WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Military families speak out against Iraq war at Pittsburgh rally
பிட்ஸ்பேர்க் பேரணியில் இராணுவத்தினர் குடும்பங்கள் ஈராக்கியப் போருக்கு எதிராகக்
குரலெழுப்புகின்றனர்
By Alden Long
7 August 2003
Back to screen version
பிட்ஸ்பேர்க்க் நகரக் கூட்டமைப்புக் கட்டிடத்திற்கு
வெளியே ஜூலை 30, புதன்கிழமையன்று நண்பகலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ஈராக்கில் தற்போது உள்ள
சார்ஜன்ட் சார்ல்ஸ் பொலார்டுடைய மகளும் மணைவியும் ஈராக்கியப் போருக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், அமெரிக்கப்
படைகள் தாயகத்திற்குத் திருப்பிக் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அழைப்புவிடுத்தனர்.
பென்சில்வேனியா நகரத்தில், ஜூலை 26ம் 30ம் தேதிகளில் நடைபெற்ற
Urban League மாநாட்டிற்கு, ஜோர்ஜ் டபுள்யூ புஷ்
வந்திருந்தபோது 200 பேரடங்கிய குழு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துக் கூடியபோது, மற்ற இராணுவத்தினர்
குடும்பங்களோடு ரொபின் மற்றும் டு ஷெளனா பொன்டனும்
(De Shauna Ponton) பங்குபற்றினர்.
43 வயதான சார்ஜன்ட் பொலார்ட் பிட்ஸ்பேர்க்கிலிருந்து வரும் இராணுவ தயார் நிலைப்
படையைச் சேர்ந்தவராவார். இராணுவ அழைப்பிற்கு உட்பட்டு 307வது இராணுவப் போலீஸ் பிரிவுடன் அவர் ஈராக்கிற்கு
அனுப்பப்பட்டார். 22 ஆண்டுகளாக இராணுவத்தில் பணிபுரியும் அவர் மே 24ம் தேதியிலிருந்து ஈராக்கில் இருக்கிறார்.
ஜூலை 2ம் தேதி, வாஷிங்டன் போஸ்டில் வந்த செய்தியில் மற்ற வீரர்களுடன் பொலார்டைப் பற்றியும் எழுதப்பட்டிருந்தது;
அதில் இவரும் மற்ற அமெரிக்க வீரர்களும் போருக்கு எதிராகப் பேசியிருந்தனர். ``அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக
எங்களை இங்கிருந்து அனுப்பவேண்டும். நான் இதை மிகுந்த அக்கறையுடன் தெரிவிக்கிறேன். நமக்கு இங்கே வேலையில்லை.
ஈராக்கில், பாக்தாதில் உள்ள பண்பாட்டை நம்மால் மாற்ற முடியாது.... நாம் இங்கே இருப்பதெல்லாம் கொல்லப்படுவதற்காக
காத்திருப்போர் என்ற முறையில்தான், உட்கார்ந்துள்ள வாத்துக்கள்போல் எளிதில் சுடப்படத்தான்`` என்று அவர்
போஸ்டிடம் கூறியிருந்தார்.
எவ்வளவு விரைவில் ஈராக்கை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என
நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு அவர் கூறிய விடை: ``எத்தனை விரைவில் இங்கிருந்து வெளியேற முடியுமோ
அத்தனை விரைவில்`` என்று பதில் கூறினார். மேலும், ``நாங்கள் அனைவருமே அறிந்துள்ளோம் இது நம்முடைய இடம்
இல்லை, அமெரிக்காதான் நம்முடைய இடம் என்று ஜனாதிபதி இதை உணரவேண்டும், அவருடைய கையில்தான் இது இருக்கிறது,
இதைப் பற்றி ஏதாவது அவர் செய்யவேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம்`` என்றார்.
கடந்த புதன் பேரணியின் போது, பிட்ஸ்பேர்க்கில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
நடத்த ஏற்பாடு செய்திருந்த, மற்றும் Urban League
மாநாட்டிற்கு வருகைதந்த புஷ்ஷிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏற்பாடு செய்திருந்த, கத்தோலிக்க அறக்கட்டளைக்
குழுவான, தோமஸ் மெர்டன் சென்டரிலிருந்து வந்திருந்த டிம் வைனிங் பேச்சாளர்களை அறிமுகப்படுத்திப் பேசினார். அப்பொழுது
அவர் கூறியதாவது: ``படை வீரர்களின் குறைவான பெருமித உணர்வு பற்றி, ஜூலை 1ம் தேதி வாஷிங்டன்
போஸ்டில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் அமெரிக்க இராணுவ வீரரான சார்ல்ஸ்
பொலார்டுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் நாம் இங்கே கூடியுள்ளோம். நம்முடைய அதிகாரிகளிடம் கடினமான கேள்விகளை
எழுப்பும் இராணுவ வீரர்கள் சார்பாகக் குரல் கொடுக்க நாங்கள் இங்கே குழுமியுள்ளோம்.``
ரொபினுடைய தாயார் டு ஷெளனா பொன்டன் முதலில் பேசினார். பிட்ஸ்பேர்க்கில்
Perry Hilltop பகுதியில் உள்ள இவர் குழந்தைகள் ஊட்டச்சத்து
அக்கறையாளராக ஜஸ்ட் ஹார்வெஸ்ட் என்ற அமைப்பில் உள்ளார். ``ஜனாதிபதி புஷ் பேரழிவு ஆயுதங்கள் பற்றி பொய்
கூறியிருக்கிறார், அது நம்முடைய வீரர்கள் ஈராக்கில் இருப்பதற்குக் காரணமாய் இருந்துள்ளது. துருப்புக்களைத் தாயகத்திற்கு
அழைப்பதற்கு இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன். ஜனாதிபதி புஷ் பேரழிவு ஆயுதங்களை காணப்போவதாகக்
கூறி வருகிறார். அவர் கண்ணாடியில்தான் பார்க்கவேண்டும். பல ஈராக்கியர்களை அவர் கொன்றுகொண்டிருக்கிறார்
என்பது மட்டுமில்லாமல், இங்கிருக்கும் மக்களையும் கொல்கிறார். அவர்கள் படைகளைத் தாயகத்திற்குத்
திருப்பப்பெறவேண்டும்.``
சார்ஜன்ட் பொலார்டுடைய 13வயது மகள், ரொபின் பொன்டன் பிட்ஸ்பேர்க்கில்
ஓக்லான்ட் பகுதியில் உள்ள ப்ரிக் சர்வதேச ஸ்டடிஸ் அகாடமியில் எட்டாவது கிரேடு மாணவியாவார். கண்களில் நீர்
மல்க, இச்சிறுமி கூறியது: ``எனக்கு, அப்பா வீட்டிற்கு வரவேண்டும். அவர் ஈராக்கில் இருப்பதை நான் விரும்பவில்லை.
அவர் இறப்பதை நான் விரும்பவில்லை. என் தந்தையாரை அவர்கள் வீட்டிற்குக் கொண்டுவரவேண்டும்.``
வியட்நாம் போரில் பங்குபெற்றிருந்த பழைய வீரரும், தற்பொழுது உள்ளூரில் வழக்கறிஞராகவும்
உள்ள, சான்போர்ட் கெல்சன், ஈராக்கை ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்துப் பேசினார். ``பல போர்களைப் போலவே,
மக்கள் அங்கே கொல்லப்படுவதற்காகப் பொய் சொல்லி அனுப்பப்டுகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துள்ளோம். வியட்நாமில்
மூன்றரை மில்லியன் வியட்நாம் மக்கள் கொல்லப்பட்டனர். எவ்வளவு ஈராக்கியர்கள் இறந்துள்ளனர்? படை வீரர்களைத்
தாயகத்திற்கு இப்பொழுதே கொண்டுவாருங்கள்.``
பேரணி முடிந்த பிறகு டு ஷெளனாவும், ரொபின் பொன்டனும் உலக சோசலிச வலைத்
தளத்துடன் உரையாடினர். டு ஷெளனா விளக்கினார்: ``என்னுடைய பெண் தன் தகப்பனாருக்கு என்ன நடந்துள்ளது
என்பது பற்றிப் பேச வந்ததை ஆதரித்து நான் வந்துள்ளேன்: நாங்கள் ஒன்றாக வெளியே செல்லும்போதோ, அல்லது
யாராவது மற்றொரு இராணுவ வீரர் கொல்லப்பட்டுவிட்டார் என கூறுவதைக் கேட்கும்போதோ, ரொபின் அது தன்னுடைய
தகப்பனாராக இருக்குமோ என்று பெயர் அறிவிக்கப்படும் வரை கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள்.
``ரொபினுக்கும், அவள் தகப்பனாருக்கும் ஒரே பிறந்தநாள்தான். அவள் தகப்பனாரின்
30வது பிறந்தநாளன்று, அவள் பிறந்தநாள். பிரிவில் உள்ள அனைவருடைய கையெழுத்தோடும் இவளுடைய பிறந்தநாளன்று
வாழ்த்துமடல் வந்திருந்தது. போரின் மனித நிலையைப் பற்றி புஷ் பார்க்கவில்லை. ஒவ்வொரு கடிதத்தையும் அவருடைய
தகப்பனார் அவளுக்கு அனுப்பும்போது, ஏதோ அதுதான் கடைசிக் கடிதம் போல அவர் எழுதுகிறார். நாங்கள் அவரைப்
பற்றி, போருக்குச் சென்றுள்ளார் என்பதற்காக பெருமிதம் கொண்டுள்ளோம், போரைப் பற்றி வலுவாகப் பேசியுள்ளார்
என்பதற்காகப் பெருமிதம் அடைகிறோம்.
``ஆனால் நாங்கள் பொய் கூறப்பட்டுவிட்டோம் என்பதை உணர்கிறோம். சதாம்
ஹுசேனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருந்ததாக நமக்குக் கூறப்பட்டது. நம்மிடம் அதைப் பற்றிய வரைபடக் குறிப்புக்கள்
இருப்பதாகவும், அவை எங்கேயுள்ளன என்பது பற்றி நமக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டது. அவை கண்டுபிடிக்கப்படவில்லை.
அவற்றைச் சதாம் ஹுசேன் எங்கு மறைத்துவைத்துள்ளார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவருடைய பின்பாக்கெட்டிலா?
நாம் பொய் கூறப்பட்டுவிட்டோம், அங்குள்ள வீரர்கள் அதையொட்டிக் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் இப்பொழுதாவது
தாயகத்திற்குத் திருப்பிக் கொண்டுவரப்படவேண்டும்.
``பொய்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளதைப் பற்றி எனக்கு மகிழ்ச்சியே, ஆனால்
படைகளை புஷ் வீட்டிற்கு அனுப்பப்போவதில்லை. இந்தப் போருக்குப் பல காரணங்கள் உண்டு. ஒரு நாட்டைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அதன் எண்ணெய் வளத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர புஷ் விரும்புகிறார்.
"Wag the Dog" சினிமாப் படம் போன்றதுதான் இது. புஷ்ஷின்
செல்வாக்கு கீழே போய்க் கொண்டிருந்த நிலையில், இதைத் தொடக்கினார். நமக்குக் கூறப்பட்ட காரணத்திற்கல்லாமல்,
மற்றைய காரணங்களுக்காக, ரொபினின் தந்தை போன்றவர்கள் அங்கே சண்டையிட அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
``இந்தப் போருக்காகச் செலவிடப்படும் பணத்தை அவர்கள் மக்களுக்கு உணவு அளிக்கப்
பயன்படுத்தலாம். பல மக்கள் பசியுடன் இருக்கின்றார்கள், பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.
போருக்காகச் செலவிடப்படும் பணத்தைக் கொண்டு, பசித்தவர்களுக்கு உணவு வழங்கவும், கல்விக்காகவும், வீட்டு வசதிக்காகவும்
செலவிடலாம். ஈராக்கின் மீதான போரில் செலவழிப்பதைவிட, எத்தனையோ நல்ல வழிகளில் இந்தப் பணம் செலவு செய்யப்படலாம்.
அவர்கள் ஏதோ ஒரு விவகாரத்தில் பொய் கூறியதற்காக கிளிண்டன் மீது தாக்குதல் நடத்தினார்கள். என்னப் பொறுத்தவரையில்
அது என்னுடைய விவகாரமல்ல. அது ஹிலாரியையும் அவரையும் பொறுத்த விஷயம். ஆனால் இந்தப் பொய்களோ, அமெரிக்க
இராணுவ வீரர்களையும் பொறுத்தது, மற்றும் பலர் இதனால் உயிரிழந்துள்ளனர்.
``சார்ல்சை அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று நான் கூறவில்லை. அவரே அறிந்துதான்,
எதற்காகச் செல்கிறோம் என்று உணர்ந்துதான் கையெழுத்திட்டார். தன்னுடைய கடமையைச் செய்யத்தான் அவர் ஈராக்கிற்குச்
சென்றார், ஆனால் புஷ் பொய் சொல்லியிருக்கிறார் என்பதை இப்பொழுதுதான் நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம். இப்பொழுது
அவர்கள் தாயகம் திரும்பும் நேரம் வந்துவிட்டது. இராணுவத்திலுள்ள மக்களும், இராணுவத்தினரின் குடும்பங்களும் இப்போருக்கு
எதிராக உள்ளனர். அவர்கள் பற்றிய சார்புச் செய்திகள், ஊடகத்தில் இல்லை. அவர் அங்கு சென்று உண்மையை உரைத்துள்ளதற்காகப்
பெருமைப்படுகிறோம், அவர் அவ்வாறு பேசிய பின்னர் மற்றும் அது ஜூலை மாதத் தொடக்கத்தில் போஸ்ட்டில் மேற்கோள்
காட்டப்பட்ட பின்னர், அவரிடமிருந்து தகவல் ஏதுமில்லை. அனால் அவரிடமிருந்து
விரைவில் தகவல்வரும் என்று நம்புகிறோம்.
``என் மகள் உண்மை உரைப்பதற்கு நான் ஆதரவு தருகிறேன். தன்னையும் தாண்டித்தான் எப்பொழுதும்
பார்க்கவேண்டும் என்று அவளுக்கு எப்பொழுதும் கற்பித்திருக்கிறேன்; அதிலும் மற்றவர்கள் தேவை பற்றி, மற்றவர்கள் உணவோ,
பெற்றோரோ இல்லாத நிலை பற்றி பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளேன். பல பேர் அவளுடைய வாழ்க்கை நிலைபோல்
நல்ல வாய்ப்புக்களுடன் இல்லை என்றும், அநீதிகளை எதிர்த்துக் குரல் எழுப்பவேண்டும் என்றும் கற்பித்துள்ளேன்.``
ரொபின் பொன்டனும் தன்னுடைய உணர்வுகளை விளக்கிக் கூறினார்: ``போருக்கு எதிராக
உள்ளவர்கள் சரியான முறையில் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை. அங்குள்ள அனைவருமே தாயகம் திரும்ப வேண்டுமென்றுதான்
விரும்புகிறார்கள். அங்கு மிகுந்த வெப்பமாக இருப்பதுடன், அங்கு எதற்காக இருக்கிறார்களோ, அது அவர்களுக்குப்
பிடிக்கவில்லை. என்னுடைய நண்பர்கள் எல்லோருமே போரை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். என்னுடைய தோழி ஒருத்தி,
அவருடைய உறவினரின் தகப்பானாரும் போருக்குத்தான் சென்றுள்ளார், நான் எத்தனை கவலையாகவுள்ளேன் என்பதை
அவள் அறிவாள் என்று என்னிடம் சொன்னாள். புஷ் பொய் கூறிவிட்டார். படைகள் திரும்பவந்துவிடும் என்று அவர் கூறினார்,
ஆனால் அவை விரைவில் வரமாட்டா என்றுதான் தோன்றுகிறது. என்னுடைய பாட்டியாரோடு ஒவ்வொரு முறை
பேசும்போதும், பேச்சு என் தகப்பனாரைப் பற்றித்தான். அவர் இல்லாமல் அனைவரும் வேதனையடைகிறோம். என்
குடும்பம் முழுவதுமே எனக்கு ஆதரவாயுள்ளது. என் தகப்பனார் என்னுடன் விடுமுறையைக் கழிக்க எண்ணினார். விரைவில் ஓய்வுபெறுவதாக
இருந்ததால் நாங்கள் ஒன்றாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம் என இருந்தோம். இப்பொழுது எல்லா திட்டங்களுமே
போரினால் குளறுபடியாகிவிட்டன.``
பாதுகாப்புத் துணைச் செயலர் போல் வொல்போவிச் சமீபத்தில் ஈராக்
சென்றிருந்தபோது வீரர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்ததோடு, நெருக்கடியை ஓரளவு பளுகுறைக்கவும் முயன்றார்.
அங்கிருந்து வந்த பின்னர், ஜூலை 27ம் தேதி ஞாயிறு காலை உரையாடல் நிகழ்ச்சிகளில், ஈராக்கில் தாங்கள் கடமையாற்றுவது
பற்றி வீரர்கள் எதிர்க்கவில்லையென்றும் எப்பொழுது அயல் நாட்டுக் கடமை முடியும் என்ற உறுதியான தேதியை மட்டும் தெரிந்துகொள்ள
விரும்புகின்றனர் என்றும் அறிவித்துள்ளார். ஈராக்கில் போலீஸ் படையமைப்பது முக்கிய முன்னுரிமையைப் பெற்றுள்ளது என்று
வலியுறுத்திய வொல்போவிச், அமெரிக்கத் துருப்புக்கள் விடுவிக்கப்பட, ஏனைய நாட்டு இராணுவப் படைகளைக் கொண்டுவர
முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் கூறினார்.
உதய், க்யூசே ஹுசேன்கள் மோசூலில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதற்கு மறுநாள்,
இராணுவம் ஈராக்கில் புதிய படைகளைச் சுழற்சி முறையில் நிறுத்திவைக்கவும், மிக அதிக காலம் அங்கிருந்த படைகளை
திரும்ப அழைத்துவரவும் ஒரு திட்டத்தை அறிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் குவைத்திற்கு அனுப்பப்பட்டு, தாயகம்
திரும்பும் உத்தரவுகள் இருமுறை ரத்து செய்யப்பட்டுவிட்ட மூன்றாவது தரைப் படைப் பிரிவினர், இந்தத் திட்டத்தின்படி
Stryker Brigade, 82வது
Airborne Division மற்றும் கூடுதல்
National Guard பிரிவினரால் விடுவிக்கப்படுவர்.
ஆயினும், இந்தப் படைச்சுழற்சி முறைக்கான திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு நாள் ஆன பின்னர்
பாதுகாப்பு செயலாளர் ரம்ஸ்பெல்ட் அதற்கு ஒரு விதியைப் புகுத்தினார். பென்டகனில் செய்தியாளரிடம் பேசிய அவர்
பின்வருமாறு அறிவித்தார்: "ஏராளமான எதிர்பார்க்கமுடியாத விஷயங்கள் அங்கு புதைந்துள்ளன. எவை எவற்றை நிர்ணயிக்கும்,
என்ன உண்மையாகவே நிகழும், என்ற பல விஷயங்கள் உள்ளன. நம்மால் கொண்டுவரப்பட உள்ள சர்வதேசப் படைகள் முதலில்
உள்ளது. பின்னர் இரண்டாவதாக பாதுகாப்புச் சூழ்நிலை சில காலத்திற்கு வரை இருக்கும் என்பதை கருத்தில்
கொள்ளவேண்டும். அவைதான் அமெரிக்கப் படைகள் எந்த அளவு தேவையான எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்பதை
நிர்ணயம் செய்யும்."
``டொனால்ட் ரம்ஸ்பெல்ட் இங்கு இருந்தால், அவர் ராஜிநாமா செய்யவேண்டும் என்று
நான் கோருவேன்`` என ABC
செய்தியில், பெயர்தெரிவிக்க விரும்பாத மூன்றாம் தரைப்படைப் பிரிவின் வீரர் ஒருவர் கடந்த வாரம் கூறியதாகத்
தெரிவித்தது.
|