World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq and liberation

ஈராக்கும் விடுதலையும்

By James Conachy
3 July 2003

Back to screen version

புஷ் நிர்வாகமும் அமெரிக்க செய்தி ஊடகமும் நிகழ்த்திய பிரச்சாரத்தின் விளைவாக ஈராக் போரை ஆதரித்த மக்களிடையே ஓர் அமைதியற்ற நிலை வளர்ந்து வருகின்றது. ஈராக் அமெரிக்காவை அச்சுறுத்தியது என்று கூறப்பட்டதற்கான பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை; சர்வதேச பயங்கரவாதத்துடன் ஈராக்கிற்கு எந்தவிதமான தொடர்பும் உள்ளதற்கு சான்றுகள் கிடைக்கவில்லை; ஒவ்வொரு நாளும் அமெரிக்கப் படைகளின் மீதான தாக்குதல், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் துருப்புக்களின் இழப்பு முதலியவை வெள்ளை மாளிகையின் கூற்றான, ஈராக்கியர் அமெரிக்கப் படைகளை வரவேற்பார்கள் என்பதை இல்லாதொழித்துவிட்டது. பெரும்பாலான அமெரிக்கர்கள், குறிப்பாக விரோதம் பாராட்டும் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் துருப்புக்கள், தங்களிடத்தில் பொய் கூறப்பட்டதோ என்று சந்தேகப்படுவதுடன், முதலாவதாக ஈராக்கில் அமெரிக்காவிற்கு என்ன வேலை என்றும் கேட்கின்றனர்.

திங்களன்று, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ்பெல்ட் தன்னுடைய செய்தியாளர் கூட்டத்தில் புஷ் நிர்வாகம் எவ்வாறு இந்த அதிகரித்துவரும் ஐயங்களுக்கு விடை காண முயல்கிறது என்பது பற்றிக் கோடிட்டுக் காட்டினார். 1776ம் ஆண்டு விடுதலையுற்ற அமெரிக்காவில் ஜூலை 4ம் தேதி வரவிருக்கும் நினைவு விழாக்களைக் கருத்திற்கொண்டு, ரம்ஸ்பெல்ட் ஈராக்கில் உள்ள நிலைமையை நியாயப்படுத்தும் வகையில், அமெரிக்கக் குடியரசில் முதல் ஆண்டுகளில் நிலவிய கொந்தளிப்போடு ஒப்பிட்டுக் காட்டினார். அவர் அவ்வாறு குறிப்பிடும் நிலைமை "ஒழுங்கின்மையும், குழப்பமும்", "அதிக அளவிலான பணவீக்கம், உறுதியான நாணயம் இல்லாமை", "அதிருப்தி", அதையொட்டிய "எழுச்சிகள்", "சீற்றம் மிகுந்த மக்கள் கூட்டங்கள்" ஆகியனவாகும்.

"ஆப்கானிஸ்தான் மக்களும், ஈராக்கியரும் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் காணும் போது, நாம் நம்முடைய அந்த வரலாற்று நினைவுகளைக் கருத்திற் கொள்வது பிரயோசனமானது" என அவர் அறிவித்தார்.

"ஜனநாயகத்திற்கு மாறுவது என்பது எப்பொழுதுமே எளிதல்ல. கூட்டணிப் படைகள் ஈராக்கின் பயங்கரவாத தலைவர்களை பதவியிலிருந்து விரட்டினாலும், நாம் கடந்த காலப்போர்களில் காண்பது போல் சண்டையும் பத்திரத்தில் கையெழுத்திட்டு ஆயுதங்களைக் கொடுத்து விடாமல், பாதிஸ்டுகளின் ஆட்சியில் எஞ்சியவர்களும் பெடயீன் (Fedayeen) கொலைக் குழுவினரும் மக்களுள் கரைந்து தீவிரவாத வலைப்பின்னலை தோற்றுவித்துள்ளனர்.

"இந்தப் போர்கள் இன்னமும் சில காலத்திற்குத் தொடரும். ஈராக்கின் விடுதலை முழுமையாகிவிட்டது. பழைய ஆட்சியின் அதிகாரம் அகற்றப்பட்டு விட்டது, அவர்கள் ஒரு போதும் மீண்டும் அதிகாரத்திற்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால் நாம் மேற்கொண்டுள்ள தீவிரவாதிகளுடனான போர் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் இன்னும் உலகில் பல பகுதிகளிலும் தொடர்கிறது. அவை விரைவில் அது முடியும் என்று கூறுவதற்கில்லை. 200 ஆண்டுகளுக்கு முன் நமக்கு ஜெபர்சன் கற்றுத்தந்தது போல், "அயராத கண்காணிப்பே விடுதலைக்கான விலையாகும்". (http://www.defenseling.mil/transcripts/2003/tr20030630-secdef032.html)

வேறு விதமாகக் கூறினால், `தீவிரவாதத்திற்கெதிரான போர்` என்ற பெயரில் அமெரிக்கர்கள் தங்கள் நாட்டில் இழந்துள்ள உரிமைகளும், ஈராக்கில் அன்றாடம் உயரும் இறப்பு/காயமுற்றோர் பட்டியலும், நீண்ட காலம் ஒடுக்குமுறையான அரசாங்கங்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளில் இறுதியில் ஜனநாயகம் தோற்றுவிக்கப்படும் என்பதற்காக இரண்டு ஆண்டுகளில் இரண்டு போர்களின் விளைவுகளைச் சந்திப்பது சரியே என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். புஷ் நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிர்ப்புக்கள் அனைத்தும் தனிமையாக இயங்கும் தீவிரவாதிகள் செயல்கள் என்றும், அவர்கள் விரைவில் அழிக்கப்பட்டுவிடுவர் என்று கருதவேண்டும்.

எது கூடுதலான தாக்குதல் என்பது விவாதத்திற்குரியதேயாகும்: ஈராக்கியர் தங்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்த இராணுவ சக்தியை எதிர்த்து நிற்பதை பயங்கரவாதம் என்ற சொல்லால் விபரிக்கப்படுகின்றது, அல்லது புஷ் நிர்வாகத்தின் பிரதிநிதியொருவர் தோமஸ் ஜெபர்சனையும் அமெரிக்கப் புரட்சியையும் தன் செயல்களை நியாயப்படுத்த பாவிப்பதன் பெயர் பயங்கரவாதமா.

அக்காலத்தில் மாபெரும் ஜனநாயக சிந்தனைகளால் உந்தப்பெற்று, பிரபுத்துவ சலுகை முறைகளுடன் இணைந்த காலத்திற்கு ஒவ்வாத நிலப்பிரபுத்துவ அரசியல்முறைக்கும், சமூக உறவுகளுக்கும் எதிரான இயக்கமாக அமெரிக்கப் புரட்சி விளங்கியது. பிரிட்டிஷ் முடியரசிற்கு எதிராக பிரதிநிதிகள் அரசாங்கம் வேண்டும் என்பதற்காக ஜெபர்சன் போன்ற புரட்சியாளர்கள் உலகத்தின் பலம்வாய்ந்த முடியாட்சிக்கு எதிராக போரிட்டனர். அமெரிக்க விடுதலைப்போர் காலனித்துவத்திற்கு எதிரான வரலாற்றில் முதலாவது போராட்டமாகும்.

ஈராக்கிற்கெதிரான போரோ, அமெரிக்க மக்களின் பெரும்பான்மையோரின் விருப்பத்திற்கு எதிராக பகுதியில் தலைமை நீதிமன்றத்தால் அமர்த்தப்பட்ட அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்பட்டு, அமெரிக்கப் பெருவர்த்தக நிறுவனங்கள் ஈராக்கின் செல்வத்தைக் கொள்ளையடித்து ஆதாயம் அடைவதற்கான நம்பிக்கையில் நிகழ்த்தப்படும் போராகும். ஒரு எண்ணெய் வளம் நிரம்பிய, ஆனால் ஏழ்மை நிறைந்த நாட்டின் மீது நடத்தப்படும் இந்தக் கொள்ளைப் படையெடுப்பில் பத்து ஆண்டுகளாக முதல் போரினாலும், பொருளாதாரத் தடைகளாலும் தன்னை சரியாகப் பாதுகாத்துக்கொள்ளக்கூட முடியாமல் நிற்கிறது. இது ஈராக்கிடம் அமெரிக்கவை தாக்குவதற்கான பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன, செப்டம்பர் 11 தீவிரவாதிகள் தாக்குதலில் அதற்குப் பங்கு உண்டு என்ற பொய்களைக் கூறி நியாயப்படுத்தப்பட்ட போர் ஆகும்.

அமெரிக்கப் புரட்சி வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற ஜனநாயகக் குடியரசு ஒன்றை ஏற்படுத்தியது. ஈராக்கிய ''விடுதலையோ'' 24 மில்லியன் ஈராக்கியர்கள் தங்களுடைய மொழி, பண்பாடு, சமயம் இவற்றையறியாத வெளிநாட்டு வீரர்களின் துப்பாகிக்குப் பயந்து வாழும் நிலையை உருவாக்கியுள்ளது. அதன் அர்த்தம் ஈராக் தேர்ந்தெடுக்கப்படாத போல் பிரேமர் (Paul Bremer) என்ற அமெரிக்க அதிகாரியினால் ஆளப்படுகின்றது. இந்த நபருடைய முக்கிய பணி நாட்டில் தொழில்களைப் பல அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் அல்லது அமெரிக்க ஆதரவுபெற்ற பெருநிறுவனங்களுக்கு விற்றுவிடுவது ஆகும். இதற்கு ஒப்புதல் வழங்கும் `இடைக்கால` ஈராக்கிய அரசாங்கம் ஈராக்கியரால் தேர்ந்தெடுக்கப்படமாட்டாது. மாறாக தனது கூட்டாளிகளாக அணிதிரட்டிக்கொள்ளலாம் என்று அமெரிக்கா கருதுபவர்கள் மத்தியில் இருந்து நியமிக்கப்படுவர்.

எந்தவிதமான எதிர்ப்பும் வன்முறையைக் கையாண்டு அடக்கப்பட்டுவிடும். பிரேமர் இந்த வாரம் ''சிலர், குறிப்பான பழைய ஆட்சியில் எஞ்சிய சிலர் இன்னம் இங்கு உள்ளனர். அவர்கள் நமக்கெதிராகச் சண்டையிடுகின்றார்கள். நாம் அவர்களைச் சிறைப்பிடித்துத் தேவையானால் கொன்றும் விடுவோம். அதுவரை இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு இவற்றை நாங்கள்தான் கட்டுப்படுத்துவோம். நாங்கள் தான் இப்போது ஆதிக்கம் செலுத்துகின்றோம், நாங்கள் எமது விருப்பத்தை தொடர்ச்சியாக இந்த நாட்டின் மீது திணிப்போம்'' என கூறினார்.

அப்படிப்பட்ட உண்மை நிலையை எதிர்கொள்ளும் ஈராக்கியர், அமெரிக்க ஆட்சியை எதிர்ப்பது அரசியலளவில், சட்ட அளவில், நியாயத்தின் அடிப்படையில் இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் நாஜி ஆட்சிக்கெதிராக நிகழ்ந்த எதிர்ப்பு போலவே நியாயமானதாகும். வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிராக, ஒரு காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஈராக்கியர் ஒரு நியாயபூர்வமான போராட்டத்திற்குத்தான் ஆயுதமேந்தியுள்ளனர். பழைய ஈராக்கிய அரசாங்கம் முறையாக ஆட்சியை அமெரிக்கப் படைகளிடம் ஒப்படைக்கவில்லை என்ற உண்மை, அடிப்படை உண்மையான பெரும்பாலான ஈராக்கியர்கள் அப்பொழுதும் சரி, அமெரிக்கப் படைகளால் உருவாக்கப்படும் அரசாங்கத்திற்கு, சட்டமுறையிலான அதிகாரம் இல்லை என்று கருதுவதைத்தான் குறிப்பிடுகிறது. மேலும் இப்பொழுதுள்ள சர்வதேச சட்டத்தின்படி உலகத்தில் எந்த அரசாங்கமும் வேறு ஒருவரிடம் தன் அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்று கிடையாது.

ஓரளவு முறையாக அமைக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஏற்கனவே ஒரு வடிவத்தை எடுத்துள்ளது என்பதற்கான தெளிவான அடையாளங்கள் தெரிகின்றன. Foreign Policy in Focus ல் டானியல் ஸ்மித் (Daniel Smith) ஆல் கொடுத்துள்ள புள்ளி விவரப்படி அமெரிக்கப் படைகள் ஜூன் 9 ற்கும் ஜூன் 22 ற்கும் இடையே 131 தடவை தாக்கப்பட்டுள்ளனர். இதில் 41 படைகளுள்ள இடங்களின் எல்லைக்குள்ளும், 26 தடவை காவல் நிலையங்கள் அல்லது கண்காணிப்பு இடங்கள், 26 முறை வாகன அணிகளின் மேலும் நடாத்தப்பட்டுள்ளது. ஜூன் 23ம் தேதி மட்டும் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன.

கடந்த 9 நாட்களில் சில டசின் கணக்கில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. திங்களன்று அமெரிக்கப் படைகளுடன் சென்றுகொண்டிருந்த NBC செய்தியாளர் ஒருவர் பலூஜாவின் (Fallujah) அருகில் அவர்கள் வாகனத்தின் மீது ராக்கட் உந்து கைக்குண்டினால் (Rocket Propelled Grenade - RPG) தாக்கப்பட்டுக் காயமடைந்தார். செவ்வாயன்று பாக்தாதில் நடந்த இரு பதுங்கி தாக்குதலில் குறைந்தது 6 அமெரிக்கரும் ஒரு மொழிபெயர்ப்பாளரும் காயமுற்றனர். இன்னும் அதிகாரபூர்வமாக வராத தகவல்கள் இவர்களில் 4 பேர் இறந்ததாகக் கூறுகின்றன. அதே நாள் பலூஜாவுக்கு வெளியே இரண்டு அமெரிக்க வீரர்கள், அவர்களுடைய Humvee வேண்டுமென்றே சாலையில் தோண்டப்பட்டிருந்த ஆழமான குழியில் விழுந்த அளவில் காயமுற்றனர்.

நாஜிகளைப் போலவே புஷ் நிர்வாகம் எதிர்ப்புக்களை அடக்குமுறை மூலம் பதிலளித்தது. ஈராக்கில் ஒவ்வொரு நாளும் அமெரிக்க வீரர்களால் மக்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது காயப்படுத்தப்படுகிறார்கள்; அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று கூறப்பட்ட அளவில் வீடுகளிலிருந்து நள்ளிரவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

வார இறுதியில் அமெரிக்கப்படைகள் மூன்று வாரத்திற்குள் மூன்றாவது முறையாக பெரிய நடவடிக்கையை, பாக்தாதிற்கும் டைக்ரிஸ் நதிக்கும் இடையே உள்ள பெருமளவு சன்னி முஸ்லிம்கள் உள்ள பகுதியில் ஈராக்கின் எதிர்ப்பு படையினர் செயல்படுகின்றனரா என்ற சந்தேகத்தின் பேரில் மேற்கொண்டனர். இதற்கு அடையாளப் பெயராக "Sidewinder" என்று அழைத்து, ஞாயிறு அதிகாலையிலிருந்து சமாரா (Samarra) நகரத்தைச் சுற்றி ஒரே நேரத்தில் 27 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. நான்காம் காலாட்படைப் பிரிவிலிருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் கொரில்லாக்களின் மறைவிடங்கள் உள்ளனவோ என்ற ஐயத்தில் பல பகுதிகளில் தேடி அலைந்தனர். ஓர் அமெரிக்க அதிகாரி இந்த நடவடிக்கையை ''பெரும் போர் சக்தியைப் புலப்படுத்தும்'' நடவடிக்கை என்று விவரித்தார். மொத்தம் 61 ஈராக்கியர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த "Sidewinder" நடவடிக்கைக்கு பின்னர் "Desert Scropion" என்ற நடவடிக்கை ஜூன் 15லிருந்து 30 வரை மேற்கொள்ளப்பட்டு 1300 ஈராக்கியர், பாக்தாதிற்கும் டைக்ரிஸ் பள்ளத்தாக்கிற்குமிடையே உள்ள பகுதிகளில் விசாரணைக்காகப் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஒடுக்குமுறை இருந்தபோதிலும், அமெரிக்கப்படைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. மே 1ம் தேதி ஜோர்ஜ் புஷ் `பெரிய அளவிலான சண்டை` ஓய்ந்துவிட்டது என்று அறிவித்ததிலிருந்து, மொத்தம் 30 மோதல் மரணங்கள், 39 போரிலீடுபடாத மரணங்கள், சில நூறு காயமுற்றோர் என்ற அளவில் அமெரிக்கப் படைகள் தாக்குதலுக்குட்பட்டுள்ளனர். இந்த இறப்பு எண்ணிக்கை குறைவேயாயினும், ஈராக்கிலுள்ள 146,000 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அது ஒன்றும் ஆறுதலானதல்ல. ஏனெனில் அவர்கள் ஆபத்து வரும் பாதையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க மக்கட்தொகையில் கணிசமான பகுதி இப்பொழுது தம் கணவனோ, மனைவியோ, மகனோ, மகளோ, பெற்றோரோ, உறவினரோ, ஈராக்கில் கொல்லப்படக்கூடும் அல்லது காயமடையக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்ந்துவருகிறனர்.

உயர் நிலையில் இருந்து சாதாரண தரத்திலான அமெரிக்கப் படையினரிடையே உள்ள மனநிலை உறுதியாக சீரழிந்துவருகின்றது. வாஷிங்டன் போஸ்டிற்கு ஒரு இராணுவப் போலீஸ் உதவிப்படைவீரர் ''அமெரிக்க அதிகாரிகள் எங்களை இங்கிருந்து வெளியே எடுக்கவேண்டும். நான் அதை மிகவும் முக்கியமாக கூறுகின்றேன். நமக்கு இங்கே வேலையில்லை. ஈராக்கிலும், பாக்தாதிலும் உள்ள பண்பாட்டை நம்மால் மாற்ற முடியாது. பாக்தாதில் ஊழல் மிகுந்துள்ளது. நாங்கள் அனைவரும் உட்கார்ந்திருக்கும் வாத்துக்கள் போல இங்கு கொல்லப்படுவதற்காக காத்திருக்கிறோம்''. என கூறினார். வாஷிங்டன் போஸ்டிற்கு அமெரிக்கப்படையால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள ஓர் ஈராக்கியப் போலீஸ்காரர் ''அமெரிக்கர்களை ஈராக்கியர்கள் வெறுக்கின்றனர்'' என கூறினார்.

ஈராக்கை அமெரிக்கர் ஆக்கிரமித்திருப்பது அமெரிக்க வரலாற்றில் ஓர் வெட்ககரமான அத்தியாயமாகும். இதற்கு உள்ள ஒரே ஒரு நியாயமான தீர்வு, உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் அனைத்து அமெரிக்க, வெளிநாட்டு இராணுவப் படைகளும் திருப்பிப் பெறப்படவேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved