World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரித்தானியா
பிரிட்டன்: பிபிசி மீதான அரசாங்கத் தாக்குதல் பத்திரிக்கைகளின் சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது By Christ Marsden தொழிற்கட்சி அரசாங்கத்திற்கும் பிபிசிக்கும் நடந்துகொண்டிருக்கும் பூசல், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளையே நேரடியாகத் தாக்கும் வினாக்களை எழுப்பி உள்ளது. எந்தத் தவறு நிகழ்ந்தாலும், அதைப் பற்றிய குறை கூறும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று பத்திரிகை சுதந்திரத்தை தடை செய்வதுதான் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. பிரதம மந்திரி டோனி பிளேயருடைய செய்தித்தொடர்பு இயக்குநர் அலாஸ்டர் காம்பல் பற்றி செய்தி ஒலிபரப்பாளர் அவதூறாகப் பேசினார் என்ற கூற்றைக்கொண்டு, சில மாதங்களாகவே, அரசாங்கம் பிபிசி மீதான தாக்குதல்களை இலக்காகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2002 உளவுத்துறைக் கோப்பில் சதாம் ஹுசைன் 45 நிமிடத்திற்குள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்துப் பயன்படுத்த முடியும் என்ற கருத்தை அலாஸ்டர் காம்பல் இணைத்து அதைப் பாலியல் முறையில் அவலப்படுத்திவிட்டார் என்று ஜில்லிகன் தவறான ஆதாரத்தைக் கொண்டு வலியுறுத்தி எழுதிவிட்டார் என்று காம்பல் உட்பட கணக்கிலடங்காத அரசாங்கப் பேச்சாளர்கள் பிபிசி வானொலி4 மீது குற்றஞ்சாட்டினார். ஜில்லிகனுடைய ஆதாரமான, பாதுகாப்பு அமைச்சக நுண்உயிரியல் வல்லுனர் டாக்டர் டேவிட் கெல்லி என்பதை வெளிப்படுத்துமாறு நிர்பந்தித்த அரசாங்கம் மேற்கொண்ட சங்கிலித்தொடரான நிகழ்ச்சிகள், ஜூலை 17ம் தேதி மணிக்கட்டு வெட்டு குருதிப்பெருக்கினால் டாக்டர் கெல்லி மரணமடைந்ததோடு உச்சகட்டத்தை எட்டியது. கெல்லியை உயர் அழுத்த நிலைக்கு உட்படுத்தியது பிபிசி நிறுவனம்தான் என்று அவருடைய மரணத்தை அரசாங்கம் பயன்படுத்தியதோடு, ஜில்லிகன், விஞ்ஞானியின் கருத்தைத் தவறாக மேற்கோள் காட்டிவிட்டார் என்றும் விஞ்ஞானி செய்தியாளரிடம் பேசியபோது, தான் காம்பல்லின் பெயரைக் குறிப்பிட்டதாக நினைவில்லை என பாராளுமன்ற வெளிவிவகாரக் குழு விசாரணையின்போது கூறியதையும் சான்றாகக் காட்டியுள்ளது. அரசாங்கம் பிபிசி ஐ தாக்குவதற்கு உடனடியான நோக்கத்தில் மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் கிடைக்கப்படாத நிலையில் இழிவான தோல்வியை -உலக அமைதியைக் காப்பதில் இந்த ஆயுதங்கள் பெரும் இடையூறு என்றும், போரின் முக்கிய காரணமாகவும் கூறப்பட்டிருந்த- மக்களிடமிருந்து திசை திருப்ப காம்பல்தான் தனிப்பட்ட முறையில் 45 நிமிடம் என்ற கூற்றுக்குப் பொறுப்பா என்ற பிரச்சினையை பயன்படுத்த முயற்சித்திருக்கிறது முதலாவது அம்சம் ஆகும். பல மோசடிக் காரணங்களுள் காம்பல்தான் ஒரு மோசடிக்குத் தனிப்பொறுப்பு கொண்டிருந்தாரா, இல்லையா என்பதும், அவர்தான் என்று பிபிசி கூறவில்லை என்பதும் கெல்லியின் அறிக்கையை மேற்கோள் காட்டியதும், விஷயத்திற்குத் தேவையற்றவை. ஒரு சட்டவிரோதமான, கொள்ளையிடும் ஆக்கிரமிப்புப் போரை, பாதுகாப்பற்ற நாடு ஒன்றின் மீது தொடக்குவதற்கு நியாயப்படுத்தி மிகப்பெரிய பொய் கூறியதில் அரசாங்கம் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதை மறைப்பதற்கு போர் எதிர்ப்பு, அரசாங்கத்திற்கெதிரான உணர்வுடன், உளவுத்துறை அதிகாரிகள் சிலர் -செப்டம்பர் கோப்புத் தயாரிப்பில் ஒருவரான கெல்லி உட்பட இந்தக் கதையைப் பற்றி வருந்துகின்றனர் எனக்கூறிய ஆணவப்போக்கு ஆகியவற்றை பிபிசி கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிபிசிக்கு எதிரான அரசாங்கத்தின் காழ்ப்பு உணர்வுக்கு இரண்டாவது காரணம், பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும். கெல்லியின் மரணத்திற்கு அரசியலளவில் பொறுப்பேற்பதை மூடிமறைக்கும் அதன் முயற்சியேயாகும். வெளிவிவகாரக்குழு, உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக்குழு விசாரணைக்கு கெல்லியை வற்புறுத்திச் சாட்சியம் அளிக்கச் செய்து பொதுப்பார்வைக்கு அவரை கொண்டுவந்ததற்குக் காரணமே அரசாங்கம்தான். அவ்வாறு செய்ததின் மூலம் பிபிசிக்கும் ஜில்லிகனுக்கும் எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்த திறமையுடன் அரசாங்கம் விஞ்ஞானி இறப்பைப் பயன்படுத்தி அச்சடலத்தை உலருவதற்குப் போட்டுள்ளது. தன்னுடைய தவறுகளுக்கு பிபிசி ஐ பலியாடாக நிறுத்தி அதன் பின்னால் அரசாங்கம் மறைந்து கொள்ளப்பார்க்கிறது. ஈராக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு பற்றியோ, மற்ற பொது விஷயங்கள் பற்றியோ அரசாங்கத்தின் கொள்கைகள், செயற்பாடுகள் பற்றி குறைகூறுதல்களை அமுக்கிவிடவேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் மூன்றாவது உடனடி இலக்கு ஆகும். இந்த இலக்கின் அடிப்படைதான், பிபிசி ஐ கேவலப்படுத்திடவும், நிறுவனத்தை இன்னும் நேரடியான அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அதனுடைய முக்கியத்துவத்தைக் குறைக்கவும், அரசாங்கம் அவற்றின் மீது மோகம் கொண்டுள்ள தனியார் செய்தி ஊடகங்கட்கு ஊக்கமளிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவும் ஆகிய வழிவகைகளைக் கொள்ள நீண்டகாலக் கொள்கை தேவை என்ற அரசாங்கத்தின் இலக்கிற்கு ஊட்டம் அளித்துள்ளது. கலாச்சாரத்துறை மந்திரி ரெசா ஜோவெல் ஹட்டன் பிரபுவின் கெல்லி மரண விசாரணை, பிபிசி உரிமை பற்றிய ஆய்வு பரிசீலனைக்கு வரும்போது உரிய தாக்கத்தைக் கொடுக்கும் என்ற எச்சரிக்கையை விடுத்ததின் மூலம், பிபிசி க்கு வெளிப்படையான அச்சுறுத்துதலைக் கொடுத்துள்ளார். டைம்ஸுக்கு ஜூலை 25ம் தேதி இந்த அம்மையார் கூறியதாவது: "பிபிசி ஐ பொறுத்தவரையில் ஹட்டன் விசாரணையில் பரிந்துரைகளோ, முடிவுகளோ கூறப்படுமாயின், அவற்றை நான் வெகு கவனத்துடன் பரிசீலிப்பேன். பொது நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் நம்பிக்கைத்தன்மை இன்றியமையாதது.... செய்தி ஒலி/ஒளி பரப்புவோர் மற்றும் பரந்த அளவில் செய்தி ஊடகம் கொண்டுள்ளோர் அத்தகைய நம்பிக்கைக்கு தாங்கள் உகந்தவர்கள் என்பதை நன்கு புலப்படுத்தவேண்டும்." செய்தி ஊடகச் சிறப்புக் குழுவின் தலைவரான ஜெரால்ட் கப்மன் (Gerald Kaufman) எம்பி, ஜில்லிகன் அறிக்கையைப் பற்றித் தெரிவித்ததாவது: "பிபிசி இக்கதையைத் தொடர்ந்த முறையும், அதனுடைய நிர்வாகக்குழு அதற்கு ஒப்புதல் கொடுத்த முறையும், ஒரு பொதுத்துறை நிறுவனம், பொதுப்பணி, பொதுச் செலவில் இயங்கும் அமைப்பு ஆகியவை உள்ள பிபிசி யின் தன்மையைப் பற்றி பல ஆழ்ந்த வினாக்களை ஏற்படுத்தியுள்ளது." அவர், பிபிசி யின் நிர்வாகக் குழுவினரின் பணியை அரசாங்கத்தால் புதிதாகச் செய்தி ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்பு என்று தோற்றுவிக்கப்பட்டுள்ள Ofcom எடுத்துக்கொள்ளக்கூடும் என்ற குறிப்பைக் கொடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள், பிபிசி தலைவர் காவின் டேவிசை Sunday Telegraph, ஜூலை 27ம் தேதி பதிப்பில் ஒரு கடிதத்தை எழுதத் தூண்டின. அவர் எழுதினார்: "எங்கள் நேர்மை தாக்கப்பட்டுள்ளது, அரசாங்கம், அதன் ஆதரவாளர்களின் கருத்துக்களிலிருந்து வேறு கண்ணோட்டத்தை வெளியிடும் தன்மைக்காக நாங்கள் கடிந்துகொள்ளப்படுகிறோம். நாங்கள் இத்தகைய தைரியத்தைக் கொண்டுள்ளதற்காக 80 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசியைக் காப்பாற்றி வரும் முறையே மாற்றப்படும் என்ற அச்சுறுத்தலும் பிபிசி ஐ மண்டியிட வைக்கும் வெளிக்கட்டுப்பாடும் வரும் என்றும் கூறப்படுகிறது..." ``அலாஸ்டர் காம்பலின் சமீபத்திய தாக்குதல், இன்று நிகழ்ச்சியில் ஆண்ட்ரூ ஜில்லிகன் கதை வந்ததற்காக மட்டுமின்றி, இது முழுச்செய்திச் செயற்பாடுகளின் நோக்கம், திறமை, தொழில்முறைத் திறன் அனைத்தின் மீதான முழுத் தாக்குதலாகும். தோன்றியுள்ள இடத்தைக் காணும்போது, இந்தத் தாக்குதலை எதிர்ப்புக்கிடமில்லாமல் நிர்வாகக் குழுவினர் அனுமதிப்பதற்கில்லை....`` முன்னர் அரசாங்க சார்பு உணர்வை பிபிசி கொண்டிருந்தது என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்திற்கும், தேசிய ஒலிபரப்பாளர்களுக்கும் இடையே உறவுகள் இந்த அளவு கசப்பாகவும், கடுமையாகவும் இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் பிபிசி ஒன்றும் அரசாங்க எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கோ, போரெதிப்பு உணர்வுகளுக்கோ நிலைகளாக இருந்துவிடவில்லை. பிபிசி இயக்குநர் குழு தலைவர் க்ரெக் டைக் (Greg Dyke) உம், காவின் டேவிஸ் உம் தொழிற் கட்சிக்கு நிதி கொடுத்துள்ள நிலையில், 2001ல் டேவிஸ் பிளேயரால் பிபிசி தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து அது அரசாங்க சார்புடையதாகத்தான் செயல்பட்டு வந்துள்ளதாக அதனுடைய குழுவைப் பலமுறை கன்சர்வேடிவ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்துள்ளனர். சமீபத்தில் பிபிசி போரைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட முறை, மிகுந்த அரசாங்க சார்புடையதாக இருந்ததுடன் அனைத்துப் பெரிய செய்தி ஒலிபரப்பாளர்களின் எதிர்ப்புக் குரல்களை மிகக்குறைந்த அளவே வெளியிட்டு வந்ததாகத்தான் சுதந்திரமான மதிப்பீட்டாளர்களால் கருதப்பட்டுள்ளது. இன்னும் அடிப்படையான அளவில், 1926ம் ஆண்டு அது தேசிய செய்தி ஒலிபரப்பு நிலையமாக தோற்றுவிக்கப்பட்டதிலிருந்தே பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் அதிகாரபூர்வமான குரலாகத்தான், பிபிசி இருந்து வந்துள்ளது. பிரிட்டனிலும், உலகம் முழுவதும் இப்பங்கைத்தான் அது செய்துவருகிறது. சொல்லப்போனால் பிபிசி உலக சேவை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நோக்கத்திற்குப் பெரும் மதிப்புடையதாக விளங்கி பன்னாட்டுச் செய்திகள், மக்கள் கருத்துக்களை உருவாக்குதல், ஏகாதிபத்திய நோக்கத்துடனான வகையில் பிரச்சாரம் இவற்றில் நெடுங்காலமாக ஈடுபட்டுவந்துள்ளது. இப்பங்கைச் செய்வதற்கு, அன்றன்றைக்கு உள்ள அரசாங்கத்தின் கொள்கையை கிளிப்பிள்ளைபோல் கூறுவது போதாது. நிறுவனம் தன்னுடைய பாரபட்ச தன்மை, சுதந்திரம் இவற்றைக் காட்டிக்கொள்கிறது என்பதற்கான தோற்றத்தையளிப்பதற்கு, சற்றுதொலைவில் நிற்றலும், சில பிரச்சினைகளில் ஓரளவு திறனாய்வுக்குறை கூறுதலும் சிலவேளைகளில் அத்தியாவசியமானவை. இந்த மூலோபாயம் கடந்தகாலத்தில், நிறைய பலன்களைக் கொடுத்துள்ளதோடு, இப்பொழுதும் கொடுத்துக்கொண்டுதான் வருகிறது. சமீபத்திய கணிப்பு ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டோரில் 54 சதவிகிதத்தினர், ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றி அரசாங்கத்தைவிட பிபிசி ஐ நம்பியதாகக் கூறியுள்ளது இதற்குச் சான்று ஆகும். 20 சதவிகிதத்தினர் தான் பிபிசி ஐ விட அரசாங்கம் கூறியதை நம்பியதாகக் கூறியுள்ளனர். செய்தி அறிக்கைகளில் மிக அதிக அளவு நம்பிக்கைக்கு உட்பட்டதாக பிபிசி-ஐ 44 சதவிகிதத்தினர் தெரிவித்தனர். (எல்லாவற்றிற்கும் ஒரு வரம்பு உண்டு என்பது தெரிந்ததே; ஈராக்கியப் போரில் வெட்கங்கெட்ட தனமாக செய்தியை அரசாங்க ஆதரவிற்காகப் பரப்பிய முறையில் பிபிசி தப்பிவிடவில்லை. கேள்வி கேட்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஓராண்டுக்கு முன்பைவிட இப்பொழுது குறைவாக தொலைக்காட்சி மற்றும் வானொலிச் செய்திகளை நம்புவதாகக் கூறியுள்ளனர்; இதிலும் கிட்டத்தட்ட பாதிப்பேர் அவை கூறுவதில் "மிகக் குறைந்த" நம்பிக்கை கொண்டிருந்ததாகக் கூறியுள்ளனர்). எந்த அடிப்படையில் பார்த்தாலும் பிபிசி யின் மதிப்பைக் குறைக்கும் அரசாங்க முயற்சிகள் கிட்டப் பார்வையுடையதாகத்தான் தோன்றும். உம்மைவிட, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள நிறுவனத்தை, உமது கொள்கைகளை ஆதரிப்பதற்காக செயல்படுவதை, ஏன் தாக்க வேண்டும்? ஆட்சித்துறையில் சிலர் இப்போக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாராள ஜனநாயகவாதிகளின் தலைவர் சார்லஸ் கென்னடி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்: ``இந்த அரசாங்கமும், மற்றய அரசாங்கங்களைப் போலவே வரும், போகும்; ஆனால் பிபிசி எப்பொழுதும் உலக அளவில் ஒரு சுதந்திரமான செய்தி நிறுவனமாக இங்கு நிலைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இதை அமைச்சர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.`` அரசாங்கங்கள், குறிப்பாக கன்சர்வேடிவ்கள் மார்கரெட் தாட்சரின் கீழ் பல நேரம் கூடுதலான அதிகப் பிரசங்கித்தனம் "அத்தையிடமிருந்து" வெளிப்படுவதை எதிர்த்திருந்தனர். ஆனால், எவரும் பிளேயருடையதைப்போல், தீவிரமான விளைவு கொடுக்கும் நடவடிக்கையை நினைத்தும் பார்த்ததில்லை. ஏன்? அரசாங்கத்தின் தாக்குதலுக்கு நிறைந்த ஆதரவு கொடுப்பவர்களை ஆய்வு செய்வதன் மூலம் விடையைப் பற்றிய குறிப்பைக் காணமுடியும். இக்கூட்டத்தில் முதலில் இருப்பது ரூபேர்ட் முர்டோக் இன் News International மற்றும் அவரது பிரிட்டிஷ் செய்தித்தாள்களான Sun Times, Sunday Times, News of the World ஆகியவை ஆகும். அவற்றில் Sun மிகவும் உரத்த, நயமற்ற குரலில் ஒலிக்கும். ஜூலை 21ம் தேதி Sun ஜில்லிகனை ஒரு "எலி" என்று அழைத்ததுடன், தன் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள கெல்லியை பொய்யர் என்ற முத்திரையை இட்டதாகவும் கூறியதோடு, டேவிஸ், டைக் மற்றும் செய்திப்பிரிவின் தலைவர் ரிச்சார்ட் சாம்புரூக் உட்பட ``BBC இல் தலைகள் உருளவேண்டும்,`` என்றும் கூறியது. முர்டோக் ப்ளேர் அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளர் மட்டுமல்லர். ப்ளேரின் செய்தி ஊடகக் கொள்கையிலிருந்தும், பிபிசிக்கு ஏதேனும் தீமை விளைவதிலிருந்தும், இவர் அதிக நன்மைகளை அடைவார். இதில் இரண்டு மையப்பிரச்சனைகளின் முக்கியத்துவம் உள்ளது. முதலில் பிபிசி Ofcom இற்குப் பொறுப்புக் கூறவேண்டும். 2006ல் அதன் பொது உரிமை புதுப்பிக்கப்படுவதற்கு முன்பாகக் கொள்ளவேண்டிய பரிசீலனைக் காலம் அரசாங்கத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பிபிசி யின் நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டு அதிகாரங்களை Ofcom ற்கு மாற்றிக்கொடுப்பது அநேகமாக நிகழ இருக்கும் விளைவாக இருக்கலாம். இப்பொழுதுள்ள ஐந்து கட்டுப்பாட்டு அமைப்புக்களின் இணைப்பாக Ofcom விளங்கி ஒலிபரப்பின் மீதான அனைத்துக் கட்டுப்பாட்டிற்கும் பொறுப்பாயிருக்கும். இதனுடைய நிர்வாகக் குழுவில் ஒன்பது பேர் உள்ளனர்; ஆறு பேர் (தலைவர், துணைத்தலைவர் உட்பட) வர்த்தக தொழில்துறை செயலர், பண்பாட்டு விளையாட்டு செய்தி ஊடகம் இத்துறையின் செயலராலும் நியமிக்கப்படுகின்றனர், இது மறைமுகமாக இருந்தாலும், இதுவரை இல்லாத அளவு ஒலிபரப்புத் தன்மை மீது அரசாங்கக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும். இக்குழுவில் பிளேயருடைய பழைய செய்தி ஊடக, தொலைத் தொடர்பு ஆலோசகரான Ed Richards ம் இருக்கிறார், அரசியல் வடிவத்திற்கும் நோக்கங்களுக்கும் இந்த ஒரு உதாரணமே போதுமானதாகும். செய்தி ஊடகக் கட்டுப்பாடு நீக்கப்படுதல் முர்டோக்கை நேரடியாக அக்கறை கொள்ளவைக்கும் அரசாங்கத்தின் மற்றொரு கொள்கை ளியீநீஷீனீ உடைய தோற்றம், முழு செய்தி ஊடகமும் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்படுவதற்கு அது எடுத்துக்கொள்ள இருக்கும் முயற்சிகளுடன் கட்டுண்டிருக்கிறது. அரசாங்கத்தின் தொடர்புகள் மசோதா, இப்பொழுது பல வாசிப்பு, திருத்தக் கட்டங்களில் பிரபுக்கள் மன்றத்தில் உள்ளது; இது பல செய்தி ஊடக வானொலித் தடைகளை அகற்றி, அமெரிக்க நிறுவனங்கள், மற்றும் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிஜிக்ஷி மற்றும் வணிக வானொலி உரிமங்கள் வாங்கவும் அனுமதிக்க உள்ளது. இச்செயல்கள் முர்டோக்கை நேரடியாகவே நன்மைக்கு உட்படுத்தும்; இவர்தான் தற்பொழுது உயர்ந்த இடத்திலுள்ள செயற்கைக்கோள் ஒலிபரப்பு நிறுவனமான BSKYB யின் உரிமையாளர்; ஆனால் எப்படியாவது ஒரு தரைவழி TV நிலையத்தையும் பெற்றுவிடவேண்டும் என்று விழைகிறார். இப்பொழுது சானல் 5ஐ வாங்க முடியும்; ஏனெனில் தொடர்புகள் சட்டத்தின்படி ஒரு செய்தித்தாள் உரிமையாளர், தேசியச் சந்தையில் 20%க்கும் மேலாக வைத்திருந்தால் TV சானல்களில் கூடுதலான பங்கைப்பெற இனி தடுக்கப்படமாட்டாது. தற்பொழுது செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் தரைத்தொடர்பு TV நிலையங்களில் 20 சதவிகிதப் பங்கிற்கு மேல் வாங்க முடியாது என்ற தடையுள்ளது; இது புதிய சட்டங்களின்படி ITV நிலையங்களைத் தவிர மற்றவற்றின் மீது தடை நீக்கப்பட உள்ளது. இது முர்டோக்கிற்கு அப்பட்டமான சாதகமானது; ஆனால் கலாச்சார மந்திரி Tessa Jowell இந்த வெளிப்படையான உண்மையைக் கூறியவர்களிடம் தெரிவித்தது. இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்கள் ``சதித்திட்டக் கருத்தை, எந்த ஆதாரமுமில்லாமல் செய்பவர்கள்... இது ரூபாட் முர்டோக்கைப் பற்றியது அல்ல, நாம் அதில் தெளிவாக இருப்போம். இந்த முன்மொழிவுகள் பாரபட்சமற்ற உரிமையாளர் நலன் சார்ந்தது.`` தொழிற் கட்சியின் லோர்ட் டேவிட் புட்னம் அவர் பிரபுக்கள் மன்றத்தில் சட்டவரைவு விவாதத்தின்பொழுது போராடிய உரிமைகள் -TV நிறுவனங்களை எடுத்துக்கொள்வது பொதுநலனுக்கு உகந்ததா என மதிப்பீடு செய்ய Ofcom ஐ நிர்பந்திக்க, ஒழுங்கமைப்பாளரால் செய்யப்படும் முடிவுகளில் பொருளாதார அக்கறை உடையவர்களுடன் சாதாரண குடிமக்களுக்கும் கட்டுப்பாட்டு அதிகாரக் குழுவில் முடிவுகளெடுக்கும் அதிகாரம் தேவை என்பது --முர்டோக்கின் ஏகபோக உரிமையின் அச்சுறுத்தலை நிறுத்திவிட்டதாகச் சொல்கிறார். ஆனால் Ofcom -ற்கு பிபிசி பால் உள்ள பார்வையையும் அரசாங்கத்தோடு கொண்டுள்ள நெருக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இது வெறும் வறட்டு நினைவே . Ofcom உடைய தலைவரான லோர்டு கர்ரி (Lord Currie) புட்னாமின் திருத்தங்கள் புதிய செய்தி ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்பின் கடமைகளைச் "சமநிலையிலிருந்து தள்ளிவிட்டதாகவும்" ``எதிர்மறை விளைவுகளை`` ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளார். ``ஒலிபரப்பும் உரிமையில், உள்ளடங்கியுள்ள பெருமையான தகுதிகளை இழிவுபடுத்தாமல் ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் ஒலிபரப்பாளர் சொல்லமாட்டார்கள். இவை யாவை என்பதை Ofcom ஒலிபரப்பு உள்ளடக்கத்தின் தன்மையோடு வரையறுத்து, முழு ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளும்." என இதற்கு முன் அவர் எச்சரித்திருந்தார். இதன் அர்த்தம் பிபிசி அதன் தயாரிப்பாளரின் ``வழிகாட்டு நெறி`` பற்றி ``மிகக் கவனத்துடன் சிந்திக்கவேண்டும்`` என்றே கூறுகிறது. ``பிபிசி முதன்முதலாக வர்த்தக ஒலிபரப்புக்கள் மீதான தடைகள் போல் பலவற்றையும் கவனிக்கவேண்டும் என்ற பொருளாகும். பிபிசி தன்னுடைய அமைப்பை ஒழுங்காக வைத்துக்கொள்ளும் என்று நம்புகிறோம். ஆனால் சந்தேகப்படவேண்டாம்: Ofcom ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றால் அதைச் செய்யத் தயக்கம் காட்டாது.`` தாராளவாத ஜனநாயக லோர்ட் மக்நெல்லி பிரபு (Lord McNally) முர்டோக் சானல் 5ஐ வாங்கக்கூடும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். ``இந்த மசோதா, எண்.10ல், எங்கு முர்டோக்கிற்குக் கவலையளிக்கும் செல்வாக்கு இருந்திருந்ததோ, அங்கு, ஏற்கப்பட்டது`` என்று பிபிசி ரேடியோ 4ன் இன்றைய நிகழ்ச்சியில் அவர் கூறினார். அரசாங்கம், செய்தி ஊடகம் இவற்றுடன் வர்த்தக நினைப்புக்களும் பிபிசி தாக்குதலில் ஆர்வம் காட்டும் அளவில் -ஈராக்கியப் போரின் உடனடியான அரசியல் நோக்கங்கள் பற்றியவையும் நினைவிற்கொள்ள வேண்டும்- பெரிய செய்தி நிறுவன நடத்துவோர் முர்டோக் போன்றோரின் உயர்நிலை ஏற்றம், பொது ஒலிபரப்புத் துறையிலிருந்து சிந்தனைத் தன்மை சிதைவுறலாம் என்ற கண்ணோட்டத்தையும் மறுப்பதற்கில்லை. லோர்ட் கொன்ராட் ப்ளாக், டெய்லி டெலிகிராப் என்ற நாளிதழின் கனேடியச் சொந்தக்காரர், இதைப்பற்றி மதிப்புடைய சான்றை தன்னுடைய நாளிதழ் மற்றும் செய்தியாளரையே, ஜில்லிகனைப் பாதுகாப்பதில் காட்டிய ஆர்வத்தையும் பிபிசியைப் போதுமான ஆர்வம் காட்டித் தாக்காததற்கும் குறை கூறியதை எடுத்துக்கொள்ளலாம். ஜூலை 26 இதழில் ஹென்லியின் எம்.பி.யும், வலதுசாரி டோரியுமான பொறிஸ் ஜோன்சனுக்கு - Spectator ன் ஆசிரியரும் இவரேயாகும்- ஜில்லிகனை ஆதரித்தது பற்றி எழுதியுள்ள கடிதத்தில் ப்ளாக் கூறுவது: ``அரசாங்கம், அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி, பெரும்பாலான பிரிட்டிஷ் நிறுவனங்கள், அமெரிக்க கொள்கை அநேகமாக எல்லா துறைகளிலுமே, இஸ்ரேல், அயர்லாந்தில் நிதானம், அனைத்து மேலை நாட்டுச் சமயங்கள், பெரும்பாலான தடையற்ற சந்தை முறையின் கூறுபாடுகள் இவை அனைத்தின் மீதும் பிபிசி கவலைப்படும் அளவில், குரோத உணர்வு கொண்டுள்ளது.... ஒருதலைப்பட்சப் போக்கின் தீவிரத் தன்மையை அது கொண்டுள்ளது. அரசியல் அல்லாத பகுதிகளில் அதன் நிகழ்ச்சிகளின் சிறப்பு மிகப் போற்றத்தக்கனவாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு விவரம் தெரிவிக்க, பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட நிலையை மறந்து அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக வந்துவிட்டது.`` அவர் தொடர்ந்தார்: ``பொறிஸ் ஜோன்சனும் டோரிகளும் எங்கே தவறாகப் போகிறார்கள் என்றால், பிபிசியின் தற்போதைய செய்தி மற்றும் பொது விவகாரத் துறைகளில் ஓர் அரசாங்கத்தைவிட நம்பிக்கை கொண்டுள்ள அளவில் அது பெரிய விரோதி என்பதை அங்கீகரிக்கவில்லை.`` வலதுசாரிப் பிரிவுகள் சிலவற்றிற்கு, அவர்களுடைய கற்பனை சக்தி ஆற்றலில் பிபிசி இன்னமும் தெளிவாக "Bolshevik Broadcasting Corporation" தான். இன்னும் சமீப காலத்தில் Baghdad Broadcasting Coprporation தான். பிளேயர், அவருடைய கூட்டாளிகளைப் பொறுத்தவரையில் முர்டோக் நடத்தும் TV சானல்கள் பிரிட்டனில் Sky, அமெரிக்காவில் Fox ஆகியவற்றுடன் வேலை செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். ``சுதந்திரமானது`` தனிப்பட்ட முறையில் உரிமையொட்டி, பொது உடைமையற்றது என்பதைத் தவிர, அவை அரசாங்கத்தின் குரலை ஒலிப்பது நம்பகமானது என்று அவர்கள் கருதுகிறார்கள்; ஏனென்றால் அவை பெருஞ்செல்வந்தர், அவர்களுடைய விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றிற்குப் பதில் சொன்னால் போதுமானது; பெயரளவிற்குக்கூட பிபிசியின் சாசனத்தில் உள்ள ``பிழையற்ற நிலை,`` ``நடுநிலைமை,`` ``மக்கள் நலன்கள், தேவைகள் ஆகியவற்றைப் பிரதிபலித்தல்`` போன்றவற்றிற்கு மதிப்பு தரவேண்டியதில்லை. அமெரிக்காவில் செய்தி அளித்தலைப் பார்த்த துர்ப்பாக்கியவான்கள் பிளேயர் தன்னுடைய அரசியல் கணக்கில் தவறிழைக்கவில்லை என்றுதான் சாட்சியம் கூறுவர். |