World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Parliamentary probe exposes lies on Iraqi weapons

பிரிட்டன்: பாராளுமன்ற விசாரணை ஈராக்கிய ஆயுதங்களைப் பற்றிய பொய்யுரைகளை வெளிப்படுத்துகிறது

Part 1: Clare Short, Robin Cook and Andrew Gilligan

By Richard Tyler
3 July 2003

Back to screen version

கீழேயுள்ளது மூன்று தொடர் கட்டுரைகள் வரிசையில் முதலாவது ஆகும்

வெளியுறவு தேர்வுக்குழுவின் விசாரணை, பிரதம மந்திரி டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம் ஈராக்கின் மீது போர் தொடுப்பதற்கான திட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் உளவுத்துறைத் தகவல்களை திரிபுபடுத்தியதா என்ற தீர்ப்பை ஜூலை 8ல் வெளியிட இருக்கிறது. பாராளுமன்றத்தின் தொழிற்கட்சி ஆதிக்கத்திற்குட்பட்ட குழு அரசாங்கத்தின் மீது குறைகூறப்பட்டுள்ள வாக்குமூலங்களை, அரசாங்கம் பொய்யுரை பகன்றுள்ளது என்று கிட்டத்தட்ட கூறப்பட்டவையை - ஒதுக்கிவிடும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விசாரணையில் வெளிவந்த சில சாட்சியங்களை அவ்வாறு எளிதில் செய்வது கடினம். ஏனெனில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன, எனவே போர் தொடுக்க வேண்டும் என்று கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் முந்தைய முடிவை அவை அசைக்க முடியாமல் தெளிவுபடுத்துகின்றன. இந்தத் தகவல் ஜீரணிக்கப்படமுடியாத ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட விசாரணை புதைக்கப்படா வண்ணம், உலக சோசலிச வலைத் தளம் மிக முக்கியமான சான்றுகளின் சுருக்கத்தை வெளியிடுகிறது.

க்ளேர் ஷோர்ட்

ஈராக்கின் மீது போருக்குச் செல்லவேண்டும் என்ற முடிவு, பிரிட்டிஷ் மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் முதுகின் பின்னால் எடுக்கப்பட்டது என்பது மட்டுமின்றி, அமைச்சர் அவையும் கூடியளவு விவாதத்திலிருந்து விலத்தப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சரவை மந்திரி க்ளேர் ஷோர்ட் (Clare Short) கொடுத்துள்ள சாட்சியப்படி அமெரிக்காவுடன் சேர்ந்து, பிரிட்டிஷ் படைகள் ஈராக் மீது படையெடுத்ததற்கு ''கொள்கை வகுக்கும் பொறுப்பில்'' இருந்த பிளேயருடைய கையாட்கள் என்ற சிறு குழுவைப்பற்றி விபரிக்கின்றது. ''நால்வர் கும்பல்'' (Gang of Four) என்று செய்தி ஊடகத்தால் பெயரிடப்பட்டுள்ள இவர்கள், டோனி பிளேயரால் பிரத்தியேகமாக தாராள ஊதியத்திற்கு பதவியில் அமர்ந்துகொண்டவர்கள் மட்டுமல்லாது, தேர்ந்தெடுக்கப்படாத நபர்களும் ஆவர்.

ஷோர்ட்டின் சாட்சியத்தின்படி, பிளேயரின் நெருங்கிய வட்டத்தில் அவருடைய தொடர்பு இயக்குனர் அலாஸ்டர் காம்பல் (Alastair Campbell), படைகளின் தலைவர் ஜோனதன் பெளல், (Jonathan Powell) அரசியல், அரசாங்கத் தொடர்பு இயக்குனர் மோர்கன் சீமாட்டியார் (Baroness Morgan), அயலுறவு ஆலோசகர் சேர் டேவிட் மான்னிங் (Sir David Manning) ஆகியோர் இருந்தனர். ''இந்த குழுவினர்தாம் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்ததுடன், அன்றாடம் ''போர் அமைச்சர்'' கூட்டத்தில் கலந்துகொள்வர். அவர்கள்தான் 'உட்குழுவினர்' திட்டம் வகுக்கும் ''குழு'' என்றார் ஷோர்ட்.

திருமதி ஷோர்ட், மேலும் ''போர் ஆரம்பமாவதற்கு முன்பு அபாயங்கள், இழப்பு பற்றிய நிலை, இராணுவ, அரசியல், இராஜதந்திர மாற்றுச் செயல்பாடுகள் பற்றிய அறிக்கைகள் ஏதும் அமைச்சரவைக்கு கொடுக்கப்படவில்லை என்றார். இதற்கு உரிய அமைச்சரவை அமைப்பான பாதுகாப்புக்கும் வெளிநாட்டு கொள்கைக்குமான குழு (Defence and Overseas Policy Committee) உம் ஈராக்கைப் பற்றிய விவாதத்தில் ஈடுபட ஒன்றுகூடவில்லை. வித்தியாசமான சாத்தியப்பாடுகள் பற்றிய ஆய்வோ, எந்த அமைச்சரவை குழு முன் விவாதத்திற்கான அறிக்கையோ, எழுத்து மூலமான தாக்கலோ வைக்கப்படவில்லை. அனைத்தும் சில சமயம் ஒரு மணி நேரத்துக்குள் முடிந்துவிடும் கூட்டங்கள் பேச்சளவில் முடிக்கப்பட்டன'' என்றார்.

ஷோர்ட்டின் கூற்றின்படி, இந்த அமைச்சரவை விவாதம் இல்லாமற்போனது ஈராக் போர் மட்டுமின்றி, எல்லா முக்கிய கொள்கைத் திட்டங்கள் பற்றியும் அதே நிலைதான் காணப்பட்டது. ''தீர்மானம் எடுக்கும் முறையின் உடைவு, பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கைக் குழுவைக் கூட்டாதது, எந்த எழுத்து மூலமான சான்றுகளுமில்லாதது, பல சாத்தியப்பாடுகளை ஆராயாதது. இராஜதந்திர, இராணுவ முறையிலான மாற்றுமுறைகள் சிந்திக்கப்படாதது, இவையனைத்தும் மிக மிக மட்டமான, மதிப்பற்ற செயல்முறை, பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தன்மையில் நேர்ந்துள்ள பெரும் சீரழிவு அதிர்ச்சி தரக்கூடியது, இச்சீரழிவு சில காலமாகத் தொடர்ந்து வருகிறது.... ஈராக்கைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாகவே அனைத்துச் செயல்களிலும், மருத்துவமனைகள் அமைத்தல், கட்டணங்களை உயர்த்துதல் என எல்லாவற்றிலும்.... இது காணப்படுகின்றது''.

போர் தொடுப்பது என்ற முடிவு கடந்த கோடை காலத்திலேயே எடுக்கப்பட்டுவிட்டது என குழுவிடம் ஷோர்ட் கூறினார். ஜனாதிபதி புஷ்ஷும், பிரதம மந்திரி பிளேயரும் முன்பே இம்முடிவை எடுத்துவிட்டதாகவும், பெப்ரவரி (2003) இடைப் பகுதி இலக்குத் தேதியாக இருக்கக்கூடுமென்றும் பின்னர் துருக்கியுடன் ஏற்பட்ட பிரச்சினை போன்றவற்றால் நம்முடைய பிரதம மந்திரிக்கு கூடுதலான அவகாசம் கொடுப்பதற்காக மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாகவும் ''Whitehall முறையின் மூன்று மிகவும் மூத்த அதிகாரிகள்'' தனக்கு கூறியதாக அவர் தெரிவித்தார்.

கடந்த கோடை காலத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அமைச்சரவை கூட்டப்படவில்லையென்றும், ஜூலை இறுதியிலிருந்து அக்டோபர் வரையிலான இக்காலக்கட்டத்தில்தான் பிளேயருக்கும் புஷ்ஷுக்கும் இடையே போருக்குச் செல்வது என்ற உடன்பாடு தோன்றியது என்றார் ஷோர்ட்.

ஈராக்கைப் பற்றிய உளவுத்துறை அறிக்கையில் சில பகுதிகளும், ''பேரழிவு ஆயுதங்கள்'' பற்றியும் வேண்டுமென்றே வற்புறுத்தும் வகையில் அச்சம் நம்பிக்கைத் தன்மையுடையது என்பதற்காக, மாற்றப்பட்டனவா என்ற கேள்விக்கு, ''உடனடியாகவும், தவிர்க்க முடியாதெனவும், உடனடி நடவடிக்கை கட்டாயம் என்பதற்காகவும், ஆம், மாற்றங்கள் செய்யப்பட்டன'' என்பதுதான் ஷோர்ட் கொடுத்த பதில்.

''வசந்த காலம் வருவதற்கு முன் நம்மைப் போரில் ஈடுபடுத்துவதற்காக உண்மையில் இல்லாதவற்றை வகைப்படுத்திய ஒரு தொடர்ச்சியான அரை உண்மைகள், மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கள், மீள உறுடிதப்படுத்தல்கள்'' ஆகும் என்றார் ஷோர்ட்.

மேலும் பிரிட்டன் போரில் பங்குபெறுவதற்காக, பிளேயர் கையாண்ட ''கெளரவமான திரிபுபடுத்துதல்'' முறையே இது என்றார் ஷோர்ட்.

''பிரதம மந்திரி, அமெரிக்கா இராணுவ நடவடிக்கை ஈராக் மீது கொள்வதை ஆதரிப்பது கெளரவமானது, விரும்பத்தக்கது என்று முடிவு கொண்டிருக்கலாம். அதையொட்டி பல சுற்றுவழிகளாலும், திருகுதாளங்களினாலும் அத்தகைய நடவடிக்கை கெளரவமானது என எங்களுக்கு கதை கூறுவது கெளரவமானதாக இருக்கலாம் என அவர் நினைத்திருக்கலாம். எனவேதான் நான் இதை ஒரு கெளரவமான ஏமாற்றுதலாக இருக்குமோ என்று கருதுகிறேன்'' என ஷோர்ட் முடித்தார்.

ரொபின் குக்

முதல் நாள் குழுக்கூட்டத்தில் பேசிய மற்றொருவர், முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், மார்ச் மாதம் ராஜிநாமா செய்யும் வரையில் பாராளுமன்றத்தின் தலைவராகவும் இருந்த ரொபின் குக் ஆவார்.

''போருக்கு முன் கூறப்பட்ட கருத்துக்களுக்கும், போருக்குப்பின் நிகழ்ந்துள்ள உண்மைகளும் இடையே ஏன் பெருத்த வேறுபாடுகள் உள்ளன?'' என்பதை ஆராயுமாறு குழுவினரிடம் குக் கேட்டுக்கொண்டார். நாம் இரசாயன ஆயுத உற்பத்தி ஆலைகளைக் காணவில்லை; அணுவாயுதத் திட்ட வசதிகள் எதையும் கண்டறியவில்லை. 45 நிமிடங்களுள் தாக்குதல்களுக்குத் தயாராகி வரும் பீரங்கி ஆயுதங்கள் எதையும் கண்டுபிடிக்கப்படவில்லை'' என்றார்.

ஏன் ஈராக்கிற்குள் பழையபடி ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஆய்வாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என குக் வினவினார். ''சதாம் உடனடியாக அச்சுறுத்தக்கூடிய திறன் பெறாமலிருந்தார் என்ற முடிவுக்கு வருவது உறுதியாகிவிடும் என்பதால்தான் அவைகள் எமக்கு அறிவிக்கவில்லை என்று கருத நேரிடுகிறது'' என்றார்.

மேலும் போருக்கான சட்டபூர்வமான அடிப்படையை பேரழிவு ஆயுதங்கள் இல்லாதது மாற்றிவிடவில்லையா என்றும் குக் கேட்டார்.

''சதாம் ஹூசேனிடம், நிராயுதபாணியாக்குவதற்கு போர் தேவை என்ற கருத்தை அட்டர்னி ஜெனரல் நியாயப்படுத்தியதை நினைவுகூர்வோம். இப்பொழுது நிராயுதபாணியாக்குவதற்கு ஆயுதம் ஒன்றும் இல்லை என்ற நிலையில் அவருடைய கருத்திற்கு இன்னமும் ஏதேனும் சட்டபூர்வ அடிப்படை உள்ளதா?``

''நாம் போருக்குப் போனோம். ஐந்திலிருந்து ஏழாயிரம் வரை சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டனர். சில பிரிட்டிஷ் இராணுவ வீரரும் இறந்தனர். போருக்குப் போக வேண்டுமென்றால், ஒரு நாட்டிற்கு உண்மையான வற்புறுத்தும் நியாயம் இருக்கவேண்டும்; போர் தொடுக்க வேண்டுமென்றால் வேறு வழியின்றி அம்முயற்சியில் முழுமையான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது தேவை என்ற நிலை இருக்க வேண்டும்.... இப்பொழுது கேள்வி, நமக்கு இன்றிமையாத, நம்பத்தகுந்த சான்றுகளைக் காட்டும், பிரதம மந்திரி கூறியபடி, உடனடியானதும் ஆபத்தும் கொடுப்பதுமான அச்சுறுத்தல் இருந்ததா? இப்பொழுது நமக்குத் தெரிந்தவரையில் சதாம் அப்படிப்பட்ட உடனடியான அச்சுறுத்தல் திட்டம் கொண்டிருக்கவில்லை. எனவே அவரிடம் அப்படிப்பட்ட திட்டம் இருந்தது என்ற நினைப்பில் போருக்குப் போனது பெரிய பிழையே ஆகும்.''

பிளேயர் அரசாங்கம் ''முழு விளக்கத்தையும் கொடுக்கவில்லை'' என குக் குற்றஞ்சாட்டினார்.

''அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால், உளவுத்துறையை சாட்சியாக பயன்படுத்துவதற்கு மாறாக கொள்கைவகுப்தற்கான அடிப்படையாக கொள்ளப்பட்டதே. நாங்கள் ஏற்கனவே வகுத்துவிட்ட ஒரு திட்டத்தை நியாயப்படுத்த உளவுத்துறை அடிப்படையாக பயன்படுத்தியுள்ளோம்''.

பிரிட்டிஷ் அரசாங்கம் பெப்ரவரி மாதம் சதாம் ஹூசேன் உடனடியான அச்சுறுத்தலை அமெரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் தொடுக்கக்கூடும் என்ற கருத்திற்கு ஆதரவு தரும் ஆவணத்தைத் தயார் செய்ததற்கு, குக் குறை தெரிவித்தார்; ஏனெனில் இந்த ஆவணம் பின்னர் கலாநிதி பட்ட ஆய்வுக் கட்டுரையிலிருந்து களவெடுக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இந்த ''போலி ஆவணம் உண்மையிலேயே புதிய, அபாயகரமான, உடனடியான வலியுறுத்தும் அச்சுறுத்தலை'' கொண்டிருக்கும் செய்திகளைக் கொள்ளவில்லை என்றார் அவர்.

''மேலும், இந்த போலி ஆவணம் கடந்த 4 மாதங்களாக நான் தவறாது கலந்துகொண்ட ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை. என்னால் அவ்வாறு ஒரு விவாதம் நடைபெற்றதாக ஞாபகப்படுத்த முடியவில்லை'' என குக் கூறினார்.

பிளேயரையும் அரசாங்கத்தையும் நேரடியாக பொய்யுரை கூறுவதாக குக் குற்றஞ்சாட்டவில்லையென்றாலும் ''பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள், செப்டம்பர் கோப்பு, பின்னர் அவையில் உரைக்கப்பட்டவை போன்றவை உண்மையில் இருந்த நிலைமைகளோடு இணைத்துப் பார்க்க முடியாதவையாகிவிட்டன.'' என தெரிவித்தார்.

தன்னுடைய பழைய அமைச்சரவை சக ஊழியர் ஷோர்ட் ஐ விட, குக், பிளேயரைத் தனிப்பட்ட முறையில் குற்றம் உடையவர் என்ற கருத்திலிருந்து கெளரவமாக விடுவித்தார்.

ஒரு கேள்விக்கு குக் பதிலளிக்கையில் ''பேரழிவிற்குரிய ஆயுதங்களை தயாரிப்பதற்கு இரசாயனப் பொருட்கள் ஈராக்கில் இருப்பதாக கூறினால், அது பாரதூரமான ஒன்று. அவை எங்கிருக்கின்றன என்பதை காட்ட ஒருவர் முன்வந்தால் இதற்கான நன்கொடை பாரிய தொகையாக இருக்கவேண்டும். தற்போது அவர்கள் எங்களுக்கு அப்படியான பொருட்களை காட்டவேண்டுமானால், அவர்கள் தங்களது இரசாயன பண்ணையை ரெக்ஸாஸ் இல் வைத்திருக்கலாம்'' என கூறினார்.

பிரதம மந்திரியும் மற்றவர்களும் இந்த நடவடிக்கைகளில் நல்லெண்ணத்துடன்தான் ஈடுபட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.... அது ஏமாற்றுவித்தை அல்ல, புதிய கண்டுபிடிப்பு அல்ல, இல்லாத உளவுக் குறிப்பைக் கொண்டுவந்ததும் அல்ல, ஆனால் முழுமையான தோற்றத்தை வெளிக்காட்டாததுதான் ஆகும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆண்ட்ரூ ஜில்லிகன்

பிளேயரின் செய்தித் தொடர்பு இயக்குனரான அலாஸ்டர் காம்பல் நேர்மையற்ற முறையில் செய்தி வெளியிட்டதாக BBC, மற்றும் நிருபர் ஆண்ட்ரு ஜில்லிகன் குற்றஞ்சாட்டியுள்ளார். மே 29, ஜூன் 4, ரேடியோ 4 ன் இன்று (Radio Four's Today) என்ற நிகழ்ச்சியில் செப்டம்பர் உளவுத்துறை ஆவணத்தில் ஈராக் 45 நிமிஷத்திற்குள் பேரழிவு ஆயுதங்களைச் செலுத்திவிட முடியும் என காம்பல் ''குழப்பி'' அவலப்படுத்திவிட்டார் என்பதே அவர் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு.

இந்தக் கூற்று எந்த மூலத்திலிருந்து வந்தது எனக் கேட்கப்பட்டதற்கு, ஆண்ட்ரு ஜில்லிகன் ''ஒரே ஒரு ஆதாரம்தான் என்றும் மற்றைய செய்தியாளர்களும் அதை ஏற்ற அளவில் தங்கள் ஆதாரங்களைக் கொண்டிருந்தனர் எனவும் கூறினார். "பின்னர் அது சரியென உறுதியளிக்கப்பட்டது; என்னுடைய செய்திக்குப் பின்னர் நாங்கள் அதேபோன்ற அறிக்கைகளை பல செய்திதாள்களிலும் வந்ததைப் பார்த்தோம்." என்றார்

மேலும் கூறியது: "உளவுத்துறையில் அரசாங்கம் ஈராக்கின் உளவுத்துறைத் தகவலைப்பற்றி நடத்தும் முறையையொட்டி உளவுத்துறை மத்தியில் ஒரு அமைதியின்மை ஏற்பட்டதை அறிந்தேன். இது குறிப்பிட்ட செப்டம்பர் 24 கோப்பு மட்டுமல்ல, மற்ற சில விஷயங்களிலும் கூட" என்றார்.

இது "மேலும் மொத்தத்தில் நான்கு வேறு நபர்களாலும் உறுதி செய்யப்பட்டது". அவர்கள் பொதுவாக என்னிடம் டெளனிங் தெரு, உளவுத் தகவலை கடந்த ஆறு மாதமாக உபயோகிக்கும் முறை பற்றிய அக்கறையைக் கூறியுள்ளனர்." என்றார் ஜில்லிகன். "சதாம் ஹூசேனுக்கும் அல்கொய்தாவிற்கும் இடையிலான தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகளைப் பற்றியும் பேசினார்கள். பெப்ரவரியில் தயாரிக்கப்பட்ட "போலிக் கோப்பு" எனப்படுவது பற்றியும் பேசினார்கள், இந்த (செப்டம்பர்) கோப்பு பற்றியும் என்னிடம் பேசினார்கள்".

''45 நிமிட நிகழ்வு'' பற்றிய ஒற்றை ஆதாரத்தைப் பற்றிப் பேசுகையில், "கோப்பைத் தயாரிக்கும் பணியிலுள்ள மூத்த அதிகாரிகளில் ஒருவர், அவருடைய ஆதாரம் எனக்கு நெடுநாளையது, ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையவர், செய்தியைத் தைரியமாக வெளியிடக்கூடிய அளவிற்கு நம்பகமானவர்." என்று விவரித்தார்.

மற்றொரு ஆதாரம் பிரதம மந்திரி உருவாக்கிய சதாம் ஹூசேன் அல்க்கொய்தா தொடர்பு பற்றி கூறியுள்ளது. அவர் இது தொடர்பான தகவலை தனக்கு இரகசியமாக தருவதாகவும், இது ஒன்றுதான் என்பதற்கில்லை எனவும் பின்னர் இதுபோன்று பல உள்ளதாக ஜில்லிகனிடம் தெரிவித்துள்ளார்.

இது எவ்வகைப்படுத்தப்பட்டது என்ற கேள்விக்கு ஜில்லிகன் ''மிக இரகசியம்'' என்ற வகைப்பட்டது என விடையிறுத்தார்.

மே 29 இன்று -நிகழ்ச்சியில் ஜில்லிகன், செப்டம்பர் கோப்பு "முந்தைய வாரம் மாற்றப்பட்டு அதை கவர்ச்சிகரமானதாக வெளியிட வகை செய்யப்பட்டது. சிறந்த உதாரணம் பேரழிவிற்குரிய ஆயுதங்கள் 45 நிமிஷத்திற்குள் உபயோகப்படுத்தத் தயாராகிவிடும் என்பதுதான். அத்தகைய செய்தி முதல் ஆவணத்தில் இல்லை." எனக் கூறினார்.

இவருடைய ஆதாரம், "45 நிமிஷக் கூற்று உண்மைச் செய்தி... ஆனால் அது எங்களுடைய விருப்பத்திற்கு எதிரானது, ஏனெனில் அது நம்பத்தகுந்தது அல்ல; அது ஒர் ஒற்றை ஆதாரம்" என்று கூறியதாக ஜில்லிகன் கூறினார்.

ஜில்லிகன் மேலும் கூறியதாவது; "அது ஒரு தயாரிக்கப்பட்ட கூற்றோ, ஒரு விதமாகக் கொண்டுவரப்பட்ட 10 டெளனிங் தெருவின் கூற்றோ அல்ல; இக்கதை கூடுதலாக உயிர்பெற்றதற்குக் காரணம் பல குற்றச்சாட்டுகளை டெளனிங் தெரு மறுத்ததேயில்லை. இந்தக் கதை தயாரிக்கப்பட்டது என்ற செய்தியை மற்றவற்றுடன் மறுத்தனர். ஆனால் எவருமே இது தயாரிக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டவில்லை."

வெளிநாட்டு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ தங்களிடம் கிட்டத்தட்ட இதே போன்ற கூற்றை உளவுத்துறைத் தகவல் அரசாங்கத்திற்கு தெரிவித்ததாக ஜில்லிகனுக்கு விசாரணைக்குழு கூறியுள்ளனர். "வெளிநாட்டு அமைச்சர் இக்குழுவிடம் பொய் கூறியுள்ளதாக நீங்கள் சொல்வீர்களா? அல்லது 45 நிமிடம் பற்றிய உங்கள் ஆதாரம் தவறானது என்றோ, உண்மையான இணைப்பு உளவு குழுவின் மதிப்பீடு அல்ல என்றோ, இணைப்பு உளவு குழுவின் வழிவகைகளில் ஒப்புதல் பெறாதது என்றோ கூறுவீர்களா? என கேட்டனர்.

ஜில்லிகனின் பதில்: "வெளிநாட்டு அமைச்சரின் பதிலிலும் ''கிட்டத்தட்ட ஒரேமாதிரியான'' சொற்களை நான் அவதானித்தேன். வெளிநாட்டு அமைச்சர் பொய் சொன்னாரா, சொல்லவில்லையா என்று ஆராய்வது என்னுடைய வேலை இல்லை என்று மட்டுமே கூறுவேன். நான் வற்புறுத்திக் கூற விரும்புவது என்னவென்றால் என்னுடைய ஆதாரத்தை நம்புகிறேன், அவர் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு உகந்தவர். அவரின் இந்த குற்றச்சாட்டு பி.பி.சி உட்பட ஏழு அல்லது எட்டு செய்தித்தாள்களிலும் மற்ற செய்தி ஊடகங்களிலும் வந்துள்ளன. என்னுடைய கதையையும் அவருடைய குற்றச்சாட்டுகளையும் பெயர் குறிப்பிடப்பட்டு, ஆஸ்திரேலியாவினதும், அமெரிக்காவினதும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள், மேலும் ஒரு சிறிதளவு சபையின் மற்ற உறுப்பினர்களிடமும் ஆவணமாக உள்ளன."

இவருடைய ஆதாரம் "ஆபிரிக்காவிலிருந்து யூரேனியம் கேட்கப்பட்டது என்ற கூற்றையும்" ஏற்கவில்லை. இக்கூற்றும் பின்னர் பொய்யென அறியப்பட்டதுடன், ஓர் வேறுநாட்டு உளவுத்துறையின் போலியான ஆவணங்களை அடித்தளமாக கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது. ஜில்லிகன் "என்னுடைய ஆதார மூலம், இந்த குற்றச்சாட்டு எந்த ஆவணங்களை அடிப்படையாக கொள்கிறதோ அவை போலியானவை என நம்பியது" எனக் கூறினார்.

(தொடரும்)


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved