக்கொண்டதாகவும், அவர்கள் தெரிவித்தனர். மும்பையில், ஜூலை 7ந்தேதி சாஹிரா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் "நிதிமன்றத்தில் பொய் சொன்னதாக" சாஹிரா குறிப்பிட்டார். BJP எம்.பி.யான மது சிறீவத்சவ் மற்றும் அவரது மைத்துனரான காங்கிரஸ் அரசியல்வாதி சந்திரகாந்த் "பாட்டு" சிறீவத்சவ் ஆகிய இருவரும் தன்னையும், இதர சாட்சிகளையும் மிரட்டியதாக சாஹிரா குற்றம் சாட்டினார். புரண்ட் லைன் இதழுக்கு சாஹிரா பேட்டியளிக்கையில், "பாட்டு" சிறீவத்சவ் தன்னை அணுகியதாகவும், போலீஸாரும் குஜராத் அரசு வழக்கறிஞரும் சாஹிராவுக்கு எதிராக செயல்பட்டுவருவதாகவும் அவர் சாஹிராவிடம் கூறினார். ``இப்போதே நீ முடிவு செய்தாகவேண்டும், நீ உனது குடும்பத்தின் மற்றவர்களை உயிரோடு வாழவைக்க விரும்புகிறாயா அல்லது இவர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறாயா, இப்போதுகூட நீ சிந்தித்து செயல்படுவதற்கு நேரம் இருக்கின்றது`` என்று சிறீவத்சவ் சாஹிராவிடம் கூறினார். இதர சாட்சிகளும் தங்களது வாழ்விற்கே அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டதாக சாஹிரா குறிப்பிட்டார். நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான விரோத உணர்வுகள் நிலவியதாக தெரிவித்தார். நீதிமன்றத்தில் கொலைகளில் சம்மந்தப்பட்ட பல பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர் அனுமான்தெக்கிரி, அவரை தான் நீதிமன்றத்தில் தனது குடும்ப பேக்கிரியை தீ வைத்து கொளுத்தியவர் என்று அடையாளம் காட்டியதாக சாஹிரா தனது பேட்டியில் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் சாஹிரா மனு தாக்கல் செய்து, இந்த வழக்கை குஜராத் மாநிலத்திற்கு வெளியில் விசாரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சாஹிரா உண்மைகளை அம்பலப்படுத்தியதன் பின்னர், இதர சாட்சிகளும், தாங்களும் மிரட்டப்பட்டதாக அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். நீதிமன்றத்தில் உண்மைகளை சொல்வதற்கு தான் பயந்துகொண்டு இருந்ததாகவும், அந்த அளவிற்கு தனக்கு அச்சம் ஏற்பட்டதாகவும், தற்போது தான் "நேரில் கண்டதை கூறமுடியும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை பெயர் கூற இயலும்" என்றும் ஷேசக்கான் எனும் பெண் தனது பேட்டியில் குறிப்பிட்டார். பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன. சர்வதேச பொதுமன்னிப்பு சபை அந்த வழக்கை மறு விசாரணை செய்யவேண்டும் என்று கோரியுள்ளது. "குஜராத் வகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் உறுதியோடு இல்லை என்பது தொடர்பான அச்சத்தை உறுதிப்படுத்துகிற வகையில் தீர்ப்பு அமைந்திருப்பதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. அமெரிக்காவில் செயல்பட்டுவரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இந்த வழக்குகளில் மாநில ஆட்சி "புலன்விசாரணைகளை சீர்குலைத்துக்கொண்டிருப்பதாக" குற்றம் சாட்டியுள்ளது. பேரினவாத நோக்கில் பாரபட்சம் பெஸ்ட் பேக்கிரி வழக்கு தனிப்பட்ட ஒரு சம்பவம் மட்டுமல்ல. கிராமப் பகுதிகளில் நிலவுகின்ற சூழ்நிலையை காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி அமைப்பிலிருந்து புரண்ட் லைன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் நவாஸ் கொத்துவால் தெளிவாக விளக்கியுள்ளார்: ``அரசு வழக்கறிஞர்களே குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு வழக்கறிஞர்களாகளாக செயல்படுகிறார்கள். வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யப்படவேண்டும் என்பதற்காக அவ்வாறு நடந்துகொள்கிறார்கள். விசாரணையின் மறு பாதியில் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்திலேயே தூங்கிக்கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தில் கண்ணியம் இல்லை. கற்பழிப்பு, அல்லது கொலை சம்மந்தமான சம்பவங்களை சாட்சிகள் விவரிக்கும்போது நீதிமன்றத்தில் வந்திருந்தவர்கள் உரக்கச் சிரித்தனர். தங்களை விடுதலை செய்யவேண்டும் என குற்றம் சாட்டுபவர்கள் கூச்சலிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.`` போலீசாரும், அரசு வழக்கறிஞர்களும் இப்படி பேரினவாத நோக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டுள்ள வழக்குகள் பல இருக்கின்றன. ஆரம்பத்தில் போலீசார் சாட்சியங்களை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். அதற்குப்பின்னர் பதிவு செய்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களது பெயர்களை விட்டுவிட்டனர். ஆரம்பத்தில் 4252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் பாதி வழக்குகளை சாட்சியம் இல்லை என்று சொல்லி போலீசார் கைவிட்டுவிட்டனர். எந்தவிதமான புலன் விசாரணையும் இல்லாமல் பல வழக்குகள் இவ்வாறு கைவிடப்பட்டுள்ளன. வழக்கறிஞர்களும் மற்றும் அரசு வழக்கறிஞர்களும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரோதமாகவே செயல்படுகின்றனர். இந்து தீவிரவாத கும்பல் யூசுப் பாயின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை கொன்று குவித்தது. அவர் NDTV-க்கு அளித்த பேட்டியில், ``நான் கல்வியறிவு இல்லாதவன் எனது வழக்கறிஞர்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும், அதற்காகத்தான் அவர் நியமிக்கப்பட்டார், ஆனால் அவர் எங்களோடு பேசவேயில்லை." மாவட்ட அரசு வழக்கறிஞர் திலீப் திரிவேதி VHP அமைப்பின் மாவட்டத் தலைவர் என்று விளக்கினார். பெஸ்ட் பேக்கரி வழக்குத் தொடர்பாக சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்ததும், இந்திய அரசாங்கம் நியமித்துள்ள மனித உரிமைகள் கமிஷன் (NHRC) இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து குஜராத்துக்கு வெளியில் பெஸ்ட் பேக்கரி வழக்கை நடத்தவேண்டும் என கோரியது. "பெஸ்ட் பேக்கரி வழக்கில் தரப்பட்டுள்ள தீர்ப்பு பல சட்ட அம்சங்களில் கிரிமினல் நீதி நெறிமுறை தவறிவிட்டதை காட்டுவதாக அமைந்திருக்கிறது" என்று NHRC தனது அறிக்கையில் கூறியுள்ளது. குஜராத்தில் நியாயமான விசாரணை நடக்கும் என்பதற்கான சாத்தியக்கூறு எதுவும் இல்லையென்று உச்சநீதிமன்றத்தில் NHRC தெரிவித்தது. ஆயினும் குஜராத் அரசாங்கம் மேல்முறையீட்டைத் தடுத்து நிறுத்த முயற்சித்தது. NHRC அப்பீல் செய்த ஆகஸ்ட் 8 அன்றே மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கவேண்டும். அன்றைய தினமே, பெஸ்ட் பேக்கரி வழக்கில் கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மாநில அரசாங்கம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த நகர்வானது உச்சநீதிமன்ற வழக்கை முன்னரே தனதாக்கிக் கொள்வதற்காக திட்டமிடப்பட்டது மற்றும் மாநிலத்திற்குள்ளேயே நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை கையில் வைத்துக்கொள்ளவும் அவ்வாறு மாநில அரசாங்கம் செயல்பட்டது. குஜராத் மாநில BJP தலைவர் ராஜேந்திரசிங் ராணா NHRC மீது குற்றம் சாட்டினார். அந்த அமைப்பு குஜராத்தின் கீர்த்தியை சிதைத்து வருவதாகவும் பிற மாநிலங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வாய் மூடி மவுனியாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். NHRC முறையீட்டைக் கண்டித்து ஆகஸ்ட் 8 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் அவர் அழைப்பு விடுத்தார். NHRC மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்தில் அந்த அமைப்பின் வழக்கறிஞர் விவாதம் நடத்தும்போது, மாநில அரசாங்கம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதை அதன் நடவடிக்கைகளை மூடிமறைத்து கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கை என்று வர்ணித்தார். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மொட்டையாக ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். ``நம்முடைய நீதி நிர்வாக முறையை மற்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தை நாம் சீர்குலைத்துவிடக்கூடாது`` என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். அவர்களது 7 பக்க தீர்ப்பு NHRC கோரிக்கை மீது எந்த முடிவையும் குஜராத் உயர்நீதிமன்ற முடிவிற்கு பின்னரே அறிவிக்க முடியும் என்ற அளவிற்கு தாமதத்தை ஏற்படுத்தியது.புதுதில்லியில் BJP தலைமையில் நடைபெற்றுவருகின்ற அரசாங்கம் குஜராத் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக பெரும்பாலும் மவுனமாகவே இருந்துவருகிறது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிரான கருத்து உருவாகிவிடக்கூடாது என்பதற்காக எப்போதாவது ஒரு முறை குஜராத் வன்முறைகளை கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள். பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, துணை பிரதமர் எல்.கே.அத்வானி இருவரும் குஜராத் மாநில முதலமைச்சர் மோடிக்கு தங்களது ஆதரவு உண்டு என்பதை தெளிவுபடுத்திவிட்டனர். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலிலும் மற்றும் நான்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும், குஜராத் பாணியிலேயே, பேரினவாத பிரச்சார இயக்கங்களை நடத்த BJP திட்டமிட்டு உள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டும் வகையில் பிரதமர் மற்றும் துணைப்பிரதமரின் நிலைப்பாடுகள் அமைந்துள்ளன. எதிர்கட்சியான காங்கிரஸ் குஜராத் நீதி விசாரணைகளின் முடிவுகளை கண்டித்திருந்தாலும், அந்தக் கட்சியும், இந்து பேரினவாத நோக்கிற்கு தூபம்போட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் அரசியல்வாதியான சந்த்ரகாந்த் சிறீவத்சவ் தனது BJP தொடர்புடைய மைத்துனருக்கு உதவுகின்ற வகையில், பெஸ்ட் பேக்கரி வழக்கில் சாட்சிகளை மிரட்டியிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சியின் போக்கை காட்டுவதாக அமைந்திருக்கிறது. சென்ற ஆண்டு குஜராத் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் பிரச்சாரம் "மென்மையான இந்து பேரினவாதம்" குறுகிய நோக்க அடிப்படையில் அமைந்திருந்தது. அது அடிப்படையில் BJPயிலிருந்து வேறுபட்டதல்ல என்பதை இந்திய செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டின. இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் நிர்வாக அமைப்புக்களும் மற்றும் மாநில நிர்வாக அமைப்பும் அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டுகின்ற வேஷத்தைக்கூட கலைத்துவிட்டு, வகுப்புவாத அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை குஜராத் வகுப்புவாத வன்முறை தொடர்பான வழக்குகள் தெளிவாக பறைசாற்றுகின்றன. |