WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
International outcry over release of Hussein sons' photos and video
ஹூசேனுடைய மகன்கள் புகைப்படங்கள்,வீடியோ படங்கள் வெளியீடு பற்றி சர்வதேச அளவில்
சீற்றமான எதிர்ப்பு
By Chris Marsden and David Walsh
26 July 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
சதாம் ஹுசேனின் மகன்களுடைய சடலங்களைப் புகைப்படம், ஒளிப்பதிவு செய்து, வெளியிட
அனுமதி வழங்க புஷ் நிர்வாகம் எடுத்த முடிவு உலகம் முழுவதும் சீற்றமான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.
துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட அந்த சலடங்களின் புகைப்படங்கள், ஜூலை
24 அன்று வெளியிடப்பட்டதோடன்றி, உலகெங்கிலுமுள்ள பல்வேறு பத்திரிகைகளிலும், பதிப்புகளிலும், மீண்டும் வெளிவந்தன.
இராணுவப் பிரேதக்கிடங்கில், உலோகத் தள்ளுவண்டியில் கிடத்தியிருந்த உதய் மற்றும் கியூசே ஹுசேன், ஆகியோரின்
சடலங்களைத் தொலைக்காட்சி காமிராக்கள் ஒளிப்பதிவு செய்துகொள்ள அமெரிக்க அதிகாரிகள் ஜூலை 25-அன்று
அனுமதியளித்தனர். ஜூலை 22-அன்று மோசூலில் நடந்த துப்பாக்கிச் சண்டையாலும், ஆயுதப் பிரயோகங்களினாலும்
சிதைந்து, உருத்தெரியாமல் போயிருந்த முகங்களை, பிரேதக்கிடங்கு ஊழியர்கள் ஓரளவு சீர்திருத்தி மெழுகுப்
பொம்மைகள் போல அந்த இரு சடலங்களையும் மாற்றியிருந்தனர். உதய்யின் முகத்தின் மீதிருந்த காயமானது மறைக்கப்பட்டு
முகம் ஓரளவு சீர்திருத்தப்பட்டிருந்தாலும், அவர் தலையுச்சியிலுள்ள பெருந்துளையை, அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள்
அனைவரும் காண முடிந்தது.
பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அவ்விரு சடலங்களின் நிலையே, அமெரிக்கக் காட்டுமிராண்டித்தனத்தை
சுட்டி உயர்த்திக் காட்டுவதாய் அமைந்திருந்தது.
Agence France Presse: "உதய்யின் இடது கால் எலும்புகளும், 1996-ல் நடந்த
படுகொலை முயற்சிக்குப்பின் அவர் உடலில் இணைக்கப்பட்ட உலோகத்தண்டும், இணைப்பூசிகளும் தனியே பிரித்தெடுக்கப்பட்டு
ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு இருந்தன. பற்கள் அமைப்பு பற்றிய ஏராளமான மருத்துவக் குறிப்புக்களும்,
எக்ஸ்ரேக்களும் கூடவே விளக்கமளித்து கொடுக்கப்பட்டன." என இது பற்றி குறிப்பிடுகிறது. படுகொலை முயற்சிக்குப்
பிறகு உதய்யின் காலில் இணைக்கப்பட்ட உலோகத் தகட்டின் தொடர் எண்ணுடன் தாங்கள் கண்ட எண் பொருந்தி ஒத்திருப்பதாக
அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட முழு நிர்வாண நிலையில் இருந்த அந்த சடலங்களின் வீடியோ பதிவை அமெரிக்கக்
கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும், வெள்ளியன்று ஒளிபரப்பின. கொடூரமான படக்காட்சிகளை ``வெட்டப்படாத
வீடியோ பதிவு`` என்ற வரிகளோடு ரூபர்ட் முர்டாக்கின் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் - தொலைக்காட்சி
நிறுவனம் முதன்முதலில் ஒளிபரப்பியது. CNN தொலைக்காட்சி
நிறுவனம், சற்று முன்னெச்சரிக்கையுடன் சடலங்களின் மேற்பகுதிகளை மட்டும் ஒளிபரப்பிக்காட்டியது. செய்திகளைத்
தொகுத்து வழங்கும் பில் ஹெம்மர் ``சடலங்களின் முழு நிர்வாணக் கோலத்தையும் காட்டாத வகையில், புகைப்பட,
வீடியோ காட்சிகளைத் தேர்வு செய்து ஒளிபரப்புகிறோம்`` என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
MSNBC தொலைக்காட்சி நிறுவனம், வீடியோப் பதிவுகள்
பற்றி அறிவிப்பு செய்தி பல நிமிடங்கள் கழிந்தபின்னரே மெதுவாக படக்காட்சிகளை ஒளிபரப்பியது. செய்திகளைத்
தொகுத்து வழங்கும் ஒரு பெண்மணி அந்த வீடியோப் பதிவுகள் பற்றிய தமது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தார்.
ஹுசேன் சகேதாரர்களின் சடலங்களின் அருவெறுப்பைத் தூண்டும் கொடூரமான புகைப்படங்களை
வெளியிடுவது என்ற முடிவைத் தாம் எடுத்தது பற்றி "மகிழ்ச்சியே" என்று வியாழனன்று பாதுகாப்பு செயலாளர்
ரொனால்ட் ரம்ஸ்பெல்ட் அறிவித்தார். ``இறந்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுவது இது ஒன்றும் முதல் தடவை
அல்ல (ஆனால்) அமெரிக்கா பொதுவாக இந்த மாதிரி வழக்கத்தில் ஈடுபடுவது இல்லை`` என அவர் குறிப்பிட்டார்.
தாம் எடுத்த செயலை வலியுறுத்தும் வகையில் ``இறந்த இந்த இருவருமே தீயவர்கள். எனவே ஈராக்கிய மக்கள்
இவர்களைப் பார்க்கவேண்டும், இவர்கள் போய்விட்டார்கள், செத்தொழிந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது இன்றியமையாததாகும்``
என மேலும் குறிப்பிட்டார்.
ஈராக்கியப் படையெடுப்பின்போது சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்களையும்,
இறந்த இராணுவ வீரர்களின் சடலங்களையும் அரேபியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியபோது அமெரிக்க அதிகாரிகள்
பெருங்கூச்சல் போட்டனர். இதே ரம்ஸ்பெல்ட் அப்போது, ஜெனீவா ஒப்பந்தத்தை மீறும் வகையில் அரேபிய
தொலைக்காட்சியின் அந்தச் செயல் அமைந்திருந்ததாக வலியுறுத்திக் கூறினார்.
வெள்ளை மாளிகை பத்திரிகைத்துறை செயலர் ஸ்கொட் மக்லெல்லன், ஹுசேன்களின் புகைப்படங்களை
வெளியிடுவது என்று எடுக்கப்பட்ட முடிவை நியாயப்படுத்தும் வகையில், இந்த முடிவிற்கும், ஜெனீவா ஒப்பந்தங்கள் தடை
செய்யும் பிரச்சார நோக்கத்திற்காக இராணுவ வீரர்களின் சடலங்களின் புகைப்படங்களை வெளியிடுவதற்கும் இடையே
``பாரிய வேறுபாடு`` உள்ளது என்று வலியுறுத்திக் கூறுகிறார்.
டொரண்டோ பல்கலைக் கழகத்தில் இராணுவ வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும்
பெர்ட் ஹால், டொரண்டோ ஸ்டாருக்கு அளித்த பேட்டியில், ஜெனீவா ஒப்பந்தங்களை மீறும் விதமாகவே
தற்போது வெளிவந்த, புகைப்படங்கள் அமைந்துள்ளன என்கிறார். இராணுவக் கைதிகளை இழிவுபடுத்துவதையோ அல்லது
அவமானத்திற்குட்படுத்துவதையோ ஜெனீவா ஒப்பந்தங்கள் தடை செய்கின்றன. ``ஈட்டி முனை மேலே எதிரியின் தலை
மட்டும் செருகப்பட்டு வைத்தல். நீ வென்றுவிட்டாய், எதிரி தோற்றுவிட்டான் என்பதைக் காட்ட ஒரு வகை.... அது
ஒரு சடங்குமுறையிலான இழிவுபடுத்துதலாகும்`` என்று குறிப்பிடுகிறார்.
சர்வதேச பொது மன்னிப்புச்சபை (Amnesty
International) ஐச் சேர்ந்த கமால் சமாரி, ``யுத்தங்களின் விதிகளில், சடலங்களைக் காட்டக்கூடாது
என்ற வெளிப்படையான தடை இல்லை என்பது உண்மையே. ஆனால் விதிகளின் உணர்வுப்படி ஒவ்வொருவருக்கும் - உயிரோடிருந்தாலும்
அல்லது இறந்திருந்தாலும்- ஈராக்கியரோ, அமெரிக்கரோ, பிரிட்டிஷ்காரரோ அல்லது வேறு எவராயினும், அவருடைய
தகுதிக்கு மதிப்பு கொடுக்கப்படவேண்டும்`` என்று வலியுறுத்தியுள்ளார்.
இராணுவ அதிகாரிகளின் எதிர்ப்புக்களையும் மீறி கொடூரமான புகைப்படங்களையும்
வீடியோ பகுதிகளையும் வெளியிடவேண்டும் என்ற தூண்டுதல் நிறைந்த முடிவு அமெரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்டதற்கு
சில காரணங்கள் உள்ளன. முதலில் இது புஷ், ரம்ஸ்பெல்ட் குழுவினரின் ஆதிகாலத்திய காட்டுமிராண்டி மனப்பான்மையை
வெளிப்படுத்துகிறது. ஓர் விரோதியின் தலையை ஈட்டி முனையில் செருகிக் கோட்டை வாயிலில் நட்டு வைப்பது இவர்களுக்கு
நினைக்க முடியாத கொடூரமில்லை. மேலும் அமெரிக்காவில் எந்தச் சமுதாயக் கூறுபாட்டிற்கு அவர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர் என்பது கேட்கப்படவேண்டும். மிகப் பிற்போக்கான, இழிந்த, மனிதப் பண்பற்ற சமுதாய அடுக்கிற்கு
அவர்களுடைய செய்தி செல்லவேண்டும். இந்த அடுக்கிற்கு அவ்வப்பொழுது "புதிய மாமிசத்தைத்" தூக்கி எறிவதன் மூலம்
நிர்வாகம் தன்னுடைய அரசியல் உறுதியைக் காட்டிக்கொள்கிறது.
இந்த அவலப்பட்டங்களைத் தொடர்ந்து வெளியிடுவதில் சில உடனடி அரசியல் கணிப்புக்களும்
உள்ளன என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கச் செய்தி ஊடகங்கள் "பேச்சை மாற்றும்" வகையில் புஷ் நிர்வாகம் பேரழிவு
ஆயுதங்கள் சான்றுகளைப் பற்றி பொய் கூறியுள்ளது என்பதற்குப் பதிலாக ஹுசேன்கள் அடியோடு அழிக்கப்பட்ட
``நல்ல செய்தியை`` வெளியிடுவதில் கூடுதலான மகிழ்ச்சியையே கொண்டுள்ளன. மேலும், செப்டம்பர் 11ன் மீதான
சட்டமன்ற விசாரணை ஜூலை 24ம் தேதி முழு வெள்ளையடிப்பாக இருந்தாலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்க
உளவுத்துறை அலுவலர்களுக்குமிடையுள்ள நீண்டகால உறவுகளைப் பற்றி எழுப்பும் சில சந்தேகங்களை அரசாங்கம்
புதைக்க விரும்பும்.
அமெரிக்கச் செய்தி ஊடகம் இறந்த ஹுசேன் சகோதரர்கள் புகைப்படங்களைப்
பொதுவாக குறைகள் கூறாமல் வெளியிட்டிருந்தபோது உலகச் செய்தி ஊடகங்கள் பல கண்டனங்களோடு அவற்றை வெளியிட்டன.
பிரிட்டிஷ் பழைமைவாத நாளிதழான டெய்லி மெயில் சடலங்களின் புகைப்படங்கள்
வெளியிட்டது பற்றிய முடிவைக் கண்டித்தது. அமெரிக்க - பிரிட்டிஷ் படைகள் ஈராக்கியரின் மீது போர் தொடுத்ததை
வலுவாக ஆதரித்திருந்த மெயில் நாளேடு தன்னுடைய வர்ணனையின் தலைப்பாகத் தலையங்கமிட்டது: ``சதாமினுடைய
தரத்திற்கு அமெரிக்காவும் இறங்கிவிட்டதா?``
நாளேடு கூறியது: ``உதய், க்யூசே ஹுசேனின் இறப்பிற்கு ஒருவரும் கதறியழமாட்டார்கள்.
இவர்கள் சொந்த மக்களின் மீது கருணையற்ற குற்றவியல் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். உலகும், ஈராக்கும்,
அவர்களின்றி தூய்மையாகவும் நல்ல முறையிலும் இயங்கும். ஆயினும்கூட இத்தகைய கொடூரமான படங்களை அமெரிக்கா
பிரசுரம் செய்திருக்கவேண்டுமா? உண்மையில் மிக அலங்கோலப்படுத்தப்பட்ட முகங்கள் அவை உதய், க்யூசேயுடையதுதானா
என்று நிர்ணயம் செய்ய முடியாத அளவிற்கு உள்ளன. ஆனால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் போராளிகளின் கடுங்கோபத்தை
இது கிளப்பும் என்பது உறுதி; நேற்று மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது உணர்த்துவதுபோல் மேற்கத்திய
எதிர்ப்பு உடைய முஸ்லிம்களின் உணர்வுகளைத் தணிக்கவும் இது உதவாது. இன்னும் பொருத்தமான முறையில் கேட்க
வேண்டுமென்றால், இப்படித்தான் ஒரு நாகரிக நாடு நடந்து கொள்ளவேண்டிய முறை ஆகிறதா? மத்தியகாலக் காட்டுமிராண்டித்தனத்தை
நினைவுபடுத்தும் வகையில், தோற்றுப்போன வீரர்களை வெற்றிப் பரிசு போல் காண்பிக்கும் உவப்பற்ற செயலாக இதில்
குறிப்பு இல்லையா?``
மெயில், புகைப்பட வெளியீட்டின் எதிர்விளைவுகளைப் பற்றிய கணிசமான அறிக்கைகளையும்
கொடுத்துள்ளது. இத்தகைய கடுந்திறனாய்வு வேறு எந்தப் பத்திரிக்கையாலும் மேற்கொள்ளப்படவில்லை,
இன்டிபென்டன்டும், கார்டியனும்
ஹுசைன் சகோதரர்களின், குருதி தோய்ந்த தலை, இடைப்பகுதிகளை வெளியிடுவதற்கு எடுத்த முடிவு இதற்கு
முன்னில்லாத தன்மையைக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தும் வண்ணம் நிர்பந்திக்கப்பட்டன.
இன்டிப்பென்டன்ட் பத்திரிக்கையானது சொற்கள் மூலம் அவற்றை வெளியிடுவதற்கான
முடிவைக் காத்திட முற்பட்டாலும், அதே நேரம் பொதுமக்களிடையேயும் தன் பத்திரிகை படிப்போரிடையேயும் தூண்டப்படும்
இழிவு உணர்ச்சியைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளது. வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சியில் செய்தி ஊடகத்திற்கு நிதானம்
வேண்டும் என்று அது கூறியுள்ளது!
அதனுடைய வர்ணனையை "இந்தச் சடலங்களும் சற்று மரியாதையுடன் நடத்தப்பட
வேண்டும்" என்ற தலையங்கத்துடன் இன்டிப்பென்டன்ட் எழுதியுள்ளது; மேலும், "பிரச்சார நோக்குடன்
பொது வெளியீடாகப் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டது இழிசெயலாகும், இறந்த எதிரியை வெற்றி ஊர்வலமாக எடுத்துச்
செல்வது அநாகரிகமான செயல்; ஆயினும் சதாம் ஹுசேனுடைய மகன்கள் தொடர்பில் இது ஒரு சிறப்புத் தன்மையாகும்."
தன்னுடைய வழக்கமான கோழைத்தனத்துடன்
Guardian, புகைப்படங்கள் வெளியீடு பற்றித்
தலையங்கம் ஏதும் எழுதவில்லை; ஆனால் அதன் செய்தியில் இம்முடிவு ரம்ஸ்பெல்டினால் எடுக்கப்பட்டது என்று தெரிவித்தபின்
கூறுகிறது: ``அமெரிக்க இராணுவப் பண்பாட்டிற்கு முரணான வகையில்தான் இந்த புகைப்படங்களை வெளியிடும் முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்க
வேண்டும் என்பதற்குத் தெளிவான அடையாளங்கள் உள்ளன. பணியிலுள்ள அதிகாரிகள் எதுவும் கூறாவிட்டாலும், கேர்னல்
Dan Smith என்னும் ஓய்வுபெற்ற இராணுவ உளவுத்துறை
அதிகாரி கூறினார்: ``இறந்தவர்களை மதிக்கும் மரபு நம்மிடையே உள்ளது... அமெரிக்க வீரர்களின் சடலங்களைக்
காண்பிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். இப்பொழுது முழுவதும் மாறி இறந்தவர்களைக் காட்டுவது விந்தையான
கூற்றே ஆகும்.`` (BBC, வாஷிங்டன் நிருபர் நிக்ப்ரைன்ட்
இந்த வெளியீடு "ஆழ்ந்த மனக்கசப்பை" ஏற்படுத்துவதாக பென்டகன் தளபதிகள் சிலர் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்).
இதைத் தொடர்ந்துதான் தன்னுடைய சொந்த திறனாய்வு வர்ணனையைக் கார்டியன்
சேர்த்து எழுதுகிறது: "ஜெனிவா உடன்படிக்கைகள், இப்புகைப்பட வெளியீடுகளின் மூலம் மீறப்படவில்லை என்று புஷ்
நிர்வாகம் குறிப்பிடுகிறது. ஆனால் ஈராக்கிய தொலைக்காட்சியிலும் அரேபிய இணை தளங்களிலும் இறந்த அமெரிக்க
வீரர்கள் காட்டப்பட்டபோது வாஷிங்டன் அந்த வெளியீடுகளைக் கண்டனம் செய்தது. இப்பொழுது மத்திய கிழக்கில் அமெரிக்கப்
படைகளின் தளபதியாக உள்ள ஜோன் அபிசாயிட் அவற்றை அப்பொழுது `அருவருப்பான செயல்` என்று விவரித்திருந்தார்."
ஜேர்மனியில் Frankfurter
Rundschau புகைப்பட வெளியீட்டைக் குறைகூறியுள்ளது: ``இது ஒரு மனித கெளரவப் பிரச்சினையாகும்.
உதய்யும் க்யூசேயும் செய்த கொடூரமான செயல்கள், பரந்த அளவில் உண்மையே என நிருபிக்கப்பட்டுள்ளமை ஒரு புறமிருக்க,
இப்புகைப்படங்களின் வெளியீடு, நாகரிக உலகில் ஏற்கப்பட்ட அடிப்படை மரபுகளை மீறியதாகும், அமெரிக்க அரசியலமைப்பின்
அடிப்படையில் ஒரு விதத்திலும், பொது வரலாற்று அறிவின் அடிப்படையில் மற்றொரு விதத்திலுமாக கொலையுண்ட
நிக்கொலாய் செளசெஸ்கு (Nicolae Ceausescu)
வின் படங்கள் வினியோகப்பட்டபோது ஏற்கப்பட்ட அடிப்படைகள்; ஈராக்கியத் தொலைக்காட்சி, கைது செய்யப்பட்ட
அமெரிக்கப் போர் வீரர் கைதிகளைக் காட்டியபோது குறைந்த அளவாயினும், அமெரிக்க அரசாங்கத்தால் உயர்த்திய
குரலில் எழுப்பப்பட்ட அடிப்படைகள்; இவை இப்பொழுதும் பின்பற்றப்பட்டிருக்கவேண்டும், ஏனெனில் அவை பிரிக்க
முடியாதவை உலகம் முழுவதற்கும் பொருந்துபவை.``
Die Zeit தன்னுடைய
Online
வர்ணனையில் கூறுகிறது: ``ஜனநாயக எதிர்ப்புச் சக்திகளின் அறவழியையும், கொள்கைகளையும் சற்று மாற்றி ஏற்றுக்கொள்வதால்
ஏற்படும் தீமை என்னவென்றால், நீண்டகாலப்போக்கில் மக்களிடையே எது எந்தத் தன்மையிலிருந்து தோன்றியது என்பது
அறியப்படாமற்போய்விடும் என்பதோடு, ஒன்றைப் போலவே மற்றொன்றும் மிருகத்தனமானது, அதிக பலம்வாய்ந்த
மற்றவர்களுக்குத்தான் தலைவணங்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்திவிடும். இதையொட்டி ஆதிக்கத்தின் தவிர்க்க
முடியாத அளவு ஏற்கப்படும்: மிகத்தீவிரமான முறைகள் கையாள்வதில் தயக்கம் தோன்றும்பொழுது அவை பலவீனத்தின்
அடையாளமாகக் கொள்ளப்படும்.``
ரோம் நகரின் La
Repubblica கூறியது: ``ஒரு வேட்டைக்காரன் தான்
கொன்றுகுவித்த விலங்குகளைத் தன்னுடைய காரின் மேற்பகுதியில் அலங்காரமாக வைப்பதைப்போன்ற முறையில்
இருப்பதை, ஏன் அமெரிக்காவில், தனிமனிதனைக் காப்பதிலும், ``உயர்ந்த மேலை மதிப்பக்களைப் போணுவதிலும்``
உயர்ந்த கொள்கையையும் கொண்ட நாட்டில், அதிகாரிகள் சிதைந்த சடலங்களைக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்த
முடிவு செய்தனர் என்பதை எங்களால் விளக்க இயலாமல் உள்ளோம். ஈராக்கில், சிதைந்த சதாம் மகன்களின்
சடலங்களின் புகைப்படங்களை வெளியிட்டது ஒரு அத்தியாயத்தை முடிக்காது. இதற்கு நேர்மாறாகத்தான் நடக்கும்.
ஈராக்கிய எதிர்ப்பு வாழ்கிறது. அது ஏற்கனவே தப்பியோடி தன் உறவினர் வீடுகளில் வாரக்கணக்கில் பதுங்கியிருந்து
தடைகளுக்குள் ஒளிந்திருந்த இந்த இருவரால் அது தலைமை தாங்கப்படவில்லை.``
ஸ்விட்சர்லாந்து நாளேடான
Le Temps கூறுகிறது: ``அமெரிக்கப் படைகள்
கொரில்லாப் போர் முறையினால் மூன்று மாதமாகப் பாதிக்கப்பட்டாலும் பின்வாங்காது என்ற செய்தியைத்தான் இப்புகைப்படங்கள்
வெளிப்படுத்துகின்றன... ஆனால் இராணுவ புகைப்படக்காரர்களுக்குத் தோன்றவில்லைபோலும்... தாடி வைத்த க்யூசேயின்
படம், மறைந்த சே குவாரா
உடைய படத்தைச் சற்றே நினைவுகூறும் வகையில் அமைந்து அரேபிய இளைஞருக்கு
அதேபோன்ற எடுத்துக்காட்டாக அமையக்கூடும் என்று தோன்றவில்லைபோலும்?`` ராபர்ட் பிஸ்க்கும் அதே வழியில்
வாதாடிக் கூறுகிறார்: ``பாக்தாத் நகர் முழுவதும் இப்படங்களை ஒட்டிவைக்கலாம் என்ற எண்ணம் அதிகாரிகளிடையே
உள்ளது. ஆனால் இப்புகைப்படங்கள் தியாகிகளின் புகைப்படங்களாக மாறுபட்ட செய்தியைக் கொடுத்துவிடுமோ
என்பதை அதிகாரிகள் நன்கு உணர்ந்த பின்னரே ஈடுபடவேண்டும். அமெரிக்கர்களின் கைவண்ணம். ஆக்கிரமிப்பாளர்களின்
கைவண்ணம்.``
கனடா க்ளோப் அண்ட் மெயில் என்ற இதழில் டுக் சாண்டஸ்ர் (Doug
Saunders) ஹுசேன் புகைப்படங்களின் "கோரமான தன்மையைப்"
பற்றி வினவுகிறார். ``அவை சான்றுகளா அல்லது இழிவான புகைப்படங்களா?... அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷும்
மற்ற வாஷிங்டன் அதிகாரிகளும், வெற்றி, உறுதி இவற்றிற்கான தேர்ந்த சான்றாக நேற்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களை
கொண்டாலும், மற்றவர்கள் அதை வெறுப்பிற்குரிய ஆரவாரக் களிப்பாகவே கருதுகின்றனர்; அண்மையில் கடந்தகாலத்தில்
வெள்ளை மாளிகை கண்டனம் செய்திருந்த சம்பவங்களின் மட்டமான காட்சியைப் போன்றே இதுவும் உள்ளது எனச்
சுட்டிக்காட்டுகின்றனர்.``
இதற்கு மாறாக, முர்டாக்கின் ஆஸ்திரேலியன் பத்திரிகை வியாழனன்று முதல்
பக்கத்தில் மிகப்பெரிய அளவில் ஹுசேனின் இறந்த மகன்களின் சடலங்களை வெளியிட்டு மகிழ்ந்தது. இப்படங்களின் வெளியீடு
பற்றி கேட்கப்பட்டபோது ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஜோன் ஹாவர்ட் இந்த நடவடிக்கை ஜெனீவா ஒப்பந்தங்களை
மீறியிருந்தாலும் கூட ``இது புரிந்துகொள்ளக்கூடியதே`` என அறிவித்தார். ஏராளமான கோபமுற்ற கடிதங்கள்
ஆசிரியருக்கு வந்தபோதிலும், எந்த ஆஸ்திரேலிய செய்தி ஊடகமும் புஷ் நிர்வாகத்தின் புகைப்படங்கள் வெளியீடு பற்றி
குறைகூறுவது ஒருபுறமிருக்க, வர்ணனைகூட செய்யவில்லை.
பல அரேபிய தொலைக்காட்சி நிலையங்களும், செய்தித்தாள்களும் அமெரிக்காவை, அதன்
இரட்டை நிலைக்காக குறை கூறியுள்ளன. உதாரணமாக, துபாயிலுள்ள
Al-Arabia
கூறியது: ``ஈராக்கிய தொலைக்காட்சி அமெரிக்க- பிரிட்டிஷ்
கைதிகளையும், போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்களையும் காட்டியபோது அமெரிக்கா மேற்கொண்ட
பிரச்சாரத்தை உலகம் மறந்துவிடவில்லை; அமெரிக்க-பிரிட்டிஷ் அதிகாரிகள் தாங்கள் எதை மனிதத் தன்மையற்ற செயல்
என்று கருதினார்களோ அவற்றைப் பற்றிய கோபமான அறிக்கைகளை ஜெனிவா ஒப்பந்தங்களின் விதிகளைப் பெருமளவு
ஆதாரம் காட்டி வலியுறுத்தியதையும் உலகம் மறக்கவில்லை.... அமெரிக்க நிர்வாகத்தின் புகைப்பட வெளியீடுகளினால்
இந்த அனைத்து மனிதாபிமான கோட்பாடுகளும் கவனிக்கப்படவில்லை அல்லது கைவிடப்பட்டுவிட்டன என்ற தோற்றத்தைக்
காட்டுகின்றன.``
செளதி அரேபியாவின்
Al-Watan
கூறுகிறது: ``அமெரிக்கப் போர்க்கைதிகள், கொலையுண்டோரின் சடலங்கள்
போன்றவை ஈராக்கிய போர்த் தொடக்கத்தில் வெளிவந்தபோது, அமெரிக்காவும் பிரிட்டனும் அவற்றை எதிர்த்து
முழக்கமிட்டதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்கிறோம். இப்போதோ வாஷிங்டன் படங்களை வெளியிடும் உரிமையை
தனக்குத்தானே எடுத்துக்கொண்டுள்ளது; சர்வதேச மரபுகள் மீறப்பட்டதைப் பற்றி எவரும் பேசுவது இல்லை...
இதுதான் மனித உரிமைகள் பறிக்கப்பட்ட அடிப்படையிலுள்ள புதிய உலக ஒழுங்காகும்.``
பல செய்தி ஊடகங்கள் சாதாரண அரேபியர்களை பேட்டி கண்ட அளவில், இக்கருத்தையேதான்
அவர்களும் கூறினர். ரியாட்டில் உள்ள ஒரு செளதி அரசு ஊழியரான சாத் பிரிக்கான் என்பவருடைய கருத்தை
Reuters
மேற்கோளிடுகிறது: ``உதய்யும் க்யூசேயும் குற்றவாளிகளாயினும் அவர்களுடைய
சடலங்களை இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பது இழிவானது, அருவருக்கத்தக்கது. அமெரிக்கா தானொரு நாகரிகமுடைய
நாடு எனக் கூறிக்கொண்டாலும் பேட்டை ரவுடியைப்போல நடந்துகொள்கிறது.`` மற்றொரு அரசு ஊழியரான ஹஸன்
ஹமூது Wire Service-க்கு
கூறினார்: ``அமெரிக்கா எப்போதுமே இதேபோல் ஏதேனும் ஒன்றை ஏடாகூடமாகச் செய்து தன்னுடைய
பெருமையைக் கெடுத்துக்கொள்கிறது. இந்தச் சடலங்களைக் காட்டுவதால் என்ன நன்மை கிடைக்கும்? மனிதாபிமான
அம்சத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லையா? அவர்களுடைய தாயும் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் இப்படங்களைப்
பார்க்கும்பொழுது என்ன நினைப்பார்கள் என்று தோன்றவில்லையா?``
எகிப்திய இஸ்லாமிய அறிஞரான மொகமது எமரா அல் ஜஜீரா
தொலைக்காட்சிக்கு சடலங்கள் இவ்வாறு காட்சிப் பொருளாக வைக்கப்படுவது இஸ்லாமிய ஷரிய சட்டத்திற்கு
புறம்பானது எனக் கூறினார். இஸ்லாமிய சட்டம் இதை நிராகரிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய இராணுவ வீரர்களின்
மனத்திண்மையை உயர்த்துவதற்காக அனைத்து சமயநெறிகளும் கண்டிக்கும் இந்தச் சட்டவிரோதச் செயலைச் செய்துள்ளது.
ஈராக் போரின்போது உயிரோடிருக்கும் வீரர்களின் புகைப்படங்களைக் காட்டுவது ஜெனீவா ஒப்பந்தத்திற்கு எதிரானது
என்று கூறிய அமெரிக்கா ஏன் இப்பொழுது சிதைந்த சடலங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது?``
செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பல ஈராக்கியர்கள் உதய், க்யூசே ஹுசேன் ஆகியோரின்
இறப்பிற்குப் பொதுவாகத் திருப்தி தெரிவித்தபோதிலும், இத்தகைய தரக்குறைவான புகைப்படங்களைப் பொது வெளியீட்டிற்கு
உட்படுத்திய நெறியைத் தாக்கினார்கள். புஷ், ரம்ஸ்பெல்ட் ஆகியோரின் வாதமாகிய பழைய ஆட்சியின் ஆதரவாளர்கள்தான்
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள் என்பதை அவர்கள் மறுத்துள்ளனர்.
Reuters நிருபர் ஒருவர்
எதிர்ப்பின் மையக்களமாக இருக்கும் Fallujah-வைப்
பற்றி விளக்குகையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: - மோசூலில் நிகழ்ந்த ஹுசேனுடைய மகன்களின் மரணம் அமெரிக்க
ஆக்கிரமிப்புப் படைகளின் மீதான AK47
மற்றும் ஏவுகணை உந்துதல் குண்டுத் தாக்குதல்களைக் குறைக்கும் என்ற கருத்துக்களை
Fallujah-வாழ்
மக்கள் நிராகரித்துள்ளனர். அமெரிக்க எதிர்ப்பு நிறைந்த இந்த சிறுநகரத்தில் கடைகளிலும், தெரு மூலைகளிலும், உணவு
விடுதிகளிலும் ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டால்தான் ஈராக்கியர்கள் வன்முறையை நிறுத்துவர் என்று மக்கள் பேசுகின்றனர்.
இயற்கை தேன் விற்கும் கடைக்குச் சொந்தக்காரரான முகமது அப்பாஸ் கூறுகிறார்: ``ஏன் பழைய பாத் கட்சியைச்
சார்ந்தவர்கள்தான், தங்கள் வீரர்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள் என அமெரிக்கர்கள் கருதுகிறார்கள் என்று
எனக்குப் புரியவில்லை. இவர்கள் நடந்துகொள்ளும் முறையில் எல்லா ஈராக்கியர்களுமே அமெரிக்கர்களைக் கொல்ல
விரும்புகிறார்கள்.``
வெள்ளியன்று Najaf
என்ற ஈராக்கிய நகரில் இஸ்லாமிய மதகுரு
Moqtada Sadr
அமெரிக்க ஆக்கிரமிப்பை பயங்கரவாதச் செயல் என்று கண்டனம் செய்ததைக் கேட்க பல்லாயிரக்கணக்கான ஷியைட்
முஸ்லீம்கள் பெருந்திரளாகக் கூடினர். வியாழனன்று ஒரு வீடியோ ஒளிபரப்பில் முகமூடி அணிந்த துப்பாக்கிக்குழு ஒன்று
தன்னை சதாமின் ஃபெதாயீன் போராளிகள் (Fedayeen
militia) என அழைத்துக்கொண்டு ஹுசேன் சகோதரர்களின் இறப்புக்களுக்காகப்
பழி தீர்க்க சபதம் ஏற்றது. ஜூலை 22 அன்று மோசூல் மீதான தாக்குதலுக்குப்பின் ஐந்து அமெரிக்க வீரர்கள்
படுகொலை செய்யப்பட்டதுடன் கணக்கிலடங்காத தாக்குதல்கள், இறப்பேதும் நிகழா வண்ணம் நடந்தன.
See Also:
சதாம் ஹூசேன் புதல்வர்களின் புகைப்படங்கள் வெளியிடல்: வாஷிங்டன் தனது காட்டுமிராண்டித்தனத்தை தானே
அம்பலப்படுத்திக் கொள்கிறது
Top of page
|