:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
John Christopher Burton, socialist candidate for California governor,
demands full investigation into eastern US blackout
கலிபோர்னியாவின் கவர்னர் பதவிக்கான சோசலிஸ்ட் வேட்பாளர், ஜோன் கிரிஸ்டோபர்
பேர்ட்டன், கிழக்கு அமெரிக்க மின் இருட்டடிப்பின் மீதான முழு விசாரணையைக் கோருகிறார்
By John Christopher Burton
16 August 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
மனித
உரிமைகள் வழக்குரைஞரும், சோசலிஸ்டும் ஆன ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டன் அக்டோபர் 7ம் தேதி கலிபோர்னியாவில்
நடக்க இருக்கும் ``திரும்ப அழைத்தல்`` தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளர் ஆக போட்டியிடுகிறார். ஆகஸ்ட்
15, வெள்ளியன்று அவர் வெளியிட்ட அறிக்கை கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதுள்ள கவர்னர் கிரே டேவிசைத்
திருப்பியழைக்கும் வாக்கிற்குக் ``கூடாது`` என வாக்களிக்கச் சொல்லும் பேர்ட்டன் அதே நேரத்தில் அவ்வாக்கெடுப்புத்
தேர்தலில் டேவிசை திரும்பயழைக்கும் முயற்சி வெற்றி பெற்றால், டேவிஸ் பதவி விலக நேரிடும் பட்சத்தில் இரண்டு
பெருவணிகக் கட்சிகளுக்கும் சார்பாக உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் தனக்கே, ஒரு சோசலிச மாற்றாக
வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சோசலிச சமத்துவ கட்சி பேர்ட்டன் வேட்பாளராக நிற்பதை ஆதரித்துள்ளது.
இந்த அறிக்கை இறக்கம் செய்து விநியோகிப்பதற்காக பிடிஎப் துண்டறிக்கை வடிவிலும் கிடைக்கும்.
வடகிழக்கிலும், மத்திய மேற்கிலும் மின் வசதி முழுமையாகத் துண்டிக்கப்பட்டு 50 மில்லியன்
மக்களுக்கும் மேலாக போதுமான மின் வசதியோ, தண்ணீரோ இல்லாமல் விடப்பட்ட நிலையானது, முழுமையான, வெளிப்படையான,
பொது விசாரணையைக் கோருகிறது. கடந்த இரு நாட்களின் நிகழ்ச்சிகள் ஏற்கனவே ஒரு மிக முக்கியமான உண்மையைப்
புலப்படுத்தியுள்ளன: கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சமூக நெருக்கடிகள் வெறுமனே கலிபோர்னிய
நெருக்கடி அல்ல. மாறாக, அது ஒரு தேசிய, சர்வதேசியப் பரந்த நெருக்கடியின் வெளிப்பாடு ஆகும். சமுதாய
உள்கட்டுமானத்தின் முறிவும் அதையொட்டிய சாதாரண மக்கள் மீதான பெருந் தீங்கு கொடுக்கும் விளைவுகளும் இப்பொழுதுள்ள
பொருளாதார அரசியல் அமைப்புமுறையின் கண்டனத்திற்குரிய ஒரு குற்றமாகும்.
அமெரிக்க மின் சக்தி உற்பத்தி முறையின் சமீபத்திய பொறிவால் இழந்த வேலைகள், முடங்கிய
சிறுவணிகங்கள், மில்லியன் கணக்கான மக்களின் சுகாதார, உடல்நலப் பாதிப்பினால் ஏற்பட்ட முழு அளவு நாசத்தை,
மதிப்பீடு செய்ய இத்தகைய குறுகிய காலத்தில் முடியாது. ஆனால் பல உயிர்கள் உருக்குலைந்தும் ஏனையோர் மடிந்தும்
போயினர் என்பது நிச்சயம்.
இருட்டடிப்பின் உடனடிக் காரணம் எதுவாக இருந்தாலும், தொடர்ந்து சக்தி
தொழில்துறை கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்தப்பட்டதுடனும், அதன் மீது ஆதிக்கம் கொண்டுள்ள மிகப்பெரிய நிறுவனங்களின்
மீதான எவ்வித பொதுக் கட்டுப்பாட்டையும் அகற்றியதுடனும் கட்டுண்டிருக்கிறது. என்ரோனும் மற்ற நிறுவனங்களும்
தங்கள் இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக சமுதாய நாசமுறை, குற்றமுறைகளில் ஈடுபட்டு கலிபோர்னியாவை
இருட்டடிப்பிலும் அரை இருட்டடிப்பிலும் மூழ்கடித்து, தீய கனாபோல் நாட்டின் கருவூலத்தைக் காலி செய்த நிலைமை
இன்னமும் மாறவில்லை. ஆலை உற்பத்தி இயந்திரங்களும், கருவிகளும், மூப்பும், சேதமும் அடைந்துள்ளன; குழப்பம் மலிந்த
சந்தை சக்திகளும், பெரு நிறுவனங்கள், பெரு முதலீட்டாளர்கள் தங்கள் தனிப்பட்ட இலாபத்திற்காக செயல்படும் முறையில்,
பகுத்தறிவுடன் பொதுநல நோக்கு அமைப்புக்கள் பொறுப்புடன் செயல்படும் வழிவகை அழிக்கப்பட்டுவிட்டது.
தனியாரும் பெருநிறுவனங்களும் பெருஞ்செல்வம் குவிப்பதற்காக, பரந்த சிக்கல் நிறைந்த
தற்கால சமுதாயத் தேவைகளை அதற்கு அடிமைப்படுத்தியுள்ள பைத்தியக்காரத்தனமான முறையின் ஒரு மாதிரிப்
படிப்பினையாக கலிபோர்னிய பொருளாதாரச் சீர்குலைவுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய மின்சக்தி தடையும் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
1965ம் ஆண்டு கிழக்குக் கடற்கரைப் பகுதி மின்தடை, 1977ம் ஆண்டு நியூயோர்க்
இருட்டடிப்பு, ஆகிய பெரிய இருட்டடிப்புக்களுக்குப்பின் அன்றாட வாழ்வு பாதுகாப்பாகவும் உத்தரவாதத்துடனும் கூடிய
மின் வசதியின் இன்றியமையாமை மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியாலும், மக்கட்தொகை வளர்ச்சியினாலும்
தோன்றியுள்ளது. மக்களிடையேயும், நாடுகளிடையேயும் உறவுகள் கூடுதலான, நுட்பமான, சிக்கல் வாய்ந்த, உடனடியான
தன்மைகளைப் பெற்றுவிட்டது. இன்று அன்றாட வாழ்வில் உள்ள கணினிகள், இணைதளம், செயற்கைக்கோள் தொடர்பு
இவையெல்லாம் தொழிலாளர்களின் வாழ்வை 25 ஆண்டுகளுக்கு முன் தொட்டதுகூடக் கிடையாது.
ஆயினும்கூட, இந்த இடைப்பட்டக் காலத்தில், ஏற்கனவே இருந்த குறைந்த, போதுமானதாக
இல்லாமல் காணப்பட்ட கட்டுப்பாடுகூட, மின் உற்பத்தி, பங்கீட்டு முறையில் அகற்றப்பட்டுவிட்ட அளவில்,
பெரும்பாலான மக்கள், பெரிய நிதி நலன்களுக்காக "பங்காற்றும்" இரக்கத்திற்கு விடப்பட்டுள்ளார்கள், அதாவது
அவர்கள் தங்களின் சொந்த குறுகிய நலன்களுக்காக சக்தி சந்தையை, சூழ்ச்சியுடன் கையாளுவதற்கு. இது ஒட்டுண்ணித்தனத்தின்
அப்பழுக்கற்ற தன்மையே ஆகும்.
முதலாளித்துவ சந்தையின் சமுதாய எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத வகைகள்,
குற்றஞ்சார்ந்த செயல்களாலும் கூடுதலாக்கப்பட்டுவிட்டன. என்ரோனின் கென்னத் லே கலிபோர்னியாவில் நிகழ்த்திய
அட்டூழியங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அத்தன்மையை ஒத்த செயல்களினால்தான் கடந்த வார இருட்டடிப்பும்
நிகழ்ந்தது.
வெள்ளியன்று முதலாளித்தவ சந்தைமுறைக்கு எதிர்ப்பே காட்டாத
Wall Street Journal கூட
எழுதியுள்ளதாவது: ``இந்த ஆண்டின் தொடக்கத்தில், North
American Electric Reliability Council என்று 1965 இருட்டடிப்பிற்கு பின் நிறுவப்பட்ட
அமைப்பு, காங்கிரசிற்கு எச்சரிக்கை விடுத்தது, ``பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்கள் மின் வசதி அளிப்போரை
அதிக அளவில் பெருக்கும் அளவில், மின் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைப் பிரித்துச் செய்யும் வழிவகையில்
NERC எண்ணிக்கையிலும் கடுந்தன்மையிலும் விதிகள் மீறப்படுவது
பெருகுவதைக் காண்கிறது`` என்று எச்சரிக்கை விடுத்தது.
முன்பு பெருவர்த்தகத்தின் மீதிருந்த, பொது மேற்பார்வையும் கட்டுப்பாடும் தகர்த்தப்பட்டதன்
விளைவுகளைக் கலிபோர்னியா, அமெரிக்கா, ஏன் உலக மக்கள் அனைவருமே சந்திக்க நேரிட்டுள்ளது. 1930களில் முதலாளித்துவ
அமைப்பின் பொறிவானது, அமெரிக்க மூலதனத்தின் வருங்கால நோக்கு உடைய பிரதிநிதிகளை, இலாப அமைப்பு
முறையை அதன் சொந்த அழிவுகரமான தூண்டல்கள் மற்றும் சமூகப் புரட்சியின் அச்சுறுத்தல்களில் இருந்தும் பாதுகாக்க
வேண்டுமெனில், ஏதேனும் ஒரு வகையில் தொழிற்துறை ஏகபோகங்கள் மற்றும் வங்கிகள் நடவடிக்கைகளின் மீது ஓரளவு
கட்டுப்பாடுகள் திணிக்கப்பட வேண்டும் என ஏற்க வைத்திருந்தது. எனவே அரசாங்கமே இரயில் போக்குவரத்து, விமானப்
போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, வர்த்கம், பங்குச்சந்தை, காற்றலைகள் போன்றவற்றை ஓரளவு
கட்டுப்படுத்தும் அமைப்புக்களை ஏற்படுத்தியது.
ஆனால், கடந்த 25 ஆண்டுகளில், அடிப்படைத் தொழிலில் தொடர்ந்து இலாப
நெருக்கடியோடு இணைந்து, பழைய படிப்பினைகளை ஒதுக்கிவிட்டு அமெரிக்க ஆளும் மேல்தட்டினர் பெருநிறுவனக்
கட்டுப்பாட்டை, மேற்பார்வையிடுதலைத் தளர்த்திவிட்டனர். ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் என்ற இரு பெரும் கட்சிகளே
இந்த செயல்பட்டியலை நிறைவேற்றியுள்ளன. பெரு வர்த்தக நிறுவன முதலைகளால் உடைமை கொள்ளப்பட்ட செய்தி
ஊடகங்கள், பொதுக் கருத்தை உருவாக்குவதில் குழப்பத்தையும், திரித்தலையும் ஏற்படுத்தி, சந்தைமுறை "வித்தையால்"
பழைய தலைமுறை பெற்ற அதிர்ச்சி தரும் படிப்பினைகளை மறக்கடிக்க பெரிதும் பாடுபட்டு வருகின்றன.
இந்த வார இருட்டடிப்பை மூடிமறைக்கும் முயற்சிகளை ஏற்கனவே புஷ் நிர்வாகம் தயாரித்துக்
கொண்டிருக்கிறது. கென்னத் லே மற்றும் என்ரோனுக்கு பாதுகாப்பளித்த, செப்டம்பர் 11 மற்றும் அந்த்ராக்ஸ்
தாக்குதல்கள் பற்றிய எந்த அக்கறையான விசாரணையையும் தடுத்த, பொய்களின் அடிப்படையில் உள்நாட்டில் அடக்குமுறை,
வெளிநாட்டில் போர் என அனைத்துக் கொள்கைகளையும் நியாயப்படுத்தி வருகின்ற அரசாங்கத்திடம் எந்த முறையான
விசாரணையையும் எதிர்பார்ப்பதற்கு இல்லை. ஜனநாயகக் கட்சியிடமிருந்து காலில் விழும் போக்கையும், சதிக்குத்
துணைபோதலையும் தவிர வேறொன்றையும் எதிர்பார்ப்பதற்கில்லை.
கலிபோர்னியா திரும்பியழைத்தல் தேர்தலில் நான் ஒரு சோசலிச வேட்பாளராக நிற்கிறேன்.
ஏனெனில் அந்தத் திட்டம்தான், தனி மனித சொத்து, பெருநிறுவன இலாபம் இரண்டும் மனிதனுடைய தேவைகளைவிட முக்கியத்துவம்
வாய்ந்தது எனக் கூறும், நிலவுகின்ற பொருளாதார சமூக அமைப்பின் அடிப்படையை மறுக்கிறது; மேலும் அது ஒன்றுதான்
கலிபோர்னியா மட்டுமின்றி நாடு முழுவதையும் பிடித்துக்கொண்ட நெருக்கடியை, முன்னேற்றகரமான மற்றும் ஜனநாயக
ரீதியில் கவனிப்பதற்கான அடிப்படையை வழங்க முடியும்.
இந்த இருட்டடிப்பு பற்றி முழுமையான விசாரணையை நான் கோருகிறேன். இந்தப்
பெரும் அழிவுக்குக் காரணங்களாக இருந்த பெரிய நிறுவனங்கள் எவை? எந்த நிதி நிறுவனங்களோடு அவை நெருங்கிய
தொடர்பு கொண்டுள்ளன? புஷ் நிர்வாகத்தோடும், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளோடும் அவற்றின் அரசியல்
தொடர்புகள் யாவை? எந்த அளவிற்கு கட்டுப்பாடு அகற்றுதல், மின் சக்தித் தொழில் துறையைச் சிதைத்தல் போன்றவற்றின்
உந்துதல், அதன் அடிப்படை உள் கட்டுமானத்தில் முறிவுக்கு பங்களிப்பு செய்தது?
மேலும் பெருவர்த்தகத்தை கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்திய நடவடிக்கைகளை முற்றிலும்
திரும்ப வாபஸ் பெறவேண்டும் என நான் கோருகிறேன். மக்கள் மீது சந்தைமுறை செலுத்தும் கொடுங்கோன்மை
முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாக வேண்டும்.
வாங்க இயலக்கூடிய, நிறைந்த, உறுதியான மின் வசதியளிக்கும் நிலைக்காக, பெரும்
சக்தி நிறுவனங்கள் பொதுப் பயன்பாடு அமைப்புக்களாக, ஜனநாயக முறையில் உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டிற்குள்
மாற்றப்படவேண்டும் என நான் கோருகிறேன். இந்த அடிப்படையில்தான் மின் சக்தி உற்பத்தி மற்றும் பங்கீட்டுமுறைகள்
அறிவார்ந்த ரீதியில் சமுதாய நலன்களுக்கான அடிப்படையில் ஏற்படுத்தப்பட முடியும்.
உழைக்கும் மக்களை எதிர்நோக்கும் வேறு எந்தப் பிரச்சினையையும் வேலையின்மை,
போதுமான சுகாதாரப் பாதுகாப்பின்மை, இடிந்து கொண்டிருக்கும் பள்ளிகள், மட்டமான வீடுகள், ஏழைமை -
போன்றவற்றை தீர்க்க, பெருவர்த்தகத்தோடு இணைந்து நிற்கும் எந்தக் கட்சிகளும், அரசியல் வாதிகளும் அத்தகைய
கொள்கையை ஏற்கப்போவதில்லை. உழைக்கும் மக்கள் தமக்கென தனியான அரசியல் கட்சியைத் தங்கள் நலன்களுக்காக
அமைக்கவேண்டும். அத்தகைய கட்சியே சோசலிச சமத்துவக் கட்சியாகும், அதன் கொள்கைகளைத்தான் நான் ஆதரிக்கிறேன்.
அது ஒன்றுதான் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பையும் சமூக சமத்துவத்திற்காகப் போராடுவதையும் அதன் மையத்தில்
கொண்டிருக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது.
See Also:
ஜோன் கிறிஸ்டோபர் பேர்டனுடைய வேட்பாளர் அறிக்கை
Top of page
|