WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐ.நா
UN report says one billion suffer extreme poverty
கடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு பில்லியன் மக்கள்: ஐ.நா. அறிக்கை
By David Rowan
28 July 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
ஐ.நா. அபிவிருத்தி திட்ட அமைப்பானது (UNDP)
2003 ஜூலை 8 ந் தேதி தனது மனிதவள மேம்பாட்டு ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஐ.நா. பேரவையின்
2000 ம் ஆண்டு உச்சி மாநாட்டில் உடன்பாடு காணப்பட்ட மில்லேனியம் எட்டு (MDGS)
என்ற வளர்ச்சிக்கான குறிக்கோள்களை நிறைவேற்றுவதில், உலகில் உள்ள ஏழ்மை நிலையிலான 175 நாடுகளின்
முன்னேற்றம் பற்றி இந்த அறிக்கையில் விபரம் தரப்பட்டிருக்கின்றது.
வறுமை, பசி, மற்றும் நோய்களை 2015 ம் ஆண்டளவில் ஏழை நாடுகளில் பாதியாக
குறைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஐ.நா. இந்த எட்டு குறிக்கோள்களையும் வகுத்தது. ''வளர்ந்து
கொண்டுவரும் மற்றும் பணக்கார நாடுகளின் பரஸ்பர பொறுப்புக்களை'' ஊக்குவித்து வருவதுதான் இந்த குறிக்கோள்களின்
நோக்கமாகும் என்று கூறுகிறது. மில்லேனியம் எட்டு என்ற குறிக்கோள்களில் 7 கட்டளைகள் ஏழை நாடுகளின்
பொருளாதாரத்தை சீரமைப்பதை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ஐ.நா வலியுறுத்துவது சர்வதேச நாணய நிதியம்
(IMF) மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதான
குறிக்கோள்களையாகும். ஏழைநாடுகளின் வறுமையை குறைக்கும் பிரதான பொறுப்பு அந்த நாடுகளின் அரசாங்கங்களிடம்
ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மேற்கு நாடுகள் மற்றும் அமைப்புக்கள் அந்தப் பொறுப்பை பகிர்ந்து
கொள்ளாது. அத்துடன் ஏழை நாடுகளின் பொருளாதார கட்டமைப்பை சீரமைப்பதற்கான திட்டங்களை, மேற்கு நாடுகள்
ஏழை நாடுகள் மீது திணித்து வருவதில் ஏற்படும் தாக்கங்களை, பகிர்ந்து கொள்ள இந்த நாடுகளும் முன் வருவதில்லை.
வளர்ந்து வருகின்ற நாடுகள் தங்களது நிர்வாகத்தை சீரமைத்துக் கொள்ள வேண்டும்
என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக ''நிதி ஆதாரங்களை திரட்டுவதில் அவற்றை சமமாக பங்கீடு செய்வதில்
மற்றும் அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதில்'' உத்திரவாதம் செய்து தரவேண்டும் என்று மேற்கு நாடுகள்
வலியுறுத்துகின்றன.
''ஏழை நாடுகள் மிகப்பரவலான வீச்சில் சீர்திருத்தங்களை மேற்கொண்டால்தான்''
மில்லேனியம் எட்டின் குறிக்கோள்களை அடைய முடியும் என்று ஐ.நா. அறிக்கையும் இதே கருத்தை வலியுறுத்துகின்றது.
இந்தக் குறிக்கோள்களில் 8 வது குறிக்கோள் மட்டுமே ஏழை நாடுகளுக்கும், பணக்கார
நாடுகளுக்கும் உள்ள உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது. அதே நேரத்தில்
பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளுக்கு எந்தவிதமான பொறுப்பும் கொடுக்கப்படவில்லை.
ஐ.நா.வின் மனித வள மேம்பாட்டு அறிக்கையில் குறுகிய கண்ணோட்டமும் மிகுந்த திமிர்
போக்கும் காணப்படுகின்றது. இருப்பினும் அந்த அறிக்கையில் பல விபரங்கள் மற்றும் மிகப் பெரும்பாலான உலக மக்கள்
மீது உலக முதலாளித்துவம் விளைவித்து வருகின்ற நாசகரமான விளைவுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.
1990 ம் ஆண்டில் இருந்ததைவிட 54 நாடுகள் தற்போது அதிக அளவில் ஏழ்மை
நிறைந்த நாடுகளாக ஆகிவிட்டன என்று UNDP அறிக்கை
சுட்டிக் காட்டுகிறது. இவற்றில் 20 நாடுகள் சகாரா பாலைவனப் பகுதிக்கு கீழேயிருக்கின்ற ஆபிரிக்க நாடுகளிலும்,
மேலும் 17 நாடுகள் கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் காமன்வெல்த்தில் இடம்பெறும் நாடுகளிலும் இடம் பெற்றுள்ளன.
எய்ட்ஸ் (HIV) நோய்கள்
காரணமாக 34 நாடுகளில் மனிதர்களது சராசரி வாழும் வயது வீழ்ச்சியடைந்திருக்கின்றது. 59 நாடுகளுள் 24 நாடுகளில்
எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. 31 நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக ''வெளிநாட்டு கடன்கள்
அதிகரித்துள்ளன''.
1990 ம் ஆண்டில் இருந்ததைவிட 21 நாடுகளில் இன்றைய தினம் மக்களிடையே பட்டிணி
அதிகரித்திருக்கின்றது. 14 நாடுகளில் 5 வயதை பூர்த்திசெய்யும் முன்னரே அதிகமான அளவிற்கு குழந்தைகள் மடிகின்றன.
12 நாடுகளில் ஆரம்பக் கல்வி கற்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றது.
UNDP தனது அறிக்கையில், உலகின்
மிக ஏழ்மையான நாடுகளில் ''முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார வீழ்ச்சி'' ஏற்பட்டிருப்பதை ஒப்புக்
கொண்டிருப்பதாகவும், ''ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரமும், வறுமையும் படிப்படியாக
மோசம் அடைந்து வருவதாகவும்'' ஐ.நா அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டி
BBC தகவல்
தந்திருக்கின்றது.
UNDP துணை இயக்குநரான ஜான்
பேபர் (Jean Fabre)
தந்திருக்கிற அறிக்கை, சில முக்கியமான விபரங்களை தெளிவுபடுத்துகின்றது. கடந்த
20 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை நாடுகளிடமிருந்து பணக்கார நாடுகளுக்கு செல்வம் இடம் பெயர்ந்து சென்றிருப்பதாக
அவர் சுட்டிக்காட்டுகிறார். இப்படி கடந்த ''பல ஆண்டுகளில் உருவாகிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள்
சர்வதேச அளவில் கணிசமான அளவிற்கு செல்வத்தை வளர்த்திருக்கின்றன. ஆனால் அவை பணக்கார நாடுகளில்
குவிந்துவிட்டன. எனவே கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது'' என்று இவர் தனது
அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிக்கையில் 31 மிக மோசமான ஏழை நாடுகளில் பொருளாதாரம் தேக்க
நிலைக்கு வந்துவிட்டது அல்லது வீழ்ச்சியடைய துவங்கிவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி நிலவரம் பற்றிய
போக்குகளை மதிப்பீடு செய்யும் போது 2165 ந்தாவது ஆண்டு வரையில் சில நாடுகள் வறுமையை சமாளிக்க
முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சகாரா பாலைவனத்திற்கு கீழ் பகுதியில் உள்ள 20 நாடுகளில் 2147
வது ஆண்டு வரை கொடூரமான வறுமையை பாதியாக குறைக்க முடியாது. அதே போன்று குழந்தைகள் இறப்பு விகிதத்தை
2165 ஆண்டு வரை மூன்றில் இரண்டு பங்கு குறைக்க முடியாது.
ஐ.நா. மனிதவள மேம்பாட்டு குறியீட்டு எண், ஏழை நாடுகளில் மக்களது வாழும் வயது,
கல்வி நிலை, முதியோர் கல்வி மற்றும் வருமானத்தை மதிப்பீடு செய்துள்ளது. இந்த வகையில் 21 நாடுகளின் வருவாய்
வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் 14 ஆபிரிக்க நாடுகள் மற்றும் ரஷ்யா, 6 முன்னாள் சோவியத் குடியரசுகள்
இடம் பெற்றுள்ளன.
முன்னாள் சோவியத் யூனியனில் முதலாளித்துவம் திரும்பிய பின்னர் ஏற்பட்ட நிலவரம் குறித்து
பேபர் ''பல நாடுகளில் மிகப்பெரும் அளவிற்கு அழிவு ஏற்படுகின்ற வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அவற்றில் மிக
முக்கியமானவை என்று அடிக்கடி குறிப்பிடப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் வறுமை அதிகரித்துக்
கொண்டிருக்கிறது. அந்த பிராந்தியம் முழுவதிலும் வறுமை மும்மடங்கு ஆகிவிட்டது'' என்று விளக்கியிருக்கிறார்.
மிக அதிக அளவில் கடன்பட்டிருக்கும் 42 நாடுகளில் நபர்வரி வருமானம் 1,500
டொலருக்கும் குறைவாக உள்ளது. 1990 - 2001 ஆகிய ஆண்டுகளுக்கிடையே இத்தகைய நாடுகளில் பொருளாதார
வளர்ச்சி வீதம் ஆண்டிற்கு அரை வீதமாகவே உள்ளது. ஏழை நாடுகளுக்கு கடன் நிவாரணம் தரவேண்டும் என்று ஐ.நா
அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும் அந்த அறிக்கைகளிலேயே பணக்கார நாடுகளின் பிடிவாதமும், கொடூரமான
நிலைப்பாடும் விளக்கப்பட்டிருக்கின்றது. சுதந்திர வர்த்தக சந்தைக் கொள்கையை வலியுறுத்தி வருவதன் மூலம் இன்றைய
உலக முதலாளித்துவத்தின் உண்மையான நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. கடன் நிவாரணம் தரவேண்டும் என்று கூறப்படுவதெல்லாம்
வெறும் வார்த்தைகளாக இருக்கின்றன.
பேபர் தனது அறிக்கையில் இதை ஒப்புக் கொண்டிருப்பதுடன், ''பணக்கார நாடுகளுக்குள்
ஏழை நாடுகளின் பொருட்கள் நுழைய முடியாத அளவிற்கு பல்வேறு தடைகளை அவைகள் உருவாக்கியுள்ளன. பணக்கார
நாடுகளில் வேளாண்மைக்கு முக்கியமான மானியங்கள் தரப்படுவதுடன், இதன் மூலம் இந்த நாடுகளின் வேளாண்மைப்
பொருட்கள் உலக அளவிலான விலைகளைவிட செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதில் மிக மோசமான அம்சம்
என்னவென்றால் பலவீனமான பொருளாதாரங்களைக் கொண்ட பணக்கார நாடுகளில் வேளாண்மை உற்பத்திப் பொருட்கள்
குவிக்கப்பட்டு வருகின்றன'' என்பதையும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2001 ம் ஆண்டில் வெளிநாட்டு உதவி 52.3 பில்லியன் டொலர்களாகயிருந்தது. தற்போது
இது 57 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ள குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு
ஆண்டும் குறைந்த பட்சம் 100 பில்லியன் டொலர்கள் தேவைப்படும். அந்த அளவைக்கூட இப்போது எட்ட முடியவில்லை
என்று ஐ.நா தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.
ஆனால் UNDP
நிர்வாகியான மார்க் - மல்லோக் பிரெளன்
BBC ஆன்லைன் செய்தி
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, வெளிநாட்டு உதவி நிலவரம் மோசமடைந்து வருவது குறித்து கவலை
தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டு உதவி நிலவரம் மோசமடைந்து கொண்டு வருவதால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக
அவர் கூறுகிறார். ''இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் ஏன் நெதர்லாந்து ஆகிய நாடுகள் மிக தாரளமாக
நன்கொடைகளை வழங்கிக் கொண்டு வருபவை ஆகும். அத்தகைய நாடுகள் அனைத்துமே தங்களது செலவுகளை குறைத்துக்கொண்டு
வருகின்றன. ஏனென்றால் செலவினங்கள் குறைக்கப்படும் போது வளர்ச்சித்திட்ட உதவித்தொகைகள் வெட்டப்படுகின்றன''
என்று அவர் விளக்கியுள்ளார்.
உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்தி வரும் ''வாஷிங்டனின் பொதுக்
கருத்தினால்'' மிகப்பெரும் அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பட்ஜெட்டில் கட்டுப்பாடு,
பொருளாதார கட்டுத்திட்டங்கள் நீக்கம், வர்த்தகம் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் தாராளப்போக்கு ஆகியவை வாஷிங்டனின்
பொதுக்கருத்து கொள்கையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
UNDP அறிக்கையானது இவற்றிலிருந்து விலகிச் சென்று ஒரு கண்ணோட்டத்தை
வெளிப்படுத்தியிருந்தாலும், ஒவ்வொரு தனிப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும் தனித்தனியாக
கவனிக்க வேண்டும் என்று அது தனது அறிக்கையில் கூறியுள்ளது. அப்படி இருந்தும் இந்த அறிக்கையானது, பொருளாதார
வளர்ச்சியின் வெற்றி அல்லது தோல்வி என்பது அந்த பொருளாதாரம் எந்த அளவிற்கு சர்வதேச சந்தைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது
என்பதை பொறுத்தே அமையும் என்று குறிப்பிட்டிருக்கின்றது.
UNDP அறிக்கையின் ஒரு பிரிவில்
மாலியை உதாரணமாக காட்டியிருக்கிறார்கள். ''இந்த சிறிய நாடு சீனாவைப் போன்று எப்படி ஏற்றுமதிப்
பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக ஆக முடியும்'' என்று கேட்டிருக்கின்றது. ''இந்த நாட்டில் முதலீட்டாளர்கள்
முதலீடு செய்ய தயங்குகின்றனர். கல்வியறிவு மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் மிகக் குறைவாக இருக்கிறது. தரை சூழ்ந்த
நாடாகயிருக்கிறது. அதனால் செலவு அதிகமாகுவதுடன், பொது சுகாதார வசதியும் குறைவாக உள்ளது. சத்து
ஊட்டம் குறைவு மற்றும் உள்நாட்டுச் சந்தையும் மிகச்சிறிய அளவில் உள்ளது. இவையெல்லாம் இந்த நாட்டின்
பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளாக இருக்கின்றன. எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த நாட்டில் முதலீடு
செய்வதால் தங்களுக்கு எதுவும் லாபம் இல்லையென்று கருதி முதலீடு செய்ய மாட்டார்கள்'' என்று அறிக்கை தொடர்வதுடன்
மேலும், மாலி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்ற வகையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை
செய்தால்தான் முதலீடுகள் சாத்தியமாகும் என்கிறது.
''வங்கதேசத்தை போன்று மாலியும் ஆடைகள் ஏற்றுமதி, சுற்றுலாப் பயணிகள் வருகை
மற்றும் வெப்ப நாடுகளின் உணவுப் பொருட்களை பதப்படுத்தும் ஆலைகள் ஆகியவற்றை உருவாக்க முடியும். இந்த வகைகளில்
மாலி வெற்றி பெறுவதற்கு சுகாதாரம், கல்வி, குடி தண்ணீர், சாலைகள், துறைமுகங்கள் மற்றும் மின்சார வசதிகளில்
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு முன்னேற்றம் கண்டாக வேண்டும்'' என்று
UNDP தனது அறிக்கையின்
இன்னொரு பகுதியில் மிகவும் வருந்தத்தக்க ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றது.
இந்த அறிக்கையில் காணப்படும் முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. ஒரு ஏழைநாடு
பெருமளவில் சர்வதேச உதவியில்லாமல் இப்படிப்பட்ட கட்டமைப்பு வசதிகளை எப்படி உருவாக்க முடியும் என்பதை
சிந்திக்காமல் இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஏழை நாடுகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவற்றிற்கு உதவி வழங்க
பணக்கார நாடுகள் முன்வர வேண்டும் என்று UNDP
அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த அறிக்கையை உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் வெளியிடும் அறிக்கை
போன்றே அமைந்திருக்கிறது.
UNDP வெளியிட்டுள்ள இந்த மனிதவள
மேம்பாட்டு அறிக்கையில் வெளிப்படையாக குறிப்பிடாததும், மற்றும் அறிக்கையை நடுநிலையோடு நேர்மையாக
படிக்கும் போது வெளிப்படையாக தெரிவதும் என்னவென்றால், இது போன்ற சர்வதேச அமைப்புக்கள் செயல்படுத்தி
வரும் கொள்கைகளின் காரணமாகத்தான் சமூக மற்றும் பொருளாதார பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன என்பதாகும்.
Top of page
|