World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: More than 10,000 dead in record heat wave

பிரான்ஸ்: உச்சநிலையை மீறிய வெப்ப அலையினால் 10,000 த்திற்கு மேற்பட்டோர் உயிர் நீத்தனர்

By Francis Dubois
22 August 2003

Back to screen version

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலையில் கண்டம் முழுவதும் பலர் இறந்தனர். ஆனால் பிரான்சில் தான் மிக அதிக அளவிற்கு வெய்யில் கொடுமையால் மக்கள் மடிந்திருக்கிறார்கள். தொற்றுநோய்போல் வெப்பக் காற்று வீச்சினால் மாண்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

எவ்வளவு பேர் உயிர் நீத்தார்கள் என்ற விபரங்கள் இன்னமும் தெளிவாக தெரியவில்லை என்றாலும் மிகப்பெரும் அளவிற்கு மக்கள் பலியானதால் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு மிகக் கடுமையான அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் வெப்பத்தினால் மடிந்தவர்கள் 5,000 என்று மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பீடு மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி அதிகரிக்கக்கூடும். ஏனெனில், 50 சதவீதத்திற்கு மேற்பட்ட சாவுகள் மருத்துவமனைகளுக்கு வெளியில் நடந்திருப்பதால் அப்படி மாண்டவர்கள் தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

பிரான்சின் முன்னணி கல்லறை பெட்டக நிறுவனம் ஒன்று, 13,000 பேர் வெய்யில் கொடுமையால் மாண்டிருக்கக்கூடும் என வியாழக்கிழமையன்று தந்திருக்கின்ற தகவலில் தெரிவித்துள்ளது.

ஜூன் - ஜூலை மாதங்களில் வழக்கத்திற்கு மாறான வெப்பம் நிலவியதன் பின்னர், ஆகஸ்ட் 6 முதல் 11ந்தேதி வரை 40 டிகிரி சென்டிகிரேட் வரை (104 டிகிரி பாரனைட்) வெப்பம் அதிகரித்தது. அந்த வாரத்தில் மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டது. ஏனென்றால் அளவிற்கு அதிகமான மக்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் உடல்நலம் குறைந்தவர்கள் தொற்றுநோய் கண்டவர்கள் வெப்பத்தின் கொடுமை தாளாமல் அவசர உதவி வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டனர்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வெயில் கொடுமை சாவுகளைவிட இந்த ஆண்டு மாண்டவர்கள் எண்ணிக்கை நான்கு மடங்காக பாரீஸ் பிராந்தியத்தில் அதிகரித்திருக்கிறது. பெரும்பாலோர் நா வறட்சியாலும் அல்லது திடீர் என்று வெப்பத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும் மாண்டிருக்கின்றனர். மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்கு முன்னர் சிலர் இறந்துவிட்டனர். மடிந்தவர்களில் 80சதவீதம் பேர் 75 வயதைக் கடந்தவர்கள் ஆவர்.

மருத்துவமனைகளில் வெய்யிலினால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவது அளவிற்கு அதிகமாக சென்றுவிட்டதால் ஒரு கட்டத்தில் மருத்துவமனைகள் அத்தகைய பாதிக்கப்பட்ட மக்களை அனுமதிப்பதை நிறுத்திவிட்டனர். அந்தந்த இடங்களிலேயே சமாளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் விளைவாக ஹோட்டல்கள், தங்களது வீடுகள் அல்லது, பெரும்பாலும் முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் கூட பலர் மடிந்துவிட்டனர். வீடற்றவர்கள் தெருக்களில் பலியாகிக் கிடந்தனர்.

கல்லறைகளிலும், மருத்துவமனை பிண அறைகளிலும் மாண்டவர்கள் எண்ணிக்கை பெருகிவந்ததால் பல நாட்கள் இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்படாமல் உடல்கள் சிதையும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இப்படி மாண்டவர்கள் தொகை பெருகிக்கொண்டே வந்ததால் பழமைவாத அரசாங்க பிரதமரான ஜோன் பியர் ரஃபரன், 18-ந் தேதியன்று பழைய பழம் மற்றும் காய்கறி அங்காடியில் மத்திய பிண அறையை திறப்பதற்கு முடிவு செய்தார். பாரிஸ் நகரத்திற்கு தெற்கே ரோஞ்ஜிஸ் (Rungis) என்ற இடத்தில் இந்த மத்திய பிண அறை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திடீர் பிணவறையில் ஒரே நேரத்தில் 2,000 உடல்களை வைத்திருக்க முடியும்.

இப்படி புதிய பிணவறை தேர்வுசெய்யப்பட்டிருப்பது ரஃபரன் மற்றும் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் அணுகுமுறைக்கு பொருத்தமான அடையாளச் சின்னமாகும். உறவினர்கள் அல்லது நண்பர்களை இழந்துவிட்ட பல்லாயிரக்கணக்கனோரைப் பொறுத்தவரை அவர்களுடைய முகத்தில் நேரடியாக அறைவதற்கு ஒப்பானதாகும்.

வானிலை ஆய்வு அலுவலகம் விடுத்திருந்த எச்சரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்துவிட்டது. பிரான்சில் ஒரு சில தனியார் இல்லங்கள் அல்லது அலுவலகங்களில்தான் குளிரூட்டி வசதிகளுள்ளன. எனவே வெப்ப வீச்சின் விளைவுகளை எதிர்பார்த்து நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறிவிட்டது. ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட நெருக்கடியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க மறுத்ததன் மூலம் அரசாங்கம் அதன் கடமையை தவறுதல் அதிகரித்தது.

பல சாவுகளை தவர்த்திருக்க முடியும் என பல்வேறு மருத்துவர்களும், பொது சுகாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகஸ்ட் 7ந் தேதியன்றே வானிலை ஆய்வு நிலையம் வெப்பத்தால் வரும் கடுமையான விளைவுகள் குறித்து தகுந்த எச்சரிக்கை செய்திருந்தும், அவசர உதவித் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தும், அரசாங்கம் முற்றிலும் அசட்டைப் போக்குடன் நடந்துகொண்டது. இதன் விளைவாக, வெப்பத்தால் உருவாகும் நெருக்கடிகள் குறித்து பொது சுகாதாரத் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பகிரங்க மோதல்கள் உருவாயின. ஆகஸ்ட் இரண்டாம் வாரம் அசட்டையாகவும் கவனக்குறைவாகவும் நடந்துகொண்டதாக அரசாங்கம் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது.

உருவாகிக்கொண்டுள்ள கடுமையான நெருக்கடியைச் சமாளிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, பயங்கரவாதிகள் திடீர்த் தாக்குதல் அல்லது இயற்கை சீற்றங்களால் உருவாக்கும் நிலவரத்தைச் சமாளிப்பதற்குத் தயாரிக்கப்பட்ட பொதுவான திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, நெருக்கடி நிர்வாக நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியது. ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே மருத்துவமனைகளும், அவசர சேவை நிலையங்களும், வெப்பத்தால் மாண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பாகத் தகவல்களைத் தந்துகொண்டிருந்தன. அப்படி இருந்தும் ஆகஸ்ட் இரண்டாவது வார நடுவில் அத்தகைய சாவுகள் அனைத்தும் ``இயற்கையாக முதிர்ச்சியால் வந்தவை`` என அரசாங்கம் தெரிவித்தது.

அரசாங்கத்தின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து பிரான்சின் அவசர உதவி மருத்துவர்கள் சங்க தலைவர் பாட்ரிக் பெல்லொக்ஸ் உடனடியாக ``அரசாங்கம் துணிச்சலாக இயற்கை சாவுகள் என்று கூறுகின்றது. அத்தகைய கூற்றில் எனக்கு முற்றிலும் உடன்பாடு எதுவும் கிடையாது`` என அறிக்கை வெளியிட்டார்.

ஆகஸ்ட் 11-ந் தேதி கூட பிரான்சின் பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மருத்துவமனைகளில் அவசர சேவைப் பிரிவுகளில் மிகப்பெரும் அளவிற்கு கூட்டம் திக்குமுக்காடவில்லை" என்றும், "பாரிஸ் நகரப் பகுதியில் சில மருத்துவமனைகளில் ஓரிரு சிகிச்சை பிரிவுகளைத் தவிர மற்ற எல்லா மருத்துவமனைகளிலும் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது சில சங்கடங்கள் நிலவத்தான் செய்தன" எனக் கூறியது.

ஆகஸ்ட் 13-ந்தேதி தான் அவசர மருத்துவ உதவித் திட்டம் செயல்படத் தொடங்கியது, பொதுமக்களது கண்டனம் உரத்த குரலில் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து வெப்ப வீச்சு உச்சகட்டத்தை எட்டிய பின்னர் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் போக்குவரத்து வசதி, படுக்கைகள் மற்றும் கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிப்பதற்கான திட்டம் (வெள்ளைத் திட்டம் Plan blanc) என்று கூறப்படுவது செயல்படத் தொடங்கியது.

கடந்த சில வாரங்களில் அரசாங்கத்தின் அணுகுமுறையால் மட்டுமே இந்த நிலவரம் ஏற்பட்டுவிடவில்லை. பல மருத்துவர்களும், சுகாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல், ஒப்பீட்டளவில் நடைமுறைப்படுத்துதற்கு எளிதான தற்காப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதது மற்றும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பொது மருத்துவமனைகள் நிதிப் பற்றாக்குறையில் இயங்குவதுதான் இந்த மோசமான நிலவரத்திற்கு காரணமாகும். மருத்துவமனைகள் நிதி இன்றிக் கிடக்கின்றன. எதிர்பாராத அவசர நிகழ்ச்சிகளின் போது செலவிடுவதற்கு மருத்துவமனைகளில் பணம் இல்லை, மேலும் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதற்கும் வசதி இல்லை.

நெக்கெர் (Necker) மருத்துவமனையின் பாரிஸ் அவசர வாகன சேவை SAMU (Paris ambulance service) அமைப்பின் தலைவரான பேராசிரியர் பியர் கார்லி (Pierre Carli) மற்றும் பாரிஸ் மருத்துவமனை அவசரப் பிரிவுகளின் தலைவர் பேராசிரியர் புருனோ ரியோ இருவரும் கருத்து தெரிவிக்கும்போது இந்த வெப்ப தாக்குதல்கள் மருத்துவ துறையில் நிரந்தரமாக நிலவுகின்ற பற்றாக்குறையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றது என கருத்து தெரிவித்தனர். இந்த நிலை (வெப்பத்திற்கு பலியானவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கூட இல்லை) மிகப்பெரிய மோசடியாகத் தெரியுமாயின், இப்படி ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒவ்வொரு நாளும் தொற்றுநோய் இல்லாவிட்டாலும் மோசடிகள் நடந்துகொண்டே இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது" என இருவரும் கருத்து தெரிவித்தனர்.

ஜூலை மாத இறுதியிலேயே அவசர சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை ஒன்றை விடுத்தது. கோடை விடுமுறை மாதங்களில் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தான நிலையை உருவாக்கியிருப்பதாக அவர்கள் அப்போது எச்சரிக்கை செய்தனர். இந்த கோடை மூடல்கள் மருத்துவமனை படுக்கைகள் பொதுவாக குறைக்கப்பட்டிருக்கின்ற நிலையைச் சமாளிக்க மேற்கொள்ளப்பட்டவை ஆகும்.

முதியோர் இல்லங்களுக்கான இயக்குநர்கள் சங்கத்தலைவர் பஸ்கால் ஷோம்வெர் (Pascal Champvert) முதியோர் இல்லங்களில் ஊழியர்கள் இல்லாதிருக்கும் நிலவரத்தை கண்டித்தார். இதன் காரணமாகத்தான் வெப்பத் தாக்குதலில் பலர் மாண்டார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். ``பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்துவிட்டனர்" இதற்குக் "காரணம் முதியோர் இல்லங்களில் போதுமான அளவிற்கு ஊழியர்கள் இல்லாததுதான் இதுபோன்ற நிலவரங்களில் ஊழியர்கள் இல்லாவிட்டால் ஒவ்வொரு நாளும் சாவுகள் அதிகரிக்கவே செய்யும்`` என்று அவர் குறிப்பிட்டார். 2003 தொடக்கத்தில் "முடக்கப்பட்டுவிட்ட" முதியோர் இல்லத்திற்கான 100 மில்லியன் யூரோ கடன்களை சுகாதார அமைச்சர் மீண்டும் அனுமதிக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

வித்றி சூர் சேன் (Vitry sur Seine) என்ற இடத்தில் ஒரு முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மருத்துவர் தகவல் தரும்போது 72 முதியோர்களுக்கு ஒரு செவிலியர்தான் பணியாற்றி வருகிறார் மற்றும் சில ஊழியர்கள் பயிற்சி பெறாதவர்கள் எனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தினுடைய அலட்சியப்போக்கு கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கியதும் அரசாங்கம் தற்காப்பு சமாதானங்களை சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அறியாமையும், அகம்பாவமும் நிறைந்த அறிக்கைகளை அரசாங்கம் விடத்தொடங்கியது. சேதத்தை கட்டுப்படுத்தினால் போதும் என்ற நிலை உருவாயிற்று. அதே நேரத்தில் கொள்கை அடிப்படையில் காரசார வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம் என எதிர்கட்சிகளுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது.

ரஃபரன் ஆகஸ்ட் 14 அன்று தனது ஓய்வு நாட்களை குறைத்துக்கொண்டு திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெருகிவரும் சாவுகளுக்கு பொதுமக்கள் தான் காரணம் என ஆரம்பத்தில் ரஃபரன் பழிபோட்டார். தங்களது வயதான உறவினர்களை எந்தவிதமான உதவியும் இல்லாமல் விட்டுவிட்டு விடுமுறையில் சென்றுவிட்ட குடும்பங்களை அவர் கண்டித்தார். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கின்ற வகையில் மாண்டவர்களில் பாதிப்பேர் முதியோர் இல்லங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல என்ற விபரம் வெளியாயிற்று.

அதே நேரத்தில் அவரும் அவரது சுகாதார அமைச்சர் ஜோன் பிரான்சுவா மாட்டியும் (Jean François Mattei) ஐக்கியம் மற்றும் பரிவிரக்கம் பற்றி போதனை செய்தனர். துல்லியமாகததை அரசாங்கம் வெளிக்காட்டத் தவறியது. ரஃபரன், பூர்கோயின் (Bourgogne) பகுதியில் விரைந்து சென்று ஒரு முதியோர் இல்லத்தை பார்வையிட்டார் (அந்த இல்லத்தில் யாரும் வெப்ப வீச்சால் இறந்துவிடவில்லை). முதியவர்கள் மற்றும் வயதானவர்கள் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் அரசாங்கம் விட்டுவிட்டது என்ற கண்டனங்களுக்கு மிகுந்த தாமதமாக பதிலளிக்கின்ற வகையில் ரஃபரன் ஒரு முதியவர் கூட பலியாகாத முதியோர் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டிருக்கிறார்.

பிரெஞ்சு புரட்சியின்போது 1789-ம் ஆண்டு மரி அந்துவானெற் (Marie Antoinette) மிகுந்த இறுமாப்போடு பசிக்கு உணவு கேட்டவர்களை நோக்கி ``அவர்கள் கேக்குகளை சாப்பிடட்டும்!`` என சொல்லியதைப்போன்ற இழிபுகழ் பெற்ற வார்த்தைகளைக் கொண்டு இன்றைய சுகாதார அமைச்சர் மாட்டி அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு பேட்டியில் அவர் குறிப்பிடுகையில், வெப்பத்தால் முதியோர்கள் இறந்ததற்கு காரணம், அவர்களில் அனேகரின் சராசரியாக வாழ்வதற்கான வயதுக்காலம் அதிகரித்ததன் விளைவே என்றார்.

அரசாங்கத்தின் மந்திரச் சொற்களில் ஒன்று வெப்பத்தாக்கு தங்களது பொறுப்பல்ல என்பதுதான். ``கார்கள் செல்லும் பெருஞ்சாலைகளில் அங்காங்கே அமைந்திருக்கும் சேவை நிலையங்களில் கைக்குழந்தைகளுக்கு குடி தண்ணீர் போத்தல்களை வழங்குவதுதான் அரசாங்கத்தின் பங்கு என்று நீங்கள் கூறுகிறீர்களா?`` என்று அந்த அதிகாரி கேட்டதாக மேற்கோள் காட்டப்பட்டது.

தனது அதிகாரிகள் உடனடியாக நெருக்கடியின் கடுமையான தன்மை குறித்து தகவல் தராததால் தான் கவனம் செலுத்த இயலவில்லை என்று பழிபோட்டு கண்டனங்களை திசை தடுமாறச் செய்ய முயன்றார். நாடு முழுவதிலும் பொதுசுகாதார நிலையை கண்காணிப்பதற்கு பொறுப்பு வகிக்கும் பொது சுகாதார இயக்கு நிர்வாகத்தின்மீது (DGS) மீது குற்றம்சாட்டினார். இதனால் DGS தலைவர் லூசியன் அபென்ஹாம் (Lucien Abenhaïm) பதவி விலகினார். பதவி விலகிய பின்னர் அவர் அளித்த பேட்டிகளில் வெப்பச் சாவுகள் குறித்து அரசாங்கத்தின் தகவல்களை மறுத்தார். உரிய நேரத்தில் தேவையான எச்சரிக்கைகளை தான் தனது அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வெளியிட்டு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நெருக்கடியை சமாளித்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் முதியோர் இல்லங்களின் அலுவலர்கள் ஆகியோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் அவர்களுக்கு கையூட்டு கொடுக்கின்ற கொச்சையான முயற்சியாகவும் சுகாதார அமைச்சர் மாட்டி உறுதிமொழி தந்திருக்கிறார். வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த அலுவலர்களுக்கு ரொக்கப்பணம் தருவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

சிராக் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சென்ற ஆண்டு ரஃபரன் ஆட்சி பதவிக்கு வந்தது. பிரான்ஸ் அரசியலில் இடம்பெற்றுள்ள அதிகாரபூர்வமான இடதுசாரி அணியினர் அனைவரும்-- சோசலிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட் கட்சி, பசுமை கட்சி மற்றும் "அதி இடதுகள்" என்று அழைக்கப்படும் அனைவரும் சிராக் மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என இரண்டாவது சுற்று வாக்குப்பதிவில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்தனர். ஏனெனில் முதல் சுற்று வாக்குப்பதிவில் சோசலிச கட்சி வேட்பாளர் லியோனல் ஜோஸ்பனை, தேசிய பாசிச முன்னணி வேட்பாளர் லு பென் ஐ தோற்கடித்துவிட்டார். எனவே இந்த "இடது" சக்திகள் சிராக்கை பாரம்பரிய வலதுசாரி கட்சிகளிலேயே முன்னணித் தலைவர் என்றும் லு பென்னுக்கு எதிராக நின்று ஜனநாயகத்தை காப்பவர் என்றும், எனவே உழைக்கும் மக்கள் தங்களது மகத்தான ஆதரவை அவருக்கு தரவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்துவந்தனர். இதன் விளைவு சிராக் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப்பின்னர் உடனடியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரி கட்சிகள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

நாடாளுமன்றத்தில் வலதுசாரி கட்சிகளுக்கு பெருமளவில் பெரும்பான்மையிருந்தும் இன்றைய தினம் வெப்ப அலையால் ரஃபரனுக்கும், சிராக்கிற்கும் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி எடுத்துக்காட்டுவது என்னவென்றால் எந்த அளவிற்கு வலதுசாரி ஆட்சி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு பலவீனமாக உள்ளது என்பதைத்தான். கோடிக்கணக்கான ஏழை மக்கள் துயரத்தில் சிக்கிக்கொண்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் ஏழை மக்களோடு எந்தவகையிலும் தொடர்பு இல்லாதவர்கள், அவர்கள் மிக குறுகலான பணக்கார பெரும்பணக்கார வட்டாரத்தைச் சார்ந்தவர்கள், அவர்கள் வந்திருக்கின்ற அரசியல் பாரம்பரியமும் மிகக்குறுகலான சமுதாய அடிப்படைகளைக் கொண்டது.

இப்போது ஏற்பட்டுள்ள சுகாதாரப் பேரழிவு பிரெஞ்சு சுகாதார முறை பற்றிய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த எண்ணங்களின் விளக்கமாக அமைந்திருக்கின்றது. ரஃபரன் மற்றும் சிராக் விரும்புகின்றதை விட என்ன வரும் என்பதையிட்டு மக்களை விழிப்படையச் செய்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னர் தொடக்கப்பட்டு இதுவரை நடைமுறையில் இருந்துவரும் சுகாதார சேவை திட்டங்களின் அடிப்படைகளையே தகர்க்கின்ற வகையில், அரசாங்கம் சுகாதார காப்பீடு திட்டங்களின் அடிப்படையை சிதைப்பதற்கு நடவடிக்கைகளை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் இந்நெருக்கடி உருவாகியுள்ளது.

தொழிலாளர்களது ஓய்வூதிய உரிமைகள் மீது ஆட்சியாளர்கள் வரலாறு காணாத தாக்குதலை தொடுத்து முடித்த சில வாரங்களில் இந்த அரசியல் நெருக்கடி தோன்றியிருக்கின்றது. ஓய்வூதிய உரிமைகளை வெட்டுவதற்கு எதிராக நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் மற்றும் கண்டனப் பேரணிகள் தொழிற்சங்கங்களால் சீர்குலைக்கப்பட்டு இத்தாக்குதல் ஊக்குவிக்கப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அதிகாரபூர்வமான இடதுகள் சரியான பிரதிபலிப்பை காட்டவில்லை. ரஃபரன் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை மட்டுப்படுத்தும் வகையில்தான் அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. சோசலிச கட்சியின் தேசிய செயலாளர் பிரான்சுவா ஹாலன்ட் (François Hollande) மிகவும் மிதமாக ஆட்சியை கண்டித்தார். மாட்டி ராஜிநாமா செய்யவேண்டும் என பசுமைக் கட்சிக்காரர்கள் கோரினர். இந்த நெருக்கடியில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற குழு விசாரணைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என சில இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகள், வெப்ப தாக்குதலில் அரசாங்க நடவடிக்கை "படுதோல்வி" என்று வர்ணித்தனர். அரசியல் கோரிக்கைகள் எதையும் எழுப்புவதற்கு முன்வராது தவிர்த்தனர்.

இந்த நெருக்கடிக்கு மூலகாரணம் என்ன என்பதை இந்தக் கட்சிகளில் எதுவும் ஆராயவில்லை. அல்லது பிரெஞ்சு முதலாளித்துவ அமைப்பு முறையின் தோல்வியை அவர்கள் ஆராயவில்லை. இப்படி அவர்கள் நடந்துகொண்டதில் வியப்பு எதுவும் இல்லை. ஏனென்றால் இதே இடதுசாரி கட்சிகள் ஓராண்டிற்கு முன்னர் ஆட்சியிலிருந்தபோது சுகாதார சேவைகளை குறைக்கின்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved