US, Europe intervene to protect oil interests
கீமீst கியீக்ஷீவீநீணீ: சிஷீuஜீ ணீதீஷீக்ஷீtமீபீ வீஸீ ஷிஏஷீ ஜிஷீனீங ணீஸீபீ
றிக்ஷீவீஸீநீவீஜீமீ
அமெரிக்கா, ஐரோப்பா எண்ணெய் நலன்களை காப்பதற்கு தலையீடு
மேற்கு ஆபிரிக்கா: சாட்டோமே மற்றும் பிரின்சைப்பில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி
By Brian Smith
29 July 2003
Back to screen version
மேற்கு ஆபிரிக்க கடற்கரைப் பகுதியை சார்ந்துள்ள அட்லாண்டிக் தீவுகளான சாட்டோமே
மற்றும் பிரின்சைப்பில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியானது, சர்வதேச தலையீட்டின் மூலம் ஒரு வாரத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பொதுமக்களிடம் ஆதரவு இருப்பதாக தெரியவில்லை.
இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை ஆபிரிக்க யூனியன் (AU),
முன்னாள் காலனி ஆதிக்க நாடான போர்த்துக்கல், ஐ.நா. மற்றும் அமெரிக்கா ஆகியவை கிளர்ச்சிக்காரர்கள் மீது நிர்பந்தங்களை
கொடுத்து ஒரு முடிவிற்கு கொண்டு வந்துள்ளன. வெளிநாட்டு தொடர்புகளை துண்டித்து விடுவதாகவும், உயிர்நாடியான
உதவிகளை வெட்டிவிடுவதாகவும் உலக வங்கி கிளர்ச்சிக்காரர்களுக்கு அச்சுறுத்தலை விடுத்தது. நைஜீரியாவும், ஆபிரிக்க
யூனியனும் இராணுவத்தை அனுப்பி தலையிடுவதற்காக ஒரு கலந்துரையாடலையும் நடத்தியது.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி ஒரு முடிவிற்கு வந்ததும், ஆபிரிக்காவிற்கான கம்பெனிகள் குழுத் தலைவர்
ஸ்டீபன் ஹைய்ஸ், ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அமெரிக்க முதலீட்டாளர்கள் இதற்கு முன்னர் நடந்துகொண்டதைவிட தற்போது
சாட்டோமே மற்றும் பிரின்சைப் தீவுகளில் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அவர்
அறிவித்தார்.
சாட்டோமே ஏழ்மை மிக்க ஒரு நாடு. அந்நாட்டு மக்களது சராசரி வருமானம் ஒரு
நாளைக்கு 70 அமெரிக்க சென்டுகள். இது ஆண்டிற்கு 280 அமெரிக்க டொலர்களாகின்றது. சென்ற ஏப்ரல் மாதம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கோரி அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற கண்டனப் பேரணியில் கலந்துகொண்ட ஒரு
இளைஞர் கொல்லப்பட்டார். இந்த நாடு விவசாயப் பொருளதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் பிரதான
ஏற்றுமதி கொக்கோ ஆகும். ஆண்டிற்கு கொக்கோ மூலம் 4 மில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன.
இப்படிப்பட்ட ஒரு நாட்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு சர்வதேச அளவில்
அக்கறை ஏற்பட்டிருப்பதில் முக்கியமான காரணம் உண்டு. மேற்கு ஆபிரிக்காவில் கினி வளைகுடாப் (Gulf
of Guinea) பகுதியில் ஏராளமான எண்ணெய் வளம் ஆழ்கடல் பகுதிக்கு கீழே மண்டிக்கிடப்பதாக பூகோள
புள்ளி விபரங்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த எண்ணெய் வளத்தை கண்டுபிடித்து வெளியில் எடுப்பதற்கு புதிய
தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி எண்ணெய் வளத்தை வெளியில் எடுத்து விற்பனைக்கு விடுவது,
பொருளாதார ரீதியில் கட்டுபடியாகும் என்று கருதப்படுகின்றது. அந்த இரண்டு தீவுகளையும் சுற்றி 10 பில்லியன் பீப்பாய்களுக்கு
மேற்பட்ட எண்ணெய் வளம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒரு நாளைக்கு 3 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்கின்ற
வாய்ப்பும் உள்ளது.
சாட்டோமே தற்போது நைஜீரியாவுடன் இணைந்து தனது கடல் எல்லைக்குள் எண்ணெய்
வளத்தை கண்டுபிடிப்பதற்கான உரிமங்களை ஏலம் விட்டுக்கொண்டிருக்கின்றது. 2004 துவக்கத்தில் இதற்கான அனுமதிகள்
ஏலம் விடப்பட இருக்கின்றன. 2006-2007 ம் ஆண்டில் எண்ணெய் உற்பத்தி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நைஜீரியாவுடன் 2001 ம் ஆண்டில் சாட்டோமே உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டது.
ஆபிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்கின்ற நாடு நைஜீரியா ஆகும். இவை இரண்டும் இணைந்து தங்களது கடல்
எல்லையில் கூட்டு வளர்ச்சி மண்டலத்தை (Joint Development
Zone - JDZ) உருவாக்க உடன்படிக்கை செய்துகொண்டிருக்கின்றன. இந்த
JDZ கூட்டு வளர்ச்சி ஆணையம்
(Joint Development Authority - JDA) மூலம் நிர்வகிக்கப்படும். இதில் கிடைக்கும் வருவாயில்
நைஜீரியாவிற்கு 60 வீதமும், சாட்டோமே நாட்டிற்கு 40 வீதமும், JDZ
மூலம் எதிர்காலத்தில் பகிர்ந்துகொள்ள உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன.
JDZ ஒன்பது கடல் எல்லை பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிளாக்கும் உரிமத்திற்கு விடுவதன் மூலம் குறைந்தபட்சம் 30 மில்லியன் வருவாய் கிடைக்கும். உரிமங்கள் வழங்குவதன்
மூலம் மட்டுமே 100 மில்லியன் டொலர்கள் வரை வருவாய் பெற முடியும் என்று சாட்டோமே நம்புகிறது. 100 மில்லியன்
டொலர் என்பது இந்த நாட்டு வரவு செலவு திட்டத்தின் இருமடங்கு தொகையாகும்.
JDA நைஜீரியாவிற்கு எந்த கடல்
பிளாக்கை தேர்ந்தெடுத்து எண்ணெய் வளம் கண்டுபிடிப்பது என்பதில் முன்னுரிமை தருகிறது. இப்படி சலுகை வழங்கப்படுவதற்குப்
பதிலாக சாட்டோமே நாட்டிற்கு ஒரு நாளைக்கு 10,000 பீப்பாய்கள் எண்ணெய் வழங்கப்படும். ஆனால்,
சாட்டோமே ஜனாதிபதி டி-மெனாசிஸ் ஆரம்பத்தில் கேட்டுக்கொண்டதைப்போல், தினசரி 40,000 பீப்பாய்கள் வழங்கப்படவேண்டும்.
எதிர்காலத்தில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுவதில் நைஜீரியாவிற்கு அளவிற்கு அதிகமான கட்டுப்பாட்டு உரிமை வழங்கப்பட்டிருப்பதாக
அவர் குறிப்பிட்டார்.
இரத்தம் சிந்தாத இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியானது, ஜூலை மாதம் 16 ந் தேதி
அதிகாலை 3 மணிக்கு துவங்கியது. துப்பாக்கி சுடுவதும், வெடிகுண்டுகள் வெடிக்கும் ஓசையும், கிளர்சிக்காரர்கள் அரசாங்க
வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள், விமான நிலையம் மற்றும் மத்திய வங்கியை பிடித்துக்கொண்டனர்.
துருப்புக்கள் தெருக்களில் ரோந்து சுற்றி வந்தன. அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மரியதாஸ்
நீவ்ஸ் அவரது அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவர்.
பிரதமர் கைது செய்யப்பட்ட பின்னர் மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவருக்கு இதய
நோய் தொடர்பாக சிகிச்சை தரப்பட்டது.
அந்த நேரத்தில் வெளியுறவு அமைச்சர் மாத்யூஸ் மீராரீட்டா போர்த்துக்கல்லில் இருந்ததினால்,
அவர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பினார். நைஜீரியாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக
சென்றிருந்த ஜனாதிபதி மென்சிஸ் கைதிலிருந்து தப்பிக் கொண்டார். இச் சம்பவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜார்ஜ்
W. புஷ்,
ஆப்பிரிக்க - அமெரிக்க உச்சி மாநாட்டை நைஜீரியாவில் உள்ள அபுஜா நகரில் துவக்கி வைத்தார். 30 நாடுகளின்
பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் ஜனாதிபதி மென்சிஸ் கலந்துகொண்டார்.
சாட்டோமே இராணுவ பயிற்சி நிலைய தலைவர் மேஜர் பெர்னான்டோ கபோ-பெரேரா
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு கிளர்ச்சியை தலைமையேற்று நடத்தினார். இந்த முயற்சிக்கு, சபினோ சந்தோஷ் மற்றும் ஆர்லிசியோ
கோஸ்ட்ரா ஆகியவர்களின் தலைமையிலிருக்கும் எதிர்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி (Christian
Democratic Front - FDC) தனது ஆதரவை வழங்கியது.
இக்கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கிடையாது. இக் கட்சியில் இடம்பெற்றுள்ள தனி நபர்கள் இன ஒதுக்கல்
கொள்கை தென் ஆபிரிக்காவில் கடைபிடிக்கப்பட்டு வந்த காலத்தில் கூலிப் பட்டாளமாக சென்று போர்ப் பயிற்சி பெற்றவர்கள்.
அவர்களில் சிலர் 1990 களில் அங்கோலாவில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையில் பங்கெடுத்து கொண்டவர்கள். சிலர்
காபொனுக்கு (Gabon)
நாடு கடத்தப்பட்டு வாழ்ந்து வந்தனர். இவர்கள் காபொனை தளமாகக் கொண்டிருந்து, 1988 ம் ஆண்டு
சாட்டோமோ மீது தோல்வியில் முடிந்த படையெடுப்பிலும் பங்கு எடுத்துக் கொண்டனர்.
இந்த கிளர்ச்சியின் போது, பெரேரா தன்னை தலைமை தளபதி என்று வானொலி ஒலிபரப்பில்
பிரகடனப்படுத்திக் கொண்டார். எல்லா அரசாங்க அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய போலீஸ்
தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என்று கட்டளையிட்டார். 55 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 15 பேர் அவ்வாறு
ஆஜரானார்கள். நாட்டில் நிலவுகின்ற அரசியல் குழப்பம் மற்றும் கடுமையான பொருளாதார நிலைப்பாடுகள் இவற்றால்
இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றதாக அவர் அறிவித்தார். பொதுமக்கள் வறுமையில் நசுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆட்சியில் உள்ளவர்கள் பணக்காரர்களாக உயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். தேசிய மீட்புக்குழு
இந்த நிலையை தலைகீழாக மாற்றி நாட்டை சீரமைக்கும் என்று அவர் பிரகடனப்படுத்தினார். நாட்டு நிர்வாகத்தின்
எல்லாக் கிளைகளும் மூடப்பட்டு, அதிகாலை முதல் இரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. .
ஊதியம் மற்றும் வேலை நிலைப்பாடுகள் தொடர்பாக இராணுவத்தில் பரவலாக நிலவுகின்ற
மனக்குறையும், அதனால் இராணுவத்தை சீரமைக்க திட்டமிடவேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகளால் இந்த ஆட்சி கவிழ்ப்பு
தூண்டப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் எண்ணெய் வள வருவாயில் பங்குபெறுவதற்கு
பிரமுகர்கள் குறிப்பாக இராணுவ அதிகாரிகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக
பரவலாக நம்பப்படுகின்றது. ''சாட்டோமோவில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது எனக்கு தெரியவில்லை''
என்று ஐ.நா.வில் அமெரிக்காவின் தூதராக பணியாற்றிய கிருஸ்தவ பாதிரியார் ஆண்ட்ரூயங்
(Andrew Young)
கருத்து தெரிவித்தார். அபுஜாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு தலைமை வகித்து உரையாற்றிய அவர், ''அந்த
நாட்டில் ஏராளமாக எண்ணெய் வளம் கிடைக்கிறது என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை''
என்று அறிவித்தார்.
நைஜீரிய தூதரகத்தை துருப்புக்கள் சுற்றி வளைத்துக் கொண்டன. நைஜீரியாவின் சொத்துக்களுக்கோ,
அந்நாட்டின் குடிமக்களுக்கோ எந்த அச்சுறுத்தல் வந்தாலும், அதற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கவேண்டிவரும்
என்று நைஜீரியா அறிக்கை வெளியிட்டது. இரண்டு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள உடன்படிக்கைகளை
புதிய ஆட்சிக்குழு ரத்து செய்யும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதாக நைஜீரிய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள்
தெரிவித்தனர். எண்ணெய் தூர்ப்பன பணிகளை பொறுத்தவரை சாட்டோமோ கடற்பகுதி பிளாக்குகள் இல்லாமலேயே தனது
சொந்த கடற்பகுதியில் நைஜீரியா எண்ணெய் வள துரப்பனப் பணிகளை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் மிகுந்த
பரபரப்போடு நைஜீரியா இயங்கி வருகிறது என்று அந்த அமைச்சக அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனும், குறிப்பாக அமெரிக்காவும் புதிய எண்ணெய் வளங்களை
கண்டுபிடிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றன. மேற்கு ஆபிரிக்க பகுதிகளில் இருந்து ஐரோப்பாவிற்கும் அல்லது அமெரிக்காவிற்கும்
நேரடியாக எண்ணெய் சப்ளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொக்கோ தொழிலில் முன்னாள் அதிபரான டி மென்சிஸ் 2000 ம் ஆண்டு செப்டம்பரில்
நடைபெற்ற தேர்தலில் 65 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிநாடுகளின்
எண்ணெய் நிறுவனங்கள் தந்த பணத்தை பயன்படுத்தியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 2002 மார்ச் மாதம்
நடைபெற்ற தேர்தலில் அரசாங்கத்தரப்பினரும், எதிர்க்கட்சிகாரர்களும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரக்
குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டனர். அங்கோலா தாய்வான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் தலையீடுகளை பயன்படுத்திக்
கொண்டதாக இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை எழுப்பின. 1995 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆட்சி
கவிழ்ப்பு முயற்சியில் 900 துருப்புக்களைக் கொண்ட இந்த நாட்டு இராணுவம் சிறிது நாட்களுக்கு ஆட்சியை
பிடித்துக்கொண்டது. இருப்பினும் அங்கோலா தலையிட்டு ஒரு உடன்படிக்கை உருவாவதற்கு நிர்பந்தம் செய்ததால், இராணுவம்
தனது நிலையை கைவிட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில் டி மென்சிஸ் ஐந்து பிரதமர்களை நியமித்திருக்கிறார். சென்ற
ஜனவரி மாதம், எண்ணெய் வளத்துறை யார் பொறுப்பில் இருப்பது, எண்ணெய் தூர்ப்பன பணிகளில் எந்த நிறுவனத்தை ஈடுபடுத்துவது,
எந்த நிறுவனத்திற்கு அதற்கான உரிமை தருவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் துவங்கியதும் அவர் நாடாளுமன்றத்தை
கலைத்தார். நாடாளுமன்றம் மீண்டும் கூடப்பட்டதும், அதே கருத்து வேறுபாடுகள் மீண்டும் தலைதூக்கத் துவங்கின.
தன்னுடைய ஆட்சியை கவிழ்ப்பதற்காக பெயர் குறிப்பிடப்படாத எண்ணெய் நிறுவனங்கள்
முயன்று வருவதாக சென்ற ஆண்டு டி மென்சிஸ் குற்றம் சாட்டினார். நைஜீரியாவின் ஆதரவை அவர் பெற்றிருப்பதாக
எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. நைஜீரியா மாநாட்டில் கலந்துகொண்ட டி மென்சிஸ் இரண்டு நாடுகளுக்குமிடையில் அண்மையில்
கையெழுத்திடப்பட்ட பேரம் குறித்து விவாதம் நடத்தியதுடன், எக்சன், மொபில் மற்றும் நைஜீரியாவின் குரோன் நிறுவனத்துடன்
மீண்டும் ஒப்பந்தங்களை செய்துகொள்வதற்காக அவர் முயற்சி செய்தார். தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தம்
சாட்டோமேவிற்கு நியாயம் வழங்குவதாக இல்லை என்று சர்வதேச நாணய நிதியம் கருத்து தெரிவித்துள்ளது. சென்ற
முறை மீண்டும் ஒப்பந்தம் உருவாவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டபோது, முன்னணி பிரமுகர்கள் பலர் வெளிப்படையாக
கண்டனங்களை தெரிவித்தனர். இந்த பேரம் மிக மோசமானது என்றும் மிகத் தாராளமாக வெளிநாட்டவருக்கு வாரி வழங்குவது
என்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
சென்ற ஏப்ரலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போதும்,
JDA விற்கும், நைஜீரியாவின்
குரோமிற்கும் இடையே உருவான இந்த ஒப்பந்தம் குரோம் நிறுவனத்திற்கு
JDZ பகுதிகளில் பல்வேறு
உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குவதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. நைஜீரியாவின் ஆளும் குழுவிற்கு
நெருக்கமாக உள்ள எமக்கா அபார் குரோம் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். ''இந்த ஆட்சிக் கவிழ்ப்பு
முயற்சியின் பிரதான தாக்கம் எங்களுக்குத்தான் ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால், உரிமங்கள் வழங்கப்படுவது இதனால்
தாமதமாகும்'' என்று குரோம் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நைஜீரியாவிற்கும், சாட்டோமேவிற்கும் இடையே உருவான உடன்படிக்கை தொடர்பாக ராஜ்ஜியத்துறை
வட்டாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, இதற்கு முன்னர் உடன்பாடுகள் வருவதில் மூன்று முறை தாமதங்கள்
ஏற்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 2002 ல் உடன்பாடு உருவாவதற்கு திட்டமிடப்பட்ட போதும், அது 2002 அக்டோபர்
வரை தாமதமாயிற்று. மீண்டும் பிப்ரவரி 2003 க்கு அது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது 2003 அக்டோபரில் உடன்பாடு
கையெழுத்தாக வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது பேரங்கள் மிக உயர்ந்த நிலைகளில் நடத்தப்பட்டு
வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடமிருந்து லாபம் நழுவிக்கொண்டிருப்பதாக மிகுந்த கவலை கொண்டிருக்கின்றன.
சாட்டோமே எண்ணெய் வளத்தைக் கட்டுப்படுத்தவும், கினி வலைகுடாப் பகுதியை
கண்காணிக்கவும், கடற்படை தளம் ஒன்றை அமைப்பதில் அமெரிக்கா அக்கறை செலுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்து
கவனக்குறைவாக ஜனாதிபதி புஷ் குறிப்பிட்டுவிட்டார். தற்போது எல்லாத் தரப்பிலிருந்தும் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அது எப்படி இருந்தாலும், அமெரிக்க கடற்படைத்தளம் வரத்தான் போகின்றது. சாட்டோமே கடல் எல்லையை காப்பதற்கும்,
எதிர்கால எண்ணெய் வளத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், அத்தகைய கடற்படைத்தளம் தேவை என்று டி மென்சஸ்
வரவேற்றுள்ளார். அத்தோடு நைஜீரியாவும், தனது துருப்புக்களை சாட்டோமே தீவுகளுக்கு அனுப்ப முன்வந்திருக்கிறது.
பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இஸ்ரேலிய
லாபி குழுவான உயர்நிலை முலோபாய மற்றும் அரசியல் ஆய்வு அமைப்பு சாட்டோமேவை கடற்படைத்தளமாகக் கொண்டு
கினி வளைகுடா கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது. கினி ஜனாதிபதி நுகுமா, பியாக்கோ
தீவை அமெரிக்காவின் கடற்படைத்தளமாக பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
சென்ற ஆண்டு அமெரிக்க அதிகாரிகள் இரண்டு முறை இங்கு விஜயம் செய்திருக்கின்றனர். வாஷிங்டனில்
ஜனாதிபதி புஷ்சை டி மென்சஸ் சந்தித்திருக்கிறார். இந்த நாடு, கடல் எல்லை காவல் படையை அமைப்பதற்கு உதவ
அமெரிக்கா ஒப்புக்கொண்டிருக்கின்றது. ஐ.நா.வின், IRIN
இணையத் தளம் சென்ற ஆண்டே ''சாட்டோமேவில் விமானப்படை மற்றும் கடற்படை வசதிகளை அமைப்பதற்கு அமெரிக்கா
பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும், இந்த நாட்டு எண்ணெய் வளத்தில் அதிக அக்கறையை அமெரிக்கா காட்டி
வருவதாகவும்'' தகவல் தந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
|