World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Poland sends troops to Iraq

போலந்து நாடு ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புகிறது.

By Stefan Steinberg
7 August 2003

Back to screen version

ஈராக்கில் சிக்கிக் கொண்டுள்ள அமெரிக்கத் துருப்புக்களுக்கு உதவுவதற்காக போலந்து அரசாங்கம் 2000-த்திற்கு மேற்பட்ட போர் வீரர்களை ஆகஸ்ட்டு முதல் தேதியன்று ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது. போலந்து தலைமையில் 9200 படை வீரர்களைக் கொண்ட பிரிவு ஒன்று, ஈராக்கில் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் துருப்புக்களின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்வதற்கு திட்டமிடப் பட்டிருக்கிறது. ஈராக் போரில் கலந்து கொண்டு அமெரிக்கத் துருப்புக்களுடன் இணைந்து போரிடுவதற்காக 200 சிறப்பு போர் வீரர்களைக் கொண்ட சிறப்பு படைப்பிரிவை முதலில் அனுப்பி உதவியவற்றுள் போலந்து அரசாங்கமும் ஒன்று.

தற்போது போலந்து தலைமையில் ஒரு மாவட்டத்தை பொறுப்பில் எடுத்துக்கொண்டு பணியாற்ற இருக்கின்ற படைப்பிரிவில் பல்வேறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த துருப்புக்கள் இடம் பெறும் மற்றும் அது உக்கிரேனில் இருந்து 1640 துருப்புக்கள், பல்கேரியாவில் இருந்து 500, ஹங்கேரியிலிருந்து பல நூறு, ருமேனியாவிலிருந்தும் லாட்வியாவிலிருந்தும் 150 மற்றும் ஸ்லோவாக்கிய, லித்துவேனியாவிலிருந்து தலா 85 துருப்புக்களை உள்ளடக்கி இருக்கும்.

தற்போது ஈராக்கில் பலியாகிக்கொண்டு இருக்கும் மற்றும் காயமடைந்து கொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டு வருவதை எண்ணி ஈராக்கில் பணியாற்றி வருகின்ற இராணுவ தளபதிகளும், வாஷிங்டனில் உள்ள அரசியல்வாதிகளும் பெரிதும் கவலையடைந்துள்ள பொழுது, போலந்து தனது படையை அதிகரிப்பது வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நாளிதழான பைனான்சியல் டைம்ஸ் சென்ற வெள்ளிக்கிழமையன்று ''படைப்பிரிவுகளை திரட்டுவதற்கு அமெரிக்கா போராடுகிறது.'' என்ற தலைப்பில் ஒரு விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறது.'' அமெரிக்க நிர்வாகம் ஈராக்கில் போர் தொடங்கியபோது ஏறத்தாழ தனியாகவே போரிட்டது. இன்றைய தினம் நிலவரம் என்னவென்றால் தலையிலே இராணுவ தொப்பி, கையிலே காசோலைப் புத்தகம் ஆகியவற்றுடன் தயார் நிலையில் தப்பி செல்வதற்காக நடமாடிக்கொண்டிருக்கின்றன, தற்போது சர்வதேச அளவில் படைகளை திரட்டி அந்தப் படைகளின் கட்டுக்குள், கொரில்லா தாக்குதல்கள் அன்றாட சம்பவங்களாக ஆகிவிட்ட ஈராக்கை வைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா முயன்று வருகின்றது" என்று அப்பத்திரிகை எழுதியிருக்கிறது.

ஏற்கனவே ஜூலை-3 ந்தேதி வாஷிங்கடன் போஸ்ட் ஒரு கருத்தை சுட்டிக்காட்டியிருந்தது. அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் துருப்புக்கள் தவிர ஏனைய நாட்டுத் துருப்புக்கள் இருப்பது அமெரிக்கத் துருப்புக்கள் மீதிருந்து துப்பாக்கிச் சூட்டை வேறு நாட்டு படைகள் மீது திருப்ப உதவுவது மட்டுமல்லாமல் அமெரிக்காவிற்கு பிரசார அனுகூலங்களும் கிடைக்கும்: ''பெருமளவில் சர்வதேசப் படைகள் ஈராக்கில் நடமாடுகின்ற நிலை ஏற்படும்போது ஈராக் ஒரு காலனியாக ஆக்கப்படவில்லை என்ற உறுதிப்பாடு ஈராக் மக்களுக்கு உருவாகும் என பலர் நம்புகின்றார்கள், மற்றும் நேரடித் தாக்குதல் இலக்கு குறியாக இல்லாமல் அமெரிக்க துருப்புக்கள் விலகிக் கொள்ள முடியும்''- என்று எழுதியுள்ளது.

சென்றவாரம் அமெரிக்க இராணுவ தலைமை தற்காலிக தளபதி ஜெனரல் ஜோன் கீன் (John Keane) அமெரிக்க நாடாளுமன்றத்தில் விசாரணைக் குழுவில் தகவல் தரும்போது சர்வதேசத் துருப்புக்கள் ஈராக்கில் வலுப்படுத்தப்படுவது இடம் பெறும் வரை அமெரிக்க போர் வீரர்கள் தங்களது வீடுகளுக்கு திருப்பி வரமாட்டார்கள் என்று குறிப்பிட்டார். கடந்த வாரங்களில் இது சம்பந்தமாக அமெரிக்கா மிகத் தீவிரமான ராஜ்ஜியத்துறை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. ஆனால் ஈராக் போரில் திட்டங்களில் தங்களது துருப்புக்களை அனுப்பச்செய்வது தொடர்பாக இதர நாடுகளை இணங்கச்செய்வதில் மிகக்குறைந்த அளவிற்கே அமெரிக்கா வெற்றி பெற முடிந்திருக்கிறது.

அண்மையில் ஈராக் பிராந்தியத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்புத்துறை துணைச் செயலாளர் போல் வொல்போவிச் சென்றவாரம் ஒன்றை ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் அல்லது துருக்கி, ஒரு டிவிஷன் துருப்புக்களை ஈராக்கிற்கு எப்போது அனுப்பும் அல்லது அப்படி துருப்புக்களை அனுப்புமா என்பதே தெளிவில்லாமல் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். ஈராக்கின் வடக்கு பகுதிக்கு ஏற்கனவே துருக்கி துருப்புக்களை அனுப்பியிருக்கிறது ஆனால் துருக்கி இராணுவ பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான அமெரிக்கத் திட்டங்கள் இரு நாடுகளுக்கிடையில் நடைபெற்றுவரும் மோதல்களால் செயல்பட முடியாத அளவிற்கு நிலைக்குத்தி நிற்கிறது. ஏனெனில் துருக்கி இராணுவம் ஈராக்கில் ஈடுபடுவதற்கு பரந்த அளவிலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஈராக்கில் பாதுகாப்பு பணிகளை ஈராக்கியர்களே மேற்கொள்வதற்கு எவ்வளவு விரைவாக பயிற்சியளிக்க முடியும் என்பது தெளிவில்லாமல் உள்ளதாகவும் வொல்போவிச் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையில் அமெரிக்கத் தளபதி ரிச்சார்ட் மியர்ஸ் புதுதில்லிக்கு சென்றிருக்கிறார். இந்திய துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்காவின் நிர்பந்தத்தை அதிகரிப்பதற்காக அவர் புதுதில்லி சென்றிருக்கிறார். 17,000- இந்திய துருப்புக்களை அனுப்புவதற்கு அண்மையில் இந்தியா மறுத்துவிட்டது. இந்தியா இந்தப்போரில் தலையிடுவதற்கு முன்னர் புதிய ஐ.நா. தீர்மானம் அவசியம் தேவை என்று கூறிவிட்டது.

அடுத்த ஆண்டு ஏதாவதொரு கட்டத்தில் ஒரு படைப் பிரிவை ஈராக்கிற்கு அனுப்புவதற்கு இந்தியாவை சம்மதிக்க செய்துவிட முடியும் என்று வாஷிங்டன் நிர்வாகம் இன்னமும் நம்புகிறது. இந்தியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இராணுவ உதவி கிடைத்தாலும் குறைந்த பட்சம் எதிர்காலத்தில் 1,00,000- அமெரிக்க துருப்புக்களை வைத்திருக்க வேண்டிய மற்றும் அதன் அனைத்து செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய தேவை கட்டாயம் அமெரிக்காவிற்கு ஏற்படும். தற்போது ஒரு மாதத்திற்கு அமெரிக்க நடவடிக்கைகளுக்காக 3.9-பில்லியன் டாலர்கள் செலவாகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த துருப்புக்கள் ஈராக்கில் இடம் பெற வேண்டும் என்று அமெரிக்கா முயன்று வந்ததால் போலந்து துருப்புக்களின் பூர்வாங்க செலவினங்களுக்காக (போக்குவரத்து, உணவு மற்றும் இதர மருத்துவ செலவுகளுக்காக 230 மில்லியன் டாலர்களை) அமெரிக்கா வழங்க சம்மதித்து இருக்கிறது.

இத்தாலியுடன் சேர்ந்து போலந்து அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு மிகப்பெரும் அளவிற்கு துருப்புக்களை வழங்கிய ஐரோப்பிய பங்களிப்பாளராக இருக்கும். ஈராக்கில் புஷ்ஷின் போரை இத்தாலி, மற்றும் ஸ்பெயின் நாட்டுத்தலைவர்கள் முழுமையாக ஆதரித்த போதிலும், உள் நாடுகளில் போருக்கு பொது மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பிய சூழ்நிலையில் மற்றும் தற்போது ஈராக்கில் தினசரி போர் வீரர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இரு நாடுகளும் இப்பிராந்தியத்திற்கு தங்களது நாட்டு துருப்புக்களை பெரும் அளவில் அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. பிரிட்டன் துருப்புக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 2,800-போர் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஈராக்கில் 11,000-பிரிட்டனின் துருப்புக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. போலந்து தலைமையில் பணியாற்றும் படைப்பிரிவில் 13,00-துருப்புக்களை அனுப்புவதற்கு திட்டங்களை ஸ்பெயின் அறிவித்திருக்கிறது.

போலந்து அரசாங்கம் ஈராக் போருக்கு தனது துருப்புக்களை அனுப்புவதற்கு உறுதி தந்திருப்பது தொடர்பாக போலந்திற்கு உள்ளேயே பெருமளவிற்கு கருத்து வேறுபாடுகள் தோன்றியிருக்கின்றன. தற்போது போலந்து மக்களில் பாதிக்கு மேற்பட்டோர் தங்கள் நாட்டு துருப்புக்கள் பங்களிப்பு செய்வதை எதிர்க்கின்றனர். பெரும் உள்நாட்டு எதிர்ப்பை எதிர்கொள்கையில் போரில் பங்குகெடுத்துக் கொள்வதற்காக மார்ச் மாதம் போலந்து துருப்புக்களில் ஒரு சிறிய சிறப்புக்குழுவை அனுப்புவது என்ற முடிவு அரசாங்கத் தலைவர்களால் எடுக்கப்பட்டது.

போர் தொடங்குவதற்கு சற்று முன்னர் போலந்து மக்களில் 70 சதவீதம்பேர் எந்த வகையிலும் போலந்து அந்த போரில் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்தனர். அதற்குப் பின்னர் மார்ச் 17-ந்தேதியன்று ஈராக் போர் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் போலந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் க்வாஸ்னீவ்சிக்கியும் (Kwasniewski), பிரதமர் லீசக் மில்லரும் (Leszek Miller) பொதுமக்கள் கருத்துக்கணிப்பை துச்சமாக மதித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதற்கு சம்மதித்திருப்பதாக சட்டென்று அறிவித்துவிட்டனர். ஏற்கனவே ஈராக் போரில் போலந்து ஈடுபட்டுவிட்டதால் பிரதமரும் ஜனாதிபதியும் தங்களது நடவடிக்கைகளுக்கு போலந்து நாட்டு நாடாளுமன்றத்தின் தங்குதடையற்ற ஒப்புதலைப் பெற முடிந்தது.

போலந்தின் மொத்த நிலப்பரப்பே 31,000-சதுர மைல்கள்தான் இதில் கால்பகுதி அளவிற்கே உள்ள ஈராக்கின் ஒரு மாகாணத்தை புதிய போலந்து தலைமையிலான படைப்பிரிவு தனது கையில் எடுத்துகொள்கிறது. இந்தப் பகுதியில் தற்போது அமெரிக்க கடற்படைப்பிரிவின் நிலப்படை கட்டுப்பாட்டில் உள்ள பாக்ததிற்கு தெற்கு மாகாணங்களான ஷியைட்முஸ்லீம்கள் நிறைந்துள்ள நான்கு மாகாணங்களும் அடங்கும். இப்படி ஓரின மக்கள் வாழுகின்ற பகுதி போலந்து துருப்புக்களின் கட்டுப்பாட்டில் வருவதில் உள்ள ஆபத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் சென்ற வெள்ளிக்கிழமை அன்றே ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. போலந்து துருப்புக்கள் ஏற்கனவே இடம்பெற்றிருக்கின்ற தளத்தில் பீரங்கி தாக்குதல்கள் நடந்தன.

ஈராக்கில் தங்களது நாட்டு இராணுவத்தின் பங்களிப்பு தொடர்பாக போலந்து இராணுவத்திற்குள்ளேயே சந்தேகங்கள் நிலவுகின்றன. பழமைவாத தினசரி Rceczpospolita வில், ஈராக்கைப் பிடித்துக் கொண்டுள்ள துருப்புக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து போலந்து இராணுவத் தளபதியும், மூலோபாய நிபுணருமான ஸ்டானிஷ்லோ கோசி எச்சரித்திருக்கிறார். "இத்தகைய தாக்குதல்கள் பல ஆண்டுகள் நீடிக்க முடியும். அந்த அளவிற்கு சிறப்பான முன்னேற்பாட்டோடு தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்." அவர்களால் "புதிய வியட்நாமை" உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

போலந்தும் அமெரிக்காவும்

1990-களின் தொடக்கத்தில் ஸ்ராலினிச நாடுகளின் கூட்டு சிதைவதற்கு முன்னர் போலந்து ஈராக்குடன் நெருக்கமான உறவுகளை நிலைநாட்டி வந்தது. ஈராக்கின் எண்ணெய் தொழிலிலும், கட்டமைப்பு செயல்திட்டங்களிலும் 16,000-க்கு மேற்பட்ட போலந்து ஊழியர்கள் முக்கியமாக பொறியியலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

அண்மையில் போலந்து அமெரிக்காவுடன் உறவு வைத்துக்கொள்வதற்கு ஓர்அடிப்படைக் காரணம் உண்டு. தற்போது போலந்து ஆளும் தட்டினரின் ஆணிவேர்,1990-க்கு முந்தைய ஸ்ராலினிச நிர்வாக அமைப்பில் உள்ளது. எனவே, அவர்கள் இந்த பிராந்தியத்தில் தங்களது செல்வாக்கை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்பு குடையின் கீழ் நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். போலந்து நாட்டு எண்ணெய் நிறுவனமான நாப்தா போல்ஸ்கா அலுவலகம் பாக்தாதில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் காலனி ஆதிக்கத்தன்மையை மூடிமறைக்கின்ற வகையில் தேசிய பாதுகாப்பு அலுவலக தலைமை அதிகாரி மாரே சிவிக் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். ''கபளீகரம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் நாங்கள் ஈராக்கிற்கு வரவில்லை. இந்த நடவடிக்கைகள் தொடக்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பொறுப்புணர்வு காரணமாக போலந்து நாட்டவராகிய நாங்கள் பணியாற்றி வருகிறோம்'' என்று மாரே சிவிக் கூறியுள்ளார்.

ஈராக்கில் சர்வதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக பணியாற்றி வருபவர் போலந்து நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் மாரேக் பெல்கா அவர் அமெரிக்காவில் கல்வி கற்றவராவர். அவரது பங்கு பணி என்னவென்றால் ஈராக்கில் தற்போது இயங்கிவரும் காலனி ஆதிக்க நிர்வாகத்திற்கும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கும், மற்றும் ஐ.நா- அமைப்புகளுக்கும், அதேபோல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டி எழுப்புவதில் ஈடுபட்டிருக்கின்ற வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுதான். ஈராக்கில் பெரிய ஒப்பந்தங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற (USAID) அமைப்பின் முன்னணிக் குழுக்களிலும் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஈராக் போரானது, போலந்து தலைவர்கள் அமெரிக்காவுடன் தனது உறவை வலுப்படுத்திக்கொண்டு ஐரோப்பாவில் அமெரிக்காவின் நலன்களுக்கு ஒருவகை (தற்காப்பு அரணாக) ட்ரோஜான் குதிரையாக செயல்பட தயாராகயிருந்ததை எடுத்துக்காட்டியது. ஆரம்பத்தில் போருக்கு பிரான்சும் ஜேர்மனியும் எதிர்ப்பு தெரிவித்ததை எதிர் கொண்டு, அந்த நேரத்தில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஆத்திரம் ஊட்டும் வகையில் பழைய ஐரோப்பா, புதிய ஐரோப்பா என்று வேறுபடுத்திக் காட்டினார். பழைய ஐரோப்பாவில் பிரான்சும் ஜேர்மனியும் இடம் பெற்றிருந்தன. புதிய ஐரோப்பா என்று அவர் வர்ணித்தது ஸ்ராலினிச அணி சிதறிய பின்னர் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டுள்ள பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளை குறிக்கும், இதில் போலந்து முன்னணியில் நிற்கின்றது.

பல சந்தர்ப்பங்களில் ரம்ஸ்பீல்டும் வாஷிங்டன் நிர்வாகமும் பழைய ஐரோப்பா என்ற துருப்புச்சீட்டை பயன்படுத்தி பிரான்சையும் ஜேர்மனியையும், தனிமைப்படுத்தி அழுத்தம் கொடுக்க முயன்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்பாக்கப்பட்டதற்கு மேலாக வார்சோ- புதிய யூரோ- போர் விமானத்தை தனது விமானப்படைக்கு வாங்கிக் கொள்வதற்கு மறுத்துவிட்டு அமெரிக்காவின் எப்-16- ரக ஜெட் போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்காவின் லாக் ஹீட்மார்டீன் கம்பெனியுடன் பேரம் பேசி முடிவு செய்தது. இந்த நிறுவனம் பெற்றிருக்கிற ஒப்பந்தம் 3.53-பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு உள்ளது. இது கிழக்கு ஐரோப்பாவில் பெற்றிருக்கும் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட விமர்சனத்தில் போலந்தின் இதயம் ஐரோப்பாவில் இருக்கிறது. ஆனால் அந்த நாடு தனது பணப் பையை அமெரிக்காவில் வைத்திருக்கிறது, என்று கருத்து தெரிவித்தனர். இந்த ஆண்டு மே மாதம் ஈராக்கில், அமெரிக்க வெற்றி என்று சொல்லி முந்திக்கொண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றபோது புஷ் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குறிப்பாக பிரான்சையும், ஜேர்மனியையும் தவிர்த்துவிட்டு, போலந்தில் தங்கி போலந்து நாட்டு ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதற்கு சிறிது நேரம் தங்கினார். அந்த பேச்சுவார்த்தையில் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தை தாண்டி வலுவான கூட்டணி உருவாக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்கத் தலைமைக்கும், போலந்துக்கும் இடையே நெருக்கமான உடன்பாடு ஏற்பட்டிருப்பதற்கு மற்றொரு காரணம் உண்டு. போலந்து ஜனாதிபதியும், பிரதமரும், தங்களது அரசியல் பால பாடத்தை போலந்து நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஸ்ராலினிச கட்சியில் (PZRP) தான் தொடக்கினர். போலந்து மற்றும் சோவியத் ஸ்ராலினிச அதிக்காரத்துவங்கள் சிதைந்துவிட்ட நிலையில் இந்த இரண்டு தலைவர்களும் PZRP-யை ஒரு ஜனநாயக இடதுசாரி கட்சியாக (SLD) உருவாக்கினர். அந்தக் கட்சி 2001-ம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது AWS - ஐக்கிய அணி படுதோல்வியடைந்தது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் க்வாஸ்னீவ்ஸ்கி 1995-TM SLD- கட்சியிலிருந்து விலகினார்.

போலந்து அரசியலை தூய்மையாக்குவோம், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்போம் என சொல்லி உறுதியளித்து SLD- கட்சி ஆட்சிக்கு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களது ஆட்சியின் சாதனைகளை மதிப்பிடுவோமானால் மிகப்பெரிய பேரழிவுதான் மிச்சம். போலந்து மக்களில் மிகப்பெரும்பாலோர் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகாரபூர்வமான புள்ளி விபரங்களின்படி கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே மிக உச்ச அளவாக 20 சதவீதம் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது.

இப்படி பெருகிவருகின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் போலந்து ஆட்சி தனிமைப்படுத்தப்பட்டு, நிர்பந்திக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் பொதுவான பின்னணியுள்ள ஒரே அரசாங்கத்துடன், வாஷிங்டனில் இருக்கும் கிரிமினல் நிர்வாகத்துடன் தான் போலந்து அரசாங்கம் தனது உறவுகளை பெருக்கிக்கொள்ள முயன்றுவருகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved